கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை முக்கியமான பிரச்சினையாகக் காணப்படுகின்றது. சுதந்திர இலங்கை துவக்கத்திலிருந்து கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை முக்கியமான பிரச்சினையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வம்சம் உச்ச நிலையை அடைந்துள்ளதாக தற்போதைய அரசியல் நிகழ்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இதனால் கிழக்கு மாகாணக் காணிகள் சுவீகரிக்கப்படுவதாக மாகாணசபை கவலையும் ஐயமும் அடைந்துள்ளது.
ஏனெனில், கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே கிழக்கில் காணிப்பிரச்சினை சூடாக விவாதிக்கப்பட்டு வந்ததை நாம் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அந்தவகையிலே இன்று வரையும் கிழக்கு மாகாண சபையில் நீட்சி கொண்டு செல்லும் பிரச்சினையாகவே காணிப்பிரச்சினை காணப்படுகின்றது.
13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் காணிப்பகிர்வும் முக்கியமான அதிகாரப் பகிர்வாக காணப்படுகிறது. ஆனாலும் இந்த அதிகாரப் பகிர்வு நடைமுறைக்கு அல்லது செயற்பாட்டுக்கு வரவில்லை என்பதுதான் யதார்த்தம். ஏனெனில் மாகாண சபைகளின் உருவாக்கம் பரீட்சிக்கப்பட வேண்டிய இடங்களுக்கு கடந்த காலங்களில் இந்த மாகாண சபை செயற்படுத்தவில்லை.
கிழக்கு மாகாண சபை உருவாக்கத்தின் பிற்பாடுதான 13வது திருத்தச் சட்டத்தின் கேள்விகள் எழத் தொடங்கின. ஏனெனில் காயப்பட்ட இடத்துக்கு தற்போதுதான் மருந்துகொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது கிழக்கு மாகாண சபை காயப்பட்டுள்ளது. அதற்கு மருந்து போடும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குழுவினரால் வடக்கு, கிழக்கு மாகாண நோய்கள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை பலமாக தென்படுகிறது. ஏனெனில் 13வது திருத்தச் சட்டத்துக்கும் கூடுதலான, மேலதிகமான அரசியல் தீர்வுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி திடமாக தெரிவித்துள்ளார். எனவேதான் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது.
ஆனால் தற்போதைய அரசியல் நகர்வுகளுக்கு இனவாத அரசியல்வாதிகள் தடைகளை ஏற்படுத்தக்கூடும் என்ற ஐயப்பாடுகளும் இல்லாமலில்லை. ஏனெனில் இனவாதக் கருத்துக்களை தாராளமாக வெளியிட்டு வருபவர்கள் அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளாக இருக்கின்றார்கள். இருந்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்அரசியல் நகர்வுகளின் மூலம் இவர்களின் செல்வாக்கு பலமானதாக இருக்கமுடியாது என்ற கருத்தையும் புறக்கணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. கடந்த மூன்று தசாப்த காலமாக பலதுறைகளிலும் சிறந்து விளங்கிய LTTE இயக்கத்தினரின் இருப்பை இல்லாதொழித்தமையானது ஒரு சுலபமான காரியமாக பார்க்க முடியாது.
கிழக்கு மாகாணத்தில் காணிகள் தனியார் துறையினருக்கு விற்கப்படுவதாக கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த கிழக்கு மாகாண சபையில் சூடாக விவாதிக்கப்பட்டது. இந்தக் காணிப்பிரச்சினை தொடர்பாக தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என பலரும் கருத்துக்கள் தெரிவித்திருந்தனர். கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட பகுதியில் மத்திய அரசாங்கம் கிழக்கு மாகாண சபையின் அனுமதியின்றி காணிகளை சுவீகரிப்பதாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
கிழக்கு மாகாண சபை எல்லைக்குட்பட்ட மத்திய அரசாங்கத்தின் காணியை மாகாண சபைக்குத் தெரியாமல் பெறமுடியாது என்ற தீர்மானத்தை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரட்ணசிங்கம் குறிப்பிட்டார். அதேபோன்று மத்திய அரசாங்கமானது மத்திய அரசாங்கத்துக்குரிய காணியை பெறுவதாயின் அது எந்த மாவட்டத்துக்கு உட்பட்டதாக இருந்தாலும் சரி இந்த மாகாண சபையுடன் பேசித்தான் அதில் ஒரு பொதுவான உடன்பாட்டுக்க வரவேண்டும். இதில் குறிப்பாக திருகோணமலையிலும், அம்பாறையிலும் மத்திய அரசாங்கம் என்ன செய்கிறது என்றால், மத்திய அரசாங்கத்துக்கு காணி தேவை எனும்போது DS. மூலமாகவோ, GA மூலமாகவோ தங்களுடைய அதிகாரத்தைப் பாவித்து காணி சுவீகரிப்புத் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலைமை கிழக்கு மாகாணத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. “தொழிலை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற திட்டம்” என்ற தலையங்கங்களுடன் காணி சுவீகரிப்பு இடம்பெறுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரட்ணசிங்கம் சுட்டிக் காட்டினார்.
