புன்னியாமீன் பி எம்

புன்னியாமீன் பி எம்

ஏப்ரல் 1 -முட்டாள்களான அறிவாளிகள் தினம் – புன்னியாமீன்

april-fools-day.jpgசர்வதேச ரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிளாலர்கள் தினம் என்று மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக் கொள்ள எவரும் முன் வருவதில்லை. அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் முட்டாள்களான அறிவாளிகளின் தினம் என்றாலும் பிழையாகாது. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும்.

விஷயங்களை அறிந்து கொள்பவன் அறிஞன் ஆகின்றான் என்பார்கள். அதேபோல் ஒரு முட்டாள் ‘தான் ஒரு முட்டாள்’ என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு ‘அறிஞனாக’ வாய்ப்புக் கிட்டுகிறதா என்று எமக்கும் முட்டாள்தனமாக சிந்திக்க தோன்றுகிறது.

“The first of April is the day we remember what we are the other 364 days of the year ” – Mark Twain என்று நம்மைப்பற்றி முன்பே உரத்துச் சொல்லிவிட்டார். கற்றாரைக் கற்றாரே காமுறுவது போல் ஒரு முட்டாள் அவனை விடப் பெரிய முட்டாள் மெச்சுவான் என்றும் யாரோ ஒருவரும் கூறியுள்ளதாகவும் அறிகிறோம்.

“முட்டாள்கள் தினம்” ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள். இது எவ்வாறு ஆரம்பமானது என்ற வினாவும் எம்முள் எழுகின்றது.

புராதன வரலாற்றில் ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி தான் வசந்தம் ஆரம்பிக்கும் பொன்னாளாகும். புராதன வரலாற்றில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், ” பிரான்சு தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின்போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார்.

இந்த ஒருவாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. 1562ம் ஆண்டில் போப் கிரகோரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப்படுத்தும்படி அறிவித்தார். ஆண்டுத் துவக்க நாளாக ஜனவரி 1ம் தேதியை அறிமுகம் செய்துவைத்தார்.

இனி மேல் பிரான்ஸ் தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.

இந்தப் “புதிய” புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. அதற்குக் காரணங்கள் பல உண்டு. அன்றைய கால கட்டத்தில் இது போன்ற செய்திகள் அல்லது மாற்றங்கள் சகலரையும் சென்றடைவதற்குரிய தகுந்த சாதனங்கள் இருக்கவில்லை. அத்தோடு பழைய வழக்கத்தைப் புறம் தள்ளி புதிய வழக்கத்தை ஏற்றுக் கொள்வதையும் இம்மக்கள் மறுத்திருக்கலாம். ஆகவே இம் மக்கள் தொடர்ந்தும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியையே தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தார்கள்.

எவ்வாராயினும் பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும் ஸ்காட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

என்றாலும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப் பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை, வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர்.
இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர்.

இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம். ஜனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக்கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர்.

இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர். நெப்போலியன் 1 ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் முதல் நாளை, “Poission d’avril ” என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக்கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் ‘பூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிரகோரியன் காலண்டரை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக பிரான்சு இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்காட்லாந்தில் April Fool’s Dayயை April Gawk என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார். அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார்.

ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், “இன்று ஏப்ரல் ·பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்”, இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர்.

பிரெஞ்சுக் குழந்தைகள்கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் “ஏப்ரல் மீன்” என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர்.

1986ல் ப்ரெட் வால்டன் இயக்கிய, “ஏப்ரல் பூல்ஸ் டே” திரைப்படம் மிகப் பிரபலமானது. டெபோரா போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்..

ஏப்ரல் முதல் தேதி பல வேடிக்கைகள் மட்டுமல்லாது பல வினைகளும் வந்துள்ளன. அத்தோடு பல மூட நம்பிக்கைகளையும் இந்த ஏப்ரல் முதல் தேதி மக்களுக்கு வழங்கியிருக்கின்றது.

அல்லது மக்களே தங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்!.

ஓர் ஆலோசனை

மூன்றாம் உலக நாடுகளில் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் நாளை முட்டாள் தினமாக பிரகடனப்படுத்தினால் எப்படி இருக்கும்?  .

