ஈழமாறன்

ஈழமாறன்

வள்ளம் அனுப்பினேன்…… ஹெலி அனுப்பினேன்……. : ஈழமாறன்

Pirabakaran_Vஎங்கு பார்த்தாலும் ஒரு குடையின் கீழ் அணி திரளுங்கள். இரண்டு குடையின் கீழ் அணி திரளுங்கள் என்று ஒரே அவியல். ஐபிசியில என் ரி ஜெகன் அண்ணன் தொப்புள்கொடி அறுநாக்கொடி என்று அறுவை தாங்க முடியேல்ல. மூலைக்கு மூலை சங்கம். நாட்டுக்கு நாடு கோசம். பிரபாகரனைக் காப்பற்றுவதற்காக வன்னி மக்கள் என்ற முலாம் பூசிக் கொண்டு, சன்னி பிடித்தலையும் கூட்டத்தை பார்த்து சிரிப்பதற்கு கூட மனமில்லாத துயர் மனதை வாட்டுகிறது. (இடைக்காடர் கொஞ்ச நாள் குடை பிடித்தார். இடையிலை காடர் ஒட இப்ப புது கோஸ்ரி கிளம்பியிருக்கு)

தலைப்புக்கு வருவோம். றீடஸ் டஜஸ்ற் (Readers Digest) என்ற புத்தகத்தில் சில வருடங்களுக்கு முன் வாசித்த ஒரு சிரிப்பு பகுதி. ‘ஒரு நாட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. அந்த நாட்டு அரசு மக்களை பொது இடங்களில் கூடுமாறு பணிக்கிறது. அப்போதுதான் இலகுவாக பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை நகர்த்தலாம் என்பது திட்டம். மக்கள் அல்லோகலப் பட்டு பக்கத்தில் இருந்த பாடசாலைக்கு ஓட ஒரு யேசுவின் மீது அதீத அன்பு கொண்ட பக்தன் மட்டும் வீட்டில் இருந்து வெளியேற மறுத்து விடுகிறான். வெள்ளம் பெருக்கெடுக்கிறது. அந்தச் சமயம் ஒரு வள்ளம் வந்து ஏறிக் கொள் என்று கேட்க மறுத்து விடுகிறான் பக்தன். வெள்ளம் கூரையை மூடுகிறது. பக்தன் கூரைமேல் ஏறி நிற்கிறான். மீண்டும் ஒரு வள்ளம். மறுத்து விடுகிறான் பக்தன். உங்களுக்கு கடவுளில் நம்பிக்கை இல்லாவிட்டால் செல்லுங்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னைக் கடவுள் காப்பாற்றுவார். இப்போது வெள்ளம் கூரையையும் தாண்டி அவன் கழுத்துக்கு வருகிறது. அந்த வேளையில் ஒரு ஹெலி ஏணியை இறக்கி ஏறும்படி வற்புறுத்த மறுத்து விடுகிறான் பக்தன். பின் மரணம். கடவுளிடம் செல்லும் அவன் சாதாரண மக்கள் முன்னால் என் அன்பை கொச்சைப் படுத்தி என்னை ஏமாற்றி விட்டாயே ஆண்டவா. நான் மரணித்தது கூட கவலையில்லை நீ தக்க தருணத்தில் உதவி உன்னை நம்பியவர்களை காப்பாற்றியிருக்க வேண்டாமா என்று கேட்கிறான்.

அமைதியாக பொறுமையாக பதட்டமில்லாமல் இருக்கும் கடவுள் சொல்கிறார். “பக்தா இரண்டு வள்ளம் அனுப்பினேன். ஒரு தடவை ஹெலி கூட அனுப்பினேன். நீ எதிலுமே ஏற மறுத்து விட்டு தற்போது என்னைக் குறை சொல்வது என்ன நியாயம்.”’

