செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஒபாமாவின் திட்டத்துக்கு போப் ஆண்டவர் கண்டனம்

pope_benedict.jpgஅமெரிக்க அதிபராக பதவி ஏற்ற ஒபாமா பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் .இதன் ஒரு பகுதியாக குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை அவர் தீவிரப்படுத்தி வருகிறார். மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் கருக்கலைப்பு, செய்து கொள்ள ஏற்பாடு செய்யும் அமைப்புகளுக்கு அரசு நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்கான உத்தரவில் ஒபாமா கையெழுத்திட்டார்.

புஷ் ஆட்சி காலத்தில் கருக்கலைப்பு செய்ய உதவும் அமைப்புகளுக்கு நிதி உதவி அளிப்பது தடை செய்யப்பட்டு இருந்தது. இப்போது அந்த தடை நீக்கப்பட்டு விட்டது. ஒபாமாவின் இந்த முடிவுக்கு போப் ஆண்டவர் பெனடிக்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போப் ஆண்டவர் சார்பில் வாடிகன் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது. இது வாழ்வு பிரச்சினை. உயிர் பிரச்சினை அனைத்து தரப்பினரின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும். இத் திட்டம் கத்தோலிக்க மத ஈடுபாடு உள்ளவர்களின் முதுகில் குத்துவதாகும். படைக்கப்படும் உயிர்களை முளையிலேயே கிள்ளி எறியும் இந்த படுகொலைக்கு ஆதரவு தெரிவிப்பது வேதனை தரும் விஷயம். இவ்வாறு வாடிகன் தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு நகைக்கடைகளில் பொலிஸார் தேடுதல்; 9 சிறுவர் மீட்பு

கொழும்பு புறக்கோட்டை செட்டியார் தெருவிலுள்ள நகைக்கடைகளில் இடம் பெற்ற தேடுதல் நடவடிக்கைகளின் போது வேலைக்கமர்த்தப்பட்டிருந்த ஒன்பது சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரும் தொழில் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து  வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிமுதல் 2 மணிவரை நடத்திய தேடுதலின் போது குறிப்பிட்ட இந்த சிறுவர்கள் மீட்கப்பட்டதாக கொழும்பு மத்திய குற்றப்பிரிவின் பொலிஸ் அதிகாரியான ஜயவர்த்தன தெரிவித்தார். இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவர்களை மாளிகாவத்தை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ததாக தெரிவித்த அவர், இச்சிறுவர்களின் பெற்றோருக்கு இச்சம்பவம் தொடர்பாக அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த தேடுதலை கொழும்பு மத்திய குற்றப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தயா சமரவீர, பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜயவர்த்தன, பொலிஸ் காண்டபிள்களான திஸாநாயக்க, வாஹித் மற்றும் இணவர்த்தன ஆகியோர் மேற்கொண்டனர்

கிழக்கு முதலமைச்சரின் கோரிக்கையை கொழும்பின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அகாசி உறுதியளிப்பு

yasusi.jpgநேற்று முன்தினம் சனிக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்த ஜப்பானிய விசேட தூதர் யசூசி அகாசி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் கலந்துரையாடினார். கிழக்கு மாகாணத்தில் உருவாகியுள்ள ஜனநாயக சூழலை மேலும் வலுப்படுத்தவும் அபிவிருத்தி வேலைகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் ஜப்பான் அரசாங்கத்தின் பயங்களிப்பு காத்திரமானதாக அமைய வேண்டும் என்று முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஜப்பானிய தூதரிடம் தெரிவித்தார்.

ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியுள்ள கிழக்கு மாகாணத்தில் குறிப்பிடப்பட்ட அபிவிருத்திகளில் முன்னேற்றங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றது. எனினும் ஒரு சல சம்பவங்கள் அவற்றை மூடி மறைக்கும் முயற்சியாக மேற்கொள்ளப்படுவதாகவும் முதலமைச்சர் ஜப்பானிய தூதரிடம் குறிப்பிட்டார்.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். விடுவிக்கப்படும் வடக்கு மாகாணத்தில் ஜனநாயக சூழல் ஏற்படவும் அபிவிருத்தியில் முன்னேற்றம் காணவும் ஜப்பானிய அரசாங்கத்தின் பங்களிப்பு அத்தியாவசியம் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜப்பான் அளித்து வந்துள்ள நிதி உதவிகளுக்கு ஜப்பானிய தூதரிடம் முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். பதினாறு தடவைகளுக்கு மேல் இலங்கை வந்துள்ள தமக்கு தற்போதைய வருகை வித்தியாசமானதொன்றாக அமைவதாக ஜப்பானிய தூதர் அகாசி குறிப்பிட்டார். ஜனநாயக வழிக்குத் திரும்பியுள்ள கிழக்கு மாகாணத்தின் மாகாண நிர்வாகத்துக்குப் பொறுப்பான முதலமைச்சர் மற்றும் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பிரதி நிதிகளைச் சந்திக்கும் வாய்ப்பை தற்போதைய விஜயம் தமக்குத் தந்திருப்பதாகவும் அகாசி கூறினார்.கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக சூழல் நிலவுவது, அதனூடாக சமாதானத்தை வலுவானதாக ஏற்படுத்துவதற்கு உதவும் என்றும் அகாசி கூறினார். 13 ஆவது சரத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதன் அவசியம் பற்றிய கோரிக்கையை கொழும்பில் அரச தலைமைப்பீடத்துடன் நடத்தும் பேச்சுகளின் போது முன்வைப்பதாகவும் அகாசி கூறினார். அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலருடன் ஜப்பானிய தூதர் அகாசி கலந்துரையாடினார். இச்சந்திப்பு 10 நிமிடங்கள் நீடித்தது.

ரி.எம்.வி.பியில் மிகுதியாக இருக்கும் சிறுவர்களை ஐ.நா. சிறுவர் நிதியத்திடம் ஒப்படைப்போம்! -பிரதீப் மாஸ்டர்

அடுத்துவரும் தினங்களில் ரி.எம்.வி.பி. அமைப்பில் மிகுதியாக இருக்கின்ற சிறுவர்களையும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகளிடத்தில் ஒப்படைக்கவுள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் தெரிவித்தார்.

22. 01. 2009 வியாழக்கிழமையன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிலுள்ள சிறுவர்களை ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் முன்னிலையில் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதீப் மாஸ்டர் மேற்கண்டவாறு கூறினார்.

எமது அமைப்புக்கும் அரசாங்கத்துக்கும், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்துக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின்படி எமது அமைப்பிலுள்ள சிறுவர்களை நாங்கள் விடுவித்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க வழிசெய்துள்ளோம் இச்சிறுவர்கள் கடந்தகாலயுத்தம் மற்றும் சுனாமி போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு எமது அமைப்பில் வந்து இணைந்து கொண்டவர்கள். இவர்களை எமது அமைப்பை விட்டு விடுவித்து இவர்களுக்கு சிறந்த வழிகாட்டலை மேற்கொள்வதற்கு எமது தலைமைப்பீடம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இச்சிறுவர்களுக்கு சிறந்த தொழிற் பயிற்சிகளை மேற்கொள்வதுடன் இவர்களுக்கான உரிய முன்னேற்ற வழிகாட்டல்களையும் இச்சிறுவர் நலன்புரி நிலையத்தின் மூலம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அதன்மூலம் பெற்றோர்களுடன் இவர்கள் இணைந்து தமது மகிழ்ச்சியான வாழ்வை கழிக்க முடியும். இச்சிறுவர்களுக்கு அறிவினை புகட்டி கல்வியாளர்களாக மாற்றுவதும் அவசியமாகும் என்றார்.

