செய்திகள்

Saturday, July 31, 2021

செய்திகள்

செய்திகள்

மாகாண சபை கையிலிருந்த போது எதையும் செய்யாது இன்று புலம்பிக்கொண்டிருக்கிறார் க.வி.விக்னேஸ்வரன் !

மாகாண பாடசாலைகளை மத்திய அரசு கையகப்படுத்துவதற்கு எதிராக வெகுவிரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதுள்ள அரசானது மாகாணங்களுக்கு உரித்தான கல்வி ,சுகாதாரம் போன்ற விடயங்களை மாகாணங்களுக்கான அதிகாரங்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அதற்கு சிலர் துணை போகிறார்கள். சில மாயைகளை நம்பி சிலர் மாகாண அதிகாரத்தை மத்திக்கு தாரை வார்க்கும் முகமாக செயற்படுகிறார்கள்.

ஆனால் தற்போதுள்ள அரசானது 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு உட்பட்ட கல்வி ,சுகாதாரம் போன்ற விடயங்களை தனது ஆளுகைக்கு உட்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் நாம் நேற்று கல்வியலாளர்களுடன் ஒரு சந்திப்பினை மேற்கொண்டு ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளோம். அதாவது இந்த மாகாணத்திற்குட்பட்ட பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளை மத்திய அரசு கையகப்படுத்துவதற்கு எதிராக வெகுவிரைவில் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய உள்ளதாக தீர்மானித்துள்ளோம் என்றார்.

……………………………………………………………………………………………………………………………………………………

வடமாகாணசபை இறுதியாக இயங்கிய காலத்தின் போது முதலமைச்சராக விளங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது. அதிகாரம் இவர்களுடைய கைகளில் இருந்த போது மாகாணசபைக்குள் நிதி மோசடியும் – கட்சிப்பேதங்களுமே அதிகரித்து காணப்பட்டிருந்தது. இன்று இவர்கள் அழுது கொண்டிருக்கும் பாடசாலைகள் தொடர்பாகவும் அதிகமாக அக்கறைப்பட்டிருக்கவில்லை.  மாகாணசபை இயங்குநிலையிலிருந்த போது பாடசாலைகளின் விடயங்களில் பெரிய தலையீடு செய்யவில்லை. வேறு மாகாணங்களின் பாடசாலைகளில் நவீன வகுப்பறைகள் என்ற தொனியிலான பல வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இதன் எண்ணிக்கை வடக்கில் மிகச்சொற்பமே. இது தவிர பல பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது. ஆங்கிலம் முறையாக கற்பிக்கப்படுவதில்லை. ஆய்வுகூட வசதிக் குறைவு . இப்படியான நிறைய குறைபாடுகள் உள்ளன. இவற்றை நீக்க எந்த மாதிரியான நகர்வுகளை மேற்கொண்டுள்ளார்கள் என்பது யாருக்குமே தெரியாது. பாடசாலைகள் தேசியமயமாவது தொடர்பாக அலட்டிக்கொள்ளும் நீங்கள் மாகாணபாடசாலையாக காணப்பட்ட போது என்ன செய்தீர்கள் என்பது ஆராயப்படவேண்டியது.

உண்மையிலேயே மாகாணசபைகளின் பால் அதீத அக்கறையுடையவர்களாயின் இவர்கள் பொறுப்பிலிருந்த போதே அதனை பலப்படுத்தியிருக்க வேண்டும். பிரச்சினைகளை சுமூகமாக முடித்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாது விட்டுவிட்டு இன்று மாகாணசபை அடக்கப்படுகின்றது – ஒடுக்கப்படுகின்றது என்றெல்லாம் கூறுவது என்ன வகையான மனோநிலை என்பது தான் தெரியவில்லை.

இது தவிர அரசினால் ஒதுக்கப்பட்டிருந்த நிதியை வடமாகாணசபையினர் மீள அரசுக்கு அனுப்பிவைத்ததாக கடந்த காலங்களில் அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறித்த விடயம் தொடர்பாக அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ ஆகியோரும் பதிவு செய்திருந்தனர். இவ்வளவு தான் இவர்களுடைய கால  தூரநோக்கான செயலாக அமைந்திருந்தது. இது தவிர புலம்பெயர் தேசங்களில் வாழும் முதலீட்டாளர்களை வடக்குக்கு அழைத்து வருவதற்கான எந்த நடவடிக்கைகயும் வடமாகாண சபை மேற்கொண்டிருக்கவில்லை.