ஏக பிரதிநிதித்துவம் என்ற பிசாசு பிடித்து தலைமைப் பதவி என்ற மாயக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு எதிரே நின்றவர்கள் எல்லாரையும் எதிரி என்று சுட்டுவிட்டு குடை, படை என்று ஒப்பாரி வைக்கிறீர்களே நீங்கள் எல்லோரும் புலம்பெயர்ந்த சில வால்கள் உட்பட தமிழர்களுக்குச் செய்த பாதகச் செயலுக்காக தார்மீகப் போராட்டத்தை தர்பார் சண்டித்தனமாக ஆக்கி விட்டு ஒரு குடையின் கீழ் வாருங்கள் என்று கூவுவதற்க்கு பதிலாக பெற்றோல் ஊத்தி மற்றவன் கொழுத்த நீங்கள் மறத் தமிழன் பட்டம் கொடுக்கிறதை விட்டுவிட்டு உங்களுக்கு நீங்களே பெற்றோல் ஊத்திக் கொழுத்தலாமே. லண்டனிலை பெற்றோல் ஸ்ரேசன் முழுக்க நம்மட ஆக்கள் தானே. இலவசமா வாங்கலாம்.

பிரபாகரன் என்ற தழிழீழ பக்கதனுக்கு அதனை அடைவதற்கு எத்தனையோ வள்ளங்கள் வந்து நின்றன. எத்தனையோ ஹெலிகள் வந்து நின்றன. அத்தனையிலும் ஏற மறுத்து விட்டு ஒரு குடையின் கீழ் அணிதிரளுங்கள் என்று கூச்சலிடுகிறீர்களே தமிழ் பேரவை என்ற போர்வையைப் போத்திக் கொண்டு சில புலத்து ‘மா’க்களே உங்களுக்கு என்ன தமிழன் கேணயன் என்ற நினைப்பா? புலம்பெயர் சூழலிலும் பிளேன் விளையாட்டுக் காட்டுகிறீர்களா?

சித்திரா அச்சகத்தில சுந்தரத்தில தொடங்கினியல். (அன்றைக்கு கூட இருந்தனியல் உதுகளைப் பற்றி ஏதும் சொல்லலாமே.) கள்ளக் காதலியிடம் தமிழீழ உணர்வு தலைக்கேறி ஒளித்து ஒளித்து செல்கையில் கைக்குண்டு வீசி காலை உடைத்து விட்டு 70க்கும் மேற்பட்ட சக அமைப்பு போராளிகளை ஒரு அறையினுள் பூட்டி வைத்து கொன்றபோது உங்கள் ஒரு குடையின் கம்பி உடைந்து போனது தெரியாதா புலத்து ‘மா’க்களே? மட்டக்களப்பில் இருந்து வந்து, பயிற்சி முடித்துவிட்டு தமிழீழக் கனவில் படுத்திருந்த ரெலோ போராளிகளை நாயைச் சுடுவது போல சுட்டு தெருத் தெருவா ரயர் போட்டு எரித்தீர்களே. அன்று சோடா உடைத்து கொடுத்து விட்டு, இன்று சொகுசா வெளி நாடுகளிலே வாழும் புலத்து ‘மா’க்களே அப்போது இரண்டாவது கம்பி உடைகிறதே என்று சொன்ன போது ஏக பிரதிநிதித்துவ பித்தம் தலைக்கேறி தலைகால் தெரியாமல் வென்ற யுத்தம் எல்லாம் வேலுப்பிள்ளையின் மகன் பிரபாகரன் செய்தது. தோத்ததெல்லாம் பால்ராஜ் செய்தது என்று கொண்டாடிவிட்டு இன்று எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் உங்கள் குடையை.

முள்ளிக் குளத்தில் முகாம் இட்டிருந்த புளட் இயக்கப் போராளிகளை சுற்றிவளைத்து சுட்டு விட்டு அறிக்கை விட்டபோது சிவாஸ்றீகல் அடித்து விட்டு சந்தோசப்பட்ட புலத்து ‘மா’க்களுக்கு திடீரென குடைபிடிக்கும் எண்ணம் வருவதற்கு காரணம் என்ன?

