செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கலேவெல ஸ்ரீமுத்துமாரியம்மன் காணி அபகரிப்பு பிரச்சினை ஜனாதிபதியூடாக தீர்த்து வைப்பு

கலேவெல ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் மற்றும் அது அமைந்துள்ள காணி தொடர்பாக நீண்ட காலமாக இருந்து வந்த இழுபறி நிலை முடிவிற்கு வந்திருப்பதாக மாத்தளை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் மாயழகு சசீகரன் தெரிவித்தார்.
ஆரம்ப காலத்தில் இக்கோவிலுக்கென 53 பேர்ச்சஸ் காணி இருந்த போதிலும் காலப்போக்கில் சில தீய சக்திகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாக கோவிலும் கோவிலுக்கான காணியும் அபகரிக்கப்பட்டு மூன்று பேர்ச்சஸில் கோவில் பகுதி மாத்திரம் தான் எஞ்சுகின்ற நிலை உருவானது.

இந்நிலையில் இக்கோவில் தொடர்பாக கோவில் நிர்வாகம் மாயழகு சசீகரனின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் முறையிட்டுள்ளார். அதன் பலனாக சுமுகநிலை தோன்றும் அறிகுறிகள் தென்பட்டதாக கலேவெலஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்தது.

கலேவெல ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு 32 பேர்ச்சஸ் நிலத்தைக் கையளிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாத்தளை மாவட்ட செயலாளர் காமினி செனவிரத்னவிற்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கலேவெல பிரதேச செயலாளர் பீ.ஏ.யூ. வீரசிங்க மாயழகு சசீகரனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கலேவெல ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு 32 பேர்ச்சஸ் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் காணி அளவீடு செய்யும் நடவடிக்கைகள் அரச நில அளவையாளரால் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.

1958,1977 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற வன்செயல் சம்பவங்களின் போது கலேவெல ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டும் சிலைகள் திருடப்பட்டும் சூறையாடப்பட்டும் சின்னா பின்னமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘எவ்வித வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகவில்லை’ கல்வியமைச்சர் சபையில் அறிவிப்பு

susil_premajayant000.jpgஉயர்தரப் பரீட்சை தொடர்பான எந்த ஒரு வினாத்தாளும் முன்கூட்டி வெளியாகவில்லை எனவும், அது தொடர்பாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் நேற்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். க.பொ.த. உயர் தரப் பரீட்சை வினாத்தாள் வெளியானதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக பரீட்சைத் திணைக்களமும் பொலிஸ¤ம் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வினாத்தாள் வெளியானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட கல்வி அமைச்சர் மேலும் கூறியதாவது:- உயிரியல் விஞ்ஞான பாட வினாத்தாள் முன்கூட்டி வெளியாகவில்லையென பரீட்சை ஆணையாளர் எழுத்து மூலம் கல்வி அமைச்சிற்கு அறிவித்துள்ளார். ஆனால் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பாக பரீட்சை சட்டத்திற்கு அமைவாக விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். சில ஊடகங்கள் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திகள் தவறானதாகும். பெளதீகவியல் பாட வினாக்களை முன்கூட்டி வெளியிட்டதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியருக்கு எதிராகவும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பஹா தக்சிலா வித்தியாலய மாணவர்கள் மூவருக்கு தவணைப் பரீட்சையில் பெளதீகவியல் பாட வினாத்தாள்கள் கிடைக்கவில்லை என்ற சம்பவம் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படுகிறது. மூன்று வினாத்தாள்கள் குறைவாக அனுப்பப்பட்டதாலே இந்தப் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் துரிதமாக அவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பரீட்சை தாமதமின்றி நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டது என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி. எம்.பி. அநுரகுமார திஸாநாயக்க கூறியதாவது, பெளதீகவியல் வினாத்தாள்களன்றி சில வினாக்களே வெளியாகியுள்ளன. தனியார் வகுப்பு நடத்தும் ஆசிரியர் ஒருவர் பெளதீகவியல் பாட வினாத்தாளில் உள்ள ஆறு வினாக்களை மாணவர்களுக்கு தபால் மூலம் அனுப்பியுள்ளார். கம்பஹா தக்சிலா வித்தியாலய தவணைப் பரீட்சையில் 3 மாணவர்களுக்கு பெளதீகவியல் பாட வினாத்தாள்கள் கிடைக்காததாலும் பிரச்சினை ஏற்பட்டது என்றார்.

