வேதமூர்த்தி பொன்னுசாமி Hindu Rights Action Force – HINDRAF முன்னணி உறுப்பினர். 2007 நவம்பர் 25ல் மலேசியாவில் இடம்பெற்ற மலேசிய இந்தியர்களின் மாபெரும் எழுச்சிக்குப் பின் மலேசியாவை விட்டு வெளியேறி மேற்கு நாடுகளில் தங்கள் போராட்டத்திற்கான ஆதரவைத் திரட்டியவர். டெல்லி, சென்னை, லண்டன், வோசிங்டன், நியூயோர்க், புரூசல்ஸ், ஜெனிவா என உலக நாடுகளுக்குச் சென்று தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு இருந்தார். அவர் லண்டனில் தங்கி இருந்த போது 2009 மே 13ல் தேசம்நெற் சார்பாக அவரைச் சந்தித்து உரையாடி இருந்தேன். அப்பொது வன்னி யுத்தம் மிக உச்சத்தில் இருந்த சூழலில் இந்த நேர்காணலை உடனடியாக வெளியிடுவது பொருத்தமற்றதாக இருந்தது. அதனால் தற்போது இவ்வுரையாடலின் ஒரு பகுதியைப் பிரசுரிக்கின்றோம். இப்பகுதியில் HINDRAF அமைப்பின் தோற்றம் செயற்பாடுகள் பற்றிய விடயங்களை வேதமூர்த்தி பொன்னுசாமி பகிர்ந்துகொள்கின்றார். அவருடைய நேர்காணல் அடுத்த இதழில் வெளிவரும்.
HINDRAF- Hindu Rights Action Force இது ஒரு சிறு அமைப்பு. ஆரம்பகாலங்களில் ஒரு 50 பேர் உள்ள அமைப்பு.
ஒரு மதமாற்றம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதாவது இந்து ஒருவர் முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். இறந்த பிறகு இவர் முஸ்லீம் மதத்தில் சேர்ந்து விட்டார் என்று கூறி அவருடைய உடலை முஸ்லீம் மதத்தினருடைய இடத்திற்கு எடுத்துப் போய் விட்டார்கள். இந்த விடயம் கோட்டுக்கு போனபோது கோடு சொல்லியது இது முஸ்லீம் மதம் சம்பந்தப்பட்டது இதை நீங்கள் செரியா கோட்டுக்கு எடுத்துப் போக வேண்டும் என்று. ஒரு இந்து எப்படி இஸ்லாமிய முறைப்படியான ‘செரியா’ கோட்டுக்கு நீதி விசாரணைக்கு போக முடியும் என்ற யோசனை இல்லாமலே இப்படி தீர்ப்பளிக்கப்படுகிறது.
அவர் மதம் மாறினாரா இல்லையா என்பது முதலில் civil courtல் தீர்மானம் கொள்ளட்டும். அதில் அவர் முஸ்லீமை திருமணம் செய்திருந்தால் அதற்குப் பிறகு ‘செரியா’ கோட்டுக்குப் போகட்டும். ஆனால் civil court judge எடுத்தவுடனேயே இது முஸ்லிம் சம்பந்தப்பட்டது. ‘நாங்கள் தலையிட முடியாது. அங்கே போங்கோ’ என்கிறார். இது Judiceryயோட advocations of power என்பது அவங்கள் தங்கள் கடமையை தவறிவிட்டார்கள் (civil court). இவ்வாறான பல சம்பவங்கள் நடந்து நீதி மறுக்கப்பட்டதானாலேயே HINDRAF அமைக்கப்பட்டது. இந்த கோர்ட் முடிவு எல்லா முஸ்லிம் அல்லாதவர்களையும் பாதிக்கும். ஏறத்தாழ 45 வீத மக்களைப் பாதிக்கும். சீனர்கள் பௌத்தர்கள் கௌசிஸ் கிறிஸ்தவர்கள் எல்லோரையும் பாதிக்கும்.