காத்தான் குடியில் பள்ளிவாசலில் ”அல்லா எங்களைக் காப்பாற்று” என்று கதறக் கதற கர்ப்பிணிப் பெண்கள் என்று கூடப் பார்க்காமல் வெட்டித் தள்ளிய போது உங்கள் குடையின் இன்னொரு கம்பி முறிந்து போனது. பின் அனுராதபுரத்தில் அப்பாவி மக்களைச் சுட்டபோது, 24 மணி நேரத்தில் முஸ்லிம் மக்களை விரட்டியடித்தபோது, பாடசாலை அதிபர்கள், புத்திஜீவிகள், சகபோராளிகள், பக்கத்து நாட்டுத் தலைவன் என்று உங்கள் ஏகத்தலைவன் ஏகப்பட்ட மக்களின் அவலங்களுக்கு, அழிவுக்கு காரணமாக இருந்தபோது மேதகு என்று பட்டம் சூட்டி பச்சை குத்தித் திரிந்த இந்தச் சில புலத்து ‘மா’க்கள் அமைதியாக இருந்து விட்டு இப்போது கொக்கரிக்கிறீகளே கொழுத்தினவனுக்கு விழா எடுக்கிறீர்களே இப்போது எங்கிருந்து வந்தது இந்த ஞானம்.

ஊரில் சொலவார்கள் ‘அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது’ என்று. அரசியலால் வென்றிருக்க வேண்டிய போராட்டத்தை வெறும் ஆயுத்ததால் வெல்லப்போன தம்பிக்கு அடிவிழும் போது வந்திருக்கின்ற இந்த ஞானம் வேடிக்கையான ஞானம். அண்ணைக்கு மரணப்பயம் என்பது இப்போதுதான் புரிகிறதோ. பொட்டன் வைத்த பொட்டுக்கெல்லாம் இப்போதுதான் ஞானம் பிறக்கிறதோ. மாத்தையா என்ற போராளியை குறைந்த பட்ச கவுரவம் கூட கொடுக்காமல் சுட்டுத் தள்ளிய திமிரில் கருணா அம்மானுக்கு ஆப்பு வைக்க போன போது புரியாத தெரியாத சர்வதேச சமூகம் திடீரென தெரிந்திருக்கென்றால் அண்ணைக்கு அடி கொஞ்சம் பலமோ. அழுகை அழுகையா வருதோ?

சீமானுக்கு காசு கொடுத்து நெடுமாறனுக்கு ஆஸ்பத்திரி கட்டிக்கொடுத்து தமிழக மக்களை தெருவுக்கு கொண்டுவந்து புதுக் குடியிருப்பையாவது காப்பாத்த வன்னி மக்கள் என்று முலாம் பூசி நீங்கள் காட்டும் பூச்சாண்டி புரியாமல் போக நாம் ஒன்றும் சாம் பிரதீபன் மாதிரி முகட்டைப் பார்த்துக் கொண்டு புலி வால்பிடிக்க தீபம் தொலைக்காட்சியில் கவிதை வாசிக்கும் நிஜத்தை மறந்த முட்டாள்கள் அல்ல.

ஏக பிரதிநிதித்துவம் என்றால் என்ன? ரெலோ தேவையில்லை. ஈபி தேவையில்லை. புளட் தேவையில்லை. முஸ்லிம்கள் தேவை இல்லை. இவ்வளவேன் எந்தப் புலத்து ‘மா’க்களும் தேவை இல்லை என்று புதுவை ரத்தின துரை எழுதின கவிதையில் வந்த நீங்கள் தேவையில்லை புலி மட்டும், புடுங்கும் என்பது தானே. அப்படி தனிச்சு நின்று புடுங்கப்போறம் என்று ஒரு லட்சம் மக்களைக் காவு கொடுத்த திட்டம் வகுப்பதில் கெட்டிக்காரன் வேலுப்பிள்ளையின் மகனிடம் போய் கேட்கலாமே ஏன் அண்ணை திட்டம் போட்டு சிங்கள ராணுவத்திற்கு பாடம் புகட்டாமல் புதுக் குடியிருப்பு வரை நீங்களே பாடம் கற்றுக் கொண்டு போறியள், இனி எப்பதான் அடிபடப் போறியள் என்று. முல்லைத்தீவு முகாம் விழுந்த போது தலைவர் நேரடி கண்காணிப்பு. ஜெயசிக்குறு ஓடியபோது தலைவர் தலைமையில் ஒப்பறேசன். இப்ப துண்டக் காணம் துணியக் காணம் என்று ஓடும் போது தலைவர் முதல்லேயே ஓடிவிட்டாரா. இல்லை என்றால் ஒரு திட்டத்தை போட்டிருக்கலாமே. 