ஒரு இலட்சத்து 96 ஆயிரம் ரவைகள், 32 கிளேமோர்கள், வெடி பொருட்கள் மீட்பு வெள்ளைமுள்ளி வாய்க்காலில் இராணுவம் தொடர்ந்து தேடுதல்

ஒரு இலட்சத்து 96 ஆயிரம் (பல்வேறு வகையான) ரவைகள், 110 கிலோ எடையுள்ள 32 கிளேமோர் குண்டுகள் உட்பட பெருந்தொகையான வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் வெள்ளைமுள்ளி வாய்க்கால் பிரதேசத்திலிருந்து மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பின் பல்வேறு பிரதேசங்களிலும் பாதுகாப்புப் படையினர் பாரிய தேடுதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இங்கிருந்து குண்டுகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் 70 கிலோ எடையுள்ள சைக்கிள் குண்டுகள் உட்பட பல்வேறு வெடிபொருட்களையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வெள்ளைமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் இராணுவத்தின் எட்டாவது அதிரடிப் படையினர் நடத்திய தேடுதல்களின் போது 39 மி. மீ. ரவைகள் – 135000, 0.22 மி. மீ. ரவைகள் – 4600, 1.7 பிஸ்டல் ரவைகள் – 55815, தொலைத் தொடர்பு கருவிகள் மற்றும் ஆயிரக் கணக்கான கிரனைட் லோஞ்சர்களையும் மீட்டெடுத்துள்ளனர்.

அம்பலவான்பொக்கனை, சுகந்திரபுரம், புதுக்குடியிருப்பு, சர்வார் தோட்டம் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேடுதல்களின் போது பல்வேறு கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள் – 50, இரசாயன போத்தல்கள் – 25, 60 மி. மீ. மோட்டார் குண்டுகள் – 40, 81 மி. மீ. மோட்டார் குண்டுகள் – 40, கைக்குண்டுகள் – 50, பெருந்தொகையான வெடிமருந்துகள், திசைகாட்டி மற்றும் உபகரணங்களையும் மீட்டெடுத்துள்ளனர் என்று பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

எவர் என்ன சொன்னாலும் அகதிகளை உடனடியாக மீளக்குடியமர்த்த முடியாது – கண்டியில் ஜெனரல் சரத் பொன்சேக

sarath-pon-eka.jpgஎவர் என்ன சொன்னாலும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீள் குடியேற்ற முடியாதென கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  கண்டிக்கு திங்கட்கிழமை வருகை தந்த ஜெனரல் சரத் பொன்சேகா, தலதா மாளிகைக்குச் சென்று வழிபட்டதுடன், மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளையும் சந்தித்து ஆசிகளைப் பெற்றார். இதன் போது பீடாதிபதிகள் தெரிவித்த கருத்துகளுக்குப் பதிலளிக்கையிலேயே ஜெனரல் பொன்சேகா இவ்வாறு தெரிவித்ததுடன் மேலும் கூறுகையில்;

எவர் எதைச் சொன்னாலும் கண்டபடி அகதி முகாம்களிலிருந்து மக்களை உடனடியாக மீள் குடியமர்த்திவிட முடியாது. மக்கள் அங்கு வழமையான அமைதி நிலையில் வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அங்கு அங்குலத்திற்கு அங்குலம் நிலக் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற வேண்டும். எஞ்சியுள்ள புலிப் பயங்கரவாதிகள் அகதி முகாம்களில் அகதிகளுடன் கலந்துள்ளனர்.அவர்களும் அங்கிருந்து வெளியேற தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, அனைத்தும் சீர் செய்யப்பட்ட பின்னரே அகதி முகாம்களிலுள்ள மக்கள் உரிய வகையில் மீள் குடியேற்றம் செய்யப்படுவார்களெனத் தெரிவித்தார். வெளிநாடுகளும் பல தரப்பினர்களும் எதனைக் கூறினாலும் நிலக் கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பின்னரே அம் மக்கள் பாதுகாப்பாகக் குடியேற்றப்பட வேண்டுமென பௌத்த பீடாதிபதிகளும் தெரிவித்தனர்.

ஷியாம் லால் ராஜபக்ஷவின் மரணம் தொடர்பாக சர்ச்சை

அரூஷாவை தளமாகக்கொண்ட ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கு விசாரணையில் சட்டத்தரணியாக பணிபுரிந்த ஷியாம் லால் ராஜபக்ஷவின் மரணத்திற்கு அதிகளவு போதைவஸ்து காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ஷியாம் லால் ராஜபக்ஷ தனது வீட்டில் கடந்த புதன்கிழமை இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

ஆரம்பகட்ட பிரேதப் பரிசோதனையின் பிரகாரம் ஷியாம் லால் ராஜபக்ஷ மருந்தைப் பயன்படுத்தியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அரூஷாப் பகுதிக்கான பிராந்திய பொலிஸ் தளபதி மாதேய் பசிலியோ “திஸ்டே’க்கு கூறியுள்ளார்.  இரசாயன பகுப்பாய்வுக்காக இறந்தவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட அடையாளங்கள் தார் எஸ் சலாமுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

மரணத்திற்கான உண்மையான காரணம் தொடர்பாக சில சர்ச்சைகள் உள்ளன.போதைவஸ்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். உடலிலிருந்த மாதிரிகள் தார் எஸ் சலாமிலுள்ள அரச பிரதம இரசாயனவியலாளருக்கு பகுப்பாய்வு பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டிருப்பதாக பசிலியோ கூறியுள்ளார். பரிசோதனைகளின் இறுதி அறிக்கையானது அவரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை வெளியிடும் என்றும் பசிலியோ கூறியுள்ளார்.

