புன்னியாமீன் பி எம்

Sunday, January 23, 2022

புன்னியாமீன் பி எம்

உலக தபால் தினம் World Post Day – புன்னியாமீன்

091009wpd_ib.jpgஉலக தபால் தினம் 09 ஆம் திகதி சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1874 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 09 ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் “சர்வதேச தபால் ஒன்றியம்’ (Universal Postal Union) தாபிக்கப்பட்டது. இதனை நினைவுகூரும் முகமாக ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 09ஆம் திகதி உலக தபால் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

உலக தபால் தின பிரகடனம் பின்வருமாறு “உலகின் பல்வேறு நாடுகளுக்கே உரிய புவியியல்,  அரசியல்,  மதம் போன்ற பல்வேறு எல்லை மற்றும் தடைகளைத் தாண்டி எமது மக்களை முழு உலகுக்கும் இணைக்கின்றோம். மக்கள் அவர்களுக்குரிய பிரத்தியேகமானதும் மிகப் பெறுமதி வாய்ந்ததுமான தகவல்களையும் பொருட்களையும் எம்மிடம் ஒப்படைப்பது. அவற்றைப் பாதுகாத்து மிக வேகமாகவும் மிகக் கவனத்துடனும் அதன் உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பார்கள் என்ற எம்மீதுள்ள பெரு நம்பிக்கை என்பதை நாம் அறிந்துள்ளதோடு அவர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உயர் செயற்றிறமையுடனும் நேர்மையுடனும் பாதுகாப்புடனும் இரகசியத் தன்மையைப் பேணி அவர்களுடைய தகவல்களையும் பொருட்களையும் உரிமைகளையும் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் நேற்றைய தினத்தை விட நன்றாக இன்றைய தினத்திலும் இன்றைய தினத்தை விட நன்றாக நாளைய தினத்திலும் திறமையான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக’ என்பதாகும்.

தபால் சேவையென்பது இன்றைய மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். குறிப்பாக தபால் சேவை தங்கு தடையின்றி நடைபெற்று வருவதனால்  இதன் முக்கியத்துவம் அவ்வளவாக உணரப்படுவதில்லை. ஆனால்,  தபால் சேவை இன்றியமையாதது என்பதில் எந்தவிதமான வாதிப்பிரதி வாதங்களும் இல்லை.

உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தியை அல்லது தகவல்களைத் தொலைவிலுள்ளோருக்குப் பரிமாறிக் கொள்ள ‘புறாக்களைப் பயன்படுத்தினான்’ என்றும்,  உலகில் முதல்தர விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக் போட்டி கூட கடிதப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஒரு விளைவின் ஞாபகார்த்தமாகவே ஆரம்பிக்கப்பட்டதென்றும் வரலாறு சான்று பகர்கின்றது. ஊருக்கு ஊர் முரசு அடித்து அறிவித்தல்கள் கொடுத்த காலங்கள் மாறி இன்று முழு உலகுடனும் நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ள வைக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்திப்பரிமாற்றம் வரை தகவல் தொடர்புத்துறை அடைந்த மாற்றங்கள் ஏராளம்.

நவீன காலத்தில் தகவல் தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறிய போதிலும்கூட தகவல் பரிமாற்றங்களுக்கு தபால் மிகவும் இன்றியமையாததொன்றாக இன்றும் காணப்படுகின்றது.  உத்தியோகபூர்வமான தகவல் பரிமாற்றங்களுக்கு இன்னும் அஞ்சல் முறை அவசியப்படவே செய்கின்றது.

ஆரம்ப காலங்களில் தபால்நிலையங்கள் கடிதப் பரிமாற்றங்களுடன் தபால் சேவைகளுடன் இணைந்த வகையில் தந்தி சேவைகள்,  தொலைபேசி சேவைகள் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டிருந்தன. இன்றைய காலத்தில் கடிதப் பரிமாற்றங்களுக்கப்பால் நானாவித சேவைகளை வழங்கும் நிலையமாக தபால்நிலையங்கள் மாறிவிட்டன. இலங்கையைப் பொருத்தமட்டில் பிரதான நகரங்களில் அமைந்துள்ள தபால் நிலையங்கள் தனது சேவையினை பல துறைகளுக்கும் விரிவுபடுத்தியிருப்பதை அவதானிக்கலாம். இவ்விடத்தில் தபால்துறையின் வளர்ச்சிப் பரிணாமங்கள் பற்றி சுருக்கமாக தெரிந்துகொள்வது பொருத்தமானதாக இருக்கும். 

ஆரம்ப காலத்தில் தபால்களைப் போடுவதற்கு தபால்பெட்டிகள் பயன்படுத்தப்படவில்லை. கடிதங்களைக் கொண்டு செல்பவர்களே கடிதங்களைப் பெற்றும் வந்தனர். 1653 ஆம் ஆண்டு Longueville  மாகாண Minister Fouqet என்ற தபால் அதிபரின் மனைவியின் யோசனையின் பேரில்தான் தபால்பெட்டி அறிமுகமாகியதென கூறப்படுகின்றது.

சார்லஸ் ரீவ்ஸ் என்பவர் தபால்பெட்டிக்கு மாதிரி வடிவத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.  இலண்டன் மற்றும் இதர நகரங்களில் முற்றிலும் வடிவமைக்கப்பட்ட வசதிகளுடன் கூடிய தபால்பெட்டிகளை வைக்க அந்தோணி ட்ரோலோபி (Anthony Trollope)  என்ற பிரித்தானிய தபால்துறையின் பணி மேம்பாட்டு அதிகாரியை 1851-ல் பிரித்தானிய அரசு நியமித்தது. இவர் ஒரு நாவலாசிரியரும் ஆவார். அவரது ஆய்வின் முடிவில் பிரான்சில் உள்ளதுபோல் ஐந்தடி உயரமுள்ள இரும்புத்தூண் தபால்பெட்டிகளை பல்வேறு இடங்களில் வைக்கலாம் என முடிவாயிற்று. பிரான்ஸ் நாட்டில் அறிமுகமான தபால்பெட்டிகள் பிரித்தானியா,  ஜெர்மனி,  பெல்ஜியம் ஆகிய நாடுகளால் பின்பற்றப்பட்டன. தபால்பெட்டிகள் அதிகபட்சம் ஐந்தேகால் அடி உயரத்தையும்,  குறைந்தபட்சம் நான்கடி உயரத்தையும் கொண்டவையாகவே வடிவமைக்கப்பட்டன.

1852-ல் அமெரிக்காவில் செவ்வக வளைவு கொண்ட தபால்பெட்டிகள் வைக்கப்பட்டன. அதே ஆண்டு ஜெர்சி மாகாணத்தில் 4 தூண் தபால்பெட்டிகள் வைக்கப்பட்டன. அதன்பின்னர் 1855-ல் குர்னெசி மாகாணத்தில் (Guernse) 3 தபால்பெட்டிகளும்,  இலண்டனில் 6 தபால் பெட்டிகளும் வைக்கப்பட்டன. இலண்டனில் வைக்கப்பட்ட தபால்பெட்டிகள் பொதுமக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்தன. தபால்பெட்டிகளில் பிரித்தானிய அரசின் சின்னமும்,  அதற்கு கீழ் பிரித்தானிய தபால் துறையான ‘ரோயல் மெயில்’ சேவையின் சின்னமும் முகப்பில் இருந்தன. தபால்பெட்டியின் மேற்பகுதி விக்டோரியா மகாராணியின் கிரீட சின்னத்தையும் கொண்டிருக்கும். தபால் பஸ்கள்,  தபால் புகையிரதங்களிலும் கூட அக்காலத்தில் தபால்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

சிவப்பு வண்ணம் மக்களது பார்வையை உடனடியாக ஈர்க்கும் சக்தி கொண்டதால் தபால்பெட்டிகளுக்கு சிவப்பு வண்ணம் பூசலாம் என பிரித்தானிய அரசு அறிவுறுத்தியது. இது “போஸ்ட் ஆபீஸ் ரெட்” (Post Office Red) என ஒரு வர்ண பெயின்டாகவே பிரபலமாயிற்று. பச்சை நிறத் தபால் பெட்டிகளும் பின்னர் அறிமுகமாயின. ஆனால் அவை மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்நாட்டு தபால்களைப் போடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.

தபால் சேவையுடன் ஒன்றிணைந்த வகையில் முத்திரை பயன்பாட்டைப் பற்றியும் இவ்விடத்தில் சற்று நோக்குதல் அவசயிம். ஒட்டும் தன்மையுள்ள முத்திரைகளும்,  ஒரே அளவைக் கொண்ட தபால் கட்டணமும்,  ‘ஜேம்ஸ் சாமேர்ஸ்’ (James Chalmers) என்பவரால் 1834 ஆண்டளவில் முன்வைக்கப்பட்டது. இதே கருத்தை 1837ல் ‘ரோலண்ட் ஹில்’ என்பவரால் வெளியிடப்பட்ட,  “தபால் துறையின் சீரமைப்பும் அதன் முக்கியத்துவமும்,  செயற்படுதன்மையும்” என்னும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தபாலைப் பெற்றுக் கொள்ளக்கூடியவர் கட்டணம் செலுத்தவிரும்பாவிடில்,  தபாலை வாங்க மறுக்கலாம். எனவே தபால் கட்டணத்தை,  பெறுனரிடம் அறவிடுவதிலும் பார்க்க தபாலை அனுப்புவரிடமிருந்தே அறவிடுவது சிறந்தது என அந்த அறிக்கையில் அவர் தெளிவுபடுத்தியிருந்தார். தபால் பகிர்வின்போது எவ்வளவு தூரத்திற்கு வழங்கப்படுகிறது என்பதைக் கருதாமல்,  ஒருசீரான கட்டணமாக ஒரு பென்னியை அறவிடவேண்டுமென்றும் அவர் கருத்துப்பட்டிருந்தார். வெவ்வேறு தொலைவிடங்களுக்கு வெவ்வேறு கட்டண அறவீட்டு முறை,  கணக்கு வைக்கும் செலவை அதிகரிக்கும் என்றும்,  ஒருசீரான கட்டணமுறையில் ரோயல் தபால் சேவைக்குப் பணம் மிச்சப்படும் என்பதையும் எடுத்துக் காட்டினார். சாமேர்ஸின் இக்கருத்துக்கள் இறுதியாக 1839 ஆகஸ்டில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பொதுத் தபால் அலுவலகம்,  1840ல் பென்னி தபால் சேவையை ஆரம்பித்ததுடன்,  1 பென்னியும், 2 பென்னியும் பெறுமானமுள்ள,  படம் அச்சிடப்பட்ட உறைகளையும் வெளியிட்டது.

மூன்று மாதங்களின் பின்னர்,  விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்டபென்னி பிளாக் (Penny Black) என்று அறியப்பட்ட முன்கட்டணத் தபால் தலையையும் வெளியிட்டது. முதலாவது தபால் தலையை வெளியிட்ட காரணத்தினால்,  அனைத்துலகப் பயன்பாட்டுக்குத் தபால்தலைகளை வெளியிடும் நாட்டின் பெயர் ரோமன் எழுத்துக்களில் அவற்றில் பொறிக்கப்பட வேண்டுமென்ற அதன் விதியிலிருந்து,  ஐக்கிய இராச்சியத்துக்கு,  “சர்வதேச தபால் ஒன்றியம்’ (Universal Postal Union)  விலக்கு அளித்துள்ளது. இன்றுவரை முத்திரையில் நாட்டுப் பெயரைக் குறிப்பிடாமல் அச்சிடும் ஒரே நாடு பிரித்தானியாவாகும். “சர்வதேச தபால் ஒன்றியத்தில் இணைவதற்கு முன்னர் பல நாடுகள் இப்படிச் செய்வதில்லை,  எனினும் பின்னர் மிகக் குறைந்த மீறல்களே இருந்தன. இதன் காரணமாக சீனா,  ஜப்பான் போன்ற நாடுகளின் பெரும்பாலான பழைய வெளியீடுகளிலுள்ள கீழை நாட்டு எழுத்துக்களுக்கு மேற்கு நாட்டுப் புதிய சேகரிப்பாளர்கள் அறிமுகமில்லாதவர்களாக உள்ளார்கள். ஒரு தபால் தலை,  அதன் பெறுமதியையும்,  அந்நாட்டு நாணயத்தில் கொண்டிருக்க வேண்டும். சில நாடுகள்,  ஒரு எழுத்தையோ அல்லது “First Class” என்பது போன்ற குறிப்புக்களையும் பெறுமதிக்குப் பதிலாகக் கொடுக்கின்றன. “சர்வதேச அஞ்சல் ஒன்றியம்’ விதி காரணமாக இது உள்ளூர் சேவைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படுகின்றது,  எனினும் மீறல்களும் அதிகம் கவனிக்கப்படுவதில்லை. (ஐரோப்பிய தபால் சேவைக்கான பிரித்தானியாவின் “E” தபால்தலையும்,  தென்னாபிரிக்காவின் “International Letter Rate” தபால் தலையும் மேற்சொன்ன விதிவிலக்குகளில் அடங்கும்).

சர்வதேச ரீதியில் தரமான தபால் சேவையினை வழங்குவதை நோக்காகக் கொண்டு “சர்வதேச தபால் ஒன்றியம்’ அமைக்கப்பட்டது. சர்வதேச ரீதியில் இயங்கும் பழைமை வாய்ந்த அமைப்புக்களில் ஒன்றான இவ் ஒன்றியம் உலக நாடுகளின் ஒத்துழைப்பின் பலனாகவே இன்றும் தனது நோக்கை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

“சர்வதேச தபால் ஒன்றியம்’ பற்றிய எண்ணக்கரு 1863 இல் ஐக்கிய அமெரிக்காவில் தபால் அதிபர் நாயகமாகவும் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மந்திரி சபையின் உறுப்பினராகவும் கடமையாற்றிய மொன்கெமேரி பிளேயரின் எண்ணத்தில் வெளிப்பட்டது. பின்னர் பாரிஸ் நகரில் கூட்டப்பட்ட மாநாட்டில் ஐரோப்பிய,  அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பதினைந்து பிரதிநிதிகள் சந்தித்து பரஸ்பர நம்பிக்கையுடன் கூடிய பொதுவான அமைப்பினை ஏற்படுத்துவதற்கு இணக்கம் கண்டனர். இதன் பின் ஏறத்தாழ பதினொரு ஆண்டுகள் கடந்த நிலையில் ஜேர்மன் நாட்டின் தபால் பணிப்பாளர் நாயகத்தின் பெரு முயற்சியினால் 1874 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி சுவிற்சலாந்து நாட்டின் பேர்ன் நகரில் கூட்டப்பட்ட மாநாட்டில் இருபத்திரண்டு நாடுகளின் பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு “அஞ்சல் பொது ஒன்றியம்’ உருவாக்கப்பட்டது. இப்பெயரானது 1878 இல் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் “சர்வதேச தபால் ஒன்றியம்’ (Universal Postal Union) எனப் பெயர் மாற்றம் பெற்றது.

ஒன்றியம் அமைக்கப்பட்டதற்கான நோக்கத்திற்கு இணங்க உறுப்பு நாடுகள் அனைத்தும் தபால் பொருட்களை பரஸ்பர நம்பிக்கையுடன் கையாள்வதன் மூலம் அகில உலக நாடுகளும் ஒரு தபால்  வலயமாகக் கருதப்பட்டு நிர்ணயிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக உலகளாவிய ரீதியில் சுதந்திரமான தபால் போக்குவரத்துக்கு வழி திறந்ததுடன் ஒரு தபால் நிர்வாகத்தினால் இன்னொரு தபால் நிர்வாகத்திற்கு அனுப்பப்படும் தபால் பொருட்கள் இடைநிலை தபால் நிர்வாகத்தினால் பொறுப்புடன் கையாளப்படுகின்றமையினை உறுதிப்படுத்தியது. மேலும்,  தபால் பொருட்களின் நிறைக்கமைய விலை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டதுடன், 1875 தொடக்கம் 1971 வரையான காலப்பகுதியில் தபால் பொருட்களை அனுப்பும் மூல நிர்வாகங்கள் தான் பெறும் கட்டணங்களைத் தமக்குரியதாக்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலும், விநியோகத்தினை மேற்கொள்ளும் தபால் நிர்வாகத்திற்கு வேதனம் எதுவும் கிடைப்பதில்லை. இந்நிலையில் 1969 இல் டோக்கியோ நாட்டில் இடம்பெற்ற மாநாட்டுத் தீர்மானப்படி குறிப்பிட்ட ஒரு தபால் நிர்வாகம் (நாடு) இன்னொரு தபால் நிர்வாகத்திற்கு (வேறொரு நாட்டிற்கு) அனுப்பும் தபால் பொருட்களின் நிறைக்கும் அந்நாட்டிலிருந்து முதற்குறிப்பிட்ட நாட்டிற்கு அனுப்பப்படும் தபால் பொருட்களின் நிறைக்கும் உள்ள வித்தியாசம் கணக்கிடப்பட்டு கூடுதலான தபால் பொருட்களை அனுப்பிய நாடு மற்றைய நாட்டிற்கு ஒன்றியத்தினால் குறித்துரைக்கப்பட்ட நியதிகளுக்கு இணங்க ஒரு தொகையினை வழங்குதல் வேண்டும். 1971ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இம்முறையானது எதிர் காலத்தில் மாற்றமடைவதற்கான சாத்தியப்பாடு உள்ளது.

தபால் பொருட்கள் என்ற பதம் தபால் அட்டைகள்,  வான் கடிதங்கள்,  அச்சடித்த விடயங்கள்,  கண்பார்வை அற்றோர்க்கான இலக்கியம் சிறிய பைக்கற்றுகள் என்பனவற்றை உள்ளடக்கியதாகும். ஒன்றியத்தின் அமைப்பு விதி இப்பொருட்களின் கட்டண வீதம்,  அதியுயர்,  அதிகுறைந்த நிறை,  பருமன் அத்துடன் பதிவுக்கடித சேவை,  காப்புறுதிக் கடித சேவை,  விமான மூலமான தபால்சேவை,  கப்பல் மூலமான தபால்சேவை விஷேட பாதுகாப்புடன் அனுப்ப வேண்டிய பொருட்கள் சம்பந்தமாகவும் விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பொதுச்சபை, நிறைவேற்றுச் சபை,  தபால் கல்விக்கான ஆலோசனைச்சபை,  சர்வதேச பணியகம் ஆகியன ஒன்றியத்தின் முக்கிய பகுதிகளாகும். ஒன்றியத்தின் ஆரம்பத்தில் இருந்து மத்திய அலுவலகம் “சர்வதேச பணியகம்’ என்ற பெயரில் பேர்ன் நகரில் இயங்கி வருகின்றது. சர்வதேச தபால் ஒன்றியம்,  சர்வதேச தபால் சேவை தொடர்பான ஒருங்கிணைப்பு வெளியீடுகள்,  பிரசுரம் என்பன இதன் முக்கிய பணிகளாகும்.

தபால்  முத்திரைகளை வெளியிடுதல்,  விற்பனை செய்தல் உறுப்பு நாடுகளின் சொந்த விவகாரமாகும். அதனால்தான் முன்பு முத்திரை வெளியிடுதல் ஒன்றியத்துடன் தொடர்பற்ற விடயமாக இருந்தபோதும் உறுப்பு நாடுகளின் நலனில் ஒன்றியம் அக்கறையுடன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலத்தில் இக்கொள்கையில் முத்திரைகள் ஒரு நாட்டின் கலாசாரம்,  சரித்திரம்,  கலை வளர்ச்சி என்பவற்றினைப் பிரதிபலிப்பதுடன் வரியினை ஈட்டிக்கொள்வதற்கும் பயன்படுத்தப்படும் காரணமாக சில மாற்றங்களை மேற்கொண்டன. ஒன்றியமானது ஐ.நா.சபையுடன் 1947 இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க 01.07.1948 தொடக்கம் ஐ.நா.வின் விசேட அந்தஸ்துடன் கூடிய உறுப்பினர் வரிசையில் உள்ளது.