உண்மையான ஜனநாயக நாள் அல்லவா அது.?

தேசம் நெட் வாசகர்களே உங்கள் கருத்து என்ன?

இன்றிரவு 8.30க்கு விளக்குகளை அணையுங்கள்

28-switch-off.jpgஉலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை தினத்தன்று அனுஸ்டிக்கப்படும் புவி நேரம் என்ற நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது.

இன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட வேண்டும் என்பது இந்நிகழ்வின் எதிர்பார்க்கையாகும் .
2007ம் ஆண்டு முதல் இந்த புவி நேரம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

உலக இயற்கை நிதியம். இந்த நிகழ்வின்போது உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள்,  இல்லங்களில் அவசியம் இல்லாத விளக்குகளை ஒரு மணி நேரத்திற்கு அணைக்க அழைப்பு விடப்படும்.

புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. 2008ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்தப் புவி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டதாகவும தெரிவிக்கப்படுகிறது.

உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓரா ஹவுஸ், ரோம் நகரின் கொலீசியம், அன்டார்டிக்காவின் ஸ்காட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.

இந்த ஆண்டு புவி நேரம், இன்று சனிக்கிழமை இரவு எட்டரை மணி முதல் ஒன்பதரை மணி வரை நடைபெறவுள்ளது. இம்முறை 1000 நகரங்களைச் சேர்ந்த பல கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் அறிய.. 

http://earthhour.in/

இன்று சர்வதேச நீர்வள தினம் (world water day) – புன்னியாமீன்

22-031.jpgஇன்று மார்ச் 22  றியோ டி ஜெனீரோவில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் செய்யப்பட்ட சிபாரிசையடுத்து மார்ச் 22 ஆம் திகதியை உலக நீர் தினமாக ஐ.நா.பொதுச் சபை பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த 16 வருடங்களாக இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அருந்தலாகக் கிடைக்கின்ற நீர்வளத்தை மனிதன் தன் தேவைக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சர்வதேச நீர்வள தினத்தின் கருப்பொருள் நீர்வளத்தை மதிப்பிட்டு மிகப் பயனுள்ள வகையில் அதனை முகாமைத்துவம் செய்தலாகும்.

உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவது நீர். நீரின்றி உலகமே இல்லை. எல்லா வளங்களுக்கும் மூலவளம் நீரே. உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிசமே நீர். நீர் வளமானது சகல உயிரினங்களிதும் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும். அதனை பயன்படுத்துவோர்களிடையே மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும்,  சந்தைப் பொருளாகவும் கூட மாறிவிட்டது.

பூமியெனும் உயிரின வாழ்விடத்தைத் தவிர வேறு எந்தக் கோளிலும் நீரில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அங்கெல்லாம் உயிரினம் இல்லை என கூறப்படுகின்றது. வேற்றுக் கிரகங்களில் மரம் செடி கொடி,  ஆறு, குளம்,  ஓடைகளும் இல்லை. இதன் காரணமhகவே அந்தக் கிரகங்களில் உயிரினங்கள் இல்லையென இதுவரை கண்டுபிடிப்புக்கள் நிரூபித்துள்ளன.

நீர் உயிரின் ஆதாரம். உயிர்களனைத்துக்கும் அதுவே ஜீவாதாரம். நீர் இல்லை என்றால் இந்த உலகிலும் உயிருள்ள ஜீவன்கள் இருக்கமாட்டாது. உணவு இல்லை என்றால் அதனை உற்பத்தி செய்து கொள்ளலாம். உடை தான் இல்லை என்றாலும் அதனையும் உற்பத்தி செய்து கொள்ளலாம். ஆனால் நீர் இல்லாது போய் விட்டால் அதனை எந்த ஒரு சக்தியாலும் உற்பத்தி செய்யவே முடியாது.

மனித சமுதாயத்துக்கு நீரின் பயன் அளப்பரியது. பிறப்பிலும் வாழ்விலும் இறப்பிலும் கூட இணை பிரியாத இன்றியமையாத சாதனமாக விளங்குவது தண்ணீர். நீரின்றி நிலமில்லை,  நிலமின்றி நீரில்லை எனும் தத்துவத்தைப் போதிக்கும் மகத்துவம் நிறைந்த தண்ணீரின் பெருமைகளை மதங்களும் மகிமைப்படுத்துகின்றன.

