அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களை வழங்கக்கூடிய மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வியை வழங்கும் மையமாக லிற்றில் எய்ட் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது என லிற்றில் எய்ட் திறன்விருத்தி மையத்தின் இயக்குநர் ஹம்சகௌரி சிவஜோதி தெரிவிக்கின்றார். கிளிநொச்சி திருநகரில் பதின்னான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்கி வருகின்ற லிற்றில் எய்ட் யுத்தம் முடிவுக்கு வந்த மே 18, 2009இல் லண்டனிலும் பின்னர் இலங்கையிலும் பொது அமைப்புகள் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இது வரை ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வெளியேறிய நீண்ட வரலாற்றைக் கொண்ட லிற்றில் எய்ட் நீண்டகால முயற்சியைத் தொடர்ந்து, அங்கீகாரம் பெற்ற தொழிற்கல்வி நிறுவனமாக மாறியுள்ளது. இந்நிலையை எட்டுவதற்கு தனக்கு ஊக்கத்தை அளித்த லண்டன் லிற்றில் எய்ட் நிறுவனத்தினருக்கும் இம்முயற்சிக்கும் தனக்கு முழு ஒத்துழைப்பையும் தந்து உதவிய சக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஹம்சகௌரி சிவஜோதி தன்னுடைய நன்றிகளைத் தெரிவித்தார்.
லிற்றில் எய்ட் அமைப்பானது மாணவர்களுக்கு தொழிற்கல்வியை வழங்கி அவர்களை பொருளாதார செயற்பாடுகளுக்கு தயார்படுத்துவதுடன் மட்டும் நின்றுவிடாமல் அவர்களுடைய தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துவிடுவதன் மூலமும் அவர்களுடைய ஆளுமைகளை விருத்திசெய்வதன் மூலமும் அடுத்த தலைமுறையை செப்பனிடுவதிலும் கண்ணும் கருத்துமாகச் செயற்படுவதாக லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவிக்கின்றார். அதனையொட்டிய சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் லிற்றில் மேற்கொள்வதாக மையத்தின் துணை இயக்குநர் பா கஜீபன் தெரிவிக்கின்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில் நாளை டிசம்பர் 17 அன்று “நான் போதைப்பொருள் பாவனைக்கு எதிரானவள் / எதிரானவன்” என்ற தொனிப்பொருளில் லிற்றில் எய்ட் மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை கிளிநொச்சியின் மையப்பகுதியில் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார். இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் தற்போது லிற்றில் எய்ட் இல் கல்விகற்கின்ற மாணவர்களும் லிற்றில் எய்ட் இன் பழைய மாணவர்களும் கூட்டாக ஈடுபடவுள்ளனர். கவனயீர்ப்புப் போராட்டத்தின் முடிவில் லிற்றில் எய்ட் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் திருநகர் லிற்றில் எய்ட் மையத்தில் நடைபெறவுள்ளது.
மாணவர்களுடைய வளர்ச்சியுடன் மட்டும் நின்றுவிடாமல் தமது ஆசிரியர்களையும் மேலதிக பயிற்சிகள் கற்கை நெறிகளுக்கு அனுப்பி அவர்களது திறனையும் ஆற்றலையும் வளர்ப்பதிலும் லிற்றில் எய்ட் கவனம் செலுத்தி வருகின்றது. ஒவ்வொரு மாணவ மாணவியரது வெற்றிக்குப் பின்னும் ஆசிரியர்களது உழைப்பு உன்னதாமானது. அந்த வகையில் லிற்றில் எய்ட் தனது ஆசிரியர்களது முன்னேற்றத்திலும் அவர்களது பொருளாதார எதிர்கால முன்னேற்றத்திலும் கவனம்கொண்டு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி மையமாக லிற்றில் எய்ட் க்கு அங்கிகாரம் கிடைக்கப்பெற்றதற்கு லிற்றில் எய்ட் ஆசிரியர்களது அயராத உழைப்பைப் பாராட்டிய லிற்றில் எய்ட் தலைவர் க நத்தகுமார் (சிவன்) லிற்றில் எய்ட் தனது இலக்கில் தொடர்ந்து பயணிப்பதற்கான தொடர்ச்சியான பொருளாதார பலத்தை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் க நந்தகுமார் தலைமையில் லிற்றில் எய்ட் கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சிக்கு பலவகையிலும் ஒத்துழைத்தவர்கள் தங்களை வெளிப்படுத்தாமல் இன்னமும் அந்த ஆதரவை வழங்கி வருகின்றமைக்கு தனது நன்றிகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
