பிரபாகரனின் இறப்பின் பின் ஓர் உயிர்ப்பு என்ற தலைப்பில் June 19 ல் வெளியான எனது கட்டுரையுடன் தொடர்புபட்டதாக இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது.
இன்றுவரை நாம் அரசியலில் படித்த பாடங்கள் சில;
உரிமைகள் மறுக்கப்படும் போது போராட்டம் என்பது அவசியமாகிறது. என்றும் இரண்டாவது இனமே போராட வேண்டி இருப்பதால் முஸ்லீம்கள் மதம்சார்ந்து தம்மை மூன்றாம் இனமாக வகுத்துக் கொள்வதினூடு தம்மை பாதுகாத்துக் கொண்டார்கள். இனங்கள் என்று மொழி வாரியாகவே பிரிக்கப்பட்டுள்ளது என்றாலும், அவர்கள் தம்மை மதரீயாக வகைப்படுத்த விரும்புகிறார்கள். முஸ்லீம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது. முஸ்லீம் மக்கள் நாளை எமது போராட்டத்தில் ஒரு பெரியபரிமாணத்தை எடுப்பர். முக்கியமாக கிழக்கில் முஸ்லீம்களே போராடும் சக்தியாக உருவெடுப்பார்கள் என்பது திண்ணம்.
முதலில் இனக்கலவரம் ஏற்பட்டது சிங்கள முஸ்லீங்களுக்கிடையில்தான். இது சேர் பொன் இராமனநாதன் போன்ற தலைவர்களால் தீர்த்து வைக்கப்பட்டு அவர்கள் தேரில் வைத்து இழுக்கப்பட்டார்கள். பின் கலவரங்களும் போராட்டங்களும் தமிழர்கள் தலையிலே நிர்ப்பந்தமாக திணிக்கப்பட்டது. மற்றவர்கள் பிரச்சினையில் நாம் மூக்கு நுளைக்காமல் இருப்பது முக்கியம் என்பதே இங்கே நாம் படித்தபாடங்களில் ஒன்றாகும்.
ஆங்கிலேயர் நாட்டை விட்டுவிட்டுப் போகும்போது நாமும் எம்தலைவர்களும் நாம் தனித்துவமானவர்கள் என்பதை உணர்ந்து அன்றே பாக்கிஸ்தான்போல் பிரித்திருந்தால் இன்று ஈழம் கோரி ஒருபோராட்டம் நடந்திருக்காது. இவ்வளவு அழிவுகளை நாம் சந்தித்திருக்க மாட்டோம். சிங்களவர்களின் அடிமையாக இருக்காது சிலவேளை சில ஆயுதம் தாங்கிய குழுக்களின் கீழ் அடிமையாக இருந்திருப்போம். ஆனாலும் மொழி பிரதேசம் போன்றவை பாதுகாக்கப் பட்டிருக்கலாம். சிலவேளை எல்லைப்போரில் நாம் பலரைப் பறிகொடுத்திருப்போம். அந்த அழிவை விட இன்றைய அழிவு குறைவாக இருந்திருக்கலாம்.
இன்று தமிழர் சிங்களவர்கள் என்று பிரிவினைக்கு யார் காரணம்? ஆம் முழு இலங்கையின் அரசியல்வாதிகளே காரணம். தமிழ் சிங்கள மக்களிடையே நாட்டின் அபிவிருத்தி சுவீட்சமான வாழ்வு பற்றிய அறிவும், எண்ணங்களும், நாட்டின் நலன் பற்றிய தூரநோக்கும், செயற்திட்டங்களும் இல்லாமல், குறுகிய நோக்குடன் வாக்குவங்கியை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட பிரிவினைவாதத்தின் வெளிப்பாடே இன்றைய போரும் அழிவுகளும். பிரிவினைப் போராட்டத்தால் இழப்புக்களைச் சந்தித்தது தமிழர்கள் மட்டுமல்ல. சிங்களவர்களும் தான். அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய நலன்கள் எல்லாமே போருக்குள் கொட்டப்பட்டது. உயிரிழப்புகளுக்கும் குறைவில்லை என்பதை அறிக.
ஒருநாடு ஒர் அரசு என வந்துவிட்டால் மக்கள் அனைவரும் அந்நாட்டவர்கள் எனும் மனநிலை வளர்த்தெடுக்கப்படுவது முக்கியம். இதை மாறிமாறி வந்த சிங்கள அரசுகள் செய்யத் தவறின, மறுத்தன. ஒருநாடும் ஒருகுடும்பம் போன்றதே. நாட்டுக்குள் பிளவுகளையும் பிரிவினைகளையும் வைத்துக் கொண்டு நாட்டை வளர்க்கலாம் என்பது கனவே. ஏன் எமது ஈழவிடுதலைப் போராட்டத்திலும் சகோதரப் படுகொலைகளைச் செய்து கொண்டு நாம் ஒற்றுமையாய் போராடுவோம் என்பது எப்படிச் சாத்தியமாகும். இதன் விளைவே இன்று நாமும் எம்மக்களும் அனுபவிக்கும் தாங்கொணாத் துயர். வேற்றுமைகள் பலவிருப்பினும் ஒற்றுமைகளினூடும் பொதுவான வேலைத்திட்டங்களுடும் நாட்டின் ஐக்கியம் கட்டி எழுப்பப்பட்டிருக்க வேண்டும். இதை இன்று கூட அரசு செய்யத்தொடங்கலாம். காலம் கனிந்துதான் இருக்கிறது. இவ்வளவு காலமும் சிங்களப்பேரினவாதம் செய்யத்தவறிய விடயத்தை இன்றைய அரசு செய்யுமானால் இலங்கையில் இனஒற்றுமையுடனான சுபீட்சமான வாழ்வு உருவாகும். முதலில் பட்டகாயங்களுக்கு மருந்து போடுவது மட்டுமல்ல சிங்களமக்களிடையே தமிழர்களும் இனநாட்டுப்பிரசைகள் என்ற அறிவை துவேச ஒழிப்பினூடாக அரசு செய்வது அவசியம். முக்கியமாக மதத்திற்கு மதிப்பளியாது மனிதத்துக்கு மதிப்பளிக்கப்படுமானால் இலங்கையில் ஒற்றுமை சாத்தியமானதே.
அரசியலினுள் மதம் என்று மூக்கு நுளைக்கிறதோ அன்று பிரச்சினைகள் வித்திடப்படுகிறது. மதம் என்பது நம்பிக்கை மட்டுமே. மனிதன் கடவுளை என்றும் கண்டதில்லை. ஆனால் காணாத கடவுளுக்காகச் சண்டைபிடித்துக் கொண்டிருக்கிறான். இவ்வுலகில் மதச்சண்டையே அதிகம் என்பதை அறிக. யூதர்கள் பாலஸ்தீனியர்கள் போல் என்றும் இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் என்றும் சரித்திரப்பகை கொண்டவராக இருக்கவில்லை. சிறியநாடாகி சிற்றரசுளாகி நாடு பண்டைய காலங்களில் ஆளப்பட்டாலும் சரித்திரப்பகை கொண்டவர்களாக நாம் என்றும் வாழ்ந்ததில்லை. பௌத்த சிங்களவரின் நலன் மட்டும் கருதி மகாவம்சம் புனையப்பட்டதோ அன்று ஆரம்பமானது இனவெறி.
