செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஒபாமாவின் 2வது பதவிப்பிரமாணம்

us_obama-003.jpgசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் செய்த பிழையால், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அமெரிக்க நேரப்படி புதன்கிழமை இரவு 7.35 மணிக்கு ஜான் வெள்ளை மாளிகையின் மேப் அறையில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை நடந்த பதவியேற்பு விழாவின்போது ‘faithfully’ என்ற வார்த்தை தவறான இடத்தில் உச்சரிக்கப்பட்டு விட்டதால், மறுபடியும் பதவிப்பிரமாணம் எடுத்த நிகழ்ச்சி நடந்துள்ளது. நீதிபதியின் இந்த பிழையால் ஒபாமாவின் அதிபர் பதவி சட்டப்பூர்வமானதா என்ற பிரச்சினை பின்னாளில் வந்து விடக் கூடாது என்பதற்காக இந்த 2வது பதவிப்பிரமாணம் நடந்துள்ளது.

ஆனால், உண்மையில், பதவிப்பிரமாணம் எடுக்காமலேயே அன்றைய தினம் ஒபாமா அதிபராகி விட்டார் (அமெரிக்க சட்டப்படி, பதவியேற்பு தினத்தன்று, பிற்பகல் 12 மணி முதல், அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தானாகவே அதிபராகி விடுவார்) என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவின் 2வது பதவிப்பிரமாணம் குறித்து வெள்ளை மாளிகை வழக்கறிஞர் கிரேக் கிரேக் வெளியிட்ட அறிக்கையில், பதவி்ப்பிரமாண நிகழ்ச்சி எந்தவித பிரச்சினையும் இன்றி முடிந்தது. பொருத்தமான முறையில் அதிபர் ஒபாமா பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அரசியல் சட்டத்திலேயே பதவிப்பிரமாணம் குறித்து தெளிவாக உள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், குழப்பம் ஏதும் இருக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த 2வது பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. 2வது முறை நடந்த பதவிப்பிரமாணத்தையும் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸே செய்து வைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிலாரி அமைச்சரானார்:

இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சராகியுள்ளார் ஹில்லாரி கிளிண்டன். ஒபாமா அதிபராகி விட்டதைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு ஹில்லாரி கிளிண்டனின் பெயரை செனட் சபைக்கு முன்மொழிந்தனர். அதில், 94 – 2 என்ற வாக்குகள் அடிப்படையில்,ஹில்லாரியின் நியமனம் ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹில்லாரி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அவரது கணவரும், முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன் கைகளில் பைபிளைப் பிடித்துக் கொள்ள அதன் மேல் கை வைத்தபடி ஹில்லாரி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

வைகோ – உண்ணாவிரதப் போராட்டம்

22-vaiko.jpgஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ராணுவ உதவிகளைத் தடுப்பதற்கும் பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்றம் கூடும் நாளில் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைத் தீவில் 6 லட்சம் ஈழத் தமிழர்கள், சிங்கள ராணுவத்தின் கோரத் தாக்குதலால் மரணத்தின் பிடியில் சிக்கி உள்ளனர். இடைவிடாத பீரங்கித் தாக்குதல் வேறு. இரவு பகலாக விமானக் குண்டு வீச்சு, அதிலும் உலக நாடுகள் தடை செய்துள்ள கொத்துக் குண்டுகளை வீசுகிறது. நேற்று மட்டும் 37 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். ஜனவரி 7ம் தேதி காஸா பகுதியில் ஒரு கட்டிடத்தின் மேல் இஸ்ரேல் குண்டு வீசியதில் 45 பேர் கொல்லப்பட்டபோது, உலக நாடுகள் அதற்கு எதிர்ப்பாக கடும் கண்டனத்தை தெரிவித்தன. ஆனால் 6 கோடித் தமிழ் மக்களாகிய நாம், 20 கல் தொலைவில் கடலுக்கு அப்பால் படுகொலைக்கு உள்ளாகும் ஈழத் தமிழர்களைக் காக்கக் கதியற்றுப் போனோம்.

தற்போது நடைபெறும் தமிழ் இன அழிப்பு யுத்தத்தை, இந்தியாவின் மத்திய அரசு கொடிய நோக்கத்தோடு திட்டமிட்டு ஊக்குவித்து உதவுகிற மன்னிக்க முடியாத துரோகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்கள் பதறுகின்றன. அங்கமெல்லாம் நடுங்குகிறது. ராஜபக்சே அரசு மூர்க்கத்தனமான இனக் கொலையில் ஈடுபட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ராணுவ உதவிகளைத் தடுப்பதற்கும், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுந்துயரத்தைப் போக்க அனைத்து மட்டங்களிலும் ஆதரவைத் திரட்டவும் பிப்ரவரி 12ம் தேதி இந்திய நாடாளுமன்றம் கூடும் நாளில் டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு அருகே மதிமுக சார்பில் என் தலைமையில் உண்ணாநிலை அறப்போர் நடைபெறும் என்று கூறியுள்ளார் வைகோ.