சர்வதேச தபால் வலையமைப்பு மூலம் பின் தங்கிய கிராமங்கள் கூட தபால் சேவையினைப் பெறக்கூடியதாகவுள்ளன. தற்போது உலகில் ஏறத்தாழ 670, 000 நிரந்தர அஞ்சல் அலுவலகங்கள் இயங்குவதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் ஆறு மில்லியன் பேர் வரையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் சர்வதேச ரீதியில் 430, 000 மில்லியன் தபால் பொருட்கள் வருடந்தோறும் பரிமாற்றப்படுகின்றன. இத் தபால்அலுவலகங்கள் அஞ்சற் சேவையுடன் காசுக்கட்டளை அஞ்சற் காசோலை,  சேமிப்பு வங்கிக் கணக்கு போன்ற சேவைகளையும் தேசிய,  சர்வதேச ரீதியில் மேற்கொண்டுள்ளன. உலகளாவிய ரீதியில் நோக்குமிடத்து இந்திய தபால்துறையிடம் மொத்தம் 154, 000 தபால் அலுவலகங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. உலகிலே அதிக தபால் நிலையங்களைக் கொண்;ட நாடாக இந்தியாவும்,  அடுத்ததாக சீனாவுமுள்ளது.  இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய தபால் துறையில் மொத்தம் 593, 878 (2001ம் வருடத்தின் படி) ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய தபால் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன.

தபால் சேவையை இலகுபடுத்தும் முகமாக உலகளாவிய ரீதியில் பல நாடுகள் தபால் குறியீடு முறைகளைப் பயன்படுத்துகின்றன. தபாலை இலகுவாகவும், சரியான முறையிலும் பிரித்தெடுக்க தபால் நிலையங்களுக்கு உதவும்பொருட்டு முகவரியில் சேர்க்கப்படும் எண்களையும் எழுத்துக்களையுமே தபால் குறியீடு என்கிறோம்.

இந்த தபால் குறியீட்டு முறையின் பாவிப்பு முதன்முதலில் 1941 ஆம் ஆண்டு ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து ஐக்கிய இராச்சியம் 1959ஆம் ஆண்டிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் 1963ஆம் ஆண்டிலும்  இம்முறையைப் பின்பற்றியது.  2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத கணிப்பீட்டின்படி “சர்வதேச தபால் ஒன்றியம்’ (Universal Postal Union)  இணைந்துள்ள 190 நாடுகளில் 117 நாடுகளில் இந்த அஞ்சல் குறியீட்டு முறையை பின்பற்றுகின்றன.

பொதுவாக தபால் குறியீடுகள் ஓர் குறிப்பிட்ட நிலப்பரப்பிறகு வழங்கப்பட்டாலும்,  சிறப்பு காரணங்களுக்காக அரசு அலுவலகங்கள்,  பெரிய வணிக நிறுவனங்கள் போன்ற அதிகமான தபால் பெறும் தனி முகவரிகளுக்கோ நிறுவனங்களுக்கோ கொடுக்கப்படலாம். உதாரணமாக பிரெஞ்ச் செடெக்ஸ் முறையைக் குறிப்பிடலாம். தபால் சேவைகள் அவர்களுக்கென்று தனி வடிவமைப்பையும் தபால் குறியீடுகளை இடவேண்டிய முறைகளையும் சீர்படுத்துகின்றன. பெரும்பாலான ஆங்கிலம் பேசும் நாடுகளில் இக்குறியீடு முகவரியின் இறுதியில் இடப்படுகிறது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இது ஊர் அல்லது நகரின் பெயருக்கு முன்னால் இடப்படுகிறது.இந்தியாவில் தபால் எண்கள் தபால் பெட்டி எண்கள் அல்லது தபால் குறியீடு எண் (PIN) என வழங்கப்படும். ஆறு எண்களைக் கொண்டிருக்கும் இவ்வெண். உதாரணமாக 606000. இலங்கையிலும் தற்போது தபால் குறியீட்டு எண் பயன்படுத்தப்படுகின்றது. இது  ஐந்து இலக்கங்களைக் கொண்டதாகும். இலங்கையில் முதல் எண் மாகாண இலக்கமாகும். ஒவ்வொரு தபால் நிலையத்திற்கும் துணை தபால் நிலையங்களுக்கும் இலக்கங்கள் கொடுக்கப்படுள்ளது.

இலங்கையில் தபால் குறியீட்டு முறை கடந்த ஒரு தசாப்த காலமாக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும்கூட,  தபால் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டாமையை விசேடமாக அவதானிக்க முடிகின்றது. அனுபவ ரீதியாக நோக்குமிடத்து இலங்கையிலுள்ள முன்னணி நிறுவனங்கள் மற்றும் அரச சார்ந்த நிறுவனங்கள் கூட தபால் குறியீட்டு முறையை முறையாகப் பயன்படுத்துவதில்லை. எனவே தபால் குறியீட்டு முறையை விரிவுபடுத்த விசேட திட்டங்கள் எடுத்தல் அவசியம். தற்போதைய தபால் தினங்கள் கலைவிழாக்களுடனும்,  வரலாற்றுப் பிரதிபலிக்கும் நிகழ்வுகளுடனும் சுருங்கிவிடுகின்றன. மாறாக இத்தினத்தில் தபால் குறியீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் அது பயனுள்ளதாக இருக்கும்.

இருபத்தியிரண்டு நாடுகளின் உறுப்புரிமையுடன் ஆரம்பிக்கப்பட்ட “சர்வதேச தபால் ஒன்றியம்’ (Universal Postal Union)  இன்று 192 நாடுகளின் உறுப்புரிமையினைக் கொண்டுள்ளது. இலங்கை குடியேற்ற ஆட்சி முறையின் கீழ் 01.04.1877 இலும் பின்னர் 13.07.1949 இல் சுதந்திர நாடாகவும் ஒன்றியத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் புராதன காலத்தில் அரசர்களிடையே தூதுவர் மூலம் செய்திப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட போதும் போர்த்துக்கேயர் ஆட்சியில் (1517 – 1640) ஒல்லாந்தர் ஆட்சியில் (1640 – 1794) ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1815 வரை தபால்  சேவை நடைபெற்றதற்கான பதிவுக் குறிப்புகள் கிடைக்கக் கூடியதாக இல்லை. 1815 இல் முதன் முதலாக ஆறு தபால்  அலுவலகங்கள் கொழும்பு,  காலி,  மாத்தறை,  மன்னார்,  திருகோணமலை,  யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் ஆரம்பிக்கப்பட்டன. 22.08.1872 இல் முதன் முதலில் தபால் அட்டை அறிமுகமானது. 01.02.1893 இல் முதலாவது தபால்  முத்திரை இலங்கை நாணயத்தில் வெளியிடப்பட்டது.

ஒரு சமூகத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே! – ‘அனைத்துலக ஆசிரியர் தினம்” – புன்னியாமீன்

061009happy-teachers-day.jpg”குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம்” என்பர்.  இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள்,  இலட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து மாணவர்களை சீரிய வழியில் வழிநடத்துவதில் ஆசிரியர்களின் பங்கு விசாலமானவை. தனது வழிகாட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் ஆசிரியர்களின் மனதில் தோன்றும் மகிழ்ச்சியை அளவிட முடியாது.  தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள் என்றாலும் மிகையாகாது.

tea-day.jpgஇன்று அக்டோபர் மாதம் 6ஆந் திகதி – அனைத்துலக ஆசிரியர் தினத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன. ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது.

1994ஆம் ஆண்டு முதல் இன்றைய தினத்தை ‘உலக ஆசிரியர்கள் தினமா’க கொண்டாடி வருகின்றனர். ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினரும் உணரும் விதமாகவும்,  அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதேநேரம், சில மேற்கத்தைய நாடுகள் அக்டோபர் 5ஆந் திகதியை ஆசிரியர் நாளாக கொண்டாடுகின்றன. இந்தியா செப்டம்பர் 5ஆந் திகதியை இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் முனைவருமான சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் திகதியை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுகின்றது. பொதுவாக ஆசிரியர் தினம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டாலும்கூட,  இத்தினத்தின் நோக்கம், குறிக்கோள் பொதுவானதே. இலங்கையில் அக்டோபர் 6ஆந் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது.

ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும்.  மாணவனுக்கு ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவு கூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தினம் கொண்டாட்டங்களின் பிரதான எதிர்பார்க்கையாகும்.

மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மைப் படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது. தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன?  இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.

ஆசிரியர்களின் பணியைக் கொண்டாட ஒரு தினத்தை மட்டும் ஒதுக்குவது முறையல்ல என்றும் சிலர் வாதிடுவர். ஏனெனில், இவர்களின் பணி நாள்தோறும் பல்வேறுபட்ட கோணங்களில் பல்வேறுபட்ட பரிணாமங்களை தோற்றுவித்துக் கொண்டே இருக்கின்றன. எனவே, இந்நிமிடம் வரை உலகில் நிகழும், நிகழ்த்தப்படும் மாற்றங்கள், வியப்புக்கள் அத்தனையும் நிகழ்த்தப்படுவது எங்கோ ஒரு மூலையில் தன்னலம் கருதாமல் ஓர் ஆசானால் உருவாக்கிய அந்த மாணவச் சமூகத்தினால் தான் என்பதை வைத்தே அதனை ஒரு தினத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தக்கூடாது என்பது இவர்களின் வாதமாகும். உலகில் வாழ்ந்த, வாழும், வாழப்போகும் ஒவ்வொரு ஜீவனுக்கும் பின்னால் ஓர் ஆசான் இருந்தான்,  இருக்கிறார்,  இருப்பார் என்பதே யதார்த்தமாகும்.

ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர். குரு, ஆசான், ஆசிரியர், வாத்தியார், இப்படி பல அவதரங்கள் கொண்ட மொத்த உருவம் ஆசிரியர். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பதம் உண்டு. ஆனால் ஆசான் என்ற ஒரு வார்த்தைக்கு இலக்கண வித்தகர்கள் எதிர்மறை வார்த்தை தரவில்லை.

ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும்….  இதை சரியாக வழங்கி விட்டால் அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை சேரும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில் வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது.

தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும். சிறு குழந்தைகளுக்குச் பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஆசிரியர்கள் மீது விழும். அப்படி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களின் மழலை பேச்சும், மழலைச் சிரிப்பையும் காணும் பொழுது புதிய உலகிற்குச் சென்ற ஓர்; உன்னத உணர்வு மனதில் ஏற்படும். அதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி சற்று வித்தியாசமானது. அங்கு ஆரம்பப் கல்வி படிக்கும் மாணவன் பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும் ஆசிரியர்களையும் மறப்பது இல்லை.

ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். அதே போல் மாணவர்களை சிறந்த பண்போடு உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு ஆசிரியர் தவறு செய்தால் எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்று ஒரு கருத்து இருக்கிறது இதனை உணாந்து செயல்பட்டால் ஆசிரியர் பணி சிறக்கும், அதனால் நாடு, சிறக்கும்.

பிற பணிகளில் இல்லாதது ஆசிரியர் பணியில் இருக்கிறது. மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறோம். தமிழ் சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான். இந்த உண்மைகள் நிலைத்து நிற்க வேண்டும். ஆசிரியர் சமூகம் மேன்மேலும் வளர வேண்டும் என்று அனைவருமே நினைக்கின்றனர். மொத்தத்தில் இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு என்பது ஓர் யாதார்த்த உண்மை.

ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை, நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், இந்த இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.

ஆசிரியர் பணி எவ்வளவு தூய்மையாகக் காணப்பட்டாலும்கூட, அண்மைக் காலங்களில் ஆசிரியர்களைப் பற்றி தரக்குறைவான சில சம்பவங்களும் ஊடகங்களில் வெளிவருவதை நாம் காண்கின்றோம். விசேடமாக சில பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் தமது மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தும் செய்திகளை சில மேற்கத்தைய நாடுகளில் சில ஆசிரியைகள் மாணவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தும் செய்திகளையும் காண்கின்றோம். அதேபோல மாணவர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்லும் பல்வேறு சம்பவங்களையும் காண்கின்றோம். உண்மையிலேயே இது வேதனைப்படக் கூடிய ஒரு விடயமே. இத்தகைய சம்பவங்கள் மிக மிக சொற்பமாக இடம்பெற்றாலும்கூட, ஆசிரியர் சமூகத்தை இழிவுபடுத்தும் இவர்களை துஸ்பிரயோகம் செய்துவிட முடியாது. ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விசம் என்பர். எனவே, இத்தகைய ஆசிரியர்களை இனங்கண்டு சட்டரீதியாக கடுமையாக தண்டனைகளை வழங்கி ஆசிரிய தொழிலின் மாண்பினைப் பேண வேண்டியது சட்டத்துறையினரதும், நீதித்துறையினரதும் கடமையாகும்.

ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தம்மை, தாம் முதலில் உணர வேண்டும். ஆசிரியசேவை மனதால் உணரப்பட வேண்டியது. ஏதோ விடுமுறைகள் நிறைந்த இலகுவான தொழில் என்று எண்ணாமல் தியாக உணர்வுடன் செய்யப்பட வேண்டிய சேவை என்பதை புரிந்து கொள்வது இன்றியமையாதது. ஆசிரியர்களான நாம் எப்போதும் எம்மை திருத்திக் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்க வேண்டும். மாற்றமே ஆசிரியரின் செயற்பாட்டு ரீதியான அடிப்படை வளர்ச்சியாகும். நாம் எதை செயற்படுத்த விரும்புகிறோமோ அதை முதலில் நாம் மாணவர்களுக்கு முன்மாதிரியாக செய்துகாட்ட வேண்டும்.

ஆசிரியர்களின் வார்த்தைகளையும், வர்ணிப்புகளையும் மாணவர்கள் கவனிப்பதை விட அவர்களின் நடத்தை, முக பாவம் என்பவற்றையே மாணவர்கள் முழுமையாக கிரகிக்கிறார்கள்.

ஆசிரியரின் நடத்தை தான் மாணவர்களின் நடத்தை ரீதியான மாற்றத்திற்கு முன்மாதிரியாக அமைகிறது. வாழ்க்கைக் கற்றலில் மாணவர்கள் 80% ஆசிரியர்களின் நடத்தை, செயற்பாட்டில் கற்றுக் கொள்கின்றனர். புத்தகக் கல்வி மட்டுமல்ல கல்வி சிறந்த பண்பாட்டு விழுமியங்கள், ஒழுக்கம், இணைப்பாடவிதானச் செயற்பாடுகள், சமூக தொடர்புகள் போன்ற அத்தனை துறைகளிலும் மாணவர்களை வழிகாட்ட வேண்டும். இங்கே ஆசான் பல்துறை வல்லுவனாக இருத்தல் அவசியம். அப்போது தான் மாணவர்களுக்கு எம் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படும்.

வெற்றிகரமான ஆசிரியர் எனப்படுபவர், சகல வசதிகளையும் கொண்ட வகுப்பறையில் சிறந்த குடும்பப் பின்னணியையும் சிறந்த உள நிலையையும் கொண்ட மாணவனுக்கு கற்பித்து அம் மாணவனை முன்னேற்றுவதல்ல. மாறாக தான் கற்பிக்கும் ஒவ்வொரு மாணவனையும் பற்றி சகல விடயங்களையும் அறிந்து, பொருத்தமற்ற சுழலில், கல்வியறிவு குறைந்த பின்னணியில் இருந்து வரும் மாணவனை வளப்படுத்துவதே வினைத்திறன் மிகு ஆசிரியருக்கு வேண்டியது. இதுவே ஓர் ஆசானின் வெற்றியும், பெருமையுமாகும்.

நவீன காலத்தில் ஆசிரியர் தொழில் பணத்துடன் பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். குறிப்பாக இக்கால கட்டத்தில் பணத்தை மையமாகக் கொண்டு கல்வி விலைபேசப்படுகின்றது. இந்நிலை எதிர்காலத்தில் பெரும் சாபக்கேட்டை உருவாக்கலாம். பணத்தை சேகரிப் பதற்கான கல்வியை மட்டும் வழங்காது நல்ல பண்பாட்டு ரீதியான, ஒழுக்க விழுமியங்களை நிலை நாட்டும் நிறை கல்வியை ஆசிரியர்கள் வழங்குவது காலத்தின் தேவையாகும்.

ஆசிரியர் தொழில் புனிதத்துவம் மிக்கவை. தெய்வீகமானவை. எனவே, இத்தொழில் மகத்மீகத்தை உணர்ந்து ஒவ்வொரு ஆசிரியர்களும் செயற்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். ஏற்னகவே குறிப்பிட்டதைப்போல் “ஒரு குடத்துப் பாலுக்கு ஒரு துளி விசமாக” ஆசிரியர்கள் மாறுவதும் தவிர்க்கப்பட வேண்டும். இத்தினத்தில் இது குறித்து திடசங்கற்பம் பூணுவோமாக!

உலக குடியிருப்பு தினம் இன்று

260909house_new.jpgஉலக குடியிருப்பு தினம் இன்று (திங்கட்கிழமை) சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

“எமது நகரத்தின் எதிர்காலத்தைத் திட்டமிடுவோம்” என்ற தொனிப் பொருளில் இந்த வருடத்திற்கான உலக குடியிருப்பு தினம் நினைவு கூரப்படுகின்றது.

இலங்கையில் குடியிருப்பு தினத்தை அனுஷ்டிப்பதற்கான விரிவான ஏற்பாடுகளை வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சு மேற்கொண்டுள்ளது.

உலக  குடியிருப்பு தினத்தின் நிமித்தம் வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சு நடாத்திய கட்டுரை மற்றும் சித்திரம் வரைதல் தமிழ் மொழி மூலப் போட்டிகளில் வவுனியா, நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள பாடசாலை மாணவ, மாணவிகளே முதலாம், இரண்டாம் மூன்றாம் இடங்களை வெற்றிபெற்றுள்ளனர்.

இவர்களுக்கான பரிசில்கள் உலக குடியிருப்பு தினமான இன்று 5ம் திகதி வழங்கப்படவிருக்கின்றது.

உலக குடியிருப்பு தினத்தின் தேசிய மாநாடு நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் அமைச்சர்கள் பேரியல் அஷ்ரஃப், தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் இன்று நடைபெறுகின்றது.

இவ்வைபவத்தில் மேற்படி மாணவ, மாணவிகளுக்குப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. தமிழ் மொழி மூலக் கட்டுரைப் போட்டியில் கனிஷ்ட பிரிவில் தர்மபுரம் நலன்புரி நிலையத்தைச் சேர்ந்த பிரிமேகன் அபிலாஷா முதலாமிடத்தையும் சிரேஷ்ட பிரிவில் தர்மபுரம் நலன்புரி நிலையத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் அனித்தா முதலாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு பத்தாயிரம் ரூபாவும் வெற்றிக் கிண்ணமும் சான்றிதழும் வழங்கப்படும்.

உலக அகிம்சை தினம்: International Day of Non-Violence – புன்னியாமீன்

011009-gandhi.jpgஐக்கிய நாடுகள் சபை தீர்மானப்படி ஆண்டுதோறும் அக்டோபர் 2ம் தேதி உலக அகிம்சை தினம் அனுட்டிக்கப்படுகின்றது. இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி அடிகளின் பிறந்த தினமே அக்டோபர் 2ம் திகதியாகும். 

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரி இந்தியாவின் சார்பில் ஜூன் 15, 2007 இல் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 142 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அத்தீர்மானம் பொதுச் சபையில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அக்டோபர் 2ம் தேதியை ஐ.நா. உறுப்பு நாடுகள் உலக அகிம்சை தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.

காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை தினமாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தை சர்வதேச மட்டத்தில் கொண்டாட வேண்டுமென எல்லா அரசாங்கங்களையும்,  ஐ.நா. விற்கு உட்பட்ட கழகங்களையும்,  அரசு சாரா நிறுவனங்களையும்,  தனி நபர்களையும் ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளதுடன் இத்தினத்தை  பாடத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்ச்சித் திட்டங்கள் மூலமாகவும் அனுசரிக்குமாறும் கோரியுள்ளது.

வன்முறையாலும்,  போராலும் மட்டுமே உரிமைகளை பெற முடியும் என உலகம் நினைத்திருந்த கட்டத்தில் அது பிழையானது என நிரூபித்த காந்திஜி உலகத்தையே கைகளுக்குள் அடைக்க நினைத்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ஆயுதமெடுக்காமல் நாட்டை விட்டு விரட்டிக் காட்டினார். இவரின் நடைமுறைகளால்  கவரப்பட்ட மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்கள் அகிம்சை வழியிலேயே சென்று வெற்றி பெற்றுக் காட்டினர். ‘அகிம்சை என்பது வலிமையற்றவர்களின் ஆயுதமல்ல,  வலிமையற்றவர்கள் வன்முறையை தான் தேர்வு செய்வார்கள் வலிமையானவர்களால் மட்டுமே அகிம்சையின் பாதையில் நடக்க முடியும். எதிரியை எழ முடியாமல் அடித்து வீழ்த்த வலிமை தேவையில்லை எந்த தாக்குதலையும் சமாளித்து எழுந்து நிற்கவே வலிமை தேவை” என்று காந்திஜி கூறிய வாசகங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டியதொரு கருத்தே.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கமைய முதலாவது அகிம்சை தினம் 2007 அக்டோபர் 2ம் திகதி கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டத்தின் போது  ‘ச‌கி‌ப்பு‌த்த‌ன்மை இ‌ன்மையாலு‌ம்,  மோத‌ல்களாலு‌ம் உலக‌ம் முழுவது‌ம் பத‌ற்ற‌‌ம் அ‌திக‌ரி‌த்துவரு‌ம் ‌நிலை‌யி‌ல்,  எ‌ண்ண‌ற்ற ம‌க்களா‌ல் ஏ‌ற்று‌க் கொ‌‌ள்ள‌ப்ப‌ட்ட சுத‌ந்‌திர இ‌ந்‌தியா ‌பிற‌ப்பத‌ற்குக் காரணமான மாகா‌த்மா கா‌ந்‌தி‌யி‌ன் அ‌கி‌ம்சை‌க் கொ‌ள்கைக‌ளை ‌மீ‌‌ண்டு‌ம் நாம் சி‌ந்திக்க வே‌ண்டியது அவ‌சிய‌மானதாகும்”.  எ‌ன்று ஐ‌க்‌கிய நாடுக‌ள் சபையி‌ன் பொது‌ச் செயலாளர் பா‌ன் ‌கி மூ‌ன் தெரிவித்திருந்தார்.

அந்நிகழ்வில்  தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் ”அ‌திக‌ரி‌த்துவரு‌ம், கலா‌சார‌‌க் கல‌ப்பா‌ல் ஏ‌ற்படு‌‌ம் பத‌ற்ற‌த்தையு‌‌ம்,  ச‌கி‌ப்பு‌த்த‌ன்மை ‌இன்மையா‌ல் ஏ‌ற்படு‌ம் மோத‌ல்களையு‌ம் உலக‌ம் உண‌ர்‌ந்து வரு‌கிறது. இதனா‌ல் ‌தீ‌‌‌விரவாத‌த்‌தி‌ன் ஆ‌தி‌க்கமு‌ம்,  வ‌ன்முறையை‌த் தூ‌‌ண்டு‌ம் கரு‌த்து‌க்களு‌ம் பலமடை‌ந்து வரு‌கி‌ன்றன. மியா‌ன்ம‌ரி‌ல் இராணுவ ஆ‌ட்‌சியாள‌ர்களு‌‌க்கு எ‌திராக அமை‌தியான முறை‌யி‌ல் போராடியவ‌ர்க‌ள் ‌மீது நட‌த்த‌ப்ப‌ட்ட அட‌க்குமுறை‌த் தா‌க்குத‌ல்களை‌க் கு‌றி‌ப்‌பி‌ட்ட அவ‌ர்: மகா‌த்மா‌வி‌ன் கொ‌ள்கைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி அ‌கி‌ம்சை முறை‌யி‌ல் ஆ‌யுத‌ங்க‌ளை‌த் தொடாம‌ல் போராடுபவ‌ர்க‌ளி‌ன் ‌மீது ஆயுத‌ப் படைக‌ள் பய‌ன்படு‌த்த‌ப்படுவதை நா‌ம் கா‌ண்‌கிறோ‌ம். உலக‌ம் முழுவது‌ம் சுத‌ந்‌திர‌ம் ம‌ற்று‌ம் குடியு‌ரிமைகளு‌க்காக ‌மிக‌ப்பெ‌ரிய இய‌க்க‌த்தை மு‌ன்‌னி‌ன்று நட‌த்‌தியவ‌ர் மகா‌த்மா கா‌ந்‌தி. அவர் ஒ‌வ்வொரு நாளு‌ம் த‌ன்னுடைய வா‌ழ்‌வி‌ல் அ‌கி‌ம்சையை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றினார், அத‌ன் மூல‌ம் எ‌ண்‌ணிலட‌ங்கா ம‌னித‌ர்க‌ளி‌ன் அ‌ர்‌த்‌தமு‌ள்ள வா‌ழ்‌க்கை‌க்கு வ‌ழிகா‌ட்டியாக இரு‌‌ந்தார்.” என்றார்.
 
அக்கால கட்டத்தில் காந்திஜியின் அகிம்சை வழி போராட்டங்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து மட்டுமல்ல,  காங்கிரஸ் கட்சியிலும் கூட பலத்த எதிர்ப்பு எழுந்தது. எனினும் கடைசிவரை தனது கொள்கையிலிருந்து  அவர் விலகவேயில்லை. அவரின் மன அழுத்தத்தினால் அகிம்சை முறையில்,  எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்ய முடியும் என்பதை உணர்த்தினார். இன்றைய சூழலிலும் காந்திஜியின் அகிம்சை கொள்கைகள் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அமெரிக்கா போன்ற மேலைத்தேய நாடுகளில் பாடசாலைகளிலும்,  கல்லூரிகளிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவருவதால்,  காந்தியக் கொள்கைகளை பின்பற்றி அகிம்சை கல்வியை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளனர்.

மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்ப்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி ‘குஜராத்தி”. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி,  தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இத்தம்பதியினர் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888),  மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.

தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு ‘பாரிஸ்டர் (barrister)” எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்று தன் படிப்பை வெற்றிகரமாக முடித்த பின் தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்பு ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி,  அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் அவ்வேலையும் பறிபோனது. அச்சமயத்தில் தென்னாபிரிக்காவில் தன் தகுகிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி அங்கு பயணமானார்.

அச்சமயம் தென்னாபிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. தென்னாபிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள்,  பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. தென்னாபிரிக்காவில் இருந்த காலத்தில் காந்தி ஆங்கிலேயரின் நிறவெறி அடாவடித்தனத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டார்.

தனது ஒப்பந்தக்காலம் (1906) முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது,  அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை சட்டப்பேரவை நடவடிக்கை எடுப்பது பற்றி  அறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ,  ‘தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லை” எனக் கூறி,  காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி,  தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு அத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

1906ஆம் ஆண்டு ‘ஜோகார்னஸ்பேக்” நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாக்கிரகம் எனப்படும் அறவழிப் போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை,  ஒத்துழையாமை,  கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல்,  ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். ஆரம்பத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாபிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார். தாயகத்தில் மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தென்னாபிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். இதனால் கோபாலகிருஷ்ண கோகலே,  ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.

1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தலைமையை ஏற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். சத்தியாகிரக வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.

அகிம்சைப் போராட்டத்தின் பலம் எத்தகையது என்பதற்கான ஒரு உதாரணமாக இந்தியாவில் 1930 இல் காந்தி மேற்கொண்ட ‘உப்பு பேரணி” காணப்படுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட “உப்பு சட்டங்களையும்” பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும் சீர்குலைக்கப்போவதாக காந்தி கூறியபோது,  அவரது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கூட சந்தேகப்பட்டனர். ஆனால்,  தான் தீர்மானித்தபடி,  கடலுக்குள் 247 மைல்கள் தூரம் காந்தி பவனி சென்றார். காந்தியின் இந்த செய்கை மக்களின் மனதை உலுக்கியது. இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டதுடன் உப்புச் சட்டத்திற்கெதிராக எதிர்ப்பு செய்தனர். இது பிரிட்டிஷ் அரசாங்கத்தை அதிரவைத்தது. 1942ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு!” என்ற போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார்.

இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. 1948ஆம் வருடம் ஜனவரி 30ஆம் நாள் காந்தி நாதுராம் கோட்ஸே என்பவனால் புது டில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தியின் அகிம்சை போராட்டம் நான்கு அடிப்படைகளைக் கொண்டன. அவை சத்தியாக்கிரகம் (ஆத்ம வலிமை),  சர்வோதயா (யாவர்க்கும் நன்மை),  சுவராஜ் (சுய ஆளுகை) மற்றும் சுவதேஷி (இது எனது நாட்டுப் பொருள்) என்பவையே அவை.
இங்கு சத்தியாக்கிரகம் பின்வரும் கருத்துக்களைப் புலப்படுத்துவதாக இருக்கும்.

1. இது தைரியசாலிகளின் ஆயுதம். ஒருபோதும் கோழைகளின்   ஆயுதம் அல்ல.

2. எத்தகைய துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் ஒருபோதும் பழிவாங்க முயலாதே.

3. எதிரியையும் ஆதரி. ஆனால்,  தீய செயலுக்கு வெறுப்பை காட்டிக்கொள்.

4. எதிரியை தோற்கடிக்காமல் அல்லது புண்படுத்தாமல்,  காயப்படுத்தாமல் அல்லது இழிவுபடுத்தாமல்,  அன்பினூடாக எதிரியை வெற்றி கொள்வதன் மூலம் முரண்பாட்டை தீர்ப்பதில் உறுதியாக இரு.

5. துன்பத்தை ஏற்படுத்தாமல் துன்பத்தை ஏற்றுக்கொள்;.
என்பவையே அவை.

சத்தியாக்கிரகத்தின் இந்த அம்சங்கள் இன்றைய யதார்த்தத்திற்கு முரண்பட்டவை என்று நோக்கப்படக் கூடும். ஆனால்,  இன்று உலகிலே அநேகமான முரண்பாடுகள் இதன் அடிப்படையில் தீர்க்கப்பட்டிருக்கிறது. 2000 ஆம் ஆண்டு சேர்பியாவில் ஒட்போர் புரட்சி மூலம் மிலோசெவிக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர்,  “வன்முறையற்ற முரண்பாட்டுக்கான சர்வதேச நிலையமானது,  அகிம்சை செயற்பாடுகள் மற்றும் உபாயங்களின் முன்னேற்றத்திற்கான நிலையம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்ததை இங்கு குறிப்பிட வேண்டும். மேலும்,  ஜோர்ஜியா,  உக்கிரைன்,  லெபனான்இ கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் அகிம்சைப் பாணியிலான வன்முறையற்ற மாபெரும் வெகுஜன இயக்கங்கள் ஜனநாயக மலர்ச்சிக்கும் அமைதிக்கும் வித்திட்டிருக்கின்றன.

1999 இல் சான்பிரான்ஸிஸ்கோவை அடிப்படையாகக் கொண்ட சிவில் உரிமையாளரும் சமாதான செயற்பாட்டாளருமான டேவிட் ஹார்ட்சோ மற்றும் சென் போல் சமூக அமைப்பாளர் மெல் டுன்கன் ஆகியோர் ஹேக் நகரில் நடைபெற்ற சமாதான மாநாட்டில் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டு பின்னர் மேற்கொண்ட முயற்சியால்,  உலகம் பூராவும் தொண்டர்களை ஏற்படுத்தி,  ஒரு அஹிம்சை வழித் தலையீட்டு படைக்கான தொடக்கத்தை இட்டனர். வன்முறையில் இருந்து உலகத்தை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். ஒரு சமாதான இராணுவத்தை’ (சாந்தி சேவா) ஸ்தாபிக்கும் மகாத்மா காந்தியின் கனவின் நிறைவேற்ற ஆரம்பம் என்று இதனைக் கொள்ளலாம்.

காந்தியின் அகிம்சை போராட்டத்தின் அடுத்த அம்சம் சர்வோதய’ ஆகும். பெரும்பான்மையினருக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் நன்மை பெறுதலை இது குறிக்கிறது. இதனை மனதிற்கொண்டு தான்,  வினோபா பாவே மூலம் மகாத்மா காந்தி சர்வோதய இயக்கத்தை’ ஸ்தாபித்தார். தொண்டர் படைகளை அமைத்த காந்தி,  ஆச்சிரமங்களில் இருந்து அவர்களை கிராமங்களுக்கு அனுப்பி சமூக சேவையில் ஈடுபடுத்தினார். வினோபா பாவே காந்தியின் வழிகாட்டியால் அமைத்த ‘சர்வோதய இயக்கம்” இன்றும் இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் தொடர்கிறது. இந்தியா முழுவதிலும் ஆச்சிரமங்கள் ஸ்தாபிக்கப்பட்டு,  கிராமப்பகுதிகளில் கல்வி,  சுகாதாரம் மற்றும் குடிமனை வசதிகள் வழங்கப்படுகின்றன.

‘சுவராஜ்” என்பதற்கு ஹிந்தி மொழியில் ‘சுதந்திரம்” என்று பொருள். ஆனால்,  காந்தியைப் பொறுத்தவரையில் ‘சுவராஜ்” கோட்பாடானது,  சுதந்திரம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை விடவும் கூடுதல் அர்த்தத்தை கொடுக்கிறது. “எம்மை நாமே ஆளுவதற்கு கற்றுக் கொள்ளுதல் சுவராஜ் ஆகும். சுவராஜ் (சுதந்திரம்) என்ற எனது கனவானது. ஒரு ஏழை மனிதனின் சுவராஜை குறிக்கிறது” என்று காந்தி கூறினார். அதனால்,  காந்தி கிராமிய பொருளாதாரம்,  உள்ளூர் பொருளாதாரம் என்பவற்றை ஊக்கப்படுத்தினார். ஒவ்வொருவருக்கும் தொழில் செய்வதற்கு வசதியளிக்கப்படுகிறது. இதனால்,  வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு முடிகிறது.

தனிநபர்களையும் சமூகங்களையும் அவற்றின் அடி மட்டங்களில் பலப்படுத்தும் பொழுது,  தமது சமூகங்களில் பிரதான அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் காத்திரமான முறையில் ஈடுபடுவதற்கும் பங்குபற்றுவதற்கும் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். முரண்பாட்டு மாற்றத்தைப் பொறுத்தவரையில் இது மிக அவசியமானது. இதனை மகாத்மா காந்தி அப்போதே கூறிவிட்டார்.

காந்தியின் சுவதேசி கோட்பாட்டினை நோக்குமிடத்து உள்ளூர் பொருளாதாரம்,  தேசிய மற்றும் இன உணர்வு,  ஒருவருக்கொருவர் உதவுவதை ஊக்கப்படுத்துதல் மற்றும் உள்ளூர் வளங்கள்,  திறமைகளை கட்டியெழுப்புதல் என்பதையே வெளிப்படுத்துகின்றது. மக்கள் தங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்துவதற்கான திறமை மற்றும் மக்களின் பொருளாதாரம் என்பவற்றின் அடிப்படையிலானது இது. சுவதேசி,  அதாவது பொருளாதார விவகாரங்களில் சுய ஒழுங்குபடுத்தலை இது குறிக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் பார்த்தால்,  காந்தியின் கொள்கைகள்  ஹமுரண்பாடுகளுக்கான தீர்வு’ என்ற நவீன மேலைத்தேய கோட்பாட்டின் அடிநாதமாக இருக்கிறது. காந்தியைப் பொறுத்தவரையில்,  ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளினூடாக வெறுமனே தீர்வைக் காணுவது அன்றி,  சுய புரிதலை எய்துவதும் தான். ஹவாழ்க்கையில் ஒருமைப்பாடே’ அவரது அடிப்படை.

அகிம்சையானது மிகவும் பலம்மிக்கதொன்று. இந்த பலத்தின் பின்னால் இருப்பது ஆயுதம் அல்ல,  அது மக்களாதரவு. முரண்பாடு பற்றிய மரபு சார்ந்த சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு அடிப்படை விலகலை சமூக போராட்டத்திற்கான அகிம்சை அணுகுமுறை’ பிரதிநிதித்துவப் படுத்துகிறது. பொது மக்களின் அங்கீகாரத்தின் மீதே ஆட்சியாளர்களின் அதிகாரம் சார்ந்திருக்கின்றது என்ற யதார்த்தத்தின் அடிப்படையிலேயே அகிம்சைப் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. சமூக போராட்டத்திற்கான ஒரு தொழில்நுட்பமான,  அகிம்சையுடன் தொடர்புபட்ட ஒத்துழையாமையானது,  மகாத்மா காந்தி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் பரிச்சயமானது. “மனித குலத்தின் பயன்பாட்டிற்காக கிடைப்பவைகளில் உயர்வானது அகிம்சை. மனிதனின் புத்தி சாதுரியத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட அழிவு ஆயுதங்களின் பலத்தை விடவும் இது பலமானது” என்று காந்தி அகிம்சை பற்றிக் கூறியிருந்தார்.

வாழ்வின் யதார்த்தத்தை உணர்ந்து வயோதிபத்தை வரவேற்போம் : ஒக்டோபர் 1 சர்வதேச முதியோர் தினம் – புன்னியாமீன்

elderly-care.jpgஓக்டோபர் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினமாகும். மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும்  நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டுதோறும் ஒக்டோபர் 1 ஆம் திகதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் கொண்டு வரப்பட்ட  பிரிவு 45/106  தீர்மானத்திற்கமையவே இத்தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி முதன் முதலாக 1991 ஆம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டுகளும் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கமாகும். ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இத்தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும்,  ஜப்பானில் மூத்தோருக்கு கௌரவம் செலுத்தும் தினமாகவும் இது அனுட்டிக்கப்படுகின்றது.

இவ்விடத்தில் முதுமை என்றால் என்ன என்பதைப் பற்றி சிந்தித்தல் வேண்டும். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப்பட்டாலும்கூட,  முதுமை என்பது ஒரு நபரின் பிறப்பிலிருந்து தொடங்குகின்றது என்பர். ஒரு குழந்தையானது வளர்ந்து பெரிதாகும் ஒவ்வொரு காலகட்டத்திலும் முதுமை நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. முதுமையும் இறப்பும் மனிதன் சந்திக்கும் தவிர்க்கமுடியா நிலையாகும். 

முதுமையின் போது ஏற்படும் நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியில் எடுத்து நோக்குமிடத்து மூளை மற்றும் நரம்புமண்டல அமைப்பு
முதுமையடையும் போது,  மூளையின் நரம்புமண்டல அணுக்களின் எண்ணிக்கையானது குறையவடையத் தொடங்குகின்றது.  இழையச் சீர்கேடு,  தோல் சுருக்கம்,  தசை எடை குறைவு, புலன் குறைபாடு, உடல் அசைவுத் தன்மைக் குறைவு, இனப்பெருக்கத் தடை, உளவியல் பாதிப்புகள் என பல்வேறு முறைகளில் உடலியல் தொழிற்பாடு பாதிக்கப்படுவதனால் வயதானவர்களின் நடவடிக்கைகளில் வேகம் குறைந்து காணப்படுகின்றது. ஞாபகசக்தி குறைவு, புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் குறைவான வேகத்துடனேயே காணப்படுவர்.

