புன்னியாமீன் பி எம்

புன்னியாமீன் பி எம்

சர்வதேச மக்களாட்சி நாள் (International Day of Democracy) – புன்னியாமீன்

international-day-of-democracy.jpgசர்வதேச மக்களாட்சி நாள் ஆண்டு தோறும் செப்டெம்பர் 15 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8,  2007 இல் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டப் பிரகடனப்படியே   அனைத்துலக மக்களாட்சி நாள் கொண்டாடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.  ஐக்கிய நாடுகள் சபையின்  இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

உலகளாவிய ரீதியில் எந்தவொரு தனிமனிதனும் தனது சொந்த அரசியல்,  பொருளாதாரம்,  சமூக மற்றும் கலாசார நடவடிக்கைகளை தனது வாழ்நாளில் அனுபவிக்கும் உரிமை கொண்டவன் ஆவான் என  பொதுச்சபைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய உலகிலுள்ள அனைத்து நாடுகளினதும் பிரதிநிதிகள்,  ஐ.நா.வின் சகல அமைப்புகள்,  அரச அமைப்புகள்,  அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் அனைத்தும் இத்தினத்தைக் கொண்டாட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கேட்டுள்ளது.

உலகில் காணப்படும் அரசியல் முறைக் கோட்பாடுகளுள் ஜனநாயகக் கோட்பாடும் ஒன்றாகும். பொதுவாக ஜனநாயகம் என்பது மக்களாட்சியைக் குறிக்கும். மக்களாட்சியை ஆங்கிலத்தில் டெமாக்ரசி  (Democracy)  என்பர். டெமாக்ரசி என்ற சொல் டெமோஸ் (Demos) கிராட்டோஸ் (Kratos)  என்ற இரண்டு சொற்களிலிருந்து தோன்றியது. டெமோஸ் என்பதற்கு மக்கள் என்றும் கிராட்டோஸ் என்பதற்கு அதிகாரம் அல்லது ஆட்சி என்றும் பொருள் கொள்ளப்படும்

“மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்” என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோ வரைவிலக்கணப்படுத்தினார் அரிஸ்டாட்டில் மக்களாட்சி ஏழ்மை நிலையிலுள்ளோர் தங்களுக்காக நடத்தும் ஆட்சி என்று கூறினார். ‘மக்களால்  மக்களுக்காக மக்களால் புரியப்படும் ஆட்சி முறையே மக்களாட்சி ஆகும். அதாவது மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே மக்களாட்சி அரசாகும். எனவே மக்களாட்சி அரசில் மக்களுக்காகவே ஆட்சி மேற்கொள்ளப்படும்.” என்று முன்னாள் அமெரிக்க குடியரசின் ஜனாதிபதி  ஆபிரகாம் லிங்கன் தெளிவு படுத்தினார்.மேலும் அரசியல் அறிஞர் ராபர்ட்டால் அவர்களின் கருத்துப்படி ‘சாதாரண மனிதர்களும் அரசியல் தலைவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரத்தைப் பெற்றுள்ள ஆட்சி முறை ஜனநாயகமாகும்” என்றார்.

தற்போது உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் இந்த  ஆட்சி முறையே நடைமுறையில் உள்ளது. பொதுவாக ஒரு நாட்டின் மக்கள்,  தங்களின் கருத்துக்களைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து,  தங்கள் பிரதிநிதிளைத் தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தனிக்கட்சியாகவோ அல்லது ஏனைய கட்சிகளுடன்  கூட்டணியாகவோ ஆட்சி செய்வர். எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காகவே ஆட்சி செய்ய வேண்டும். மக்களின் தேவை அறிந்து மக்களுக்கு சேவையற்ற வேண்டும். ஆகவே இங்கு மக்கள்பிரதிநிதி என்பவர் மக்கள் சேவகரே. கோட்பாட்டு ரீதியாக விளக்கம் அழகாக காணப்பட்டாலும் கூட ஆட்சிக்கு வரும் வரை மக்கள் சேவகர்களாக காட்டிக் கொள்ளும் இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மாறி விடுவது பொதுவாக ஜனநாயக நாடுகளில் காணக்கூடிய நடைமுறை நிலைப்படாகும்.

ஜனநாயகத்தின்  அளவைத் தீர்மானிப்பது  ‘ஜனநாயக சுட்டெண்” ஆகும். ஜனவரி 2007 இல் ‘தி எக்கொனொமிஸ்ட்” இதழ் வெளியிட்ட மதிப்பீடுகளின் படி மொத்தமான 10 புள்ளிகளில் 9.5 புள்ளிகளும் புள்ளிகளுக்கு மேலும் பெற்றுள்ள நாடுகள் சிறந்த ஜனாநாயக நாடுகளாக இனங்காட்டப்படுகிறன. மேற்படி புள்ளி விபரத்தின் அடிப்படையில் சுவீடன் 9.88 புள்ளிகளுடன் அதி கூடிய மக்களாட்சிப் பண்பு  கொண்ட நாடாக குறிப்பிடப்பட்டிருந்தது. வட கொரியா 1.03 புள்ளிகளுடன் மிகக் குறைந்த மக்களாட்சிச் சுட்டெண் உடைய நாடாகும்.

உலகத்தில் பல பகுதிகளிலும் உள்ள அரசியல் கோட்பாடுகளில் மக்களாட்சி என்பது ஒரு சிறந்த ஆட்சிமுறை என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஜனநாயகம் எனும் மக்களாட்சி முறை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் உலகில் தோன்றி மறைந்து,  அதன் பின் 2000 ஆண்டுகள் கழித்து மறுபடியும் உருவாகி 20 ஆம் நூற்றாண்டில் பலமான ஓர் ஆட்சிமுறையாக உலகெங்கிலும் உருவானது. இதனை மேலும் தெளிவு படுத்துவதாயின் பழங்கால கிரேக்க ரோமானிய அரசுகளில் மக்களாட்சி கொள்கை பின்பற்றப்பட்டது. இடைக்காலத்தில் மக்களாட்சி முறையில் சில இடர்பாடுகள் ஏற்பட்டன. ஆனால் அமெரிக்க சுதந்திரப்போர்,  பிரான்சியப் புரட்சி, ரஷ்யப் புரட்சி போன்றவற்றால் மன்னராட்சிக்கு மாற்றாக மக்களாட்சி என்ற புரட்சிக் கருத்திற்கு செயல்வடிவம் கொடுத்தன. அதனடிப்படையில் மக்களாட்சி முறை பல நாடுகளில் ஏற்பட்டது.

மக்களாட்சி முறையில் நேரடி மக்களாட்சி,  மறைமுக மக்களாட்சி என இருவகைகள் உள்ளன. நேரடி மக்களாட்சியில் அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் நேரிடையாக பங்கேற்கின்றனர். அரசாங்கத்தில் தீர்மானங்களை உருவாக்கும் வகையில் மக்கள் நேரிடையாக தொடர்பு கொண்டிருந்தனர். பழங்கால கிரேக்க ரோமானிய நாடுகளில் இம்முறையான மக்களாட்சி நடைபெற்றது. இம்முறையான மக்களாட்சி இடைக்காலத்தில் இத்தாலிய அரசுகளிடையே புதுப்பிக்கப்பட்டது. பழங்கால இந்தியாவில் நேரடி மக்களாட்சிக் கருத்துப்படி கிராம பஞ்சாயத்து முறை செயல்பட்டு வந்தது.

20ம் நூற்றாண்டில் பெரிய நாடுகளில் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு காரணம்,  மக்கள் தொகைப் பெருக்கமே ஆகும். எனவே மறைமுக மக்களாட்சி முறையில் மக்கள் அவர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி அமைத்து அரசாங்கத்தை நடத்துகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். உலகின் பல நாடுகளில் இம்முறையே பின்பற்றப்படுகிறது.
 
ஜனநாயக ஆட்சி முக்கிய இரண்டு அம்சங்கள் காணப்படுகின்றன. அவை சமத்துவம்,  சுதந்திரம் என்பனவாகும்.

இங்கு சமத்துவம் எனும் போது இது விரிவான விளக்கப்பரப்பைக் கொண்ட போதிலும் கூட சுருக்கமாக ‘உரிமைகளைப் பொருத்தமட்டில் எல்லோரும் சமம்” என்பதையே எடுத்தக்காட்டுகின்றது. அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சகலரும் சம உரிமைகளுடன் படைக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒப்புக் கொள்கிறோம்”, 1789ல் பிரான்சின் உரிமைப்பிரகடனம் பின்வருமாறு கூறுகின்றது. ‘மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை சம உரிமைகளை உடையவர்கள்.,  இவற்றின் கருத்து குடிகள் என்ற ஒவ்வொருவருக்கும் எல்லோருடைய உரிமைகளும் சமமாகும்” என்பதாகும். குடியாட்சி வெற்றி பெற வேண்டுமாயின் மக்களுடைய சமத்துவம் நிலவ வேண்டியது அவசியமாகும்.

“எல்லா மக்களுக்கும் அரசில் பதவி வகிக்கவும்,  பொது சட்டதிட்டங்களை உருவாக்கவும் உரிமை உண்டு எனும் விதி மேலெழுந்தவாரியாக நோக்கும்போது சிறப்பாகத் தெரிகிறது. கல்வியறிவு இல்லாதவர்கள் நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை எனவும்,  இதுமாதிரியான மக்களை டெமஃகாக் என அழைக்கப்படும் மேடைப் பேச்சு வல்லுநர்களான தலைவர்கள் தவறான விளக்கங்களை அளித்து கெட்ட பாதைக்கு இட்டுச்சென்று அவர்களது ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்து விடுவார்கள் என்றும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே அரசியல் ஞானிகளான பிளாட்டோவும் அவரது ஆசான் சோக்ரட்டீசும் சொல்லி இருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. நடப்பு அரசியலை 25 நூற்றாண்டுகளுக்கு முன்பே கணித்திருக்கிறார்கள் என்பது தான் அதிசயம்.
 
ஜனநாயக ஆட்சி முறையில் மக்களுக்கு சுதந்திரம் இருத்தல் மற்றைய பிரதான பண்பாகும். எவ்வாறாயினும் ஒருவரது சுதந்திரத்தால் இன்னொருவர் சுதந்திரம் பாதிப்படையதல் கூடாது. சுதந்திரத்தைப் பிரதானமாக பின்வருமாறு வகைப்படுத்தலாம். அரசியல் சுதந்திரம்,  பொருளாதார சுதந்திரம்,  சமய சுதந்திரம்

அரசியல் சுதந்திரம் எனும் போது புராதன கிரேக்க ஆட்சிகளைப் போல இன்று நேரடியான மக்களாட்சி முறையைக் காணமுடியாது. எனவே இன்று காலத்திற்குக் காலம் நடைபெறும் தேர்தல்கள் மூலம் தமது சார்பில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து தமக்கு விருப்பமான அரசாங்கத்தை அமைத்துக் கொள்வதற்கு மக்கள் உரிமை பெற்றுள்ளனர். இது மக்களாட்சி முறையின் மிகவும் சிறப்பானதொரு விடயமாகும். எனவேதான் மக்களாட்சியில் அரசியல் சுதந்திரம் முக்கிய இடத்தை விக்கின்றது.

இத்தேர்தல்களில் தமது பிரதிநிதிகளைச் சர்வசன வாக்குரிமை மூலம் தெரிவு செய்து கொள்வதற்குப் பொதுமக்களுக்கு உரிமையுண்டு. தேர்தல் காலங்களில் துண்டுப்பிரசுரங்களை வெளியிடவும்,  கருத்துக்களைக் கூறவும்,  அரசியல் கூட்டங்களை நடத்தவும் சுதந்திரம் காணப்படும். தேர்தலின்போது அரசியல் கட்சிகள் முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கேற்ப (தாம் பதவிக்கு வந்தால் தமது ஆட்சியின்போது எம்முறைகளைப் பின்பற்றுவோம் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த முன்வைக்கும் திட்டம் தேர்தல் விஞ்ஞாபனமாகும்) மக்கள் தாம் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கும் சுதந்திரம் காணப்படல் வேண்டும்.

ஜனநாயகம் எனப்படுவது பெரும்பான்மைக் கருத்தின்படி செயற்படும் ஓர் ஆட்சி முறையாகும். சர்வசன வாக்குரிமைப்படி பெரும்பான்மை மக்களின் விருப்பத்தைப் பெற்ற கட்சி அரசாங்கக் கட்சியாகும். அரசாங்கக் கட்சி பெற்ற விருப்பத்தைவிடக் குறைவான விருப்பத்தைப் பெற்ற கட்சி அல்லது கட்சிகள் எதிர்க்கட்சிகள் எனப்படும். அரசாங்கக் கட்சியும் எதிர்க்கட்சியும் மாறான கருத்துக்களை சகிக்கும் பண்பு அக்கருத்துக்கள் பற்றிச் சிந்தித்தல் ஆகியன ஜனநாயக நாட்டுக்கு முக்கிய பண்புகளாகும்.

அரசாங்கக் கட்சி எதிர்க்கட்சியின் கருத்துக்களைச் செவிமடுப்பதைப் போலவே எதிர்க்கட்சியும் பயனுறுதி வாய்ந்த கருத்துக்களையே முன் வைக்க வேண்டும். அரசாங்கக் கட்சியின் சகல திட்டங்களையும் எதிர்ப்பதுதான் எதிர்க்கட்சியின் கடமையாக இருத்தல் கூடாது. மக்களாட்சியில் தீர்மானங்கள் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றனவாயின் மற்றவர்களுடைய கருத்துக்கள்,  அபிப்பிராயங்கள் முதலியவற்றைச் செவிமடுத்துக் கவனித்துச் செயற்படுதல் அரசாங்கக் கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் கடப்பாடாகும்.

பொருளாதாரச் சுதந்திரம் எனும் போது நாட்டின் சட்டங்களுக்கு அமையவும், மற்றவர்களின் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையிலும் தாம் விரும்பிய எந்தவொரு தொழிலைச் செய்யவும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் எவருக்கும் சுதந்திரம் உண்டு. உழைப்புக்கேற்ற ஊதியம் தொழிற் பாதுகாப்பு என்பனவும் இங்கு வழங்கப்படல் வேண்டும். தனிப்பட்ட சொத்துக்களையும் பணத்தைச் சேமிக்கவும் குடியாட்சியில் மக்களுக்கு சுதந்திரமுண்டு. (ஆனால்,  இவை ஏனையவர்களின் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையில் இருத்தல் வேண்டும்) சமய சுதந்திரம் எனும் போது விரும்பிய சமயத்தைப் பின்பற்றவும் பிரசாரம் செய்யவும் போதிக்கவும் குடிகளுக்கு சுதந்திரம் உண்டு.

மேற்குறித்த விடயங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் உறுதிப்படுத்தப் பட்டிருத்தல் வேண்டும். ஆனால் நவீன யுகத்தில் பெரும்பாலான நாடுகளில் இவை எழுத்தளவிலும் மேடைப் பேச்சளவிலும் மாத்திரமே உறுதிப்படுத்தப் பட்டிருப்பதை அவதானிக்கின்றோம்.குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் இப்போக்கினை சிறப்பாக அவதானிக்கலாம். இந்த நிலையே ஜனநாயகத்திற்கு எதிரான குறைபாடாகவும் சுட்டிக் காட்டப்படகின்றது.

ஜனநாயகம் வெற்றிகரமாகச் செயற்படுவதற்கு தேவையான நிலைமைகளாகப் பின்வருவனவற்றை அவதானிக்கலாம். மக்களிடையே மிக உயர்ந்த அளவில் நேர்மையும் பரஸ்பர மரியாதையும் இருத்தல் வேண்டும். மக்கள் தங்களுக்காக மட்டுமல்ல மற்றவர்களுக்காகவும் நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவராகக் கருத்தப்படல் வேண்டும். பெரும்பாலானோரின் கருத்துக்களை ஏற்பதோடு சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும் வேண்டும்.

மக்கள் முழுச் சமுதாயத்தினதும் நலனில் அக்கறை காட்டுதல் வேண்டும். உறுதியானதும் ஆற்றலுடையதுமான பொதுசன அபிப்பிராயம் நிலவுதல் வேண்டும். பூரண அரசியல் சுதந்திரம்  இருத்தல் வேண்டும்

வளர்ச்சியடைந்ததொரு பொருளாதாரம் ஜனநாயகத்தின் செயற்பாட்டுக்கு அவசியமான மற்றுமொரு அம்சமாகும். நாட்டு மக்களுக்கிடையே ஒற்றுமை நிலவுதல் அவசியம்,  சிறப்பான தலைமைத்துவம் அமைதல் வேண்டும். ஒப்பீட்டு அளவில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஜனநாயம் சிறப்பாக இருப்பதற்கு மேற்குறிப்பிட்ட காரணிகளும் ஏதுவாக அமையலாம்.

அதே நேரம் ஜனநாயகம் தோல்வியடைவதற்கான காரணங்களாகப் பின்வருவனவற்றை கோட்பாட்டு ரீதியாக குறிப்பிடலாம்.