மீண்டும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

sl-parlimant.jpgஅரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, செயலிழந்துள்ளதாக சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.  ஐக்கியதேசியகட்சியின் முன்வைத்த நம்பிக்கையில்லாப்பிரேரணையை தாம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட வேளையில், ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை என சபாநாயகர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற நீதிமுறைகளையும் பொதுநலவாய நாடுகளின் சட்டமுறைகளையும் கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை தாம் மேற்கொண்டதாக தெரிவித்தார்.

எனினும் தேவையேற்படின் ஐக்கிய தேசியக்கட்சி, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணையை மீண்டும் முன்வைக்கலாம் என அவர் தெரிவித்தார். இதன் போது தமது இருக்கையில் இருந்து எழுந்த எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இன்றைய(21) தினத்திற்குள் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணையை முன்வைக்க தமது கட்சி நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்.

இதன் படி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐ.தே.கட்சி நேற்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் டம்மிக்கே கித்துல்கொடவிடம் கையளித்தது. இந்தப் பிரேரணையில் எம்.பிக்கள் ஜோசப் மைக்கல் பெரேரா, அகிலவிராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, ஆர்.குணசேகர, ஜயலத் ஜயவர்த்தன ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தமிழ் மக்களின் பேரவலங்கள் தொடர்பில் பார்வையிடுவதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. சம்பந்தன்

sampthan.jpgவன்னியில் உள்ள தமிழ் மக்கள் அனுபவிக்கும் பேரவலங்களை நேரில் சென்று பார்ப்பதற்காக சுயாதீனக்குழுவொன்றை அங்கு அனுப்புமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனே இந்த வேண்டுகோளை விடுத்தார்.அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு :-

வன்னியில் தொடரும் யுத்தம் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பட்டினியுடன் மரநிழல்களின் கீழ் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.யுத்தம் ஒன்று இடம்பெறும்போது மக்கள் இடம்பெயர்வது மக்களின் விருப்பம். ஆனால், அவர்களைப் பலவந்தமாக வெளியேற்ற முடியாது. ஆனால், இப்போது நடப்பது என்ன? வன்னி மக்களின் வீடுகள் மீது குண்டுகள் போடப்படுகின்றன. அவர்களின் வீடுகள் அழிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்கின்றனர்.

தமிழ் மக்களை இந்த அரசு கால்களின் கீழ் போட்டு நசுக்குகின்றது. தமிழர்களை இந்த அரசு கண்ணியப்படுத்தவேயில்லை. இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் சமமானவர்கள். அவர்கள் சுதந்திரமாக சந்தோசமான வாழ்வை அனுபவிக்க இடம் வழங்கப்பட வேண்டும். ஆனால், இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு அப்படியானதொரு சுதந்திர வாழ்வை வழங்கவில்லை. அடக்குமுறைகள்தான் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன. இந்த அரசு பெரியவர்களை மாத்திரமன்றி சிறிய குழந்தைகளைக்கூட கொன்றொழிக்கின்றது.  காயப்படும் மக்களுக்கு மருத்துவ வசதிகள்கூட வழங்கப்படுவதில்லை. இதைத்தான் தமிழர்களின் விடுதலை என்று அரசு சொல்கிறது.

தமிழர்களின் உரிமைகள் முற்றாக மறுக்கப்படுகின்றன. அவர்கள் மதிக்கப்படுவதேயில்லை. இதுவொரு பாரிய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை. இந்த நிலைமை மோசமாவதற்கு ஜே.வி.பியும் ஒரு காரணம். ஆழிப்பேரலை பொதுக்கட்டமைப்பு மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கை போன்றவற்றை ஜே.வி.பியினர் எதிர்த்தனர். அந்த எதிர்ப்புகள்தான் இந்த நிலைமைக்குக் காரணம். தற்போதைய யுத்தத்தின் உண்மை நிலையை அறியும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், அந்த உரிமையை அரசு தடுத்து வருகிறது. இதனால், உண்மைகள் வெளிவராமல் போகின்றன.

