புலிகளின் அரசியல், நிர்வாகத் தலைமையகக் கோட்டையாக விளங்கிய கிளிநொச்சி நகரத்தை படையினர் நேற்று (02) கைப்பற்றிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யாழ். – கண்டி ஏ-9 வீதி ஓமந்தை முதல் பரந்தன் வரை படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் கிளிநொச்சியில் படையினர் தமது நிலைகளைப் பலப்படுத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. புலிகளின் மறைமுக அரச நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி நகரத்தை படையினர் நேற்று முற்பகல் சுற்றிவளைத்து உள்நுழைந்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மும்முனைகளில் முன்னேறிய படையினர் கிளிநொச்சி நகரத்திற்குள் பிரவேசித்து நேற்று நண்பகல் அளவில் இறுதி நடவடிக்கையை மேற்கொண்டதாக நேற்றுப் பகல் தேசிய பாதுகாப்பு நிலையத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டம்
* 1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாவட்டம்
* நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகள்
* 95 கிராம சேவையாளர் பிரிவுகள்
* மூன்று பிரதேச சபைகள் (பச்சிலைப்பள்ளி, கரச்சி, பூநகரி)
* 1279 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடையது
* சனத்தொகை – 1,95,812
* தமிழர் தொகை – 1,95,386 (99.78%)
* இலங்கை சோனகர் – 424 (0.22%)
கிளிநொச்சியின் வீழ்ச்சி விடுதலைப் புலிகளுக்கு நிச்சயம் பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் அவர்களின் போர் முடிவுக்கு வருமா என்பதும் சந்தேகம்தான். காரணம், கடந்த காலங்களில் புலிகள் நடத்திய போர்கள் இதை தெளிவாக்குகிறது. இலங்கை படைகளுக்கு எதிராக 1983ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போர் தொடங்கியது. அது முதல் தொடர்ந்து பல வெற்றிகளையும், வீழ்ச்சிகளையும், பின்னடைவுகளையும் புலிகள் சந்தித்து வருகின்றனர்.
புலிகளின் தலைநகராக விளங்கியது கிளிநொச்சி என்றாலும் கூட அருகாமையில் உள்ள முல்லைத்தீவும் புலிகளின் முக்கிய தளமாக விளங்கி வருகிறது. கிளிநொச்சிக்கு முன்பாக பரந்தன் நகரை ராணுவம் கையகப்படுத்தியது. இதன் மூலம் வன்னிப் பகுதியில் முக்கிய தளங்களை இழந்துள்ளனர் புலிகள். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கிளிநொச்சி ராணுவத்தின் கைவசம் வந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் முதலே கிளிநொச்சியைக் குறிவைத்து ராணுவம் பல முனைகளில் தனது தாக்குதலைத் தொடங்கியது. ஆனால் புலிகளின் தடுப்பரண்கள், தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக இந்த முயற்சி தடைபட்டு வந்தது. இந்த மோதலில் ராணுவத்தரப்பில் பெருமளவில் சேதம் ஏற்பட்டது. நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போது தங்களது இலக்கை ராணுவம் ஒரு வழியாக எட்டியுள்ளது.
