விஸ்வா

விஸ்வா

சிங்கள மக்களின் அத்துமீறிய குடியேற்றம் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியம்.

யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்றுவரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் பலர், முன்னாள் போராளிகனின் குடும்பத்தினர் முதலானோர் சாட்சியங்களை அளித்து வருகின்ற நிலையில் நேற்று வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வில் யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் அத்துமீறி குடியேறியுள்ளமை தொடர்பாக ஒருவர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இ.தாமோதரராஜா என்பவரே சாட்சியத்தில் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

எல்லோரும் ஒருதாய் மக்கள் எனச் சொல்லிக் கொள்கின்றோம். ஆனால், அரசாங்கம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. சொந்தக்காணிகளுள்ள வலிகாமம் வடக்கு மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யாது, அவசர அவசரமாக மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களை திட்டமிட்டு யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வதை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும். அத்துடன் யாழப்பாணத்தில் பல கொலைகள் நடைபெற்றிருக்கின்றன. அவை எவற்றிற்கும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் பனை மரங்கள் வெட்டத் தடை.

Panai_Marangalஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் பனை மரங்கள் வெட்டப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பனை மரங்கள் வெட்டப்படுவதற்கும் அவற்றை வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் பனை அபிவிருத்திச் சங்கத்திடம் அனுமதி பெற்றுக்கொள்வது அவசியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்போது இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் 50 ஆயிரம் பனம் விதைகளை நடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமாவில் முகாம் மக்களை வடமாகாண ஆளுநர் பார்வையிட்டார்.

யாழ். மிருசுவிலிலுள்ள இராமாவில் இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியுள்ள மக்களை நேற்று வெள்ளிக்கழமை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி பார்வையிட்டதோடு, அங்குள்ள சுமார் 100 பாடசாலை மாணவர்களுக்கு காலணிகளையும் வழங்கினார். முகாமிலிருந்து வெளிப்பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு விரைவில் சைக்கிள்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இராமாவில் முகாமில் தங்கியுள்ள மக்களின் பிரச்சினைகளயும் கேட்டறிந்த அவர் அவற்றைத் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அம்மக்களிடம் உறுதியளித்தார்.

நிதி மோசடியுடன் தொடர்புபட்ட காரணத்தினால் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது

TNA_Logoநிதி மோசடி காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எந்நேரமும் பொலிஸாரினால் கைது செய்யப்படலாம் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த யுத்தத்தின் போது காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் பெருந்தொகையான பணத்தை குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றுக் கொண்டதாகவும். மோசடிக் கும்பல் ஒன்றுடன் அவருக்குத் தொடர்புள்ளதெனவும் புலனாய்வு விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவியிலுள்ள ஒருவரே இம்மோசடியின் பிரதான நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது தொலைபேசி இலக்கங்களை காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு குறிப்பிட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கியுள்ளதாகவும், காணாமல் போனவர் ஒருவரின் உறவினர் இத்தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு மூன்று இலட்ச ரூபா வரை கொடுத்துள்ளார் எனவும், இன்னொருவர் 75 ஆயிரம் ரூபா கொடுத்துள்ளார் எனவும், இந்த மேஜர் ஜெனரலின் தொலைபேசி இலக்கம் பின்னர் செயலிழந்துவிட்டதாகவும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என வவுனியா மற்றும், மன்னாருக்கான பொலிஸ் மாஅதிபர் பிரசன்ன நாணயக்கார தெரிவித்தள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் இன்றைய ‘தினமுரசு’ நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சி வீடமைப்புத் திட்டங்களில் சிக்கல்களை எதிர்கொள்ளும் மக்கள்.

Rebuilding_Buildingsகிளிநொச்சி மாவட்டத்தில் பல நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டப் பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல்கள் தேன்றியுள்ளது. இதனால் வீட்டுத்திட்டங்களைப் பெற்ற பயனாளிகள் பெரும்
மனஉளைச்சல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வீடமைப்பிற்காக கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வரும் பணம் சீரான முறையில் வழங்கப்படாமை, மேசன் வேலை, தச்சு வேலைகளுக்கான தொழிலாளர்கள் தட்டுப்பாடு, மணல் உட்பட்ட மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமம் போன்றவற்றின் காரணமாக இந்நிலை தேன்றியுள்ளது. தற்போது பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் உரிய காலத்தில் இவ்வீடமைப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் சம்பந்தப்பட்ட மக்கள்
பாதிப்படைந்து ள்ளனர். இதேவேளை, சேதமுற்ற வீடுகளைத் திருத்தியமைக்கும் பணிகளும் அதில் தொடர்புபட்ட நிறுவனங்கள்,  அதிகாரிகளின் அசமந்தப் போக்குகளால் இழுபடும் நிலையும் தோன்றியுள்ளது.

நேற்றைய ‘சூரன்போர்’ நிகழ்வுகளில் நால்வர் காயம். ஓருவர் மரணம்.

