விஸ்வா

விஸ்வா

ஐக்கிய நாடுகளின் ஆலோசனைக் குழுவில் தமக்கு நம்பிக்கை இல்லை என விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் சபையின் ஆலோசனைக்குழுவின் நடவடிக்கைகளில் தாம் நம்பிக்கை கொள்ளவில்லை என என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இக்குழு உலகின் முக்கியமான நாடுகளின் முகவராகவே செய்படுவதாகவும் அவர் கூறினார். தற்போது மகிந்த ராஜபக்சவை பாதுகாக்கும் நோக்கிலேயே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயங்கள் குறித்து தெரியாமல் விமல் வீரவன்ச போன்றவர்கள் இதற்கு எதிராக குரலெழுப்பி வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஐ.நா.செயலர் பான் கீ மூனுடன் இணைந்து இலங்கையில் இடம்பெற்ற போருக்கு ஆயுதங்களையும், நிதியுதிவிகளையும் வழங்கின எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்.வைத்தியசாலைக்கு சீன அரசின் நிதியுதவியில் ஐந்து மாடிக் கட்டடம்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சீனாவின் நிதியுதிவியுடன் ஐந்து மாடிக்கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அவசர சிகிச்சை, விபத்துச்சிகிச்சை ஆகிய பிரிவுகளுக்கு சீன அரசின் 775 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டடம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதமளவில் இக்கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்ப்பிக்கப்பட உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் எஸ்.சிறிபவானந்தரஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.வைத்தியசாலையில் நவீன வசதிகளுடனான கட்டடம் ஒன்று அவசர சிக்கசசைப் பிரிவு விபத்துப் பிரிவுகளுக்கு இல்லாத நிலையால் நோயாளிகள் பல சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும், இது குறித்து சீன அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இச்சிகிச்சைப் பிரிவுகளுக்கு நவீன கட்டம் அமைப்பதற்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பாக ஏனைய தமிழ். முஸ்லிம் கட்சிகளை இணைத்துக் கொள்வது குறித்து ஆராயப்படும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Sivajilingam_M_Kஇனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகளில் தமிழ் கட்சிகளின் அரங்கமும் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொண்டுள்ள நிலையில், இப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட்ட முஸ்லிம் கட்சிகளையும் மலையகத்தமிழ் கட்சிகளையும் இணைத்துக் கொள்வது குறித்து தமிழ் கட்சிகளின் அரங்கம் தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசிக்கும் என தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை குறித்த பேச்சுக்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இணைந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்திருந்தது. ஏற்கனவே தமிழ் கட்சிகளின் அரங்கமும் தமிழ்தேசியக்கூட்டமைப்பும் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து ஆராய்வதற்காக இரு கட்சிகளிலுமிருந்து தலா மூன்று பேரை நியமித்துள்ள நிலையில், தமிழ் கட்சிகளின் அரங்கம் தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் மேற்கொள்ளவுள்ள அடுத்த சந்திப்பின் போது குறிப்பிட்ட ஏனைய கட்சிகளை இதில் இணைத்துக் கொள்வது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தங்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் நல்லெண்ணம் தெரிவித்துள்ளது என வடக்கின் வெள்ள நிவாரணப் பணிகளில் கலந்து கொண்டுள்ள கூட்டமைப்பு தெரிவிப்பு

பொது மக்களின் அவலநிலையைப் போக்கவும், அவர்களுக்கான மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடனும், சர்வதேசத்துடனும் தொடர்பு கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் இதன் காரணமாக, நல்லலெண்ண அணுகுமுறையாக மீள்குடியேற்ற அமைச்சர் வடக்கில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் கூட்டமைப்பையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 534 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன் கிழமை யாழ்.பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மோசமான யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்காக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்கள். மீள்குடியேற்ற அமைச்சருடன் நேரடியாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் அரசாங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவுள்ளதாகவும் இந்நிகழ்வுகளில் தமிழ்தேசியக்கூட்டமைப்பினரையும் கலந்து கொள்ளுமாறும் எழுத்து மூலமான பதிலைத் தந்தார்.
-இவ்வாறு மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஐ.நா.நிபுணர் குழுவிற்கு விசேட சலுகைகள் வழங்கப்படமாட்டாது என நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பாக ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட நிபுணர்கள்குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்குழு நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்க முன்வந்தால் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கேள்விகள் கேட்க அக்குழுவினருக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும், இக்குழுவினரிடம் நல்லிணக்க ஆணைக்குழுவே கேள்விகள் கேட்கும் எனவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நிபுணர் குழுவினர் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்க முன்வந்தால் விசேட சலுகைகள் எவையும் அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும், இதுவரை சாட்சியமளித்தவர்களுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளே அவர்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவ்வதிகாரி கூறியுள்ளார்.