பாரம்பரிய அரசியற் சட்ட அமைப்பினுள் பயன்தரும் அரசியற் தலைமை உருவாகும் ஆற்றலின்மை,  பலவீனமுள்ள நிர்வாக அதிகாரிகளுக்கெதிரான எதிர்ச் செயல்கள்,  கடுமையான பொருளாதார இடர்பாடுகள் – உதாரணம் (வேலையில்லாப் பிரச்சினை,  அடிப்படை விடயங்களில் உடன்பாடின்மை, பொது விவகாரங்களில் மக்கள் அக்கறை காட்டாதிருத்தல்,  ஜனநாயகத்திற்கு அவசியமான நன்கு வளர்ச்சியடைந்த பாரம்பரியங்கள் இல்லாதிருத்தல் முக்களிடையே ஒழுக்கக்கேடும்,  பயனற்ற தன்மை பற்றிய உணர்ச்சியும் நம்பிக்கை இழந்த நிலையும் காணப்படுதல் போன்ற காரணிகளை இனங்காட்டலாம்.பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் ஜனநாயகம் விமர்சனங்களுக்கு உற்பட மேற்குறிப்பிட்ட காரணிகளும் ஏதுவாகின்றன.

எவ்வாறாயினும் ஜனநாயம் என்பது கோட்பாட்டு ரீதியில் மிகவும் உயர்வானது. ஆனால் நடைமுறையில் ஆட்சியாளர்களின் அடாவடித்தனங்களாலும் மக்களின் அறிவீனம் காரணமாகவும் அது விமர்சனங்களுக்கு உற்படுவதை தவிர்க்க முடியாது உள்ளது. உலகளாவிய ரீதியில் 2009 ஆம் ஆண்டு கொண்டாடப்படுவது இரண்டாவது ‘சர்வதேச மக்களாட்சி நாள்” இத்தினத்தில் ஜனநாயக கோட்பாடுகள் பற்றிய எண்ணக்கருக்களை மக்கள் மத்தியில் தீவிரமாக விதைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

சர்வதேச எழுத்தறிவு தினம் – International Literacy Day – புன்னியாமீன்

international-literacy-day.jpgசர்வதேச எழுத்தறிவு தினம்   International Literacy Day ஆண்டு தோறும் செப்டம்பர் 8ம் திகதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், எழுத்தறிவைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போன வளர்ந்தோருக்கு முறைசாராக் கல்வித் திட்டத்தின் மூலம் எழுத்தறிவைப் போதிக்கும் நோக்கத்துடனும் ஆண்டுதோறும் எழுத்தறிவு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி தெஹ்ரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம் மகாநாட்டில் உலகளாவிய ரீதியில் எழுத்தறிவின்மையால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமுகமாக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதியை  சர்வதேச எழுத்தறிவு நாளாக அனுசரிக்க வேண்டும் என்பது முக்கியத் தீர்மானங்களில் ஒன்றாகும்.

இதனடிப்படையில் 1965 நவம்பர் 17, திகதி யுனெஸ்கோ நிறுவனம் கூடியபோது  செப்டம்பர் 8ஆம் திகதியை  சர்வதேச எழுத்தறிவு தினமாகப் பிரகடனம் செய்தது. இத்தினம் 1966ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுக்கிறது. தனி மனிதர்களுக்கும் பல்வேறு வகுப்பினருக்கும் சமுதாயங்களுக்கும் எழுத்தறிவு எவ்வளவு முதமையானது என்பதை எடுத்துரைப்பதே இந்த நாளின் குறிக்கோள் ஆகும்.

எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது. பொதுவாக எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும். இன்று எழுத்தறிவு பல்வகைப்பட்ட தொடர்பாடல் முறைகளைப் பின்பற்றி ஒரு எழுத்தறிவுள்ள சமூகத்துடன் இணையாக பங்களிக்க கூடிய ஆற்றலைக் குறிக்கின்றது. இதில் கணித்தலும், கணினி பயன்பாடும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் எழுத்தறிவைப் பின்வருமாறு வரையறை செய்கின்றது: “எழுத்தறிவு என்பது, பல்வேறு சூழ்நிலைகளுடன் தொடர்புடைய அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்டவற்றைப் பயன்படுத்தி அடையாளம் காண்பதற்கும், புரிந்து கொள்வதற்கும், விளக்குவதற்கும், ஆக்குவதற்கும், தொடர்பு கொள்வதற்கும், கணிப்பதற்குமான திறனைக் குறிக்கும். எழுத்தறிவு,  ஒரு தனியாளுக்கு தன்னுடைய இலக்கை அடைவதற்கும், தனது அறிவையும், தகுதியையும் வளர்ப்பதற்கும், பரந்த சமுதாயத்தில் முழுமையாகப் பங்குபற்றுவதற்குமான ஆற்றலைப் பெறுவதற்குரிய தொடர்ச்சியான கல்வியைப் பெறுவதோடு தொடர்புடையது. “தற்காலத்தில் எழுத்தறிவுப் பிரச்சினை என்பது கல்வியால் தீர்க்கப்படவேண்டிய சமூகப் பிரச்சினையாக நோக்கப்படுகின்றது.

உலகில் சுமார் 776 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வயது வந்தவர்களில் 5 பேரில் ஒருவருக்கு எழுதப்படிக்கத்தெரியாது. இவர்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள்.படிப்பை பாதியில் நிறுத்திவிட்டவர்கள், அரைகுறையாக பள்ளிகள் செல்பவர்கள் ஏராளம். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
உலகமயமாக்கத்தில் விழிப்புடன் செயற்பட்டு வரும் காலத்தில் எழுத்தறிவின்மை என்பது வெட்கப்படக்கூடிய  விளைவு தான் என்றால் பிழையாகாது. அதி நவீன தொழில்நுட்ப திறனும் கணிணிப்பயன்பாடும் இன்றைய உலகை ஆக்கிரமித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் எந்தவொரு நாடும் தனது மக்கள் எழுத்தறிவில் பின்தள்ளப்பட்டுள்ளனர் என்று கூற வெட்கப்பட்டே ஆக வேண்டும்.

இவ்வாறாக எழுத்தறிவைப் பெற்றுக் கொள்ள முடியாமைக்கான காரணங்களாக உள்ள சமூக நிலைகள் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.வறுமை, போஷாக்கின்மை,  அரசியல் நெருக்கடிகள்,  கலாசார பாகுபாடு,  அடிமைப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் எழுத்தறிவின்மை உலக நாடுகளில் இன்றும் காணப்படுகின்றது என்பதை ஏற்றாக வேண்டியுள்ளகல்வியறிவு அல்லது எழுத்தறிவின் முக்கியத்துவம் தான் என்ன? தேசிய ரீதியிலும், சர்வதேசரீதியாக இது தொடர்பான செயற்றிட்டங்கள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன? இவற்றை கொண்டு செல்வது யார் என்ற வினாக்களுக்கு நாம் விடை காணவேண்டியதாக உள்ளோம்.

எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட ஒரு அம்சம். தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனித வள அபிவிருத்தி மற்றும் கல்வி செயற்பாடுகள் அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. எழுத்தறிவின்மை எனும் போது எந்த ஒரு மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமல் இருத்தலாகும் என ஐக்கிய நாடுகள் சபை எழுத்தறிவின்மையை தனது சாசனத்தில் வரையறை செய்துள்ளது.

எழுத்தறிவின் பயனை அறிந்த பெற்றோர் தான் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். எழுத்தறிவு பெற்றோர் கல்வி வாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொள்கின்றனர், மேலும் ஒரு கல்வி கற்ற சமுதாயமானது அபிவிருத்தி இலக்குகளை இனங்கண்டு சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது. ஆனால் உலகில் இன்று பல நாடுகள் பல பிரச்சினைகள் காரணமாக எழுத்தறிவை பெறமுடியாதுள்ளனர்.

வறுமையை ஒழித்தல்,  சிறுவர் இறப்பு வீதத்தை குறைத்தல்,  சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தல்,  பால் சமத்துவத்தை கட்டியெழுப்பல்,  முறையான அபிவிருத்தியை உறுதி செய்தல் சமாதானம் மற்றும் ஜனநாயகம் போன்ற பல விடயங்களின் அபிவிருத்தியையும் எழுத்தறிவு அபிவிருத்தியுடன் இணைத்து நோக்க வேண்டியுள்ளது. எழுத்தறிவு என்பது கல்விக்கு எந்தளவில் முக்கியமான ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது என்பதற்கு பல நல்ல வழுவான உதாரணங்களைக்கூறலாம். ஒரு சிறந்த அடிப்படை கல்வியானது மக்களுக்கு வாழ்க்கைக்கு எந்தளவிற்கு முக்கியமோ அதேயளவிற்கு ஏனைய பிற தேவைகளுக்கும் காரணகர்த்தாவாக இருக்கின்றன.

யுனெஸ்கோவின் “அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)” அறிக்கையின்படி தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6 %) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆபிரிக்கா (59.7 %), அரபு நாடுகள் (62.7 %). எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

2009 சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான்-கி-மூன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், எழுதுவதும், படிப்பதும் மட்டுமே எழுத்தறிவு பெற்றதாக ஆகிவிடாது. வாய்ப்புகளைக் கண்டறிவதுடன், வளர்ச்சியை மையமாகக் கொண்டதாகவும் அந்தக் கல்வியறிவு இருக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் அனைத்தும் சர்வதேச அளவில் அனைவரும் எழுத்தறிவு பெறுவதை இலக்காகக் கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம். இதற்கு உறுதுணையாக தேவையான உதவிகளை அளிப்பதோடு உண்மையான வளர்ச்சிக்குத் தேவையான வளங்களை உருவாக்க வேண்டும்.
உலகில் மிகுந்த அளவில் வளம் உள்ளது. இந்த உலகில் வாழ கல்வியும், அறிவும்தான் பாஸ்போர்ட் போன்றவை.

ஆனால் உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 77.60 கோடி பேர், பெரும்பாலான பெண்கள் அடிப்படை வசதிகளின்றி, எழுத்தறிவு இல்லாதவர்களாக வாழ்கின்றனர். அத்துடன் 7.5 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயமாகும். பாதியிலேயே பள்ளிக் கல்வியை கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது.

குறைந்தபட்ச கல்வி மூலம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை பிரபல கல்வியாளர் டாக்டர் லாலகே குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றை அனைவரும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதை மனதில் கொண்டு இந்த ஆண்டு கல்வியறிவு இயக்கத்தை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்று பான்-கி-மூன் வலியுறுத்தியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின்  2000ம் ஆண்டுக்கான மனித அபிவிருத்தி அறிக்கையில் உலகில் 90 மில்லியன் குழந்தைகளுக்கு எந்தவிதமான கல்வியும் ஆரம்பக் கல்வியும் மறுக்கப்பட்டுள்ளது. 232 மில்லியன் குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் இரண்டாம் நிலைக் கல்வியைக்கூட பெறமுடியாத நிலை உள்ளது.

கிழக்கு ஐரோப்பாவிலும், முன்னைய சோவியத் யூனியன் நாடுகளிலும் பாடசாலைக் கல்வி 1989ல் இருந்ததை விட வீழ்ச்சி கண்டுள்ளது. எழுத்தறிவின்மை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்தியாவில் ஆரம்ப கல்வி வழங்கப்பட்டாலும், 1996ம் ஆண்டு வட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 60 வீதமான பாடசாலைகள் ஒழுகும் கூரைகளைக் கொண்டுள்ளன. 89 வீதமான பாடசாலைகளில் மலசலகூட வசதி இல்லை 59 வீதமான பாடசாலைகளில் குடிநீர் இல்லை.
1991ல் இந்தியாவில் 7 வயதிற்கு கூடிய மக்களில் 52 சதவீதமானவர்களுக்கு எழுத்தறிவு இருந்தது.

இதில் இந்திய பிராந்திய அரசுகளில் கிராமிய பெண்களில் 16 சதவீதமானவர்களுக்கு எழுத்தறிவு உள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகின்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் இது 4 சதவீதமாகும். உலக ரீதியாக 100 கோடிக்கு அதிகமானோர் எழுத்தறிவு இல்லாதவர்களாகும். கல்வியறிவுக் குறைபாட்டாலும் பரந்த எழுத்தறிவின்மையாலும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் 250 மில்லியன் சிறுவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 140 மில்லியன் சிறுவர்களும் 110 மில்லியன் சிறுமியர்களாகும். 18 வயதிற்கு குறைந்த 1.2 மில்லியன் பெண்களும் சிறுமியர்களும் வருடாந்தம் விபச்சாரத்தில் ஈடுபடத் தள்ளப்படுகின்றனர் என்றும் கூறப்பட்டிருந்தது.

உலக நாடுகளின் எழுத்தறிவு விகிதங்கள்

1998 ஆம் ஆண்டு ஐ.நாவின் கணிப்பீட்டின் படி உலக சனத்தொகையில் 20வீதமானோர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தனர்.இந்தத்தொகையினர் எந்த மொழியிலும் அமைந்த மிக இலகுவான வாக்கியங்களை எழுதவோ வாசிக்கவோ முடியாதவர்கள். எனினும் அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை முகவர் அமைப்பின் (C.I.A) 2007 அறிக்கையின் படி தற்போது உலக சனத்தொகையின் எழுத்தறிவு வீதம் 82 ஆகும்.

மனித அபிவிருத்தி உள்ளடக்க 2007/2008 புள்ளி விபரப்படி   (Human Development Index 2008 Statistical Update Human Development Report 2007/2008, p. 226 Human Development Report 2007/2008) உலகில் 100 சதவீத எழுத்தறிவை பெற்றுள்ள நாடு என்ற பெருமையை ஜோர்ஜியா பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் முறையே எஸ்ட்டோனியா 99.8,   லாட்வியா 99.8,  கியூபா 99.8  ஆகிய நாடுகள் உள்ளன. 99 வீத எழுத்தறிவை உள்ள நாடுகளில் மேற்படி பட்டியலில் 49 நாடுகள் காட்டப்பட்டுள்ளன. 98 வீத எழுத்தறிவை உள்ள 8 நாடுகளும்,  97 வீத எழுத்தறிவை உள்ள 10 நாடுகளும்,  96 வீத எழுத்தறிவை உள்ள 6 நாடுகளும்,  95 வீத எழுத்தறிவை உள்ள 2 நாடுகளும்,  94 வீத எழுத்தறிவை உள்ள 06 நாடுகளும்,  93 வீத எழுத்தறிவை உள்ள 08 நாடுகளும், 92 வீத எழுத்தறிவை உள்ள 05 நாடுகளும்,  91 வீத எழுத்தறிவை உள்ள 05நாடுகளும்,  90 வீத எழுத்தறிவை உள்ள 04 நாடுகளும் காட்டப்பட்டுள்ளன.

இப்பட்டியலின் படி இலங்கை இப்பட்டியலில் 99ஆவது இடத்தைப்பிடித்துள்ளது. எழுத்தறிவு விகிதம் 90.8 ஆகும். இலங்கையில் பெருந்தோட்டப்பகுகளில் எழுத்தறிவு விகிதம் குறைவு காரணமாக தேசிய ரீதியில் இவ்விகிதம் குறைந்து காணப்படுகிறது.அதே நேரம் தெற்காசியாவுடன் ஒப்பிடும் போது இலங்கை முதலிடத்தில் உள்ளது.

இப்பட்டியலில் இந்தியாவானது 159 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. எழுத்தறிவு விகிதம் 65.2 ஆகும். இந்தியாவிலுள்ள மக்கள் தொகை அதிகரிப்பே அது எழுத்தறிவு விகிதத்தில் பின்தள்ளப்பட்டுள்ளதற்குக் காரணம் என கூறப்படுகிறது. இப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் (28.0) 189 ஆவது இடத்திலும் பர்க்கீனா ஃவாசோ  (26.0) 190 ஆவது இடத்திலும்,  சாட் (25.7) 191 ஆவது இடத்திலும் மாலி (22.9) 192 ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

இலங்கையும் எழுத்தறிவு வீதமும்

எழுத்தறிவை பொறுத்தவரை தென்னாசியாவில் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.இலங்கையில் 5 தொடக்கம் 14வயது வரையான வயதெல்லை கட்டாயக் கல்விக்கான வயதெல்லையாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையானது யுனெஸ்கோவின் கல்வி சார் அபிவிருத்தித் திட்டங்களில் இணைந்து செயற்படுவதற்காக 1949 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி யுனெஸ்கோ அமைப்பில் இணைந்து கொண்டது.

 இன்று இலங்கையின் எழுத்தறிவு வீதமானது நகரப்புறங்களிலேயே முன்னேற்றங்கண்டுள்ளது எனலாம்.

சுதந்திரம் கிடைத்து 61வருடங்களுக்குப் பிறகும் கூட பெருந்தோட்டப்பகுதிகளில் அடிப்படை கல்வி வசதியை பெறத்தவறியுள்ளவர்கள் எத்தனையோ பேர்.

 இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளி விபர திணைக்களத்தின் அறிக்கையின் படி இலங்கையின் நகர்ப்புறங்களில் எழுத்தறிவு வீதம் 95 ஆகவும் கிராமப்புறங்களில் 93 வீதமாகவும் பெருந்தோட்டப்பகுதிகளில் 76 வீதமாகவும் உள்ளது. பால் வேறுபாட்டில் ஆண்கள் 94 சதவீத கல்வியறிவையும் பெண்கள் 91.1வீத கல்வியறிவையும் பெற்றுள்ளனர்.

யுனெஸ்கோவின் அபிவிருத்தித்திட்டங்களில் எழுத்தறிவித்தல் ஒரு முக்கிய இடத்தைப்பிடிக்கின்றது. ஒவ்வொரு நாடுகளிலும் இத்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றமை முக்கிய அம்சம். இதில் முதியோர்களுக்கு கல்வி போதித்தல் பிரதான இடத்தை வகிக்கின்றது.

இந்தியாவில் ஆசிரியர் தினம் -புன்னியாமீன்

radhakir.jpgஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.

மாணவனுக்கும், ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவு கூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்தவும், ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது.

தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள்.

ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர். குரு, ஆசான், ஆசிரியர், வாத்தியார், இப்படி பல அவதரங்கள் கொண்ட மொத்த உருவம் ஆசிரியர். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பதம் உண்டு. ஆனால் ஆசான் என்ற ஒரு வார்த்தைக்கு இலக்கன வித்தகர்கள் எதிர்மறை வார்த்தை தரவில்லை

ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. பொதுவாக இந்நாள் ஒக்டோபர் மாதம் 06 ம் திகதி அநேக நாடுகளில் கொண்டாடப்பட்டாலும் இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

செப்டம்பர் 5ஆம் தேதி 1888ஆம் ஆண்டு திருத்தணியில் பிறந்தார் ராதாகிருஷ்ணன். சென்னை பல்லைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்த ராதாகிருஷ்ணன், பிரசிடென்சி கல்லூரியில் தத்துவப் பாடத்திற்கான விரிவுரையாளராக பணியாற்றினார். அன்று முதல் இந்தியாவின் தத்துவம் மற்றும் ஆன்மீகத் துறையைப் பற்றி விரிவாக கற்கத் துவங்கினார். தத்துவத்தின் ஆசிரியனாகத் திகழ்ந்தார். அதன் பின்னர் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் தத்துவ பேராசிரியராகப் பணியாற்றினார் ராதாகிருஷ்ணன். இதன் தொடர்ச்சியாக 1946-52ஆம் ஆண்டுகளில் யுனெஸ்கோவின் இந்திய குழுத் தலைவராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்.

ராதாகிருஷ்ணனின் திறன் அவரை மென்மேலும் வளர்த்து, 1952ஆம் ஆண்டு முதல் 1962 ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்தார். அதன்பின்னர் 1962 முதல் 1967 வரை 5 ஆண்டுகள் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தார்.

டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பேராசிரியராக இருந்தபோது அவரது பிறந்த நாளைக் கொண்டாட, மாணவர்களும், அவரது நண்பர்களும் விரும்புவர். ஆனால் ராதாகிருஷ்ணன் எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம். அன்றைய தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டாடலாம் என்று கூறியுள்ளார். அதன்படியே இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

தனது வாழ்வில் ஆசிரியர் பணியை பெருமையாய் கருதியவர், ராதாகிருஷ்ணன். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். பெருமையை கொணர்ந்தவர். ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயணப்பட முடியும் என்பதற்கு அவரே நேரடி செயல் விளக்கம். பல ஆசிரியர்கட்கு முன்னுதாரணம். ஆசிரியர்கள் மாணவர்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் மாணவர்களுக்கு, வாழ்வின் முன்னுதாரணமாய், என்றென்றுமான உந்து சக்தியாக மாறி போகின்றனர். ஆசிரியரிடம் கற்கிற பாடங்கள், மாணவரின் வாழ்வு முழுதும் வழிநடத்தும் சக்தியை மாறுகின்றன. ஆசிரியர்களே, எல்லா தடைகளையும் உடைத்து, மாணவர்களின் ஆன்மாவுள் நுழையவும், சுய ஒளியை தரவும் தகுதி பெற்றவர்கள்.

ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும் .. இதை சரியாக மலர செய்திட்டால், அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை சேரும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில் வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது.

ஆண்டு தோறும் ஆசிரியர் தினத்தன்று இந்தியா முழுவதும் கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இன்றைய தினம் தமிழக முதல்வர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்…’ “பல்கலைக்கழகங்களோடு தொடக்கப் பள்ளிகள் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் கல்லூரிகள் ஆகிய அனைத்துக் கல்வி நிறுவனங்களும் ஒருங்கிணைந்து சீரிய சிந்தனைகளோடு செயல்படுவதன் மூலம் ஆற்றல் மிக்க அறிவுப்படை தொடர் தொடராய் எழுந்திட முடியும். அந்த அறிவுப்படையை உருவாக்கிடும் பெரும் பொறுப்பைக் கடமையாகக் கொண்டு பணிபுரிபவர்கள் ஆசிரியர்கள். இந்த ஆசிரியப் பெருமக்களின் அருமையை உலகத்துக்குப் புலப்படுத்தும் நோக்கில்தான் ஆண்டுதோறும் “ஆசிரியர் தினம்’ மிகுந்த எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது.

சீரிய சிந்தனைகளோடு கூரிய அறிவாற்றல் திறனைப் பயன்படுத்திக் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் கல்விச் செல்வத்தை வழங்கி வரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரது வாழ்விலும் வளம் செழித்து நலம் பெருகிட எனது உளமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்… “கல்வியைக் கற்பிப்பது மட்டுமன்றி கொள்கைகள் மற்றவர்களிடம் பழகும் விதம் உள்ளிட்ட விஷயங்களையும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் போதிக்கின்றனர். மாணவர்களின் நண்பராக போதனையாளராக வழிகாட்டியாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர். இளைய சமுதாயத்தினருக்கு முன்னுதாரணமாக அவர்கள் இருக்கின்றனர்’. என்று தெரிவித்துள்ளார்.

தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும். சிறு குழந்தைகளுக்குச் பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஆசிரியர்கள் மீது விழும். அப்படி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களின் மழலை பேச்சும், மழலைச் சரிப்பையும் காணும் பொழுது புதிய உலகிற்குச் சென்ற ஓர்; உன்னத உணர்வு மனதில் ஏற்படும். அதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி சற்று வித்தியாசமானது. அங்கு ஆரம்பப் கல்வி படிக்கும் மாணவன் பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும் ஆசிரியர்களையும் மறப்பது இல்லை.

ஆசிரியர் பணியில் சேர்ந்த பொழுது ஆரம்ப கல்வியை மாணவ, மாணவிகள் முடித்துச் செல்லும் பொழுது உண்மையிலேயே பெரிய இழப்பாக இருந்தது. அது தற்பொழுது பழகிவிட்டது. ஒவ்வொருவரும் ஒரு குணம், மாறுபட்ட குணாதிசயங்கள், மாறுபட்ட சிந்தனைகள் என்று ஓர்; இனிய கலவைகளை ஒரே இடத்தில் பார்க்க நினைத்தால் பள்ளிகளுக்குச் செல்லலாம்.

ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். அதே போல் மாணவர்களை சிறந்த பண்போடு உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு ஆசிரியர் தவறு செய்தால் எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்று ஒரு கருத்து இருக்கிறது இதனை உணாந்து செயல்பட்டால் ஆசிரியர் பணி சிறக்கும், அதனால் நாடு, சிறக்கும்.

பிற பணிகளில் இல்லாதது ஆசிரியர் பணியில் இருக்கிறது. மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறோம்.

தமிழ்சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான். இந்த உண்மைகள் நிலைத்து நிற்க வேண்டும். ஆசிரியர் சமூகம் மேன்மேலும் வளர வேண்டும் என்று அனைவருமே நினைக்கின்றனர். மொத்தத்தில் இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு என்பது ஓர் யாதார்த்த உண்மை.

ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை., நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார்.

அதற்க்கு அந்த மாணவன், இந்த இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.

அனைத்துலக காணாமற்போனோர் தினம் (International Day of the Disappeared) – புன்னியாமீன்

international-day-of-the-disappeared.jpgஅனைத்துலக காணாமற்போனோர் தினம்  (International Day of the Disappeared) உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. ‘காணாமற்போனோர்’ என்பது இன்று உலகளாவிய ரீதியில் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மனிதாபிமானம் பற்றி, மனித உரிமைகள் பற்றி எத்தனை அமைப்புகள் செயற்பட்டாலும் கூட இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதுள்ளது.

காணாமற்போனோர் எனுமிடத்து இது ஒரு நாட்டிற்கு மாத்திரம்,  அல்லது ஒரு கண்டத்திற்கு மாத்திரம் உரித்தான பிரச்சினையாக எடுத்துக்கொள்ள முடியாது. இது உலகளாவியது. இப்பிரச்சினையின் தோற்று நிலையை நோக்குமிடத்து மத்திய காலம் வரை பின்னோக்கிச் செல்லலாம். வரலாற்றுக் காலங்களில் யுத்த காரணிகள் நிமித்தமும் மன்னர்களின் அதிகாரப்பின்னணியிலும் இக் காணாமற்போனோர் இடம் பெற்றதாக சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. அடிமைத்துவ யுகம் காணப்பட்ட நேரத்தில் இந்த காணாமற்போனோர் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக அமையவில்லை. 20ஆம் நூற்றாண்டு கால கட்டங்களில் காணாமற்போனோர் வரலாற்றில் முன்னைய காலங்களை விட அதிகமாகக் காணப்பட்டதாக கூறப்படுகின்றது. குறிப்பாக நாடுகளுக்கிடையே ஏற்பட்ட யுத்தங்கள், இனங்களுக்கிடையில் ஏற்பட்ட கலவரங்கள் பல்நாட்டு யுத்தங்கள் காரணமாக இத்தொகை அதிகரித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. முதலாம் உலக மகாயுத்த காலத்திலும், இரண்டாம் உலகமகா யுத்த காலத்திலும் மில்லியன் கணக்கானோர் காணாமற்போயுள்ளனர்.

இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் ஹிட்லரின் கொடூரமான நடவடிக்கையின் காரணமாக பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட யூத இனத்தவர் மாத்திரம் காணாமற்போயுள்ளனர். இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில்  சுவிடனைச் சேர்ந்த ரஓல் வொலண்பேக் என்பவர் காணாமல்போவோர் விடயத்தில் கூடிய அக்கரை கொண்டு செயலாற்றியுள்ளார்.20ஆம் நூற்றாண்டில் தலை சிறந்த மனிதாபிமானி என வர்ணிக்கப்படும் ரஓல் வொலண்பேக் ஓரு லட்சத்திற்கும் மேற்பட்ட காணாமற்போனோரை மீட்டுள்ளதாக ஆய்வுகள்  குறிப்பிடுகின்றன. உலக வரலாற்றில் ஒரே சந்தர்ப்பத்தில் காணாமற்போனோர் பெரும் தொகையாக மீட்கப்பட்ட கைங்கரியத்தின் உரித்தாளராக ரஓல் வொலண்பேக் இன்று வரை போற்றப்படுகிறார். 1945ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி ரஓல் வொலண்பேக் ரஸ்யப்படையினால் கைது செய்யப்பட்டார்.இவரின் கைதை அடுத்து இவருக்கு என்னவானது என்பது இன்னும் உலகிற்கு மர்மமாகவே உள்ளது. காணாமற்போனோர் தினம் அனுஸ்டிக்கப்படும் நேரங்களில் ரஓல் வொலண்பேக் நினைவு கூறப்பட்டே வருகின்றார்.

காணாமற்போனோர் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளும் போது  உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ அல்லது தீவிரவாதிகளாலோ,  மாஃபியா குழுக்கலாலோ,  ஆயுதக்குழுக்களினாலோ  பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வட அமெரிக்காவுக்கும்,  தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நிலப்பகுதியில்  உள்ள ஒரு குடியரசு நாடான கொஸ்டாரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of the Detained-Disappeared, FEDEFAM) என்ற அரச சார்பற்ற அமைப்பின் நடவடிக்கைகளுக்கமைய இத்தினம் ஏற்படுத்தப்பட்டது.  இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்தே இவ்வமைப்பு முதன் முதலில் கோரிக்கை விடுத்தது.

அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International), மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைப்பான “மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு” மற்றும் பன்னாட்டு மனிதாபிமான அமைப்பான சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்  ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை கொண்டு  செயற்படுகின்றன. “அனைத்துலக காணாமற்போனோர் நாள்” இந்த அமைப்புகளின் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் அவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிதி மற்றும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும் உதவுகிறது.

அண்மைக்காலத்தில் ஹிஸ்புல்லாஹ் இயக்கம்  ஆள் கடத்தல் என்பதும் யுத்தத்தின் இன்னொரு மிக முக்கியமானதொரு அத்தியாயம். என்றபடி செயற்பட்டது. ஹமாஸ் கார் குண்டுக்கு  விசேடம் பெற்றதாக விளங்குகிறதோ,  அல் காயிதா பயங்கர திட்டங்களின் ஆதாரக் கேந்திரமாக இருக்கிறதோ, அம்மாதிரி ஆள் கடத்தல் விஷயத்தில் ஹிஸ்புல்லா போராளிகள் வல்லவர்கள்.என்று கூறப்படுகிறது.இலங்கையிலும் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தின் போதும் தீவிரவாத அமைப்புகள் தமது படைபபலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற் கொணடனர். இதனூடாகவும் காணாமட் போனோர் எண்ணிக்கை அதிகரித்தது.அதே நேரம அண்மைய வன்னி யுத்தத்தின் போதும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்மைக்காலங்களாக இலங்கையில் வெள்ளை வேன்கள் மூலமாக கடத்தப்படுதலும் காணாமல் போதலும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படும் அதே நேரத்தில் இது விடயமாக பாராளுமன்றத்தில் கூட பல்வேறு பட்ட வாதப்பிரதி வாதங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் இயற்கைகாரணிகளாலும் காணாமல் போவது இடம் பெறுகின்றது. உதாரணமாக 2004ஆம் ஆண்டு சுனாமியின் போது இலங்கையில் மாத்திரம் காணாமல் போனோர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் எனக்கூறப்படுகிறது.  

கடந்த நான்கு தசாப்தங்களாக காணாமற்போனோர் தொடர்பான காரணிகளை எடுத்து நோக்குமிடத்து யுத்தக்காரணிகள் மாத்திரம் அன்றி பாலியல் நோக்கத்திற்காகவும், விற்பனை நோக்கத்திற்காகவும் சிறுவர்கள் , இளம் பெண்களை கடத்தல், பழிவாங்கும் நோக்கத்தோடு கடத்தல், கப்பம் பெறும் நோக்கத்துடன் கடத்தல் உடல் உறுப்புக்களை திருடும் நோக்கத்துடன் கடத்தல்…. இவ்வாறு பல நோக்கங்கள் முதன்மைப்படுத்தப்படுகிறது.  

‘அமெரிக்கா உள்ளிட்ட உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் ஆள் கடத்தல் வியாபாரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆண்கள், பெண்கள்,  குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் இக் கொடுமைக்கு உள்ளாகின்றனர். இவ்வாறு நாடு விட்டு நாடு சட்ட விரோதமாகக் கடத்திச் செல்லப்படுபவர்கள் வீட்டு வேலைகளைச் செய்வதற்கோ,  பாலியல் தொழிலிலோ பலவந்தமாக உட்படுத்தப்படுகிறார்கள். குழந்தைகளைக் கடத்தி வந்து ராணுவத்தில் சேர்ப்பது அல்லது ஆலைகளில் மற்றும் சிறு வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்யுமாறு நிர்பந்திப்பதும் நடக்கிறது. உண்மையில் சொல்லப் போனால், இவையெல்லாம் நவீன யுக அடிமைத்தனம்தான்.” என்று  முன்னால் அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் முதுநிலை ஆலோசகரும். ஆள் கடத்தலுக்கு எதிரான உலகளாவிய கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு அலுவலகத்தின் இயக்குனருமான மார்க் பி. லகான் என்பவர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

200 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க நாடுகளுக்கிடையே மனிதர்களை அடிமைகளாக விற்கும் வியாபாரம் நடைமுறையில் இருந்தது. அந்தக் கொடுமையான வியாபாரத்தைத் தடை செய்த 200ஆவது ஆண்டு நிறைவை அமெரிக்கா தற்போது கொண்டாடி வருகிறது. 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில்,  மனித குலத்திலேயே சக மனிதர்களில் சிலரை மனிதரிலும் கீழாகக் கருதும் இழிவான கருத்து நிலவியது. அதுவே மனிதர்களை அடிமைகளாகக் கருதி வியாபாரம் செய்வற்கும் வழிவகுத்தது. அதே உணர்வுதான் இன்றும், சட்ட விரோதமாக ஆட்களைக் கடத்திச் சென்று தங்கள் விருப்பத்துக்குப் பயன்படுத்தும் செயலுக்கு அடிப்படையாக இருக்கிறது. என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தச் சட்டவிரோத செயல்களை முற்றிலும் களைந்தெறிய வேண்டியதன் அவசியத்தை நேரிடை அனுபவம் வாயிலாக உணர்ந்திருக்கிறேன் என்றும் இந்த விஷயத்தில்,  அரசுகள்,  தன்னார்வக் குழுக்கள் மற்றும் தனி நபர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் கிடைக்கும் தாக்கத்தையும் அறிந்திருக்கிறேன்.என்றும் அவ்வறிக்கையில்  மார்க் பி. லகான் தெரிவித்திருந்தார்.