 

சரி வேறு என்ன தான் சாதித்தார்கள் என்று கேட்டால் , மாகாணசபையால் கிடைத்த பெயரை வைத்துக்கொண்டு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எழுக தமிழ்- தமிழ்தேசியம் என்றெல்லாம் கூறி அவர் தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சியை உடைத்து புதிதான ஒரு கட்சியை உருவாக்கியதை தவிர வேறெதுவுமே நடந்தாகவில்லை என்பதே உண்மை. இனிவரும் காலங்களில் பதவிக்கு வரும் மாகாணசபைகளாவது இவர்கள் போல நடந்து கொள்ளாமல் இருந்தாலே போதுமானது என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டனர் என்பதே உண்மை.

“நாட்டின் பொருளாதாரம் வீழ்கின்ற போது யாருடன் சண்டை பிடிக்க ஆயுத அதிகரிப்பை செய்கிறீர்கள்.” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம் !

“இலங்கையில் அரசாங்கங்கள் தங்களுடைய ஊழல்வாத அரசைக் கொண்டு செல்ல தமிழர்கள் மீது அடக்குமுறையை கையாள்கின்றனர்.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்  இடம்பெற்ற வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

“எரிபொருள் விலை அதிகரிப்புக்கு வலுசக்தி அமைச்சர் தனிப்பட்ட ரீதியில் பொறுப்புக்கூற வேண்டியவர் அல்லர். ஒட்டுமொத்த அரசும் இதற்குக் காரணம். வலுசக்தி என்பது அபிவிருத்திக்கு மிக முக்கியமானது. இன்று நாடு பாதிக்கப்பட்டுள்ளது என்றால் அதற்கு இந்தச் சபையில் உள்ள சகலரும் பொறுப்புக்கூற வேண்டும். இதுவரை காலமாக முறையான கொள்கைத்திட்டம் ஒன்று இல்லாது அரசுகள் செயற்பட்டமையே இதற்குக் காரணம்.

நாட்டின் வரவு – செலவுத் திட்டத்தில் தேசிய பாதுகாப்புக்கு 10.3 வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகின்றது என்றால் யார் உங்களின் எதிரிகள் என்பதை நீங்க கூற வேண்டும்? இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் போர்களைத் தொடுக்கவில்லை. அப்படி இருந்தும் இந்த நாட்டில் ஒரு இனக்குழுவுக்கு எதிராகவே நீங்கள் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளீர்கள். இந்த நாட்டின் பிரஜைகளையே நீங்கள் எதிரிகளாக நினைத்துள்ளீர்கள். ஏனென்றால் அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்கவோ அவர்களை அங்கீகரிக்கவோ நீங்கள் தயாராக இல்லை. இதுதான் அவர்களுக்கு எதிராகப் போரைத் தொடுக்கவும், அவர்களை கொன்று குவிக்கவும் காரணமாக அமைந்துள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிராகவே அரசின் பாதுகாப்புக் கொள்கை கையாளப்பட்டது. 32 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறை கையாளப்பட்டது. அன்று தமிழர்கள் போன்று இன்று முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் உங்களின் ஊழல்வாத அரசைக் கொண்டு செல்ல இவ்வாறான அடக்குமுறைகளைக் கையாண்டு வருகின்றீர்கள். இராணுவ ஆக்கிரமிப்புக்குள் நாடு தள்ளப்பட்டு வருகின்றது.

சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தி அவர்கள் உங்களைக் காப்பற்றுவார்கள் என்ற காரணத்துக்காகச் சிறுபான்மை மக்களை அடக்குமுறைக்குள் உட்படுத்த நினைக்கின்றீர்கள். நீங்கள் எமது குரலுக்கு செவிமடுக்க மறுக்கின்றீர்கள்.

இன்று அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு இது தீர்வு அல்ல. தமிழ் மக்கள் 73 ஆண்டுகளாக நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இன்று முஸ்லிம்களும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இன்று ஒட்டுமொத்த நாடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அரசு தனது கொள்கையை மாற்றிக்கொண்டு பயணிக்கவில்லை என்றால் அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்குவர்” – என்றார்.

வவுனியாவின் அரச அதிபராக சமன்பந்துலசேன இருந்த போது எதிர்க்காத தமிழ்தேசியவாதிகள் வடக்குக்கு நியமிக்கப்பட்ட போது ஏன் எதிர்க்கிறார்கள்..?

