செய்திகள்

செய்திகள்

செய்திகள்

A-9 தனியார் வாகனங்கள் இன்று முதல் பாதுகாப்பு அனுமதி பெறத் தேவையில்லை

buss.jpgகொழும் பிலிருந்து யாழ். நகருக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கும் ஏ-9 பாதையூடாக பயணம் மேற்கொள்ளும் பொது மக்களின் வாகனங்கள் இன்று திங்கட்கிழமை முதல் எந்தவித பாதுகாப்பு அனுமதியும் பெறத்தேவை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கில் இருந்து கொழும்பு வரும் வாகனங்கள் எந்தவித பதிவுகளையோ அல்லது அது தொடர்பான நடைமுறைகளையோ மேற்கொள்ளாமல் பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் பஸில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அனுமதி (கிளியரன்ஸ்) பெறும் நடைமுறை கடந்த மாதம் முழுமையாக நீக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் ஏ 9 பாதையூடாக சுதந்திரமாகப் பயணம் மேற்கொண்டு வந்தனர். பொதுமக்கள் அரச போக்குவரத்து சேவையினூடாக இதுவரை காலம் சென்று வந்தனர்.  ஏ-9 பாதை ஊடாக சொகுசு போக்குவரத்து சேவையும் நடத்தப்பட்டு வந்தது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ஏ-9 பாதையூடாக செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டு இருந்தது மதவாச்சி சோதனைச் சாவடியூடாக தனியார் வாகனங்களும் வவுனியா வரை செல்லலாம் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஏ9 பாதையூடாக தனியார் வாகனங்களிலேயே பொதுமக்கள் சென்று வரலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏ-9 பாதையூடாக இராணுவத்தினரின் தொடர் அணியுடனேயே இந்த பொதுமக்களின் வாகனங்களும் அழைத்துச் செல்லப்படவுள்ளன.

மலையக மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த தற்போதைய அரசு முன்வந்துள்ளது.- அமைச்சர் சந்திரசேகரன்

chandirasekaran.jpgமலையக மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களது சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தவும் பல அடிப்படை கோரிக்கைகளை பிரதான அரசியல் கட்சிகளிடம் முன்வைத்ததையடுத்து இக் கோரிக்கைகளை தற்போதைய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதனை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடைமுறைப்படுத்தவும் இணங்கியிருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் நேற்று (20) ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சியின் கூட்டத்தில் பேசும்போது கூறினார்.

பசில் எம்.பியும் பங்குகொண்ட இக் கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசியபோது மேலும் கூறியதாவது, மலையக மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவும் மலையக மக்களின் சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தவும் பல அடிப்படை கோரிக்கைகளை பிரதான அரசியல் கட்சிகளுக்கு முன்வைத்தோம். ஜனாதிபதி வேட்பாளர்களைப் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்களும் அர்த்தமுள்ள அரசியல் பார்வையும் தமிழ் மக்களுக்கு இருந்தாலும் மலையக மக்களின் தேவைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே நாம் எதையும் சாதிக்க முடியும்.

எவர் ஆட்சி அமைத்தாலும் அவர்கள் மூலமே மலையக மக்களின் அபிலாஷை களை நிறைவேற்ற முடியும் என்பதே யதார்த்த நிலையாகும். இந்த நிலைப் பாட்டை அடித்தளமாகக் கொண்டுதான் மலையக மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தலை கவனிக்கின்றது. எமது கோரிக் கைகளை தற்போதைய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதோடு குறிப்பிட்ட காலை வரையறைக்குள் அதனை நடைமுறைப்படுத்தவும் இணங்கியிருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளை மாற்றி சொந்தக் காணியில் தனித்தனி வீடுகளில் வாழ்கின்ற மாற்றத்தை ஏற்படுத்தி லயன் முறை வாழ்க்கையிலிருந்து நமது மக்களை மீட்டெடுக்க வேண்டும்.