இதுற்றி பேச இவர்கள் எல்லோரையும் அழைத்த போது இவர்கள் வரமாட்டேன் என்றார்கள். காரணம் மதம் பற்றிப் பேசினால் National Security Actஜ பயன்படுத்தி நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்சனை தருபவர்கள் என்ற மிரட்டலுக்கு உள்ளாக வேண்டிவரும். இப்படி அரசு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாங்க.
இது மதம் சம்பந்தப்பட்ட உணர்ச்சி வசப்படக்கூடிய விடயம் என மற்றவங்க வரவில்லை. எனவே நாம் HINDRAF என்ற அமைப்பை உருவாக்கி விட்டோம். உருவாக்கும்போது 50 இந்து இந்தியா சம்பந்தப்பட்ட இயக்கங்கள் வந்தாங்க. திராவிடக் கழகங்களும் வந்தாங்க. வந்த இரண்டு வாரத்தில எல்லாரும் போய்விட்டாங்க. இப்ப நாங்க தனியா இருக்கிறோம்.
என்னுடைய மூத்த அண்ணர் உதயமூர்த்தி பொலிஸ் அராஜகத்திற்கு எதிரான நடவடிக் கைகளை மேற்கொண்டிருந்தார். தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, தமிழர்கள் பொலிஸ் ரிமாண்டில் சாவது, அடித்துக் கொல்லப்படுவது போன்ற வழக்குகளை அவர் எடுத்துக் கொண்டிருந்தார். அவர் எமக்கு உதவ முன்வந்தார். ஆகவே அவரை எமது HINDRAFக்கு சட்ட ஆலோசகராக்கினோம். 2005 டிசெம்பர் 28ம் இவ்வமைப்பை ஆரம்பித்தோம். 2006 ஜனவரி 16ம் போராடப் போனோம். அத்துடன் எல்லாரும் எம்மைவிட்டுப் போறாங்கள். பின்னர் மார்ச் மாதம் 100 வருடத்திற்கு மேற்ப்பட்ட ஒரு ஆலயத்தை உடைப்பதாக தகவல் வந்தது. வழக்கமாக கோயிலை உடைத்தால் எல்லோருமே பேசாமல் இருப்பாங்க. ஆனால் நாங்க போய் அவர்களிடம் பேசி வழக்கு எடுப்போம் என்று சொல்லி பொலிசில் புகார் செய்து, சர்வதேச நிருபர்களை கூப்பிட்டு பிரச்சினையாக்கினோம். இது ஒரு சர்வதேச விடயமாகிவிட்டது.
இப்ப இந்த விடயம் பெரிதாகிவிட்டது. இப்போ இது வழக்குத் தொடரப்பட உள்ள போது எல்லோரும் இந்த அமைப்பு யார் என்ன என்று பார்க்கிறாங்க. இந்த விடயம் சர்வதேச ரீதியாக வெளிவந்ததும் உள்ளுர் செய்தி ஸ்தாபனங்களும் வெளியிட வேண்டியதாயிற்று. (இல்லாவிட்டால் உள்ளுரில் செய்தி போட மாட்டாங்க.)
உடனே மக்களிடம் இவ்வளவு நாளும் இந்த அநியாயங்கள் நடக்குது யாரும் கேட்கவில்லை. இப்ப இதை முன்னின்று செய்பவர்கள் யார் என்ற விடயம் அதிர்ச்சியைக் கொடுத்தது. எல்லோரும் HINDRAFஜ பார்க்கிறாங்க. அதுக்குப் பிறகு ஒவ்வொரு பிரச்சினையாக எம்மிடம் வருகிறது. எல்லா இடங்களிலுமிருந்து எங்கெங்கு கோயிலை இடிக்கிறாங்க என்ற செய்தியுடன் எம்மை தொடர்பு கொள்கிறாங்கள்.