வடக்கின் பிரமதம செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன்பந்துலசேன அவர்கள் ஜனாதிபதியால் நேற்று நியமிக்கப்பட்டார். அந்தவகையில், வவுனியா மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன அவர்களே வடக்கின் பிரமதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த அ.பத்திநாதன் கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது. வெற்றிடமான இப் பதவிக்கு வடக்கைச் சேர்ந்த பலரும் போட்டியிட்டனர். இந்நிலையிலேயே வவுனியாவின் அரச அதிபராக கடமையாற்றும் எஸ்.எம்.சமன்பந்துலசேன பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் தமிழ்தேசிய கட்சிகளினுடைய உறுப்பினர்கள் இது தொடர்பில் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். தமிழ் மாகாணமான வடக்கில் பிரதம செயலாளராக சிங்களவர் ஒருவரை நியமித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தின் பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னொரு வடிவமாகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.

“ஒரு சிங்களவரை பிரதம செயலாளராக நியமனம் செய்வதென்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு தமிழை எழுதவோ வாசிக்கவோ தெரியாத சூழ்நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் அவருக்கு சிங்களத்திலோ ஆங்கிலத்திலோ கடிதம் எழுதவேண்டிய சூழ்நிலையும் இல்லாவிட்டால் அவர் உடனடியாக அதை வாசித்து அறிந்து கொள்ளமுடியுமா என்ற பல்வேறான பிரச்சினைகளை இந்த நியமனம் என்பது உருவாக்கியிருக்கின்றது.”  என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இவர்கள் அதிருப்தி வெளியிட்டிருக்கும் எஸ்.எம்.சமன்பந்துலசேன வவுனியாவின் அரச அதிபராக கடமையாற்றிய போது எந்த எதிர்ப்பையும் இந்த தமிழ்தேசியவாதிகள் வெளியிடவில்லை. ஆனால் யாழ்ப்பாணமும் உள்ளடங்கியதாக ஏதாவது பிரச்சினை என்றால் துள்ளிக்குதிக்கிறார்கள். ஏன் வவுனியாவும் இவர்கள் கூறிய தமிழ்தேசிய எல்லைக்குள் தானே வருகிறது. இவர்கள்  எஸ்.எம்.சமன்பந்துலசேன வடமாகாணத்துக்குரிய பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டதால் கோவப்படுகிறார்களா..? அல்லது யாழ்ப்பாணத்துக்குள்ளும் சிங்கள ஆதிக்கம் வந்துவிடுமோ என்பதால் கோபப்படுகிறார்களா என தெரியவில்லை.

 

இங்கு மாற்றப்படவேண்டியது இந்த மனோநிலைதான். யாழ்ப்பாணத்துக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் தான் இலங்கை வாழ் தமிழர்கள் எல்லோருக்கும் பிரச்சினை என போல காட்டி  கூக்குரலிடுவதை முதலில் நிறுத்துங்கள். உண்மையிலேயே பிரச்சினை என்றால் அந்த பிரச்சினை ஒரு பகுதிக்கு வரும்போதே எதிர்த்திருக்க வேண்டும். அதை விடுத்து உங்களுடைய தலைக்கு பிரச்சினை வந்தால் மட்டும் தான் எதிர்ப்போம் என்றால் என்ன மாதிரியான மனோநிலை என்று தான் விளங்கவில்லை.

உண்மையான மக்கள் தலைவர்கள் என்றால் முதலில் மக்களுக்கான அரசியலை இதய சுத்தியுடன் மேற்கொள்ள ஆரம்பியுங்கள். முதலில் ஒரு பகுதியை மையப்படுத்திய அரசியல் நீரோட்டத்தில் இருந்து விலகி மக்களுக்கான தேசிய நீரோட்டத்தில் இயங்க முன்வாருங்கள். அப்படி இயங்கியாவது ஏதேனும் மக்களுக்காக ஆக்கபூர்வமாக செய்யுங்கள்.