60 வயதிற்கு மேல் முதுகு தண்டில் உள்ள அணுக்கள் குறைய ஆரம்பிப்பதால் அவர்களின் உணர்வு சக்தி குறையத் தொடங்குகின்றது. முதுமையடையும் பொழுது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது மெதுவாக குறைய ஆரம்பிக்கின்றது, இது பல நோய்த்தொற்றுகளுக்கு, குறிப்பாக இதய நோய், பக்கவாதம், மூட்டுவலி, புற்று நோய், நீரிழிவு நோய் போன்றவை பெரிதும் முதுமைப்படுதலின் காரணமாகவே ஏற்படுகிறது.

வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். சத்துணவு, நலவாழ்வு, மருத்துவம் ஆகிவற்றிலேயே வாழ்நாள் எதிர்பார்ப்பு பெரும்பாலும் தங்கி இருக்கிறது. சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டும் காரணிகளை ஏதுவாக்கத் தேவை. இத்தகைய சூழலைப் பொறுத்து ஒரு மனிதனுக்கு சராசரி ஆயுட்காலம் 81 வருடங்களாக கணிப்பிடப்பட்டுள்ளது.  நாட்டுக்கு நாடு இந்த கணிப்பீடு வேறுபடலாம்.  பதியப்பட்ட மனித வரலாற்றில் யாரும் 123 வயதுக்கு மேல் இருந்ததாக ஆதாரம் இல்லை. மிகக் குறைவான எண்ணிக்கையிலான மனிதர்களே 100 வயதுக்கு மேலே வாழக்கூடியதாக இருக்கின்றது. மனிதனின் சராசரி வாழ்நாள் கூடி வந்திருப்பினும்,  மிக கூடிய வாழ்நாளின் அளவு கூடவில்லை. இதற்கு உயிரியல் அடிப்படையிலான எல்லைகள் இருக்கலாம். இருப்பினும்,  அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி இந்த எல்லை நீடிக்கப்படக்கூடியதே.

முதுமை தொடர்பாக பல கோட்பாடுகள் காணப்படுகின்றன. மனிதரின் படிவளர்ச்சியை பேணவே மனிதர் முதுமை பெற்று இறக்கின்றனர் என்பதே படிவளர்ச்சிக் கோட்பாட்டின் (Evolutionary Theory) சாரம். காலம் செல்ல செல்ல ஒரு உயிரினத்துக்கு இயற்கையால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல் கூடுகின்றது. எடுத்துக்காட்டாக உயிரினம் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு கூடுகின்றது. உயிர் உற்பத்தித் திறன் இளவயதிலேயே வீரியமாக இருக்கிறது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல உடல் வலு இழந்து போகின்றது.

மேலும்,  யாரும் இறக்காவிட்டால்,  உயிரினங்களின் தொகைகூடி பெரும் அழிவுக்கு இட்டுச் செல்லலாம். மாறிவரும் சூழலுக்கு முதிய உயிரினங்கள் தாக்குப்பிடிப்பது கடினமாக இருக்கும். முதிய உயிரினங்களே இருந்தால் அவற்றின் குடிவழிகளே மக்கள் தொகையில் கூடுதலாக இருக்கும். இது இனப் பெருக்கத்துக்கும் படிவளர்ச்சிக்கும் உகந்தது அல்ல.

மரபணு முதுமைக் கோட்பாட்டின்படி  (The Genetic Theory of Aging)
மரபணுக்களாலேயே வாழ்நாள் பெரிதும் முடிவாவதாக மரபணுக் கோட்பாடு கூறுகிறது. அதாவது,  பிறக்கும்போதே ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் மரபணுக்களைக் கொண்டு வாழ்நாள் முடிவாகிறது என்பது அடிப்படையாகும்.பெற்றோர்கள் நீண்ட வாழ்நாளைக் கொண்டால் பிள்ளைகளும் நீண்ட காலம் வாழ்வதை அவதானிக்க முடியும். மேலும் இரட்டை மனிதர்களின் வாழ்நாள் உடன் பிறந்தவர்களை விட ஒரே கால அளவைக் கொண்டதாக இருக்கும். இவை மரபணுக் கோட்பாட்டுக்கு ஆதாரங்களாக கொள்ளப்படுகின்றன. இதைப் போன்று மேலும் பல கோட்பாடுகள் காணப்படுகின்றன.

ஐ.நா.வின் கணிப்பீட்டின்படி தற்போது உலகில் ஒவ்வொரு பத்துப் பேருக்கு ஒருவர் என்றடிப்படையில் அறுபது அதற்கு மேற்பட்ட வயதை உடையவர்கள் காணப்படுகின்றனர். இது 2050ஆம் ஆண்டில் 5க்கு ஒன்று என்றடிப்படையிலும் 2150 இல் 3க்கு ஒன்று என்றடிப்படையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நோக்குமிடத்து தற்போது உலகலாவிய ரீதியாக 60 கோடி முதியவர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை 2050ம் ஆண்டளவில் 200 கோடியாக அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது. கடந்த காலங்களில் உலக அளவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருவது இதற்கு அடிப்படை காரணமாகக் கூறப்படுகின்றது. குழந்தை பிறப்பு வீதம் அதிகம் அதே போல் இறப்பு வீதம் அதிகம் என்ற நிலை மாறி தற்போது பிறப்பு-இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து,  சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் கீழ் முதியோரின் சுதந்திரம்,  அவர்களின் பங்களிப்பு,  வயதானவர்களை மதித்தல் போன்றவை விசேடமாக கவனத்தில் கொள்ளப்படுகின்றன. உலக முதியோர் தினத்தில்  இத்திட்டங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டுமெனவும் மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல்,  சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி சமூக,  கலாச்சார,  அரசியல்ரீதியிலும் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்தல் வேண்டுமெனவும் எதிர்பார்;க்கப்படுகின்றன.

முதியோர் தினத்தை உலகமே அனுஸ்டிக்கின்ற இச்சூழ்நிலையில் எமது முதிய பெற்றோர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டிய கட்டாயப்பாட்டில் நாம் உள்ளோம். எம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள் தமது வாழ்நாளில் பல்வேறுபட்ட தியாகங்களைப் புரிந்து எம்மை இந்நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். நவீன உலகமயமாக்கல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டே எமது வாழ்க்கைத்திட்டத்தை ஒழுங்குபடுத்தி கொண்டு வருவதனால்; எமது பெற்றோரை பராமரிக்க எமக்கு கால அவகசாம் கிடைப்பதில்லை. அண்மைக்கால ஆய்வுகளின்படி கடந்த ஒரு தசாப்தத்துக்கு இடைப்பட்ட காலத்தில் முதியோர் இல்லங்களில் தமது பெற்றோரை சேர்த்துவிடும் நிலை அதிகரித்து வருவதாக புள்ளி விபரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த நிலையை நாம்  ஆத்மார்த்த வாக்குமூலங்களாக இதயங்களில் பதிவாக்கி சிந்திக்க வேண்டும்.

நாம் பெற்றோர் ஆகும் வரை நமது பெற்றோரின் அருமை தெரியாது என்ற முன்னோர் கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் விதமாகவே இன்றைய காலகட்டத்தில் பெற்றோராக இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி எண்ணி நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். பெற்றோருக்கு  மதிப்பு தரவேண்டுமென்பது நம் எல்லோருடைய கலாசாரத்திலும் ஊறிப்போன விஷயம் என்றாலும்,  தற்போதுள்ள சூழலில் பெற்றோருக்குரிய மதிப்புகள் குறைந்து கொண்டே வருகிறதென்பது வருத்தமளிக்கும் விஷயமாகவே உள்ளது

இயந்திரமான வாழ்க்கை,  மேலைநாடுகளின் கலாசார தாக்கம் போன்றவற்றின் காரணமாக பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் நேரங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. இதனால்தான் தற்போதெல்லாம் பிஞ்சு குழந்தைகளை மணிக்கணக்கில் பாதுகாக்க குழந்தைப் பராமரிப்பு இல்லங்களையும்,  ஆயாக்களையும் தேடிப்பிடிக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது.

இன்று குழந்தைகளாக இருப்பவர்கள் பிற்காலத்தில் பெற்றோராக மாறும் போது தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதென்பது என்னவோ தற்போது பேஷனாகி விட்டது. பணம் கட்டி விட்டால் போதும் முதியோர் இல்லங்களில் பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்பும் இன்றைய பிள்ளைகள்,  முதியோர் இல்லங்களில் தங்கள் பெற்றோர் படும் துன்ப துயரங்களை எண்ணுவதில்லை.

வளரும் வரைதான் பெற்றோர்… சொந்தக்காலில் நின்று விட்டால் யாரும் தேவையில்லை என்ற கண்ணோட்டம் இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மனதில் ஆழமாகவே வேரூன்றியிருக்கிறது. ஆனால்,  தாமும் ஒரு காலத்தில் முதியவர்களாவோம் என்ற எண்ணத்தை மறந்துவிடுகின்றார்கள். 

இலங்கையைப்பொறுத்தவரை உலகளாவிய ரீதியில் ஒப்புநோக்கும்போது  கூடிய முதியோர்களைக்கொண்ட நாடு என்ற பெருமை உள்ளது. 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இலங்கையில் அண்ணளவாக 22 இலட்சம் மூத்த பிரஜைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இக்கணிப்பீட்டின்படி இத்தொகை 2011 ஆம் ஆண்டளவில்  60 வயதுக்கு மேற்பட்டோரின் தொகை 27 இலட்சமாகவும்,   2031 ஆம் ஆண்டில் 50 இலட்சமாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது அப்போதைய மொத்த சனத்தொகையில் 13 வீதமாக இருக்கும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் முதியோர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் இவாகள் பெரும்பாலும் தமது பிள்ளைகளில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. ஒரு சிலர் தமது பிள்ளைகளாலேயே முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஏனையோர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். புள்ளி விபரங்களைப்பார்க்கும் போது இலங்கையில் 48.3 சதவீதமான முதியோர்கள் தமது பிள்ளைகளின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர். ஓய்வூதியம் மூலம் 13.5 வீதத்தினரும் விவசாயம் மற்றும் ஏனைய தொழில்கள் மூலம் 10.3 வீதத்தினரும் தமது சொத்துகளின் வருமானம் மூலம் 7.7 வீதத்தினரும் வாழ்க்கையை நடத்துகின்றனர். இலங்கையில் உள்ள முதியோர்களில் 60-70 வயதுக்கிடைப்பட்டோர் 54.4 வீதமாக உள்ளனர்.70-80 வயதுக்கிடைப்பட்டோர் 32.3 வீதமும் 80-90 வயதுக்கிடைப்பட்டோர் 10 வீதமும் 90 வயதுக்கு மேற்பட்டோர் 1.3 வீதமுமாக உள்ளனர். இதே வேளை இலங்கையில் அதிகரித்து வரும் முதியோர்கள் தொடர்பில் அவர்களுக்குரிய பல செயற்றிட்டங்கள் முன்வைக்கப்படல் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காரணம் அதிகரித்து வரும் முதியோர்களை வைத்து பராமரிக்கும் அளவிற்கு இங்கு முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் அவ்வில்லங்களுக்குரிய போதிய வருமானங்கள் நன்கொடைகள் கிடைப்பதில்லை என்ற காரணங்களாகும்.

இலங்கையில் உள்ள முதியோர்களில் 70 வீதமானோர் வறுமை கோட்டிற்கு கிழே வாழ்ந்து வருவதாகவும் சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன, எனினும் இலங்கையில் மிக அதிகமான (34 வீதம்) வறுமை வீதத்தை கொண்டிருக்கக்கூடிய பெருந்தோட்டப்பகுதி முதயோர்களின் நிலை எப்படி இருக்கும் என்பது கூடியளவில் சிந்திக்க வேண்டிய விடயமே.

பெரியோர்களை மதி, கவனி என்று அறிவுரை வழங்கும் போது நம் பிற்காலத்தைக் கவனத்தில் கொண்டுதான் இப்படிக் கூறுகின்றோமோ என்று கூட எண்ணத்தோன்றுகின்றது. பிரபல்யம் மிக்க ஆங்கில மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் முதுமை எவ்வாறு உருவாகின்றது? அதனை வரவேற்பது எப்படி? என்பதை இவ்வாறு இயப்பினார். ஒருமனிதன் தன் வாழ் நாளில் பல பாத்திரங்களை ஏற்கிறான். முதலில் குழந்தை பிறகு மாணவன் பின்னர் விடலைப்பருவம், தொழில் வாய்ப்பை பெற்றபின் குடும்பஸ்தன் ஆகின்றான். காலச்சக்கரத்தின் அபரிமித சுழற்சியின் விளைவாக இறுதியில் மூக்கு கண்ணாடி அணிந்து முகம் சுருங்கி, உடல் மெலிந்து பல், கண்பார்வை எல்லாம் அற்ற நிலையில் கூன் விழுந்து முதுமையாகி மறைவது தான் சரித்திரம் என்றார்.

இன்றைய சமூக அமைப்பு பெரும்பாலும் கூட்டுக் குடும்ப அமைப்பிலிருந்து விலகி தன்னிச்சையாக இயங்கும் குடும்பங்களையே பெரிதும் சார்ந்துள்ளது.   ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்பதற்கிணங்க ஒரு சில குடும்பங்களில் உள்ள ஒரு நபரோ அல்லது குடும்பமோ புலம் பெயர்ந்து சென்று அயல் நாடுகளில் அமர்ந்தார்கள் என்றால் இதனால் பாதிக்கப் படுவது பெரும்பாலும் முதுமையில் காலம் தள்ளி வரும் வயதான பெற்றோர்கள்தான் என்பது சொல்லித் தெரிவதற்கில்லை.

புலம் பெயர்தலால் அடையும் நன்மைகள் பலப்பல,  அதே நேரத்தில்  நாம் நமது பெற்றோர்களுக்கு கொடுக்கும் மன உளைச்சலுக்கும் நிம்மதியின்மைக்கும் அளவில்லை என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. உலகமயமாக்கலுடன் இணைந்த எமக்கு இது சற்று சிரமத்தைத் தந்தாலும்கூட,  இவற்றை நடுநிலைமைப்படுத்திக் கொள்ளக்கூடிய அளவில் எம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ளாதவிடத்து முதியோராகப்போகும் எம் நிலையைப் பற்றி நாம் ஓரளவுக்கேனும் சிந்திக்க வேண்டிய கட்டாயப்பாட்டில் உள்ளோம்.

உலக இதயநோய் தினம் 2009 : இதயத்தோடு இணங்கி செயற்படுவோம். -புன்னியாமீன்

images-heart.jpgஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக இதயநோய் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதய நோய்களும்,  பக்கவாதமும் உலகில் இறப்புகளுக்கான முக்கியமான காரணம் என்பதையும் அது வருடமொன்றுக்கு 17.2 மில்லியன் உயிர்களைக் காவு கொள்கின்றது என்பதையும் உலக மக்களுக்கு அறிவிப்பதற்காகவே உலக இதயநோய் தினம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டுக்கான (2009) உலக இதய நோய் விழிப்புணர்வு தினத்தின் (செப். 27) தொனிப்பொருள் “இதயபூர்வமாக செயல்படு’ என்பதாகும். அதாவது, நாம் எந்த வேலையையும் முழு மனதுடன், ஈடுபாட்டுடன், மகிழ்ச்சியுடன் செய்தால் நம் இதயம் 100 ஆண்டுகளை ஆரோக்கியமாகக் கடந்து நமக்காகச் செயல்படும். எனவே இதயத்தோடு இணங்கி செயற்படுவோம் என்ற செய்தியை ஊட்டுவதற்காக 2009 உலக இதயநோய் தினம் உலகளாவிய ரீதியில் உணர்வலைகளை அவிழ்த்துவிட்டுள்ளது.

இதய நோய் பற்றி ஆராய முன்பு ‘இதயம்’ பற்றிச் சிறு விளக்கமொன்றைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். இதயம் முள்ளந்தண்டுளிகளில் காணப்படும்  தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் வேலை இரத்தத்தைக் குருதிக்குழாய்களின் வழியாக சுழற்சி முறையில் சீரான வேகத்தில் உடல் முழுதும் செலுத்துவதாகும். இதயம், விசேஷமான இயங்கு தசையால் ஆனது. இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை, இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுறை, வெளிப்புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் ஒருவித பாய்மம் இருக்கும். இது,  இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன், இதயத்தைத் திடீர் அதிர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும்.

இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் இரத்தத்தோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சுவர்ப் பகுதியில் இருந்துதான் இதய வால்வுகள் உருவாகின்றன. மேல்பக்கம் இருக்கும் இரண்டு சோணை அறைகளை, மேல்புற இதயத்தடுப்புச் சுவரும், கீழ்ப்பக்கம் இருக்கும் இரண்டு இதயஅறைகளை, கீழ்ப்புற இதயத் தடுப்புச் சுவரும் பிரிக்கின்றன.

இதயம் இயங்கும்போது, இதயத்தில் இருந்து இரத்தம் வெளியே உந்தித் தள்ளப்படும். அப்படி தள்ளப்படும் இரத்தம் ஒரு வழியாகவே செல்லும். மீண்டும் அதே வழியில் திரும்பி வருவதில்லை. இவ்வாறு வெளியே தள்ளப்படும் இரத்தம், மீண்டும் வராமல் தடுக்க இதய அறைகளில் நிலைய வால்வுகள் உள்ளன.

வலது சோணை மற்றும் வலது இதய அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு முக்கூர் வால்வு என்றும், இடது சோணை மற்றும் வலது இதய அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு இருகூர் வால்வு என்றும் வழங்கப்படும்.

வலது சோணை அறையில் இருந்து வலது இதய அறைக்குச் செல்லும் இரத்தம் மீண்டும் வலது சோணை அறைக்குத் திரும்பாமல் ‘முக்கூர் வால்வு’ தடுக்கிறது. அதேபோல், இடது சோணை அறையில் இருந்து இடது இதய அறைக்குச் செல்லும் இரத்தம் மீண்டும் இடது சோணை அறைக்குத் திரும்பாமல் இருகூர் வால்வு’ தடுக்கிறது.

வலது இதய அறை  சுருங்கும்போது, அவ் அறையில் இருக்கும் இரத்தம் நுரையீரல் நாடியில் பாயும். அது திரும்பி வராமல் தடுக்கும் வால்வுக்கு நுரையீரல் அரைமதி வால்வு என்று பெயர். அதேபோல், இடது இதய அறை  சுருங்கும்போது, பெருநாடிவில்லினூடு செல்லும் இரத்தம் திரும்பிவராமல் தடுக்கும் வால்வுக்கு ‘பெருநாடி அரைமதி  வால்வு’ என்று பெயர்.

உடல் முழுவதும் இரத்தத்தை எடுத்துச் செல்லும் இதயம் இயங்குவதற்குப் போதுமான சக்தி, ஒட்சிசன் போன்றவை அவசியம். அதற்குத் தான் இதயத்துக்கே இரத்தத்தைத் தரும் இரத்தக் குழாய்கள் உள்ளன. இவை வலது, இடது எனப் பிரிந்து இதயத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளைவிட்டு பரவியிருக்கும். இவை முடியுருநாடி எனப்படும். இதன்மூலம்,  இதயம் தனக்குத் தேவையான இரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. இந்த இரத்தக் குழாய்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இந்த இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போதுதான் ‘மாரடைப்பு’ ஏற்படுகிறது.

உலகெங்கிலும் நாளாந்தம் பல்வேறு வகையான புதிய புதிய தொற்று நோய்கள் பற்றிக் கேள்வியுறுகின்றோம். பன்றிக் காய்ச்சல், டெங்கு, எய்ட்ஸ் போன்ற தொற்று நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள், அவற்றைத் தடுப்பதற்கான வழிவகைகள் பற்றி நாம் நன்கு அறிந்திருக்கிறோம். பொதுவாக தொற்று நோய்களைத் தடுப்பதற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் தொற்றா நோய்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் தொற்றா நோய்கள் என்பவை எவை என்பதை அறிந்திருப்பது முக்கியமானது.