ஐ.நா.வின் நிபுணர் குழு இலங்கை வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அரசமட்டத்தில் அதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதனால் இந்த நிபுணர்குழு வருகை தருமா? அவ்வாறு தந்தால் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பு அதன் சாட்சியங்களை அளிக்குமா? போன்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு நகரில் பாதுகாப்பு கமராக்கள் பொருத்தும் திட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

camera.jpgகொழும்பு நகரின் பாதுகாப்புக் கருதி கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று புதன்கிழமை பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும், தவிர்க்க முடியாத காரணங்களினால் அது பிற்போடப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பாதுகாப்பு கமராக்களை ஒரு வருடத்திற்கு கொழும்பு நகரில் பொருத்தி வைப்பதற்கான திட்டத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச முன்வைத்திருந்தார். இதற்கான செலவு அதிகம் என்பதால் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று ஆரம்பிக்கப்படவிருந்த இத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் செயல்களைக் குறைக்கும் நோக்குடனும், கொழும்பு நகரின் கேந்திர நிலையங்களில் 108 பாதுகாப்பு கமராக்களைப் பொருத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் 160 பேருக்கு தடுப்புக் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

தடுப்புக் காவலில் உள்ள 160 விடுதலைப்புலிச் சந்தேக நபர்களுக்கு தடுப்புக்காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இறுதிக்கட்டப் போரின் போது படையினரிடம் சரணடையாமல் மக்களோடு மக்களாக அகதி முகாம்களுக்குள் இருந்தபோது கைது செய்யப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புப்பிரினரால் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களின் தடுப்புக்காவல் நேற்று புதன் கிழமையுடன் முடிவடைவதால் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இவர்களை நேற்று கொழும்பு நீதிமன்றில் முற்படுத்தினர். இவர்களை அடுத்த மாதம் மூன்றாம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடுப்புக் காவலிலுள்ள இவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என இவர்களை விசாரணை செய்யும் பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார் பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத்.

Bazeer_Sekthauthதமிழ் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியலுக்குள் செல்ல வேண்டும் என கூட்டுறவு வர்த்தக பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ள கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் நலன் கருதி இணக்க அரசியலுக்குள் சென்று பார்க்க வேண்டும் என அவர் கூறினார். மட்டக்களப்பு குருமன்வெளி சிவசக்தி மகாவித்தியாலத்தில் அண்மையில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், யோகேஸ்வரன் ஆகியோரும் அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த சில தினங்களாக வடபகுதிகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நிவாரண வழங்கல் நிகழ்வுகள், திறப்பு விழாக்கள் போன்றவற்றில் அமைச்சர்கள், அரச அதிகாரிகள் அகியோருடன் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டு வருகின்றமை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் சுனாமி நினைவு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

Tsunami_Rememberanceஎதிர்வரும் 26ஆம் திகதி அம்பாறை கரையோரப் பகுதிகளில் சுனாமி அழிவுகளை நினைவு கூரும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. சுனாமி ஏற்பட்ட ஆறாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் மக்களால் மேற்கொள்ளப்படவுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள தமிழ், முஸ்லிம் கிராமங்களில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அன்றைய தினம் சுனாமியால் உயிரிழந்த உறவுகளுக்கு மக்கள் அஞ்சலி, பிரார்த்தனை ஆகியவற்றில் ஈடுபடுவர்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரக் கிராமங்களான மருதமுனை, நீலாவணை. பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தாவூர், தம்பட்டை, தம்பிலுவில், திருக்கோவில், பொத்துவில் ஆகிய கிராமங்களில் சுனாமியால் அதிகளவு மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏனைய கரையோரப் பகுதிகளிலும் சுனாமியினால் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடைமழையிலும் வடபகுதிக்கு வரும் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள்.

Jaffna_Touristஇலங்கையின் பல பகுதிகளிலும் அடைமழை பெய்து வருகின்ற நிலையிலும் வடபகுதிக்கான சிங்கள சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்த வண்ணமே உள்ளன. வவுனியாவிற்கு அப்பால் கனகராயன்குளம் தொடக்கம் கிளிநொச்சி, ஆனையிறவு என ஏ-9 பாதையின் பல இடங்களில் இச்சுற்றுலாப்பயணிகள் தங்கி நின்று போரின் எச்சங்களை பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இதேவேளை, வன்னிப் பகுதிகளுக்கு வந்து பாதையோர வியாபாரங்களை மேற்கொண்டு வரும் தென்னிலங்கை வியாபாரிகள் தற்போது தங்கள் மனைவி பிள்ளைகளுடன் வருகை தந்து வியாபாரத்திலீடுபட்டு வருவதை காண முடிகின்றது. பாடசாலை விடுமுறை என்பதால் அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் வந்து இடங்களைப் பார்வையிடுவதுடன் வியாபாரத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.