குலன்

குலன்

வட்டுக்கோட்டை தீர்மானம் என்ன கேலிக்கூத்தா? – குலன்

Pirabakaran_V_2008EelamAmir_Mangayatkarasi_._._._._._

….. வரலாற்று உண்மைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு ….. தமிழ் நாட்டினம் அடிமை இனமாகத் தாழ்த்தப்பட்ட படியாலும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் எல்லாம் சிங்கள மக்களின் தீவிர இனவாதத்தை தூண்டி வளர்த்து தமது அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்களுக்குப் பாதகமாக பயன்படுத்திய படியால் இலங்கைவாழ் தமிழ் மக்கள் சிங்களவரில் இருந்து வேறுபட்ட ஒரு தனிநாட்டினம் என்று இத்தால் பிரகடனப்படுத்துகிறது. ….. இத்தீவில் உள்ள தமிழீழ நாட்டினத்தின் நிலையான வாழ்வை பாதுகாப்பதற்கு, ஒவ்வொரு நாட்டினத்திற்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு சுதந்திர இறைமையுள்ள மதச் சார்பற்ற சோசலிச தமிழீழ அரசை மீள்வித்து புனரமைப்புச் செய்வது தவிர்க்க முடியாததாகி விட்டது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

: தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டைத் தமிழீழப் பிரகடனம் 14 மே 1976

_._._._._._

வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி எழுதவந்த விடயத்திற்கு முன் வரலாறு பற்றி ஒரு முற்குறிப்புக் கொடுக்கவேண்டிய அவசியம் இங்குள்ளது. 1976க்கு முன்னிருந்த முக்கிய பல தமிழ் அரசியற் கட்சிகள் தமிழ் மக்களின் ஏகோபித்த நலன்கருதி தம்வேற்றுமைகளை மறந்து மக்களுக்காக ஒன்றாக இணைந்து உருவாக்கப்பட்டது தான் தமிழர் விடுதலைக் கூட்டணி. இது எமது சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும்.
 
இக்கூட்டணியின் இளைஞர் அமைப்புத்தான் தமிழ் இளைஞர்பேரவை. இன்று தமிழர் கூட்டமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவராக இருக்கும் மாவை சேனாதிராஜாவே தலைமை வகித்தார். இளைஞர்பேரவை என்பது கூட்டணியின் அரசியல் கருத்துக்களுக்கு உயிர்கொடுக்கும் இளைஞர் அமைப்பாகவே இருந்தது. மாவை சேனாதிராஜா அவர்கள் சிறை சென்றபோது யாப்பானது வெறும் பாராளுமன்றத்தை நோக்கிய யாப்பாக இன்றி விடுதலை அமைப்புக்குரிய யாப்பாக நாம் அதை மாற்றினோம். மாவை அண்ணர் சிறை மீண்டதும் முரண்பாடுகள் முண்டியடிக்க இளைஞர் பேரவை இரண்டானது. அதில் தீவீரவாதத்தை விரும்பிய இளைஞர்களாகிய நாம் இளைஞர்பேரவை விடுதலைஇயக்கம் என்று பிரிந்து சென்றோம். இப்படிப் பிரிந்து சென்ற நாம் தனிநபர் தீவீரவாதிகளுடனும், அமைப்புகளுடனும் இணையத் தொடங்கினோம். இருப்பினும் நாம் உடைந்தாலும் பாதை தவறிப்போகவில்லை. எமது போராட்ட வழியில் குறியுள்ளவர்களுடன் இணையத் தொடங்கினோம். இதில் முக்கியமான சிலரை நினைவு கூருவது மிக முக்கியமானது. இறைகுமாரன், உமைபாலன், வாசுதேவா, சந்ததியார், உமாமகேசன், செந்தில், சேயோன், கனககுலசிங்கம், புஸ்பராஜா, இராசநாயகம் போன்ற பலரை இங்கு குறிப்பிடலாம். எனக்கு இன்று தொடர்புகள் அற்றுப்போனதன் விளைவாக எல்லோரது பெயர்களையும் குறிப்பிட முடியவில்லை. முக்கியமாக உயிருடன் இருப்பவர்களை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.
 
