லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்ட்ரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நாட்வெஸ்ட் ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் பூவா-தலையா வென்ற இங்கிலாந்து அணி, ஆஸ்ட்ரேலியாவை பேட் செய்யப் பணித்தது.
ஆஸ்ட்ரேலிய அணியின் துவக்க வீரர்களாக ஷேன் வாட்சன், பெய்ன் களமிறங்கினர். இதில் பெய்ன் ஓட்டங்கள் எடுக்காமல் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய கேமரூன் வொய்ட், ஷேன் வாட்சனுடன் இணைந்து நிதானமாக விளையாடினார். இந்த இணை 2வது விக்கெட்டுக்கு 82 ஓட்டங்கள் சேர்த்தது.
வாட்சன் 46 ஓட்டங்களிலும், வொய்ட் 53 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் 45 ஓட்டங்களும், மைக் ஹஸ்ஸி 20 ஓட்டங்களும், ஃபெர்கூசன் ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களும், ஹோப்ஸ் ஆட்டமிழக்காமல் 18ஓட்டங்களும் எடுத்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் ஆஸ்ட்ரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் பால் கோலிங்வுட் 2 விக்கெட்டுகளும், சைடு பாட்டம் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து வெற்றி பெற 261 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி துவக்கத்திலேயே தடுமாறியது. அணித்தலைவரும், துவக்க வீரருமான ஆண்ட்ரூ ஸ்டிராஸ் 12 ஓட்டங்களில் பிரெட்லீ பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ரவி போபாரா 49 ஓட்டங்கள் எடுத்தார்.
முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய மேத்யூ ப்ரியார் 28 ஓட்டங்களும், ஷா 40 ஓட்டங்களும், கோலிங்வுட் 23 ஓட்டங்களும், லூக் ரைட் 38 ஓட்டங்களும், ரஷித் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களும், பிராட் 2 ஓட்டங்களும், ஸ்வான் 4 ஓட்டங்களும், சைடுபாட்டம் ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களும் எடுத்தனர்.
இன்னிங்சின் கடைசி (50வது) ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை பிராக்கன் வீச, இங்கிலாந்து வீரர் ரஷித் எதிர்கொண்டார். முதல் பந்தில் ஓட்டங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. எனினும் 2வது பந்தில் பவுண்டரி விளாசி ஆஸ்ட்ரேலிய அணிக்கு ரஷித் நெருக்கடி ஏற்படுத்தினார்.
மூன்றாவது பந்தில் ரஷித் ஒரு ஓட்டங்கள் எடுக்க, சைடுபாட்டம் பேட் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். 4வது பந்தில் ஓட்டங்கள் எடுக்கப்படவில்லை. இன்னும் 2 பந்துகள் மேட்டுமே மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து வெற்றி பெற 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
5வது பந்தில் சைடுபாட்டம் இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில், சைடுபாட்டம் ஒரு ஓட்டங்கள் மட்டும் சேகரித்ததால் ஆஸ்ட்ரேலியா 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்கள் எடுத்தது.
ஆஸ்ட்ரேலியா தரப்பில் மிட்செல் ஜான்சன் 3 விக்கெட்டுகளும், ஹாவ்ரிட்ஸ் 2 விக்கெட்டுகளும், பிரெட்லீ, வாட்சன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஆஸ்ட்ரேலிய வீரர் ஃபெர்கூசன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.