இவ்வைபவத்தில் நீதியமைச்சின் செயலாளர் சுதத் கம்லத் உரையாற்றுகையில், இன்று விடுவிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் நாட்டின் நலத்திற்காக நற்பிரசைகளாக வாழவேண்டும். எனது பிள்ளைகளைப் போலவே இச் சிறுவர்களையும் நான் பார்க்கின்றேன். நாட்டின் நலனில் அக்கறை கொண்டு சிறந்த நற்பிரஜைகளாக வாழ்வதே இச் சிறுவர்களுக்கு முக்கியமானதாகும்.

இன்று இங்கு திறக்கப்பட்டுள்ள சிறுவர் நலன்புரி நிலையம் இவ்வாறான சிறுவர்களுக்கு சிறந்த வழிகாட்டல்களை மேற்கொள்ளும். இன்றைய இச்சிறுவர்கள் சமூகத்தில் முக்கியமானவர்கள். சிறந்த நற்பிரஜைகளாக இவர்களை மாற்றி எடுப்பதில் நாம் முழுமையான பங்களிப்பை செய்யவேண்டும்

சார்க் நாடுகளின் மின்சக்தி அமைச்சர்கள் மாநாடு

சார்க் நாடுகளின் மின்சக்தி அமைச்சர்களின் மூன்றாவது மாநாடு எதிர்வரும் 28ஆம் 29ஆம் திகதிகளில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ.டி. ஜே. செனவிரத்ன மற்றும் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் வலய மின்சக்தி பாதுகாப்பு திட்டம் மற்றும் மின்சக்தி செயற்திரனை மேம்படுத்தல் என்பன குறித்து ஆராயப்படும். இந்த மாநாட்டில் சார்க் நாட்டு மின்சக்தி அமைச்சர்கள் மின்சக்தித்துறை சார்ந்த நிபுணர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொள்ள உள்ளனர்.

வலய ஒத்துழைப்பினூடாக மின்சக்தி பரிமாற்று திட்டமொன்றை முன்னெடுப்பது மற்றும் இலங்கை – இந்தியா இடையிலான கூட்டு மின்திட்டம் என்பன குறித்தும் இதன்போது ஆராயப்பட உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதி சார்க் மின்சக்தி அமைச்சு செயலாளர்களில் மாநாடும் 29ஆம் திகதி மின்சக்தி அமைச்சர்களின் மாநாடும் நடைபெறும்.

வவுனியா அகதிகள் முகாமை பார்வையிட்டார் யசூசி அகாசி

yasusi.jpg
வவுனியாவிற்கு நேற்று சனிக்கிழமை பிற்பகல் விஜயம் செய்த இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளார்.  நெலுக்குளத்திலுள்ள வன்னி அகதிகள் தங்கியுள்ள முகாமுக்குச் சென்ற அகாசி அங்கு தங்கியுள்ளவர்களைப் பார்வையிட்ட போதும் அகாசியுடன் உரையாட அந்த மக்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. அகாசியின் வவுனியா விஜயம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஹெலிகொப்டர் மூலம் வவுனியாவிலுள்ள இராணுவத் தலைமையகத்திற்கு வந்த அகாசியை படை உயரதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின் அவர் குருமண்காட்டிலுள்ள ஐ.நா.அலுவலகத்திற்குச் சென்று ஐ.நா.அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளார். இதுன்போது வன்னி நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடினார். இதன்பின் அவர் நெலுக்குளதிற்குச் சென்று வன்னியிலிருந்து வந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களிற்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார். அங்கு அவரை மாவட்ட அரசாங்க அதிபரும் சிரேஷ்ட அதிகாரிகளும் சந்தித்துப் பேசினார். இதன் போது அவர் வன்னியிலிருந்து வந்த அகதிகளைப் பார்வையிட்டார்.