இதயம் மற்றும் குருதிக்குழாய்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, நீண்ட காலம் நீடிக்கும் சுவாசப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்றுநோய் என்பனவற்றை தொற்றா நோய்களாக வகைப்படுத்தலாம். உலகில் ஏற்படும், மரணங்களுக்கான முதன்மைக் காரணியாக இருதய நோய்களும், பாரிசவாதமும் அமைகின்றன. முழு உலகிலும் இந்நோய்களால் வருடாந்தம் 17.2 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். உலக இருதய கூட்டமைப்பானது அதன் அங்கத்தவர்களோடு இணைந்து இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு காரணமாகவும் பக்கவாதம் காரணமாகவும் நிகழும் அகால மரணங்களுள் குறைந்த பட்சம் 80சதவீதத்தை முக்கிய ஆபத்துக் காரணிகளான புகையிலைப் பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளல் உடல் செயற்பாடின்மை போன்றவற்றைக் கட்டுப்படுத்தவுதன் மூலம் குறைக்க முடியும் எனும் செய்தியைப் பரப்புகின்றது.

நமது உடலில் உறுப்புகளில் பெரும்பாலானவற்றுக்கு அவ்வப்போது ஓய்வு கிடைக்கும். அதாவது, உணவு சாப்பிடவில்லை என்றால், ஜீரண உறுப்புகளுக்கு வேலை இல்லை. தூங்கினால், மூளைக்கு வேலை இல்லை. இப்படி, கை, கால், கண் போன்ற உறுப்புகள்கூட ஓய்வு எடுக்க முடியும். ஆனால், ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் மிக முக்கியமானது இதயம்தான். ஏன் இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது? இதயம் ‘துடிக்கவில்லை’ என்றால் அசுத்த இரத்தம் தூய்மையாகாது. உடல் இழையங்களுக்கு சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துகள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் போய்ச் சேராது. போதுமான சத்து கிடைக்காமல் இழையங்கள் பாதிக்கப்படும். செயல் இழந்துபோகும். மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியாமல் போகும். கடைசியில், ஒட்டுமொத்த மனித உடலே இறந்துபோகும்.

இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், இதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இதயத்துக்குத் துணையாக நுரையீரலும் தொடர்ந்து இயங்குகிறது. இதயம் தன்னிச்சையாக செயல்படக் கூடியது. கண், காது, கால், கை போன்ற உறுப்புகளைப்போல் நமது விருப்பத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் ஏற்ப இதயத்தை இயக்க முடியாது. ஆனால், இதயத்தைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட நரம்பு மண்டலம் உள்ளது. இதற்கு, தன்னியக்க நரம்பு மண்டலம் அல்லது பரிவு நரம்பு மண்டலம் என்று பெயர். இந்த நரம்பு மண்டலம் தவிர, உயிரிரசாயன சுரப்பு நீர்களும் இதயத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன.

இதயத்தைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. இன்னொரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

அட்ரீனலின் – இந்த ஹார்மோன், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். பயம் மற்றும் உணர்ச்சிவசப்படும்போது, இரத்தத்தில் இந்த ஹார்மோனின் அளவு அதிகரித்து இதயத்துடிப்பு அதிகரிக்கும்.

தைராக்ஸின் – இந்த ஹார்மோன், இளம் வயதில் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. உடலின் பல்வேறு வளர்ச்சி மாற்றங்களை இது கட்டுப் படுத்துகிறது. இந்த ஹார்மோனால்கூட இதயத் துடிப்பு அதிகரிக்கும்.

நாளக் குழாய்கள் மூலம் இதயத்துக்கு வரும் இரத்தத்தின் அளவைப் பொறுத்தும், இரத்தஅழுத்தத்தைப் பொறுத்தும் இதயத் துடிப்பு அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்யும்.

இதயத் துடிப்பு என்பது இதயம் இயங்கும் போது ஏற்படுவது. அப்படி இதயம் துடிக்கும் போது பெருநாடியில் இரத்த ஒட்டம் ஏற்பட்டு இரத்தக் குழாய்கள் விரிவடையும். இதனால், ஏற்படுவதே நாடித் துடிப்பு. ஆக, இதயத் துடிப்பு எத்தனை முறை ஏற்படுகிறதோ அத்தனை முறை நாடித் துடிப்பும் ஏற்படும்.  இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும்.

இதயத் துடிப்பு பல்வேறு காரணங்களால்அதிகரிக்கக்கூடும். ஆனால், உடலியல் காரணங்களால் ஏற்படும் அதிகப்படியான இதயத் துடிப்பு, தானாகவே மீண்டும் பழைய நிலையை அடையும். ஆனால், நோய்கள் காரணமாக இதயத் துடிப்பு அதிகரித்தால், அந்தந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளித்தால்தான் இதயத் துடிப்பு சீராகும்.

உடற்பயிற்சி செய்யப்போகும், கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கும், கோபம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போது, உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போதும் இதயத் துடிப்பு அதிகமாகும். பிறகு தானாகக் குறைந்து விடும். தூங்கும்போதும், நீண்ட நேரம் படுத்து ஓய்வெடுக்கும் போதும் இதயத் துடிப்பு பொதுவாகக் குறைந்து காணப்படும். ஒரு சராசரி மனிதனுக்கு இதயத் துடிப்பு என்பது நிமிடத்துக்கு 72 முறை. சில சமயங்களில், சிலருக்கு இது 60 முதல் 90 க்கும் அதிகமான அளவில் இருக்கும். அப்படி 90 க்கு மேல் இருந்தால் அதை மிகை இதயத் துடிப்பு (உயர்குருதி அமுக்கம்) என்றும் 60க்குக் குறைவாக இருந்தால் குறை இதயத் துடிப்பு (தாழ்குருதி அமுக்கம்) என்றும் சொல்வார்கள். மனிதன் மட்டுமல்ல விலங்குகளுக்கும் இது பொருந்தும், யானைக்கு ஒரு நிமிடத்துக்கு இதயம் 25 முறைதான் துடிக்கும். கானாரி என்ற பறவைக்கு இதயம் ஒரு நிமிடத்துக்கு 1000முறை துடிக்குமாம்.

 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயத்தை கவனமாக பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இதயத்துக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் நோயாளிகளில் 80 வீதம் இறக்க நேரிடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும்இ மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களில் 50 வீதம் 55 வயதுக்குள் இருக்கின்றனர்.

மாரடைப்பைத்  தடுப்பதற்கு முன்னேற்பாடாக பின்வரும் வழிகளை கையாளலாம். 

ஆரோக்கியமாக உணவு உட்கொள்ளல் : பொதுவாக ஒரு சராசரி மனிதனில் “எச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்புகள் 40 மி.கிராமுக்கு அதிகமாகவும், கெட்ட கொழுப்புகள் 140 மி.கிராமுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். எனவே கொழுப்புள்ள பொருள்களையும் எண்ணெயையும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் அதிகமாக உண்ண வேண்டும்.

சுறுசுறுப்பாக இருங்கள். இதயத்தைப் பேணுங்கள். 30 நிமிட நேர உடற்பயிற்சிகள் மாரடைப்புகளையும் பக்கவாதத்தையும் தவிர்க்க உதவும். அது உங்களது வேலையிலும் அனுகூலமாக அமையும். படிக்கட்டு வரிசையைப் பயன்படுத்துங்கள். இடைவேளைகளில் உலாவுங்கள்.

உப்பைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். உங்களது உப்பு பாவனையை நாளொன்றுக்கு ஒரு தேக்கரண்டியளவுக்கு மட்டுப்படுத்துங்கள். பதப்படுத்திய’ உணவைத் தவிருங்கள். அவை பெரும்பாலும் உயர் உப்பு அடக்கத்தைக் கொண்டவை. குறிப்பாக தந்தைக்கோ அல்லது தாய்க்கோ உயர் இரத்த அழுத்த நோய் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உப்பு உட்பட உப்பு நிறைந்த உணவுப் பொருள்களை இளம் வயதிலிருந்தே குறைத்துச் சாப்பிடுவது அவசியம். இதன் மூலம் நோய் வராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

புகையிலைப் பயன்பாட்டைத் தவிருங்கள். முடியுரு நாடி செயலிழப்பு,  இதய நோய், மாரடைப்பு போன்ற ஆபத்துகள் ஒரு வருட காலத்துள் பாதியளவுக்குக் குறையும். காலப்போக்கில் சாதாரண நிலையை அடைந்துவிடும்

ஆரோக்கியமான உடல் நிலையைப் பேணுங்கள். குறிப்பாக உப்பு உள்ளெடுப்பைக் குறைப்பதால் ஏற்படும் நிறை குறைதலானது குருதியமுக்கம் குறைவடைய வழி செய்யும். பக்கவாதத்துக்கான முதன்மையான ஆபத்துக்குக் காரணம் உயர் குருதி அமுக்கமாகும்.

உங்களது தரவு எண்களை அறிந்து கொள்ளுங்கள். உங்களது குருதி அமுக்கம், கொலஸ்ரோல் மட்டம்,  குளுக்கோசு மட்டம்,  இடுப்பு இடை விகிதம்,  உடல் திணிவுச் சுட்டி போன்றவற்றை அளக்கக்கூடிய மருத்துவ நிபுணர் ஒருவரை நாடுங்கள். உங்களுக்கு ஒட்டுமொத்த ஆபத்து நிலையை அறிந்து கொள்வதால் உங்களது இதயச் சுகாதாரத்தை மேம்படுத்தத்தக்க குறிப்பான திட்டத்தை நீங்கள் விருத்தி செய்து கொள்ளலாம். சவால் நிறைந்த இன்றைய வாழ்க்கையில் பெரும்பாலானோருக்கு பரபரப்புத் தன்மை உள்ளது. நன்கு சிந்தித்து அன்றாட நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுக் கொள்வதன் மூலம் பரபரப்பைக் குறைத்துக் கொள்ள முடியும். என்றைக்காவது ஒரு நாள் பரபரப்படைந்தால் தவறில்லை. தொடர்ந்து ஒருவர் பரபரப்படைந்தால் தொடர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக உடல் நலன் கெடும். இரத்தக் குழாய்கள் சுருங்கும்.

முன்பு இதய நோய்,  மாரடைப்பு போன்றன குணப்படுத்த முடியாத நோய்களாக கருதப்பட்டன. ஆனால் இதய அறுவைச் சிகிச்சை முறை இன்று விருத்தி கண்டுள்ளது. இதய அறுவைச் சிகிச்சையில் இரண்டு முறைகள் உள்ளன. துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தை நிறுத்திவிட்டு அறுவைச் சிகிச்சை செய்வது, மற்றொன்று இதயம் துடித்துக்கொண்டிருக்கும் போதே அறுவைச் சிகிச்சை செய்வது.

இதயத்தை நிறுத்தி அறுவைச் சிகிச்சை செய்வது என்பதுதான் பரவலாகச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை. இதில் இதயத்தை நிறுத்திவிட்டு அறுவைச் சிகிச்சை செய்வார்கள். அப்போது இதயம் செய்யும் பணியை இதய – நுரையீரல் இயந்திரம் (HEART – LUNG MACHINE) செய்யும்.  இம் முறையில் வெளியிலிருந்து இரத்தம் செலுத்த வேண்டும். இதனால் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளிக்குப் பல்வேறு சிரமங்கள் வர வாய்ப்புகள் உண்டு. ஆனால் இதயத்தை நிறுத்தாமல் துடித்துக்கொண்டிருக்கும்போதே அதன் இயக்கத்துக்கு இடையூறு செய்யாமல் அறுவைச் சிகிச்சை செய்வது “பீட்டிங் ஹார்ட் சர்ஜரி’ ஆகும்.

இச் சிகிச்சை முறையில் நோயாளிக்கு இரத்தம் செலுத்தும் தேவை 99 சதவீதம் இருக்காது. இதனால் அறுவைச் சிகிச்சைக்கு முன்பு இரத்தம் ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை.  இரத்தம் வாங்கும் செலவும் மிச்சம். சர்க்கரை நோய், நுரையீரல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கும் முதியவர்களுக்கும் “பீட்டிங் ஹார்ட் சர்ஜரி’யில் ஆபத்து மிகவும் குறைவு. இதயம் துடித்துக்கொண்டிருக்கும்போதே அறுவைச் சிகிச்சை செய்வதற்கு தேர்ந்த பயிற்சியும் அனுபவமும் வேண்டும். எல்லோராலும் செய்துவிட முடியாது.

இத்தகைய நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்து ஆயுளை நீடிக்க நவீன ESMR  சிகிச்சை முறை நடைமுறைக்கு வந்துள்ளது.   இது அறுவை சிகிச்சை இல்லாமல், வலியின்றி, அதிக செலவு பிடிக்காத ஒரு புதிய நவீன சிகிச்சை முறையாகும். ESMR  என்பதன் விரிவாக்கம், Extracorporeal Shock – wave Myocardial Revascularization  என்பது ஆகும்.

இந்த நவீன சிகிச்சை முறையில் பாதிக்கப்பட்ட இதயத் தசையின் மீது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட ஒலி அதிர்வுகள் செலுத்தப்படும்போது பல புதிய இரத்தக் குழாய்கள் உருவாகி இரத்த ஓட்டம் சீராகிறது. தீவிர நெஞ்சு வலியால் அவதிப்பட்டு, வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருப்போருக்கு இந்த நவீன சிகிச்சை மூலம் முழு நிவாரணம் கிடைக்கும். இரத்த ஓட்டம் சீர்பெற்று இதயம் நன்கு இயங்குகிறது. மருந்துகள், பைபாஸ் அறுவை சிகிச்சை, ஆஞ்சியோ பிளாஸ்ட்டி போன்றவை இதயக் கோளாறுக்கு உதவும் என்றாலும்கூட,  ESMR போன்று முழுமையான தீர்வை அளிக்காது என்று கூறப்படுகிறது.

உலக சுற்றுலா நாள் (World Tourism Day) – புன்னியாமீன்

sri-lanka-hotels.jpgஉலக சுற்றுலா நாள்  (World Tourism Day)  உலக சுற்றுலா நிறுவனத்தின்  (WTO) ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.  சுற்றுலாத்துறையில் ஈடுபாடு கொண்ட உலகின் 51 நாடுகள் சுற்றுலா அமைப்புக்களின் சர்வதேச சம்மேளனத்தின் (IUOTO) 1925 இல் இணைந்து கொண்டன. பின்னர் இந்த அமைப்பு, ஐ.நா.வின் கீழ் இயங்கும் ஓர் அதிகாரபூர்வமான அமைப்பாக உலகச் சுற்றுலா நிறுவனத்தை (WTO) தாபித்துக் கொண்டது. இத்தாபனத்தை அமைப்பதற்கான யாப்பு 1970 செப்டெம்பர் 27ஆம் திகதி மெக்ஸிக்கோ நகரில் கூடிய (IUOTO) நிருவாகக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக,  கலாசார,  அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் உலகின் பல்வேறு இடங்களில்,  பல்வகை கொண்டாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலக சுற்றுலா நாளின் பிரதான கருப்பொருள் சுற்றுலா மூலம் பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச புரிந்துணர்வு, சமாதானம், சுபீட்சம் என்பவற்றை அடைதலும்,  எவ்வித பாகுபாடுமின்றி சகலரும் மனித உரிமைகளையும்,  அடிப்படைச் சுதந்திரங்களையும் அனுபவிக்கவும்,  மதிக்கவும் உதவுதலும் இவற்றினூடாக சுற்றாடலைப் பாதுகாத்தலும், தொழில்வாய்ப்பை உருவாக்குதலும் ஆகும்.

அக்டோபர்,  1997இல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த அழைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2003இல் பீக்கிங்கில் இடம்பெற்ற கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது: இதற்கமைய 2006 இல் ஐரோப்பாவிலும், 2007இல் இலங்கையிலும், 2008இல் அமெரிக்காவிலும் கொண்டாடப்பட்டன. 2009இல் ஆபிரிக்காவில் கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2007இல் இலங்கையில் இந்நாள் கொண்டாடப்பட்டது. இதன் கருப்பொருள்: “சுற்றுலாக் கதவுகள் பெண்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன” (Tourism opens doors for women). என்பதாகும்.

சுற்றுலா என்பதைத் வரைவிலக்கணப்படி நோக்கின் தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டுகளிக்க பயணிப்பதே என்று பொருள் கொள்ளலாம். போக்குவரத்தும் தொடர்புத்துறையும் மேம்பட்டுவரும் இக்காலத்தில் சுற்றுலா துறையும் மேற்குறிப்பிட்ட துறைகளுடன் இணைந்த வகையில் வளர்ச்சி கண்டு வருகின்றது. குறிப்பாக வசதிபடைத்த மேற்குநாட்டினரும்,  ஜப்பானியரும் அதிகமாக சுற்றுலா செல்கின்றனர் என்றும்  சிறந்த சுற்றுலா இடங்கள் நல்ல வருவாயை ஈட்டித்தருகின்றன என்றும் புள்ளி விபரத்தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றது.

வரலாற்று ரீதியாக இத்துறை பற்றி ஆராயும் போது போக்குவரத்து,  தொலைதொடர்பு.  விருந்தோம்பல் துறைகள் போன்றன பழங்காலத்தில் விரிவு பெற்று இருக்கவில்லை. இதனால் பெரும்பான்மையானோர் தாம் பிறந்த கிராமங்களிலேயே தமது வாழ்க்கையைக் கழித்தனர். குடியேற்றவாதக் கொள்கை தலை தூக்கியதும் படைவீரர்கள்,  வணிகர்கள்,  சமய நோக்குடையோரும் தம்மிடத்தை விட்டு பிற இடங்களுக்கு செல்லக்கூடிய நிலை பெற்றனர்.

வணிக விருந்தோம்பல் விரிவு பெற முன்னர் உணவுக்காவும்,  உறையுளுக்கும் சென்ற இடம் குடியாளர்களையே பயணிகள் தங்கி இருந்தார்கள். வீடுகளில் திண்ணைகள் இருந்தன. வீடுகளுக்கு வரும் பயணிகளுக்கு உணவளித்து இடமளிப்பது பண்பாக இருந்தது. குறிப்பாக சமயப் பெரியார்களுக்கு உணவளிப்பது சிறந்த பேறாக கருதப்பட்டது. செல்வந்தர்கள் மடங்களை கட்டி,  அங்கு வழிப்போக்கர்களுக்கு உணவும் தற்காலிக தங்குமிடமும் தந்துதவினர். இந்த மடங்கள் பலவற்றில் சாதி அமைப்பு பேணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நவீன காலத்தில் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காக பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. அதே நேரம் நாடு கடந்து வரும் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காக வேண்டி பல்வேறு ஹோட்டல் தங்குமிட வசதிகள் உணவு,  பாண வகைகள் இத்தியாதி ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படுகின்றன. இயற்கை வனப்பு,  காடுகள்,  வனாந்திரம்,  வன ஜீவராசிகள்,  பறவைகள்,  கடற்கரைகள்,  சுண்ணக்கற்பாறைகள் (Corals), பளிங்குப் பாறைகள்  (Crystala) மலைத்தொடர்,  நீர்வீழ்ச்சி,  மாணிக்கம்,  தோட்டங்கள்,  பூஞ்சோலைகள்,  அழிபாடுகள் (Ruins) என்பன பிரதான சுற்றுலாச் சொத்துக்கள் ஆகும்.