“அடுத்தவருக்கு தலையை தடவி குட்டுவதே ரணிலின் கடந்தகால அரசியல் வரலாறு.” – சரத் பொன்சேகா

“அடுத்தவருக்கு தலையை தடவி குட்டுவதே ரணிலின் கடந்தகால அரசியல் வரலாறு.” என எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணையின் விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வரலாறு காலகாலமும் இவ்வாறே அமைந்துள்ளது. தனது கட்சிக்குள் இருக்கும் நபர்களில் காலை வாரும் செயற்பாடுகளையும், தலையை தடவி குட்டுவதுமே செய்து வருகின்றார்.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்குகின்றார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு வேண்டுமானால் தனியாக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து அவருக்கு தேவையான திருத்தங்களை உள்வாங்கிக்கொண்டு செயற்படலாம், ஆனால் எமது கட்சியின் பயணத்தை தடுக்க எமது காலை வாரவேண்டாம் என தெரிவித்துள்ளார்.

“ரிஷாட் எம்.பியின் வீட்டில் பணிபுரிய முடியாது என மகள் இறுதியாக கூறினாள்.” – ஹிஷாலினியின் தாய் !

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த இளைஞர் ஒருவர், தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி வருகிறார் என்று தனது மகள் தொலைபேசியூடாக தனக்கு தெரிவித்ததாக உயிரிழந்த ஹிஷாலினியின் தாயாரான ஆர்.ரஞ்சினி தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைத் தெரிவித்தார்.

தான் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காகவே ஹிஷாலினி, ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு பணிப் பெண்ணாக சென்றார் என்றும் அவரது தாயார் ரஞ்சினி குறிப்பிட்டார்.

ரிஷாட் எம்.பியின் வீட்டிலுள்ள இளைஞர் ஒருவர் தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி வருவதாக, தனது மகள் தொலைபேசியூடாக தெரிவித்துக் கொண்டிருந்தபோது, தனது மகளிடமிருந்து தொலைபேசியைப் பறித்த அந்த இளைஞர், ரிஷாட் பதியூதீனின் மனைவியை ஹிஷாலினி எதிர்த்துப் பேசுகிறார் என்று தன்னிடம் கூறியதாக ஹிஷாலினியின் தாயார் தெரிவித்தார்.

தனது மகளை அடிக்க வேண்டாம் என ரிஷாட் பதியூதீனின் மனைவியிடம் தான் கேட்டுக்கொண்டதாகவும் ரிஷாட் எம்.பியின் வீட்டில் பணிபுரிய முடியாது என்று தனது மகள் இறுதியாக தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

கையில் இருந்த வெற்றி வெற்றி வாய்ப்பை தவறவிட்ட இலங்கை – தொடரை வென்றது இந்தியா !

இலங்கை அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில், சரித் அசலங்க 65 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 276 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.
கடந்த போட்டியில் அசத்திய பிரித்வி ஷா (13), ஷிகர் தவான் (29), இஷான் கிஷன் (1) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 12 ஓவரில் இந்தியா 65 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட் இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு மணீஷ் பாண்டே உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடி 50 ஓட்டங்கள்  சேர்த்தது.  மணீஷ் பாண்டே 37 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ் 53 ஓட்டங்களில் வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்தார்.  குருணால் பாண்ட்யா 35 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் 193 ஓட்டங்களுக்கு 7 இலக்குகளை இழந்து இந்தியா தத்தளித்தது.
8வது இலக்குக்கு ஜோடி சேர்ந்த தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஜோடி நிதானமாக ஆடியது. சாஹர் 66 பந்துகளில் அரை சதமடித்தார். இந்த ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், இந்தியா 7 இலக்கு இழப்புக்கு 277 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
தீபக் சாஹர் 69 ஓட்டங்களுடனும், புவனேஷ்வர் குமார் 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 84 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய இந்திய அணி 2-0 என்ற அடிப்படையில் ஒரு நாள் சர்வதேச தொடரை கைப்பற்றியது.

“தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டி காட்டுகின்றார்கள்.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டியைக் காட்டித் தங்களுடைய போலி அரசியலை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக பிரதான எதிர்க் கட்சிகளினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக நேற்று(20.07.2021) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உள்ளூர் உற்பத்திகளில் சார்ந்திருக்கும் பொருளாதாரத்தினை உருவாக்கும் வகையிலே கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றது.

கடலட்டை போன்ற நீர்வேளாண்மைச் செயற்பாடுகளை வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் விஸ்தரித்து, அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 40,000 நேரடி வேலை வாய்ப்புக்களையும் சுமார் 200 பில்லியனுக்கும் மேற்பட்ட அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்வதையும் இலக்காக கொண்டு செயற்பட்டு வருகிறது.