புலிகளுக்கு எதிரான போர் 99 வீதம் முடிவுற்று விட்டது. படை நடவடிக்கை அச்சொட்டாக முன்னேற்றம் – கெஹலிய

kkhaliya.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் 99 சதவீதம் முடிவுற்றுள்ளது. இன்னும் ஒரு வீதம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. இவ்வாறு  பாதுகாப்புத்துறைப் பேச்சாளரான அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டம்  குண்டசாலையில் புதிய வர்த்தக நிலையம்  ஒன்றின் கட்டடத்தைத் திறந்து வைத்துபேசுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்ககையில், ஒரு சில சதுர மீற்றர் நிலப்பரப்பே இப்போது விடுதலைப் புலிகள் வசம் உள்ளது. அதையும் இன்னும் சில நாள்களில் எமது பாதுகாப்புப் படையினர் கைப்பற்றிவிடுவர் திட்டமிட்டவாறு வடக்கில்  இப்போது  அச்சொட்டாக படைநடவடிக்கை முன்னேனற்றம் அடைந்து வருகிறது என்றார்.

வன்னி மக்களின் துயர்துடைக்க அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரத்தினம் பெரும் அவலத்திற்குள் சிக்குண்டுள்ள வன்னி மக்களின் துயர்துடைக்க அனைத்து சக்திகளும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வன்னி நிலப்பரப்பில் பயங்கரவாதத்திற்கெதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் யுத்தம் காரணமாக பயங்கரவாதம் ஒழிக்கப்படுகின்றது. பயங்கரவாதம் ஒழிக்கப்படுவதில் இலங்கைப் பிரஜை ஒருவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பயங்கரவாதம் அடியோடு உடைத்தெறியப்பட வேண்டும்.

இதேவேளை, பயங்கரவாத அழிப்பு என்னும் பெயரில் கொழும்பில் ஊடகத்துறை திட்டமிட்டு அளிக்கப்படுவதும், மட்டக்களப்பில் கடத்திக் கொலை செய்யப்படுவதும், குண்டுவைத்து அப்பாவி மாணவர்கள் கொலை செய்யப்படுவதும், வன்னி நிலப்பரப்பில் ஷெல் தாக்குதல் காரணமாக மக்கள் இடம்பெயர்வு, தங்குமிடமின்றிப் பரிதவித்தல் , பட்டினிச்சாவு, குழந்தை தொடக்கம் முதியோர் வரை ஷெல் தாக்குதல்களுக்கு இலக்காகி மரணிப்பதும் அங்கவீனமாக்கப்படுவதும் , கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான பொருளாதாரம் அளிக்கப்படுவதும் , கல்வி முற்றாகப்பாதிப்படைந்து மாணவர்கள் பரீட்சை எழுதமுடியாத நிலை தோற்றுவிக்கப்படுவதும், ஒட்டுமொத்தமாக தமிழின அழிப்பு இடம்பெறுவது உறுதிப்படுத்தப்படுகின்றது.

இப்படிப்பட்ட செயலைச் செய்பவர்களை சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் , பயங்கரவாதச் செயலெனக் கூறுவார்கள். இச்சம்பவத்தைப் பொறுத்தவரையில் எமது அரசும் பயங்கரவாதச் செயலில் இறங்கியுள்ளதா? தமிழினச் சுத்திகரிப்பில் இறங்கியுள்ளதா? எனும் சந்தேகம் சகல சக்திகளுக்கும் தோன்றி உள்ளது.

வன்னியில் உலருணவு கொண்டு சென்ற ஐ.நா.வின் பிரதிநிதிகளையும் வாகனங்களையும் புலிகள் தடுத்தி நிறுத்தி வைத்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். இத்தோடு இது ஒரு பயங்கரவாதச் செயலாகவே கருதப்படுகிறது.