குழந்தை பிறக்கிறபோது குறிப்பு எழுதுவார்கள். அப்போ ஊர் சாத்திரி சொல்வார். இவருக்கு தரையிலை கண்டம். தண்ணியிலை கண்டம் என்று. அதுபோல மாவிலாறு தண்ணியிலை கை வைக்கும் போது தெரிந்திருக்க வேண்டும் அண்ணைக்கு கண்டம் ஸ்ராட் பண்ணுதெண்டு. பால மோட்டையிலை அடி விழும் போது தலைவர் பொறுமையா இருந்தார். மல்லாவியிலை மரண அடி விழுந்த போது தலைவர் பொறுiமாய் இருந்தார். கிளிநொச்சி வரைக்கும் எத்தினை கதை விட்டீர்கள். உள்ளுக்கை விட்டு அடிப்பார் என்று உள்ளுரக் கனவு கண்டுகொண்டு மன்னாரில் மக்கள் செத்தபோது மட்டக்களப்பில் மக்கள் செத்தபோது வவுனியா வடக்குப் பிரதேச சண்டையில் மக்கள் செத்தபோது மூதூரில் மக்கள் செத்தபோது தாசீசியஸின் பாசையில் மக்கள் எல்லாம் மாடுகள் என்று பேசாமல் இருந்து விட்டு தலைவர் புதுக்குடியிருப்புக் காட்டுக்கை சூடுதின்ற யானைபோல சுழரும்போது வந்திருக்கும் உங்கள் ஞானத்தைப் புரிந்து கொள்ளாமல் போகுமளவுக்கு தமிழ் பேரவையில் வேலை செய்பவர்கள் அல்ல மக்கள். எமக்கு நிஜமும் தெரியும். புலியினால் ஏற்பட்ட வலியும் தெரியும். அதனால் ஏற்பட்ட வடுவும் தெரியும்.

அதால இலங்கை அரசாங்கத்தின்ர ஜில்மால் கோல்மால் தெரியேல்லை என்று நினைக்க வேண்டாம். அதுவும் தெரியும். தம்பி எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என்று ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறதும் தெரியும். அவைக்கு தனிவிருந்து இருக்கு. அது கிடக்கட்டு இப்ப.

ஜ.நா வுக்கு சொல்லச் சொல்லிறியள். சொல்கெயிமிட்ட சொல்லச் சொல்லிறியள். கருணாநிதியிட்டை சொல்லச் சொல்லிறியள். ஒபாமாவுக்கு கடிதம் போடச் சொல்லிறியள். (ஒபாமா என்ன ஆனந்தசங்கரி என்ற நினைப்பா) பிறவுணுக்கு மனு அனுப்பச் சொல்லிறியள். இது எல்லாத்திற்க்கும் காரணம் வன்னி மக்களைக் காப்பாற்றுவதுதான் என்றால் அண்ணைக்கு ஒரு கடிதம் போட்டிருந்தால்  எல்லாம் முடிந்திருக்குமே. அடைச்சி வைச்சிருக்கிறது அண்ணை. அதுக்குள்ள உள்ள சனத்துக்கு நீங்களும் செல் அடிக்கிறியல். தப்பிப் போற சனத்தையும் சுடுறியல். பிறகு  ஜ.நா வுக்கு மனுக்குடுக்கிறயல்? என்ன எங்களை வைச்சு நீங்கள் காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே?

முதல் வள்ளம் திம்புப் பேச்சு வார்த்தையில் வந்து நின்றது. பிரபாகரன் ஏறிக்கொள்ளவில்லை. வெள்ளமும் அவ்வளவாக இருக்கவில்லை. மன்னித்து விடலாம். பின்னர் வந்தது இலங்கை இந்திய ஒப்பந்த வள்ளம். இந்த வள்ளத்தைப் பிடிச்சு சாதுரியமாக அரசியல் செய்திருந்தால் ஒரு கரை சேருறதுக்கு வாய்ப்பு இருந்தது. இலங்கை வந்திருக்கும் இந்திய இராணுவத்தோடு ஒத்துழைத்திருந்தால் ஜேவிபி போன்ற இனவாத கட்சிகள் தெற்கில் தலையெடுத்து விரிவடையும் போது தவிர்க்க முடியாதபடி தமிழ் மக்களுக்கு உதவிசெய்து நிரந்தர தீர்வுக்கு இட்டுச் செல்லக் கூடிய அரசியல் சூழலை உருவாக்கியிருக்கலாம்.