எங்களை கூப்பிடுவாங்க. அங்க போனால் புல்டோசர் நிக்கும். எந்தவொரு வழக்கறிஞரும் உங்களை கோவிலை இடித்தால் கோட்டில்தான் சந்திப்பாங்க. கோயிலை இடிக்கிற இடத்திலல்ல. ஆனால் ஏழை மக்களின் கோயில் தொழிலாளர்களுடைய கோயில் அவர்களுக்கென்று குரல் கிடையாது. தமது உரிமையை தட்டிக் கேட்கத் தெரியாதவர்கள். அவங்கள் ஏழையானதால் ஆதரவு இல்லாததால் அரசு எதுவும் செய்யும். 150, 200 வருடங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் colonial timeல் காடுகளை வெட்டி plantation செய்தாங்கள். அந்தநேரம் கோயிலை கட்டினாங்கள். இந்த plantion landஜ உருவாக்கிய தொழிலாளர்களிடமிருந்தும் அந்த நிலங்களை அரசு திரும்பவும் பெறுகிறது. அந்த நேரம் இந்தக் கோயில் சட்டவிரோதமானது என்று கூறி அரசு கோயில்களை இடிக்கிறது. இப்படித்தான் பிரச்சினைகள் எழுகின்றது.
அந்த நிலத்தை மீள எடுக்கும் போது அரசு அந்த மக்களுக்கு நிவாரணம் கொடுத்து வேறு இடம் கொடுத்து வசிப்பதற்கு வீடு கொடுக்க வேண்டிய அரசாங்கம், எதுவுமே கொடுக்காமல் துரத்துகிறது. (நிலத்தின் சொந்தக்காரர்கள்) கோயில்களையும் தமிழ்ப் பள்ளிக் கூடங்களையும் அடித்து உடைப்பார்கள்.
இப்படியாக சில வேலைகளை நாம் செய்யச் செய்ய எம்மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகமாகிக் கொண்டு வந்தது. காரணம் நாங்கள் பேசுவதில்லை. புல்டோசரின் முன்னால் நாங்கள் தான் நிற்போம். அந்த கஸ்ரப்பட்ட மக்களுக்காக நாம் போராடாமல் என்ன செய்ய முடியும். இப்படி நாங்கள் lawyers கோயில் உடைப்பில் கைது செய்யப்பட செய்திகள் பெரிதாக வெளிவரும். இப்படிச் செய்திகள் வெளிவர மக்களுக்கு எங்கள்மீது நம்பிக்கை அதிகமாக ஏற்பட்டு வந்தது.
இப்படியாக கோயில் பிரச்சினைகளிலிருந்து தொழிலதிபர்கள் பிரச்சினை, தங்களுடைய தொழிலகங்களை இப்படி உடைக்கிறாங்கள், என்று பின்னர் வீட்டு உரிமையாளர்கள் பிரச்சினை, வேலைவாய்ப்புப் பிரச்சினை, மாணவர்கள் தமக்கு பல்கலைக்கழக அனுமதிப் பிரச்சினை இப்படி பலவிடயங்களை எடுத்துப் போராட்டமாக செய்ய இது கிட்டத்தட்ட இரு வருடங்களில் இந்த HINDRAF பெரிய விடயமாக செய்திகள் வர ஆரம்பித்து விட்டது.
பின்பு 50 வருட மலேசிய சுதந்திரத்திற்கு முன்பே 18 கோரிக்கைகளை முன்வைத்து 50 வருடங்களாக எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறியள் எண்டு கேட்க ஆரம்பித்தோம். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தும் போது பெரும் திரளாக 5000 பேர் மட்டில் வந்தாங்க. முன்பெல்லாம் இப்படி போராட்டங்கள் செய்யும்போது 20, 30, 50 பேர்தான் வருவாங்கள். இந்த 18 கோரிக்கைகளை முன்வைத்த போது 5000 பேர் வந்தது ஒருபெரிய விடயமாகிவிட்டது. 18 கோரிக்கைகளையும் அரசிடம் பிரதம மந்திரியிடம் கொடுத்தோம். அரசும் கண்ணைத் திறந்து விட்டார்கள். அதிலிருந்து எங்களை கண்காணிக்க தொடங்கி விட்டார்கள்.