ஒவ்வொரு வருடமும் உலக நீர் தினத்துக்கென ஒரு தொனிப்பொருள் பிரகடனம் செய்யப்படுகிறது. இன்றைய தினத்துக்கான தொனிப் பொருள் “எல்லைகளுக்கு அப்பாலான நீர்வளம்; நீரைப்பகிர்தல்,  வாய்ப்புக்களைப் பகிர்தல், (Transboundary waters; Sharing water, Sharing opportunities)  என்பதாகும். எல்லைகளுக்கு அப்பாலான நீர்வளங்களை கூட்டாக முகாமைத்துவம் செய்வதில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதும் நாடுகள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பி அமைதி,  சமாதானம்,  பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதுமே இத் தொனிப்பொருளின் நோக்கமாகும்.

நீர்வளத்தின் முக்கியத்துவம் எல்லாக் காலங்களிலும் உணரப்பட்டு வந்துள்ளது. உலக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும்போது புகழ்பெற்ற உலக நாகரிகங்கள் எல்லாம் நீர் நிலைகளை அடிப்படையாகக் கொண்டே தோன்றியுள்ளன. நைல் நதி,  சிந்து நதி, யூப்பிரடிஸ்,  தைகிறீஸ் போன்றன உலக நாகரிகங்களின் பிறப்பிடங்கள் எனப்படுகின்றது. எனவே இத்தகைய நாகரிக எழுச்சியின் மூலமே நீர் என்பது புலனாகின்றது.

பூமியின் நிலப்பரப்பில் 75 சதவீதம் இருப்பது நீர் எனினும் உலக சனத்தொகையின் ஒவ்வொரு நான்கு பேரிலும் மூவர் அருந்துவதற்கு தூய நீரின்றி அவதிப்படுகின்றனர். எமது நாட்டின் 25 மாவட்டங்களுள் 14 மாவட்டங்களில் வாழும் மொத்த சனத்தொகையின் 33 சதவீதமானவர்களுக்கு தூய குடிநீர் கிடைப்பதில்லை.   உலக நீர்ப்பரப்பில் 97.5 சதவீதம் உப்புநீராகவும், 2.5 சதவீதம் நன்னீராகவும் உள்ளது. நன்னீர்ப் பரப்பிலும் 69சதவீதம் பனிக்கட்டியால் மூடப்பட்ட பிரதேசமாகும். 30சதவீதம் நிலக்கீழ் நீர். 3சதவீதம் நன்னீர் ஏரிகளும்,  நதிகளும் எஞ்சிய பகுதி ஈரழிப்பு தரைப் பிரதேசங்களுமாகும்.

உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது நீரை அதிகமாகப் பயன்படுத்தும் துறை விவசாயமாகும். 85 சதவீதம் விவசாயத்துக்காக நீர் பயன்படுத்தப்படுகின்றது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கைத்தொழில்த்துறை 10 சதவீதத்தைப் பயன்படுத்துகின்றது. எஞ்சிய 5 சதவீதமே வீட்டுப் பாவனைக்குரியது. எனவே, அருமையாக உள்ள வளத்தை மக்கள் தற்போது எவ்வாறு பாவிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே எதிர்கால மக்களின் வாழ்வு அமையுமென குறிப்பிடப்படுகின்றது.

நகரமயமாக்கல் பல்வேறு நீர்ப்பிரச்சினைக்குக் காரணமாகின்றது. குடிநீர் போதாமை,  சுகாதாரம் பேணப்படாமை மற்றும் நீர் மூலம் உண்டாகும் வியாதிகள் என்பவற்றுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. உலகில் வறிய நாடுகள் நிலக்கீழ் நீரையும் பெற்றுக் கொள்ளும் அளவில் தகாமுள்ளவையாக இருக்கின்றன. காரணம் காடழிப்பு, வனாந்திரமாதல் ஆகியவற்றால் மழைவீழ்ச்சி குறைவடைந்து வருகின்றமையாகும். 

