செய்திகள்

Thursday, December 9, 2021

செய்திகள்

செய்திகள்

முடிவுக்கு வருகிறது கொரோனாவின் ஆட்டம் – ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் வெளியிட்டுள்ள மகிழ்வான தகவல் !

“மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது.” என ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
‘மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ், இயற்கையில் புதிய புகலிடத்தை தேடுகிறது. தன்னைக் கொல்லாத புதிய விலங்கை இந்த வைரஸ் கண்டால் அதன் உடம்புக்குள் சென்று தங்கியிருக்கும். அங்கிருந்து புதிய தொற்று இலக்கை எதிர்நோக்கி இருக்கும். மனித சமூகத்தில் தடுப்பூசி போட்டவர்கள், மீண்டவர்கள் எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதத்தை எட்டும்போது, கொரோனா வைரஸ் இயற்கையில் ஏதாவது ஒரு விலங்கை புதிய புகலிடமாக அடையும். எனவே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதில் உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும்’ எனவும் அவர் கூறியுள்ளார்

பிரியந்தகுமார கொலை தொடர்பில் கைதான சந்தேக நபர்களுக்காக நீதிமன்றில் முன்னிலையாக போவதில்லை – சியல்கோட் சட்டத்தரணிகள் அறிவிப்பு !

பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர்களுக்காக நீதிமன்றில் முன்னிலையாக போவதில்லையென சியல்கோட் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன்,  இந்த பயங்கரவாத சம்பவம் தொடர்பில் அச்சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரியந்த குமார கொலை தொடர்பில் நேற்று மேலும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இச்சந்தேக நபர்கள் குஜ்ரன்வாலா பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை 13 நாட்கள் காவல்துறையின் கீழ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, பிரியந்தகுமார பணியாற்றிய ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 345  ஊழியர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் தாக்கிக் கொலைசெய்யட்டு தீயிடப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம், கடந்த 6 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், நேற்று அவரது இறுதிக் கிரியை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை எதிர்கொண்டுள்ள வரலாறு காணாத மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி !

நாடு வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்திருந்த அவர்,

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய ஒரே வழி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேறு மாற்று வழிகள் எதுவும் இல்லை எனவும், உள்நாட்டு ரீதியான தீர்வுத்திட்டமொன்றை பெற்றுக் கொள்வதற்கான காலம் கடந்து விட்டது.

ஒரு பிள்ளை கடுமையாக நோய் வாய்ப்பட்டால் அதனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும்.மாறாக வீட்டில் கசாயங்களை வைத்து கொடுத்து வீட்டில் பராமரிப்பது பொருத்தமற்றது. அது போலவே பொருளாதார நெருக்கடி நிலைமையிலிருந்து மீள்வதற்கு வேறும் எந்தவொரு மாற்று வழியும் கிடையாது.

ஒக்டோபர், நவம்பர் மாதங்களுக்கு இடையில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 30 வீத வீழச்சியை பதிவு செய்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் இது மறைப் பெறுமதியை எட்டும்.

நாட்டின் பொருளாதாரம் இவ்வாறான ஓர் நெருக்கடி நிலையை இதுவரையில் சந்தித்தது கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு !

நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ட்ரைன் எஸ்கடெல் அம்மையார் மற்றும் துணைத் தூதுவர் ஹில்டே பேர்க் ஹான்சன் அம்மையார் ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். நேற்று 08.120.2021 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற உறுப்பினர் கோ. கருணாகரம், மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், எதிர்கால நடவடிக்கைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. மேலும் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர தமிழ் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றமை தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்து தொடர்ந்து உறுதியான ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள நாடான நோர்வேயுடன் தமிழ் தரப்பின் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு ஒரு மணி நேரம் நடைபெற்றது.

முடிவுக்கு வருகிறது எங்கலா மெர்கர்ஸின் 31 வருட அரசியல் வாழ்க்கை – ஜேர்மனின் புதிய அதிபராக ஒலாஃப் ஸ்ச்சோல்ஸ் !