எரிபொருள் விலையேற்றம் என்பது அமைச்சர் உதயகம்மன்பிலவின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல. இந்தத் தீர்மானம் தற்போதைய அரசாங்த்தின் கூட்டுத் தீர்மானமாகும். எனவே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது நேரத்தையும் மக்களின் வரிப் பணத்தினையும் வீண் விரயமாக்கும் செயலாகும்.

ஒரு நாட்டின் எரிபொருள் விலையேற்றமானது, அந்நாட்டின் அனைத்துப் பொருட்களினதும் விலையேற்றத்துக்குக் காரணமாகும் என்பதை நான் புதிதாகக் கூறித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. எமது நாடு இன்று பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடானது எமது நாட்டுக்கு மாத்திரம் நிகழ்ந்துள்ளதொரு நிலையல்ல.

கொரோனா அனர்த்த நிலை காரணமாக முழு உலகமே இன்று பொருளாதார நிலையில் பாரிய பாதிப்புகளை கண்டு வருகின்றன. கடந்த ஆட்சியின் தூர நோக்கற்ற பொருளாதார கொள்கையானது எமது நாட்டு கஜானாவை துடைத்து வைத்திருந்த நிலையில்தான் நாம் இந்த கொரோனா அனர்த்தத்திற்கும் முகங் கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

இத்தகைய நிலைமைகளின் முன்பாக எமது மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற சந்தர்ப்பத்தில், எரிபொருளின் விலையேற்றமானது மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதையைப் போன்றதாகிவிட்டது என்பதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

அதேநேரம், எரிபொருள் விலையேற்றம் காரணமாக எமது கடற்றொழிலாளர்கள் தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்தையும் இந்த நாட்டின் கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அதேவேளை, மாண்புமிகு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சர் உதயகம்மன்பில ஆகியோருடன் கலந்துரையாடி 35 ரூபாயினால் அதிகரிக்கப்பட இருந்த மண்ணெண்ணையின் விலையை 7 ரூபாயினால் மாத்திரமே அதிகரிக்கச் செய்துள்ளோம். இலங்கையானது எரிபொருளுக்கென மிக அதிகளவிலான அந்நிய செலாவணியை செலவிடுகின்ற ஒரு நாடு மட்டுமல்ல, எரிபொருள் மூலமாக போக்குரத்து சேவைகள், மின்சார உற்பத்தி, கைத்தொழில் நிலையங்கள் போன்றவற்றை செயற்படுத்துகின்ற ஒரு நாடாகவும் உள்ளது.

இறக்குமதி மீது தங்கியிருக்கின்ற எமது நுகர்வுக் கலாசாரத்தை உற்பத்திகள் மீது தங்கியிருக்கக் கூடிய நுகர்வுக் கலாசாரமாக மாற்றியமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனம் முதற்கொண்டு, இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் வரை இந்த நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தையே வலியுறுத்திள்ளன. அதனையே நாம் செயற்படுத்தி வருகின்றோம்.

கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில், இயன்றளவில் கடற்றொழிலையும் நன்னீர் சார்ந்த வோண்மைத் துறைகளையும் மேலும் மேலும் பரவலாக வளர்த்தெடுத்து உற்பத்திப் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கின்ற நடவடிக்கைகளை இடைவிடாது மேற்கொண்டு வருகின்றேன்.

சாதிக்க துணிந்தவனுக்கு சமுத்திரம் கூட இடுப்பளவு நீராகும். போதிக்க மட்டும் தெரிந்தவனுக்கு இடுப்பளவு நீரும் சமுத்திர நீராகவே தென்படும். கடந்த ஆட்சிக்கு நல்லாட்சி என்று பெயர் சூட்டி தமிழ் மக்களின் தலைகள் மீது மிளகாய் அரைத்தவர்கள் எதை சாதித்தார்கள்? அடிக்கல் நாட்ட வந்த ஆட்சியாளர்களை கண்டவுடன் குனிந்து கும்பிட்டு பல்லிளித்து மட்டும் நின்றார்கள். ஒவ்வொரு வரவு செலவு திடத்தை ஆதரித்து வாக்களிக்கும் போதும் பணப்பெட்டிகளை வாங்கிக்கொண்டு பெட்டிப்பாம்புகளாக கைகட்டி அடங்கிக்கிடந்தார்கள்.