புலிகளின் தற்போதைய ஒரே முக்கியதலமாக முல்லைத்தீவு மாறியுள்ளது. ஆனால் ராணுவத்தின் அடுத்த குறி முல்லைத்தீவுதான் என்பதால் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை எந்த கோணத்தில் இருக்கும் என்பது கவனிப்புக்குரியதாகியுள்ளது. இலங்கையிலிருந்து இன்று வெளிவந்துள்ள அனைத்து செய்தித் தாள்களிலும் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டுள்ள சம்பவமே பிரதான செய்தியாக பிரசுரமாகியிருந்தது. நேற்றைய தினம் அரசாங்க தொலைக்காட்சியில் கிளிநொச்சி சம்பவம் குறித்த சில செய்திகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. ஆனால், கிளிநொச்சியின் வெற்றியானது விடுதலைப் புலிகளின் போராட்டத்தை அடக்கிவிட்டது என்று பொருள் கொள்ளப்படுமாயின் அது பெருந் தவறு. இராணுவத் தளபதி நேற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது வன்னிப் பிரதேசத்தில் முல்லைத்தீவு, யானையிரவு போன்ற சுமார் 40 கி.மீ. வரை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என அறிவித்தார். இது கிழக்கில் தொப்பிகலை பிரதேசத்தைவிட குறைந்த பிரதேசம் என்றும் தெரிவித்தார். எனவே, இராணுவத்தின் அடுத்த இலக்காக முல்லைத்தீவு, யானையிரவு போன்ற பிரதேசங்கள் அமையுமென்பது அவர் கருத்துக்களிலிருந்து புலனாகின்றது. கிளிநொச்சியின் வெற்றி என்று கூறும்போது நகர்சார்ந்த வெற்றி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கிளிநொச்சி மாவட்டத்தின் வெற்றியாக அது அமையுமா என்பது கேள்விக்குறியே. அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி விடுதலைப் புலிகள் கெரில்லா தாக்குதல்களில் தொடர்ந்தும் ஈடுபடக்கூடிய நிலை அதிகரிக்கப்படலாம் எனப்படுகின்றது.
இது தொடர்பான செய்தித் தொகுப்புகள் கீழே இடம்பெற்றுள்ளன.
கிளிநொச்சியைப் படையினர் மீட்டதானது ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக பெற்ற வெற்றியல்ல.
கிளிநொச்சியைப் படையினர் மீட்டதானது ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக பெற்ற வெற்றியல்ல. தெற்கு வடக்கை தோல்வியுறச் செய்ததாக வரைவிலக்கணப்படுத்தக்கூடிய தொன்றுமல்ல. இது முழு நாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மனித வாழ்க்கையை விளையாட்டாகக் கொண்ட கொடூர பயங்கரவாதத்தைத் தோல்வியுறச் செய்த தீர்க்கமான வெற்றி. மக்களை இனம், மதம் என பிரிப்பதற்குப் பிரயத்தனம் செய்த இனவாதத்தைத் தோற்கடித்த வெற்றியாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். படையினர் கிளிநொச்சியை நேற்றுக் கைப்பற்றியதையடுத்து அதனை உத்தியோகபூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிவித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் (02) பிற்பகல் இடம் பெற்ற இவ்வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள் முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது 2009ம் ஆண்டை வெற்றியின் ஆண்டென நான் அறிவித்தேன். அதன்படி, வருடம் பிறந்து இரண்டாவது நாளில் போராட்ட வரலாற்றில் முக்கியமானதொரு வெற்றியைச் சொந்தமாக்க முடிந்துள்ளது. உலகளவில் பிரபலமான அமைப்பான விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து புலிகளின் கோட்டையாகத் திகழ்ந்த கிளிநொச்சியை எமது படையினர் வெற்றி கொண்டுள்ளனர். கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு நான் கனவுகாண்பதாக புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியிருந்தார். எனது கனவு நனவாகியுள்ளது. இது எனது கனவுமட்டுமல்ல. அமைதியையும் சுதந்திரத்தையும் விரும்புகின்ற அனைவரினதும் கனவு இது. அனைத்து மக்களினதும் கனவு எமது படையினரால் நனவாக்கப்பட்டுள்ளது.
இது சாதாரண வெற்றியல்ல. வரலாற்று வெற்றி. புலிகளின் கோட்டையை எமது படையினர் மீட்ட வெற்றியென்பது பயங்கரவாதத்துக்கு எதிராக முழு உலகிற்குமான வெற்றி. முழு உலகமும் இதற்காக எமது படை வீரர்களைப் பாராட்டும். கிளிநொச்சி என்பது தனியானதொரு அரசு அமைக்க எண்ணியோரின் தலை நகரமாகும். சர்வதேச ஊடகங்கள் மட்டுமன்றி சில ராஜதந்திரிகளும் நம்பி செயற்பட்ட காலம் ஒன்றிருந்தது. புலிகளின் அந்த தனிராஜ்யத் தலைநகரம் கை நழுவியது.
