எமது மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவு செய்யக்கூடிய அரசியல் தீர்வினையே நாங்கள் விரும்புகின்றோம் என விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியாவிலிருந்து வெளிவரும் பிரதான பத்திரிகைகளுள் ஒன்றான தினமணியின் கேள்விகளுக்கு நடேசன் அளித்துள்ள சிறப்பு பேட்டி விபரம் வருமாறு:
கேள்வி: மக்கள் யாரும் இல்லாத, வெறிச்சோடிக் கிடந்த கிளிநொச்சியைத்தான் இலங்கை இராணுவம் பிடித்துள்ளது என்கிறார்களே, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கிளிநொச்சியிலிருந்து அழைத்துச் செல்லும் பணியை எவ்வளவு நாட்களாக செய்தீர்கள்?
பதில்: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்புகளை தமிழ் மக்கள் சந்தித்து வருகிறார்கள். அதுபோன்ற நேரங்களிலும் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உடுத்திய உடையோடு, எல்லா உடைமைகளையும் விட்டுவிட்டு, இடம்பெயர்ந்த வரலாறு பல உண்டு. வன்னி நிலப்பரப்பில் இராணுவ நடவடிக்கையை எங்கள் மக்கள் சந்திப்பதும் இது முதல் தடவையல்ல. இலங்கை இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளில் சிங்களப் படையினர் எத்தகைய சித்திரவதைகள், படுகொலைகள், கற்பழிப்புகள் செய்வார்கள் என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே இராணுவம் எப்போது வரும்? எவ்வாறு வரும்? என்பதை எங்கள் மக்கள் நன்கு அறிவார்கள். அதற்கேற்ப இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓரிரு நாட்களுக்குள்ளேயே முழு உடைமைகளுடனும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்த சகல உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.
கேள்வி: அவர்கள் காடுகளில் தங்கியுள்ளதாகவும், உடல் நிலை மோசமாகி தினமும் பலர் உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறதே, அது உண்மையா?
பதில்: இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தியுள்ளோம். சிறு கிராமங்கள், காடுகள் என எல்லா இடங்களிலும் குடியேற்றியுள்ளோம். இலங்கை அரசின் பொருளாதாரத் தடை காரணமாக மருந்துப் பொருட்கள் கிடைக்கவில்லை. எனவே பாம்புக் கடிகள், தொற்றுநோய்கள் என எல்லா கொடுமைகளையும் எமது மக்கள் சந்தித்து வருகின்றனர். மிகவும் சிரமப்பட்டு அவர்களை பாதிப்பிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
கேள்வி: ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடில்களில் வசிக்கிறார்களா? வெட்ட வெளியில் உள்ளார்களா? அவர்களுக்கு உணவு, உடை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை எவ்வாறு அளித்து வருகிறீர்கள்?
பதில்: ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தற்போது குடிசைகளிலும், தாற்காலிக கூடாரங்களிலும், மர நிழல்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இடம்பெயர்ந்த மக்களுக்கு மின்சாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. குப்பி விளக்குகளிலும், காட்டில் நெருப்புகளை மூட்டியும் மக்கள் தமக்கு வேண்டிய வெளிச்சத்தைப் பெறுகின்றனர். தற்காலிக கிணறுகள், குளங்களிலிருந்து எடுக்கப்படும் நீரை, எமது சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்படி கொதிக்க வைத்து பருகி வருகின்றனர். உணவைப் பொறுத்தமட்டில், ஐ.நா. சபையின் உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்படும் உணவுகளையும், உள்ளூர் உற்பத்திகளில் சேகரித்து வைத்த உணவுகளையும் உண்டு வருகின்றனர். பெரிய சிரமங்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் எங்கள் மக்கள் உணவு, உடை, குடிநீர் ஆகியவற்றைப் பெற்று வருகின்றனர்.
கேள்வி: கிளிநொச்சியில் தற்போது கட்டடங்கள் அனைத்தும் தரைமட்டமாகக் கிடக்கின்றன. மின்சாரம், குடிநீர் விநியோகம் எதுவும் இல்லை. கிளிநொச்சியை காலி செய்யும் முன் நீங்களே அழித்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறதே. இது உண்மையா?
பதில்: இது முற்றிலும் பொய்யான பிரசாரமாகும். இலங்கை விமானப் படையின் குண்டு வீச்சுக்களாலும், ஷெல் (பீரங்கிக் குண்டு) வீச்சுக்களாலும் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. நேரில் சென்று பார்ப்பவர்களுக்கு இது நன்றாகப் புரியும்.