பிரேத பரிசோதனையானது ஷியாம் லால் ராஜபக்ஷவின் உறவினர்கள் மற்றும் கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் முன்னிலையில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  மரணம் சம்பவித்த இரவில் ஷியாம் லால் ராஜபக்ஷவுடன் மது அருந்தியதாக கூறப்படும் ஆட்களை கண்டுபிடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அவர்களை கண்டுபிடித்தால் அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்பது தொடர்பான சில தகவல்களை பெற்றுக்கொள்ள அவர்கள் எமக்கு உதவுவார்கள்.இறந்தவரின் உடலில் காயத்திற்கான அடையாளம் எதுவும் காணப்படவில்லை என்றும் பசிலியோ கூறியுள்ளார்.

1994 ருவாண்டா இனப்படுகொலை குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படுவோரை கண்டு பிடிக்க விசாரணை நடத்தி வரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்களில் ஒருவர் ஷியாம் லால் ராஜபக்ஷவாகும்.  கொழும்பு றோயல் கல்லூரியில் கற்ற ஷியாம் லால் 1999 – 2004 வரை தென்மாகாணசபை உறுப்பினராக இருந்தவராகும்.

பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி.பட்டம் பெற்ற ஷியாம் லால் லண்டன் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம். பட்டத்தைப் பெற்றவராகும்.பிரிட்டிஷ் சட்டத்துறையில் பாரிஸ்டராக இருந்தவர். 1993 – 1999 வரை சட்ட மா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக பணியாற்றியிருந்தார்.

அவரின் மனைவி பிரசாந்தி ஹேக்கிலுள்ள யூகோசிலவாக்கியாவுக்கான ஐ.நா. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். ஷியாம் லால் ராஜபக்ஷ மரணமடைந்த தருணத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை அவர் பூர்த்தி செய்திருந்ததாக அவரின் தாயார் லலிதா ராஜபக்ஷ கூறியுள்ளார். வீட்டுக்கு திருட வந்த கோஷ்டியால் ஷியாம் லால் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுவதாக முதலில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவரின் மரணத்திற்கான காரணம் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று கென்யாவிலுள்ள இலங்கைத் தூதுவர் ஜே.திஸாநாயக்கா கூறியுள்ளார். மூக்கிலிருந்து இரத்தம் வழிந்ததைத் தவிர இறந்தவரின் உடலில் காயத்திற்கான அடையாளங்கள் இல்லை என்றும் திஸாநாயக்கா கூறியுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் ஷியாம் லால் இதய சத்திரசிகிச்சை மேற்கொண்டிருந்ததாக தகவல் கிடைத்திருப்பதாகவும் தூதுவர் கூறியுள்ளார்.

ஜோர்தானில் இரு இலங்கையர் தீயிட்டு மரணம்

fire222.jpgஇரண்டு இலங்கையர்கள் ஜோர்தானில் உயிரிழந்துள்ளதாக இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைப் பெண் ஒருவரைத் தீயிட்டுக் கொளுத்தித் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளை ஊற்றப்பட்டு மேற்படி பெண் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் பின்னர், அவரை எரித்த இலங்கையரும் தமக்குத் தாமே தீயிட்டுக் கொண்டதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஜோர்தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளதாகவும் அந்த இணையத்தளம் தெரிவிக்கின்றது.

தீவிர தீக்காயங்களினால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுக்க மற்றும் களுத்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை இலங்கைக்குக் கொண்டு வர, தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளத் தெரிகிறது.