அதேபோன்று கிழக்கு மாகாண சபையின் எதர்க்கட்சித் தலைவரான பஷீர் சேகுதாவூத் கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற மொத்த தரிசு நிலங்கள் எத்தனை ஹெக்ரேயர் என்றும் அதில் இச்சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் தனியார் கம்பனிகளுக்கு காணிகள் வழங்கப்பட்டிருக்கிறதா? அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் எந்தெந்த காணிகள் எந்தெந்த இடத்தில் எக்கம்பனிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்ற விபரத்தை இந்த சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும். அடுத்ததாக, அதே விடயத்திலே இந்த காணி வழங்குவதற்குரிய ஒரு ஆலோசனையாவது காணியை வழங்கியவர்கள் இச்சபையிடம் கேட்டார்களா? அந்த விடயம் கிழக்கு மாகாண சபைக்குத் தெரியுமா? அல்லது கிழக்கு மாகாண காணியமைச்சுக்கு தெரியுமா? சட்டத்திலே மாகாண காணி சம்பந்தமான விடயங்களை மத்திய அரசும், மாகாண அரசும் கலந்தாலோசித்து செய்ய வேண்டும் என இருக்கிறது. ஆனால் அந்தக் காணிக்குரிய தேசிய ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும் என்றிருந்தும்கூட கடந்த 21 ஆண்டுகளாக “தேசிய ஆணைக்குழு” ஒன்று நியமிக்கப்படவில்லை. இவ்வாறான ஒரு நிலையிலே எங்களுக்கு இருக்கின்ற பிரதானமான பிரச்சினை காணிப்பிரச்சினை என்ற அடிப்படையிலே பலவிதமான சந்தேகங்கள் எம்மத்தியில் நிலவுகிறது. இச்சூழ்நிலையிலே யாருக்கும் தெரியாமல் கிழக்கு
மாகாணத்திலே இருக்கின்ற காணிகள் களவாடப்பட்டு விடுமா? என்ற சந்தேகம் கிழக்கு மாகாண மககளுக்கு ஏற்பட்டிருக்கின்றது என குறிப்பிட்டார்.
எனவே, கிழக்கு மாகாண காணிகள் தனியார் கம்பனிகளுக்கு விற்கப்பட்டுள்ளதா? அல்லது சுவீகரிக்கப்பட்டுள்ளதா? போன்ற ஐயபாடுகளுக்கு முதலமைச்சர் எஸ் சந்திரகாந்தன் பதிலளிக்கும்போது கிழக்கு மாகாணத்தில் இருந்த காணிகள் ஒரு தனிநபருக்கு அல்லது கூட்டுத்தாபனங்களுக்கு வழங்கப்படுகின்றபோது அது சம்பந்தமாக அதைப் பெற்றுக் கொள்ளக்கூடிய அங்கீகாரம் அமைச்சரவை மூலமாகத்தான் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்பட்ட பின்னர்தான் அது அனுமதி அளிக்கப்படும். ஆனால் அந்த விடயங்கள் எங்களையும் தாண்டி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதை என்னால் அவதானிக்க முடிகிறது.
இதேபோன்று சுற்றுலாத்துறையினதும் பிரச்சினை வந்திருக்கிறது. உதாரணமாக பாசிக்குடாவில் இருக்கின்ற 280 ஏக்கர் காணியிலும் அதில் கார் பாக்கிங் தவிர ஏனைய காணிகள் அனைத்துமே தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியில் பிரதேச சபைக்கு சொந்தமாக இருந்த காணிகள் கூட அடையாளம் தெரியாமல் போயிருக்கிறது. இதை நாம் பாரதூரமான பிரச்சினையாகத்தான் பார்க்கிறோம். இதுதொடர்பாக முதலமைச்சர் என்ற வகையில் காணி சம்பந்தமான அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். பதில் வரும்போது அந்தப் பதிலை வைத்துக் கொண்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.
அதேபோன்று வெளிநாட்டு நிறுவனத்திற்கு 15 000 ஏக்கர் காணியை மாகாண சபைக்கு தெரியாமலே அங்கீகாரம் கொடுக்கின்றவர்கள். இன்று அகதிகளாக மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்குக் கொண்டுவந்து இறக்கப்பட்டவர்களுக்கு 20 பேர்ச் காணியைக் கொடுப்பதற்குக் கூட அதிகாரமளிப்பதற்கு மறுக்கின்றார்கள். காலங்காலமாக வாழ்ந்துவந்த மக்கள் அவர்களது இடங்கள் வேறு தேவைகளுக்காக எடுக்கப்பட்டிருந்தாலும் புதிய காணிகளை 20 பேர்ச்சுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்று வாதாடிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் நிலைமை. கிழக்கு மாகாண சபை ஏன் உருவாக்கப்பட்டது? எந்த மக்களை திருப்திப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டது என்று பார்க்கும்போது அதில் பிரச்சினை இருந்துகொண்டு தான் இருக்கிறது. அதேபோன்று ஏனைய மாகாண சபைகளில் இருக்கின்ற உரிமை கூட எங்கள் மாகாணத்தில் இல்லாதது மிகவும் வேதனையாகத்தான் நான் பார்க்கிறேன். ஒன்றரை வருடம் தாண்டியும் எங்களது அதிகாரப் பிரச்சினைகளில் விட்டுக் கொடுப்புக்களை செய்துகொண்டிருக்க முடியாது என்ற நிலைக்கு நாங்களும் தள்ளப்பட்டிருக்கிறோம்.
மேற்படி முதலமைச்சரின் கருத்துக்கள் கிழக்கு மாகாண சபைக்கு சுதந்திரமில்லை என்பதையே காட்டுகிறது. எனவே தமது மாகாணத்திற்குரிய அதிகாரங்களைப் போராடிப் பெறவேண்டிய தேவை இன்று கிழக்கு மாகாண சபைக்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் போராட்டத்தில் கிழக்கு மாகாண சபை வெற்றிபெறுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.