மலையக இளம் சந்ததியினர் மத்தியில் பூதாகரமாக உருவாகி வரும் வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தியாக வேண்டும். மலையக சமூகத்தை பொருளாதார ரீதியில் மேம்படுத்த தொழில் முயற்சிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

பின்தங்கிய சமூகமாக இருக்கின்ற நமது சமூகத்தை தரமுயர்ந்த சமூகமாக மாற்றுவதற்கு சகல வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதிகார பரவலாக்களில் மலையக மக்களும் இணைந்துகொள்ளும் விதத்தில் புதிய பிரதேச செயலகங்களும் போதிய உள்ளூராட்சி சபைகளும் ஏற்படுத்தப்படுவதோடு நமது மக்கள் சனத் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பாராளுமன்றம் தொடங்கி சகல ஆட்சி சபைகளிலும் எமது பிரதிநிதித்துவம் உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும். அவசரகால தடைச் சட்டத்தின் கீழும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முடிந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அப்பாவி தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்.

அந்த சட்டத்தின் 23ம் விதியை நீக்குவதன் மூலம் தற்போது இன்னல்களுக்கு உள்ளாகி வரும் தமிழர்களுக்கு சுதந்திர வாழ்வுரிமையை ஏற்படுத்தியாக வேண்டும். புதிய தொழில் நியமனங்களிலும் பதவி, தரம் உயர்த்தப்படுதலும் பின் தங்கிய சமூகம் என்ற ரீதியில் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களுக்கு விசேட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டும். மலையக மக்களுக்காக நுவரெலியா மாவட்டத்தில் தனியான தமிழ் பல்கலைக் கழகம் ஒன்று அமைக்கப்படல் வேண்டும்.

இத்தகைய கோரிக்கைகளில் நாம் வெற்றி பெற்றால்தான் ஏனைய சமூகங்களுக்கு நிகரான எமது சமூகத்தையும் உறுமாற்ற முடியும். இந்த தெளிவோடும் உறுதியோடும் ஜனாதிபதி தேர்தலில் அரசோடு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம்.

யுத்த வெற்றிக்கு வழிகாட்டிய தலைமைக்கு சவால் விடமுடியாது – கோத்தாபய ராஜபக்ஷ

gotabaya-rajapaksha.jpgமுப்படை யினருக்கு தேவையான தலைமைத்துவத்தை வழங்கி, உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்கு சிறப்பாக முகம் கொடுத்து யுத்தத்தை வெற்றிகொள்ள வழிகாட்டிய ஜனாதிபதியின் தலைமைத்துவத்துக்கு எவரும் சவால்விட முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தாய் நாட்டுக்காக உயிர் நீத்த சிங்க ரெஜிமன்ட்டைச் சேர்ந்த படைவீரர்களை கெளரவிக்கும் 21 வது நினைவுதின வைபவம் அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமன்ட் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் விசேட செய்தியை இராணுவத் தளபதி வாசித்தார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்காகவும், இறைமைக்காகவும் உயிரை பணயம் வைத்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானத்தின் கதவுகளை திறப்பதற்காக பங்களிப்பு செய்த படைவீரர்களை கெளரவிப்பதில் மகிழ்ச்சிய டைகின்றோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவம், மற்றும் வழிகாட்டலின் மூலம் முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் பலம், தைரியம், அர்ப்பணிப்பு காரணமாக 30 வருட காலம் நிலவிய பயங்கரவாத யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவர முடிந்தது.

முப்படையினர் மற்றும் பொலிஸாரை பலப்படுத்தி 80 ஆயிரமாக இருந்த இராணுவத்தின் ஆளணி பலத்தை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கடந்த மூன்று வருட காலத்திற்குள் 2 இலட்சத்து 20 ஆயிரமாக அதிகரித்ததுடன் களமுனையிலுள்ள தளபதிகளுக்குத் தேவையான ஆளணியையும் பெற்றுக்கொடுத்தார்.

படையினருக்கும், களமுனைக்கும் தேவையான நவீன ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் வளங்களை பெற்றுக் கொடுத்து எந்தவித வெளிநாட்டு சக்திகளுக்கும் தலைசாய்க்காது செயற்பட்ட ஜனாதிபதியின் உன்னதமான தலைமைத் துவத்தை கெளரவத்துடன் நினைவுகூர வேண்டும்.

இந்த யுத்தத்தை வெற்றிபெற முடியாது என்பதே வெளிநாட்டு நிபுணர்களினதும், தலைவர்களினதும் கருத்தாக இருந்தது. யுத்தக்கள வெற்றிகளை அவமதித்தவர்களும், இந்த நாட்டில் இருந்தனர். இதனையும் பொருட்படுத்தாது மனோ லிமையுடன் தலைமைத்துவத்தையும் கட்டளையிடும் தளபதிகளுக்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும், உறுதியையும் ஜனாதிபதி வழங்கினார்.

