::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

புதிய பாதுகாப்பு வலயத்தினுள் பெருந்தொகை மக்கள் வருகை – அமைச்சர் மஹிந்த சமரசிங்க

vanni.jpgமோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் இருந்த பொதுமக்கள் அனைவரும், அரசாங்கம் அறிவித்துள்ள புதிய பாதுகாப்பு வலயத்திற்குள் வந்து சேர்ந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதென்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

எனவே, அவர்களை படகுகள் மூலம் இலகுவாக முல்லைத்தீவுக்கு அழைத்து வந்துவிட முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏற்கனவே, அறிவித்திருந்த பாதுகாப்பு வலயத்தை விடவும், புதிய வலயத்திற்கு சிவிலியன்கள் அதிகம் வருகை தர ஆரம்பித்துள்ளதாகக் கூறிய அமைச்சர் சமரசிங்க அவர்களை அரசாங்கக் கடடுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டு வந்து தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மக்களை அழைத்து வருவதில் தொடர்ந்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒத்துழைப்பு நாடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, நேற்றுக் காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் கட்டுப்பாடற்ற வன்னிப் பகுதியிலிருந்து 1613 பேர், அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ளதாகக் கூறிய அமைச்சர் இது வரை 34 ஆயிரம் பேர் இவ்வாறு வந்துள்ளதாகக் கூறினார். இவர்கள் 30 ஆயிரம் பேர் வவுனியாவிலும், ஏனையோர் யாழ்ப்பாணம், ஓமந்தை மன்னார் ஆகிய இடங்களிலுள்ள இடைத்தாங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தவிர நேற்றைய தினம் 225 பேர் கிளிநொச்சிக்கு வந்துசேர்ந்துள்ளதாகக் கூறிய அமைச்சர், அவர்கள் அனைவரையும் ஓமந்தைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

நேற்று முன்தினம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் புதுமாத்தளன் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு 404 பேர் அழைத்துச் வரப்பட்டுள்ளனர். இவர்களுள் 351 பேர் நோயாளர்கள் என்றும் ஏனைய 53 பேர் அவர்களுடன் உதவிக்கு வந்தவர்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நோயாளர்களுள் 137 ஆண்கள், 136 பெண்கள், 43 சிறுவர்கள் 35 சிறுமிகள் ஆகியோர் அடங்குவரெனத் தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, இரு நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கண்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலிருந்து காயமடைந்த 400 பேர் கப்பல் மூலம் திருகோணமலைக்கு வருகை

ship-10022009.jpgமுல்லைத் தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்று வியாழக்கிழமையும் காயமடைந்தோர், நோயாளிகளென 400 பேர் திருகோணமலைக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் (ஐ.சி.ஆர்.சி.) வாடகைக்கு அமர்த்தப்பட்ட “கிரீன் ஓசியன்’ கப்பல் மூலமே இவர்கள் அரச கட்டுப்பாடற்ற பிரதேசமான புதுமாத்தளன் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமையும் இதே கப்பல் மூலம் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகள் 240 பேரும், அவர்களுக்கு உதவியாக வந்த 116 பேரும் ஐ.சி.ஆர்.சி.யின் உதவியுடன் புதுமாத்தளன் பகுதியிலிருந்து, திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். இதில் நோயாளிகளும், காயமடைந்தவர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேநேரம், நேற்று மாலை கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டவர்களில் நோயாளிகள் மற்றும் காயமடைந்தோர் எத்தனை பேர் என்பது தொடர்பாக சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என ஐ.சி.ஆர்.சி.யின் கொழும்பு அலுவலக பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்தார். புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்றுக் கொண்டு வரப்பட்ட நோயாளிகளும், காயமடைந்தவர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அதுமட்டுமல்லாது, ஐ.சி.ஆர்.சி.யினால் 160 மெத்தைகளும், மருத்துவ விநியோக உதவிகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும் சரசி விஜேரட்ன தெரிவித்தார்.