இந்தவிறகுக் கட்டை விடுதலை வீரர்கள், கிளிநொச்சி புலிநொச்சியாக இருந்த காலத்தில் 75 கள்ள வாக்குகளைப் போட்டதாக ஒப்புக்கொண்டார்கள். அவ்வாறான ஒரு அரசியல்வாதியாக நான் ஒருபோதும் எமது மக்களை ஏமாற்றப் போவதில்லை.

அந்தவகையில், அனைத்து உற்பத்தித் துறைகளும் மேலோங்கும் நிலை விரைவில் ஏற்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

அதேநேரம், மாற்று எரிபொருட்கள் தொடர்பிலும் எமது அரசு அதிக அவதானம் செலுத்தி வருகின்றது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக எமது நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுதான் வருகின்றன. கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் மூன்று தடவைகள் அங்கு எரிபொருள் விலை ஏற்றப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில் இந்தியா பெற்றோலிய எரிபொருள் மற்றும் உள்நாட்டு எதனோல், உயிரி இயற்கை எரிவாயு திரவ இயற்கை எரிவாயு மற்றும் ஹைட்ரஜன் எரிபொருட்கள் அடங்கிய இயற்கை எரிபொருளைக் கொண்ட கலப்பு பிளக்ஸ் இயந்திரங்களின் பாவனையை வாகனங்களுக்கென ஊக்குவித்து வருகின்றது.

இந்த முறைமையானது தற்போது அமெரிக்கா, கனடா, பிரேசில் போன்ற நாடுகளில் பாவனையில் உள்ளது. அவை தொடர்பாகவும் நாம் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடத்திட்டங்களை முடிக்காமல் பரீட்சையை வைப்பீர்களா..? – சஜித் பிரேமதாச கேள்வி !

முழுமையான பாடத்திட்டங்கள் நிறைவடையாத நிலையிலும் ஒன்லைன் கற்றலில் சிக்கல்கள் காணப்படும் சூழலிலும் பரீட்சை குறித்து ஒரு முடிவை எவ்வாறு எட்டினீர்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் உயர்தர மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை சில மாதங்களுக்குள் முடிக்க முடியுமா..?  என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.

பாடத்திட்டங்களை முடித்த பின்னர் பரீட்சைகள் குறித்து முடிவு எட்டுவதே புத்திசாலித்தனமானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தடுப்பூசியை மாணவர்களுக்கு வழங்குவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லாத நிலையில் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம் என்றும் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.

“மலையக சிறுமி இறப்பு விடயத்துக்கு அதிக முக்கியத்துவம் வேண்டாம்.” – அமைச்சர் சரத் வீரசேகர

மலையகச் சிறுமியின் மரணம் குறித்த விசாரணைகளுக்கு ரிஷாட் பதியுதீன் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “கடந்த வாரம் மலையகச் சிறுமி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிலே எரியுண்டு மரணித்திருக்கிறார்.

பொறுப்புவாய்ந்த ஒரு கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், சமூகத்தை வழிநடத்துபவர் என்ற ரீதியில் மலையகச் சிறுமியின் மரணம் குறித்த விசாரணைகளுக்கு ரிஷாட் பதியுதீன் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே நேரத்தில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த 16 வயதான, ஜூட் குமார் இஷாலினி என்ற சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இந்த விடயம், சிறுபான்மையினரை உள்ளடக்கியதாக இருப்பதால், இந்த விடயம் தொடர்பில், அதிகமாக விளம்பரப்படுத்தப்படக்கூடாது, குறிப்பாக அரசியல் மயமாக்கப்படக்கூடாது. அளவுக்கு அதிமான முக்கியத்துவத்தை வழங்கவேண்டாம்  எனவும்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

“நாடு இப்போது நான்காவது அலையின் விளிம்பில் உள்ளது.” – மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை !

கொரோனா வைரஸின் நான்காவது அலையின் ஆரம்பத்தை இலங்கை நெருங்கியுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அச்சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் ,

மேலும் மக்கள் தொகையில் 8% பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசிகளில் மட்டும் நம்பிக்கை வைப்பதன் மூலம் முன்னேற முடியாது என்றும் குறிப்பிட்டார்.

டெல்டா வைரஸ் மாறுபாடு வேகமாக பரவி வருவதாகவும், நாடு இப்போது நான்காவது அலையின் விளிம்பில் உள்ளது என்றும் பத்மா குணரத்ன சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த காலகட்டத்தில் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நான்காவது அலையைத் தடுக்கவும் பொதுமக்களும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.