பொத்து வில் காட்டுப் பிரதேசத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் விறகு வெட்டச் சென்றபோது கைது செய்யப்பட்ட 30 முஸ்லிம்களையும் வழக்கு விசாரணை எதுவுமின்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டம் எதிர்வரும் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொத்துவில் பிரதேச செயலகத்தின் முன்பாக நடைபெறவுள்ளது.
தினமும் விறகு வெட்டிப் பிழைத்து வரும் கூலித் தொழிலாளர்களான இவர்கள் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்படுவதும் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்படுவதுமாக உள்ளனர். இது தொடர்பாக இவர்களின் உறவினர்கள், சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தும் அவர்களை விடுதலை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.
இதனால், இவர்களின் குடும்பங்கள் எதுவித வருமானமும் இன்றி பட்டினி வாழ்க்கை வாழுகின்றனர். இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும் வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவி எம்.பி. மல்லிகா உம்மா தெரிவித்தார். காட்டுப் பகுதியில் விறகு வெட்டச் சென்ற போது அதிரடிப்படையினர் இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்களுக்கு எதிராக இதுவரை வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.