இதைத் தொடர்ந்து 31 ஆகஸ்ட் 7007 மலேசிய 50வது சுதந்திர தினத்திற்கு முதல்நாள் 30ம் திகதி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒரு வழக்கு தாக்கல் செய்துவிட்டு அமெரிக்கா போனேன். அங்கு. AFP செய்திஸ்தாபனம் இதை பெரிய செய்தியாக்கியது. மலேசியாவில் மக்கள் ஒரு பெரிய விடயம் நடந்ததாகப் பார்த்தார்கள். இந்த விடயங்கள் எல்லாத்தையும் தமிழில் விளக்கமாக ஒரு பிரசுரம் அடித்து மக்களுக்கு கொடுத்தோம். காரணம் பத்திரிகைகள் செய்தியை மேலோட்டமாகவே போடுவார்கள். மக்களுக்கு விளங்காது. இப்படிக் கொடுத்தால் மட்டுமே மக்கள் விபரமாக படித்துக் கொள்வார்கள்.
செப்ரெம்பர் மாதம் தொடக்கம் ஒவ்வொரு பிரதேசம் பிரதேசமாக கூட்டங்கள் போட்டு விளக்கங்கள் கொடுக்கத் தொடங்கினோம். முதல் கூட்டத்திற்கே 3000 பேர் வந்தார்கள். இப்படியே 5000, 6000 12000 மக்கள் கூட்டத்திற்கு வந்தார்கள். மக்கள் விழித்துக் கொண்டார்கள். நாங்களும் உரிமைக்காக போராடுவோம் என்ற உணர்வு வந்தது.
பின்பு 25 நவம்பர் 2007 ‘நாங்கள் பிரிட்டிஷ் மகாராணியிடம் மனு கொடுப்போம் : இதுபற்றி பொது அறிவிப்பு செய்ய வேண்டும் என அழைத்த போது நாம் எதிர்பார்த்தது 10 000 பேரை. ஆனால் வந்தது ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள். 50 வருடமாக தூங்கியிருந்த மக்கள் விழித்துக் கொண்டார்கள். அரசாங்கத்திற்கு அவர்களின் விஷேட பிரிவு விளக்கமாக ஒரு பெரிய பிரச்சினை எழுந்துள்ளதாக . எல்லாம் சொல்லிவிட்டது. 2007 நவம்பர் 22ம் திகதி கோலாலம்பூர் நகரத்தை பொலிஸ் காவல் போட்டு தமிழர்கள் உள்ளே வரவிடாமல் தடுத்துள்ளனர். 25ம் திகதிக் கூட்டத்திற்கு தமிழர்கள் வரவிடாமல் தடுத்தார்கள். அதையும் மீறி பலர் 24ம் திகதி கோவிலுக்குப் போய் பூஜையில் கலந்துவிட்டு அங்கிருந்து அடுத்தநாள் கூட்டத்திற்கு போகவிருந்தார்கள். இந்த நேரம் கோயிலுக்குள் புகுந்து பொலிஸ் தண்ணியடித்து மக்களுக்கு பெரிய பிரச்சினைகளைக் கொடுத்து 1000 க்கு மேற்பட்டோரை கைது செய்தார்கள்.
November 23 2007ல் என்னையும் மற்றவர்களையும் பிடித்தாங்க. மக்கள் பயந்து விட்டாங்கள். எல்லோரையும் கைது செய்து விட்டாங்கள். 345 பேர் வரைக்கும் கோட்டுக்கு கொண்டுபோய் குற்றம் சாட்டி மாலை 6 மணிவரை இழுத்தடித்து இவர்களுக்கு Bail கொடுக்க முடியாமல் உள்ளே வைத்திருந்தால் போராட்டம் தொடர முடியாமல் போகும் என நம்பினார்கள். காரணம் HINDRAFல் 4 அல்லது 5 பேர்தானே உள்ளோம். நான் எனது அண்ணர் மற்ற இரண்டு சட்டத்தரணிகள் இந்த நாலு பேரையும் உள்ளே போட்டால் எல்லாம் அடங்கிப் போய்விடும் என்று நம்பினாங்க. ஆனால் இந்த 4 பேருக்கமாக இந்த நாடே எழும்பி வந்தது.