சுற்றுலாவுக்கு,  இரண்டு அம்சங்கள் முக்கியமானவை: ஒன்று நேரம் மற்றையது பணம் என்று பசுபிக் ஏசிய பிரயாண சங்கத்தின் தலைமைப் பதவியிலிருந்து தீவிர சேவையின் பின்னர் இளைப்பாறிய லக்ஷ்மன் ரத்தனபால ஐ.பி.எஸ்.ஸிடம் கூறினார். நேரம் உள்ளவர்களிடம் பணம் இல்லை. பணம் உள்ளவர்களிடம் நேரம் இல்லை என்று அவர் விளக்கி கூறினார். மிகச் சிலரிடமே இரண்டும் உண்டு. ஆனால்,  உயர்மட்ட செல்வத்தை அடையும் அநேகமான நாடுகளிலேயே இந்த இரண்டும் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

உலக சுற்றுலா பயணிகளின் தொகை 2010 ஆம் ஆண்டளவில் ஒரு பில்லியனுக்கு மேலாகவும் 2020 ஆம் ஆண்டளவில் 1.56 பில்லியனாகவும் அதிகரிக்குமென மட்றிட்டில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள ஐக்கியநாடுகள் உலக சுற்றுலா நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்த மீட்சி குறிப்பாக,  உலகிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் சுற்றுலா பிராந்தியமென வர்ணிக்கப்படும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சாத்தியமாகுமென நம்பப்படுகிறது. பிராந்திய சுற்றுலாத்துறையும் புதியதொரு நடுத்தர வகுப்பின் எழுச்சியும் இந்தத்துறையை ஊக்குவிக்கின்றன.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அநேகமானோர் வறுமையிலிருந்து விடுபட்டு நடுத்தர வர்க்கத்தில் இணைந்து கொள்கிறார்கள். இந்த புதிய செல்வந்தர்கள் இயல்பாகவே விடுமுறையில் வெளிநாடு செல்வோருடன் இணைந்து கொள்கிறார்கள். இவ்வாறாக பிரயாணம் ஒரு விரிவடையும் அம்சமாக இருக்கிறது. இந்த அம்சம் ஒரு பழக்கமாகத் தோன்றி பின்னர் நடுத்தர வர்க்கத்தினரின் ஒரு வாழ்க்கைப் பாணியாக வளர்ச்சி அடைகிறது.

கடந்தவருட உலகளாவிய பொருளாதார நெருக்கடி சுற்றுலாத் துறையை பாதிக்கிறது என்று சியோல் சுற்றுலா நிறுவனம் ஜூன் மாத ஆரம்பத்தில் தென் கொரியாவில் நடத்திய மூன்று நாள் சர்வதேச சுற்றுலா மகாநாட்டில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 2010 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இரண்டு புதிய ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா களிப்பிடங்கள்,  புதிய இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துதல் ஆகியவற்றுடன் மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாக சிங்கப்பூர் சுற்றுலா சபையின் உதவிப் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார். மலேசியா,  சுற்றுலா என்ற பெயரில் தான் தங்கியுள்ளது என்று அந்நாட்டு சுற்றுலாத் துறையின் சர்வதேச சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் சோங் யோக் ஹார் தெரிவித்திருந்தார்.
வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளுக்கு சீன, ஜப்பான் சுற்றுலாப் பயணிகள் உலக பிரயாணத்துறையை மாற்றியமைத்து விட்டனர். கடந்த 15 வருட காலத்தில்,  எங்குமே புதிய மத்திய வகுப்பினர் தோன்றி உலக பிரயாண முறைமையை மாற்றியமைத்துவிட்டார்கள்.

நவீன இந்தியாவில் மத்திய வகுப்பினர் தொகை 300 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொத்த சனத்தொகையிலும் பார்க்க இது அதிகமானது. ஆனால்,  சீனாவின் மத்திய வகுப்பினர் தொகை இதிலும் அதிகமானது.

ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகள் அதிக வளங்களைப் பெறுவதால் பிராந்தியத்திற்குள்ளான பிரயாணங்கள் தொடர்ந்தும் விருத்தியடையும் என்பதும் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக உலக நாடுகளின் சுற்றுலாத்துறையின் ஆசியாவுக்குள் பிரயாணங்கள் அதிகரிக்கலாம் என்பதும் பொதுவான எதிர்பார்க்கையாகும்.

மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா பெரும் வருவாய் ஈட்டித்தரும் துறையாகப் நோக்கப்பட்டாலும்  பல கேடுகளையும் செலவுகளையும் கொண்டுள்ளதையும் அவதானித்தல் வேண்டும். எனவே சுற்றுலாத்துறை வருமானத்தை ஈட்டித்தரும் அதேவேளை சுற்றாடலுக்கு அது அச்சுறுத்தலாகவும் அமைகிறது. சுற்றுலாவுக்கு அடிப்படையானது சுற்றாடலாகும். திட்டமில்லாத,  கட்டுப்பாடில்லாத சுற்றுலா, சுற்றாடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குநாட்டினரை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஈர்ப்பதற்காக அவர்களுக்கு தேவையான உயர் வசதி படைத்த வலயங்களை மூன்றாம் உலக நாட்டு அதிகார வணிக வர்க்கத்தினர் பெரும் செலவில் கட்டுகின்றனர். இவ்வாறன கட்டடங்கள்  அத்தியவசிய கட்டமைப்பு மற்றும் சேவைகளை புறம் தள்ளியும் கட்டப்படுகின்றன. இத்தகைய வலயங்கள் நாட்டுக்குள்ளே இருக்கும் ஏற்றதாழ்வை பெரிதாக்குகின்றன. சுற்றுலாத்துறையால் கிடைக்கும் வருவாயும் பொது மேம்பாட்டிற்கு செல்லாமல் அதிகார வட்டத்திற்கே போய்சேருவதாகவும் விமர்சகர்கள் சாடுகின்றனர்.

ஹோட்டல் கழிவுகள்,  நீர்மாசமடைதல்,  சட்டவிரோத குடிசைகளும்,  விடுதிகளும், சுண்ணக்கற்பாறை அகழ்வு போன்றன சுற்றாடலைப் பாதிக்கின்றன. இதைவிட மறைமுகமாக சுற்றுலாத்துறையுடன் சங்கமித்துள்ள பாலியல் சுற்றுலா,  கடற்கரைச் சிறுவர்கள்,  போதைவஸ்து பாவனையும் கடத்தலும்,  அந்நியரின் அரைநிர்வாணப்பவனி,  கசினோ சூதாட்டம் என்பன பௌதீகச் சுற்றாடலை மட்டுமன்றி பண்பாட்டுச் சூழலையும் சீரழிக்கின்றன. இலங்கை,  தாய்லாந்து,  பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பாலியல் சுரண்டலில் ஈடுபடவதற்காவும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றார்கள். ஏழைச் சிறுவர்கள்,  பெண்கள் என பலர் இவ்வாறு இழிவான முறையில் சுரண்டப்படுகின்றார்கள். மேற்குநாடுகள் இவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை. இவை குறித்து அரச கட்டுப்பாடுகளும், சமூக விழிப்புணர்வும் அவசியமாகும். 

இக்கால கட்டத்தில் மனிதன் நிலவுக்கே சுற்றுலா செல்ல துணிந்து விட்டான். ஆகாய விமானங்களை அண்ணாந்து பார்த்து நாம் வியந்த  காலம் இன்று மாறி விட்டது. அதே  வானத்தில் விமானத்துக்குப் பதிலாகப் பயணிகளை சுமந்து செல்லும் ராக்கெட்டுக்களைக் காணும் காலம் வந்து விட்டது. இது வரை ஆராய்ச்சியாளர்களை மட்டுமே விண்ணுக்குச் சுமந்து சென்ற ராக்கெட்டுகள் சுற்றுலாப் பயணிகளைச் சுமந்து செல்லத் தயாராகி வருகின்றது. தற்போது விமான நிலையங்கள் சாதாரணமாகி விட்டாற் போல் அடுத்த தலைமுறையில் விண்ணுலா நிலையங்களும் சாதாரணமாகி விடக்கூடும்.  இந்த திட்டத்தினை ஸ்பேஸ் போர்ட் அமெரிக்கா என்று பெயரிட்டுள்ளனர். முதலில் இந்த திட்டத்தைப் பற்றிக் கேள்விப்படுபவர்களுக்கு ஏதோ விண்வெளித் திரைப்படக் கதை கேட்டாற் போல் தான் இருக்கும். ஆனால் இந்தத் திட்டம் நடைமுறைக்கு  வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அமெரிக்காவின் (federal) பெடரல் ஏவியேஷன் அத்தாரிட்டி (ஏப்.ஏ.ஏ) இந்த ஸ்பெஸ்போர்ட் அமெரிக்காவுக்கு நீயூ மெக்சிகோவில் அனுமதி உலகின் முதல் பயணிகள் விண்வெளி ஓடம் நிறுத்தப்பட்டிருக்கும். விண்வெளிப் பயணம் செல்ல ஒரு பயணிக்குத் தேவைப்படும் நூறு மில்லியன் டொலர்களை முன்கட்டணமாக வசூலிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். கனவுப் பயணம் செல்ல விரும்பும் பயணிகளிடம் இப்போதே முன் பதிவு செய்து முன்தொகை வாங்கத் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.  உலகில் மனித வரலாற்றில் இதுவரை மிகச் சிலரே சென்றுள்ள சாதாரண மனிதர்களின் கற்பனைக்கும் எட்டாத இந்த புதிய அனுபவம் தரும் பயணத்துக்கு மனிதலில் சென்று வரக்கடும் போட்டி நிலவுகிறது. எதிர் காலத்தில் விண்வெளிக்கான சுற்றுலா தினம் என்றொரு தினம் கொண்டாடப்பட்டாலும் ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இல்லை.

1980 ஆம் ஆண்டிலிருந்து உலக சுற்றுலா தினம் பின்வரும் கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

1980: Tourism’s contribution to the preservation of cultural heritage and to peace and mutual understanding
1981: Tourism and the quality of life
1982: Pride in travel: good guests and good hosts
1983: Travel and holidays are a right but also a responsibility for all
1984: Tourism for international understanding, peace and cooperation
1985: Youth Tourism: cultural and historical heritage for peace and friendship
1986: Tourism: a vital force for world peace
1987: Tourism for development
1988: Tourism: education for all
1989: The free movement of tourists creates one world
1990: Tourism: an unrecognized industry, a service to be released (“The Hague Declaration on Tourism”)
1991: Communication, information and education: powerlines of tourism development
1992: Tourism: a factor of growing social and economic solidarity and of encounter between people
1993: Tourism development and environmental protection: towards a lasting harmony
1994: Quality staff, quality tourism
1995: WTO: serving world tourism for twenty years
1996: Tourism: a factor of tolerance and peace
1997: Tourism: a leading activity of the twenty-first century for job creation and environmental protection
1998: Public-private sector partnership: the key to tourism development and promotion
1999: Tourism: preserving world heritage for the new millennium (Host: Chile)
2000: Technology and nature: two challenges for tourism at the dawn of the twenty-first century (Host: Germany)
2001: Tourism: a toll for peace and dialogue among civilizations (Host: Iran)
2002: Ecotourism, the key to sustainable development (Host: Costa Rica)
2003: Tourism: a driving force for poverty alleviation, job creation and social harmony (Host: Algeria)
2004: Sport and tourism: two living forces for mutual understanding, culture and the development of societies (Host: Malaysia)
2005: Travel and transport: from the imaginary of Jules Verne to the reality of the 21st century (Host: Qatar)
2006: Tourism Enriches (Host: Portugal)
2007: Tourism opens doors for women (Host: Sri Lanka)
2008: Tourism Responding to the Challenge of Climate Change and global warming (Host: India)
2009: Tourism – Celebrating Diversity (Host: Africa.)

சர்வதேச செவிப்புலனற்றோர் தினம் – புன்னியாமீன்

piercing-the-ears.jpgசெப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி சர்வதேச செவிப்புலனற்றோர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. செவிப்புலனற்றோர் மீது கருணை காட்டுவதன் ஊடாக அவர்களுக்கு வேண்டிய சில நிவாரண ஏற்பாடுகளை செய்வதற்காக வேண்டியும் அவர்கள் மீது நம்பிக்கைகளை உருவாக்குவதற்காக வேண்டியும் இத்தினத்தை நலன் புரி அமைப்புகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

செவி அல்லது காது என்பது ஒலியை உணரக்கூடிய ஒரு புலன் உறுப்பு ஆகும். மனித இனத்தின்  உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாகவே பேச்சு உள்ளது. இந்தப் பேச்சினை செவிமடுப்பதன் ஊடாகவே  கருத்துப் பரிமாற்றம் முழுமையடைகின்றது. எனவே ஒலியை உணரக்கூடிய திறனே கேட்டல் எனப்படுகிறது. செவிப்புலனில் செயல்பாடு குறைதல் அல்லது செவிப்புலனில் செயல்பாடு அற்றுப் போதல் காரணமாகவே கேட்பதில் குறைபாடு ஏற்பட்டு செவிட்டு நிலைமை உருவாகின்றது.

மீன் தொடக்கம் மனிதர் வரை முள்ளந்தண்டுளிகளின் செவிகள் பொதுவான உயிரியல் தன்மையைக் கொண்டுள்ளன. எனினும் வேறு சிற்றினங்களைப் பொறுத்த மட்டில் அமைப்பில் வேறுபாடுகள் உள்ளன. செவி ஒலிகளைப் பெற்று உணர்வது மட்டுமன்றி, உடல் சமநிலை உணர்வு தொடர்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. செவி கேள்வித் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

எம்மால் பிறரது உரையாடலினை கேட்க இயலாது போகும் சந்தர்ப்பத்தில் நாம் அவர்களுக்கான பதிலினை உரிய முறையில் கொடுக்க இயலாது போகின்றது. எமது உணர்வுகளை வெளியிட முடியாத நிலை தோன்றுகின்றது.

எமது அங்கங்களில் ஒன்றான காதின் அமைப்பினை எடுத்து நோக்குவோமாயின் வெளிக்காது, நடுக்காது, உட்காது என்று மூன்று வகையான அமைப்புகள் காணப்படுகின்றன.

இவைகளில் வெளிக்காதில் காதுச் சோணையும், புறச்செவிக் கால்வாயும், காணப்படும். அதில் புறக் காதுச் சோணை வாயிலாக வெளியிலிருந்து ஒலி அலைகளானது எமது புறக்காதின் கால்வாயினை நோக்கிச் செலுத்தப்படும். பெரும்பாலான விலங்குகளில் வெளியில் தெரியும் செவியின் பகுதி கசியிழையங்களினாலான மடல் ஆகும். இது புறச்செவி அல்லது செவிமடல் எனவும் அழைக்கப்படும். புறச்செவி மட்டுமே வெளியில் தெரியும் செவியாக இருப்பினும், இது கேட்டல் என்னும் செயற்பாட்டின் பல படிகளில் முதல் படியோடு மட்டுமே தொடர்புபட்டது. முதுகெலும்புளிகளில் தலையின் இரண்டு பக்கங்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு செவிகள் இருக்கும். இவ்வமைப்பு ஒலி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்கு உதவுகிறது.

நடுக்காதானது செவிப்பறை மென்சவ்வு எனும் மிக மெல்லிய சவ்வு ஒன்றைக் கொண்டுள்ளது. புறச்செவிக் கால்வாயினூடாக வருகின்ற ஒலியினால் இம்மென்சவ்வு அதிர்ந்து உட்காதுக்குள் ஒலியை ஊடுகடத்துகின்றது. உட்காதில் ஊத்தேக்கியோவின் குழாய் எனும் அமைப்பு தொண்டையுடன் தொடர்புள்ளது. இதனால் காதினுள் நிலவும் அமுக்கமும் வெளி வளிமண்டல அமுக்கமும் ஒரேயளவில் பேணப்படுகிறது. எனவே உட்காதானது சமநிலையைப்பேணுவதில் பங்களிப்புச் செய்கின்றது.  உட்காதுக்குள் வரும் ஒலியானது மூளையினை நோக்கி கணத்தாக்கங்கள் ஊடாக கடத்தப்படும். இது ஒலிவாங்கிகளால் தூண்டப்பட்டு தகவல்கள் மூளையத்தினது ஒலி உணர் பிரதேசத்தினை அடைகின்றது. கணத்தாக்கத்தின் காரணமாகவே  நாம் தகவல்களை உணர்கின்றோம். ஒலி (Sound) என்பது பொதுவாக காதுகளால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும். அறிவியல் அடிப்படையில் ஒலி என்பது “அழுத்த மாற்றம், துகள் நகர்வு, அல்லது துகள்களின் திசைவேகம் ஆகியவை ஒரு விரிந்து கொடுக்கக்கூடிய ஊடகத்தில் பயணித்தல்” (Olson 1957) எனும் பல கருத்துகளைத் தருகின்றது.

செவிப்புலனற்றவர்களை நாம் இருவகையானவர்களாக நோக்கலாம் இயற்கையில் தமது பிறப்பின் போது தமது செவிப்புலனை பறிகொடுத்தவர்கள். இவர்களின் நிலைக்கு பலவாறான காரணங்கள் கூறப்படுகின்றன. வைத்தியத் துறையினரின் கண்டு பிடிப்பின் படி ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தின் போது, அவளுக்கு ஏற்படும் அதிர்ச்சியான சம்பவங்களினைக் கேட்டல் அல்லது பார்த்தல், இயற்கை அல்லது செயற்கை அழிவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடல், போஷாக்கான உணவுப்பழக்கமின்மை, பரம்பரை அலகு போன்றவற்றில் ஏற்படுகின்ற தாக்கத்தின் விளைவாக அவர்களது உடலில் சுரக்கும் ஒமோன்கள் வளர்ந்து வருகின்ற நுகத்தை பாதிப்படையச் செய்வதன் காரணத்தினால் இவ்வாறு ஏற்படுவதாக குறிப்பிடுகின்றனர்.

இயற்கையாக தமது பிறப்பின் போதே செவிப்புலனை அற்றவர்களை விடுத்து மற்றுமொரு பகுதியினர் எம்மில் இன்று காணப்படுகின்றனர். அதாவது தமது சிறுவயதில் ஏற்படுகின்ற அனர்த்தம் ஒன்றின் விளைவாக தமது கேட்கும் சக்தியினை இழந்தவர்கள் அல்லது ஒரு விபத்தின் காரணத்தினால் தமது செவிப்பறைகளில் பாதிக்கப் பட்டவர்களே அவர்கள்.

உண்மையில் முதலாவது பகுதியினரை விட இந்த இரண்டாவது பகுதியினர் அதிகளவாக பாதிப்படைவதாக குறிப்பிடப்படுகின்றது அதாவது இயற்கையாக தமது பிறப்பின் போது செவிப்புலனற்றவர்களாக காணப்படுபவர்கள் தமது இயலாமையினை தாங்கிக் கொள்ளும் சக்தி கொண்டவர்களாகவும் மனதளவில் தைரியமிக்கவர்களாகவும் இயற்கையோடு எதிர்த்துப் போராடக்கூடியவர்களாகவும் காணப்படுவர்.

ஆனால் ஏற்பட்ட விபத்தொன்றின் காரணமாக இவ்வாறான நிலைக்குள்ளானவர்கள் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாகவும் தமது பிழையான நடவடிக்கையின்  விளைவாகத்தான் இவ்வாறான சம்பவம் தனக்கு ஏற்பட்டது என்ற மனோநிலையினையும் கொண்டவர்களாக பெரும்பாலும் இருப்பர்.

மேலும் செவிகளின் கேட்புத்திறனில் இழப்பு ஏற்பட காரணங்களாக பின்வருவனவற்றையும் குறிப்பிடலாம். இயற்கை நிலையில் முதிர்வயதாகும் போது செவிகளின் கேட்புத்திறனில் இழப்பு ஏற்படுகின்றது. இவை தவிர சில சந்தர்ப்பங்களில் சத்தம் நிறைந்த வேலை இடங்களில் வேலை செய்பவர்களுக்கும்,   காதுகளில் சுரக்கும் மெழுகுபோன்ற பொருள் அடைப்பதினாலும்,   காதுகளில் ஏற்படும் நீண்ட நாள் நோய்தொற்றுக்களினாலும்,   காது உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோய்களினாலும்,  டிம்பானிக் மெம்பரேன் எனப்படும் காது சவ்வில் ஏற்படும் துவாரம்,  காது மற்றும் காது எலும்புகளில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் காரணமாகவும் செவிகளின் கேட்புத்திறனில் இழப்பு ஏற்படுகின்றது.