2005ம ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது முழு நாட்டிலும் ஒரே சட்டத்தை நிலைநாட்டுமாறு மக்கள் எம்மைக் கேட்டுக்கொண்டனர். பல உடன்படிக்கைகளால் பிளவுபட்டிருந்த நாட்டை ஐக்கியப்படுத்துமாறு கேட்டனர். முப்படையினரும் மக்கள் என்மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்றவே அர்ப்பணிப்புடன் உழைத்தனர்.
இன்று அந்த எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. 2009ம் ஆண்டில் எமது நம்பிக்கை மேலும் மேம்பாடடைந்துள்ளது. படையினர் தமது கண், காது, இரத்தம் மட்டுமன்றி தமது உயிரைக் கூட தியாகமாக வழங்கியே இவ்வெற்றியைப் பெற்றுள்ளனர். இதற்காக நாட்டுத் தலைவர் என்ற வகையில் நாட்டு மக்கள் அனைவரினதும் கெளரவத்தை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். இந்த வரலாற்று வெற்றிக்கு தலைமைத்துவம் வழங்கிய முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட சகல படை உயரதிகாரிகள், வீரர்கள் அனைவருக்கும் நாட்டு மக்களின் கெளரவம் உரித்தாகட்டும்.
நாட்டு மக்களின் பங்களிப்பு இதில் முக்கியமானது. மக்கள் இந்த அர்ப்பணிப்புடனான பங்களிப்பை இன்னும் குறுகிய காலத்துக்கு வழங்க வேண்டியுள்ளது. முல்லைத்தீவையும் கைப்பற்றி புலிகளை முழுமையாகத் தோற்கடிக்கும் வரை இதற்காக ஆதரவு தருமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடையுமாறு புலிகளுக்கு இறுதியாக வேண்டுகோள்விடுக்கின்றேன். பல தசாப்தங்களாக புலிகளின் பிடியில் பணயக் கைதிகளாகவுள்ள வடக்கு மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
தமிழில் உரை
வடக்கு மக்களே உங்களதும் உங்கள் பிள்ளைகளினதும் பாதுகாப்பான எதிர்காலத்தை நான் நாட்டுத் தலைவன் என்ற ரீதியில் நான் பொறுப்பேற்கிறேன் என வாக்குறுதியளிக்கிறேன். ஒரே கொடியின் கீழ் மகிழ்வுடன் வாழ நவீன இலங்கையை உருவாக்க நம்மை அர்ப்பணிப்போம். எமது இணைந்த அர்ப்பணிப்பு சகல தடைகளையும் வென்று முன்னோக்கிச் செல்ல வழிவகுக்குமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி வடக்கு மக்களுக்கான வாக்குறுதியைத் தமிழில் வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
புலிகளின் கனவு ஈழத்தின் கோட்டை தகர்ந்தது…’ – இராணுவப் பேச்சாளர்
புலிகளின் கனவு ஈழத்தின் கோட்டையாக விளங்கிய கிளிநொச்சி படையினரிடம் வீழ்ந்தமை அவர்களுக்குப் படுதோல் வியாகுமென்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். நீதிமன்றம், வங்கி, சமாதான செயலகம், அரசியல் தலைமையகம், நடவடிக்கைத் தலைமையகம் போன்ற அனைத்து நிர்வாகக் கட்டமைப்புகளையும் கிளிநொச்சியி லேயே புலிகள் வைத்திருந்தனர். இன்று அவர்களின் ஈழத் தலைநகர் சிதைக்கப்ப ட்டுள்ளதுடன் புலிகள் ஏ-9 வீதியின் கிழ க்குப் பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ளார்களென்றும் பிரிகேடியர் தெரிவித்தார்.