ஆள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் – சட்டத்திற்குப் புறம்பாக வேலைக்கு ஆள்களை எடுக்கும் மோசடிக்காரர்கள்,  தொழிலாளர்களைச் சுரண்டும் அதிபர்கள், அதற்குத் துணை போகும் ஊழல் மிகுந்த அரசு அதிகாரிகள் – இவ்வாறு சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு உரிய தண்டனையும் அளிக்கப்பட வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில்,  உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஆள் கடத்தலுக்கு எதிரான கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்திருக்கின்றன; அல்லது ஏற்கெனவே இருக்கின்ற சட்டங்களை இன்னும் கடுமையாக்கி இருக்கின்றன. ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டால், தற்போது உலகெங்கிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இத்தகைய சட்டங்களால் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு தண்டனையும் பெற்று வருகிறார்கள். முன்பு வெகு சிலரே சட்டத்தின் பிடிக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னால் செயலாளர் கொண்டலீசா ரைஸ்,  ‘ஆள் கடத்தல் என்பது மனிதர்களின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பறிக்கும் குற்றம்” .என்று ஆள் கடத்தல் தொடர்பான அமெரிக்காவின் எட்டாவது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருந்ததுடன் இதற்கு எதிரான சர்வேதச செயல்பாட்டை ஊக்குவிப்பதன் அவசியத்தையும் உணர்த்தியிருந்தார். நவீன யுக அடிமைத்தனத்தை ஒழிப்பது தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்க்கும் சிறந்த ஆய்வறிக்கை அது.

இந்தியாவில் 2007-ம் ஆண்டில் மட்டும் 2 லட்சம் பெண்கள் பாலியல் தொழில்,  ஒப்பந்தத் தொழிலுக்காக வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. பெண்களைக் கடத்தும் மாஃபியா கும்பல்,  தங்களிடம் சிக்கும் 11 முதல் 25 வயது வரையிலான பெண்களை பாலியல் தொழில் செய்யும் “புரோக்கர்’களிடத்தில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறார்கள். இவர்களில் 25 சதவிகிதம் பேர் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் ஆண்கள். பாலியல் தொழில்,  சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை பறிப்பதற்கும்,  ஒப்பந்தத் தொழிலில் ஈடுபடுத்தவும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை மாஃபியா கும்பல் வெளி மாநிலத்துக்கு கடத்துவதாக தெரிவித்திருந்தது. இந்த புள்ளி விவரங்களை மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கோவா, பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் குற்ற விசாரணை துறையில் உள்ள ஆள் கடத்தல் தடுப்பு மைய அதிகாரிகள் அளித்துள்ளனர். 

2007-க்குப் பிறகு இந்த புள்ளி விவரங்கள் அதிகரித்திருக்கலாம். ஆனால்,  இதுதொடர்பாக அரசிடம் சரியான புள்ளி விவரங்கள் இல்லை. அதேபோல நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் பேர் மாஃபியா கும்பலிடம் சிக்கி கடத்தப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் இருந்து பெண்கள் கடத்தப்படுவது அதிகமாகி வருவதால் ஆந்திரத்தைப் போல இம் மாநிலத்திலும் குற்ற விசாரணை துறையில் ஆள் கடத்தல் தடுப்பு மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. கைது செய்யப்படும் கடத்தல் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கச் செய்ய மாநிலத்தில் ஒரு விரைவு நீதிமன்றமும் அமைக்க வேண்டும் என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்,  நிபுணர்களும் அரசை வலியுறுத்துகின்றன.

சாதாரண மக்களின் ஆதார வாழ்க்கைத் தேவையே எவ்வாறு ஆள் கடத்தலுக்கு ஓர் அடிப்படைக் காரணமாக அமைகிறது என்பதை அந்த அறிக்கை  உலகின் தனிக் கவனத்துக்கு உட்படுத்தி இருந்தது. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமெனில்,  பாலியல் தொழிலுக்கான தேவையே,  ஆள் கடத்தலையும் நேரடியாகவோ,  மறைமுகமாகவோ ஊக்குவித்து வருகிறது. வேலைக்காக ஆட்களைக் கடத்தும் விஷயத்தில் தொழில் நிறுவனங்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் முக்கிய பங்கு வகிக்கலாம்.

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் அல்லது குழந்தைகள்,  வீட்டு வேலையாட்கள்,  பண்ணைத் தொழிலாளர்கள் போன்று ஆள் கடத்தல் கொடுமைக்கு இலக்காகி,  ஊமைகளாய்த் தத்தளிக்கும் எண்ணற்ற மனிதர்களுக்காகத் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும் குரலாக நாம் உறுதியுடன் செயல்பட வேண்டியுள்ளது. அவர்களது அடிமைத்தனம் நமது கவனத்துக்கும் உகந்த நடவடிக்கைக்கும் உரியது. மனிதநேயமற்ற,  கொடூரமான இத்தகைய செயல்களால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் கண்ணியத்தை மீட்டெடுப்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.

காணாமற்போனோர் பற்றி எடுத்துப் கொள்கையில் காணாமற்போனவர் ஒரு குடும்பத்து தலைவராக இருக்கும் இடத்து அவரின் குடும்பமும் பாதிக்கப்படுகிறது.எனவே அனைத்துலக காணாமற்போனோர் தினத்தில் இவர்கள் குடும்ப நிலைகள் பற்றியும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. மனிதாபிமானத்தை மீறி காணாமற்போனோர் இடம் பெற்றாலும் மனிதாபிமான சிந்தனையுடன் இதன் விளைவுகளை நோக்க வேண்டியுள்ளது.

சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் International Lefthanders Day – புன்னியாமீன்

lefthandersday.jpgசர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் 1976ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும்  ஆகஸ்ட் 13ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. சர்வதேச இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இத்தினத்தை அனுஸ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

உலகளாவிய ரீதியில் நோக்குமிடத்து அதிகமானோர் தமது அன்றாட பிரதான தேவைகளை வலக்கையாலேயே நிறைவேற்றுவர். குறிப்பாக எழுதுவது, முக்கியமான வேலைகளை செய்வது போன்றவற்றில் வலக்கையே பிரதானப்படுத்தப்படும். அதேநேரம்,  வலக்கையால் செய்யப்படும் சில வேலைகளை சிலர் இடது கையால் செய்து வருகின்றனர். குறிப்பாக எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் கை இடது கையாக அமைந்து காணப்படும். உலகளாவிய ரீதியில் நோக்கும்போது மொத்த சனத்தொகையில் 7 – 10 வீதத்தினரே இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.

எனவே, ஒப்பீட்டு ரீதியாக இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் பல்வேறு பட்ட அவஸ்தைகளை எதிர் நோக்க வேண்டி ஏற்படுகின்றது. எந்த ஒரு பொருளும் வலதுகை பழக்கம் உடையவர்களுக்கு மட்டுமே தயாராகிறது,  இடது கை பழக்கம் உள்ளவர்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்படுவதில்லை.

இந்த அடிப்படையில் இடது கை பழக்கம் உடையவர்கள் உபயோகிக்க கஷ்டப்படும் சில பொருட்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். கத்தரிகோல்,  ஹாக்கி மட்டை,  கிடார், மண்டபங்களில்  இருக்கையுடன் அமர்ந்து இணைக்கப்பட்டு இருக்கும் மேசை,  இது இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு என்று கிடைப்பது அரிது. உணவு மேசையில் ஏற்கனவே பரிமாறப்பட்டு இருக்கும் உணவு வலது கை பழக்கம் உள்ளவர்களுக்காகவே இருக்கும். நவீன காலத்தில் கணனி கூட வலக்கை பாவனைக்கேற்ற முறையிலேயே அதன் மவுஸ் பிரயோகத்திற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். இது மாத்திரமன்றி கதவுகளைத் திறக்கும்போது,  குழாய்த் தண்ணீர் திறக்கும்போது வலக்கை பாவனைக்கேற்ற முறையிலேயே அவை செய்யப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி பொதுவாக நாம் பயன்படுத்தும் அநேக பொருட்களில் இதனை நாம் காண்கின்றோம்.

இது கைப் பழக்கம் பிறப்பிலே சில மனிதர்களுக்கு ஏற்படுகின்றது. நமது மூளை மூளையம், மூளி சிறுமூளை மற்றும் நீள்வளைய மையவிழையம் என மூன்று பகுதிகளை கொண்டுள்ளது. இதில் மூளையம் (பெருமூளை) இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுப்பக்க உறுப்புகளையும்,  வலதுப்பக்க அரைக்கோளம் உடலின் இடப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. இதில் பெரும்பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கி செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுகிறது.

 இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகளை சில பெற்றோர்கள் குழந்தைப் பருவத்திலேயே வலக்கைக்கு மாற்றுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்வர். தற்போது கிராமிய மட்டங்களில் இடக்கைப் பழக்கமென்பது ஒரு வெறுக்கத்தக்க பழக்கமாக காணப்படுகின்றது. இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும்,  பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.

ஆனால்,  நவீன கால விஞ்ஞான விளக்கங்களின்படி இடக்கைப் பழக்கமுள்ளோர் விவேகத்திறன் கூடியவர்கள் என்று கூறப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள ஒபாமா இடது கை பழக்கம் உள்ளவர். இடது கையால் கையெழுத்திட்டே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இவர் தவிர அமெரிக்க ஜனாதிபதியாகப்  பதவி வகித்த ஜோர்ஜ் புஷ் (சீனியர்),  பில் கிளிண்டன், ஜெரால்ட் ஃபோர்ட்,  ஜேம்ஸ் கார்ஃபில்ட்,  தொமஸ் ஜெபர்சன்,  ரொனால்ட் ரீகன்,  ஹாரி ட்ரூமேன் ஆகியோரும்,  அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த நெல்சன் ராக்ஃபெல்லர் , ஹென்றி வாலேஸ் ஆகியோரும் இடது கைப்பழக்கம் உடையவர்கள்தான். இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி,  நெப்போலியன் போனாபர்ட்,  அவரது மனைவி ஜோசப்பின்,  ஜூலியஸ் சீசர்,  மாவீரன் அலெக்ஸாண்டர்,  தத்துவமேதை அரிஸ்டாட்டில்,  பிரிட்டன் பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில்,  சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த  பேடன்பாவெல் ,  கியூபா அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ,  விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன்,  ஃபோர்டு கார் தயாரிப்பு ஆலையைத் தோற்றுவித்த ஹென்றி ஃபோர்டு,  இங்கிலாந்து மன்னர்களாக இருந்த 3-வது,  8-வது எட்வர்ட்,  2-வது,  4-வது,  6-வது ஜார்ஜ் ஆகியோர் உள்பட வரலாறு படைத்த பலர் இடது கைப்பழக்கம் உடையவர்களே.

இவ்வாறு பல பிரபல்யங்களைக் குறிக்கலாம். பொதுவாக சாதாரண ஒரு மனிதனின் பழக்கவழக்கத்திற்கும்,  குணாதிசயங்களுக்கும் இந்த கைப்பழக்கங்கள் வெகுவாக பாதிப்பை செலுத்துவதில்லை. எவ்வாறாயினும் அண்மைக்கால கட்டங்களில் வலது கை பழக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டுவரும் பொருட்களை இடக்கைப் பழக்கமுள்ளோருக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்பட்டு வருவதையும் நாம் அவதானிக்க முடியும்.

இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் பற்றி அண்மையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு  நடத்தப்பட்டது. இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் ஸ்டான்லி கோரன்,  இடது கைப் பழக்கம் உள்ள நூற்றுக் கணக்கானவர்களைச் சந்தித்தும்  இடது கைப் பழக்கம் கொண்ட இறந்தவர்கள் பற்றியும் ஆராய்ந்தும் தமது முடிவில்   இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு சில குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்தார். இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலதுகைப் பழக்கம் கொண்ட வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து வாழும்போது மிகவும் சிரமப்படுகிறார்களாம். தவிர,  வலது கைப் பழக்கம் கொண்டவர்களை விட இவர்களுக்கு சராசரியாக 9 வருடம் ஆயுள் குறைவாக இருப்பதாகவும் முடிவு வெளியிட்டார்.

இதற்கு முக்கியக்காரணம் இவர்கள் அதிக அளவில் விபத்துக்களில் சிக்கிக் கொள்வதுதான். ஏனெனில் உலகம் முழுவதும் வலதுகை பழக்கம் கொண்டவர்களுக்காகவே இயந்திரங்கள், தொழில் உபகரணங்கள்,  வாகனங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதால் அதை இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் கையாளும்போது அவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

சிலர் விதி விலக்காக இரண்டு கைகளாலும் சமனாக வேலை செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவர்களும் உளர்.  கலப்பு கை பழக்கம் (Mixed Handedness) அல்லது கலப்பு ஆதிக்கம் (Cross-Dominance)என்பது சில வேலைகளுக்கு ஒரு கையையும் பிற வேலைகளுக்கு மறு கையையும் மாறி மாறி பயன்படுத்தும் ஒரு வகையான தசை இயக்க வெளிப்பாடு ஆகும். எடுத்துக்காட்டுக்கு,  கலப்புக் கை பழக்கம் உடையோர் வலது கையில் எழுதினாலும் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு இடது கையைப் பயன்படுத்த இயலும். இது போல வெவ்வேறு செயல்களுக்கு வெவ்வேறு கைகளை பயன்படுத்துவர். இரு கை பழக்கம் (Ambidexterity) என்பது இந்த கலப்பு ஆதிக்கத்தின் ஒரு வகையாகும். இரு கை பழக்கமுடையோர் தனது இரு கைகளையும் சரி சமமாகப் பயன்படுத்துவர். எனினும் கலப்பு கை பழக்கம் உடையோர் குறிப்பிட்ட செயல்களுக்கு ஒரு கை பழக்கமுடையவராக இருப்பர். எனவே பிறர் அவரை குறிப்பிட்டு நோக்காதிருந்தால் அவரது பெரும்பான்மையான கை பழக்கத்தை கொண்டு இடது கை பழக்கமுடையவராகவோ வலது கை பழக்கமுடையவராகவோ தவறாக கண்டு கொள்வர்.

இந்த கலப்பு ஆதிக்கம் கண்,  காது,  கால்கள் போன்ற இட-வல வேறுபாடுகள் உடைய அனைத்து உடற்பாகங்களுக்கும் பொருந்தும். எனினும் இந்த கலப்பு ஆதிக்கம் குறி பார்க்கும் செயல்களில் சில நேரங்களில் தடுமாற்றத்தை ஏற்படுத்தலாம்

இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலது கைப் பழக்கம் உள்ளவர்களை விட விரைவாக சிந்திக்கிறார்கள் என்பது அவுஸ்திரேலிய விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவாகும். இடது கைப்பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகங்களையும் பயன்படுத்த முடிவதாகவும்,  விரைவாக தகவல்களை மூளைக்கு அனுப்பிப் பெற முடிவதாகவும் அவர்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள்,  மூளையின் இரண்டு பாகத்துக்கும் தகவல்களை விரைவில் பரிமாறிக்கொள்ள இடது கைப் பழக்கம் உடையவர்களால் முடிகிறது என்றும் அதனால் நுட்பமான பணிகளையும்,  விளையாட்டு போன்ற துறைகளையும் அவர்களால் ஆக்கிரமிக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர். பார்வைக்குத் தேர்வு வைக்கும் பல விஷயங்களில் இடது கைப்பழக்கம் உடையவர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகளாய் இருப்பதாகவும் இவர்கள் ஆராய்ச்சியில் கூறியிருக்கிறார்கள்.

தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை கௌரவிக்கவும் மானசீகமான தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இத்தினம் விசேடமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. குறிப்பாக இவர்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளை நடாத்துவதும்,  கருத்தரங்குகள்,  கூட்டங்கள் நடாத்துவது என்பன இத்தினத்தில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகின்றன. இத்தினத்தை அனுஸ்டிப்பதில் ஊடகங்களும் வெகுவாக அனுசரணைகளை வழங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.