இவ்வாறான பாதிப்புகள்  ஏற்படும்போது தோன்றும் சில அறிகுறிகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். சிறு பிள்ளைகளாயின்  சத்தத்திற்கு அசைவோ அல்லது மறு உத்தரவோ அளிக்காதிருத்தல்,  மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளாமலிருத்தல், மற்றவர்கள் பேசும்போது உரக்க பேசுங்கள் என்று கேட்பது போன்றன சிலவாகும்.

இத்தகையோர் பின்வரும் விடயங்களில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக சத்தமுள்ள இடங்களிலிருந்து விலகியிருத்தல்,  காது கேளாமையின் காரணங்களை பரிசோதித்தறிய மருத்துவரை அணுகுதல். மருத்துவரின் ஆலோசனையுடன் காதுகேட்கும் திறனை அதிகரிக்கும் கருவிகளைப் பயன்படுத்துதல்.

நவீன இக்காலத்தில் கையடக்கத் தொலை பேசிப்பாவனை பொதுவாக உலகளாவிய ரீதியில் வெகுவாக அதிகரித்து வருகின்றது. ”கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று அறுதியிட்டு கூற முடியாது. காரணம் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இன்னும் முழுமையடையவில்லை. ஆனால்,  நடந்து கொண்டிருக்கும் ஆய்வுகளை வைத்து,  கையடக்கத் தொலை பேசியினால் சில பிரச்சினைகள் வர வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறார்கள்.

காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரையுள்ள சத்தங்களைத்தான் நம் காதுகள் கேட்க வேண்டும். அதிகபட்சமாக 90 டெசிபல் வரை உள்ள சத்தங்களை கேட்கலாம். ஒரு நாளுக்கு அதிக பட்சம் நான்கு மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. அதுவும் விட்டு விட்டுத்தான் கேட்க வேண்டும். தொடர்ச்சியாக கேட்கக் கூடாது. அப்படி கேட்பதால் காதின் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால்,  கையடக்கத் தொலைபேசி உபயோகிக்கும் போது என்ன நிகழ்கிறது தெரியுமா? சாதாரணமாகவே கையடக்கத் தொலை பேசி வழியாக 90 முதல் 100 டெசிபல் வரையுள்ள சத்தத்தைக் கேட்க வேண்டியுள்ளது. நம் காதுகளால் கேட்கக் கூடிய அதிகபட்ச ஒலி அளவை விட இது அதிகம். அதனால் காதுகளின் கேட்கும் திறன் நாளடைவில் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. கையடக்கத் தொலை பேசியில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினால் அவ்வளவாக பாதிப்பு இருக்காது. ஆனால்,  தொடர்ச்சியாக அரை மணி நேரம்,  ஒரு மணி நேரம் என்று பேசுவதால் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும்.

தவிர, கையடக்கத் தொலை பேசியில் இருந்து வெப்பமும் வெப்ப கதிர்வீச்சும் வெளிப்படுகிறது. நாம் கையடக்கத் தொலைபேசியை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதால், இந்த வெப்பமும் கதிர்வீச்சும் நம் காதுக்கு உள்ளே இருக்கும் மிக நுண்ணிய நரம்புகளை பாதிக்க வாய்ப்புள்ளது. அதேபோல கையடக்கத் தொலை பேசியில்  விட்டு விட்டு சிக்னல் கிடைப்பதால், கதிர்வீச்சின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும். இந்த மாற்றத்தாலும் காது நரம்புகள் பாதிப்பு அடையலாம். எனவே கையடக்கத் தொலை பேசிப்பாவனையாளர்கள் இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.

செவிப்புலனற்றவர்களினால் சில போது பேச இயலாதும் போய் விடுகின்றது. எனவே எமது நடவடிக்கையின் காரணமாக அவர்களை நோகடித்து விடாது அவர்களது உணர்வுகளுக்கும் மதி ப்பளித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு, எம்மில் ஓர் அங்கமாக நாம் அவர்களை கருத வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எமது குடும்ப உறுப்பினர்களில் இவ்வாறானவர்கள் காணப்படுவார்களேயானால் அவர்களை தனிமைப்படுத்தி விடாது.  இவர்களை ஒதுக்கி விடாது எமது விடயத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தோடு இவர்களை கவனிப்பதனையும் ஒரு முக்கியமான விடயமாகக் கருதி செயற்பட வேண்டும்.

இன்றைய விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது பிறவியிலேயே காது கேளாத பலருக்கு சத்திர சிகிச்சையின் ஊடாக கேட்கும் சக்தியினை வழங்கியிருப்பதனை அறிகின்றோம். இவ்வாறான சத்திரசிகிச்சையினை மேற்கொள்வதில் முன்னணி வகிக்கும் நாடாக அமெரிக்கா காணப்படுகின்றது. அதேபோன்று எமது அண்டைய நாடான இந்தியாவிலும் இன்று இதன் வளர்ச்சி காணப்படுகின்றது. ஆனால் இச்சத்திர சிகிச்சை நிபுணர்கள் பலவாறான கஷ்டங்களுக்கு மத்தியில் எதிர் நீச்சல் போட்டுத்தான் இதனை செய்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதாவது இவர்கள் போதியளவான செவிமாற்று உறுப்புகளினை பெறுவதில் சிரமங்கள் காணப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.

ஆனால் எதிர்காலத்தில் இன்று காணப்படுவது போன்ற சிரமங்கள் காணப்படாதிருப்பதற்காக மனிதனது கலத்தினை (Human cells) வைத்து மனித உறுப்புக்களை உருவாக்குவதற் கான முயற்சியில் இன்றைய விஞ்ஞானமானது இறங்கி யிருப்பதாகவும் நாளைய உலகில் அதன் வெற்றியின் விளைவாக இதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்படும் என்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

உலக அமைதி நாள் (International Day of Peace) – புன்னியாமீன்

international_day_of_piece.jpgஉலக அமைதி நாள் (International Day of Peace)  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஐக்கிய நாடுகளின் சபையின் சகல உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தினம் 1981இல் இருந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க் கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டில் இருந்து இத்தினம்  செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது. அமைதி என்பதற்குப் பல பொருட்கள் தமிழில் உள்ளன. குறிப்பாக யுத்தம் பகைமை, வன்முறை என்பவற்றுக்கு எதிர்ச் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்காலப் பயன்பாட்டில் அமைதி என்பது, பகைமை இல்லாத ஒரு நிலையைக் குறிக்கும் ஒரு கருத்துருவாகும். சர்வதேச ரீதியில் இது போர் இல்லாத நிலையையும் குறிக்கும். மகாத்மா காந்தியின் கூற்றுப்படி,  ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் வன்முறைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், சமூகநீதி இன்மை காரணமாக அங்கே அமைதி இருப்பதாகக் கூறமுடியாது. காந்தி, அமைதி குறித்த ஒரு நோக்கைக் கொண்டிருந்தார். நீதி என்பது அமைதிக்கு அடைப்படையானதும் கட்டாயமானதுமான அம்சம் என்று அவர் கருதினார். இதன்படி, அமைதிக்கு வன்முறை இல்லாமை மட்டுமன்றி, நீதி இருக்கவேண்டியதும் அவசியம்.

உலகின் சகல முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானமாகும். வரலாற்றில் பல யுத்தங்கள் நடை பெற்றுள்ளன. 20ஆம் நூற்றாண்டின் இரு பெரும் உலக மகா யுத்தங்கள் கோடிக்கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் பழி கொண்டுள்ளன. 2ஆம் உலக மகா யுத்தத்தின் பின் உலக  சமாதானத்திற்காக 1945 இல் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உலக நாடுகளிடையே பூசல்களையும், போர்களையும் தடுக்க உயரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற போதிலும் கூட துப்பாக்கிகளுக்கும் குண்டுகளுக்கும் ஓய்வு கொடுக்க முடியவில்லை. உலகின் நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் பாரிய பணி யுனெஸ்கோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உலக சமாதான முயற்சியொன்றின் போது ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஹாமர்சீல்ட் விமான விபத்தில் உயிர் துறந்தமை 1961 வரலாற்றுச் சுவடாகும். அவர் உயிர் துறந்த செப்டம்பர் மூன்றாம் வாரத்தின் செவ்வாய்க் கிழமையிலாகும்.

யுனெஸ்கோவின் முகவுரை வாசகம் “மனித உள்ளங்களில் தான் போர் தோன்றுவதனால் மனித உள்ளங்களில் தான் அமைதிக்கான அரண்களும் அமைக்கப் பெறல் வேண்டும்” என்பதாகும். விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் படைகொண்டு அமைதியை ஏற்படுத்த முடியாது. நல்லுணர்வால் தான் அதனைப் பெற முடியும்” என்றார். இந்நோக்கத்தில் யுனெஸ்கோவின் பொறுப்பும் பணியும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். யுனெஸ்கோவின் சட்ட யாப்பின் 1வது உறுப்புரை பின்வருமாறு கூறுகின்றது. உலக மக்களை இனம், பால், மொழி, அல்லது சமய பேதமின்றி ஐ.நா சாசனத்தின் உறுதி செய்யப்படுகின்ற நீதிக்கும் சட்ட ஆட்சிக்கும் மனித உரிமைகளுக்கும், அடிப்படை சுதந்திரங்களுக்கும், உலகளாவிய நன்மதிப்பினை வளர்ப்பதற்கென கல்வி, அறிவியல்,  பண்பாடு மூலமாக நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தி சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் பாடுபடுவதே இந்த அமைப்பின் நோக்கமாகும். அதாவது யுனெஸ்கோவின் பணி, கல்வி, அறிவியல, பண்பாட்டுத் தொடர்களின் வழியாக உலக சமாதானம், மனித இனத்தின் பொது நலன் ஆகிய குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும். ஐ.நா அமையமும்,  ஐ.நா சாசனமும் இக்குறிக்கோள்களின் பேரிலேயே நிறுவப் பெற்றுள்ளது.

மனித உரிமைகளையும்,  கடமைகளையும் செயற்படுத்துவதற்கு இன்றியமையாது தேவைப்படுவது சமாதானமாகும். அதாவது குடிமக்கள் அனைவரும் முதன்மை பெறும் ஒருங்கிணைந்து வாழும் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரமான,  நியாயமான  சட்ட ஆட்சியுடைய சமத்துவம்,  ஒருமைப்பாடு  என்பது தான் சமாதானம் ஆகும். சமாதானம்,  மேம்பாடு, சனநாயகம் போன்ற மூன்றும் ஒன்றுக்கொன்று உருதுணைபுரியும் முக்கோணங்களாகும். அவை ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன.

மிக அண்மையில் வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனை காரணமாக உலகின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கண்டனம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக  அவர், அணு ஆயுத வல்லமை மற்றும் ஏவுகணைத் திறனை மேம்படுத்திக் கொள்ள வடகொரியா மேற்கொள்ளும் முயற்சிகள் ஐ.நா. பாதுகாப்பு பேரவை விதிகளை மீறுவதாகவே உள்ளது. இதனால் சர்வதேச சமூகத்தின் அமைதிக்கும்,  பாதுகாப்புக்கும் வடகொரியா பெரும் அச்சுற்றுத்தலாகவே விளங்குகிறது. சர்வதேச விதிகளை மீறி அணு ஆயுத சோதனை நடத்தியுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி குறுகிய தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணையையும் அந்நாடு இன்று சோதித்துள்ளதாகத் தெரிகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைகள் அனைத்து நாடுகளுக்கும் பலத்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ஒபாமா கூறியுள்ளார்.

ஒபாமா வடகொரியாவை மையமாகக் கொண்டு இக்கருத்தினை வெளியிட்டாலும் கூட உலகில் அணுஆயுதங்களுக்கு ஐக்கிய அமெரிக்க நாடுகள்,  ரஷ்யா (முன்னாள் சோவியத் ஒன்றியம்), சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடிக் கொண்டுள்ளன. உலக அமைதியை வலியுருத்தும் நாடுகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையையே தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் நாடுகள் கூட பாதுகாப்பு என்ற போர்வையில் அணு ஆயுதற்கள் உற்பட ஆயுத பலத்தை பெருக்குகின்றன அன்றி அவற்றை முடிவுக்குக் கொண்டு வருவது காணமுடியாமல் இருப்பதும் விந்தைக்குரிய விடயமே.

கடந்த ஐந்து தசாப்தங்களாக பயங்கரவாதம் என்ற போர்வையிலும் அமைதிக்கான அசசுருத்தல்கள் ஏற்பட்ட வண்ணமே உள்ளன. சமாதானம் கோட்பாடு மட்டுமல்ல, அது செயற்பாடு செயல்பட்டால்தான் சமாதானம் அர்த்தமுள்ளதாகும். அறிஞர் கார்லோஸ் பியூண்டஸ் கூறுவது போல “சமாதானம் என்பது மாறுபாடுகளின் சேர்க்கை. கலாசாரங்களின் இனக்கலப்பு. அது அருவக்கோட்பாடு அல்ல. மாறாக, பண்பாட்டு அரசியல் சமூக,  பொருளாதார சூழல்களில் ஆழ வேரூண்றிய ஒன்றாகும்”.

இன்று தகவல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விரல் நுனியின் சிறு அசைவினால் எண்ணற்ற தகவல்களைப் பெற்று பெருமிதம் அடைகிறோம். ஆனால், இந்த முன்னேற்றம் கோடிக்கணக்கான இளைஞர்களின் உயிர்களைப் பலிகொண்டு அப்பாவி மக்களின் வாழ்வை அழித்தொழிக்கும் போர்களுக்கு மாற்றீடாக அமையவில்லை. போரினதும், சமாதனத்தினதும் சொல்லொனாத் துயரங்களை வீடுவீடாகக் கொண்டு செல்லும் ஒலி,  ஒளி ஊடகங்களால் போரின் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. போர் உணர்வினை சமாதான உணர்வாக மாற்ற முடியுமானால் அது உலகளாவிய கிராமத்தின் (Global Village)  மிக உன்னத சாதனையாக அமையும்.

நோபல் பரிசு வழங்கப்பட்டு வந்த காலம் முதல் சமாதானத்திற்காக பங்களிப்ப வழங்கியோருக்கும் நிறுவனங்களுக்கும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுக் கொண்டே உள்ளன.கடந்த மூன்று தசாப்த காலத்தில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றோர் விபரங்கள் வருமாறு

2008 மார்ட்டி ஆட்டிசாரி (Martti Ahtisaari),
2007 ஆல் கோர் (Al Gore), காலநிலை மாற்றல் பல அரசு சபை (Intergovernmental Panel on Climate Change)
2006 முகமது யூனுஸ் (Muhammad Yunus), கிராமின் வங்கி (Grameen Bank)
2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency), மொகம்மது எல்பரதேய் (Mohamed ElBaradei)
2004 வங்காரி மாதாய் (Wangari Maathai)
2003 ஷிரின் எபாடி (Shirin Ebadi)
2002 ஜிம்மி கார்டர் (Jimmy Carter)
2001 ஐ.நா. (United Nations), கோஃபி அணான் (Kofi Annan)
2000 கிம் டே-ஜுங் (Kim Dae-jung)
1999 எல்லைகளில்லா மருத்திவர்கள் அமைப்பான மெடிசின்ஸ் சாண்ஸ் ஃப்ராண்டியர்ஸ் (Médecins Sans Frontières)
1998 ஜான் ஹ்யூம் (John Hume), டேவிட் ட்ரிம்பில் (David Trimble)
1997 கன்னிவெடிகளை தடைசெய்யக்கோரிய உலகலாவிய பிரச்சாரம் (International Campaign to Ban Landmines, ஜோடி வில்லியம்ஸ் (Jody Williams)
1996 கார்லோஸ் ஃபிலிபெ சிமிணெஸ் பெலோ (Carlos Filipe Ximenes Belo), ஜோஸ் ராமோஸ்-ஹார்தா (José Ramos-Horta)
1995 ஜோஸஃப் ரோட்ப்ளாட் (Joseph Rotblat), அறிவியல் மற்றும் உலக நாடுகள் உறவு பற்றிய பக்வாஷ் கருத்தரங்குகள் (Pugwash Conferences on Science and World Affairs)
1994 யாசர் அராஃபத் (Yasser Arafat), ஷிமோன் பெரேஸ் (Shimon Peres), இட்ஷாக் ரபின் (Yitzhak Rabin)
1993 நெல்சன் மண்டேலா (Nelson Mandela), F.W. டி க்ளார்க் (F.W. de Klerk)
1992 இரிகபெர்டா மென்ஷூ டும் (Rigoberta Menchú Tum)
1991 ஆங் ஸாங் சூ கி (Aung San Suu Kyi)
1990 மிக்கெயில் கார்பஷெவ் (Mikhail Gorbachev)
1989 14வது தளாய் லாமா (The 14th Dalai Lama)
1988 ஐ.நா. அமைதி காக்கும் படை (United Nations Peacekeeping Forces)
1987 ஆஸ்கார் ஏரியேஸ் சான்செஸ் (Óscar Arias Sánchez)
1986 எளீ வெய்செல் (Elie Wiesel)
1985 அணுவாயுத போர் தடுக்கும் பன்னாட்டு மருத்துவக்குழு (International Physicians for the Prevention of Nuclear War)
1984 டெஸ்மாண்ட் டூட்டூ (Desmond Tutu)
1983 இலெய்ச் வலெய்சா (Lech Walesa)
1982 ஆல்வா மிருதால் (Alva Myrdal), அல்ஃபோன்ஸோ கார்சியா ரௌபிள்ஸ் (Alfonso García Robles)
1981 ஐ.நா. அகதிகள் ஆணைய உயரதிகாரி அலுவலகம் (Office of the United Nations High Commissioner for Refugees)
1980 அடோல்ஃபோ பெரீஸ் எஸ்க்யுவெல் (Adolfo Pérez Esquivel)
1979 அன்னை தெரேசா (Mother Teresa)
1978 அன்வர் அல் சதாத் (Anwar al-Sadat), மென்கெம் பெகின் (Menachem Begin)

அண்மையில் வத்திக்கான் வானொலியில் அடுத்த ஆண்டு உலக அமைதி நாள் தின விழாவுக்கு திருத்தந்தை மையக்கருத்தொன்றை வழங்கியிருந்தார். அக் கருத்தின்படி  ‘அமைதியைக் காக்கவேண்டுமென்றால் இயற்கையைப் பாதுகாக்கவேண்டும். இதனடிப்படையிலேயே 2010 ஆம் ஆண்டில் உலக அமைதி தினம் கொண்டாடப்படும்” . இங்கு இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கும், உலக அமைதிக்கும் உள்ள தொடர்பைக் காணுமாறு திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.  சுற்றுப்புறத்தைப் பாதிக்கும் செயல்களும் இயற்கையைப் பயன்படுத்தும் முறையும் வெப்பமாற்றமும் மக்கள் தொகையும் தொடர்புடையவை எனத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் தெரிவித்துள்ளார். இந்த சவால்களை நீதியின் அடிப்படையில், சமூகச் சமத்துவக் கண்ணோட்டத்தோடு மக்களுக்கு நலம் பயக்கும் எனவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார். சுற்றுப்புரத்தைப் பாதுகாப்பது அவசரத்தேவை எனத் திருத்தந்தை கூறுகிறார். அதுவே அமைதிக்கு வழி வகுக்கும் எனத் தெரிவிக்கிறார். இவ்விடத்தில் ஆலோசணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு உயரிய கருத்தாகும்.
 