ஜேர்மனியின் புதிய அதிபராக ஒலாஃப் ஸ்ச்சோல்ஸ் அந்த நாட்டு நாடாளுமன்றினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

16 வருடங்கள் அந்த நாட்டு அதிபராக கடமையாற்றிய எங்கலா மெர்கர்ஸின் 31 வருட அரசியல் வாழ்க்கை  நிறைவுக்கு வருகின்றது. இந்தநிலையில் 63 வயதான ஜேர்மனின் புதிய அதிபருக்கு அந்த நாட்டு நாடாளுமன்றில் பெரும்பான்மை கிடைத்துள்ளது.

அவர் முன்னாள் அதிபர் எங்கலா மெர்கர்ஸின் ஆட்சி காலத்தில் துணை அதிபராக கடமையாற்றியிருந்தார்.

நாடாளுமன்றில் அவருக்கு 395 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

“மாணிக்ககங்கையில் வீசப்படும் சுமார் 2,000 கிலோ பொலித்தீன் மாலைகள்.” – தடைசெய்ய நடவடிக்கை !

பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் இடியாப்ப தட்டுகள் உட்பட 8 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தொடர்பான பொருட்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சு உட்பட பல அமைச்சுக்களின் செலவீன தலையீடுகள் மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் கதிர்காமத்திற்கு சுமார் 300,000 பக்தர்கள் வருகை தருவதாகவும், சுமார் 2,000 கிலோ பொலித்தீன் மாலைகளை எடுத்துச் செல்கின்றனர். இந்த மாலைகளை அவர்கள் தரையில் வீசுகிறார்கள் அல்லது மாணிக்க கங்கையில் வீசுகிறார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் மாலைகள் தடை செய்யப்பட்டதன் பின்னர், இயற்கை அல்லது எண்ணெய்க் காகிதத் தாள்களை கொண்ட மலர்களை மாலைகளாக தயாரிக்க உற்பத்தியாளர்களை அரசாங்கம் ஊக்குவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிளாஸ்டிக்கிற்கு பதிலாக இயற்கை மூலப்பொருட்களிலிருந்து இடியாப்ப தட்டுகளை உற்பத்தி செய்வதை அரசாங்கம் ஊக்குவித்து வருவதாகவும், இந்த தயாரிப்பை பிரபலப்படுத்துவதற்கான சாத்தியமான திட்டங்களை அமைச்சின் அதிகாரிகள் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சொப்பிங் பைகளுக்கு தடை விதிக்கப்படும் என்றும், அதற்கு பதிலாக மாற்று மக்கும் மக்கக்கூடிய பை அறிமுகப்படுத்தப்படும். இலங்கையில் நாளாந்தம் சுமார் 20 மில்லியன் சொப்பிங் பைகள் சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிராம மக்கள் 11 பேரை உயிரோடு கொளுத்திய மியன்மார் இராணுவம் – வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் சர்வதேசம் !

மியான்மரில் கிராம மக்கள் 11 பேரை இராணுவ வீரர்கள் உயிரோடு எரித்துக்கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியான்மரின் வடமேற்கு பகுதியில் உள்ள மோனிவா நகரில் அணிவகுத்துச் சென்ற இராணுவ வாகனங்கள் மீது சிலர் கையெறி வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதை தொடர்ந்து, இராணுவ வீரர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தினர் 11 பேரை பிடித்து இராணுவ வீரர்கள் உயிரோடு எரித்துக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சம்பவம் மியான்மரில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது குறித்து இராணுவம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதேவேளை, கடந்த 5ஆம் திகதி யாங்கூன் நகரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது இராணுவ வாகனம் மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மியான்மரில் கடந்த பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி அந்நாட்டு இராணுவம் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வரும் இராணுவம், இதுவரை 1,300 இற்கும் அதிகமான போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘உடலுக்கு எண்ணெய் ஊற்றி “அல்லாஹூ அக்பர்” என்று கூறி கொளுத்தினோம்.” – பிரியந்த குமாரை எரித்தவர் வாக்குமூலம் !