சர்வதேச இளைஞர் தினம் International Youth Day (IYD) – புன்னியாமீன்

youth.pngஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரப் பிரகாரம் சர்வதேச இளைஞர் தினம் International Youth Day (IYD) ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கொண்டாப்படுகின்றது. இளைஞர்கள் ஒரு நாட்டின் நிர்ணய சந்ததிகள். இளைஞர்களை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம். அதேநேரம், அழிவுபூர்வமாகவும் பயன்படுத்தலாம். பொதுவாக ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படும் இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி சௌபாக்கியமான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவதும் அவர்களது உணர்வுகளை சிறந்த முறையில் நெறிப்படுத்துவதும், நம்பிக்கை உணர்வினையும், வெற்றி மனப்பாங்கினையும் ஏற்படுத்துவதுடன், இளைஞர்களின் செயற்பாடுகளை கௌரவித்து மதிப்பளிப்பதும் இத்தினத்தின் முக்கிய நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது.

1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் குழு சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சினைகளையும், இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்திற் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என சிபாரிசு செய்தது. இதன்படி 1999 டிசம்பர் 17ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 54/120/ ( resolution 54/120) இலக்க பிரேரனைப்படி சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ம் திகதி கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 2000ஆம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

உலக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதானமாக கவனத்தில் ஈர்க்கும் முகமாக உலகளாவிய ரீதியில் அரசுகள், அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் செயல்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறாக ஆகஸ்ட் 12ஆம் திகதி சர்வதேச ரீதியில் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டாலும்கூட, சர்வதேச தினம் என்பதை விட ஒவ்வொரு நாடுகளும் தேசிய ரீதியில் இத்தினத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவதை அவதானிக்கலாம். உதாரணமாக இந்தியாவில் விவேகானந்த அடிகளாரின் பிறந்த தினத்தை மையமாகக் கொண்டு 1985ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி 12ம் திகதி தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகின்றது. எவ்வாறாயினும் சர்வதேச ரீதியிலும் சரி, தேசிய ரீதியிலும் சரி, பிரதேச ரீதியிலும் சரி  இவ்வாறு கொண்டாடப்படும் விழாக்கள் ஒரே அடிப்படையினைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.

நமது வாழ்க்கையை உடலியல் அடிப்படையில் குழந்தைப் பருவம், இளமை, முதுமை என மூன்று பிரதானப் பிரிவுகளாக வகுக்கலாம். குழந்தைப் பருவத்தில் உடலாலும் மனதாலும் நமது தேவைகளை நிறைவு செய்ய மற்றவர்களைச் சார்ந்துள்ளோம். இந்தப் பருவம் ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. நல்ல பழக்கங்கள், துணிச்சல் தன்னம்பிக்கை ஆகியன ஆழ்மனதுக்குள் செலுத்தப்பட வேண்டிய பருவம். சொந்த அனுபவங்கள் இல்லாத பருவம். பாகுபாடு காணத் தெரியாத உழைக்க முடியாத பருவம்.

விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லாப் பண்பாடுகளிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுவந்துள்ளது. அண்மைக் காலங்களில் பருவமடைதல் காலம் விடலைப் பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி விடலைப் பருவத்துக்கு அப்பாலும் போவதைக் காணக்கூடியதாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது.

விடலைப் பருவத்துக்கு பின்னர் வரும் பருவம் இளமை ஆகும். பொதுவாக 18 – 24 அல்லது 29 வயதுவரை இளமைப் பருவம் எனப்படுகிறது. இவர்களை இளையோர் அல்லது வாலிபர் என்பர். பிற பருவத்தினருடன் ஒப்பிடுகையில் இளயோரிடம் குறிப்பிடத்தக்க சில பண்பியல்புகள் உண்டு. இளைய பருவம் மாற்றத்தை இலகுவில் ஏற்று தன்னை மாற்றியமைத்துக்கொள்ள கூடியது, துணிவுமிக்கது, செயற்பாட்டை முதன்மைப்படுத்துவது. இப்பருவத்தில் பாலியல் கவர்ச்சியும் ஈடுபாடும் அதிகம் இருக்கும். இளையோரை பெரும் சதவீதமாக கொண்ட ஒரு சமூகம் வன்முறைப் போக்கு எடுப்பதற்கு கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்றும் கூறப்படுகின்றது. அனேக நாடுகளில் இளையோரே அதிகம் வேலையற்றோராக இருக்கின்றார்கள்.

முதுமை என்பதை 60க்கு மேல் எனக் கூறுவதே பொருத்தமாய் இருக்கும். பெரும்பாலும் 60 வருடம் என்பது பணி நிறைவுக்கான வயது. அதன்பின் ஓய்வு என்பது நடைமுறையிலுள்ள அரசு விதி, முதுமையில் பணிபுரிவதில் சக்தியின்மை இருந்தாலும் வாழ்க்கை அனுபவத்தால் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் வாய்ப்பு உண்டு.

சுவாமி விவேகானந்தர், “இளைஞர்கள் 100 பேரை என்னிடம் கொடுங்கள்; இந்திய நாட்டையே நல்ல நாடாக மாற்றிக் காட்டுகிறேன்” என்று கூறியது இளைஞர் தம் சிறப்பு. உத்வேகம், அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்று மிக்க இளைஞர்களை வழிநடத்திச் செல்லக் கூடிய இளமை, துடிப்பு, சுயநலமில்லாது பாடுபடும் அர்ப்பணிப்பு, ஞானம் மிகுந்த விவேகானந்தரைப் போல் ஒரு வழிகாட்டியைக் கண்டுகொள்வதுதான் இன்றையச் சூழலின் தேவையாகிறது.

இன்று உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்தி அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளனர். கடும் குளிர், மிகுந்த வெப்பம் என எந்தவிதமான நிலையிலும் பணிபுரியும் தகுதியுள்ளவர்கள். உடல் ஆற்றலுடன் அறிவாற்றலில் சிறந்து விளங்குபவர்கள் நம் நாட்டு இளைஞர்கள். உலகின் பல முன்னோடி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளைத் தம் தகுதியால் அலங்கரித்து வருபவர்கள். பணிபுரிய சுய கௌரவம் பார்க்காமல் குடும்பப் பொறுப்புடன் செயல்படும் இளைஞர் பட்டாளம் நம்மிடையே உள்ளது. சிக்கலான கல்வி கற்பதிலே முன்னணியில் நிற்பவர்கள் நம் இளைஞர்கள். தமக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, அதில் திறமையுடனும், துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் பயணிப்பவர்கள்தான் நம் இளைஞர்கள்.

இவ்விடத்தில் சோக்ரடீஸின் வரலாற்றுடன் இணைந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஓர் இளைஞன் சோக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சோக்ரடீஸ்  மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சோக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சோக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான். சோக்ரடீஸ்,  “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்த இரகசியமும் இல்லை. இந்த உதாரணம் இளைஞர்களின் உணர்வுக்களிக்கப்படும் முக்கியத்துவத்தை படிப்பினையுடன் கூடி எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வொரு இளைஞனும் தன்னம்பிக்கையுடன் தனது பணியினை முன்னெடுக்கக் கடமைப்பட்டுள்ளான்.

இன்றைய இளைஞர்கள் ஒருவரைப் பின்பற்றும்போது முழுக்க முழுக்க அவராகவே மாறிவிடக்கூடாது. மாறாக, நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் அழகாகக் கூறுகிறார். ‘ஒரு விதையை நிலத்தில் போடுகிறோம். அதன் வளர்ச்சிக்குத் தேவையான எரு, தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அவ்விதை எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே எடுத்துக்கொண்டு பிரம்மாண்ட மரமாகிறது’. அது போல, ‘கற்றுக்கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வழி சொல்கிறார்.‘அளவற்ற தன்னம்பிக்கை உடையவர்களாக இருங்கள். நான் இளமையில் அத்தகைய நம்பிக்கை உடையவனாக இருந்தேன். அதுதான் இப்பெரிய காரியங்களைச் செய்யக்கூடிய சக்தியை எனக்களித்து இருக்கிறது. இளமையும், சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில்தான் உங்கள் எதிர்கால இலட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.

உங்களின் மீதும் உங்கள் திறமைகளின் மீதும் உங்களுக்கு உள்ள ஆழமான நம்பிக்கைதான் உங்கள் கனவுகளை நிறைவேற்றும். உங்கள் கனவைச் சொல்லும்போது, உங்கள் வார்த்தைகளில் உயிர் துடிப்பு இருக்க வேண்டும். உங்களின் ஆர்வம் கேட்போரைத் தொட வேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அதை சாத்தியமில்லாது என்று ஒதுக்க வேண்டாம். “சாத்தியமில்லாதது” என்று எதுவுமேயில்லை.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. தன்னம்பிக்கையோடு திட்டமிட்டு, விடாமுயற்சியோடு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். “Never, neer, neer give up’  என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொல்வதுண்டு. வீட்டில் சன்னலருகே வைக்கப்பட்டுள்ள செடியானது வெளிச்சம் தேடி வெளியே வளைந்து செல்வதைப் போல, விடா முயற்சியுடையவர்கள் புதிய பாதைகளைத் தேடிக்கொண்டு தொடர்ந்து முன்னேறுவர்.

வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது தாங்கள் மட்டும் விழித்திருந்து உழைத்தவர்களே. சலிப்புக்கு இடங்கொடாமல் கடும் உழைப்பை உணவாக உட்கொண்டவர்கள், “ஒளி படைத்த கண், உறுதிகொண்ட நெஞ்சம், களிபடைத்த மொழி, கடுமை கொண்ட தோள், தெளிவு பெற்றமதி” என்றெல்லாம் முகமன் கூறிய பாரதியின் வார்த்தைகளை இளையபாரதம் மெய்ப்பிக்க வேண்டும். குறுகிய சிந்தனையில் வாழ்வைக் குலைத்துக்கொள்ளாமல் சமுதாய நோக்கில் சிந்தித்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம்.

சர்வதேச இளைஞர் தினம் கலைவிழாக்கள், போட்டி நிகழ்ச்சிகள், இளைஞர் பாசறைகள், கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களினூடாக முன்னெடுக்கப்படுகின்றன. 2000ஆம் ஆண்டில் முதலாவது சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்ட போது இத்தினத்தை முறைப்படி கடைபிடிப்பதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

2001ஆம் ஆண்டில் வேலையின்மை, சுகாதாரம் ஆகியவற்றில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், 2002ஆம் ஆண்டில் நிகழ்க்காலத்திலும், எதிர்காலத்திலும் அபிவிருத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்புகள் குறித்தும், 2003ஆம் ஆண்டில் இளைஞர்களுக்கு பண்புமிக்கதும், உற்பத்தித் திறனுடையதுமான தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொடுப்பது பற்றியும், 2004ஆம் ஆண்டில் சமூக அபிவிருத்தியில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2005ஆம் ஆண்டில் இளைஞர்களின் பணிகள் பற்றியும், 2006ஆம் ஆண்டில் வறுமை ஒழிப்பில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2007ஆம் ஆண்டில் அபிவிருத்திப் பணிகளில் இளைஞர்களின் கடப்பாடு பற்றியும், 2008ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம், நேரமுகாமைத்துவம் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றியும், 2009ஆம் ஆண்டில் அபிவிருத்தி, உற்பத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் சவால்களும், எதிர்காலம் பற்றியும் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டன. குறிப்பாக சூழல், சமூகம், பொருளாதாரம் ஆகிய செயற்பாடுகளில் இளைஞர்களின் மனோநிலை விருத்தியை வளர்ப்பது குறித்தும், இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வது குறித்தும் இத்தினத்தில் விசேடமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன.

இளைஞர் தினத்தின் தொணிபொருள்களை பின்வருமாறு ஒரு பார்வையில் நோக்கலாம்.

2009 – SUSTAINABILITY: OUR CHALLENGE. OUR FUTURE.
2008 – Youth and Climate Change: Time for Action
2007 – Be seen, Be heard: Youth participation for development
2006 – Tackling Poverty Together
2005 – WPAY+10: Making Commitments Matter
2004 – Youth in an Intergenerational Society
2003 – Finding decent and productive work for young people everywhere
2002 – Now and for the Future: Youth Action for Sustainable Development
2001 – Addressing Health and Unemployment

நலன்புரிநிலைய தரம் 05 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி நிவாரண செயற்றிட்ட உதவி நிறைவுபெற்றது. – த. ஜெயபாலன் & புன்னியாமீன்

kathir-camp.gifவடக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது வவுனியா நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள தரம் 05 மாணவர்களின் கல்விநிலையை மேம்படுத்த தேசம்நெற் உம், சிந்தனைவட்டமும் மேற்கொண்டுவந்த முதல்கட்ட கல்வி நிவாரண செயற்றிட்டம் நிறைவுபெற்றுள்ளது.

இந்த கல்வி நிவாரண திட்டத்தின் கீழ் வவுனியா நலன்புரிநிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்கும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு மாணவனுக்கு  30 மாதிரி வினாத்தாள்களும், 04 வழிகாட்டிப் புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மாதிரி வினாத்தாள்களும், 04 வழிகாட்டிப் புத்தகங்களும் நலன்புரி நிலைய பாடசாலைகளின் இணைப்பதிகாரியும்,  கல்வி அதிகாரியுமான திருவாளர் த. மேகநாதன் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் நலன்புரி நிலையத்திலுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு நலன்புரி நிலைய ஆசியர்களின் ஊடாக மாணவர்கள் வழிகாட்டப்பட்டு வருகின்றனர். தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான அரசாங்கப் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

இந்த கல்வி நிவாரண செயற்றிட்டத்துக்கு லண்டனில் தேசம்நெற் இணையத்தளம், அகிலன் பவுண்டேஷன் மற்றும் லிட்டில் எய்ட் போன்ற அமைப்புகளினதும், சில பரோபகாரிகளினதும் உதவி பெறப்பட்டது. இலங்கையில் சிந்தனைவட்டம் இத்திட்டத்தை நேரடிப் பராமரிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தியது. மேலும் மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியமும் இதற்கான நிதியுதவிகளை வழங்கியது. இந்த கல்வி நிவாரண செயற்றிட்டத்தின்போது ஒவ்வொரு மாணவனுக்கும் 570ரூபாய் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களும்,  4 வழிகாட்டி புத்தகங்களும் கிடைக்க வழி செய்யப்பட்டன.

இத்திட்டத்தில் மொத்தப் பணப் பெறுமதி 27இலட்சத்து 77ஆயிரத்து 40 ரூபாவாகும். இச்செலவில் மூன்றிலொரு பங்கான 9 இலட்சத்து 25ஆயிரத்து 680 ரூபாவை சிந்தனைவட்டம் பொறுப்பேற்றதுடன்,  மாதிரி வினாத்தாள்கள் தயாரித்தல், அச்சிடல்,  பொதியிடல்,  நலன்புரிநிலையத்தில் ஒப்படைத்தல் போன்ற பணிகளையும் மேற்கொண்டது. இத்திட்டத்திற்கு மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம் 7இலட்சம் ரூபாவை வழங்கியது.

மீதமான 11 இலட்சத்து 51ஆயிரத்து 360 ரூபாவை தேசம்நெற் பொறுப்பேற்றது. இத்தொகையில் இரண்டு இலட்சம் ரூபாவினை நேரடியாக தேசம்நெற் வழங்கியது. மீதமான தொகையில் 3000 பவுண்களை லண்டன் அகிலன் பவுண்டேசன் நிறுவனத்தினரும்,  1000 பவுண்களை லிட்டில் எய்ட் நிறுவனத்தினரும் மீதித் தொகையான 1000 பவுண்களை சில பரோபகாரிகளும் ஏற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவருக்குமான விரிவான கணக்கறிக்கைகளும்,  செயற்பாட்டறிக்கைகளும் நலன்புரிநிலையத்திலிருந்து பெறப்பட்ட உறுதிப்பாட்டுக் கடிதங்களும் தனித்தனியாக விரைவில் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடபுலத்து மண்ணில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலை மாணவர்களும்,  அதேபோல முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும்,  துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய்,   ஒட்டிசுட்டான்,   மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் இடம்பெயர்ந்து  நலன்புரிநிலையங்களில் வாழ்ந்து வருகின்றனர். வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் சுமார் 53 பாடசாலைகளில் இம்மாணவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிந்தனைவட்டம் தேசம்நெற் ஆகியவற்றால் வழங்கப்பட்ட மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகங்களும் வலயம் 0, வலயம் 1,  வலயம் 2 , வலயம் 3, வலயம் 4, வலயம் 5 நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கும் மேலும் சுமதிபுரம்,  தரம்புரம், வீரபுரம் நலன்புரி நிலைய மாணவர்களுக்கும் நகர்ப்புறங்களிலுள்ள 07 பாடசாலையில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கும் நேரடியாக விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

llll.jpg

“அணு ஆயுதம் அற்ற உலகம் வேண்டும்” : உலகைப் பொருத்தமட்டில் இது ஒரு கோசம் மட்டுமே – புன்னியாமீன்.

little_boy.jpgஉலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் ஒன்றை அமெரிக்கா வழங்கி  2009 ஆகஸ்ட் 6ஆம் திகதியுடன் 64 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 1945 ஆவணி (August) 06ம் நாள் காலையும் வழமை போன்றே ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமா நகரமும் துயில் கலைந்து பரபரப்பாகிக் கொண்டிருந்தது. எத்தனையோ சுனாமிகளுக்குப் பழக்கப்பட்டிருந்த ஜப்பானியர்களால் வரப்போகும் சூறாவளியைப்பற்றி அறிந்திருக்க முடியவில்லை. எனோலா கே (Enola Gay) என்கின்ற B-29 ரக விமானத்தில் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து, அந்நாட்டின் விமானப்படை வீரரான போல் டிபெட்ஸ், ஹிரோஷிமா நகரினை அண்மித்துக் கொண்டிருக்கையில் நேரம் காலை 8.00 மணியினைத் தாண்டி விட்டிருந்தது. சரியாக காலை 8.15 இற்கு அந்த சூறாவளி விண்ணிலிருந்து தரைநோக்கி முதலாவது அணுகுண்டு மனிதகுலத்தை நாசமாக்க வெடித்துக் கிளம்பியது.