யார் யாரோ எல்லாம் அடுத்த நாள் கோட்டுக்கு வந்தாங்க. பெரிய சனக் கூட்டம் கோட்டுக்கு வெளியே நின்று விடுதலை செய்! தலைவர்களை விடுதலை செய்! என்று சத்தம் போட்டாங்கள். நீதிபதியும் மிகக் குறைந்த பணத்துடன் bail out பண்ண முன்வந்தார். மக்கள் அந்த இடத்திலேயே காசுகள் எல்லாம் சேர்த்து bail out பண்ண ரெடி. ஆனால் நான் என்ன செய்தேன் என்றால் கொடுத்த bail outஜ நிராகரித்துதேன். bail outஜ நிராகரித்தது மலேசிய வரலாற்றில் முதன் முறையாக நடைபெறுகிறது.
இப்படி ஏன் செய்யப்பட்டது என்றால்
1 நாங்கள் உங்கள் சிறைகளைப் பற்றி கவலைப்பட்டதேயில்லை. அது ஒரு பிரச்சினையில்லை.
2. இது ஒரு சமாதானப் போராட்டம். இல்லாவிட்டால் சுற்றியுள்ள மோசமான கிரிமினல்களை அனுப்பி கலவரத்தை உண்டு பண்ணியிடுவாங்கள்.
3 தலைவர் இல்லாமலே போராட்டம் நடக்கும்.
மூன்று நாட்களாகளுக்கு முன்பு நான் lockupல் உள்ளேன். மக்கள் தானாகவே நடக்கிறார்கள். மஞ்சள் துணி கொண்டு கொடி கட்டுறார்கள். காந்தி படத்துடன் வந்தாங்க. November 25 2007ல் போராட்டம் நடந்தது. ஆனால் அரசாங்கம் மட்டும் கலவரத்தை. பிரச்சினைகளை உண்டு பண்ணியது.
அமைதியாக இருந்த மக்களை போலீசாரே அடித்தனர் மக்கள் தலைவர் இல்லாமலே தானாகவே எல்லாவற்றையும் செய்தார்கள். இது largest hindu upraise out side to the India. அதற்கு அடுத்த நாள் எங்களை விடுவித்தனர். அதன் பிற்பாடே நான் மலேசியாவில் இருந்து வெளியேறினேன்.
இந்துக் கோயில்களுக்கு நடந்தது மாதிரி கிறீஸ்தவ தேவாலயங்களுக்கும் புத்த விகாரைகளுக்கும் பிரச்சினைகள் உண்டா? எப்படி என்றால் கிறீஸ்தவ மதத்தினர்க்கு ஏற்கனவே காலணி ஆதிகாலத்தில் நகரத்தில் எல்லாம் கட்டப்பட்டதால் பிரச்சினையில்லை. ஆனால் மற்றும் Evangalicn Church போன்ற நிறைய பணத்துடன் உள்ள இவர்கள் ஒரு துண்டு நிலம் வாங்குவது என்றால் பிரச்சினை. நிலம் வாங்கவே முடியாது. அரசு அனுமதிக்காது. கிறீஸ்தவ மதத்தை எதிர்காலத்தில் பிரச்சினையான மதமாக பார்க்கிறார்கள்.
பல பிரச்சினைகளின் பின் எனக்குத் தெரிந்த ஒரு கிறிஸ்தவ சேர்ச்சிற்கு 25 வருடம் கழித்து சேர்ச் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் கடைகளுக்கு மேலே இருந்த இடங்களிலேயே தமது சேர்ச்சை நடத்தி வந்தார்கள். புத்த மதத்தவர்களுக்கும் பாரிய பிரச்சினையில்லை. காரணம் ஆரம்ப காலத்தில் குடியேறிய சீனர்கள் தமது தலங்களை town இலேயே கட்டிவிட்டார்கள். அதனால் பிரச்சினையில்லை.