பௌத்தனாக இருப்பவன் இனவெறி கொள்ளலாமா? ஒரு பௌத்தன் என்றும் மீழ்பிறப்பை நம்புபவன். நாளை அவன் தமிழனாகவும் பிறக்கலாம் அல்லவா. கொல்லாமையை முதன்மையாகப் போதிப்பது பௌத்தம் என்பதை அறிவுறுக.
இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதியில் ஏற்பட்ட அரசியல் மதமாற்றங்கள் காலங்காலமாக இலங்கையில் முக்கியமாக வடபகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியது. மதம் சார்பாக சாம்பிராட் அசோகனின் பௌத்தசங்கங்கள் இந்தியா முழுவதும் சென்று மதம்பரப்பின. அங்கே பௌத்த அலையே முட்டி மோதியது. இதன்பாதிப்பு இலங்கையின் வடபகுதியிலும் இருந்தது காரணம் இன, மொழி, கலாச்சார, வாணிபத்தொடர்புகள் இந்தியாவுடன் மிகமிக நெருக்கமாக இலங்கையின் தென்பகுதியை விட வடபகுதிக்கே அதிகமாக இருந்தது. முதன்முதலில் பௌத்தமதம் வந்ததும். அம்மதத்தை முதன் முதலில் தழுவிக்கொண்டவர்கள் தமிழர்கள் என்பதும் இலங்கைவாழ் அனைத்து மக்களும் உணரவேண்டிய ஒன்றாகும்.
இலங்கை முழுவதும் பௌத்தம் ஒரே நேரத்தில் இருந்தது என்பதற்கான ஆதாரம் போதாது. இருப்பினும் வடகிழக்குப் பகுதிகளில் தமிழ்பௌத்தர்கள் தான் இருந்தார்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உண்டு. கரையோரப் பக்கமாகவே பௌத்தம் வடகிழக்குப் பகுதிகளில் பரவியிருந்தது. தற்போது சிங்களவர்கள் பௌத்தர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக பௌத்தம் சிங்கள மக்களுக்கு மட்டும்தான் உரியது என்பது பெரும் தவறு. தமிழர்கள் நாகர்கள் என்பது ஆய்வியல் உண்மை. இந்நாகர்களுக்குரிய விகாரையே நாகவிகாரை என்பதாகும். இது நயினாதீவில் உள்ளது என்பதை அறிக. நாகத்தின்மேல் புத்தர் படுத்திருப்பதுபோன்ற பலசிலைகள் தென் கிழக்காசியாவில் காணலாம். நாகவணக்கமானது உலகின் பலவிடங்களிலும் நடந்திருக்கிறது என்பதற்கு இது சான்றாகும்.
சிங்களவர்களும் திராவிடரே என்பதற்கு போதியளவு சான்றுகள் உள்ளன. நோர்வே நக்கீராவின் கட்டுரை ஒன்று தேசம்நெற்றில் வந்திருந்தது. படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.
தேசியம் வளர்க்கப்பட்டு பொது வேலைத்திட்டங்களின் கீழ் நீண்ட நோக்குடன் மற்றய இன, மொழி, கலாச்சாரங்கள் மதிக்கப்படும் போதே இனவெற்றுமை உயிர்பெறும். தற்போதய சூழல் அரசுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். இதை அரசு செய்யத்தவறின் பண்டாரநாயக்கா, கிட்லர் போன்ற மனிதவினத்துவேசிகளுக்கு நிகராக மகிந்தாவும், அவர் குடும்பமும் உள்ளாகும். போரின்பேரழிவு இருபக்கமும் நடந்திருக்கின்றது. இதையுணர்ந்து இன்றைய அரசியல் தலைவர்கள் செயற்படுவது முக்கியமானது. இன்று நீங்கள் எடுக்கும் சரியான முடிவுதான் நாளை இலங்கையில் ஒரு சுபீட்சமான வாழ்வு. ஆயுதமேந்திப் போராடிய தமிழினம் தான்பட்ட காயங்களுடனும் வெறுப்புகளுடனும் தான் இன்றிருக்கிறது. இக்காயங்களுக்கு சரியான முறையில் மருந்து கொடுக்கப்படாது போனால் நாளை இதைவிட பெரிய, பாரிய அழிவுகளுடனான போர் உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை. இனியொரு போர் உருவானால் இலங்கை எனும் ஒரு தீவு சரித்திரமாக்கப்படலாம். விஞ்ஞானத்தின் அபரீதமான வளர்ச்சியும் கட்டுப்பாடற்ற கண்டுபிடிப்புக்களும் நாளை எம்நாட்டில் பரிசோதிக்கப்படலாம்.
மீண்டும் மீண்டும் அரசுக்கு நான் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். விழுப்புண்களுடன் இருக்கும் தமிழினம் போராடவும், ஆயுதப்போராட்டத் தோல்வியூடு தான் படித்ததைக் கொண்டு மீண்டும் ஆயுதப்போராட்டத்துக்கு தன்னை சுதாகரித்துக் கொள்வதற்கு அதிககாலம் எடுக்காது. ஆகவே இலங்கையின் சுபீட்சமான எதிர்காலம் இன்று சிங்கள அரசின் கைகளிலேயே இருக்கிறது.
தமிழ்மக்களது ஆயுதப்போராட்டத்தின் தோல்விக்குக் காரணம் என்ன?
அரசியல் தெளிவின்மை;
அரசியல் என்பதை புலிகள் விளங்கியவிதம் மிகமிகப் பிழையானது. மண்ணை மீட்பதாலும், இராணுவத்தை அடித்துக் கலைப்பதாலும் ஒரு நாட்டை கட்டி எழுப்பமுடியும் என்பதும், பிடித்தநாட்டை இராணுவப்பலத்தால் காப்பாற்ற முடியும் என்பதும், புலிகளின் மூடத்தனமான முழுமையாக நம்பிக்கையாக இருக்க வேண்டும். வீரதீரங்கள், சாகசங்கள், கதாநாயகத்துவமே அன்றி அரசியல் ஆகாது. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு விடயத்திலும் அரசியல் உள்ளது. சாப்பிடும் உணவில், வாங்கும் பொருட்களில், பிள்ளை பெறுதலிலும் அரசியல் உள்ளது. முக்கியமாக இலங்கை அரசியற்சட்டம் என்ன கூறுகிறது? எப்படி நாம் பிரிந்துபோகும் உரிமையுடையோமா? நாம் எடுத்தோம், வெட்டினோம் என்று நடுவில் கோடுகீறி இது எனதுநாடு அது உனதுநாடு என்று பிரிப்பதா? இப்படியான குழந்தைப்பிள்ளைத்தனமான கேள்விகளுக்குக் கூட சரியான பதில் இல்லாமலேயே புலிகளின் போராட்டம் நடந்திருக்கிறது என்பதை இராணுவ நடவடிக்கைளின் முடிவுகள் காட்டுகின்றன. அரசியலை விட்டு இராணுவத்தீர்ப்பே தீர்மானமானது என்று கொண்ட புலிகளுக்கு விளைந்தது என்ன? ஆயுதம் தூக்கியவனுக்கு ஆயுதத்தால் சாவெனும் சமயபோதனை எமக்கு வேண்டாம். ஆயுதத்தையே எதிர்த்து தன்போராட்டத்தை அகிம்சை கொண்டு நடத்திய மாகாத்மா காந்திக்கு என்ன நடந்தது. காந்தி எப்போது ஆயுதம் தூக்கினார்? ஆயுதம் என்பது அரசியலுக்கும் விடுதலைக்கும் துணைநிற்கும் ஒரு கருவியே தவிர. அதுவே அரசியலாக முடியாது. ஆயுதத்தைச் சரியாகப் பாவிக்காத போது அதுவே எமக்கு ஆபத்தாகி விடுகிறது என்பதற்கு புலிகள் ஒரு உதாரணம்.
