விஸ்வா

விஸ்வா

வன்னியில் மீட்கப்பட்டு, பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படும் உதிரிப்பாகங்களற்ற வாகனங்கள்!

வன்னியில் இறுதிப்போரின் போது பொதுமக்களால் கைவிடப்பட்ட ஏழாயிரம் வரையிலான மோட்டார் சைக்கிள்கள் தற்போது உரியவர்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன. இறுதிப்போர் நடைபெற்ற இடமான மாத்தளன் தொடக்கம், முள்ளிவாய்க்கால் வரையிலுள்ள பகுதிகளில் பொது மக்களால் கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் படையினரால் மீட்கப்பட்டு கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ளன. உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களைக் காட்டி இவ் வாகனங்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், அதிகமான வாகனங்களின் உதிரிப்பாகங்கள் கழற்றப்பட்ட நிலையிலேயே இவ்வாகனங்கள் காணப்படுவதாக வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாகனங்களை ஆவணங்களைச் சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளச் செல்லும் பொது மக்கள் வாகனங்களின் நிலையைக் கண்டு ஏமாற்றடைவதாக கிளிநொச்சியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் முடிவுற்று ஒரு வருடமாகின்ற போதும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்வு வழமைக்குத் திரும்பவில்லை!

House_Without_Roofவிடுதலைப் புலிகள் வெற்றி கொள்ளப்பட்டு, போரை முடிவிற்குக் கொண்டு வந்து ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இவ்வெற்றியை சிறிலங்கா அரசாங்கம் தற்போது கொண்டாடுகின்றது. ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலத்திட்டங்களை மேற்கொள்வதில் அரசாங்கம் துரித செயற்பாடுகளை மேற்கொள்ள வில்லை என போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் தெரிவிக்கின்றனர். வன்னியின் மேற்குப் பகுதிகளில் மீள் குடியேற்றப் பணிகள் இன்னமும் முழுவதுமாக நிறைவடையவில்லை. அதாவது கிளிநொச்சியின் ஏ-9 பிரதான பாதையின் மேற்குப் பக்கமாக மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனினும்,  அங்கு சில பகுதிகளில் இன்னமும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது கிளிநொச்சியின் கிழக்குப் பகுதிகளில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

திருவையாறு, வட்டக்கச்சி போன்ற பகுதிகளிலுள்ள மக்கள் தற்போது அவரவர்களின் காணிகளில் குடியமர்த்தப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு மீள் குடியமர்த்தப்படும் மக்கள் வவனியா முகாம்களிலுள்ளவர்களும், முகாம்களிலிருந்து ஏற்கனவே வெளியேறி வவுனியாவில் உறவினர், நண்பர்கள் விடுகளில் தங்கியிருந்தவர்களுமாவர். இறுதிக்கட்டப் போரின் போது, இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளின் கூரைகளைக் கழற்றித் தம்முடன் கொண்டு சென்றதுடன், வீட்டு உடமைகளையும் முடிந்தவரையில் எடுத்துச்சென்றனர். போர் தீவிரமான போது, மக்கள் அடுத்தடுத்து இடம்பெயர வேண்டியிருந்த போது, சகல உடமைகளையும் விட்டு விட்டு வெறுங்கையுடனேயே சென்றனர். சிலர்  உடமைகளை தங்கள் வீடுகளிலேயே விட்டுச்சென்றனர். தற்போது அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு வரும் நிலையில் தங்களின்  உடமைகள் வீட்டுக்கூரைகள் என்பன களவாடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

House_Without_Roofஇதே வேளை, இன்னமும் மீள் குடியமர்த்தப்படாதுள்ள சில இடங்களிலிருந்து மக்கள் விட்டுச்சென்ற அவர்களின் உடமைகளை எடுத்த வருவதற்கு தற்போது படையினரால் அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. ஆனாலும், அப்பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் தங்கள் உடமைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கின்றனர். சிலர் எஞ்சியுள்ள பொருட்களை வாகனங்களில் ஏற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ் குடாநாட்டின் சட்டம், ஒழுங்கு குறித்த மாநாடு நீதிபதி விக்னராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது.

Judge_R_T_Vignarajaயாழ்.குடாநாட்டில் நடைபெறுகின்ற குற்றச்செயல்களைத் தடுத்து, சட்டம், ஒழுங்கு தொடர்பில் தற்போதுள்ள நிலை பற்றி ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மேல் நீதிமன்ற நீதவான் விக்னராஜா தலைமையில் மாநாடு ஒன்று இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ் நிதிமன்றக் கட்டடத்தொகுதயில் நடைபெற்ற இம்மாநாட்டில் குடாநாட்டில் பணியாற்றும் நீதிபதிகள், சட்டத்தரணிகள், வடமாகாணப் பிரதி பொலிஸ்மா அதிபர், சகல பொலிஸ் நிலையங்களினதும் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். குடாநாட்டில் சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டது. சட்டம், ஒழங்குமீறல்களுக்கெதிராக முறையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டது.  பொதுமக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் சக்திகளுக்கெதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்தும் இம்மாநாட்டில் ஆராயப்பட்டது.