அத்துடன், புதுமாத்தளன் பகுதியில் இன்னும் நோயாளிகளும், காயமடைந்தவர்களும் இருப்பதாகவும், அவர்களையும் கப்பல் மூலம் எடுத்து வரும் ஐ.சி.ஆர்.சி.யின் பணிகள் தொடருமென்றும் சரசி விஜேரட்ன மேலும் கூறினார். இதேநேரம், திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நேற்று முன்தினம் மட்டும் 120 பேருக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. அத்துடன், மேலதிக சிகிச்சைக்காக 6 பேர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன

எந்தவித சர்வதேச அழுத்தங்களாலும் புலிகள்மீதான போரை நிறுத்த முடியாது : -மைத்திரிபால சிறிசேன

maithiripala.jpg“எந்த வகையான உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டாலும் விடுதலைப்புலிகள் மீதான இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படவே மாட்டாது” என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து விடுதலைப்புலிகள் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு அப்பகுதி முற்று முழுதாக அரசின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுக் காலை வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபை தேர்தல் தொடர்பிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

முல்லைத்தீவிலிருந்து வைத்தியர்கள் வெளியேற்றம்

doctors.jpgமுல்லைத் தீவு மாவட்டத்திலிருந்து வைத்தியர்கள் வெளியேறியிருப்பதாக சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவில் தற்பொழுது காணப்படும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு வைத்தியர்களுக்கும், திணைக்கள அதிகாரிகளுக்கும் சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்தல் விடுத்திருந்தது. இதற்கமைய புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலிருந்தும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும் வைத்தியர்கள் பலர் ஏற்கனவே வவுனியாவுக்கு வந்துவிட்டதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் மொன்டிஸ் கூறினார்.

“மோதல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதால் அங்கிருந்து வெளியேறுவதே சிறந்த வழி” என அவர் தெரிவித்தார். இதேவேளை, வன்னியிலிருந்து மேலும் 400 சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் திருகோணமலைக்கு அழைத்துச் சென்றுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் இவர்கள் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டனர்.

புதுமத்தாளன் பகுதியிலிருந்து காலை புறப்பட்ட கப்பல் நேற்றுமாலை திருகோணமலையைச் சென்றடைந்ததுடன், நோயளர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமையும் முல்லைத்தீவிலிருந்து 240 நோயளர்கள் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். நேற்றுமுன்தினம் திருகோணமலை வைத்தியசாலையில் 120 பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

373 சிவிலியன்கள் பாதுகாப்புப்புத் தேடி வந்துள்ளனர்.

vanni.jpgவிடுவிக் கப்பட்ட பகுதியையான விஸ்வமடு, குரவிக்குளம் பகுதியை நோக்கி பாதுகாப்புத் தேடி மேலும் 373 சிவிலின்கள் கடந்த 48மணித்தியாலத்துக்குள் வந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை ( பெப்:11) 254 சிவிலியன்கள் விஸ்வமடு வடக்கிலிருந்து வந்துள்ளனர்.அவர்களை 58வது டிவிசன் படையினர் வரவேற்றனர். 9 ஆண்கள்,9பெண்கள், 15 சிறுவர்கள் அடங்கலாக 33பேர் குரவிக்களப்பகுதிக்கு வந்தனர்.அவர்களை 57வது டிவிசன் படையினர் வரவேற்றனர்.மேலும் குப்பியக்குளம் பகுதியை நோக்கி வந்த 33பேர் வந்தனர் அவர்களை இரண்டாவது செயலணி படையினர் வரவேற்றனர்.

சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் அடங்கலாக 53பேர் 58வது டிவிசன் படையினரிடம் நேற்று (பெப்:12) வந்து தஞ்சம் புகுந்துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டு நலன்புரி நிலையங்களாக மாற்றம்

college1.jpgவவுனியா விலுள்ள பெரும்பாலான பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டு, அவை, வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வருவோருக்கான நலன்புரி நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன. வவுனியா தமிழ் மகா வித்தியாலயமும் இந்துக் கல்லூரியும்  புதன்கிழமை முதல் மூடப்பட்டு நலன்புரி நிலையங்களாக மாற்றப்பட்டு அங்கு இடம்பெயர்ந்த பெருமளவு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

காமினி வித்தியாலயம், முஸ்லிம் மகா வித்தியாலயம், பூந்தோட்டம் பாடசாலை, கல்வியியற் கல்லூரி, நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரி, பம்பைமடு வளாகவிடுதி, செட்டிகுளம் பாடசாலை மற்றும் மெனிக்பாம் பகுதிகளில் 18 ஆயிரத்து 678 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் சமைத்த உணவுகளே வழங்கப்படுகின்றன.  பஸ்கள் மூலம் கொண்டுவரப்பட்ட மக்கள் தமிழ் மகா வித்தியாலயத்திலும், இந்துக் கல்லூரியிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாடசாலைகளின் மைதானங்களில் தற்காலிக குடிசைகள் அமைக்கும் வேலைகளும் நடைபெறுவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