வருடாந்தம் சனத்தொகை 90 மில்லியனால் அதிகரித்துச் செல்கின்றது. அந்தளவு நீரைப் பயன்படுத்தும் மக்களும் அதிகரிக்கின்றனர். நீர் தீர்ந்துபோன ஒரு வளம் என்பது பற்றிய உலகளாவிய விழிப்புணர்வு,  றியோடி ஜெனிரோவில் நடந்த புவி உச்சி மகாநாட்டிலும் 1992ல் நீரும் சுற்றாடலும் பற்றிய டப்ளின் மகாநாட்டிலும் பிரதிபலித்தது. றியோ – டப்ளின் மகாநாட்டுக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர்வள முகாமைத்துவம் சம்பந்தமாக சர்வதேச நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டன. வீட்டுப் பாவணையாளர் சங்கங்களும், கமக்காரர் அமைப்புக்களும் முறையே வீட்டுத்தேவை,  விவசாயத்தேவை என்பனவற்றுக்காக நீரை முகாமைத்துவம் செய்வதற்கு ஊக்குவிக்கப்பட்டார்கள்.

உலகில் பாதுகாப்பான நீரின்றி 8 செக்கன்களுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் மரணம் நிகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே 50 இலட்சம் குழந்தைகள் சாவதற்கு பாதுகாப்பற்ற குடிநீர் முதல் காரணமாக அமைகிறது. நீர் தொடர்பான நோய்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகில் மூவரில் ஒருவருக்குப் பாதுகாப்பான குடிநீர் உறுதி செய்யப்படவில்லை. நீர்ப் பற்றாக்குறையும் புவி வெப்பமயமாதலும் மனித குலம் இன்று எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கும் பேராபத்துக்களாகும்.

இவ்விரு பேராபத்துக்களையும் சமாளிப்பதற்கு உலக நாடுகள் தங்களை எந்தளவுக்கு உருப்படியான முறையில் தயார்படுத்தியிருக்கின்றன என்பதை நோக்கும் போது வேதனையே மிச்சமாகிறது. ஒரு குடம் நீர் வேண்டி மைல்கணக்கில் நடக்கும் மக்கள் உலகில் வாழ்கிறார்கள் என்பதை மறந்து நாம் பொறுப்புணர்வின்றி வாழக் கூடாது. நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவர் சொன்னதை மனதிலிருத்திச் செயற்படுவோம்!

நீர்ப்பிரச்சினைகளின் பாரதூரமான விளைவுகள் குறித்து நீண்டகாலமாக ஆராயப்பட்டு வந்துள்ளது. விதப்புரைகள் 1977ல் ஆஜண்டீனாவில் நடந்த ஐ.நா.வின் நீர்வள மகாநாட்டில் உருவாக்கப்பட்டன. அதன்பின் 1992ல் நடந்த றியோ மகாநாடு, 1994ல் றியோவில் நடந்த சுற்றாடலும் அபிவிருத்தியும் மகாநாடு என்பன உலகில் நன்னீர் வளங்களை மதிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தின. 1997ல் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கியது.

உலக வானிலை அவதான அமைப்பும் ; (WMO) யுனெஸ்கோவும் 1997ல் உலக நீர்வள தினத்தைக் கொண்டாடுவதற்கான தலைமை முகவராகப் பணியாற்றின. சென்னை நீரியல்துறை அறிஞர் பேராசிரியர் ஏ. மோகனக் கிருஸ்ணன் கூற்றுப்படி உலகிலுள்ள 240 பெரும் ஆறுகள் உள்ளுர்ப் பாவணைக்கு போதுமானவையாகவே உள்ளன. பெருகிவரும் சனத்தொகையால் நீர்வளம் அருகி வருகின்றது. 21ம் நூற்றாண்டில் இந்நிலை மேலும் உக்கிரமடையும் உலக யுத்தம் ஒன்று மீண்டும் ஆரம்பிக்குமானால் அது நீருக்காகவே ஏற்படும்.