இறுதிப் போரின் நாட்கள் நினைவு கூரப்படுகின்றன!

Wanni_Warஇறுதிக்கட்டப் போரினால் மக்கள் அதிகம் கொல்லப்பட்ட மே மாதப் பகுதியை விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதற்காகவும், அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதையொட்டியும் மே மாதம் 18ம் திகதி இலங்கையின் தலைநகரமான கொழும்பில் வெற்றி ஊர்வலம் ஒன்று நடத்தப்பட அரசாங்கத்தினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேவேளை, வன்னியில் இறுதிக் கட்டப் போரினால் உயிரிழந்த தங்கள் உறவினர்களின் முதலாம் ஆண்டு நினைவுகளை வன்னி மக்கள் கண்ணிருடனும், துயரின் வேதனைகளுடனும் நினைவு கூருகின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகைகளில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட உறவினர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்வலி விளம்பரங்கள் அதிகளவில் பிரசுரமாகி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

குற்றச்செயல்களோடு, வதந்திகளும் யாழ்ப்பாண மக்களை அச்சமடைய செய்கின்றன!

Jaffna Townயாழ்குடா நாட்டில் இடம்பெறும் கடத்தல், கொலை, கொள்ளைச் சம்வங்களையடுத்து வதந்திகளும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. கடத்தல், கொள்ளை, கொலை செய்யப்பட்டதான உண்மையற்ற வதந்திகள் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டு அவை காட்டுத்தீ போல மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன.  கடந்த சில தினங்களாக வடமராட்சிப் பகுதியில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்கிற வதந்தி பரவியதால் வடமராட்சி மற்றும் யாழ்ப்பாண மக்கள் அதிர்ச்சிக்கும் பரபரப்பிற்கும் உள்ளாகினர். வடமராட்சியில் இரு தினங்களாக மக்கள் ஆறு மணிக்குப்பிறகு விடுகளை விட்டு வெளியே வருவதில்லை. வணிக நிலையங்கள் நேரகாலத்திற்கே மூடப்படுகின்றன. ( தொடரும் கடத்தல் சம்பவங்களால் யாழ். குடாநாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்! : விஸ்வா )

 இதே வேளை, யாழ்.குடாநாட்டில் நடைபெறும் குற்றச்செயல்களைத்  தடுக்க சிறிலங்கா காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து செயற்படுவர் என யாழ். பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். எனினும் கடந்த 2ம் திகதி  நெல்லியடியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் 25 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சமட்பவத்தையடுத்து, பொது மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் யாழ்.குடாநாட்டில் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இதன் காரணமாக பலர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இலங்கையின் தென்பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் கூட செல்லத் தொடங்கினர். போரின் முடிவின் பின்னர் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. கொழும்பு மற்றும், தென்பகுதிகளுக்குச் சென்று வாழ்ந்த யாழ்ப்பாணத்தவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப ஆரம்பித்தனர். மேற் குறிப்பிட்ட படுகொலைச் சம்பவமானது  யாழ்ப்பாணத்தில் கொலை கலாசாரம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி விட்டதோ என்ற கேள்வி எழுப்பியுள்ளது  மக்கள் இதனால் அச்சம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

கிளிநொச்சி, முல்லையில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் 960!

கடந்த கால யுத்த அனர்த்தங்களால் கிளிநொச்சி, முலலைத்தீவு மாவட்டங்களில் 960 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக வட மாகாண பொது நிர்வாக பிரதிப் பிரதம செயலாளரும் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபராக இருந்தவருமான தி.இராசநாயகம் தெரிவித்துள்ளார். முதற்கட்ட கணக்கெடுப்பில் இவ்விபரம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த 960 சிறுவர்களும் தந்தை, தாய் இருவரையும் இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைக்கப்பட்டுள்ள மகாதேவ ஆச்சிரம சைவச் சிறுவர் மகளிர் இல்லத்தில் தாய் தந்தையரை இழந்த 100 பெண்கள் முதற்கட்டமாக தற்போது இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் எனபதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதே வேளையில், முழுமையான கணக்கெடுப்பொன்று நடத்தப் பட்டால் பெற்றோரை இழந்து அநாதைகளாக்கபட்டுள்ள சிறுவர்களின் தொகை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்படத்தக்கது.

தொடரும் கடத்தல் சம்பவங்களால் யாழ். குடாநாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்! : விஸ்வா

Jaffna_Signயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர். கடத்தல் சம்பவங்களோடு தொடர்புடைய குற்றவாளிகள் பிடிபட்டு வரும் நிலையிலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் சாவகச்சேரியில் கப்பம் கோரி 16 வயது இளைஞன் கடத்தப்பட்டார். பின்னர், படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த இளைஞனது உடல் மீட்கப்பட்டது. அச்சம்பவம் குடாநாட்டு மக்களை பெரும் பீதியிலாழ்த்தியது. இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணகள் நடைபெற்று வருகின்றன.