அடுத்த சில தினங்களில் மேலும் பெரும் எண்ணிக்கையானோர் வரும் பட்சத்தில் அவர்களை தங்கவைத்துப் பராமரிக்க பெரும் இடையூறுகளை அதிகாரிகள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். இடநெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

மூடப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நிலை பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து பெற்றோரும் கவலை தெரிவிக்கின்றனர். இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் தங்கியுள்ள பாடசாலைகளை மீளவும் ஆரம்பிக்க குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு மேல் செல்லுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, சைவப்பிரகாச வித்தியாசாலை, திருச்சபை வித்தியாலயம், பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரி மட்டுமே தற்போது இயங்குகின்றன. நகரிலுள்ள ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் நலன்புரி நிலையங்களாக இயங்குவதும் குறிப்பிடத்தக்கது.

புலிகளின் குண்டுத் தொழிற்சாலை படையினரால் இன்று மீட்பு!

bomb_construct.pngமுல்லைத் தீவில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் இராணுவத்தின் 58 ஆவது படையணியினர் இன்று காலை சுகந்திரபுரம் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றைக் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இத்தொழிற்சாலையில் கிளேமோர் குண்டுகள் மற்றும் 81 மி.மீ. மோட்டார் குண்டுகள் என்பன உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என படையினர் நம்புவதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது

புதிய பாதுகாப்பு வலயம் இன்று பிரகடனம்!

chalai_map.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தில் அரசாங்கம் புதிய பாதுகாப்பு வலயம் ஒன்றை இன்று பிரகடனப்படுத்தியுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு ஏரிக்கு கிழக்கே உள்ள நிலப்பரப்பில் 12 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்தப் புதிய பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

பொது மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவே இப்புதிய பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முடிந்த அளவு விரைவில் பொது மக்கள் இந்தப் பாதுகாப்பு வலயத்துக்கு வந்து சேரவேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

வன்னியிலிருந்து நோயாளரை திருமலை அழைத்துவர தொடர்ந்து நடவடிக்கை

ship-10022009.jpgவன்னியில் யுத்தத்தினால் காயமடைந்த பொதுமக்களில் 240 பேர் கப்பல் மூலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், இதன் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) தெரிவித்தது.

வன்னியில் காயமடைந்தவர்களில் ஒரு பகுதியினர் ஐ.சி.ஆர்.சி.யினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட “கிரீன் ஓஷியன்’ எனும் கப்பல் மூலம் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவிலிருந்து நேற்று முன்தினம் இரவு திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தனர்.

அரச கட்டுப்பாடற்ற பிரதேசமான முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலுள்ள சனசமூக நிலையத்தில் இயங்கும் தற்காலிக ஆஸ்பத்திரியிலிருந்தே இவர்கள் திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் காரணமாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலிருந்த அனைத்து நோயாளிகளும் காயமடைந்தவர்களுமே ஐ.சி.ஆர்.சி. மூலம் புதுமாத்தளன் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே, முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்கள் 240 பேர் கப்பல் மூலம் நேற்று முன்தினம் இரவு திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக ஐ.சி.ஆர்.சி.யின் கொழும்பு அலுவலக பேச்சாளரான சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் பொதுமக்களை பாடசாலைகளில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு.

civilians-1002-09.jpgபுலிகளின் பிரதேசத்திலிருந்து தப்பி வரும் பொதுமக்கள் தற்காலிகமாக 5 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட கல்வி வலயப் பணிப்பாளர் ரஞ்சன் ஒஸ்வேல் தெரிவித்துள்ளார்.

செட்டிக்குளம் மகாவித்தியாலயம், நெல்லுக்குளம் மகாவித்தியாலயம், பூந்தோட்டம் மகாவித்தியாலயம், காமினி மகாவித்தியாலயம், முஸ்லீம் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 வார காலத்திற்கு தற்காலிகமாக இங்கு தங்க வைக்கப்படும் இவர்கள் மெனிக்பாமில் அமைந்துள்ள நிரந்த நலன்புரி முகாங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என கல்வி வலயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இடவசதி குறைவாக காணப்படும் சந்தர்ப்பத்தில் ஏனைய பாடசாலைகளிலும் மக்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.