Sooran_Boorநேற்று வியாழக்கிழமை யாழ்.செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம்பெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வில் கற்பூரச்சட்டிக்குள் விழுந்து ஐந்து போர் காயமுற்றனர். அதிகளவான சன நெருக்கடி காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விழுந்தவர்களில் நான்கு பேருக்க சிறு காயங்களும், ஒருவருக்கு படுகாயமும் எற்பட்டுள்ளது. காயமுற்றவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று நல்லூர் கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வின் போது பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமானார். நல்லூர் ஆலயத்தில் நடைபெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வில் ஏற்பட்ட சனநெரிசல் காரணமாக இம்மாணவன் கேணிக்குள் தவறி விழுந்ததால் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கந்தர்மடம் பழம் வீதியைச் சேர்ந்த தர்மகுலசிங்கம் கனுசன் என்ற மாணவனே இவ்வாறு நீரில் முழ்கி மரணமானவராவார். நேற்று யாழ் மாவட்ட ஆலயங்களில் இடம்பெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வில் அதிகளவிலானவர்கள் கலந்து கொண்டதால் சனநெரிசல்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அளவெட்டியில் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு!

யாழ். அளவெட்டியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டினால் படுகாயமடைந்துள்ளார். அளவெட்டி பிள்ளையார் கோவில் முன்றலில் வைத்து நேற்று மாலை 5.30 மணியளவில் குறிப்பிட்ட இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அளவெட்டி வடக்கைச் சோந்த கிருஸ்ணமூர்த்தி சஞ்சீவ் என்பவரே தப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி காயமடைந்தவராவார். தனிப்பட்ட காரணங்களுக்காக இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக காயமடைந்த இளைஞரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து இராணுவத்தினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்கள் அனுமதியின்றி கொட்டில்களை அமைத்து குடியேறியுள்ளனர்.

தென்பகுதிகளிலிருந்து வந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த சிங்கள மக்கள் நேற்று நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறி குடியேறியுள்ளனர். அக்காணியில் குடில்களை அமைக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தங்களை மீள்குடியேற்றுமாறு கோரி யாழ்ப்பாணத்திற்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை எனவும், தங்கள் ஊர்களிலிருந்து கொண்டுவந்த மரந்தடிகளைக் கொண்டே தாங்கள் கொட்டில்களை அமைப்பதாகவும், யார் தடுத்தாலும் இங்கேயே தாம் குடியிருக்கப் போவதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களால் நேற்று மாலைக்குள் சுமார் 20 இற்கும் மேற்பட்ட கொட்டில்கள் அமைக்கபட்டு விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நேற்று கருத்துத் தெரிவித்த யாழ்.அரசஅதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் இம்மக்கள் நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறி குடியமர்ந்துள்ளமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பட்டார். அது வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணி என்பதால் அவர்கள்தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் யாழ். மாவட்ட பொது முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் இது குறித்து தெரிவிக்கையில் சிங்கள மக்கள் இவ்வாறு அக்காணியில் குடியேற முயற்சிப்பதை நேற்றுப் பிற்பகல் அங்கு சென்று நேரில் அவதானித்ததாகவும், தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான அக்காணியில் எவ்வித அனுமதியுமின்றி அவர்கள் கொட்டில்களை அமைத்து வருகின்றமை குறித்து வீடமைப்பு அதிகாரசபையின் கொழும்புத் தலைமையகத்திற்கு தான் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமாக 90 எக்கர் காணி உள்ளது. அதில் 30 ஏக்கர் காணி ஏற்கனவே 300 வீட்டுத்திட்டத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. ஏனைய 60 ஏக்கர் அதிகாரசபையின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

”கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை அமைக்கப்பட்டு ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.” – இ. அங்கஜன்

Angajan_Ramanathanகிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், இதில் ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரான இ.அங்கஜன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இத்தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்ததாகவும், வடமாகாண அபிவிருத்திப்பணிகளில் இந்த ஆடைத்தொழிற்சாலை முக்கிய இடத்தை வகிக்கும் எனவும் அங்கஜன் தெரிவித்தார். இத்தொழிற்சாலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள புலி உறுப்பினர்களுக்கும் தொழில்வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் அமையவுள்ள இந்த ஆடைத் தொழிற்சாலையை இயக்குவதற்கு ‘றை ஸ்ரார் அப்பறெல்’ நிறுவனத்தின் தலைவர் குமார் தேவபுர முன்வந்துள்ளதாகவும் அங்கஜன் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பம்.

படிப்பினைகள் மற்றும், ஜனாபதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளன. ஒவ்வொரு பகுதி மக்களும் இதில் கலந்து கொண்டு தங்கள் சாட்சியங்களை அளிப்பதற்காக பிரிவு பிரிவாக இதன் அமர்வுகள் இடம்பெறுகின்றன.

யாழ்.பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்காக இன்று காலை 9 மணிமுதல் 11 மணிவரை குருநகர் கலாசார மண்டபத்திலும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்காக முற்பகல் 11.30 மணி தொடக்கம் 1 மணிவரை அரியாலை சரஸ்வதி சனசமூகநிலையத்திலும், கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்காக பிற்பகல் 2மணி தொடக்கம் மாலை 5மணிவரை நீர்வேலி திருமுருகன் திருமண மண்டபத்திலும் நல்லிணக்க ஆணைக்கழுவின் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த அமர்வுகளில் தங்கள் சாட்சியங்களை அளிப்பதற்கு 80 வரையானோர் பதிவு செய்துள்ளதாகவும், இவ்வாறு பதிவு செய்யாதவர்களும் தங்கள் சாட்சியங்களை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.