இச்சம்பவத்தின் பின்னரும் சிலர் கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்டனர். சில பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு அவர்களின் தங்கநகைகள் களவாடப்பட்டன. சில பெண்கள் பாலியல் வல்லுறவிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் கடத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அண்மையில் நவாலியில் வைத்து 13 வயது சிறுவன் ஒருவனை சிலர் வாகனம் ஒன்றில் வந்தவர்களால் கடத்தப்பட்டு பின்னர் அவன் கூக்குரலிட்டதால் அவர்களிடமிருந்து தப்பி வந்துள்ளான். அச்சிறுவன் கூறிய தகவல்கள் அச்சமூட்டுவதாகவுள்ளன.

தன்னைக் கடத்தியவர்கள் தனக்கு ஏதோ மருந்தை பருக்க முற்பட்டதாகவும், ஊசியேற்ற முற்பட்டதாகவும் அவன் தெரிவித்ததோடு. அவ்வாகனத்தில் இன்னொரு சிறுவன் மயக்க நிலையில் இருந்நதாகவும் அவன் தெரிவித்துள்ளான். கடந்த 11ம் திகதி ஓட்டுமடம் பகுதியில் கணனி வகுப்பிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாவணவன் ஒருவனை கடத்த முற்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. அதே நாள் அராலியில் வைத்து 5ம் தரம் கல்வி பயிலும் மாணவியொருத்தியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முற்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது. இவை பொதுமக்களால் முறியடிக்கப்பட்டு சிறுவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதனைத்தொடாந்து மூளாய் பகுதியில் வைத்து சிறுவன் ஒருவன் மீது மயக்க மருந்தை தெளித்து கடத்த முயன்ற சம்பவமும். சங்கனையில் சிறுமியொருத்தியை கடத்த முயன்ற சம்பவமும் நடைபெற்றுள்ளன. இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் குறித்த செய்திகள் யாழ். குடாநாட்டு செய்திப் பத்திரிகைகளில் தொடர்ந்து வந்த வண்ணமுள்ளன. இக்கடத்தல்களோடு தொடர்புடைய சிலர் பிடிபட்டுள்ள போதும் கடத்தல்கள் தொடர்ந்தவாறேயுள்ளன.

கடந்த 25ம் திகதி வடமராட்சி நெல்லிலடியைச் சோந்த 24 வயதுடைய யுவதியொருவர் வெள்ளைவானில் வந்தவர்களால் கடத்தப்பட்டார். பின்னர் இவரது நகைகள் யாவும் கடத்தயவர்களால் பறிக்கப்பட்டு அவரைக் கொலை செய்யும் நோக்கில் அவரின் கழுத்தை நெரித்துள்ளனர். அவர் மயக்கமடைந்ததும,; துன்னாலைப் பகுதியிலுள்ள பற்றையொன்றிற்குள் அவரை தள்ளியெறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த பின்னர் பொதுமக்களின் உதவியுடன் மீட்க்கபட்ட இப்பெண் மந்திகை மருத்துவமனையில் சோக்கப்பட்டார். இக்கடத்தலில் தொடர்புடையவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் வீடொன்றிலிருந்து அந்த யுவதியின் சைக்கிள். நகைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கடத்தல்கள் குடாநாட்டில் தொடர்ந்த வண்ணமுள்ளதால் மக்கள் பிதியுடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களின் பெற்றோர் பெரும் அச்சம் கொண்டுள்ளனர். தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக அவர்களுடனேயே தினமும் பாடசாலைகளுக்கு வந்து செல்லும் நிலை எற்பட்டுள்ளது.

இக்கடத்தல் சம்பவங்கள், பாலியல் வல்லுறவுகள், கொலைகளுக்குப் பின்னால் தமிழர்களே இருந்துள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களும் தமிழர்களாகவே இருக்கின்றனர். இச்சம்பவங்கள் திட்;டமிடப்பட்ட அரசியல் பின்னணியுடன் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் உருவாகி வரும் பாதாள உலகக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே இந்நடவடிக்கைகள் பார்க்கப்படுகிற்னது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இக்கடத்தல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் சில கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு சோதணை நடவடிக்கைகளில் இறங்கி வருவதாக யாழில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்நடவடிக்கை மீண்டும் யாழ்பாணம் இராணுவ பொலிஸ் கெடுபிடிகளுக்கு உள்ளாகும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் வீடுகளில் களவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நிலைமை இவ்வாறு இருக்க குடாநாட்டில் கடத்தல் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும், கடத்தல் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் தமக்கு வரவில்லை எனவும், யாழ். படைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

நன்றி – விஸ்வா, யாழ்ப்பாணம்.