அல்லது குமரப்பா புலேந்திரன் உட்பட 11 பேரையும் கொழும்பு கொண்டு செல்ல விட்டிருந்தால் இலங்கை அரசின் ஒப்பந்த முறிப்பைச் சாதகமாக்கி இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கலாம். துப்பாக்கியையும், குண்டுகளையும், பொட்டனையும் நம்பும் ஒரு இராஜதந்திர தூரநோக்கற்ற பிரபாகரனிடம் முடிவுகளை ஒப்படைத்துவிட்டு; சோட வாங்கிக் கொடுப்பதிலும், மஞ்சள் சேலையை கட்டிக் கொண்டு, அவற்றை உருவப் படத்தையும் தூக்கிக் கொண்டு, ஊர்வலம் போனால் தமிழீழம் கிடைக்கும் என்று உந்த TNA காரரும், சில கேணைக் கூத்தர்களும் மேடையில் கத்த கடும் குளிரில் நின்று நீங்கள் விசிலடித்ததும் மேளம் அடித்து நடனம் ஆடியதும் வன்னி மக்கள் மீதான கருணையின் நிமித்தம் அல்ல என்பதை புரிந்து கொள்ள நாமும் முகட்டைப் பார்த்துக் கொண்டு கவிதை வாசிக்க வேண்டிய தேவை இல்லை.

கடைசியா மாவீரர் உரை வாசிக்கும் போது தெரியும். இனித் தலைவர் நாயோட்டமும் சில்லறைப் பாச்சலும் தான் என்று. தமிழ்நாட்டில் அணுவாயுத சாலையை வைத்திருக்கும் இந்தியாவுக்கு பக்கத்தில் இருந்து கொண்டு பத்து றாத்தல் குண்டு போடுற மருந்தடிக்கிற பிளேனைக் கொண்டு வந்து என்ன விளையாட்டு. இதுவரைக்கும் விமானம் வைத்து கெரிலா அமைப்புக்கள் போராடாது இருக்கும் போது நாம் செய்தால் உலக வல்லரசுகள் பயப்பிடுமே. இந்தியாவுக்கு கவலை வருமே. இதுக்காகவே பூண்டோடை ஒளிச்சு கைலாயம் அனுப்பிடுவாங்களே என்று கூட யோசிக்காமல் கொண்டைக்கிளாறன் குருவி சைசிலை இரண்டு பிளேன். பத்திறாத்தல் குண்டு. இப்ப படுத்து உறங்க பத்து ஏக்கர் காணி கூட இல்லாத நிலை. ரெண்டு பிளேனையும் ஆமிக்காறன் பிடிச்சிட்டாலும் என்று 14 வயசில இருந்து வளர்த்தெடுத்த பெடியளை குண்டைக் கட்டி அனுப்பிறரே வேலுப்பிள்ளையின் மகன் இதென்ன சூதாட்டமா விட்டுப் பார்க்க. தமிழ் மக்களின் தலைவிதியை தனித்துத் தீர்மானிக்கிறோம் என்று சொல்லிவிட்டு குருட்டுத்தனமா விளையாட்டுக் காட்டினால் என்ன நடக்கும் என்று சிந்தித்து இருக்க வேண்டாமா?

அடுத்து வந்த வள்ளம் சந்திரிகா கப்டன்யாய் இருந்து செலுத்தி வந்த வள்ளம். இயலாமல் போகும் போது யுத்த நிறுத்தம் அறிவிப்பதும் அதனை சாக்காக வைத்து புலத்து மக்களிடம் காலிறுதி அரையிறுதி இனி கடைசியிலும் கடைசி என்று ஏதோ கால்பந்து உலகக்கிண்ண விளையாட்டு மாதிரி திகதி குறித்து புரட்ச்சி செய்யப் புறப்பட்ட புலிகளுக்கு வக்காலத்து வாங்கிய பேரவை போன்ற ஏதிலிகள் அன்று தட்டிக் கேட்காமல் இன்று ஒப்பாரி வைத்தால் என்ன செய்வது.