அணு குண்டு அணுக்கரு பிளவு முறையிலோ, அணுக்கரு புணர்வு முறையிலோ அழிவு ஆற்றலைப் பெறும் வெடிப்பாயுதமாகும். ஏனைய வெடிமருந்துளை ஒப்பிட்டு நோக்கும்கால், அணுகுண்டின் ஆற்றல் பல ஆயிரம் மடங்கு பெரிது. அணுக்கரு பிளவு (Nuclear fission) எனப்படுவது அணு ஒன்றின் கருவானது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இலேசான அணுக்கருக்களாக பிளவுறும் நிகழ்வு ஆகும். இவ்வணுக்கருப் பிளவின் போது சுயாதீனமான நியூத்திரன்களும் ‘காமா’ வடிவத்தில் கதிரியக்க ஆற்றலும் வெளிப்படுகின்றன. பாரமான தனிமங்களின் பிளவின் போது பிகப் பெரிய அளவில் ஆற்றல் மின்காந்த அலைகள் ஆகவும் இயக்க ஆற்றலாகவும் வெளிப்படுகின்றன.

1939 ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஹான் மெயிட்னர் மற்றும் ஸ்ட்ராஸ்மன் ஆகியோர் அணுக்கரு வினைகளை ஆராயும் பொழூது யுரேனியம் நியூத்திரன்களால் தாக்கப்படும் பொழுது அது பேரியம், கிரிப்டான் ஆகிய அணுக்கருக்களாகப் பிளவுறுவதை அவதானித்தனர். 200 MeV அளவு ஆற்றல் வெளிவிடப்பட்டதையும் அவர்கள் கண்டறிந்தனர்.முதன்முறையாக அணுஆயுதம் அமெரிக்காவில், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சார்ந்த புலம் பெயர்ந்த அறிவியளாலர்களாலும், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் கூட்டுமுயற்சியாலும்,  இரண்டாம் உலகபோரின்போது “Manhattan Project” என்ற பெயரில் நடந்த இரகசிய ஆராய்ச்சிகளின் விளைவாக உருவாக்கபட்டது. முதல் அணுஆயுதம் ஜெர்மானிய நாசிகளுடன் எற்பட்ட ஆயுதப்போட்டியின் விளைவாக உருவாக்கப்பட்டாலும்,  ஜப்பானியர்களுக்கு எதிராக ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீது பிரயோக படுத்தபட்டது

சின்னப்பையன் (Little Boy)  தன் கடமையைச் சரிவரச் செய்து விட்டான் என்கின்ற சேதியோடு போல் டிபெட்ஸ் தன் தாயகத்திற்கு திரும்பினார். ஹிரோஷிமா எரிந்தழியத் தொடங்கியது. முதலாவது அணுகுண்டின் அனர்த்தத்தைக் கண்டு மனிதகுலம் உறைந்தது. ஒற்றைக் குண்டு, சுமார் 4 இலட்சம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில் 580 மீற்றர் உயரத்தில் அக்குண்டு வெடித்ததும் கண்களைக் குருடாக்கும் வெளிச்சம் வான் வெளியில் பரவியது. காற்றின் வெப்பநிலை 4,000 சதம பாகைக்கு உயர்ந்தது. மணிக்கு 400 கிலோமீற்றர் வேகத்தில் சூறாவளி ஊழித் தீயாய்ப் புறப்பட்டது. குண்டு வெடித்த 15 செக்கன்களில் 12 ஆயிரம் மீற்றர் உயரத்துக்கு இராட்சதக் கதிர்வீச்சுப் புகை மண்டலம் எழுந்து நின்றது. மரங்கள் தீப்பந்தங்களாகின. இரும்புத் தூண்கள் உருகி ஓடின. குண்டு வெடித்த ஒரு நிமிடத்தில் ஒரு இல்சத்து நாற்பதினாயிரம் அப்பாவி மக்களுடன் அந்த நகரையே சுடுகாடாக்கியிருந்தது. ஹிரோஷிமாவில் இருந்த சுமார் 75 ஆயிரம் கட்டிடங்களில் 70 சதவீதமானவை சாம்பலாகின.

மீண்டும் மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9 முற்பகல் 11.02 மணிக்கு “குண்டுமனிதன்’ (Fat Man)  என்று பெயரிடப்பட்ட மற்றொரு அணுகுண்டை நாகசாகி நகரின் மீது அமெரிக்கப் போர் விமானம் வீசியது. நகரின் மையப்பகுதியில் இருந்து 500 மீற்றர் உயரத்தில் வெடித்த அக்குண்டினால் அந்நகரில் வாழ்ந்த 280,000 மக்களில் 40 ஆயிரம் பேர் உடனடியாகவே இறந்தனர். இரு அணுகுண்டுத் தாக்குதல்களினதும் விளைவான காயங்களினாலும் கதிர்வீச்சுத் தாக்கங்களினாலும் அடுத்த ஒருவருடத்திற்குள் இரு நகரங்களிலும் சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் பலியாகினர். ஹிரோஷிமாவில் 13 சதுர கிலோ மீற்றர் பரப்பளவும் நாகசாகியில் 6.7 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் முற்றாக எரிந்து சாம்பலாகின. உயிர் தப்பியவர்கள் பல தசாப்தங்கள் கழித்தும் கூட கதிரியக்க நச்சினாலும் புற்று நோயினாலும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட வண்ணமேயிருக்கிறார்கள். இன்றும் கூட அந்த நகரங்களில் பிறக்கும் பல குழந்தைகள் ஊனமுற்றவர்களாகவே உலகைத் தரிசிக்கிறார்கள்.

எப்படியோ இரண்டாவது உலகமகாயுத்தத்துக்கு பின்னரான காலகட்டத்திலே கெடுபிடியுத்தம் தீவிரமடைந்த போது 1962 கியூபா ஏவுகணை நெருக்கடி போன்ற சில சந்தர்ப்பங்களில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படக்கூடிய ஆபத்தின் விளிம்புக்கு உலகம் சென்றபோதிலும் கூட கடந்த 64 வருடங்களாக அணுவாயுத அனர்த்தம் தவிர்க்கப்பட்டே வந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கதாகும். ஹிரோஷிமா, நாகசாகி குண்டு வீச்சுகளுக்கு பிறகு, சுமார் இரண்டாயிரம் தடவைகளுக்கு  மேல் சோதனைகளுககாக பல்வேறு நாடுகளால் அணுகுண்டு வெடிக்க வைக்கபட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியமும் தனது முதல் அணுஆயுதத்தை சோதனையைச் செய்தது. அமெரிக்காவுக்கும்,  சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடந்த கடும் ஆயுத போட்டியின் விளைவாக, 1950களில் ஐதரசன் அணுகுண்டு கண்டுபிடிக்கபட்டது. 1960களில் எற்பட்ட ஏவுகணை தொழிநுட்ப வளர்ச்சியினால், அணுஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன.

அணுகுண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த நாடுகளாக உறுதிசெய்ய நாடுகள் முறையே (காலமுறைபடி) ஐக்கிய அமெரிக்க நாடுகள், இரசியா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் வட கொரியா. பிற சில நாடுகளும் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டிருக்கலாம் என்ற ஐயம் இருப்பினும், முழுமையாக அதை உறுதிசெய்ய இயலவில்லை. உதாரணமாக, இஸ்ரேல் அணுஆயுதவான்வழி தாக்குதலுக்கு பயன்படுத்தபடும் சில துணைக்கருவிகளை உருவாக்கியுள்ளதை கருத்தில்கொண்டால், அது அணுஆயுதங்களை கொண்டுள்ளதோ என்ற ஐயம் எழுவது திண்ணம். அண்மைகாலமாக, ஈரான் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள முயலுவதாக அமெரிக்கா குற்றம் சாற்றுகிறது.

ஜப்பானில் 2009 ஆகஸ்ட் 6ஆம் திகதி  64 ஆவது ஹிரோஷிமா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தவர்களுக்கு செலுத்தப்பட்ட நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய ஹிரோஷிமா மேயர், அடுத்த பத்தாண்டுகளில் உலகம் எங்கும் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க அழைப்பு விடுத்தார். இந்நிகழ்ச்சியில் அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுடன் 50 ஆயிரம் மக்கள் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள். ஜப்பான் பிரதமர் டாரோ அசோவும் இந்நிகழ்வில் பங்கேற்றார். அணு ஆயுதம் அற்ற உலகம் வேண்டும் என்று குறிப்பிட்ட ஹிரோஷிமா மேயர், வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் இது கைகூட உலக நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனை ஒரு நினைவு நாள் சொற் பொழிவு என சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அணு ஆயுதம் அற்ற உலகம் வேண்டும் என்ற கோசம்.உலக நாடுகளில் சமாதனத்திற்கு விடுக்கப்படும் அழைப்பானையாகும். ஆனால் ஹிரோசிமா,  நாகசாகியின் கொடுமைகளைக்கண்டு கண்டும் அணுஆயுதப் போட்டியில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.இன்று அந்நாடுகள் அறிவித்துள்ள புள்ளி விபரங்கள் படி அணுஆயுத நாடுகள் வைத்திருக்கும் அணுஆயுதங்களின் எண்ணிக்கை பின்வருமாறு உள்ளது.

ஐக்கிய அமெரிக்க நாடுகள் வைத்துள்ளதாக கூறப்படும் அணுஆயுதங்களின் எண்ணிக்கை 10,240 பரிசோதனை நடந்த ஆண்டு 1945 : ரஷ்யா (முன்னாள் சோவியத் ஒன்றியம்) வைத்துள்ளதாக கூறப்படும் அணுஆயுதங்களின் எண்ணிக்கை 8,400 பரிசோதனை நடந்த ஆண்டு 1949 : சீனா வைத்துள்ளதாக கூறப்படும் அணுஆயுதங்களின் எண்ணிக்கை 390 பரிசோதனை நடந்த ஆண்டு 1964 : பிரான்ஸ் வைத்துள்ளதாக கூறப்படும் அணுஆயுதங்களின் எண்ணிக்கை 350 பரிசோதனை நடந்த ஆண்டு 1960 : ஐக்கிய இராச்சியம் வைத்துள்ளதாக கூறப்படும் அணுஆயுதங்களின் எண்ணிக்கை 200-300 பரிசோதனை நடந்த ஆண்டு  1952 : இந்தியா 60-90 வைத்துள்ளதாக கூறப்படும் அணுஆயுதங்களின் எண்ணிக்கை பரிசோதனை நடந்த ஆண்டு 1974 : பாகிஸ்தான் வைத்துள்ளதாக கூறப்படும் அணுஆயுதங்களின் எண்ணிக்கை 30-52  பரிசோதனை நடந்த ஆண்டு 1998 : வட கொரியா வைத்துள்ளதாக கூறப்படும் அணுஆயுதங்களின் எண்ணிக்கை 0-18 பரிசோதனை நடந்த ஆண்டு 2005

அதே நேரம்  இன்று உலகில் சுமார் 40 நாடுகளிடம் அணுவாயுத மூலப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றை வைத்து நோக்கும் போது அணுஆயுதங்களின் போட்டி குறையவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.  அணுவாயுதங்களைத் தயாரிப்பதற்கும் பேணுவதற்கும் செலவிடப்படுகின்ற நிதிபற்றிய மதிப்பீடுகள் அதிர்ச்சி தருகின்றன.அமெரிக்கா 2008 ஆம் ஆண்டு மாத்திரம் அணுவாயுதங்களுக்காகவும் அதனுடன் தொடர்புடைய செயற்திட்டங்களுக்காகவும் 5240 கோடி டொலர்களைச் செலவிட்டிருக்கிறது. அணுவாயுதங்களின் தரத்தை உயர்த்துவதற்கும் பராமரிப்பதற்கும் அமெரிக்கா வருடாந்தம் 2900 கோடி டொலர்களை செலவிடுகிறது. இது இந்தியாவின் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட அதிகமானதாகும். அணுவாயுத தளபாடங்களை உற்பத்தி செய்வதற்கு வல்லாதிக்க நாடுகள் பல பதினாயிரம் கோடி டொலர்களை செலவிட்டிருக்கின்றன.

உலக வரலாற்றில், அணுஆயுதங்கள் நாட்டின் ராணுவ பலத்தின் சின்னமாகவும், ராணுவ தொழிநுட்ப வளர்ச்சியை பறைசாற்றும் முயற்சியாகவும் கருதப்பட்டன. அமெரிக்காக்கும், சோவியத் குடியரசுக்கும் இடையே நடந்த பனிப்போரின்போது, அணுஆயுதத்தை பரிசோதனைகள் எச்சரிக்கை சிமிக்கைகள் போல் பயன்படுத்தபட்டன. இவ்வாறு பனிப்போர் நடந்து கொண்டிருக்கும் காலத்தில், மற்ற சில நாடுகளும், அணுஆயுத தொழிநுட்பத்தை கற்றுக்கொண்டு இருந்தன. அவையாவன, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் சீனா. இந்த ஐந்து அணுஆயுத நாடுகளும் இணைந்து அணுஆயுத பரவலை தடுக்க வழிசெய்யும் ஓர் ஓப்பந்ததை (NPT)  உருவாக்கி, மற்ற நாடுகளையும் அதில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தின. அணுஆயுத பரவல் தடுப்பு ஓப்பந்ததில் சரத்துகள் விவாதத்துகுரியவையாக சில நாடுகள் கருதியகையாதலால், இந்த ஓப்பந்தம் முழு வெற்றி அடையவில்லை. ஓப்பந்ததை விட்டு விலகி சில நாடுகளும் (வட கொரியா), ஓப்பந்ததில் கையெழுத்திடாமல் சில நாடுகளும் (இந்தியா, பாக்கிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, மற்றும் இஸ்ரேல்) அணுஆயுத தொழிநுட்பத்தை அடைந்தன. 1990 களின் தொடக்கத்தில், பனிப்போர் முடிவுற்ற சூழ்நிலையில, அமெரிக்காவும், ரஷ்ய கூட்டமைப்பும், தம் அணுஆயுதங்களை படிப்படியாக குறைத்துக் கொள்வதாக அறிவித்தன.

2005 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் பாகிஸ்தானை சார்ந்த பிரபல விஞ்ஞானி அப்துல் கதீர் கான், தான் ஈரான், லிபியா, வட கொரியா ஆகிய நாடுகளுக்கு அணுஆயுத தொழில்நுட்பத்தை விற்றதாக ஒப்புக்கொண்டார். இது வள்ர்ந்த நாடுகள்டையே பெரும் அதிச்சியலையை உருவாக்கியது. அக்டோபர் 9, 2005ல், வட கொரியா தனது, முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.

அணு ஆயுதம் அற்ற உலகம் வேண்டும் என்ற கோசம் இன்று முன்வைக்கப்படுகின்றன. உலக நாடுகளில் சமாதானத்திற்கு விடுக்கப்படும் அழைப்பானையாகும். ஆனால் ஹிரோசிமா,  நாகசாகியின் கொடுமைகளைக்கண்டு கண்டும் அணுஆயுதப் போட்டியில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும் இந் நிலையில் இது ஒரு கோசம் மட்டுமாகவே இருக்கப் போகின்றது.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0807-no-escape-from-nightmare.html

உலக ந‌ட்பு ‌தின‌ம் -புன்னியாமீன்

youth.pngஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ந‌ட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இ‌ந்த ஆ‌ண்டு (2009) ஆகஸ்ட் 2ஆ‌ம் திகதி உலக ந‌ட்பு ‌தின‌மாகும். ஏனைய தினங்களுடன் ஒப்புநோக்கும்போது மனிதவிழுமியங்களில் உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தினமாகவே இது காணப்படுகின்றது. இங்கு நட்பு எனும்போது பல பரிமாணங்களை எடுத்துக் கூறலாம். இருவருக்கிடையில் அல்லது பலருக்கிடையில் ஏற்படக்கூடிய நட்பு இரு குழுக்களிடையே அல்லது பல குழுக்களுக்கிடையே ஏற்படக்கூடிய நட்பு, இரண்டு சமூகங்களுக்கிடையே அல்லது பல சமூகங்களுக்கிடையே ஏற்படக்கூடிய நட்பு, இரண்டு நாடுகளுக்கிடையே அல்லது  பல நாடுகளுக்கிடையே ஏற்படக்கூடிய நட்பு என்று பல வடிவங்களில் அர்த்தம் கற்பிக்கலாம். ஆனால், பொதுவாக நட்பு தினம் என்று கூறும்போது இருவருக்கிடையே ஏற்படக்கூடிய நட்பின் பரிமாணமே கருத்திற் கொள்ளப்படுகின்றது. இது ஆண் -ஆணிடையே, பெண் – பெண்ணிடையே, ஆண் – பெண்ணிடையே ஏற்படலாம். 