புலிகள் தங்களது பயங்கரவாதச் செயலைக் கைவிட்டு ஜனநாயக சூழலுக்கு வருவதற்கு இன்னும் காலம் போகவில்லை. உயிரழிவுகளைத் தடுக்க வேண்டுமாயின் இலங்கை அரசினூடாகவோ அல்லது ஏனைய சக்திகளினூடாகவோ, ஜனநாயக வழிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

அரசைப் பொறுத்தவரையில் இதுவரை நடந்த யுத்தத்தில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு அழிவுகள் ஏற்பட்டுள்ளன என்பதை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை இறைமை உள்ள அரசு என்ற அடிப்படையில் அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. இதைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வு அவசியமாகும்.இத் தீர்வை முன்வைப்பது அரசின் தலையாய கடமையாகும். இது சர்வதேச அவதானிப்புடன் இடம்பெற வேண்டும். குறிப்பாக இந்தியாவின் பங்களிப்புடன் இடம்பெற வேண்டும்.

வன்னியிலுள்ள மக்களை உடனடியாகக் காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பாகும். வேலியே பயிரை மேயக் கூடாது. இல்லாத பட்சத்தில் சர்வதேசம் தலையிட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும். எனவே, பயங்கரவாதத்தை அழிப்பதற்கும் மக்களை பாதுகாப்பதற்கும், அரசியல் தீர்வை முன்வைப்பதற்கும் சக சக்திகளும் ஒன்றுபட்டு உழைக்க முன்வர வேண்டும்.

மாலைதீவுக்கு ரணில் விஜயம்

images-01.jpgஎதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை அதிகாலை மாலைதீவுக்குப் பயணமானார்.

இது அவரது தனிப்பட்ட விஜயமென்று தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் அவர் நாளை திங்கட்கிழமை இரவு நாடு திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளது.
 

முல்லைத்தீவின் கிழக்கு பகுதியையும் பாதுகாப்பு வலயமாக அறிவிக்க வேண்டும் -அரச அதிபர் ஐ.சி.ஆர்.சி.யிடம் கோரிக்கை

mulli-ga.gifமுல் லைத்தீவு மேற்குப் பகுதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்குப் பகுதியில் 50 வீதமான இடம்பெயர்ந்தவர்கள் உள்ளதனால் அப்பகுதியையும் பாதுகாப்பு வலயமாக்குவதன் மூலம் அங்குள்ளவர்களை பாதுகாக்க முடியுமென முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் உப தலைவியான வலேரியா பெட்டியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு அரச அதிபர் வெள்ளிக்கிழமை மாலை வவுனியா செஞ்சிலுவைச் சங்கப் பிராந்திய அலுவலகத்தில் வைத்து அவரை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மேற்குப் பகுதி பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியான அம்பவன்பொக்கன், முள்ளிவாய்க்கால், மாத்தளன் மற்றும் வளையார்மடம் ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்தவர்களில் 50 வீதமானவர்கள் தங்கியுள்ளனர். இப்பகுதியையும் பாதுகாப்பு வலயமாக்குவதன் மூலம் இங்கு இடம்பெயர்ந்து தங்கியிருப்போரை பாதுகாக்க முடியும்.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்கள் நெருக்கமாகவுள்ளதாலும் வெள்ளப்பாதிப்பு காரணமாகவும் முக்கியமாக குடிநீர் பிரச்சினை குறித்து எடுத்துரைத்ததுடன் மலசலகூட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தற்போதைய சூழ்நிலையில் புதுக்குடியிருப்பு உணவு களஞ்சியசாலையை வேறிடத்துக்கு மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ள நிலையில் இதனை பாதுகாப்பு வலயப்பகுதியில் நிறுவுதல் அவசியம் குறித்தும் எடுத்துரைத்துள்ளார். மேலும் உணவுத் தொடரணி செல்லும் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு பாதையில் இருசாராரும் மோதலில் ஈடுபடுவதால் இருதரப்பின் உத்தரவாதத்துடன் உணவு தொடரணி எடுத்துச் செல்வது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்