பாகிஸ்தானில் உள்ள ராஜ்கோட் தொழிற்சாலையின் முகாமையாளர் பிரியந்த குமாரவின் உடலுக்கு தீ வைத்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கொலைக்கும்பலின் தலைவரான முகமது கலாம் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நான் ஆட்களை ஒன்றுதிரட்டி முகாமையாளரின் உடலுக்கு எண்ணெய் ஊற்றி “அல்லாஹூ அக்பர்” என்று கூறி கொளுத்தினோம் எனத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஹமீட் மீரியும் இந்த வாக்குமூலத்தை அவர் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் பாடசாலைகளில் பெண்கள் உயர்தரம் கற்க தடை – தலிபான்கள் அறிவிப்பு !

ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் உயர்தரங்களில் கல்வி கற்பதற்கு தலிபான்கள் விதித்துள்ள தடைக்கு அந்த நாட்டின் பாடசாலை மாணவிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தங்களது கல்வியை தொடர முடியாமல் போனமையானது மரண தண்டனையைப் போல் உணர்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க துருப்பினர் வெளியேறியதை அடுத்து, அங்கு தலிபான்கள் ஆட்சி அமைத்தனர். இதனையடுத்து அங்கு ஆரம்ப பிரிவு மாணவிகளுக்கு மாத்திரம் பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

விரைவில் உயர்தர மாணவிகளுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என தலிபான்கள் உறுதியளித்த போதிலும், காபூல், நங்ஹகார் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் உள்ள உயர்தர வகுப்புகள் அடங்கிய மகளிர் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு மற்றும் வறுமை காரணமாக பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு தயங்குவதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

2.8 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலம் போன மாவீரன் நெப்போலியனின் ஆயுதங்கள் !

மாவீரர் நெப்போலியன் போனபார்ட்டின் பல்வேறு நாடுகள் மீது படையெடுத்து அதில் வெற்றிவாகையும் சூடினார். பிரான்சை சேர்ந்த அவர் உலகம் முழுவதும் உள்ள நாடுகளை தன் வசப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு போர்களை தொடுத்தார்.
1799-ம் ஆண்டு அவர் ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்திய போது எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் 5 ஆயுதங்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன. இல்லினாய்ஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்ட ராக் ஐலேண்ட் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது.
வாள் மற்றும் 5 ஆயுதங்கள் 1.5 மில்லியன் முதல் 3.5 மில்லியன் அமெரிக்க டாலர் வரை மதிப்பிடப்பட்டு இருந்தது. இந்த ஏலத்தில் நெப்போலியனின் வாள் உள்பட ஆயுதங்கள் 2.8 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
மாவீரர் நெப்போலியனின் போர்வாள் ரூ. 21.11 கோடிக்கு ஏலம்இது குறித்து ஏல நிறுவனத்தின் தலைவர் கெவின் ஹோகன் கூறியதாவது:-
தொலைபேசி மூலம் ஏலம் முடிக்கப்பட்டது. மாவீரர் நெப்போலியனின் வாள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குபவர் மிகவும் அரிதான வரலாற்றை தனது வீட்டுக்கு எடுத்து செல்கிறார்’ என்றார்.
நெப்போலியனின் இந்த ஆயுதங்கள் அரசு ஆயுத தொழிற்சாலையில் இயக்குனராக இருந்த நிக்கோலஸ் நோயல் பவுடெட் என்பவரால் தயாரிக்கப்பட்டது. பேரரசராக முடிசூட்டப்பட்ட பிறகு நெப்போலியன் அந்த வாளை ஜெனரல் ஜீன் ஆண்டோச் ஜூனோட்டிடம் ஒப்படைத்ததாக நம்பப்படுகிறது.
ஆனால் ஜெனரல் மனைவி தனது கடனை அடைப்பதற்காக வாளை விற்றுள்ளார் என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.