ஒ‌‌‌‌வ்வொரு ம‌னிதரு‌க்கு‌ம் அவருடைய வா‌ழ்‌க்கை‌யி‌ல் ந‌ம்பகமான ஆலோசக‌ர் தேவை‌ப்படு‌கிறா‌ர். மு‌க்‌கியமாக ந‌ண்ப‌ர்க‌ள் தேவை‌ப்படு‌கிறா‌ர்க‌ள். ஒருவருடைய ‌சி‌ந்தனைகளையு‌ம், குண‌ங்களையு‌ம் ப‌ட்டை‌ ‌தீ‌ட்ட, உத‌வி செ‌ய்ய அவரை ந‌ன்கு உண‌ர்‌ந்த ஒரு ந‌ண்ப‌ர் தேவை‌ப்படு‌கிறா‌ர்.

பெ‌ற்றோ‌ர்க‌ள், மனை‌வியை‌விட நமது து‌க்க‌த்‌‌திலு‌ம், ச‌ந்தோஷ‌த்‌திலு‌ம் ப‌ங்கு கொ‌ள்வ‌தி‌ல் ந‌ண்ப‌ர்க‌ள் மு‌‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கின்றன‌ர். தா‌யிடமு‌ம், மனை‌வி‌யிடமு‌ம், த‌ந்தை‌யிட‌ம்கூட ஆலோசனை செ‌ய்ய முடியாத பல விடய‌ங்களை நண்ப‌ர்களுட‌ன் கல‌ந்துரையாடுவத‌ன் மூல‌ம் ஒரு தெளிவை, தீர்வை பெறலாம். சில சந்தர்ப்பங்களில் பிறருடன் மேற்கொள்ளப்படும் நட்பைப் போலவே குடும்ப அங்கத்தவர்களிடையே நட்பார்த்தமான உறவுகள் ஏற்படுவதுண்டு.

உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது என பெரியவர்கள் குறிப்பிடுவார்கள். உண்மையான நட்பின் முன் தமது உள்ளக்கிடக்கைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது மனதில் ஏற்படும் அமைதியை அளவிட முடியாது. பிரச்சினைக்குரிய ஒரு விடயத்தை அல்லது தீர்வு காண வேண்டிய விடயத்தை மனதுக்குள் அடக்கி வைத்துக்கொள்வதனால் விமோசனம் கிடைக்கப்போவதில்லை மாறாக மன அழுத்தங்களும், விபரீதங்களுமே ஏற்பட இடமுண்டு.உண்மையான நட்புடன் அவற்றைப்பகிர்ந்து கொள்கையில் சில சந்தர்ப்பங்களில் எமக்குக் கிடைக்கும் ஆலோசனைகள் விலைமதிக்க முடியாமல் இருக்கலாம். த‌ற்போதைய வேகமான ந‌வீன காலத்திலும் நட்பினை கௌரவப்படுத்துவதில் பலரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் சில நட்பினை கலங்கப்படுத்தாமலும் இருப்பதில்லை.

சாதி, இ‌ன‌‌ம், மொ‌ழி, பால் பாகுபாடு இன்றி அன்பின் அடையாளமாக கொ‌ண்டாட‌ப்ப‌ட்டு‌வரு‌ம் இ‌ந்த நண்பர்கள் ‌தி‌ன‌த்‌‌தி‌ல், தலைமுடி நரை‌‌த்தாலு‌ம் ந‌ண்பா உ‌ன்‌னிட‌ம் நா‌ன் கொ‌ண்ட ந‌ட்பு இ‌ன்னு‌ம் மாற‌வி‌ல்லை எ‌ன்று உலகெ‌ங்கு‌ம் உ‌ள்ள வயதானவ‌ர்க‌ள்கூட இ‌ன்றைய ‌தின‌த்‌தி‌ல் ச‌ந்‌தி‌த்து த‌ங்களது வா‌ழ்‌த்து‌க்களை‌ப் ப‌ரிமா‌றி‌க்கொ‌ள்‌கி‌ன்றன‌ர்.

இ‌‌ந்த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன்போது அவ‌ர்க‌ள் ஞாப‌க‌ம் வருதே… ந‌ண்பா ஞாபக‌ம் வருதே… ப‌ள்‌ளி‌க் கால‌ங்‌க‌ளி‌ல் நா‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌ந்து சு‌ற்‌றியது. ஆற்றங்கரை‌யி‌ல் ‌சிறு வய‌தி‌ல் க‌ல் எ‌றி‌‌ந்து ‌விளையாடியது. மா‌ந்தோ‌ப்‌பி‌ல் மா‌ங்கா‌ய் ப‌றி‌த்து ‌தி‌ன்ற சுவையான நா‌ட்க‌ள் எ‌ன்று பல பழைய ‌நினைவுகளை நி‌னை‌த்து‌ப் பா‌ர்‌‌த்து பூ‌ரி‌ப்படைவா‌ர்க‌ள்.

ந‌ண்ப‌ர்க‌ள் ‌தின‌த்‌தி‌ல்… நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌க்க வா‌ய்‌ப்பு ‌கிடை‌க்கு‌ம் ந‌ண்ப‌ர்க‌‌ள் ஒருவரை ஒருவ‌ர் க‌ட்‌டி‌த்தழு‌வி த‌ங்களது அ‌ன்பை ப‌ரிமா‌றி‌க்கொ‌ள்‌‌கி‌ன்றன‌ர். தொலைதூர‌த்‌தில இரு‌‌ப்பவ‌ர்களு‌க்கு செ‌ல்பே‌சி வ‌ழியாக குறு‌ந்தகவ‌ல் அனு‌ப்‌பியு‌ம் (எ‌ஸ்.எ‌ம்.எ‌ஸ்.), க‌ணி‌னி வ‌ழியாக ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் அனு‌ப்‌பியு‌ம் த‌ங்க‌ள் ந‌ட்பை பல‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ள்‌‌கி‌ன்றன‌ர்.

து‌ன்ப‌ம் வரு‌ம் வேளை‌யி‌ல் கடவுளை ‌நினை‌க்‌கிறோம். அடுத்ததாக உத‌வி கே‌ட்க ந‌ல்ல ந‌ண்ப‌ர்களை‌ப் ப‌ற்‌றிய எ‌ண்ண‌ம் ந‌ம்மையு‌ம் அ‌றியாம‌ல் ந‌ம் மன‌தி‌ல் உதயமா‌கிறது. பர‌ஸ்பர‌ம் அ‌ன்பை ம‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் து‌ன்ப‌த்தையு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் இ‌ந்த ஆ‌ற்ற‌ல் ந‌ட்பு‌க்கு ம‌‌ட்டுமே உ‌ரிய ‌சி‌ற‌ப்பா‌கிறது. ஆனால் பலர் நட்பின் மகத்மீகத்தை சரிவர உணர்ந்து கொள்வதில்லை.
 
இதுநா‌ள் வரை‌யிலு‌ம், ந‌ண்ப‌ர்களே எ‌ன‌க்கு இ‌ல்லை எ‌ன்று யாரு‌ம் கூ‌றி‌‌விட முடியாது. நட்பு, தோழமை என்பது இருவர் இடையேயோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், பால், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நட‌ந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
 
திருக்குறளில் திருவள்ளுவர் நட்பு பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
 
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
 
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
 
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
 
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
 
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
 
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
 
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
 
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
 
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
 
ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்களைப் போல நண்பர்களையும் இரண்டு கோணங்களில் அவதானிக்கலாம். அவர்கள் நல்ல நண்பர்கள்இ கெட்ட நண்பர்கள்.

நல்ல நண்பன் தனது நட்பை முதலில் எவ்வித பேரம் பேசலும் இன்றி, முன் நிபந்தனையின்றி விரிந்த மனப்பான்மையுடன் கருமித்தனம் ஏதுமின்றி அள்ளி வழங்கத் தயாராக இருப்பான். நல்ல நண்பன் தனது தரத்தினை பெறுமதியாகக் கருதுகிறான். தனது சிந்தனை ஆன்மா, பண்பாடு, நடத்தை, ஒழுக்கம் விழுமியம் என்பனவற்றை வெளிப்படையாகவே வழங்குகின்றான். தனது ஆளுமைப் பண்புகள் இதர மனிதர்களால் மாசுபடுவதை இம்மியளவும் விரும்புவதில்லை. எனவே, அவன் தனது நட்பை நாடி வரும் மனிதர்களை நோக்கி முன் நிபந்தனை – உறுதிப்பிரமாணம் என்பனவற்றின் அடிப்படையில் நகருகிறான். ஆகவே உறுதிப் பிரமாணத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படும் நட்பே நித்தியமானதும், நிரந்தரமானதுமாகும்.

மனித வாழ்வில் நட்பு என்பது விசித்திரமானது. விந்தையானது. அதனால் ஏற்படும் பாதிப்பு ஆழமானது. பலரது வாழ்வில் பெரும் திருப்பங்களுக்குக் காரணமாகவும் அது அமைகிறது. பெற்றோர்களது அன்பு உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது. பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை சீர்திருத்த முடியாத கையாலாகாத நிலை உருவாகும் பட்சத்தில் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை அணுகி தமது பிள்ளைகளை சீர்திருத்த முனைவது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிதர்சன நிகழ்வுகளாகும்.

பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கு இடையில் உள்ள உறவில் மரியாதைப் பண்பின் காரணமாக அல்லது வெறுப்பின் காரணமாக விரிசல் அதிகரிக்க, அதிகரிக்க நண்பர்களுடனான நட்பு படிமுறை ரீதியாக அதிகரிப்பதையும் அவதானிக்கிறோம். நட்பு என்பது ஒரே அச்சில் வார்க்கப்பட்ட பொருள்களைப் போல அமைந்த விடுகிறது. அதாவது ஒரு நண்பனின் மறு உருவமாக அடுத்தவன் மாறிவிடுகின்றான். சிந்தனைப் பாங்கு பண்பாடு, நடத்தை, நடை, உடை, பாவனை போன்ற சகல விவகாரங்களிலும் ஒருவன் தனது நண்பனை பிரதிபலித்துக் காட்டுகிறான். 

அநேகமாக நட்பு கொள்ளல் என்பது இத்தகைய அறிவுப் பின்னணியும் இன்றியே ஆரம்பமாகிறது. கல்வி வாழ்க்கையிலும் வியாபார கொடுக்கல் வாங்கல், தொழில் சார்ந்த நடவடிக்கைகளின் போது உருவாகும் நட்பு குறுகிய நலன்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகுகிறது. அறிவுத் தேடல் தொழில் பணம், பெண் போன்றவை இலக்காகக் கொள்ளப்படுகின்றன. அவ்வாறு பொழுது போக்கு பின்னணியை கொண்டு எழுகின்ற நட்பு சமூக தீமைகளுக்கு வழி வகுக்கின்றன. புகைத்தல், போதைப் பொருள் பாவனை, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை, நாசகார நடவடிக்கைகள் முதலானவை கெட்ட நண்பன் எனும் நுழைவாயில் மூலம் குடும்பத்தில் நல்லவனாக இருந்த மனிதனிடமும் குடி கொள்கிறான். பின்னர் பெற்றோரும் மற்றோரும் கன்னத்தில் விரல் வைத்து நெற்றி சுருக்கி ஆச்சரியத்துடனும்இ கவலையோடும் வினா எழுப்புகின்ற அளவுக்கு அந்தப்பிள்ளை கெட்டுப் போய் விடுவான். 

எனவே பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல நட்பைப் பெற்றுத் தர முயற்சிப்பதோடு துரதிருஷ்டவசமாக பிள்ளைகளுக்கிடையில் கெட்ட நட்பு அமைந்து விட்டால் மாற்று பரிகாரமாக நல்ல நட்பை பெற்றுக் கொடுக்க முனைய வேண்டும்.
 
இவ்விடத்தில் வைரமுத்துவின் கவியொன்று என் ஞாபகத்திற்கு வருகின்றது. 
 
 நட்பு என்பது, சூரியன் போல்..
எல்லா நாளும் பூரணமாய் இருக்கும்

 நட்பு என்பது, கடல் அலை போல்..
என்றும் ஓயாமல் அலைந்து வரும்
 
நட்பு என்பது, அக்கினி போல்..
எல்லா மாசுகளையும் அழித்து விடும்

நட்பு என்பதுஇதண்ணீர் போல்..
எதில் ஊற்றினாலும் ஒரே மட்டமாய் இருக்கும்
 
நட்பு என்பது, நிலம் போல்..
எல்லாவற்றையும் பொறுமையாய் தாங்கிக் கொள்ளும்
 
நட்பு என்பது, காற்றைப் போல்..
எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும்

நட்பு உன்னதமானது. அதனை மதித்து அதனை கௌரவித்து இத்தினத்தில் எமது நண்பர்களுக்கு எமது நட்பினை பகிர்ந்து கொள்வோம்.

தாய்ப் பால் உலகில் விலைமதிப்பற்ற பொக்கிசம் – புன்னியாமீன்

mother-and-child.jpgதாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும்,  மகத்மீகத்தையும் ஒவ்வொரு இளம் தாய்க்கும் உணர்த்தும் வகையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை  உலக தாய்ப்பால் வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

எத்தகைய சிரமங்கள் ஏற்பட்டாலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் “தாய்ப்பால் ஊட்டுவது பேரிடரிலும் இன்றியமையாதது – நீங்கள் தயாரா?” என்பதை இந்த ஆண்டு உலக தாய்ப்பால் வாரத்தின் கோஷமாக உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) வரையறுத்துள்ளது.

பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை உண்ணும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும். ஒரு குழந்தை பிறந்ததும் அக்குழந்தைக்கு தாயின் பாலை ஊட்டுவது இயற்கையானது. குறிப்பிட்ட காலம்வரை குழந்தைக்கு தாய்ப் பாலை ஊட்ட வேண்டிய கடமை தாய்க்குண்டு.

இந்த நவீன இலக்ரோனிக் யுகத்தில் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக பல்வேறுபட்ட சிரம நிலைகள் கூறப்பட்டாலும்கூட,வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சரி,  வளர்முக நாடுகளிலும் சரி தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டின் உறுதித்தன்மையில் மாத்திரம் மாற்றங்களே வரவில்லை.  விஞ்ஞானம் வளர்ச்சிடைய வளர்ச்சியடைய தாய்ப்பாலின் முக்கியத்துவம் விஞ்ஞான ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டே வருகின்றது.

வேலைக்குச் செல்லும் தாயாக இருந்தால் தாய்ப்பாலூட்டுவது இன்று ஒரு பெரும் பிரச்சினையாக மாறி வருகின்றது. இந்நிலையைக் கருத்திற் கொண்டு அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் சரி,  அபிவிருத்தியடைந்துவரும் பெரும்பாலான நாடுகளிலும் சரி ‘சிசு” பராமரிப்பைக் கருத்திற் கொண்டு பிரசவத்தின் பின்பு தாய்க்கு நீண்டகால விடுமுறை வழங்கப்படுகின்றது. அது தவிர,  பாலூட்டும் காலம்வரை சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஆனாலும்,  சில தாய்மார் குறிப்பாக தொழில் செய்யும் தாய்மார் இது விடயத்தில் ஓரளவுக்கு அசட்டைத்தனம் காட்டுவதும் தமது பிரசவ விடுமுறை முடிவதற்கு முன்பு குழந்தைக்கு வேறு ஏதாவது ஒரு பாலைப் பழக்கி விடவேண்டும் என்று ஆர்வம் காட்டுவதையும் காணமுடிகின்றது. எத்தனையோ பெண்கள் குழந்தை இல்லாமையால் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பெறும் வரம் பெற்றவர்கள் அந்த பேற்றின் மகத்துவம் தெரியாமல் அதை அலட்சியப்படுத்துகின்றனர்.  எத்தகைய இடர்பாடுகள் ஏற்பட்டாலும் குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்ட ஒரு தாய் தயாராக இருக்க வேண்டும் என்ற கருத்தினையே இவ்வாண்டுக்கான உலக தாய்ப்பால் வாரத்தின் தொனிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளதன் ஊடாக இத்தகைய தாய்மாரின் மனோநிலைகளும் போக்குகளும் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது.