ஆயுதம் தூக்காமலே பலநாடுகள் அரசியல் நகர்வுகளால் நாட்டைப்பிரித்து தம்மாளுகைக்குள் கொண்டுவந்த சரித்திரங்கள் எம்கண்முன் நடந்தேறின. உ.ம்: கொசோவோ, ஸ்கொட்லண்ட், கிழக்குத்தீமோர் ஆயுதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வென்ற எரித்திரியாவின் சுவடுகளைப் புலிகள் தொடர்ந்தார்கள் என்பதில் ஐயமில்லை. எரித்திரியா சரித்திரரீதியாக காலணித்துவ காலத்தில் கூடத் தனித்தே ஆளப்பட்டது. இதன் பிரிவினை கூட பேரிழப்பின் பின்னே அரசியலாலேயே நிர்ணயிக்கப்பட்டது.
ஒரு இறையாண்மையுள்ள நாட்டை நாம் நினைப்பது போல் துண்டாடிவிட முடியாது. அதற்கு அரசியல் மட்டுமல்ல புவியியல் காரணிகள், வளங்கள், உலகவரசியலின் தாக்கம், பிரிந்து போகும் நாட்டை முன்மொழியவும் அதை வழிமொழிந்து உலகநாடுகளின் முன்நிறுத்துவதற்கான பலம்வாய்ந்த நாடுகளின் பின்புலம், பிராந்திய வல்லரசுகளின் அனுசரணை, அயல்நாடுகளின் உதவி இப்படிப் பலகாரணிகளைக் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
இன்று 29 வருடமாக புலிகள் நடத்தியது தெரு, ஊர், சண்டித்தனங்களின் புறவளர்ச்சியே அன்றி வேறில்லை. அரசியல் இல்லாத ஒருநாட்டை எப்படிக் கட்டியெழுப்ப முடியும் என்று நினைத்தார்களோ புரியவில்லை. புலிகள் உண்மையாக விடுதலைக்காகப் போராடியிருந்தால் இவ்வளவு அறிவுவளங்கள் வெளிநாடுகளில் இருந்தும் அவற்றை சரியான முறையில் பயன்படுத்தியிருக்கலாம். அரசியலுக்கு பாலசிங்கத்தை மட்டும் நம்பியிருந்தார்கள். பாலசிங்கத்தைத் தவிர வெளிநாட்டில் அரசியலுக்காக புலிகளால் நியமிக்கப்பட்ட அரசியல் அறிவுதார்ந்த ஒரு குழுவை சொல்லுங்கள் பார்க்கலாம். புலம்பெயர் தமிழர்களை பணங்காய்க்கும் மரங்களாகப் பாவித்தார்களே தவிர வேறு என்ன செய்தார்கள்? வெளிநாடுகளில் புலிப்பக்தர்களுக்கு விரும்பாத அனைவரையும் துரோகிகள் என்று விலத்தி விலத்தி ஒரினத்தை அழித்து தன்னினத்துக்கே துரோகம் செய்து நிற்பது புலிகளே அன்றி வேறுயாருமில்லை.
அரசியலுக்கு பாலசிங்கம், ஆயுதங்களுக்கு கே.பி (உலகமே தேடும் ஒரு கிறிமினல்) புலிகளின் இராணுவத்துக்கு பிரபாகரன். இந்த மூவரையும் வைத்துக்கொண்டு பலமில்லியன் வருடங்கள் வாழ்ந்த ஒரினத்தை நிர்ணயிக்க முடியும் என்று நம்பிய புலிகளுக்கும் தமிழ்மக்களுக்கும் இந்தத்தோல்வி வேண்டிய ஒன்றே. ஒரு மனிதனின் வாழ்க்கை வரையறைக்கு உட்பட்டது. ஆனால் ஒரு விடுதலைப்போராட்டம் பலதலைமுறைகள் கூடக் காவிச்செல்லப்படலாம். இதை ஒருதனிமனிதனான பிரபாகரனால் எப்படி நிர்ணயிக்க முடியும்? தனிமனிதத் துதிபாடல்களில் வாழ்ந்த சமூகம் இதைவிட வேறுவிதமாக எப்படிச் சிந்திக்கும்? சிந்திப்பவர்களின் தலையெழுத்துக்கள் எல்லாம் துப்பாக்கிகளால் எழுதப்படும் போது எந்தப் புத்திஜீவி, எந்த அறிவுஜீவி தன்கருத்துக்களைச் சொல்ல முன்வருவான். போகும் வழி எதுவெனத்தெரியாமல் போனபோராட்டம் தான் புலிகளினது போராட்டம். ஆயுதமின்றி அரசியலால் கூட நாடுகள் பிரிக்கப்பட்டன என்பதை முன்பு குறிப்பிட்டேன் என்பதை அறிக.
எரித்திரிய போராட்டம்;
எரித்திரிய வீரம் செறிந்த கெரில்லாப் போராட்டம் வெற்றி பெற்றது என்றாலும் மக்களின் விடுதலை தனிமனிதனால் பறித்தெடுக்கப்பட்டுள்ளது. கூட நின்று போராடிய போராளிகள் மந்திரிகளாகி பின் சிறைப்படுத்தப்பட்டனர். எரித்திரியாவின் பிரிவினையை உலகநாடுகள் அனுசரித்ததற்கு முக்கிய காரணம் எரித்திரியாவானது என்றும் மற்றைய நாடுகளுடன் இணைந்து இருந்ததில்லை. காலணித்துவ காலத்திலும் கூட. எரித்திரியரால் பேசப்படும் திகிரின்ய எனும் மொழியும், எத்தியோப்பியரால் பேசப்படும் அமாரிக் எனும் மொழியும் கெஸ் எனும் ஆதிமொழியில் இருந்து உருவானது. இது தமிழைப்போல் ஒரு செம்மொழி என்பதும் குறிப்பிடத்தக்கது. செம்மொழியின் வரைபு இலக்கணம் மற்றமொழிகளின் கலப்பின்றி வாழத்தகுதி கொண்ட மொழி என்பதாகும். இந்த எரித்திரியப் போராட்டம் எத்தனையோ உயிர்களைக் காவுகெண்ட பின்பும் ஒரு தனிமனிதனின் கைகளிலே ஒருநாட்டின், மனித இனத்தின் தலைவிதி போய் சேர்ந்துள்ளது. நான் புலிகள் பலமாக இருக்கும் காலங்களின் யாவருக்கும் சொல்லும் வார்த்தை இது: “தமிழர்களின் போராட்டம் யார் கைகளில் அடிமையாக இருப்பது என்பதுதான்”
போராடும் சக்திகள் கண்டறியப்படாமையும் வழிமுறையற்ற போராட்டமும்;
உண்மையாகப் போராடும் சக்திகள் யார்? போராட்டம் எப்படி பின்பற்றப்பட வேண்டும், குறிக்கோளை அடைவதற்கான வழி என்ன? எமது போராட்டம் வெற்றியழிக்குமா? ஒரு இறைமையுள்ள நாட்டிலிருந்து ஈழம் பிரிப்பதற்கு உலகவரசியல் அமைப்பில் எமக்கு சாத்தியமான காரணிகள் உள்ளதா? இருந்தால் அவை எவை? இல்லையென்றால் போராட்டம் எப்படி அமையவேண்டும் எனும் தூரநோக்கோ, தூயநோக்கோ புலிகளுக்கு இருக்கவில்லை.