சட்டவிரோத வரிசேகரிப்புக்கும் தளமாக விளங்கிய கிளிநொச்சி கைப்பற்றப் பட்டுள்ளதால் ஆனையிறவு, பளை பகுதிகளுக்கு புலிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகக் கூறிய பிரிகேடியர் நாணயக்கார, தொப்பி கலைக்குச் சமமான ஒரு பிரதேசத்தில் மாத்திரம் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
‘புலிகளின் 236 இலக்குகள் தாக்கி அழிப்பு’ – விமானப் படை பேச்சாளர்
பரந்தன் மற்றும் கிளிநொச்சியைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைகளின் போது, புலிகளின் 236 இலக்குகளை விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விமானப் படைப்பேச்சாளர் விங்கமாண்டர் ஜனகநாணயக்கார தெரிவித்தார். இராணுவத்திற்கு உதவியாக 139 தடவைகள் விமானப்படையின் விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2008 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் மூன்று மாதகாலம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் படை நடவடிக்கைகளுக்கு பாரிய வெற்றியளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கிளிநொச்சி நகருக்குள் படையினர் பிரவேசித்ததை அடுத்து தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. இதில் விமானப்படைப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில்:- விமானப் படைக்குச் சொந்தமான எம். ஐ. – 24 ரக விமானங்களைப் பயன்படுத்தி புலிகளின் 32 இலக்கு மீது 25 தடவைகள் தாக்குதல்கள் நடத்தியுள்ள அதேசமயம் கிபிர் மற்றும் எப்-7 ரக ஜெட் விமானங்களை பயன்படுத்தி 204 இலக்குகள் மீது 144 தடவைகள் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சியை நோக்கி முன்னேறி வந்த இராணுவத்தின் 57 வது படைப் பிரிவினருக்கும், முதலாவது செயலணியினருக்கும் உதவியாகவே இந்த விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. விமானப் படையினரின் வெற்றிகரமான தாக்குதல்கள் மூலம் கிளிநொச்சி, பரந்தன், இரணைமடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள், பலமான மற்றும் ஒன்று கூடும் தளங்கள் பல முக்கிய இலக்குகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த விமானப் படைப் பேச்சாளர் விமான ஓட்டிகளும், களமுனையிலுள்ள போர் வீரர்களும் இதனை உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஈழப் போர் … ஒரு பார்வை…
1983 – விடுதலைப் புலிகள் நடத்திய கொரில்லாத் தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் மூண்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வெளியேறினர். இதை முதல் ஈழப்போர் என புலிகள் வர்ணித்தனர்.
1987 – போர் நிறுத்தத்திற்கு முயன்ற இந்தியா, அதை அமல்படுத்த படைகளை அனுப்பியது. அமைதி ஒப்பந்தத்திற்கு புலிகள் ஒத்துக் கொண்டாலும் கூட ஆயுதங்களைக் கைவிட மறுத்து விட்டனர். இதையடுத்து இந்தியப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையோ மோதல் மூண்டது. 1000க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
1990 – 3 ஆண்டு கால சண்டைக்குப் பின்னர் இந்தியப் படைகள் இலங்கையை விட்டு கிளம்பின. யாழ்ப்பாணத்தை கையகப்படுத்தியது புலிகள் இயக்கம். 2வது ஈழப் போர் தொடங்கியது.
1991 – விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.
1993 – விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இலங்கை அதிபர் பிரேமதாசா பலியானார்.
1995 – அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு முன்வந்தார். ஆனால் கடற்படைக் கப்பலை தகர்த்தனர் புலிகள். 3வது ஈழப் போர் தொடங்கியது. ஆனால் அரசு வசம் போனது யாழ்ப்பாணம்.
1995 -2001 – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போர் தீவிரமடைந்தது. கொழும்பு மத்திய வங்கியில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர். சந்திரிகாவும் காயமடைந்தார்.