லிற்றில் எய்ட் செயலாளர் ஆர் சுகேந்திரன், டொக்டர் பொன் சிவகுமார் மற்றும் லிற்றில் எய்ட் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தமது தொழிற்கல்வி மையம் அடுத்த நிலைக்கு நகர முன்றாம்நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளதையிட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர். தற்போது கிளிநொச்சியில் முதன்மைத் தொழிற்கல்வி நிலையமாக வளங்களைக் கொண்ட நிலையமாக ஜேர்மன் ரெக் இருந்தபோதும் அங்கு கிளிநொச்சி மாணவர்கள் பெருமளவில் இல்லை. அந்த வகையில் இன்றைய நிலையில் கிளிநொச்சியில் கிளி மாணவர்களுக்கு இலவசமாக அங்கிகாரம் பெற்ற முன்றாம் நிலைக் கல்வி தொழிற்கல்வியை வழங்கும் முதன்மை நிறுவனமாக லிற்றில் எய்ட் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் தன்னை முக்கியதொரு அங்கமாக இணைத்துள்ள லிற்றில் எய்ட் திறன்விருத்தி மையம்இ கிளிநொச்சி கல்வி வலயத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கிலக் கல்விப் பயிற்சி நெறியையும் அண்மையில் ஆரம்பித்துள்ளது. 40 முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் லிற்றில் எய்ட் இல் ஆசிரியர்களுக்கான ஆங்கிலக் கல்விப் பயிற்சியைப் பெற்றுவருகின்றனர். இவர்களுக்கான ஆங்கில வகுப்புகளை கனடாவில் மொழிபெயர்ப்பியலில் செயற்பட்ட தற்போது யாழ் பல்களைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராக உள்ள மணி வேலுப்பிள்ளை வழங்கி வருகின்றார். இவர்களுக்கு ஆரம்ப கணணிப் பயிற்சியையும் அளிப்பதற்கு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டை லண்டனில் உள்ள தொழிலதபர் ஒருவர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் லிற்றில் எய்ட் இல் விடியோ எடிட்டிங் கற்கை நெறிக்காண கணணிகளையும் அன்பளிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
லிற்றில் எய்ட் அதன் பெயருக்கமைவாக சிறிய நிறுவனமாக இருந்த போதும் அதன் செயற்பாடுகள் மிகவும் பரந்தும் ஆழமான தாக்கத்தை கிளிநொச்சி மண்ணில் ஏற்படுத்தி வருகின்றது. சுயதொழில் வாய்ப்பு பயிற்சி நெறிகள், உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவித்தல், ஆளுமை தலைமைத்துவப் பயிற்சிகள், இளவயதுத் திருமணங்கள் – வீதி விபத்துக்கள் – போதைப்பொருள் பாவன தொடர்பான கவனயீர்ப்புப் போராட்டங்கள் என லிற்றில் எய்ட் ஒரு சமூக இயக்கமாக செயற்ப்ட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி ஆளுமைகளை ஆவணப்படுத்துவது, சமூக செயற்பாட்டாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பது என லிற்றில் எய்ட் இன் செயற்பாடுகள் பரந்து விரிந்து செல்வது குறிப்பிடத்தக்கது. இவற்றோடு லிற்றில் எய்ட் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அனுசரணையோடு முப்பது வரையான யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சிறார்களுக்கு கல்வி உதவி அளித்து வருகின்றது. அவ்வாறு உதவி பெற்ற மாணவர்கள் அண்மைய கபொத சாதாரண தரப் பரீட்சையில் சாதனை நிகழ்த்தி உள்ளனர். த புகழரசன் 9A, த கலைக்குமரன் 8A 1B, அ தர்சிகா 7A 2B, மா தேனன் 2A 5B 1C, சி நிரேகா 3A 3B 1C 1S எடுத்துள்ளனர். த புகழரசனின் பாடசாலை வரலாற்றில் இவ்வாறான பெறுமேறுபெற்றது இதுவே முதற்தடவை.இவர்களது அடுத்த கட்ட கல்விச் செயற்பாடுகளுக்கும் லிற்றில் எய்ட் தன்னாலான உதவிகளை வழங்கி வருகின்றது.
லிற்றில் எய்ட் க்கு வழங்கப்படுகின்ற ஒவ்வொரு சிறு உதவியும் சிந்தாமல் சிதறாமல் வினைத்திறனுடன் பயன்படுத்தப்படுவதானாலேயே தான் தொடர்ந்தும் அவர்களுக்கு நிபந்தனையில்லாமல் முடிந்த உதவியை வழங்கி வருவதாக நீண்ட காலமாக நிதிப்பங்களிப்பைச் செய்துவருகின்ற பெயர்குறிப்பிட விரும்பாத லிற்றில் எய்ட் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். தற்போது லிற்றில் எய்ட் குடும்பத்துடன் ஜேர்மனியில் உள்ள நண்பர்களும் இணைந்து மாதாந்தம் ஒரு லட்சம் ரூபாய் லிற்றில் எய்ட் செயற்பாடுகளுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது லிற்றில் எய்ட் மாதாந்த செலவீனம் 6 லட்சத்தை எட்டியுள்ளது. இதனை லிற்றில் எய்ட் இலும் அதன் இலக்கிலும் நம்பிக்கை கொண்டபலர் செலுத்தி வருகின்றனர்.