எம்நாட்டுத் தமிழ்மக்களின் சனத்தொகையை வைத்தும், புவியில் நிலைகளை வைத்தும் ஒரு தனிநாட்டைப் பிரித்து ஆளமுடியுமா? பிரித்தெடுத்தால் எல்லைப்போர் என்பது தவிர்க்க முடியுமா? இதற்கு எமது புவியியல் அமைப்பும் மக்களும் தயாரா? போராட்டம் மண்ணுக்கா மக்களுக்கா?
ஈழம்வேண்டும் என கடைசிவரையும் தெருத்தெருவாகக் கத்தியவர்கள் யார்? இவர்கள் ஈழமண்ணில் நின்றா கத்தினார்கள். அம்மண்ணில் நின்று கதைக்கவோ கத்தவோ வக்கற்றவர்கள் ஈழம் கேட்டுக் கோசம் போட்டார்கள். ஈழம் எங்காவது ஐரோப்பியக் கடைகளில் விற்கிறதா?
போராடப் புறப்படும்போது எம்முடன் இணைந்து செயற்படும் சக்திகள் யார்? சிங்களப் பகுதிகளில் கூட புரட்சிகரமான சத்திகளை இனங்கண்டு எம்மக்களின் பிரச்சனைகளை அவர்களும் வென்றெடுக்கக் கூடிய வசதிகள் உள்ளனவா எனக்கண்டறிந்து போராட்டம் நெறிப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். புலிகள் செய்தார்களா? இல்லையே. புலிகளும் ஈழமென்ற போரில் துவேசத்தை வளர்த்தார்களே தவிர சிங்களப்பகுதியிலுள்ள எமக்காகப் போராடும் சக்திகளைத் தவறவிட்டார்கள் என்பதே உண்மை.
எதிரியை ஆயுதத்தால் மட்டும் பலமிழக்கச் செய்வதால் நாம் வென்றுவிட முடியாது. எதிரியின் பகுதிகளில் எம்மவர்களின் அரசியல் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதும், எதிரியின் பொருளாதாரக் கட்டமைப்பை சீரழிப்பதும், உடைத்தெறிவதும், உலகநாடுகளில் அவர்களை தனிமைப்படுத்துவதும், எமது பிரச்சனையை கூட சிங்களமக்களின் வாயால் கொணர்விப்பதும் கூட எம்மக்களின் விடுதலைக்கு வழிவகுத்திருக்கும். செய்தார்களா? செய்வார்களா?
விடுதலை விடுதலை என்று என்றும் கதைத்தார்களே தவிர இதற்கான அடிப்படை நடவடிக்கைகள் எதுவுமே யாராலும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை. சகோதரப் படுகொலைகளுடாக தமிழ் மக்கள் உள்ளேயே எதிரிகளை வளர்த்துக்கொண்டு விடுதலையின் ஏக சுவீகாரபுத்திரர்களாக எப்படி வாழமுடியும் என்பதன் முடிவே இன்றைய புலியழிப்பு.
பிரபாகரன் இன்று உயிருடன் இருந்தால் அவருக்கு அஞ்சலியே செய்யாது போன மக்களின் நிலையில் நின்று எம்மக்களின் விடுதலைக்கான உண்மைத் தார்ப்பரியத்தைப் புரிந்திருப்பாரா என்பதும் கேள்விதான்?
இலங்கை இராணுவம் இலங்கை அரசின் கைகளேயன்றி முழுஅரசும் இராணுவமல்ல. ஒரு இனத்தின் விடுதலைக்கு ஆயுதம் ஒரு கருவியே தவிர அதுவே விடுதலையல்ல. அந்த அரசியலினுள் பலவிதமான விடுதலைகள் தங்கித் தொங்கியிருக்கும். வகுப்புக்கள், பெண்கள், சாதி, மதம், கலை, கலாச்சாரம் என பலவிடுதலைக் கூறுகள் உள்ளடங்கும்.
அரசியலையும் மக்களைகளையும் ஒரு போராடுகளமாகவும், போராடும் சக்தியாகவும் கருதாத புலிகளின் அழிவு எம்மக்களுக்கு நல்லதையே செய்திருக்கிறது எனலாம். இந்த ஒரு சின்ன விடயத்தைப் புரிந்து கொள்வதற்கு எம்மக்களுக்கும் புலிகளுக்கும் ஒரு இலட்சம் மனிதவுயிர்கள் தேவைப்பட்டுள்ளது.
மக்களை தயார்படுத்தாமை, பங்காளிகளாக்காது பார்வையாளராக வைத்திருந்தமை;
கெரில்லாப் போராட்டம் மட்டுமே வெற்றியளிக்கும் என முழுமையாக நம்பிய புலிகள் என்று மக்களை கெரில்லா யுத்தத்துக்குத் தயார்படுத்தினார்கள்? கெரில்லா யுத்தமும் என்பது ஆயுதப் போராட்டத்தின் ஒரு யுத்தவடிவமே தவிர அரசியலாக முடியாது. மக்கள் தம்விடுதலையை முழுமூச்சாக முன்னெடுக்கும்போது அரசபயங்கரவாத்தின் கரங்களாக இயங்கும் இராணுவத்துடன் கெரில்லாக்கள் மோதியிருக்க வேண்டும். இரண்டும் சமாந்தரமாக நடந்திருக்க வேண்டிய ஒன்றாகும். வைத்தால் குடுமி வழித்தால் மொட்டை என்றாகி விட்டது தமிழர் நிலை. கெரில்லா யுத்தத்தை மட்டும் முன்னெடுத்தார்கள் புலிகள். அரசிலுக்கான, அரசியல் தீர்வுக்கான அடித்தளமோ அவர்களிடம் காணப்படவில்லை. புலிகளின் இராணுவ அழிவின் பின் அரசியலை மட்டும் தூக்கிக் கொண்டு திரிகிறார்கள் புலம்பெயர் தமிழர்களும் கே.பியும்.
உலகில் நடந்த கெரில்லாப் போராட்டங்களை உற்றுநோக்கினால் அனைத்துமே இறுதிவரை அவர்கள் கெரில்லாவாகவே இருந்திருக்கிறார்கள். அரசியல் தன்பாதையில் மக்களில் மையங்கொண்டு கெரில்லாக்களின் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும். புலிகள் தம்கெரில்லாப் பாணியில் இருந்து விலகி மரபுவழி போராளிகளாகத் தயார்படுத்தப்பட்டார்கள். மரபுவழிப் போராட்டம் எம்புவியல்சார் காரணிகளுடன் ஒத்துவருமா என்பதை புலிகள் அறிந்திருந்திருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை. மக்களை வரிவசூலிக்கும் வங்கிகளாகவும், அடித்துவிட்டு ஒளிக்கும் புதர்களாகவும், தம்வசதிகளுக்காய் பயன்படுத்தும் கூலிக்காரர்களாகவும் (பங்கர் வெட்டல், வீடுகட்டல், புலிகளுக்கு நீச்சல்தடாகம் வெட்டல்), ஆள்பற்றாக்குறையாகும் போது குழந்தைபிடிகாரர்களைப்போல் பிடித்து தமக்குப் பாதுகாப்புக்குப் பயிற்சியழித்தார்களே தவிர மக்களை என்ன செய்தார்கள்? போராட விட்டார்களா? மக்களின் கருத்துக்கு செவிசாய்தார்களா? அவர்கள் தேவைகளைக் கேட்டறிந்தார்களா? அரசியல் போருக்காவது தயார்படுத்தினார்களா? சொல்லுங்கள்.