காலம்சென்ற மதிகெட்ட உரைஞ்சர் என்ன சொன்னார் என்று உந்தப் புலத்து ‘மா’க்கள் எல்லாம் மாவீரர் நிகழ்வில் கைதட்டி விசிலடிச்சவை. சந்திரிகாவை தான் வைச்சிருக்கிறதோ தலைவர் வைச்சிருக்கிறதோ என்று சின்ன இழுபறியாம். அந்தாள் அறளைபேந்து ஏதோ உளற இங்க உள்ள விசலடிச்சான் குஞ்சுகள் பட்டபாடு. அது ஏதோ மிசன் ஸ்ரேட்மன் மாதிரியெல்லோ உந்த புலத்து ‘மா’க்கள் துள்ளினவை.

அன்றைக்கு கூட்டணிகாரர் உசுப்பேத்திவிட நீங்களும் தமிழீழம் கேட்டியல். சரி ஆர்வக்கோளாறு நாங்களும் உங்களுக்கு பின்னால வந்தம். ஆனால் கூட்டணிகாரர் எல்லாம் சுத்துறான்கள் என்று சொல்லி கதைக்க வாறம் என்று போட்டு போட்டும் தள்ளிப் போட்டியள்.

ஆனால் சந்திரிகா ஆட்சிக்கு வருகிற போது நிலைமைகள் மாறியிருந்தனவே. அதற்கு ஏற்றால் போல் ஒரு தீர்வை நோக்கி புலிகளும் மாறியிருக்க வேண்டும் அல்லவா? அரசியல் சாணக்கியம் என்பதும் அதுதானே. ஆனா என்ன செஞ்சியல். நீலனை போட்டத் தள்ளினியல். சர்வதேசமே அறிஞ்ச ஒரு ஒரு அரசியல் சட்ட வல்லுனர். அந்தாள் வைச்ச தீர்வு உங்களுக்கு விளங்கேல்லை எண்டா என்ன போட்டுத் தள்ளுறதே.

அது என்ன இயக்கத்தில் ஒருத்தரும் பொம்பிளையளை பார்க்கக் கூடாது. தொட்டும் பாக்கக் கூடாது என்று சட்டம் போடுறியள். தொட்டதுக்காக சுட்டும் போடுறியள். ஆனா உண்ணாவிரதம் இருந்த பெட்டையளைத் தூக்கிக்கொண்டு போறியள்.  மதியை வாட்டசாட்டமா கண்டவுடனை மெதுவா தொட்டும் பாக்கிறியள். மஞ்சள் தண்ணி வேறை ஊத்துறியளாம். பிள்ளையும் பெறுறியள். அதை பிழையென்று நான் சொல்ல வரேல்ல. ஆனா ஒழுக்க விதி என்ற பெயரிலேயே உமாவையும் சுட்டியள். கூட இருந்தவனை சுட்டியள். பிறகு மாற்றத்தின் தேவையை தலைவருக்கு சதி வரும் போது உணர்ந்தீர்கள் தானே.  கால மாற்றத்தைக் கண்டு ஒழுக்க விதியையும் மாத்தினீர்கள் தானே. அதுதானே ஒரு போராட்ட அமைப்புக்கு தேவையான கொள்கையும் கூட. அதே போல சந்திரிகா தலைமையில் வந்த வள்ளத்தில் ஏறியிருந்திருக்க அல்லவா வேண்டும். இது என்ன உங்கள் குடும்பச் சொத்தா? 60000 மக்கள் பலியாகியிருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் இந்த வள்ளம் வன்னிக் கடலில் நின்றபோது ஏறமறுத்து தமிழ் மக்களின் தலைவிதியை நாசமறுத்து போட்டு ஜ.நா வுக்கு கடிதம் போட்டால் உது என்ன விளையாட்டு.