ஸ்ரீ ரெலோ இயக்கம் கட்சியின் பெயரை “புதிய தாயகம்” என மாற்றவுள்ளது

puthiya_thaayagam_telo.jpgஸ்ரீ ரெலோ எனப்படும் ஸ்ரீ தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் பெயரை விரைவில் கூடவுள்ள தமது தேசிய மாநாட்டில் “புதிய தாயகம்”  என்று மாற்றவுள்ளதாக கட்சியின் செயலாளர் ப உதயராசா தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் நிலை உட்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னரே இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ள அவர் புதிய தேர்தல் சட்டமூலத்திற்கு ஏற்க தனி இனத்தையோ மதத்தையோ பிரிவினை சொற்களையோ தாங்கிய கட்சிகள் தடை செய்யப்படும் என்ற அரசாங்கத்தின் யோசனையை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என அமெரிக்காவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

boycott000.jpgஇலங் கையுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தி, அமெரிக்காவின் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். விக்டோரியா செக்ரெட் என்ற நிறுவனத்தை மையப்படுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிறுவனம் இலங்கையுடன். கடந்த ஆண்டில் இலங்கையுடன் மேற்கொண்ட வர்த்தகத்தின் ஊடாக 5.6 பில்லியன் டொலர்கள் இலாபம் உழைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதற்கு எதிரான பதாதைகளை சுமந்த படி, ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.தமிழர் இன அழிப்பை மேற்கொண்ட இலங்கையுடன், வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

குளவிகளின் தாக்குதல்களையடுத்து சீகிரியா குன்றுக்குச் செல்ல தற்காலிகத் தடை

000images.jpgமடுத் திருவிழாவிற்குச் சென்று விட்டு தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லும் வழியில் சீகிரியா குன்றில் ஏறுவதற்குச் சென்ற மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சீகிரியாவிற்குச் சென்ற பெருமளவிலான மக்களே இவ்வாறு ஏமாற்றமடைய நேரிட்டது.

சனிக்கிழமை பிற்பகல் நேரத்தில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சீகிரியா குன்றுக்குச் சென்று ஏறிய வேளையில் குளவிகள் கொட்டி 48 பேர் காயமடைந்த நிலையில், சீகிரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் பத்துப்பேர் மேலதிக சிகிச்சைகளின் பொருட்டு தம்புள்ள ஆதார வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டிருந்தனர்.

சனிக்கிழமை நான்காவது தடவையாகவும் இவ்வாறு உல்லாசப் பயணிகளைக் குளவிகள் கொட்டி காயப்படுத்தியதைத் தொடர்ந்து சீகிரியா குன்றின் இடை நடுவில் அமைந்துள்ள சங்கபாதம் வரையிலான பிரதேசத்திற்கு மாத்திரமே அனுமதிக்கப்பட்டதுடன், குன்றின் மேற்தளத்திற்கு ஏறுவது சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று முன்தினம் முதல்தடை செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை குளவிகளால் கொட்டப்பட்டு காயத்திற்குள்ளானவர்களில் 9 சிறுவர்களும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அடங்குவதாகவும் இவர்கள் களுத்துறை, கல்முனை, வத்தளை, கிரிபத்கொட மற்றும் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சீகிரியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குளவியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட வேண்டியிருந்த போதிலும் குறித்த உத்தியோகத்தர்கள் சம்பவ தினம் விடுமுறையில் சென்றிருந்ததால் பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்படவில்லை எனவும் கலாசார முக்கோண மத்திய நிலையப்பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை சிகிரியா குன்றின் உச்சியில் குளவிகளின் தாக்குதலுக்கு அஞ்சி அங்குள்ள சேறுநிறைந்த நீர்த்தடாகத்தினுள் 3 மணிநேரம் சுமார் 15 பேர் வரை குந்தியிருக்க நேர்ந்ததாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்ததுடன், சிகிரிய கலாசார முக்கோண நிதிய ஊழியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களால் தமக்கு எவ்வித உதவிகளும் பாதுகாப்பும் இல்லை எனவும் பயணிகள் விசனம் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சீகிரியா குன்றின் சிங்கபாதத்தைத் தாண்டி மேலே செல்வதை தற்காலிகமாக தடை செய்யத் தீர்மானித்ததாக சீகிரியா கலாசார முக்கோண மத்திய நிலைய முகாமையாளர் சுமேத கருணாரத்ன தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் காலங்களில் பாதுகாப்பு அங்கிகளை அணியாது எவரும் சீகிரியா குன்றிலேறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

ஊவா மா.ச. முதலமைச்சர் 20ஆம் திகதி சத்தியப் பிரமாணம்

shasendrakumararajapaksa.jpgஊவா மாகாண சபை முதலமைச்சராக சசேந்திர ராஜபக்ஷ எதிர்வரும் 20ஆம் திகதி சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளதாக ஊவா மாகாண சபை வட்டாரங்கள் இணையத் தளம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளன.

ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்ட கதிர்காம தேவாலயத்தின் தியவதன நிலமே சசேந்திர ராஜபக்ஷ 1 லட்சத்து 36 ஆயிரத்து 697 வாக்குகள் பெற்று முதலமைச்சர் பதவிக்குத் தகுதி பெற்றுள்ளார். இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சகல மாவட்டங்களையும் தனதாக்கி அமோக வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.