போராட்டம் எப்படி நடந்திருக்க வேண்டும்
• மக்கள் அரசியல் மயப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் மக்களிடையே உருவாகியிருப்பார்கள். இன்நிலை 1976, 77ல் இருந்தது. அதை முழுமையாக மழுங்கடித்தவர்கள் புலிகளே. நல்ல அரசியல் தலைவர்களையும், புத்திஜீவிகள், அறிவுஜீவிகளைத் தேடித்தேடிச் சுட்டது புலிகளே. இவர்கள் அழிவுறும்போது பெரியமனிதவளமே அழிவுறுகிறது. இது முழுமையாகத் தடுக்கப்பட்டிருக்க வேண்டும். புத்தியாள்வதை விட ஆயுதம் ஆளத்தொங்கியதால் வந்த வினை தான் இது. –இங்கு புலிகள் மேல் குற்றம் சாட்டப்படுகிறது என்பதற்காக மற்றைய இயக்கங்கள் மார்பு தட்டவியலாது.
• மக்களை அரசியல் முன்னெடுப்புக்களில் ஈடுபடுத்தும் வேளை அழிவாயுதங்களில் இருந்தும், பசிபட்டிணியில் இருந்தும், குறைந்தபட்ச முதலீட்டுடன் பெருவருவாய் தரும் பயிற்செய்கை, கைத்தொழில்களை ஊக்குவிப்பதுடன் பயிற்றுவித்தலும் போதியளவு நடந்திருக்க வேண்டும். கடைசிவரையும் சிங்கள அரசின் உணவிலும், சம்பளத்திலும் தானே அரசஊழியர்களுக்கு பணம் கொடுத்தார்கள். தாம் வன்னியை வைத்திருந்தோம் என்று மார்புதட்டும் இவர்கள் எப்போ வன்னியை முழுமையாய் தம்ஆட்சியின் கீழ் அரசின் உதவியின்றி வைத்திருந்தார்கள். போராட்டகாலத்தில் தமக்குத் தேவையான உணவையும், தம்தேவைகளையும் தன்னிறைவு செய்ய மக்கள் தயார்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.
• சிங்களப் பகுதியிலுள்ள போராடும் சக்திகளுடன் இணைந்து தெற்கில் ஒரு வர்க்கப் போராட்ட அவசியத்தை உணர்த்தியிருக்க வேண்டும் செய்தார்களா? எங்கே? சிங்களப் பகுதியில் ஒருபோராட்டம் உருவாகும் போது தமிழர்கள் பகுதியில் அரசின் கவனம் மிகக் குறைந்திருக்கமல்லவா.
• துவேசத்தை வளர்த்து வாக்குவங்கிகளை நிரப்பும் சிங்கள அரசியலுக்கெதிராக சிங்கள மக்களைத் தூண்டிவிடுவதுடன், நாம் எதற்காகப் போராடுகிறோம், எமக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் என்ன? எமது போராட்டம் சிங்களமக்களுக்கு எதிரானது அல்ல, அரசவியந்திரத்துக்கு எதிரானதே என்பதை விளக்கி ஊடக உறுதிப்பாட்டைப் பேணியிருக்க வேண்டும். இப்படிச் செய்திருந்தாலாவது சிங்களமக்களே அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்திருப்பார்கள். எமது போராட்டத்துக்கு ஊன்றுகோலாக இருந்திருப்பார்கள். வடபகுதியில் போர்நடந்தபோது கூட தென்பகுதியில் என்ன நடக்கிறது என்ற ஒன்றுமே தெரியாதவாறு இருந்ததற்கு காரணம் புலிகளின் எந்த ஒரு அசைவும் தெற்கில் இல்லாததே காரணம்.
• தென்பகுதியில் அரசஇயந்திரங்களை ஸ்தபிக்குமாறு தெற்கிலுள்ள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து தெற்கில் ஒரு போராட்டத்தை தொடர்ந்திருக்கலாம். அங்கே அரசுக்குத் தலைவலி ஏற்படும்போது எமதுபோராட்டம் வெற்றி பெறக்கூடிய சாத்தியங்கள் இருந்திருக்கும். ஏன் செய்யவில்லை?
• புலிகளுக்கு புலம்பெயர் தமிழர்களின் பணம் இருந்தாலும் அரசுக்கு தலையிடி மட்டுமல்ல பொருளாதாரச் சீரழிவுகளை ஏற்படுத்துவதனூடாக அரசை பலமிழக்கச் செய்யலாம். இராணுவ அணுகுமுறைகளால் மட்டும் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்த முடியாது என்பதை புலிகள் அறிந்திருக்க வேண்டும். இதில் எதைச் செய்தார்கள்?.
• ஏன் தென்பகுதியில் ஒரு இடதுசாரிப்போரை ஏற்படுத்த பலசாத்தியக் கூறுகள் அன்றும் இருந்தது இன்றும் இருக்கிறது. அங்கேயும் ஒரு மக்களுக்குள் போராட்டத்தை உருவாவதற்கு அடிகோலி உதவியிருந்தால் அப்போராட்டம் எம்வெற்றிக்கு அடிகோலியிருக்கும்? முயன்றார்களா?
• புலிகள் தென்பகுதியில் எந்த சரியான இராஜதந்திர முறையைக் கையாண்டார்கள்?.
• போராட்டம் என்பது போராடும் மக்களிடையே மட்டுமல்ல எதிரியின் புலத்திலும் நடைபெறுவது முக்கியம் மட்டுமல்ல இன்றியமமையாததும் கூட. செய்தார்களா?.
• புலத்தில் வாழும் தமிழர்கள் வெறும் பணம்காய்கும் மரங்களாகத்தான் பயன்படுத்தப் பட்டார்கள். இவர்களது அறிவு, அரசியல் வளங்கள் எதுவுமே பயன்படுத்தப்படவில்லை. புலிக்குப் பணம் கொடுக்காதவர்கள் எல்லோரும் துரோகியாகத் தூற்றப்பட்டார்களே அன்றி அவர்களிடன் இருக்கும் அறிவுச் செல்வத்தைப் பயன்படுத்த முனைந்தார்களா? இல்லையே!
• ஆயுதப்போரினதும், அரசியல்தீர்வினதும் அடுத்த கட்டநடவடிக்கை என்ன என்பதில் தெளிவாக இருந்தார்களா? இல்லை. இருந்திருந்தால் எல்லோரையும் கூட்டியள்ளிக் கொண்டு போய் வன்னியில் வேள்வி நடத்தியிருப்பார்களா?.