1987 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற வடமராட்சி யுத்தத்தை இந்த இடத்தில் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன். யுத்தவெற்றிகள் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த போதிலும் சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாமலும், வெளிநாட்டு அழுத்தங்கள் காரணமாகவும் யுத்தம் இடையில் நிறுத்தப்பட்டது.

ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு வெளிநாடுகளில் பேச்சுவார்த்தை நடத்தி பிரபாகரனுக்கு தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அன்றிருந்த அரசியல் தலைமைத்துவம் நடவடிக்கை எடுத்ததை எவரும் மறக்கவில்லை. ஆனால் உயிரை பணயம் வைத்து முன்னோக்கிச் சென்ற உங்களது பிள்ளைகள், கணவன்மார்கள், தந்தையர்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யோசிக்கவில்லை.முப்படையினரின் நலன்கள், மோதலுக்கு தேவையான வளங்கள் தலைமைத்துவம் இல்லாமையே இந்த யுத்தம் இதுவரை காலம் நீடிப்பதற்குக் காரணமாக இருந்தது.

தரைவழி பாதுகாப்பை இராணுவத்தினரும், வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் ஆயுதங்கள் புலிகளின் கரங்களை சென்றடையாமல் அவற்றை அழித்தொழிக்கும் பணியை கடற்படையினரும், நவீன விமானங்களை பயன்படுத்தி எதிரிகளின் தளங்களை விமானப்படையினர் அழித்தும் சிறப்பாக ஒத்துழைப்பை வழங்கினர் என்றார்.

தற்காலிக அடையாள அட்டை வழங்கல்: – ஜனவரி 21 வரை விண்ணப்பம் ஏற்கப்படும்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்த மக்களுக்கும் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கும் தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனவரி 21ம் திகதி வரை தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை மறுத்த தேர்தல் திணைக்களம் சகல தரப்பினருக்கும் வாக்களிக்கத் தேவையான ஒழுங்குகளை தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி.சுமணசிறி கூறினார்.

சுமார் 88 வீதமான மக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதோடு, எஞ்சியவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கவும் தற்காலிக அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கிராம சேவகர்களினூடாக தற்காலிக அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கும் ஏனைய பிரதேசங்களில் உள்ள வாக்காளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதம மந்திரியாக ஆட்சிசெய்ய எண்ணியுள்ளேன்: – ரணில்

ranil.jpgஅடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் தாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமமந்திரியாக செயற்பட எண்ணம் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் இதற்கு வாய்ப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவானால் மூன்று விடயங்களை நிறைவேற்றுவது குறித்து முன்னுரிமை கொடுக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டுவது, நாடாளுமன்ற அரசாங்க முறை, மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதம மந்திரிமுறை என்பன அதில் உள்ளடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

‘இலங்கை மீனவர்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை’

இந்திய கடல் எல்லைக்குள் காணாமற்போன இரண்டு இலங்கை மீனவர்கள் குறித்தும் இதுவரை எவ்விதத் தகவல்களும் கிடைக்கவில்லையென கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் அத்துல செனரத் நேற்றுத் தெரிவித்தார்.

கடந்த இரு தினங்களாக கடலில் ஏற்பட்ட வழமைக்கு மாறான கொந்தளிப்பின் காரணமாக இந்திய கடல் எல்லைக்குள் நின்றிருந்த இலங்கை மீனவர்கள் படகுடன் காணாமற் போயுள்ளனர். இவர்களைத் தேடும் பணி அந்நாட்டின் கடற் படையினரின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அலிஸாஹிர் மெளலானா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பு

ali.jpgஐ.தே.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானா நேற்று நண்பகல் அலரிமாளிகை சென்று  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடினார்.. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க அலிஸாஹிர் மெளலானா தீர்மானித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் விசேட வீதிச் சோதனைகள்

தேர்தல் காலத்தில் விசேட வீதிச் சோதனைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக தேர்தல் நடவடிகைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ண நேற்றுத் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இதற்கென அமைக்கப்பட விருக்கும் விசேட சோதனைச் சாவடிகளினூடாக போக்குவரத்திலீடுபடும் வாகனங்கள் சோதனைக்குட் படுத்தப்படுமெனவும் அவர் கூறினார்.