இந்துக்களுக்கே பெரிய பிரச்சினை. காரணம் இந்திய வம்சாவழியினரான நம்மவர்கள் காட்டை அழித்து வயல் ஆக்கினர். கோயில் கட்டினர். எல்லாமே கிராமப் புறங்களாகவே இருக்கும். இப்ப அரசாங்கம் இந்த நிலங்களை சுவீகாரம் செய்யும்போது இந்துக் கோயில்களை சட்டவிரோதம் என்று இடித்து அழிக்கிறார்கள். இதற்கு நாம் என்ன சொல்கிறோம் என்றால் நாம் developmentக்கு எதிரானவர்கள் அல்ல. நீங்கள் நிலச் சுவீகரிப்பு செய்வது பிரச்சினையல்ல. ஆனால் இதற்கு மாற்றீடான நிலத்தை எமது சமூகத்திற்கு கொடுங்கள் எனக் கேட்கிறோம். மக்கள் கிராமம் எங்கே மாற்றப்பட்டதோ அங்கேதான் இந்தக் கோயிலும் மாற்றப்பட வேண்டும் என்பது. இதுதான் இங்குள்ள பிரச்சினை அதை அரசு செய்வதில்லை.
மலேசிய Heritage சட்டத்தின்படி எதுசரி 100 வருடங்கள் இருந்திருந்தால் அது பாதுகாக்கப்பட வேண்டியவைகள். ஆனால் 150 வருடங்களாக உள்ள கோயில்களை உடைக்கிறார்கள். காரணம் மலேசியாவில் ஒரு மசூதி தான் 100 வருடமாக உள்ளன. அவர்களிடம் மிக பழமையான மசூதிகள் இல்லை. எமக்கு ஆயிரக் கணக்கான இந்துக் கோயில்கள் 150 வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்டவை. முருகன், அம்மன் கோயில்கள் பிரதானமான கோயில்கள் மற்றும் முனீஸ்வரர் காளியம்மன் சங்கிலி கறுப்பன் குலதெய்வ கோயில்களுமுண்டு. இவையெல்லாம் கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற கருத்தில் கட்டப்பட்டது.
நாம் என்ன சொல்கிறோம் என்றால் 100 ஏக்கர் காணிகளில் 20 கோயில்கள் இருக்கும் புதுநிலம் கொடுக்கப்படும்போது கோயிலுக்கு பெரிய நிலம் தரப்பட்டால் இந்த 20 கோயில்களையும் பெரிய 4 கோயில்களாக்கலாம். நாம் இந்த 20 கோயில்களும் வேணும் என்று கேட்டதே கிடையாது. அரசை மாற்றீடு தீர்வு வைக்கும்படி கேட்டுள்ளோம். மனு கொடுத்துள்ளோம். கெஞ்சிக் கேட்டுள்ளோம். எல்லா வழிமுறைகளிலும் கேட்டுள்ளோம். பிரதமரிடம் நீதியாசர்களிடம் கேட்டுள்ளோம். Attorny of General எம்மை ஒரு meetingகுக் கூப்பிட்டார்கள். நிறையவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாலேயே கூப்பிட்டார்கள். எல்லாம் நல்லாவே பேசுவார்கள். எம்மை அனுப்பிவிட்டு அடுத்த நாளே கோயிலை உடைக்க ஆட்களை அனுப்புவார்கள்.
இவர்கள் தங்களுக்கு உள்ள Agendதaபடி வேலை செய்கிறாங்கள். ஆரம்பத்தில் நாங்கள் நினைத்தோம் இதை விளங்காமலேயே செய்கிறாங்கள் என்று. இவர்களுக்கு ஒரு திட்டவட்டமான திட்டம் ஒன்று உண்டு. அதாவது இவர்களுடைய கோயில்களை பழமையான கலாச்சாரத்தை உரிமையை முஸ்லிம்களுக்கு இல்லாத நீண்ட பாரம்பரியத்தை உள்ள இந்து மக்களின் பாரம்பரியத்தை அவர்களின் உரிமைகளை அழிப்பதே நோக்கம். இது திட்டவட்டமாக எமக்குத் தெரிகின்றது.