• மாவிலாற்றிலே புரிந்திருக்க வேண்டும் எதிரியின் பலம். காலம் பார்த்து, எதிரியின் பலமறிந்து, தனக்கு இழப்பின்றி அல்லது குறைந்தபட்ச இழப்புடன் எதிரிக்கு பேரிழப்பைக் கொடுப்பவன்தான் கெரில்லா. இதில் புலிகள் எதைச் சரிவரச்செய்தார்கள்? கிளிநொச்சியில் மக்களுக்குப் பேரழிவு ஏற்படும் போது புலிகள் மரபுவழியில் நின்று விலத்தி முழுமையான ஒரு கெறில்லாப் போர்முறைக்கு மாறியிருக்க வேண்டாமா?
• எதிரியைக் கேடயமாக வைத்திருப்பதே ஒரு கெரில்லாப்பாணிப் போர். தம்மக்களையே கேடயமாக்கி தம்மக்களையே எதிரிகள் அழிக்க காரணமானதுடன் தானும் தன்மக்களை அழித்த கொடூரமான இனவழிப்பாளனும், உண்மையில் இனத்துரோகிகளும் புலிகளே.
• இங்கே புலிகள் எனக்குறிப்பிடுவது முக்கியமான புலித்தலைமையையே. பலாற்காரமாகவும் வசதியின்மையாலும் புலிகளில் இணைந்து கொண்டவர்களையும், வானவேடிக்கைகளில் மயங்கிப்போன புலி உறுப்பினர்களையும் நான் இங்கு கருதவில்லை.
• பிரேமதாசா, மகிந்தா போன்றோரிடம் பணம்வாங்கி அவர்களுக்குச் சேவை செய்த புலிகள் பணத்துக்குப் பதிலாக தமிழ்மக்களின் அரசியல் அபிலாசை ஒன்றை ஆடுபொருளாக வைத்திருக்கலாமே. இதில் இருந்து தெரியவில்லையா புலிகள் போராளிகளா? மாவியாக்களா? என்பது. குறைந்தபட்சம் மாநிலசுயாட்சியையோ அல்லது அதிகாரப் பரவலாக்கலையோ எதையாவது அரசியலுக்காக, எம்மக்களுக்காகக் கேட்டிருந்தால்கூட புலிகளை மன்னிக்கலாம். இன்னும் இன்னும் எத்தனையோ… செய்திருக்கலாம். தெற்கிலங்கையில் குண்டுதாரிகளை அனுப்புவதைத் தவிர எதைத்தான் செய்தார்கள். பேருக்குமட்டும் சிறிதாய் ஏதாவதைச் செய்துவிட்டு சரித்திர நாயகனாகப் பிரபா முயன்றுள்ளார் என்பதே உண்மை. கடைசியில் தரித்திர நாயகனானதே முடிவு.
• ஒருபோராட்டத்தின் வெற்றியே மக்கள் பலத்திலும் ஒற்றுமையிலும்தான் தங்கியிருக்கிறது. சகோதரப் படுகொலைகளைச் செய்ததால் எம்மிடையே எதிரிகளை வளர்த்தார்கள். எதிரியை பொருளாதார ரீதியாக வீழ்த்தாமலும் எம்மிடையே எதிரியை வளர்தெடுத்ததாலுமே ஆயுதப்போராட்டம் வீழ்ச்சி கண்டது என்பதே உண்மை.
• திம்பு அல்லது ராஜிவ் ஒப்பந்தம் போன்றவற்றினூடாகக் கிடைக்கவிருந்த சலுகைகளைப் பெற்றுக்கொண்டு, அதிகாரங்களைச் சிறிது சிறிதாக எளிமையான போராட்டங்களினூடு கூட பெறமுயற்சித்திருக்கலாம். வெறுங்கையால் முழம்போட முயன்றார்கள் புலிகள். இப்போ மாநிலசுயாட்சியும் இல்லை புலிகளின் அழிவில் பிரபாவுக்கு மக்களின் அஞ்சலியும் இல்லை.
• புலிகளின் போக்கில் விடுதலை என்பது புலிக்கும் புலிக்குட்டிகளுக்கும் என்று எண்ணினார்களே தவிர மக்களுக்கு என்று எண்ணியிருந்தால் மக்களைப் போராட வைத்திருப்பார்கள். வெகுஜனப் போராட்டத்தின் வலுவையும், மக்கள் சக்தியையும் மக்களுக்கே உணர்த்தியிருப்பார்கள். மூன்றரை இலட்சம் மக்கள் வன்னிக்குள் பார்வையாளராக முடங்கிச் சாகும்போது கூட வெகுஜனத்தின் போராடுசக்தியை புலிகள் உணர்ந்தார்களா? குறைந்தது 15 ஆயிரம் 20 ஆயிரம் தமிழர்கள் கிடைத்த கத்தி பொல்லுடன் ஓடிப்போய் ஆமியின் மேல்பாய்ந்திருந்தால் கூட இவ்வளவு மக்கள் அழிவை நாம் தேடியிருக்க மாட்டோம். இப்படியான மக்கள் கூட்டத்தின் முன் எத்தனை ஆமிதான் எத்தனை தாங்கிகள்தான் முன்நிற்க முடியும். ரசியாவில் சிலவருடங்களுக்கு முன்னால் ஏற்படவிருந்த இராணுவப்புரட்சி மக்களால் மேற்கூறியவாறே முறியடிக்கப்பட்டது. நவீனரகத் தாங்கிகளால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. எங்கே மக்கள் சக்தி பயன்படுத்தப்பட்டது. அழிக்கப்பட்டது என்பதே உண்மை.
• தம்மிடமுள்ள பிழைகளைகளையும், குறைகளையும் மறைப்பதற்காகக் கதாநாயகவேடம் போட்டு மக்களை நம்பச்செய்து மக்களின் இயங்குசக்தியை அழித்தார்கள். சாதாரணமாக ஒர் உலங்கு வானூர்தியையே அழிக்க முடியாதவர்கள் எப்படி மிகைஒலிப் போர் விமானத்தை விழுத்தியிருப்பார்கள். கருணா உடைந்து போனபோதுதானே உள்விடயங்கள் அரசுக்குத் தெரியவந்தது. விலாசங்காட்டப்போய் மண்கவ்வியதுதான் மிச்சம்.
• மிக்29 இரசியத்தாயாரிப்பான மிகைஒலிப்போர் விமானம். இது 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தயாரிக்கப்பட்டது. இன்றைய ஐரோப்பிய அமெரிக்க போர்விமானங்களுடன் ஒப்பிடும்போது மிகமிகப் பழையைவாய்ந்ததும் தொழில் நுட்பத்திறன் குறைந்ததுமாகும். எஃவ் 14 (ரொம் கட்) அமெரிக்க தயாரிப்பு, எஃவ் 16( போரிடும் கழுகு) அமெரிக்க தயாரிப்பு, ஏரோ வ்ஃவைட்டர் (ஐரோப்பிய தயாரிப்பு) இவற்றுடன் ஒப்பிடும்போது மிக் 29 பூச்சியம் என்றே கூறலாம். இதற்கான விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ரஸ்சியாவிடமே மிகமிக மலிவான விலைக்கு வாங்கியிருக்கலாம். அதன் விலை விமானத்தின் விலையைவிடப் பலவாயிரம் மடங்கு மலிவானது. ஏன் செய்யவில்லை? புலம்பெயர் தமிழரிடம் வசூலித்த பணங்கள் எங்கே?.