இந்த பிரிந்துபோன தீவிரவாத எமது இளைஞர் அமைப்பு தனிநபர் தீவிரவாதிகளாக இருந்த பலரை உள்வாங்க முயன்றதன் விளைவாக பிரபாகரன் போன்றோருடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தது. அக்காலகட்டத்தில் தான் பிரபாகரன் உமாமகேஸ்வரன் ஒன்றாக இணைந்து செயற்படத் தொடங்கினர். மாணவர்பேரவை, இளைஞர்பேரவை விடுதலை அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்தனர். உருவாகிய அந்த அமைப்புக்கு ஒருமத்திய செயற்குழு உருவாக்கப்பட்டது. அதற்கு உமாமகேஸ்வரன் தலைவராகவும் தளபதியாக பிரபாகரனும் நியமிக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில்தான் சி.ஐ.டி யாக கடமையாற்றி தமிழ் இளைஞர்களை 4ம்மாடியில் சித்திரவதை செய்து வந்த இரகசியப் பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை தகவல் கொடுத்து அழைத்து வரப்பட்டு கொல்லப்பட்டார். இக்காலகட்டத்தில் தான் காட்டிக்கொடுப்போர், பொலிஸ் சி.ஐ.டி களும் தேடித்தேடிச் சுடப்பட்டனர். புதியபுலிகள் தோற்றம், உட்பூசல்கள் காரணமாக புளொட் பிரிவு, புளொட் புலிகள் கொலைமுயற்சிகள், சகோதரப் படுகொலைகள் என்று பல பல….
 
இந்த இளைஞர் பேரவை பிரிவதற்கு முன்னரே இந்த வட்டுக்கோட்டை மகாநாடு பண்ணாகத்தில் நடந்தது. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் 5 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டனர். வட்டுக்கோட்டைத் தொகுதி ஐவரில் இன்று உயிருடன் இருப்பது நான் மட்டுமென்றே கருதுகிறேன். ஏன் இதை நான் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் அன்று எனக்கு இருந்த வேதனையும் வலியும் எனக்கு மட்டும்தான் தெரியும். நாம் பலர் ஊர்வலமாகச் சென்றபோது பொலிசாரினால் அடித்துதைக்கப்பட்டோம், பிடித்துச் செல்லப்பட்டோம் அதை எழுதுவதற்கு நான் தகுதி உடையவனா? இல்லையா என்பதை வாசகர்கள் தீர்மானிக்குக.
 
இனி சொல்ல வந்த முக்கிய விடயத்துக்கு வருகிறேன். வட்டுக்கோட்டை தீர்மானத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை வைத்தே 1977 தேர்தல் நடந்தது. அன்று இருந்த மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியியும் எம்வரலாற்றில் என்றும் இருந்ததில்லை. 98 சதவிகிதமான மக்கள் அன்று தமிழ் ஈழம்தான் முடிந்த முடிவு என்று அறுதியாகவும் உறுதியாகவும் ஆணையிட்டதன் விளைவாகவே தமிழர் விடுதலைக் கூட்டணியானது, என்றும் தமிழர்களுக்குக் கிடைக்காத எதிர் கட்சி என்ற நிலையை அடைந்தது. இதுவும் எம்சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய முக்கிய நிகழ்வாகும். அந்த ஆணையானது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கீழ் ஏகோபித்த தமிழ் பேசும் மக்களின் ஆணையாகும். அதாவது வடக்குக் கிழக்கு மக்களுடன் முஸ்லீம்களும் இணைந்து தான் வாக்களித்தார்கள் என்பது மிகமுக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. இத்தீர்மானமானது வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சி அதிகாரம் கொண்ட தனித் தமிழீழம் என்பதாகும். இது சுயநிர்ணய கோட்பாட்டின் கீழ் ஒரினம் தன் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை கொண்டது. தனித் தமிழீழம் அடையும்வரை விடாது போராட வேண்டும் என்பது முடிவாக்கப்பட்ட ஒன்றானது. விடுதலைப் போராட்டம் எனும்பொழுது இளைஞர்கள் முக்கியத்துவம் பெறுவது இயற்கையே.
 
இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தில் எங்கேயும் இத்தீர்மானம் காலவதியாகும் என்று குறிப்பிடப்படவில்லை. இந்தத் தேர்தல் ஆணையை வைத்தே புலிகள் போராடி வந்தார்கள் என்று பிரபாகரனே தொலைக்காட்சிகளில் செவ்வியதை யாவரும் செவிமடுத்திருப்பர். இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளாய்வு செய்வதோ மீழுறுதிப்படுத்த முயல்வதோ அன்று வாக்களித்த தமிழ் மக்களை கொச்சைபடுத்தும் செயலாகும். அந்த மக்கள் ஆணை என்பது காலவதியற்றது. இதை மீளுறுதி செய்வதற்கு வெளிநாடுகளில் இருக்கும் நீங்கள் யார்? இங்கே வாக்களித்த பலர் ஈழத்தில் பிறந்தவர்களே இல்லை. இவ்வளவு காலமும் தம்முயிர்களை ஈர்ந்த தமிழ்தனையர்கள், யுவதிகள், பொது மக்களின் உயிர்களுக்குக் கொடுக்கும் சன்மானமா இது?
 
தமிழ் மக்களுக்கு சிங்கள இனவாத அரசால் இழைக்கப்பட்ட இன்னல்களை, எதிர்நோக்கும் பேரழிவுகளை மக்கள் முன்கொணர்ந்து மக்களை விழிப்புறச்செய்து தானைத் தளபதி என்று கருதப்பட்ட அமிர்தலிங்கம் போன்றோர்க்குக் கிடைத்தபரிசு தோட்டாக்கள் (துப்பாக்கி ரவைகள்). மக்களை அன்று தட்டி எழுப்பியது யார்? இளைஞர்களைத் தான் சொன்னார்கள் ஆயுதம் ஏந்தியாயினும் ஈழம்பெறும் வரை போராடுங்கள் என்று. அன்றைய தலைவர்கள் தம்தகுதிக்கு ஏற்ப போராடினார்கள், கிளர்ச்சியை ஆதரித்தார்கள்.
 
அமிர்தலிங்கம் அவர்களைத் துப்பாக்கி இரவைகள் துளைப்பதற்கு முன்சொன்ன வார்த்தைகளை இங்கே கேளுங்கள். “தம்பிமார்களே எங்களாலை ஆயுதம் தூக்கிப் போராட இயலாது. நீங்கள் போராடுங்கள் எம்மால் இயன்றவரை நாம் போராடுகிறோம். ஒருவரின் வழியில் இன்னொருவர் குறுக்கிடாமல் மக்களின் நலனுக்காகப் போராடுவோம். இந்தியாவின் உதவியின்றி எமக்கு ஒருதீர்வு கிடைக்கப் போவதில்லை.” இந்த அரசியல்மேதை சொன்ன பொன்னான வார்த்தைகள் இன்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் இன்று கூட மறுக்க இயலுமா? முடியுமா?

அன்று இந்திய மத்திய அரசின் லோக்சபாவிலேயே தனித் தமிழனின் குரலாக ஒலித்தது அமரர் அமிர்தலிங்கத்தின் குரல் ஒன்றே. அன்று தேசத்தின் குரல் என்ன செய்தது? அதன்பின் யாராலாவது அது முடிந்ததா? உங்கள் குரல்கள் கணக்கெடுக்கப்பட்டதா? துப்பாக்கிகளின் துர்ப்பாக்கிய தீர்வுகள் திருத்தியமைக்க முடியுமா? அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் போன்றோரை மீளத்தர முடியுமா? உலக நாடெங்கும் நின்று தெருத்தெருவாய் கத்தினோம் யாருக்குக் கேட்டது. எவ்வளவு கேட்டது. ஒரு தனிமனிதனாகச் செய்ய முடிந்ததை இரண்டு இலட்சமாக நாம் தெருவில் இறங்கியும் முடியவில்லையே.
 
இன்று வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீழுறுதி செய்கிறார்களாம். இது வேடிக்கையா? கேலிக்கையா? இன்று வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களில் 90 விதமானவர்கள்  யாழ்பாணத் தமிழர்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது. இங்கே கிழக்குத் தமிழர்களினதும் இஸ்லாமியத் தமிழர்களினதும் கருத்துக்கள், விருப்புக்கள் சாகடிக்கப்படுகிறன்றன. புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லீம்கள், கிழக்கு முஸ்லீம்களின் கருத்துக்களுக்கு இடமெங்கே? அங்குள்ள தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க நீங்கள் யார்? சரி அங்கே ஒரு நடுநிலையாக தேர்தலை நடக்த முடியாது என்று கருதினால் ஐ.நா அதை அங்கே செய்யட்டும்.
 
வெளிநாட்டில் எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் நீங்கள் ஈழத்து மக்களின் தலைவிதியை இங்கு வசதியாக இருந்து கொண்டு தீர்மானிக்க இயலுமென்றால் பிராந்திய வல்லரசுகளான அண்டை நாடுகள் தம் பாதுகாப்புக்கருதி ஈழத் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பது சரி என்றாகிவிடும் என்பதை உணர்க.
 
இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போதுதான் குறுஞ்செய்தி வந்தது 99 சதவிகிதமானவர்கள் தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறார்கள் என்று. இது மிகப்பெரிய வேடிக்கை. நோர்வேயில் எந்த மாநகரசபையை தமிழீழம் ஆக்கப்போகிறீர்கள். 99 சதவிகிதம் என்பது எதைவைத்துக் கணிக்கப்பட்டது என்பதுதான் என் கேள்வி? சரி எத்தனை சதவீதமானவர்கள் வாக்களித்தார்கள் என்றால் அது இவர்களுக்குத் சரியாகத் தெரியுமா? இன்று நோர்வேயில் வாழும் ஈழத்தமிழர்கள் எத்தனை? இதில் எத்தனை பேர் 18 வயதைத் தொட்டவர்கள்? இந்த 18வயதைத் தொட்டவர்களில் சமூகம் அழித்தவர்கள் எத்தனை வீதம்? இதுவாவது தெரியாது? அதாவது குஞ்சு குருமான்கள், விசா இல்லாதோர், பாஸ்போட் இல்லாதோர் எல்லாமுமாகச் சேர்த்து சுமார் 20 000 க்கும் குறைந்த நோர்வே வாழ் ஈழத் தமிழர்கள் 3 மில்லியன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கிறார்களாம். வேடிக்கையாக இல்லை?
 
இந்த வாக்கெடுப்பை நடத்திய உதுறுப் (கத்துதல், அழைத்தல் என்பதே தமிழாக்கம்) என்ற அமைப்பின் இணையத்தள வெளியீட்டில் இருந்து.
 
18 வயதுக்கு மேற்பட்ட வாக்களிக்கும் உரிமை கொண்டவர்கள் தொகை 8797 (எந்த தேர்தல் ஆணையகம் இதைத் தந்தது)
 
வாக்களித்தவர்கள் தொகை 5633 இதில் தமிழீழம் வேண்டும் என்று வாக்களித்தவர்கள் 5574
 
ஆகவே நோர்வேவாழ் தமிழர்களில் வாக்குரிமை கொண்டவர்களில் ஈழம் வேண்டுவோர் எத்தனை வீதம்? 63 சதவீதம் என்பதே சரியானது (5574தர 100 கீழ் 8797). இதில் வாக்களிக்காதவர்கள் 35 வீதம் என்பதையும் கவனிக்க.
 
தமிழர்சார் உதுறுப் தன்தலையங்கத்தில் எழுதியுள்ளது: 99சதவிகிதமான நோர்வே தமிழர்கள் தனித்தமிழீழம் பிரிவதையே விரும்புகிறார்கள். நோர்வேயில் தமிழர்கள் செறிந்து வாழும் எந்தப் பகுதியில் ஈழம் காணப்போகிறார்கள். ஈழத்தில் நடுநிலையாக ஒருதேர்தல் நடத்தினால் என்ன விளைவு கிடைக்கும் என்பதை இதற்கு அனுரசணையாக இருந்த பின்புலத்தார் உணர்வார்கள்.
 
கிழக்கிலங்கை, ஈழக்கதை இன்றி ஏதோ ஜனநாயகம் இல்லாத துப்பாக்கித் தனிநியாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. வடபகுதி முஸ்லீங்கள் சொந்த பூமியை விட்டு விரட்டப்பட்டு விட்டார்கள். யாழ்பாணம் ஆமியின் பிடியில் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற கணக்கில் இருக்கிறது. வன்னியில் புலியழிப்பென மக்கள் அழிப்பு நடக்கிறது. இவர்கள் கருத்துக்கள் கணிக்கப்பட்டதா? இதற்குச் சரியான பதில் சொல்ல வேண்டியவர்கள் அங்குள்ள மக்கள் மட்டுமே. சரி அங்கு தேர்தல் நேர்மையாக நடத்த முடியாது என்றால் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட தேர்தல் எந்த வகையில் முறையானது. இதை ஒரு கருத்துக் கணிப்பாகவே கருதவியலாது. வாக்களித்தவர்கள் யார்? குறிப்பிட்ட வட்டங்களில் உள்ள குழுக்கள். கருத்துக் கணிப்பு என்றும் பரந்துபட்டே எடுக்கப்படும். இந்த வகையான தேர்தல் வெறும் கேலிக்கூத்து என்பதே உண்மை.