ரெலோ எதிரி. ஈபி எதிரி. மகிந்த எதிரி. இந்தியா எதிரி. அமெரிக்கா எதிரி. ஜரோப்பா எதிரி. முஸ்லிம்கள் எதிரி. கருணா, பிள்ளையான் எதிரி. புளட் எதிரி. புளியம் பொக்கணை பொன்னம்மாக்கா மகளை அனுப்ப மறுத்ததாலை அவவும் எதிரி. சரி அதை விடுவம். தமிழ் பேரவையையும் தீபம் தொலைக்காட்சி சாமும் மனிசியும் தவிர புலிகளுக்கு யார் நண்பர்கள். யாராவது ஒரு நாடு. ஒரு கட்சி (TNA) ஜோக் அடிக்கக் கூடாது நான் சீரியசா கேக்கிறன். ஒரு சங்கம். ஏன் நீர் மாடுகள் மாதிரி சாய்த்துக் கொண்டுபோய் சுத்திவர விட்டு விட்டு நடுவிலே நின்று உயிர்ப்பிச்சை கேட்கும் வன்னி மக்களில் குறைந்தது 3 பேராவது ஆதரவளித்தால் தமிழீழம் சாத்தியம் என்று நம்பலாம். அதில் எதுவுமே சாத்தியமில்லாமல் பொட்டனையும் நடேசனையும் தவிர இயக்கத்தில் இருந்த அத்தனை திறமை சாலிகளையும் எதிரியாக்கி போட்டு 40 கி.மீ.பரப்பளவுக்குள் ஓடி ஒழிந்து கொண்டு சர்வதேச சமூகம் கண்ணைத் திறக்க வேண்டும் என்று அறிக்கை விட்டால் இது என்னப்பா விளையாட்டு. அரசியல் ஒரு விளையாட்டு அரங்கு என்று இதற்க்குத்தான் சொன்னார்களோ?

ஜயா சர்வதேசத்துக்குள் தான் இந்தியா இருக்கு. இந்தியாவிலை வைச்சு ராஜீவை போட்டியள். சர்வதேசத்துக்குள் தான் பிரான்ஸ் இருக்கு. அங்கு வைத்துத்தான் சபாலிங்கத்தைப் போட்டியள். ஏன் உங்கட நாதனை கஜனைப் போட்டியள். சர்வதேசத்துக்குள் தான் இங்கிலாந்து இருக்கு. இந்த நாட்டுப் பிரசை அதுவும் உங்களுக்கு வாலாட்டிக் கொண்டிருந்த ஒரு அபிமானி பார் என்றால் பளார் என்று அறைந்துவிடும் அளவுக்கு அபிமானி. இந்த பிரித்தானிய பிரைசையைக் கூப்பிட்டு வெளிநாட்டுக் கோவணத்தையும் அவிட்டுப் போட்டு எலியை விட்டா? (இந்த ‘கோவணம்’ அண்ணன் ‘ராசாகரனின்ட மார்க்ஸிச டிக்சனரியில’ இருந்து சுட்டது. அவருக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும்.) இது என்ன அம்மண விளையாட்டு. இது ஏதும் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய தமிழர்களின் வீர விளையாட்டுகளில் இதுவும் ஒன்றோ?

சர்வதேசத்திற்குள் தான் கனடா இருக்கு. அங்கை பத்திரிகை ஆசிரியர்களை அடிச்சியள். இப்படி சர்வதேசம் முழுக்க நாசம் பண்ணிப்போட்டு. இப்ப உங்கட கோவணத்தையும் மகிந்த பிறதேர்ஸ் புடுங்கப் போறாங்கள் என்ற உடன ஒபாமாவுக்கு கடிதம் போடுங்கோ. இன்ரநஷனல் கொம்மியூனிற்றை சொல்லுங்கோ எண்டா. எங்கை நீங்கள் அநியாயம் பண்ணாது விட்டீர்கள் நாம் அங்கு சென்று முறையிட. அதென்ன ஜெயதேவனின்ர கோவணத்தைக் கழற்றும் போது ஒருவருக்கும் நீங்கள் கடிதம் போடச் சொல்லேலை. பிரபாகரன்ரை கோவணம் பறிபோகும் போது மட்டும் துள்ளினா இது என்னப்பா நியாயம். வேணும் என்றால் சாம் பிரதீபனிடம் சொல்லி அண்ணையின் கோவணம் என்ற தலைப்பில் ஒரு போன் இன் (Phone in) புறோக்கிறாம் வைக்கச் சொல்லுங்கோ. சந்தா கட்டின ஆக்களை பைத்தியக்காரர் என்று நினைக்கும் தீபம் நிருவாகம் நிச்சயம் அனுமதிக்கும் என்று நினைக்கிறேன். என்னடா GTV, IBC பற்றி வாயே திறக்கிறான் இல்லை என்று யோசிக்க வேண்டாம். அதுதான் திறந்தாலே தெரியுமே.