• செசினா எனும் தனிநபர் சிறுவிமானத்தை விடமலிவான பெறுமதியற்ற, ஒருவிமானத்தை வாங்கி ‘ஷோ’ காட்டி (படங்காட்டி) எதிரி எதிர்பார்த்ததை விட பெரிய போர்விமானங்களை வாங்கச் செய்து தனக்குத்தானே தன்தலையில் மண்போட்டார்கள் புலிகள். ஒரு கெரில்லாப் போருக்கு விமானம் முக்கியமா? விமான எதிர்ப்பு ஏவுகணை முக்கியமா? இதை சாதாரண குழந்தைப்பிள்ளையே இதற்குப் பதில் சொல்லும். இரண்டு பேரைக் கொண்டு பறப்புகளை ஏற்படுத்தும் புலிகளின் விமானங்கள் 800கிலோ நிறையுடைய குண்டுகளை கொழும்பிலுள்ள இராணுவத்தளத்தின் மேல் போட்டதாம். யாருக்குக் காதில் பூவைக்கிறார்கள்?
• மக்கள் கருத்துக்களைத்தான் புலிகள் கேட்கவில்லை மாற்றுக்கருத்தாளர்களின் கருத்தையாவது செவிமடுத்திருக்கலாம். கேட்டிருந்தாலே போதும் குறைந்தபட்சம் சிந்தனைக்கு ஏதாவது கிடைத்திருக்குமல்லவா? மக்களின் கருத்துக்களையோ மாற்றுக்கருத்தாளர்களின் கருத்துக்களையோ செவிமடுத்து தன்பிழைகளைச் சரிசெய்து கொண்டு போராடியிருக்கலாம்.
• ஒரினத்தின் தலைவிதியை, மானத்தை, வரலாற்றை, மதிப்பற்ற உயிர்களை துவம்சம் செய்து தனிமனிதனாக தனிக்காட்டு ராஜாவாக வாழமுயன்றதன் விளைவே இது. தனக்கு அடுத்ததான ஒருசரியான தலைவனை தெரிவு செய்யவே தகுதியற்ற பிரபாவுக்கு போராட்டம் ஒரு கேடா?
• மோட்டுச் சிங்களவன் மோட்டுச் சிங்களவன் என்றோமே இந்திய இராணுவத்தைக் கலைக்கவும், பலதமிழ் அரசியல் எதிர்ப்பலங்களை தொலைக்கவும் பிரேமதாசா புலிகளுக்கு பணமும் ஆயுதமும் கொடுத்ததை யாவரும் அறிவர். அங்கே புலிகள் புத்திசாலிகளாக இருந்திருந்தால் பிரேமதாசாவின் ஒருகல்லில் இரண்டு மாங்காய்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். இதுவே ராஜீவ் கொலையாக விரிவடைந்து ஒரு இனத்தின் விடுதலைகே உலைவைத்து நிற்கிறது.
• வன்னிப்புலிகள் வன்னிப்புலிகள் என்கிறார்களே புலிகள். இதற்கு ஒழுங்காக வித்திட்டு நீர்பாச்சிப் பாதுகாத்து வளர்த்தது யார்? பிரபாவா? மாத்தையா… இதை மறந்து விடாதீர்கள். கிட்டு யாழ்பாணத்தில் விலாசம் காட்டினாலும். அடித்தளத்தில் இளைஞர்களை இணைப்பதற்கான இணையங்களை ஊன்றியதும் மாத்தையா, பண்டிதர் போன்றோன் என்பதை அறிக.
• முதன் முதலில் புலிகளுள்ளேயே சகோதரப் படுகொலையை வன்னியில் வைத்து செய்தவர் பிரபா. இது பலகாலமாய் மறைக்கப்பட்டு வந்தது. புளொட் பிரிந்தபின்தான் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டன. பற்குணம் எனும் சுதுமலையைச் சேர்ந்த இளைஞர் சிறியவயதிலேயே தன்னை ஆயுதப்போராட்டத்தில் இணைத்துக் கொண்டவர். இதை சகோதரப் படுகொலை என்பதா? தோழமைக் கொலை என்பதா? இக்கொலையின் ஆரம்பம் தான் பிரபாகரனின் தமிழினவழிப்பு.
• ஆரம்பத்திலேயே புலிகளை சரியாக இனங்கண்டு அவர்களைப் புறம்தள்ளி வெளியில் புதியபாதையில் புறப்பட்ட எண்ணிய தோழர் சுந்தரம் (சிவசண்முகமூர்த்தி) கைப்பேனா சுடப்பட்டது. எம்புதியபாதைக்கு உலைவைக்கப்பட்டது. புத்திஜீவிகள் அழிப்பு அன்றே ஆரம்பமானது. அன்று துப்பாக்கிகளுக்கு முன்னோடிகளாக போனாக்களே போராட்டத்தைக் கொண்டு செல்லவேண்டும் என்பதை உணர்ந்திருந்தவர்கள் நாம். திரும்பிப் பாருங்கள் இன்று புத்தி வென்றதா? ஆயுதச் சக்தி வென்றதா? சரி இன்றும் ஆயுதம் தாங்கிய குழுக்களே மக்களின் விடுதலைக்காக பேனாக்களுக்கு வழிவிடுங்கள்.
• ஒரு கந்தசட்டியின் போதுதான் முஸ்லீம் மக்கள் யாழ்பாணத்தை விட்டு இரவோடிரவாக உடுத்த உடுப்புடன் கலைக்கப்பட்டார்கள். புலிகள் செய்தபழி அடுத்த கந்தசட்டிக்கு யாழ்பாணமக்கள் புலிகளால் வன்னிக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். படியுங்கள் தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.
• புலிகள் சகஇயக்கங்களைத் தடைசெய்தார்கள் உலகமே புலிகளைத் தடைசெய்தது. எம்மிடையே பகைகளை வளர்ப்பதனால் வெற்றிப்பாதையில் நாம் பின்னடைவையே சந்திப்போம்.
• புலித்தடையை நீக்க உலகின் முன் நல்லபாம்பாகப் புலிநடிக்கத் தொடங்கியது. உலகம் கண்மூடிக்கொண்டுதான் இருந்ததா? இல்லையே. தெருத்தெருவாய் புலிகள் எம்மையும் மக்களையும் காப்பாற்றுங்கள் எனும் போது உலகம் என்ன சொன்னது? மக்களை வெளியில் விடு. புலிவேறு மக்கள் வேறு என்பதை உலகம் உணர்ந்திருந்தது. மக்களுக்காகப் போராடியிருந்தால் அம்மக்களையே பயணக்கைதிகளாகவும், கேடயமாகவும் பாவித்திருக்க மாட்டார்கள். உலகின் உயர்குற்றங்களின் ஒன்று மனிதக் கேடயம் இதைச் செய்து கொண்டு எங்களைக் காப்பாற்றுங்கள் என்றால் யார் வருவார்? உலகநாடுகளின் உதவி வேண்டுமாயின் அவர்களின் சட்டதிட்டங்களுக்குப் பணிந்து போவது முக்கியம்.