இந்தக் கேலி, போலித்தேர்தலில் பங்குபற்றாத பலர் என் காதுபடச் சொன்ன விடயம் என்னவென்றால் ‘கண்டநிண்டவன் எல்லாம் தேர்தல் நடத்துவான். இனி அதை வைத்தோ பாராளுமன்றம் போக வேண்டும்’ என்பர். இவர்களின் கோமாளிக் கூத்துக்கு நாங்களும் ஆடுவதா? ஈழத்தில் எம்மக்களை கோமாளிகளாக்கி கொன்று போட்டது போதாதா? இங்கும் இளைஞர்களைத் தூண்டி இரத்தக்களரிக்குத் தயார்படுத்துகிறார்களா? இராஜதந்திரம் புத்திசாதுரியமான வளைந்து கொடுப்புக்கள் மூலம் எமது நோக்கு வென்றெடுக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் துப்பாக்கிகளே தமிழர்களின் தலைவிதியை அவசர அவசரமாகத் தீர்மானித்தன.
 
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி மக்கள் சர்வஜன வாக்கெடுப்பில் கொடுத்த மக்கள் ஆணை என்பது என்றும் காலாவதியாவதில்லை. அது ஒரு குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகும் என்று எங்கும் குறிப்பிடப்படவுமில்லை. அங்குள்ள மக்கள் கொடுத்த தீர்ப்பை அங்குள்ள மக்களே தம்தலைவிதியை தீர்மானிக்க வேண்டும்.
 
எமது மக்களின் கிளர்ச்சிகளும் உணர்வுகளும் சரியான முறையில் வழிநடத்தப்படவில்லை என்பதுதான் காலம் தந்த பதில். அங்குள்ள மக்கள் என்றோ ஒருநாள் தம்மிடையே உள்ள சக்திகளைத் திரட்டி சரியான தலைமையை தெரிவுசெய்து தம்போராட்டத்தை வென்றெடுப்பார்கள். பலாத்காரத்தினால் மக்கள் எழுற்சியைக் கட்டுப்படுத்த இயலாது. இது சரித்திரச் சான்று.
 
ஈழத்தமிழர் விடுதலைக்கு நாமே ஏகப்பிரதிநிதிகள் என்று எம்மக்கள் போராட்டத்தை மழுங்கடித்தன் விளைவு இன்று எம்தமிழினம் விடுதலை என்ற சொல்லை உச்சரிப்பதற்கே இனி எத்தனை தலைமுறை எடுக்குமோ? இது சுடுகிறது மடியைப்பிடி என்று செய்யும் காரியமல்ல. தாமே ஒட்டுமொத்த தமிழினத்துக்கும், தமிழீழத்திற்கும் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டவர்களே ஈழத்தமிழர் அழிவுக்கு மட்டுமல்ல மக்களின் தன்னம்பிக்கை இழப்புக்கும் காரணமானவர்கள். தன்னம்பிக்கை இழப்பு என்பது தற்கொலைக்குச் சமனானது. ஒரு இனத்தின் தன்னம்பிக்கை மழுங்கடிக்கப் படும்போதுதான் அடிமை நாடகம் அரங்கேறும்.
 
தனிநபர்களின் தலைமையில் விடுதலைப் போராட்டங்களைக் கட்டி எழுப்புவதை விட்டு விட்டு, அதாவது கதாநாயகத்துவம் (கீரோயிசம்) அற்ற மக்கள் அமைப்பைக் கட்டி எழுப்புங்கள். மக்களின் குரல்களுக்குச் செவிசாயுங்கள். விடுதலை மக்களுக்கே தவிர மண்ணுக்கல்ல. மண் என்பது வெறும் இருப்பு மட்டுமே. மண்தான் முக்கியம் என்றால் எமது மண் சிந்துநதிப் பள்ளத்தாக்கிலும் இருக்கிறது. அதையும் போய் மீட்போமா?
 
இக்கட்டுரையைத் தொடர்ந்து பலகட்டுரைகளை ஏனைய வாசகர்களும் எழுதுவீர்களாயின் ஒரு ஆரோக்கியமான கருத்தியலை நாம் பகிர்ந்து கொள்ளலாம். பின்னோட்டங்களும் சிந்தனையைத் தூண்டுவதாய் அமையும்.