2002 – நார்வே முயற்சியால் விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
2003 – அமைதிப் பேச்சுக்களிலிருந்து விலகினர் புலிகள். போர் நிறுத்தம் செயலிழந்தது.
2004 – கிழக்கை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் புலிகள். அதே ஆண்டில் சுனாமி தாக்குதல் நிகழ்ந்தது. தமிழர் பகுதிகளில் பேரிழப்பு.
2006 – ஜெனீவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அரசுப் படைகளுக்கும், புலிகளுக்கும் இடையே மீண்டும் போர் வெடித்தது.
2007 – கிழக்கில் உள்ள புலிகளின் முக்கிய நகரான வாகரையை ராணுவம் மீட்டது. ஜூலையில், கிழக்கு மாகாணம் முழுமையும் புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
2008 – ஜனவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அரசு அறிவித்தது. ஆகஸ்ட் மாதம் வடக்கில் நான்கு பகுதிகளில் ராணுவம் முன்னேறியது. கிளிநொச்சியை நெருங்கி விட்டதாக ராணுவம் அறிவித்தது.
2009 – ஜனவரி 2ம் தேதியான இன்று கிளிநொச்சியைப் பிடித்து விட்டதாக ராணுவம் அறிவித்தது.
வெற்றியின் பயனை மக்கள் அனுபவிக்க எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – ரணில்
கிளிநொச்சியில் படையினர் பெற்ற வெற்றியை நாட்டு மக்கள் அனுபவிக்கும் விதத்தில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறுனார். நாட்டில் மக்கள் இன்று பல்வேறு கஷ்டங்கள், துன்பங்கள் மத்தியில் வாழுகின்றனர். ஆனால், அவர்களுக்கு உரிய மானியங்கள், சலுகைகள் வழங்கப்படவேண்டியது இன்று அவசியம். அரசு அதனைச் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் மாத்தளை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர்கள், தொகுதிகளின் அமைப்பாளர்களுக்கு அறிவூட்டும் இக்கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது; சிந்தனை என்று கூறுவது நாட்டுக்கும், மக்களுக்கும் சிறந்த நன்மைகளைத் தரக்கூடியதாக அமைந்திருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு இங்கு சிந்தனையில்லை. இன்று அடாவடித்தனம், அநீதி, ஊழல்கள், வீண்விரயம், மக்களிடம் அனுதாபம் காட்டாமை போன்ற தீய வழிகள் காணப்படுகின்றன. நாட்டில் இவை இருக்கக்கூடாது. எரிபொருள் விற்பனை தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்காமல் 120 சத வீத இலாபத்துடன் எரிபொருட்கள் விற்பனை செய்யப்படுவது நாட்டு மக்களுக்கு அநீதியையும் அசௌகரியங்களையும் இழைப்பதாகும்.
கிளிநொச்சியை கைப்பற்றியதாக அறிவிக்கின்றனர். இதனால், நாம் படையினரை கௌரவித்து பாராட்டி எமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கிளிநொச்சியை கூட்டாக வைத்துக்கொண்டுதான் விலைவாசிகள் உயர்த்தப்பட்டது. அவ்வாறானால் இம்மாதத்திலிருந்து பெற்றோலை 100 ரூபாவாகவும் மண்ணெண்ணெயை 5 ரூபாவாகவும் குறைத்து மக்களுக்கு வழங்கவேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் மக்களே இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவார்கள் என்றார்.
பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரம்
கிளிநொச்சி நகரை படையினர் கைப்பற்றி விட்டனர் என்ற செய்தி நேற்று அறிவிக்கப்பட்டதும் தெற்கில் பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரம் செய்தனர். ஜனாதிபதிக்கும் முப்படைத் தளபதிகளுக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் நன்றி தெரிவித்து கோஷமெழுப்பியவாறு தேசியக் கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாகவும் சென்றனர். கொழும்பில் சகல பகுதிகளிலும் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. பிரதான வீதிகளில் ஊர்வலமாகச் சென்றும், கோஷமெழுப்பியும் பட்டாசு கொளுத்தியதாகவும் பெரும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன. நகரெங்கும் கோர்வை கோர்வையாக பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.
புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சிப் பகுதியை அரச படையினர் கைப்பற்றியதாக ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து இரத்தினபுரி நகரில் நேற்று (02) பகல் 12.00 மணிக்கு ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இராணுவ வீரர்களுக்கும் ஆதரவு தெரிவித்தனர்.
அனுராதபுரம் நகரையும் நகரைச் சூழவுள்ள பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் பட்டாசு கொளுத்தி தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். அனுராதபுரம் டி. எஸ். சேனநாயக்க சுற்று வட்டம், ஓங்கிப் பகுதி, பழைய நகரப் பகுதி, மார்க்கப் பகுதி, புதிய பஸ் நிலையம் பகுதிகளில் ஒன்று கூடிய பொதுமக்கள் கிளிநொச்சி வெற்றியை பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தலாவ, தம்புத்தேகம, நொச்சியாகம, கெக்கிராவ, ஹொரவப்பொத்தான, கஹட்டகஸ்திகிலிய, மதவாச்சி, கெபிதிகொள்ளாவ, ரம்பாவ, கலன்பிந்துனுவெவ, திறப்பனே, மரதன்கடவள, எப்பாவல, மிஹிந்தலை போன்ற நகரங்களிலும் பொதுமக்கள் ஒன்று கூடி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதையடுத்து நாடளாவிய ரீதியில் பட்டாசி வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்யப்பட்ட நிகழ்வு தமிழ் மக்களின் உள்ளங்களை புண் படுத்தக்கூடிய ஒரு நிகழ்வாக மாற இடமுண்டு. இத்தகைய சம்பவங்களினால் இனக்குரோதங்களை வளக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் கடமையாகக் கொள்ளலாம்.
கொழும்பு விமானப் படை தலைமையகம் முன்னால் தற்கொலைத் தாக்குதல்
மூன்று விமானப்படைவீரர்கள் பலி; 34 பேர் காயம்
கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்து சில மணிநேரத்திற்குள் விமானப்படை தலைமையகத்தின் முன்பு தற்கொலை குண்டுதாக்குதலொன்று இடம்பெற்றுள்ளது. தற்கொலை குண்டுதாரி தலைமையகத்திற்குள் நுழையும் முன்பே நுழைவாயிலில் இந்த குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான செய்தி வருமாறு:-
கொழும்பு விமானப் படைத்தலைமையகத்திற்கு முன்னால் நேற்று (02) மாலை இடம் பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் மூன்று விமானப் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 5.10 மணியளவில் இடம்பெற்றதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
வீதியின் மறுபுறத்திலிருந்து வேகமாக ஓடிவந்த தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் இரண்டு பஸ் வண்டிகளும், மூன்று மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளன. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 13 விமானப் படைவீரர்களும், 23 சிவிலியன்களும் அடங்குவதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். அலுவலகக் கடமைகளை முடித்துக்கொண்டு ஊழியர்கள் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் நேரம் என்பதால் பெரும் வாகன நெருக்கடி காணப்பட்டது. இந்த நேரத்தில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்ததால் பெரும் பதற்றம் நிலவியது.
குண்டு வெடிப்பு இடம்பெற்றதும் முப்படையினரும், பொலிஸாரும் குவிக்கப் பட்டிருந்ததுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. லேக்ஹவுஸ் சுற்று வட்டத்திலிருந்து கொம்பனி வீதி வரையிலான வீதிப்போக்குவரத்து தற்காலிகமாக தடைசெய்யப்பட்டு சில மணிநேரத்தில் மீண்டும் வழமைக்கு திரும்பியது.