• மாவிலாற்றில் புலிகள் வாங்கிய அடியுடன் உணர்ந்திருக்க வேண்டும் எதிரியின் பலத்தை. இதை உணராதவன் எப்படி ஒரு கெரில்லாப் போராளியாக மட்டுமல்ல மனிதனாகவே இருந்திருக்க முடியாது. எதிரியின் பலமறிந்து அவன் பலவீனத்தை தன் தாக்குதல் வளமாகக் கொள்பவனே ஒரு கெரில்லாப்போராளி. கெரில்லாப் புலிகளின் விறுத்தத்தைப் பாருங்கள். புலிகள் கிளிநொச்சியிலேயே பின்வாங்கியிருந்தால் மக்கள், உடமைகள் காப்பாற்றப்பட்டிருக்கும். புலிகள் தம் கெரில்லாப் பாணியிலேயே தாக்குதல்களைச் செய்து கொண்டிருந்திருக்கலாம். சந்தர்ப்பம் சூழ்நிலைகளைச் சரிவர அறிந்து போராடுபவனே உண்மையாக கெரில்லா.
• புலிகள் ஆயுதங்களை வெளியே எடுக்கும்போது சரியாகக் குறிபார்த்து அந்த இடத்திலேயே ஏவுகணைகள் வந்து விழும்போது புலிகள் உணர்ந்திருக்க வேண்டும் இந்தியாவின் ராடார்கள் (கதிரிகள்) விமானத்தை உளவுபார்க்கும் கதிரிகள் அல்ல. அவை காந்தப்புலமறிகதிரிகள் என்பதை. அக்கதிரிகளை இலகுவாகப் போக்குக்காட்டி அடித்திருக்க முடியும்.
• குழந்தைப் போராளிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று உலகநாடுகளால் புலிகள் எச்சரிக்கப்பட்டார்கள். இதற்குச் செவிமடுக்காது தொடர்ந்தும் ஏன்? எதற்கு என்று கேட்கவலுவற்ற இயந்திரமாக்க வசதியான குழந்தைகளைப் போருக்குப் பயன்படுத்திக் கொண்டு எப்படி உலகநாடுகளிடம் எம்மைக் காற்பாற்றுங்கள் என்று கேட்கமுடியும். இவற்றின் விளைவுதான் மேற்குலகின் மௌனம்.
• தமிழ்மக்களைப் பிரதிநிதிப்படுத்திய புலிகள் ஒரு தனிமனிதனான பிரபாகரனிலும் ஆயுதக்கொள்வனவு ஒரு சிலரின் மட்டுமே தங்கியிருந்ததன் விளைவே ஒரு தனிமனிதனில் அழிவில் ஒரினத்தின் விடுதலைதகர்ப்பு. குறைந்தபட்சம் ஒருசுற்றுத்தலைமை புலிகளுக்குள் இருந்திருந்தாலாவது எம்மக்கள் மாற்றங்களை உணர்ந்திருப்பார்கள். போராட்டம் திருப்பங்களைச் சந்தித்திருக்கும். அரசியல் விழிப்புணர்வு உருவாகச் சந்தர்பம் இருந்திருக்கும். மூளைச்சலவை இன்றியிருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
• கெரில்லாப் போரில் விடுதலையடைந்த நாட்டின் போராட்ட வரலாறுகளைப் படித்துப் பார்த்தால் தெரியும் கெரில்லாக்கள் கடைசிவரையும் கெரிலாக்களாகவே இருந்திருக்கிறார்கள். உ.ம் சீனாவில் மாவேயின் போர், சேயின் போர். புலிகளின் கெரில்லாக்கள் மரபுவழிப்போராட முயன்றதன் விளைவும், மனநிலை அமைப்புமே முக்கியமான வன்னித் தோல்வியாகும். சரி மரவுவழியில் இராணுவமொன்றை எல்லைக்குத் தயாராகக் கட்டி எழுப்பும் போது கெரில்லாக்கள் தொடர்ந்தும் கெரில்லா முறையில் போராட்டத்தை மேற்கொண்டிருக்க வேண்டும். அந்த கெரில்லாக்கள் கிளிநொச்சி நெருக்கடியில் பரவலாக்கப்பட்டிருக்க வேண்டும். கிழக்கிலும் வடக்கிலும் விஸ்தரிக்கப்பட்டிருக்க வேண்டும். வன்னி நெருக்கடியின் போது பின்புறத்தாக்கல் ஊடறிப்புத்தாக்கலூடு வன்னிப்புலிகளுக்கு உதவி வழங்கியிருக்கலாம். எதிரியின் சிந்தனையும் போர் உக்கிரமும் திசைதிருப்பியிருக்கும்.
கட்டுரை நீள்வதால் இத்துடன் முடித்துக் கொள்வது அவசியமாகிறது. புலிகளையோ பிரபாகரனையோ குறை கூறுவதற்காக இதை நான் எழுதவில்லை. இவை வருமுன்காக்கும் ஒரு செயலே. எம்மினப்போராட்டம் பிரபாகரன் எனும் தனிமனிதனுடன் அழிந்து விடப்போவதில்லை. காலத்துக்காகக் காத்திருக்கும் மக்கள், அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளந்தெழுவார்கள் என்பது திண்ணம். அப்போது புலிகள் விட்ட பிழைகளை அவர்களும் மீண்டும் விடக்கூடாது என்பதற்காகவே வெள்ளம் வருமுன் அணைகட்ட விரும்புகிறேன். பிழைகள் சுட்டிக்காட்டாத வரை அவைகள் அனைத்தும் சரியானவை போலவே தோற்றமளிக்கும். புலிகள் ஆரம்பத்தில் செய்த இனப்படுகொலைகள் இதற்கொரு உதாரணமாகும். மக்கள் எதிர்க்காது இருந்ததை புலிகள் சம்மதம் என்றே எடுத்துக் கொண்டார்கள். மௌனம் சம்மதம்தான்.
அன்றிருந்த ஒருசில துப்பாக்கிகளுக்கே பயந்ததால் பின் நிரந்தர மெனனத்தை மக்கள் கடைப்பிடிக்க நேர்ந்தது. குறைந்த பட்சம் கைகளால் எழுதிக் கூடப் புலிகளின் படுகொலைகளுக்கு எதிராய் நோட்டீசாவது ஒட்டியிருந்தால் ஒருதரம் புலிகள் சிந்திப்பதற்கு சந்தர்ப்பம் கொடுத்திருப்போம். புலிகளுக்கு எதிராக மக்கள் எதுவும் செய்யவில்லை என்பதே என்வாதம். மக்கள் தம் எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும் ஜனநாகயகம் அதாவது சன-நியாயம் நிலைநிறுத்தப் பட்டிருக்க வேண்டும்.
ஒரு குற்றத்தைச் செய்பவனும் குற்றவாளி, அது குற்றமென்றறிந்தும் மௌனமாய் இருப்பவனும் குற்றவாளியே. தொடர்ந்தும் யாரும் குற்றவாளிகளாக இருக்கக்கூடாது என்பதற்காகவும், வருமுன் காப்பதற்காகவுமே இதை எழுதுகிறேன். இன்று புலிகள் ஒரு வரலாறு இதை மறக்கவோ அன்றி மறுக்கவோ இயலாது. இதனால் வரலாறு எமக்குத்தந்த பாடங்களைக் கற்றுக்கொள்ளாது போனால் நாம் மீண்டும் மீண்டும் வழுக்கித்தான் விழுவோம். பழைய தமிழ்மன்னர்களின் வரலாற்றிலும் வன்னியே மறைவிடமாகவும், போர்களமாகவும் இருந்திருக்கிறது என்பதை அறிக.
அன்புடன் என்றும் என் இனியமக்களையும், மொழியையும் உண்மையன்புடன் நேசிக்கும் குலன்.