தேர்தல் வேட்பாளர்களுக்கோ கட்சிகளுக்கோ அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான சட்டத்துக்கு முரணான போஸ்டர்கள், கட்அவுட்கள் கொண்டு செல்லல், பிரசாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையிலான குண்டர்களின் செயற்பாடுகள், ஆயுதங்கள் கடத்தல் போன்றவற்றை தடுக்கும் முகமாகவே வீதிச் சோதனைகள் முன்னெடுக்கப்பட விருப்பதாகவும் கூறினார்,

இந்திய அணிக்கு இஷாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக்

ms-dhoni.bmpஇலங்கை அணிக்கு எதிராக அடுத்து நடக்க உள்ள இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் இஷாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்தியா வந்துள்ள இலங்கை அணி 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது.

நாக்பூரில் நடந்த போட்டியில் இலங்கை வெற்றிபெற தொடர் 1-1 என சமநிலையை எட்டியுள்ளது. மூன்றாவது போட்டி இன்று ஒரிசாவில் உள்ள கட்டாக்கில் நடக்கிறது. நான்காவது போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க உள்ளது. இவ்விரு போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தமிழக வீரர் தினேஷ்கார்த்திக் மற்றும் இஷாந்த் சர்மா புதிதாக சேர்க்கப்பட்டனர். தடை விதிக்கப்பட்டுள்ள டோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயற்படுவார்.

பன்றிக் காய்ச்சலால் அவதிப்பட்ட ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதில் இஷாந்த் சர்மா வாய்ப்பு பெற்றுள்ளார். விரல் காயம் மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள யுவராஜ் அணியில் நீடிக்கிறார். அடுத்து வரும் போட்டிகளில் இவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான மூன்று, நான்காவது போட்டிக்கான இந்தியா அணி: செவக் (தலைவர்), காம்பிர், சச்சின், யுவராஜ், தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன், ஜாகிர் கான், நெஹ்ரா, இஷாந்த் சர்மா, விராத் கோஹ்லி, சுதிப் தியாகி, பிரவீண் குமார், பிரக்யான் ஓஜா.

காலநிலை சீர்கேடால் சுரங்கப்பாதை ரயில் சேவைகள் இடை நிறுத்தம் – லண்டன், பிரான்ஸ், பெல்ஜிய பயணிகள் அவதி

காலநிலை சீர்கேடு காரணமாக சுரங்கப்பாதையினூடான ரெயில் சேவைகள் சீர்குலைந்தன. இதனால் சுமார் இரண்டாயிரம் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாக நேர்ந்தது. குறித்த நேரத்துக்கு தங்கள் இடங்களைச் சென்றடைய முடியாது போனதால் ரெயில் நிலையங்களில் இரவைக் கழிக்க நேர்ந்தது. லண்டன், பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய இடங்களுக்கான சுரங்கப்பாதை ரெயில் சேவை கடும் குளிர் காரணமாக சென்ற சனிக்கிழமை சீர்குலைந்தன.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை ஐந்து ரெயில்கள் இயங்க முடியாத நிலைக்கு வந்தன. இதனால் லண்டன், பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நகரங்களுக்கான சுரங்கப் பாதை ரெயில் சேவைகள் சீர்குலைந்தன.

பயணிகள் இரவை ரெயில் நிலையங்களில் தொலைக்காட்சிகளைப் பார்த்துக் கழிக்க வேண்டியேற்பட்டது. சில இடங்களில் ஆங்கில ஒளிபரப்புகள் இடம்பெறவில்லையென பயணிகள் புகார் தெரிவித்தனர்.

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலமாகையால் லண்டன், பிரான்ஸ், பெல்ஜிய ரெயில் சேவைகள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. கடும் குளிரான கால நிலையால் ரெயில் சேவைகள் சில ரத்துச் செய்யப்பட்டன.

பிரதான சேவையில் ஈடுபட்ட ரெயில்களில் ஐந்து இயங்க முடியாதளவுக்குப் பழுதடைந்தன. இது மாத்திரமன்றி விமான சேவைகளும் மோசமான பனிப் பொழிவால் தடைப்பட்டன. படகுகள் போக்குவரத்தும் வெள்ளிக்கிழமை தடைப்பட்டன.

தற்போது ரெயில், விமான சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடங்கலுக்கு வருந்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நஷ்டஈடும் அறிவிக்கப்பட்டுள்ளது.