கேள்வி: தமிழ் மக்கள் கிளிநொச்சியை விட்டு முன்னரே வெளியேறி விட்டார்கள் என்றால், தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள் யாருக்கு போய்ச் சேர்ந்தது?
பதில்: முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சியை ஒட்டிய பிரதேசங்களில், மக்கள் இடம்பெயர்ந்து சென்று வாழ்கின்ற இடங்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. எமது பிரதேசத்தில் இயங்குகின்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் எங்களுடன் மிகவும் நெருக்கமாகவும், அந்நியோன்னியமாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை எளிதாக விநியோகிக்க முடிகிறது.
கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும், அவர் விரைவில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வார் என்றும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன. உண்மை நிலை என்ன?
பதில்: அவர் மிகவும் தேக ஆரோக்கியத்துடன் இருந்து போராட்டத்தை வழிநடத்தி வருகிறார். இலங்கை அரசுக்கு ஆதரவான ஊடகங்களே இவ்வாறு பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
கேள்வி: இலங்கை இராணுவத்துக்கு இந்திய இராணுவம் உதவி வருவதாகக் கூறப்படுவது உண்மையா?
பதில்: பல ஊடகங்கள், குறிப்பாக கொழும்பு ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
கேள்வி: கிளிநொச்சியை மீண்டும் மீட்போம் எனக் கூறுகிறீர்கள். கிளிநொச்சியிலிருந்து இலங்கை இராணுவத்தை விரட்டுவது அவ்வளவு எளிதானதா?
பதில்: இங்குள்ள தமிழ் மக்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர். அது மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகத் தமிழ் இனத்தின் தார்மிக ஆதரவும் எங்களுக்கு உள்ளது. இதுவே எங்கள் பலம். இந்த பலத்தின் மூலம் நாங்கள் இழந்த ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
கேள்வி: இலங்கை இனப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளின் அணுகுமுறை மற்றும் செயல்பாடு குறித்து தங்கள் கருத்து என்ன?
பதில்: எங்கள் விடுதலைப் போராட்டத்திற்காக அரசியல் மாறுபாடுகளை மறந்து, குரல் கொடுப்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், எழுச்சியையும் கொடுக்கின்றது.
கேள்வி: இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து தங்கள் கருத்தென்ன?
பதில்: இந்திய அரசினுடைய, இந்திய மக்களுடைய வரலாற்று ரீதியான நண்பர் யார்? பகைவன் யார்? என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள்தான் இந்தியாவின் வரலாற்று ரீதியான நண்பன் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவுக்கு நம்பிக்கைக்குகந்த நண்பனாக இலங்கை அரசு என்றைக்குமே நடந்து கொள்ளவில்லை. இதற்குப் பல்வேறு ஆதாரங்களைக் கூறமுடியும்.
கேள்வி: போர் நிறுத்த உடன்படிக்கை முறிய விடுதலைப் புலிகளே காரணம் என இங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் கூறி வருவது உண்மையா?
பதில்: போர் நிறுத்த உடன்படிக்கை முறிந்ததற்கு இலங்கை அரசே காரணம். போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதாக அவர்கள்தான் முதலில் அறிவித்தனர். நாங்கள் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. இப்போதும் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று உருவானால் அதனை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம்.
கேள்வி: ஈழத் தமிழர் பிரச்னைக்கு எத்தகைய தீர்வை எட்ட முடியும் என நம்புகிறீர்கள்? அதற்குத் தங்களிடம் எத்தகைய திட்டம் உள்ளது?
பதில்: எமது மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவு செய்யக்கூடிய அரசியல் தீர்வினையே நாங்கள் விரும்புகின்றோம். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், நோர்வே போன்ற நாடுகள் அரசியல் பேச்சுவார்த்தைகள் வழியாகவே இனப் பிரச்னைக்கான தீர்வை காண முடியும் என கூறி வரும் நேரத்தில், இலங்கை அரசு எங்கள் மீது தடை விதித்துள்ளது. இலங்கை அரசு இராணுவத் தீர்வை நோக்கிச் செல்கின்றது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. இது சிங்கள அரசின் அப்பட்டமான தமிழின விரோதப் போக்கிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.என்றார் நடேசன்.
நன்றி: தினமணி