இலங்கையில் வழமையாக உலக நீர் தினத்தில் நீர் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய அமைச்சரின் செய்தியும் பத்திரிகைகளில் விசேட அனுபந்தங்கள் மற்றும் கட்டுரைகளும் வெளியாகுவதைத் தவிர,  மக்கள் மத்தியில் பெரியளவில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய உருப்படியான செயற்றிட்டங்கள் எதுவுமே முன்னெடுக்கப்படுவதில்லை. நீர்ச்சிக்கனம்,  நீர்த் தூய்மை,  நீர்ச் சேமிப்பு குறித்து விழிப்புணர்வும் அக்கறையும் எம்மத்தியில் எந்தளவுக்கு இருக்கிறது என்பது மனச்சாட்சியைத் தொட்டுப்பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் பிரகாசமாக விளங்கும். வீதியோரக் குழாயில் நீர் வீணே வடிந்து கொண்டிருக்கும் போது ஒரு நிமிடம் தாமதித்து நின்று அக்குழாயைப் பூட்டுவதற்கு எம்மில் எத்தனைபேர் உண்மையில் மானசீகமாக அக்கறைகாட்டுகிறோம். நீர் விவகாரத்தில் இது எமது மனச்சாட்சிக்கு ஒரு அமிலப் பரீட்சையாகவே அமைந்துவிடுகிறது.

இலங்கையின் நீர்வள முகாமையின் வரலாறு பெரும்பாலும் வழங்கல் வரலாறாகவே இருந்தது. பண்டைய நீர்ப்பாசனக் குளங்கள் தேவையான நீரை விநியோகித்தன. இலங்கையின் தற்போதைய நீர் நிலைமை பற்றி விவசாயத்துறை நிபுணர் கலாநிதி சி.ஆர். பானப்பொக்கே நமது நீர்ப்பாவனை பற்றி நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீர்ப்பாவனை குறித்து நமது பழக்கவழக்கங்களும். பண்பாடும் மாறவேண்டும். இன்றேல். அடுத்த நூற்றாண்டில் நாம் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும் என்று கூறியுள்ளமை சிந்திக்கத்தது.

தற்போது இலங்கையில் நீர் முகாமைத்துவ நடவடிக்கைகள் ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID தாபனம் ஆகியவ்றின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை குடிநீரை விநியோகிக்கின்றது.

நீர் பற்றி செவ்விந்தியத் தலைவர் Siyattle கூறியுள்ள கூற்று நீரின் அருமையைக் குறித்து எமது சிந்தனையைத் தூண்டுவதாகும். இந்த நாடு நமக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு அருவிகளிலும், ஆறுகளிலும்,  ஓடும் ஒளிர்விடும் நீர் வெறுமனே நீர் அன்று. இது எம் முன்னோரின் இரத்தம்,  அவை புனிதமானது என்பதை நினைவு கூர வேண்டும். மேலும் எமது பிள்ளைகளுக்கும் அவற்றின் புனிதத் தன்மையையிட்டு அறிவுறுத்த வேண்டும்.  

உலக நீர் தினம் நினைவு கூறப்பட்டால் மட்டும் போதாது. அதன் தாற்பரியம் பேணப்படல் வேண்டும். மனித வாழ்வோடும் சடங்கு சம்பிரதாயங்களோடும் பின்னிப் பிணைந்தது தண்ணீரின் வரலாறு. உலக முன்னேற்றத்துக்கேற்ப,  சனத்தொகைப் பெருக்கத்துக்கேற்ப, தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப நீரின் தேவை நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. அதே வேளை தூய நீரின் எல்லை அருகிவருகிறது. நாம் நாமே நினைக்காத வரையில் நீர்ப்பற்றாக்குறை நீங்குவது சாத்தியமல்ல. நீரை வீணே விரயம் செய்வதும்,  எல்லை இன்றி பயன்படுத்துவதும், நீர்ப்பற்றாக்குறை நிதமும் நிலவவே வழி செய்யும்.

எனவே,  நீர் எங்கள் உயிருக்கு நேர் என்று நாம் கருதி செயல்பட வேண்டும். ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு பவுண் தங்கம் என எண்ணி நாம் நடந்து கொள்ள வேண்டும். நீர் இன்றேல் பார் இல்லை என்று நாம் கருத வேண்டும். அனைத்து வளங்களுக்கும் தாய்வளம் தண்ணீர். ஊர் வளம் பெறஇ பார் வளம் பெற நீர் வளம் காப்போம் என இன்றைய தினத்தில் திட சங்கற்பம் பூணுவோம்.