இலங்கை எதிர்நோக்கும் சிக்கல்களுக்கும், வாய்ப்புகளுக்கும், மக்களாட்சிக்கும், அமைதிக்குமான தேடலையொட்டிய அனைத்துலக மாநாடு 2010, ஜனவரி, 21ம் தேதி வியாழக்கிழமை காலை 9.00 மணி தொடங்கி மாலை 4.30 மணி வரை Hotel Radisson மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் கனடியத் தமிழர் அமைப்பகத்தால் (Canadian Tamils Forum) ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழரின் வாழ்வியல் பாதுகாப்பு பற்றி வரலாற்று அடிப்படையில் ரொறொன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியர், அருட்தந்தை யோசப் சந்திரகாந்தன் உரை நிகழ்த்தினார். அவரது உரையில் 1920களிலிருந்து தமிழர்கள் சிங்களவர்களால் ஏமாற்றப்படுவதை எதிர்த்து சேர். பொன். இராமநாதனும் அவரது தம்பி சேர். பொன். அருணாசலமும் ஓங்கிக் குரலெழுப்பினார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். இவர் கூற்றுக்கு வலுவூட்டுகின்ற வகையில் அருணாசலம் தமிழ் பேரவையை உருவாக்கியதையும் அவரின் அண்ணா இராமநாதன் டொனமூர் எனின் இனிமேல் தமிழர் இல்லையென்று எச்சரித்ததைப் புள்ளிவிபரங்களுடன் ஈழவேந்தன் கேள்வி நேரத்தின் போது சுட்டிக்காட்டினார்.
பெண்களும் குழந்தைகளும் சிங்கள இராணுவத்தினால் துன்புறுத்தப்பட்ட நிகழ்ச்சிகளை சுவீடன் நாட்டுப் பேராசிரியர் பீற்றர் சால்க் விளக்கினார். படிப்படியாக இலங்கையில் சட்ட ஒழுங்கு முறைமை சீரழிந்ததை கனடா நாட்டின் பழமைவாதக் கடசியைச் சேர்ந்த சங் கொங்கல் நுணுக்கமாக விளக்கினார்.
கனடியச் சட்டத்தரணி ஜோன் லீகே கனடாவில் சட்ட ஒழுங்குகள் எவ்வாறு கனடாவின் பூர்வீகக்குடிகளை முன்பு கையாண்டிருந்தது என்றும் பின்பு அவ்வாறான அணுகுமுறைகள் எவ்வாறு மாற்றம் பெற்றன என்பதை விளக்கினார். அத்துடன் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கனடா எவ்விதம் தீர்மானகரமான பங்கை வழங்க முடியும் என்பதைப் பற்றியும் பேசினார். அரச அதரவோடு நடைபெறும் அடக்குமுறையை மக்களாட்சிக் கிளர்ச்சியூடாக எவ்விதம் எதிர்கொள்ளலாம் என்பதைப் பற்றி ஆராய்ந்தார் அமெரிக்கப் பேராசிரியர் றோபேட் ஓபேஸ்ற்.
நாடு கடந்த தமிழீழ அரசின் நடைமுறைச் சாத்தியம் மற்றும் பொறுப்புகள் பற்றி பேராசிரியரும், கவிஞருமான சேரன் பல கோணங்களிலிருந்து ஆராய்ந்து அவையோரை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஜேர்மன் நாட்டுப் பேராசிரியர் ஜோன். நீல்சன் நிகழ்த்திய உரை நடைமுறையில் இவ்வாறான அரச உருவாக்கம், அதற்கான சொல்லாடல்கள் எச்சரிக்கையாகக் கையாளப்பட வேண்டியதன் அவசியங்களை முன் நிபந்தனைகளாகத் தர்க்கித்தது சுவையான விவாதத்தைக் கிளப்பியது.
அமெரிக்கச் சட்டத்தரணி ஜெயலிங்கம் ஜெயப்பிரகாஸ் நாடு கடந்த தமிழீழ அரச கட்டுமானத்தை உருவாக்குது பற்றிய ஆளுகைத் திட்டம் கொண்டுள்ள விதி முறைகள் குறித்துப் பேசினார். வேறு கூட்டங்களுக்குச் செல்ல வேண்டியிருந்ததனால் மாநாட்டின் இடைநடுவின் போது பேசிய NDP கட்சியின் தலைவர் ஜாக் லேற்றன் தனது உரையின் போது இம்மாநாடு எடுக்கும் முடிவுகள் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியினை வென்றெடுக்க உறுதுணை புரியும் என்று கூறினார். கனடிய பழமைவாதக்கட்சியின் மத்திய அரசாங்கத்துக்கான அமைச்சர் யேசன் கனி மாநாட்டில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் அவருடைய செயலாளர் ஒருவரை மாநாட்டுக்கு அனுப்பித் தனது வாழ்த்தினைத் தெரிவித்திருந்தார். மாநாட்டுக்கு வருகை தந்திருந்த மக்களில் பலர் மாநாட்டில் இடம்பெற்ற உரைகள், கலந்துரையாடல்கள் குறித்துப் பெரிதும் திருப்தி கொண்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.