சர்வதேச ஓசோன் தினம் (International ozone day ) – புன்னியாமீன்

ozone-day-2009.jpgஉலகில் உயிரினங்கள் உயிர்வாழ வான்பரப்பில் ஓசோன் படலம் ஆற்றிவரும் பணி மகத்தானது. எமது கண்ணுக்குப் புலப்படாத அந்த ஓசோன் படலத்திற்கு மானசீகமான  நன்றிகளைத் தெரிவிக்கவும், இன்று எம்மை அறியாமல் எமது நடவடிக்கைகள் காரணமாக ஓசோன் படலத்திற்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை ஏனையவர்களுக்கும் உணரச் செய்யவும், அதே நேரத்தில் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உறுதி செய்யவும் ஆண்டுதோறும் உலக நாடுகள் செப்டம்பர் 16ம் திகதியை ஓசோன் தினமாக நினைவு கூருகின்றன.

1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் திகதி கனடா நாட்டின் தலைநகரில் ஓசோன் படையை அழிக்கும்  இரசாயனங்களுக்கு எதிரான ‘மொன்றியல்” உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதையடுத்து அந்தத் தினமே 1995ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொது சபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூமியை அழித்து  வரும் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஒருமுகப்படுத்தும் தினமாக இதனை அனுசரிக்க உலக நாடுகள் தீர்மானித்தன.

ஓசோன் (Ozone)  என்பது மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்திருக்கும் ஒரு மூலக்கூறாகும். இது வளிமண்டலத்தின் மேல் வாயு நிலையில் காணப்படுகின்றது. இது ஒட்சிசனின் பிறிதொரு மாற்றுரு (allotrope) வாகும். இது ஈரணு ஒட்சிசன் மூலக்கூறு போல் நிலைத்தன்மை இல்லாதது. இலகுவாக சிதைந்து விடும் தன்மை கொண்டது.
1840 இல் சி. எப். ஸ்கோன்பின் (Christian Friedrich Schönbein)  என்பவர் ஓசோனைக் கண்டுபிடித்தார். அது ஒருவகையான மணம் தருவது என்ற அடிப்படையில்  கிரேக்க மொழியில் மணத்தைக் குறிக்கும் (ozein,  “மணத்தல்”) ஓசோன் என்று பெயர் சூட்டினார். ஆனால் மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்த விஞ்ஞானப் பெயரின் பொருள் ஓசோன்  என்பது, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, 1865 இல் ஜாக்ஸ் லூயிஸ் சோரெட் (Jacques-Louis Soret) என்பார் செய்த ஆய்வுக்கு முன்னர் அறியப்படவில்லை. இது பின்னர் சி. எப். ஸ்கோன்பின் அவர்களால் 1867 இல் உறுதி செய்யப்பட்டது. ஒரு இரசாயனப் பொருளின் மாற்றுரு (allootrope)  வாக அறியப்பட்டவற்றுள் ஓசோனே முதலாவதாகும்.

புவிக்கு அருகே காணப்படும் ஓசோன் சூழலில் மாசுத்தன்மை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் மனிதர்கள் உட்பட, விலங்குகள் பலவற்றின் சுவாச செயற்பாட்டிற்கு கேடு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும்..

ஆனால் புவியின் வளிமண்டலத்தின் மேல் மட்டங்களில் உள்ள ஓசோன் வளி, உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுத்து, உலகில் பாயும் அளவைக் குறைக்கின்றது. சூரிய ஒளிக் கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளன. இத்தகைய ஒளிக் கதிர்களை செங்கீழ்க் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். செங்கீழ்க் கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக்கின்றன. இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து (UV) பாதுகாப்பு கவசமாக ஓசோன் படலம் செயற்படுகின்றது.

ஓசோன் படைமண்டலத்தில் உற்பத்தியானாலும் இதன் 90 வீதம் படைமண்டலத்தின் தாழ் பகுதியில் உள்ளது. படை மண்டலத்தின் தாழ்பகுதியில் ஒட்சிசன், உயர் ஆற்றல் வாய்ந்த சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் கதிர்வீசலின் மூலமும் ஓசோன்  உற்பத்தியாகின்றது. இப்பகுதி புவியின் வளிமண்டலத்தின் அதிகளவான பகுதியை (90%) உள்ளடக்கி உள்ளது. இப்பகுதி புவியின் மேற்பரப்பில் இருந்து 10-25 மைல் (15-40 கிமீ) உயரத்தில் அமைந்துள்ளது.

வளிமண்டலத்தில் ஓசோன் அடர்த்தி ‘டாப்சன்” அலகினால் அளவிடப்படுகிறது. ஓசோன் அடர்த்தி கணக்கிட பத்தொன்பது வகையான கருவிகள் உள்ளன. அவற்றில் சில டாப்சன் ஸ்பேக்ட்ரோ போட்டோ மீட்டர், ப்ருவர் ஸ்பேக்ட்ரோ போட்டோ மீட்டர், ஜோடு மீட்டர், பில்டர் ஓசோன் மீட்டர் எம். 83, பில்டர் ஓசோன் மீட்டர் எம். 124, மாஸ்ட், ஒக்ஸ்போர்டு, சர்பேஸ் ஓசோன் பப்ளர், எலக்ட்ரோ கெமிக்கல் செல் சோன்ட் போன்றனவாகும்.

அண்டார்டிகா பனிக் கண்டத்தில் ஓசோன் அளவு பருவநிலைக்கேற்ப சிறிய அளவிலான மாறுதலுடன் சராசரியாக நிலவுகிறது. ஆனால் வசந்த காலத்தில் (ஆகஸ்ட், நவம்பர்) ஓசோன் அளவு சராசரி அளவில் 50 முதல் 60 வீதம் வரை குறைந்து காணப்படுகின்றது. இந்த ஓசோன் குறைவே ‘ஓசோன் துவாரம்” (Ozone hole)  என்று அழைக்கப்படுகிறது. பிரித்தானிய விஞ்ஞானி ஜே. போர்மன் தலைமையிலான ஆய்வுக் குழு அண்டார்டிகாவின் ‘ஹாலேபே” என்ற நிலையத்தில் 1970 ம் வருட மத்தியில் ஓசோன் அளவு குறைந்து காணப்பட்டதை முதன் முதலாகக் கண்டறிந்தது.

துருவப் பிரதேசத்தில் ஓசோன் அடர்த்தி குறைவதற்கு காரணமாக விளங்குவது துருவப் படை மேகங்களாகும். இந்த மேகங்கள் மீது நிகழும் பல்வேறு வகையான இரசாயனச் செயல்பாடுகளின் போது குளோரின் வெளிப்படுகின்றது. இந்த குளோரின் அணு ஓசோனுடன் தாக்கம் புரிந்து குளோரின் ஒட்சைட்டை வெளிப்படுத்துவதால் ஓசோன் செறிவு குறைகின்றது.

அண்டார்டிக் பகுதி ஒசோன் படுகையில் உள்ள ஓட்டை கடந்த 2007 இல் இருந்ததை விட இந்த ஆண்டு பெரிதாகியுள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் 2006 இல் இருந்ததை விட ஓசோன் துவாரத்தின் அளவு குறைவாக உள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து உலக வானிலை ஆய்வு மையம் 2008ம் ஆண்டில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்டார்டிக் பகுதியில் உள்ள ஓசோன் படுகையில் 27 மில்லியன் சதுர கி.மீ. அளவு துவாரம் உள்ளது. இது கடந்த 2007ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 25 மில்லியன் சதுர கி.மீ. ஆகவும் 2000ம் ஆண்டில் 28.3 மில்லியன் ச. கி. மீ. ஆகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓசோன் படையினை கண்டுபிடித்த காலத்தில் இருந்து விஞ்ஞானிகள் அதன் இயற்கை அமைப்பு மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 1974 இல் இரசாயனவியலாளர்கள் சேர்வூட் ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செயற்பாடுகளின் மூலம் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் பொருட்களினால் ஓசோன் படைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்தனர். இதனால் பல்வேறுபட்ட எதிர்விளைவுகள் ஏற்படுவதுடன் அதனை தடுப்பதற்கான சட்டதிட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை ஓசோன் படை தேய்விற்கு காரணமான பொருட்களை வெளியிடாமல் இருப்பதற்கான பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய கடமை மக்களையே சார்ந்துள்ளது. 1995-ம் ஆண்டு ஓசோன் ஆய்விற்காக குரூட்சன் மற்றும் நிகோலஸ் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த அறிஞர்களின் விருப்பமெல்லாம் ‘இந்த பூவுலகை காக்கும் ஓசோன் படலத்தை காக்க உலகத்திலுள்ள அனைவரும் ஒன்றாக கைகோர்க்கவேண்டும்” என்பதுதான்.

ஓசோன் துவாரத்திற்குக் காரணம் ஓசோனை தேய்வடைய செய்யக்கூடிய பொருட்களை வெளியிடுதலே (Ozone Depleting Substances) எனக் கூறப்படுகிறது. இப்பொருட்கள் பிரதானமாக மனித உருவாக்கங்களாகவே உள்ளதுடன் இதற்கு காரணமாக குறிப்பிட்டு காட்டக்கூடிய இயற்கை மூலகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவ் ஊறுவிளைவிக்கும் பொருட்கள் கைத்தொழில் விவசாய நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றது. குறிப்பாக குளோரோ புளோரோ காபன் (CFC, Chloro Floro Carban),  கார்பன் நாற்குளோரைட் (Carban Thetrachlorite), ஐதரோ குளோரோ புளோரோ கார்பன் (HCFC) மற்றும் மெதைல் புரோமைட் (Methil Bromite) போன்றவை பிரதானமாக ஓசோன் தேய்விற்கு காரணமாக அமைகின்றன.

இவ்வூறு விளைவிக்கும் பதார்த்தங்கள் மேல் வளிமண்டலத்தினை அண்மித்தவுடன் அவற்றின் அணுக்களினை பகுதி பகுதியாக பிரித்துவிடுகின்றது. அப்பதார்த்தங்களை உருவாக்கியுள்ள அணுக்கள் அனைத்தும் விடுவிக்கப்படுகின்றன. உதாரணமாக குளோரீன் மற்றும் புரோமின் அணுக்களை குறிப்பிடலாம். இவ்வாறு விடுவிக்கப்பட்ட அணுக்கள் தமக்கு சேதம் விளைவிக்காது பிற பொருட்களை சேதமடைய செய்யும் செயற்பாட்டினூடாக ஓசோன் படை தேய்வினை துரிதப்படுத்துகின்றது. ஒவ்வொரு அணுவும் வளிமண்டலத்தில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்பதாக ஆயிரக்கணக்கான ஓசோன் மூலகங்களை அழிக்கக்கூடிய திறன்வாய்ந்தனவாக காணப்படும்.
ஓசோன் படைத் தேய்வினால் மனித சுகாதாரம் மற்றும் சூழல் மீது பாரிய தாக்கங்கள் ஏற்படுகின்றன.

புற ஊதாக்கதிர்வீசலின் UV அளவு அதிகரிப்பதினால் மனித சுகாதாரம் மற்றும் சூழலுக்கு தீங்கு தரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றது.  பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழலின் சம நிலையிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. பூமியின் சராசரி வெப்பநிலை உயரும் போது பனிப்பிரதேசங்களில் மிகவும் அதிகமான பனி உருகி கடல் மட்டம் உயர்கிறது. கடல்மட்ட உயர்வின் விளைவால் கடலருகே உள்ள பூமியின் பெரும்பான்மையான நிலப்பகுதி நீரால் சூழப்பெற்று உயிரினங்கள் வாழும் நிலப்பகுதி வெகுவாக குறைந்து விடும் அபாயம் பூதாகாரமானதாக தெரிகின்றது. 

ஆய்வுகளின் படி UV கதிர்வீசலுக்கும் தோல் புற்றுநோய்க்கும் இடையில் திடமானதொரு உறவு நிகழ்வதாக கூறப்படுகின்றது. உலக சுகாதாரக் கழகத்தின் கண்டுபிடிப்புகளின் படி ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 30 லட்சம் பேர் தோல் புற்று நோய்க்கு ஆளாவதாகவும், இதில் 20 வீதத்தினர் புற ஊதாக் கதிர்களின் பாதிப்புகளால் விளைந்தவையே என்றும் தெரிவித்துள்ளது. UV கதிர்வீசலினால் கண் நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறானது உயர்ந்த அளவில் காணப்படுகின்றது. UV  தரை மேற்பரப்பை அடைவதுடன் அதனை உட்சுவாசிக்கும் போது நச்சுவாக மாறி சுவாசத்தொகுதி பிரச்சினைகளையும் உருவாக்குகின்றது. உயர் புறஊதாக்கதிர் மட்டமானது சில உயிர் வாழ் நுண்ணுயிர்களின் வாழ்வை பாதிக்கின்றது. உதாரணமாக Cyanobacteria நுண்ணுயிர்களானது பல தாவரங்களின் நைதரசன் நிலைநாட்டுகை செயற்பாட்டில் பிரதான பங்கினை வகிக்கின்றன. தாவரங்கள் UV கதிர்வீசலுக்கு இலகுவில் பாதிப்படைகின்றன.

இதன் காரணமாக பிளான்தன்களும் பாதிப்படைகின்றன. அதேவேளை பிளான்தன்கள் உணவு வலையின் முதல்நிலை உற்பத்தியாக்கிகளின் ஜீவாதாரமானவையாகும். சமுத்திரத்தின் பிளான்தன்களின் அளவு குறைவடைதலானது  (சமுத்திர உயிர் சூழலியல் செயற்பாட்டின் உணவு சங்கிலி முறைமையினுடாக) மீன்களின் அளவு குறைவடைவதற்கு வழிவகுக்கின்றது.

ஓசோன் படை தேய்வினை தடுப்பதும் ஓசோன் படையை பாதுகாப்பதும் பூமியின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை நிலைநாட்டுவதற்கு எடுக்கவேண்டிய முக்கிய விடயமாகும். எனவே ஓசோன் படை தேய்வினை தடுப்பதற்காக பூகோள ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.

குளிர்சாதன பெட்டிகள், குளிரூட்டிகள் போன்றவற்றின் பாவனையானது குளோரோ புளோரோ காபன், ஐதரோ குளோரோ புளோரோ காபன் போன்றவற்றினை வெளியிடுவதுடன் புவியின் நிலையான வாழ்க்கைக்கு பொறுப்பான சூழலுக்கு அபாயத்தினையும் விளைவிக்கின்றது. எனவே இச்சாதனங்களை தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக மாற்றுச் சாதனங்களை கண்டுபிடிக்கவேண்டும். குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் ஆகியவற்றில் குளோரோ புளோரோ கார்பனுக்கு ஈடான சுற்றுச்சூழலை மாசு அடைய செய்யாத வேறு பொருள்களை பயன்படுத்தவேண்டும்.

ஓசோன் படை தேய்வினை நோக்கிய சர்வதேச பிரயத்தனமாக
விஞ்ஞானிகளின் அறிவுறுத்தலின் பின்பு உலகின் அனைத்து சமூகங்களும் இணைந்து 1985 இல் ஓசோன் படையினை பாதுகாப்பதற்காக ‘வியன்னா மகாநாட்டி”னை உருவாக்கின. இச்சான்றுகள் உறுதிப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் அதாவது 1987 இல் ‘மொன்றியல் சாசனம்” ஓசோன் தேய்வுப்பொருட்களை வெளியிடுவதனை தடுப்பது தொடர்பாக ஏற்படுத்தப்பட்டது. CFC, HCFC  மற்றும் ஏனைய தேய்விற்கு பொறுப்பான பொருட்களை வெளியிடாது சூழல்-நட்பான ஓசோனுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாத மாற்றுப்பொருட்களை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.

‘மொன்றியல் சாசனப்” பிரகாரம் ODS  பொருட்களை உற்பத்தி செய்தல் நுகர்தல்  ஆகியவற்றினை கட்டுப்படுத்துதல், ODS  இன் சர்வதேச வர்த்தகத்தினை கட்டுப்படுத்தல், ODS இன் வருடாந்த உற்பத்தி தரவுகளைப் பேணுதல் போன்ற நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டன. அபிவிருத்தியடைந்த நாடுகள் பல்பக்க நிதியுதவியினை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கி மாற்று தொழினுட்பங்களை ODS  வெளியேற்றத்திற்கு பயன்படுத்தக் கோரியதில் சிறந்த பலன்கள் ஏற்பட்டுள்ளன. 192 நாடுகள் இதில் கையெழுத்திட்டு கொள்கை உருவாக்கியுள்ளதுடன் அதற்கான நிதிசம்பந்தமான விடயங்களுக்கு வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 7 அங்கத்தவர்கள் (அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இருந்து) பொறுப்பு வகிக்கக்கூடிய வகையில் இச்சட்டம் உருவாக்கப்பட்டது.

1992 இல் லண்டன் சட்டம் அதிகப்படியாக ஓசோனை சேதப்படுத்தும் பொருட்களை வெளியிடும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் தொடர்பானதாக இருந்தது. 1996 இல் இச்சட்டம் விரைவுபடுத்தப்பட்டது.

ஓசோன் படை தேய்வினை குறைப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அவதானிக்குமிடத்து மானிடகாரணிகள் (Anthropogenic)  மூலம் வெளிவிடப்படும் பொருட்கள் ஓசோனின் உற்பத்தியை விட அழிவை துரிதப்படுத்துவதனால் இயற்கை சமநிலை குலைகின்றது. இந்த குளோபல் வார்மிங். [global warming], ஓசோன் ஓட்டை..[ozone depletion], பசுமை இல்ல விளைவு [green house effect], ஆகிய மூன்றுக்கும் அதிகப்படியான வாகன, தொழிற்சாலை, அணுமின் நிலையம், மின் உற்பத்தி இவைகளால் ஏற்படும் புகையே காரணமெனப்படுகிறது. மொன்றியல் சாசனத்தின் மூலம் ஓசோனின் மீள் உற்பத்தி நடவடிக்கையினை ஊக்குவிக்கும் தொழிற்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன. ODS இரசாயனங்களை கட்டுப்படுத்தும் 296 திட்டங்களுக்கு நிதி உதவிகளும் அளிக்கப்படுகின்றன. கைத்தொழில் குழுக்கள்  (CFC மற்றும் ODS பாவனையாளர்கள்) சூழல்-நட்பு முறையிலான பாதுகாக்கப்பட்ட மாற்று முறைமைகளை கையாள முனைந்து வருகின்றன. தொழில்நுட்பத்தினூடாக மாற்று திட்டங்களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் அமுல்படுத்துவதனை ஊக்குவித்து வருகின்றன .மொன்றியல் சாசனமானது வழக்கத்தை மாற்றி புதுமையை புகுத்தும் விடயங்களையும் தொழில்நுட்பத்தினூடாக அவற்றின் வியாபித்தலினையும் சட்ட ரீதியான மற்றும் நிறுவனரீதியான தடைகளை அகற்றுதலையும் செய்து வருகின்றது.

உலகரீதியாக நகரும் குளிரூட்டிகள்  (Mobile Airconditioner) சூழல்-நட்பு தொடர்பான நுட்பங்களுக்கு மாற்றப்பட்டு ஓசோன் படையினை பாதுகாப்பதுடன் அதேவேளை ODS,  பொருட்களினால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களும் குறைக்கப்படுகின்றது. (ODS, Ozone Depliting Substances) 1970 காலகட்டங்களில் காணப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஓசோன் முறைமையினை மொன்றியல் சாசனம் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக இன்னும் 5-6 தசாப்தங்களில் எதிர்பார்க்கலாம் என வளிமண்டல கணினி மாதிரிகள் காட்டிநிற்கின்றன. அதாவது ஓசோன் படுகையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தினால், வரும் 2075ஆம் ஆண்டில் முற்றிலும் சீரடைந்த ஓசோன் படுகையை (அதாவது 1980ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போன்ற சூழலை) ஏற்படுத்த முடியும் என உலக வானிலை ஆய்வு மைய மூத்த விஞ்ஞானி கெய்ர் பிராத்தென் கூறியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0916-international-ozone-day1.html