காசாவில் யுத்தம் நடைபெறும் பகுதிகளுக்குள் ஊடகவியலாளர்கள் சென்று வருகின்றனர். அங்கு ஊடகவியலாளர்கள் செல்வதை யாரும் தடுக்கவில்லை. தாக்குதல்கள், இழப்புகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் வெளிவந்தன. இங்கு அந்த நிலைமை இல்லை. அங்கு செல்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை. இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் பத்திரிகைகள் மூலம் பேசப்பட்டாலும் வன்னிப் பகுதியை தனிமைப்படுத்திவிட்டு அரசாங்கத்தினால் முன் செல்ல முடியாது. இவ்விடயத்தில் சர்வதேசத்தை தலையிடுமாறு வேண்டுகின்றோம்.  வன்னியில் உள்ள மக்களின் நிலைமையை இப்போது எம்மால் தெளிவாக அறிய முடியாதுள்ளது. அங்கு அரசசார்பற்ற நிறுவனங்களும் இல்லை. இந்த நிலையில் சர்வதேச சமூகத்தின் சுயாதீன குழுவொன்று அங்கு செல்வது மிக அவசியம் – என்றார்.

காணாமற்போனோர், கைது செய்யப்பட்டோர் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ்

daglas.jpgஅரசியல் காரணங்களுக்காக காணாமற் போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டு இதுவரையில் விடுதலை செய்யப்படாதவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத் திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலும், யாழ். குடாநாட்டிலும் அரசியல் காரணங்களுக்காகக் காணாமற் போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களது உறவினர்கள் பலர் தன்னைச் சந்தித்தும் கடிதங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் பல முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.  அரசியல் காரணங்களுக்காக காணாமற்போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பில் வெறுமனே அறிக்கைகளையும் பட்டியல்களையும் வெளியிட்டு குறுகிய சுயலாபம் கருதிய அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் எவருக்கும் எவ்விதப்பயனும் கிட்டப்போவதில்லை எனவே அரசியல் காரணங்களுக்காக காணாமற் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பில் விரைவில் ஜனாதிபதியை சந்தித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் காரணங்களுக்காக காணாமற் போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களது குடும்பங்கள் பல பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதை நான் நன்கு உணர்ந்து வருகிறேன்.  இக் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதை நன்கு உணர்ந்து வருவதால் இக்குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியில் உதவும் திட்டம் குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி, விசேட அமைச்சரவைப் பத்திரம் மூலம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முல்லைத்தீவு வான்பரப்பில் மர்ம விமானம்

air.jpgமுல்லைத்தீவு வான்பரப்பில் நேற்று முன்நாள் செவ்வாய்கிழமை இரவு 8:30 மணியளவில் அடையாளம் தெரியாத விமானமொன்று உட்பிரவேசித்து சென்றதனால் குழப்பங்கள் தோன்றியுள்ளன. பாக்கு நீரிணைக்கு மேலாக வந்த இந்த விமானம் மீண்டும் அதே பாதையினால் திரும்பி சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பான செய்திகள் இன்றைய இலங்கை சிங்கள, ஆங்கில நாளேடுகளில் பிரதான இடத்தைப் பெற்றுள்ளன.

இந்த மர்ம விமானம் மிகவும் உயரமாக பறந்ததாகவும், கடற்படையினர் விமானத்தை நோக்கி தாக்குதல்களை மேற்கொண்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை எனவும் வான்படை பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு வான்பரப்பில் பிரவேசித்த இவ்விமானம் பிரபாகரனை அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகங்கள் எழுந்தன. எனினும், விமானம் மீண்டும் திரும்பி செல்வதற்கு முன்னர் முல்லைத்தீவு பகுதியில் தரையிறங்கியதா என்பது தொடர்பில் எதுவும் தெரியாதபோதும், அதிக உயரத்தில் பறந்த விமானம் தரையிறங்குவது சாத்தியமற்றது என வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேநேரம், இந்த விமானம் இந்தியாவின் உளவுப் படைக்குச் சொந்தமான விமானமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது. ஏற்கனவே கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட நேரத்தில்கூட  இந்திய உளவு அமைப்பான றோ வின் விமானமொன்று வன்னிப் பகுதியை கண்காணித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விமானம் மிகவும் பிரகாசமான வெளிச்சங்களை கொண்டிருந்ததை கடற்படையினரும் வான்படையினரும் அவதானித்ததாகவும் அது திரும்பிச் செல்லும்போது வெளிச்சங்களின்றி சென்றதாகவும் மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

2006 ஜனவரி முதலாந் திகதி முதல் ஒன்பது ஊடகவியலாளர்கள் கொலை: 27 பேர் தாக்குதல் – அமைச்சர் தினேஷ் குணவர்தன

denees.jpg
ஊடகவியலாளர்கள் ஒன்பது பேர் கடந்த 2006 ஜனவரி முதலாந் திகதி முதல் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அந்தத் திகதி முதல் இற்றைவரை 27 ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதோடு, ஐவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறிய அமைச்சர், இதில் நால்வர் மீட்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஐ. தே. க. உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்வியொன்றுக்குப் பதில் அளித்த அமைச்சர் குணவர்தன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட, தாக்குதலுக்கு உள்ளான சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகக் கூறினார்.

