யுத்தத்தையும் இராணுவ வெற்றியையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அரசாங்கம் அரசியல் நாடகமாடி வருவதாகவும் நாட்டு மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் கடும் விசனத்தை வெளிப்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் இறைமை, ஜனநாயகம், மக்களின் உரிமைகள் போன்றவற்றை பாதுகாக்கும் பொருட்டு நாளை புதன்கிழமை தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவிருப்பதாகவும் அறிவித்தார். “பொறுத்தது போதும்’ எனும் தொனிப்பொருளில் நாளைய தினம் ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட பல்வேறு எதிரணிகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவரின் கேம்பிரிட்ஜ் ரெரஸ் அலுவலகத்தில் நடைபெற்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
நாட்டில் ஜனநாயகமும் இறைமையும் பாதுகாக்கப்படாமல் எவ்வளவு காலத்துக்கு யுத்தம் செய்தாலும் மக்களுக்கு நல்ல தீர்வெதுவும் கிட்டப் போவதில்லை. யுத்தத்தில் கிளிநொச்சி படையினர் வசம் வீழ்ந்தது உண்மைதான். படைவீரர்களின் அந்தத் திறமையை நாமும் சேர்ந்து பாராட்டுகின்றோம். கௌரவிக்கின்றோம். இந்த யுத்த வெற்றி இராணுவத்துக்கும் நாட்டு மக்களுக்குமே உரியதாகும். ஆனால், ராஜபக்ஷ அரசாங்கம் யுத்த வெற்றியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் நாடகமாடிக் கொண்டிருக்கின்றார். ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அதேசமயம் அரசியல் யாப்பையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது. அரசு யாப்புக்கு முரணாகச் செயற்பட முடியாது. நினைத்தபடி யாப்பை மாற்றவும் முடியாது.
ஜனாதிபதியும் அவரது அரசும் அரசியல் யாப்பையும் சட்டத்தையும் மதித்துச் செயற்படத் தவறியுள்ளது. தன்னிச்சையான போக்கில் செயற்பட்டு வருகின்றது. நாட்டு மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர் கொண்டுள்ளனர். யுத்தத்தில் முனைப்புக்காட்டும் அரசு நாட்டு மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் நாம் மேற்கொண்ட போர் நிறுத்த உடன் படிக்கைக்கு எவரும் தவறான அர்த்தம் கற்பிக்க முடியாது. அன்றைய போர் நிறுத்தத்தின் மூலம் பல்வேறு நன்மைகளை அடைய முடிந்தது. கிழக்கை மீட்டெடுக்க முடிந்தது. விடுதலைப் புலிகள் அக்கால கட்டத்தில் பலமடைந்ததாகக் கூறுவதும் தவறானதே. இக்கால கட்டத்தில் எந்தவொரு நாடும் புலிகளுக்கு ஆயுதம் வழங்கவில்லை. அதற்கு நாம் இடமளிக்கவுமில்லை. அன்று போர் நிறுத்த உடன்படிக்கையை ஆதரித்தவர்களில் இன்றைய இராணுவத்தளபதியும் ஒருவர் என்பதை பகிரங்கமாகத் தெரிவிக்கின்றேன்.
அன்று நான் மக்களிடம் போர் நிறுத்தம் செய்து சமாதான முயற்சிகளை முன்னெடுக்கவே மக்களிடம் ஆணைகேட்டேன். அதன் பிரகாரமே போர்நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தேன். இடைநடுவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு எமது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. அதன் பின்னர் நடந்தவற்றுக்கு ஆட்சியிலிருக்கும் அரசுதான் பொறுப்புக்கூற வேண்டும். யுத்த முனையில் படைவீரர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுவதாக தகவல்கள் கிட்டியுள்ளன. படைத்தரப்பிலிருந்து நிறையத் தகவல்களைத் திரட்டியுள்ளேன். காயமடையும் படைவீரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே காணப்படுகின்றன. அவர்களை போர்களத்திலிருந்து கொண்டுவர ஒரு அம்புலன்ஸ் கூட வழங்கப்படவில்லை. பஸ்களிலும், டிராக்டர் வண்டிகளிலுமே கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளன. அதற்குரிய ஆதாரம் கூட என்னிடம் இருக்கின்றது. (பஸ்ஸிலும் டிராக்டரிலும் காயமடைந்த படைவீரர்களை ஏற்றப்படும் படங்களை ரணில் ஊடகவியலாளர்களிடம் காண்பித்தார்) இவற்றைச் சுட்டிக்காட்டியதால்தான் இராணுவத்தளபதி ஆத்திரமடைந்துள்ளார்.
போர் மாயையில் மூழ்கி பொருளாதாரச் சீரழிவை மூடி மறைப்பதில் அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றது. இதற்கெதிராகவே நாளை புதன்கிழமை பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மக்களையும் மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதே இந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் பிரதான நோக்கமாகும். தலைநகர் கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன, மத, மொழி, கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவிருக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் இணைந்து அரசுக்கு அழுத்தத்தைப் பிரயோகிக்க முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.