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களுக்கு கிடைக்கும் மருத்துவ விடுப்பில் முழுமையாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதையே முக்கிய பணியாகக் கருத வேண்டும். குழந்தை அழும்போதெல்லாம் அதற்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அடிக்கடி பாலூட்டும்போது தான் போதுமான அளவு பால் சுரக்க வழி ஏற்படுகிறது. பேறு கால மருத்துவ விடுப்பு முடிந்து,  குழந்தையை வீட்டில் விட்டு விட்டு மீண்டும் வேலைக்குச் செல்லும் நிலையிலும் தாய்ப்பால் கொடுக்க முடியும். காலையில் வேலைக்கு புறப்படும் முன்பு,  எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க முடியுமோ அத்தனை முறை கொடுக்கலாம். வேலைக்குக் கிளம்புவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு, தாய்ப்பாலை ஒரு கிண்ணத்தில் சேகரித்து வைத்து வீட்டில் உள்ளோர் மூலம் பாலாடை மூலம் அதைக் கொடுக்கலாம். அதற்குத்  தாய்ப்பாலை தனியாக சுத்தமான கிண்ணத்தில் எடுத்து வைத்து வீட்டில் உள்ளோரிடம் அதனைக் குழந்தைக்கு முறைப்படி கொடுக்கச் சொல்லி விட்டு பணிக்குச் செல்லவும்.

சாதாரண வெப்பநிலையில் 12 மணி நேரமும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் 24 மணி நேரமும் தாய்ப்பால் கெடாமல் இருக்கும். பணியிலிருந்து வீட்டிற்கு திரும்பியவுடன் மறுபடியும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை இரவு, பகல் பாராமல் தொடர வேண்டும். பால் புளித்திருக்கும் போது  கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் முற்றிலும் தவறானது.

அத்துடன் மார்பகக் காம்பில் விரிசல் ஏற்பட்டு தாய்க்கு வலி ஏற்படின் தாய்ப்பாலை கறந்து கிண்ணத்தில் வைத்து தேக்கரண்டி அல்லது பாலாடை மூலம் குழந்தைக்குப் புகட்ட வேண்டும். மார்பகக் காம்பு அளவுக்கதிகமாக நீண்டு இருந்தாலும் குழந்தையால் பால் குடிக்க முடியாது. குழந்தையின் தொண்டையில் அடைத்துக் கொள்வதால் மூச்சு திணற ஏதுவாகும்.
 
பிறந்த குழந்தைகளுக்குத் திரவ உணவுகளிலேயே தலைசிறந்ததும்,  ஈடு இணையற்றதுமானது தாயின் பாலாகும். இதை பாமரத் தாய்மார்கள முதல், படித்த தாய்மார் வரை நன்கு தெரிந்து வைத்தே உள்ளனர். கர்ப்பத்தில் தாய்க்கும் சேய்க்குமுள்ள தொப்புள்கொடி உறவைத் தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுவதினூடாகவே  தாய்க்கும்,  குழந்தைக்கும் உள்ள உறவு  நெருக்கமாக்கப்படுவதாக பெரியவர்கள் கூறுவார்கள். 

இயற்கையின் படைப்புகளில்,  விந்தைகளில்,  நியதிகளில் தாய்ப்பால் ஊட்டுவதும் ஒன்று. உலகிலுள்ள ஏறத்தாழ 4500 வகையான பாலுட்டும் உயிரினங்களில் ஒன்றாக மனித இனமும் காணப்படுகின்றது. ஆனால், ஆறறிவு படைத்த மனித இனத்தில் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுவதில் பல்வேறு பிரச்சினைகள் உண்டாவது விந்தைக்குரியதே. பொதுவாக அந்தந்த உயிரினங்களுக்கு அதனதன் பாலே உணவாகிறது. ஐயறிவு படைத்த ஜீவராசிகள் கூட தமது குட்டிகளுக்கு தமது பாலையே ஊட்டும். இது  தவிர,  பிற மிருகங்களின் பாலை ஊட்ட எத்தனிக்காது. இது இயற்கை. இந்த எல்லா உயிரினங்களிலும் நாம் மட்டுமே மற்ற விலங்குகளின் பாலை விலை கொடுத்து வாங்கிக் குடிக்கின்றோம். குறிப்பாக அந்தந்த இனத்தின் தேவைக்கேற்ப அந்தந்தப்பால் அமைந்துள்ளது என இயற்கை விதியினை மறந்து புறக்கணிக்கின்றோம்.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டிற்கே பொருளாதாரப் பொக்கிஷம். குழந்தைகளை நோய்களிலிருந்து தாய்ப்பால் காப்பதுடன் குடும்பச் செலவுகளையும் குறைக்கின்றது. தாய்ப்பால் எளிதில்,  வெதுவெதுப்பான சூட்டில் தேவைப்படும் போதெல்லாம் குழந்தைக்குக் கிடைக்கக் கூடியது. கலப்படம் செய்ய முடியாதது. உயர்தரப் புரதம்,  கொழுப்பு, அமினோஅமிலங்கள், தாது உப்புக்கள் மற்றும் லேக்டோ பேசிலஸ் பைபிடஸ்பேக்டர் போன்ற தடுப்புப் பொருட்கள் இவை அனைத்தையும் கொண்ட குழந்தையின் முதல் மூன்று மாதங்களுக்கான ஒரு முழுமையான உணவு.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும்,  சேய்க்கும் எண்ணற்ற பயன்கள் உள்ளன. தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது. தாய்க்கு மகிழ்ச்சியையும்,  ஆத்ம திருப்தியையும் தருகிறது. குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை,  தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது. கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை,  தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.
குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது. பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் சமிபாடடையும். தாய்ப்பாலில் உள்ள “நோய் எதிர்க்கும் சக்தியை உடைய புரதப் பொருள்’ (Immuno Globulin) குழந்தையை கொடிய நோய்கள்,  மார்புச் சளி (நிமோனியா),  தோலில் ஏற்படும் ஒவ்வாமை (அலர்ஜிக்) போன்ற பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. மருந்துகளே கிடைக்க வழியில்லாத குக்கிராமங்களில்கூட கிருமிகளினால் ஏற்படும் வாந்தி,  பேதியை தாய்ப்பால் மட்டும் கொடுத்து குணப்படுத்தலாம். தாய்ப்பாலில் புரதம்,  கொழுப்புச் சத்து மற்றும் மூளை வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமில, கொழுப்பு அமிலங்கள் ஆகியவை இருப்பதால் குழந்தை சீராக உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சி பெற்று வளரும்.

தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது. தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் சில நோய்களுக்கும் மருந்தெனவும் சித்த வைத்தியம் குறிப்பிடுகின்றது. அதாவது எல்லாவிதமான தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்து, ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட இடத்தில் சிறிதளவு தாய்ப்பாலை தடவி வந்தால் விரைவில் குணமாகி விடும், கண்களில் ஏற்படும் எல்லாவித எரிச்சல்,  உறுத்தல், கண் வலி நோய் போன்றவற்றிற்கு கண்களில் தாய்ப்பாலை ஒரு சொட்டு விட்டு உடனடி நிவாரணம் பெறலாம், இரத்த சோகை: இந்த நோயினால் மிகவும் உடல் வலுவின்றிக் காணப்படுவோர் நாள்தோறும் ஒரு சிறிய தேனீர் குவளை அளவு தாய்ப்பாலினைப் பருகி வர நல்ல பலன் தெரியும், கொசுக்கடி,  எறும்பு மற்றும் பூச்சிக்கடியினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட இடத்தில்  தாய்ப்பாலைத் தடவலாம்,  குழந்தைகளின் உடல் சூடு மற்றும்  வயிற்று வலிகளுக்கு தாய்ப்பாலினை குழந்தைகளின் வயிறு,  உச்சித் தலை மற்றும் உள்ளங்கால் பகுதிகளில் தடவி வரலாம், சளி,  இருமலுக்கும் சிறந்த மருந்து,  தொண்டை கரகரப்பு, மூக்கடைப்புக்கும் ஏற்றது,  காது வலிக்கு காதில் ஒரு சொட்டு விட்டால் போதும்….

புட்டிப்பால் தருவதினால் குழந்தைக்கு அடிக்கடி நோய் வருவதுடன் பணமும் வீணாகச் செலவிடப்படுகிறது. புட்டிப் பாலினால் ஏற்படும் வாந்தி ,  பேதி மற்றும் காதில் சீழ் வடிவது போன்ற முக்கிய நோய்கள் புட்டிப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

தாய்ப்பால் ஊட்டுவதினூடாக தனது அழகு சீர்குலைந்துவிடுமென சில தாய்மார் கருதுகின்றனர். ஆனால்,  விஞ்ஞான ரீதியான விளக்கப்படி தாய்ப்பால் ஊட்டுவதினுடாக தாயின் மனநலம் பாதுக்கப்படுகின்றது. இங்கு தாயின் அழகு கூடுமே தவிர குறையாது;. கருப்பைப் புற்றுநோய்,  மார்பகப் புற்றுநோய் தாய்க்கு வருவது தடுக்கப்படுகிறது.தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலையில்,  98 சதவீத அளவுக்கு கர்ப்பம் ஆவது தடுக்கப்படுகிறது. மேலும் தாயின் கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலைக்குத் திரும்ப தாய்ப்பால் உதவுகிறது. குழந்தை பிறந்த பின் ஏற்படும் அதிக இரத்தப் போக்கும் தடுக்கப்படுகிறது.
 
குழந்தையை அடிக்கடி பாலூட்ட அனுமதிக்காத தாய்மார்களுக்கு மார்பகத்தில் தாய்ப்பால் கட்டி வேதனை எடுக்க ஆரம்பிக்கும். இம்மாதிரி நிலை,  அளவுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரந்திடும் தாய்மார்களுக்கும் ஏற்படுகிறது. இதனால் குளிர் காய்ச்சல் ஏற்பட்டு தாய்மார் அவதிப்படுவது உண்டு. சில நேரங்களில் மார்பகத்தில் கட்டியுள்ள பால் சீழாக மாறும் நிலை ஏற்பட்டு, அதனை அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். தாய் தன் பாலைக் கொடுக்க முடியாத நேரத்தில்,  மற்றொரு தாயின் பாலைக் கொடுப்பதில் தவறில்லை.

ஒரு பெண் தாய்மை அடையும்போது இயற்கையாகவே பெண்களின் உடல் அமைப்பில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன கருவான குழந்தையை தட்ப வெப்ப சூழ் நிலைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக காப்பதற்கு உதவியாக கருவறை என்னும் கருப்பையில் அக் குழந்தைக்கு தேவையான,  காற்று , நீர்,  மற்றும் அதற்கு தேவையான உணவு,  அத்தனையும் தாயின் தொப்புள் கொடி வழியாக செலுத்தப்படும் பிறந்த குழந்தைக்கு இந்த உலகில் வந்தவுடன் உணவுப் பொருளாக தாய்ப்பால் தானாகவே சுரக்க ஆரம்பிக்கிறது

குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்குப் பால் உறிஞ்சும் தன்மை மிக அதிகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் கண்டிப்பாக ஒவ்வொரு தாயும் தாய்ப்பால் கொடுத்திட வேண்டும். சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளிவந்த உடன் பாலூட்டத் தொடங்கிவிடலாம். குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் தொடங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும். அதுவும் குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் மஞ்சள் நிற – நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்த சீம்பாலை கட்டாயம் குழந்தைக்கு தாய் கொடுக்க வேண்டும். பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த ‘கொலஸ்ட்ரம்” என்ற சீம்பால் – வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும். பொதுவாக கிராமப்புறங்களில் அல்லது வயது முதிர்ந்தவர்களிடம் இந்த மஞ்சள் நிற சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது எனவும் அந்தப் பாலை பீய்ச்சி வெளியேற்றிவிட வேண்டும் என்றும் கூறுவர். உண்மையிலேயே இது மிகவும் தவறான கருத்தாகும். விஞ்ஞான விளக்கங்களின்படி இந்த சீம்பாலிலே குழந்தைக்கான நோய் எதிர்ப்பு சக்திகள் கூடவே காணப்படுகின்றது. பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.

சில தாய்மாருக்கு தனது பிள்ளைக்கு தேவையான அளவு பால் சுரப்பதில்லை என்று ஒரு ஆதங்கம் காணப்படுவதுண்டு. சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும். அத்தாய் நல்ல ஆரோக்கியமான உடல் மற்றும் மன நலம் உள்ள நிலையில் காணப்படின் தாய்க்கு தடையின்றி தாய்ப்பால் உறுதியாகச் சுரக்கும். இது இயற்கையானது. அதேநேரம்,  மனோ ரீதியானதும்கூட. எனவே, தனக்குப் போதிய அளவு தாய்ப் பால் இல்லையே என்ற மனநிலையைத் தவிர்த்து தனது குழந்தைக்கு “நிச்சயம் பால் கொடுப்பேன்’ என்ற எண்ணம் மேலோங்கி இருந்தாலே போதும்; அதிகபட்சம் 500 மில்லி லிட்டர் தாய்ப்பால் ஒரு நாளைக்குச் சுரக்கும் என்பதை ஒவ்வொரு தாயும் உணர வேண்டும். சில தாய்மாருக்கு மார்பகங்கள் சிறிதாக இருந்தால் குறைந்த அளவுதான் பால் சுரக்கும் என நினைப்பது முற்றிலும் தவறானது. மார்பகத்தின் அளவிற்கும் பால் சுரக்கும் தன்மைக்கும் தொடர்பே கிடையாது. இதனை ஒவ்வொரு தாயும் புரிந்து கொள்ள வேண்டும்.

சில தாய்மாருக்கு சில பாரதூரமான நோய்கள் காணப்படின் உதாரணமாக,  காச நோய்,  மலேரியா மற்றும் டைபாய்டு காய்ச்சல் போன்ற நோய்கள் இருக்கும்போது குழந்தைக்குத் தாய்ப் பால் ஊட்டலாமா? என்ற ஐயப்பாடும் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் தங்கள் டாக்டருடன் கலந்துரையாடி தாய்ப்பாலைக் கொடுக்கலாம். மேலும்,  குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் சில தாய்மார் பாலூட்டுவதை நிறுத்த எத்தனிப்பர். இது தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் அதிலுள்ள நோய் எதிர்க்கும் சக்தியான “இம்னோ குளோபிலின்’ என்ற புரதச்சத்து நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி வயிற்றுப் போக்கினைக் குணப்படுத்த பெதும் உதவுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். 

குழந்தைக்கு எவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதில் சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. குழந்தை பிறந்தது முதல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் நிலையில்,  தண்ணீர்கூட கொடுக்கத் தேவை இல்லை. தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது என்ற உறுதியான முடிவை ஒவ்வொரு தாயும் எடுக்க வேண்டும். புட்டிப்பாலை இயன்றவரை தவிர்க்க வேண்டும். தாய்ப்பாலுக்குப் பகரமாக வேறெந்த மாற்றுவகைத் தயாரிப்புகளான பால் மாவினை தவிர்க்க வேண்டும். 4 மாதங்கள் முதல் டாக்டர் அல்லது பிரதேச வைத்திய ஆலோசகரின் ஆலோசனைப்படி சில உணவு வகைகளைக் கொடுக்கலாம்.

மூன்றாம் உலக நாடுகளில் தாய்ப்பால் ஊட்டுவது தொடர்பாகவும், தாய் சேய் தொடர்பாகவும் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது இலங்கையில் இத்தகைய செயற்றிட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப் பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது. இலங்கையில் சுமார் 75 சதவீதமான தாய்மார் தமது குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதகாலத்திற்கு தாய்பாலை மட்டுமே உணவாகக் கொடுப்பதாகவும் இது ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அண்மைய ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது.

கடந்த ஏழு வருடங்களில் மாத்திரம் இந்த நிலைமை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாகவும்,  இதற்கு உலக சுகாதார ஸ்தாபனம்,  இலங்கை சுகாதார அமைச்சின் தாய்/சேய் நலன்பிரிவு உள்ளிட்ட பல அமைப்புக்களினதும் கடுமையான பிரச்சாரமே காரணம் என்றும் கருதப்படுகிறது.

நாங்கள் வாழும் காலகட்டம் வர்த்தகமயமாக்கப்பட்ட ஒரு காலகட்டமாக காணப்படுகின்றது. எனவே, குழந்தைகள் பால்மா தொடர்பான பல்வேறுபட்ட விளம்பரங்கள் கவர்ச்சிகரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கைப் போன்ற சில நாடுகளில் இத்தகைய விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டுமுள்ளன. விளம்பரங்களால் கவரப்பட்டு தாய்ப்பாலுக்குப் பதிலாக வேறு பால்மா வகைகளை எமது தாய்மார் கொடுக்க விளைவதையும் காணுகின்றோம். உண்மையிலேயே இது பெரும் தவறாகும். இறைவன் எமக்கருளிய வளத்தினை எமது குழந்தைகளுக்கு கொடுத்து குழந்தைகளின் உரிமைகளையும் பேண வேண்டியது தாய்மாரின் கடமையாகும். அதாவது, தாய்ப்பால் ஒரு குழந்தையின் உரிமை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வாறு மறந்து செயற்படுவது இயற்கைக்கும் எமது குழந்தைக்கும் நாம் செய்யும் துரோகமாகும்.