சம்பவங்கள் இடம்பெற்ற பொலிஸ் நிலையங்கள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பணியகம் என்பவற்றில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள யசூசி அகாசி வடக்கு, கிழக்குக்கு நேரடி விஜயம்

yasusi.jpg
இலங்கைக்கான விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாசி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு இலங்கை வந்துள்ளார். இவர் இலங்கையில் தங்கியுள்ள காலங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரோஹித பொகொல்லாகம உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரையும் சந்திக்கவுள்ளார்.

இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கு, கிழக்கு மீட்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் சமாதான முன் னெடுப்புகள் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இலங்கைக்கான விசேட சமாதானத் தூதுவராக நியமிக்கப்பட்டபின் 16 வது தடவையாக இம்முறை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யசூசி அகாசி கிழக்கில் மீட்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி, வடக்கில் வவுனியா உள்ளிட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராயும் வகையில் அப்பகுதிகளுக்கு நேரடி விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக ஜப்பானியத் தூதர உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

சாதனை:ஒபாமாவின் தேர்தல் பிரச்சார புத்தகம்

obama-2001.jpg
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற பராக் ஒபாமா ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்வின்போது பேசிய ஆங்கில பேச்சுக்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு ஜப்பானில் விற்கப்படுகிறது. புத்தக கடைகளில் இந்த புத்தகம்தான் அதிகமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 95 பக்கங்கள் கொண்ட அதன் விலை 550 ரூபாய். கடந்த 2 மாதத்தில் மட்டும் 4 லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. இந்த புத்தகத்துக்கு ஜப்பானிய மொழி பெயர்ப்பும் விற்பனைக்கு இருக்கிறது.

ஜப்பானில் பிரபலமான எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள்கூட ஆண்டுக்கு 10 லட்சம் பிரதிகள்தான் விற்பனை ஆகும். ஆனால், அவற்றை மிஞ்சும் வகையில் ஒபாமா புத்தக விற்பனை சக்கை போடு போடுகிறது. இதற்கு முன் அதிபராக இருந்த புஷ் பேச்சு அடங்கிய புத்தகம்கூட இந்த அளவு விற்பனை ஆகவில்லை. ஜப்பான் அரசியல்வாதிகள்கூட ஒபாமா புத்தகத்தை வாங்கி படிக்கிறார்கள்.

43 வெளிநாட்டு இராஜதந்திரிகள் கிழக்கு முதலமைச்சருடன் சந்திப்பு

cm.jpg43 வெளிநாட்டு இராஜதந்திரிகள் செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை கிழக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்கா, அயர்லாந்து, சைப்பிரஸ், ருமேனியா, துருக்கி, அவுஸ்திரேலியா, ஜப்பான், ஜேர்மன், நியூசிலாந்து, ரஷ்யா, ஹங்கேரி, பாகிஸ்தான், நெதர்லாந்து, ஐஸ்லான்ட், பிரேஸில், சிலி, கிறீஸ், ஆஸ்திரியா இஸ்ரேல் ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். இராஜதந்திரிகள் கிழக்கு மாகாண நிலைவரம் பற்றி முதலமைச்சரிடம் விசாரித்து அறிந்து கொண்டனர்.

முதலமைச்சர் பதிலளிக்கையில், போரினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மாகாணமாக இலங்கையிலேயே கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது. மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான ஒரு சூழலை உருவாக்குவதற்காகவே எமது மாகாண அரசு உழைத்துக் கொண்டிருக்கிறது. அதில் கணிசமான அளவு வெற்றி கண்டு வருகின்றது. எமது மக்களுக்கான அனைத்து அபிவிருத்திகள் பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என்று குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி குறித்து ஆர்வம் காட்டுவது குறித்து இராஜதந்திரிகளுக்கு முதலமைச்சர் நன்றி கூறினார். கலந்துரையாடலில் முதலமைச்சருடன் கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் வி. பி. பாலசிங்கம், முதலமைச்சரின் செயலாளர் எஸ். மாமாங்கராஜா ஆகியோர் பங்குபற்றினர்.