தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வு ஒன்றைக் காணக்கூடிய வகையில் தாம் முன்வைக்கவுள்ள யோசனைகள் தொடர்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளனர்.
இந்திய அரசின் ஆலோசனையுடன் ஈழத் தமிழருக்குரிய அரசியல் தீர்வு யோசனை ஒன்றைத் தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தயாரித்து வருகின்றது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தயாரிக்கப்படும் உத்தேச யோசனைகள் குறித்து தமிழ்க் கட்சிகளுடனும் முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுக்கள் நடத்தி கருத்தொற்றுமையுடன் ஒட்டுமொத்தமாக ஒரேயோசனையாக முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் .
தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையில் அந்த யோசனை அமையும். அந்த மக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளுடன் ஆராய்ந்தே யோசனை முன்வைக்கப்படும் என்றும் அவர் விவரித்துள்ளார் .
தமிழ் பேசும் சகல தரப்பினரும் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிரந்தர தீர்வை காணக்கூடிய வகையில் உத்தேசயோசனை அமையவேண்டும் என்பதே எமது எண்ணம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.