சரி எல்லா வள்ளத்தயும் விடுவோம். கடைசியாக வந்தது நோர்வேயிலிருந்து ஹெலி. தமிழர்களின் போராட்ட வரலாறில் கவுரவமாக ஒரு தீர்வை அடைவதற்கான கடைசி வழி. இரணைமடுக் குளத்திலை ஏறுறியள். மாலை தீவிலை இறங்கிறியள். தாய்லாந்து போறியள். சரக்கு வேறை பாக்கிறியள். சமஜ்டி முறையிலான ஒரு தீர்வுக்கு கையொப்பம் இட்டு விட்டு நாடு திரும்பின கருணாவை நாட்டை விற்று விட்டு வந்துவிட்டான் என்று நையாண்டி பண்ணிவிட்டு கவுரவமான ஒரு தீர்வுக்கு கிடைத்த ஹெலியை தவறவிட்ட வரலாற்றில் தமிழினம் என்றும் மன்னிக்க முடியாத  தவறை இழைத்திருக்கிறார் பிரபாகரன்.

நீங்கள் காலில் விழுந்து கதறியழுது, செஞ்சிக் கூத்தாடி, பிச்கைச கேட்டு கடிதப் போட்டு, மண்டியிட்டு, தமிழினம் வரலாற்றில் காணாதா அவமானங்களையும், இழிவுகளையும் சந்திக்க வைத்து, இன்று புதுக்குடியிருப்பு காட்டுக்குள் புடையன் பாம்புகள் போல வெடிபட்ட கரடிகள் போல வெந்து துடிக்கிறீர்களே ஒரு வேளை பிரபாகரனும் பொட்டனும் சக பாடிகளும் இந்த இறுதி அழிவிலருந்து தப்பித்துக் கொண்டாலும் தமிழினத்தின் மரியாதை கௌரவம் நியாயமான தீர்வு என்று அத்தனையையும் குழி தோண்டிப் புதைத்ததற்காக வரலாறு உங்கள் மீது காறி உமிழும் என்பதை மறந்து விடவேண்டாம்.

எத்தனை வள்ளம் வந்தது. எத்தனை ஹெலி வந்தது. எத்தனை தடவை எங்கள் மக்கள் கவுரவமாக வாழக் கூடிய சந்தர்ப்பம் வந்தது. அத்தனையையும் போட்டு நொருக்கி விட்டு ‘உள்ளே விட்டு அடிப்பார்’ என்ற கனவில் இருந்த புலத்து ‘மா’க்களிடம் கேட்பது இதுதான். காப்பாற்றப்பட வேண்டியது வன்னி மக்களும் அவர்களது வாழ்வும். அது உங்கள் உள்ளங்களை உறுத்தினால் ஊர்வலம் செல்லுங்கள். வன்னி மக்களை விடுவிக்கும்படி. உண்ணாவிரதம் இருங்கள். உயிர்களைக் காப்பாற்றும் படி. எண்ணை ஊற்றி உங்களை நீங்களே கொழுத்துங்கள். பிரபாகரனே உனது முட்டாள் தனத்திற்கு ஒரு எல்லை இருக்கு. போதும் பிளளைகளைக் கூட்டிக்கொண்டு எங்காவது தொலைந்து விடும்படி. தமிழர்கள் இனி தங்கள் தலைவிதியை ஏகப்பட்ட பிரதிநிதிகளிடம் கொடுத்து நிர்ணயித்துக் கொள்ளட்டும்.