செய்திகள்

செய்திகள்

செய்திகள்

படுக்கையில் இணங்க மறுக்கும் மனைவியை பட்டினிபோட கணவனுக்கு அனுமதி – ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்

ஆப்கானிஸ்தானில், கணவன் உடலுறவுக்கு அழைக்கும்போது மறுக்கும் மனைவியை அக்கணவன் பட்டினிபோடுவதற்கு அனுமதிக்கின்ற ஒரு புதிய சட்டம் அரசிதழில் (வர்த்தமானி) பிரசுரமாகியுள்ளதன் மூலம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலே சிறுபான்மை இனமாக உள்ள ஷியா மக்களின் குடும்ப வாழ்க்கை சம்பந்தமானது இந்த புதிய சட்டம்.

இந்த ஆண்டில் முன்னதாக இதற்கான மசோதா விவாதத்துக்கு வந்தபோது சர்வதேச அளவில் எதிர்ப்பு உணர்வலைகள் தோன்றியிருந்தன. அதனால் மசோதாவை அதிபர் கர்சாய் விலக்கிக்கொள்ள வேண்டி வந்திருந்தது.

ஆனால் தற்போது அமலுக்கு வந்துள்ள இம்மசோதாவின் மாற்று வடிவமும் பெண்களை பெருமளவில் ஒடுக்குவதாகவே அமைந்திருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பழமைவாத ஷியா மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக ஆப்கானியப் பெண்களை விலைகொடுத்துவிட்டார் அதிபர் ஹமீத் கர்சாய் என்று விமர்சகர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம் மழை-வெள்ளப் பாதிப்பு தொடர்பில் ஐ.நா. கவலை

flood.jpgவட இலங்கை போரினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா மனிக் ஃபாம் முகாமில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள 1925 வரையிலான கூடாரங்கள் சேதமடைந்தும் நிர்மூலமாகியும் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் கூறியுள்ளது.

இது குறித்து அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கடந்த வார இறுதியில் பெய்த கடுமையான மழை காரணமாக மனிக் ஃபாம் முகாமின் 4ஆம் வட்டகை மற்றும் 2ஆம் வட்டகை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பிரிவுகளிலும் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நடந்துகொண்டிருப்பதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிக்கூடங்களில் தஞ்சமடைவது சிரமாக இருப்பதாகவும், அதனால், தற்காலிக பயிற்சி நிலையங்களில் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஒருங்கிணைப்பு அலுவலக அறிக்கை கூறுகிறது.

இலங்கை நீதிபதிகளை பணிக்கமர்த்தும் பிஜி

court222.jpgஇலங்கை யிலிருந்து நீதிபதிகளை பிஜி அரசாங்கம் பணிக்கு அமர்த்தி வருகிறது.  பிஜியின் பிரதம நீதியரசர் அன்டனி கேட்ஸ் தற்போது கொழும்பிலிருந்து நீதிபதிகளை ஆட்சேர்ப்பு செய்து வருகிறார்.

பொதுநலவாய உறுப்பு நாடுகளிடமிருந்து தகுதிவாய்ந்த நீதிபதிகளை நியமிக்க பிஜி எதிர்பார்த்திருப்பதாக அந்நாட்டின் சட்டமா அதிபர் ஐ ஆர்ஸ் செய்யத் கயூம் பிஜி லைவ் ஊடகத்திற்குத் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த வரும் ஏப்ரல் மாதம் நீதித்துறையில் மாற்றங்களை மேற்கொள்ள பிஜி அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் இலங்கையும் பிஜியும் ஒரே மாதிரியான நீதிமுறைகளைக் கொண்டவை என்றும் அதனால் இலங்கையிலிருந்து நீதித்துறை அதிகாரிகளை ஆட்சேர்ப்புச் செய்ய விருப்பியதாகவும் பிஜியின் பிரதம நீதியரசர் கேட்ஸ் கூறியுள்ளார். கடந்த வாரம் இலங்கையின் பிரதம நீதியரசர் அசோகா டி சில்வா, சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் ஆகியோரைச் சந்தித்து தனது ஆட்சேர்ப்பு பணி தொடர்பாக கேட்ஸ் கலந்துரையாடி உள்ளார். நேர்முகப் பரீட்சைகள் கடந்த புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றதாக கேட்ஸ் கூறியுள்ளார். 2 வருட பணிக்காக விடுமுறை வழங்குவதில் நீதித் சேவைகள் ஆணைக்குழுவிற்குப் பிரச்சினைகள் இல்லையென்று நீதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

விடுமுறை விவகாரம் தொடர்பாக பிரதம நீதியரசர் மற்றும் நீதியமைச்சரின் செயலாளர் ஆகியோருடன் கேட்ஸ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.  இலங்கையானது சுயாதீனமான நீதித்துறையைக் கொண்டிருப்பதாகவும் அதிக உயர்மட்டக் கொள்கைக் கருத்தை இலங்கை கொண்டிருப்பதாகவும் இதன் மூலம் பிஜி அரசாங்கம் நன்மைகள் பெறமுடியும் என்றும் கேட்ஸ் கூறியுள்ளார். புத்திக்கூர்மை, நேர்மை உடைய உள்ளூர் சட்ட அதிகாரிகளின் சேவைகளைப் பெறுவதன் மூலம் பிஜிக்குப் பயன்கிடைக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

நீதிபதிகள் நீதிபதிகளாகவே செயற்பட வேண்டுமென்பது மிகவும் முக்கியமான விடயமாகும். அவர்களுக்கு ஏனைய கட்டளைகள் அவசியமில்லை. அவர்கள் சரியான விடயத்தையே செய்வது அவசியமாகும். உலகளாவிய ரீதியில் சில நீதிபதிகள் எப்போதும் இருதலைக்கொல்லி எறும்பின் நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. புத்திஜீவித்தனமான நேர்மை, திறமை என்பனவற்றுடன் இருப்பதற்கு அவர்கள் நெருக்கடியான நிலைமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் கேட்ஸ் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்பு

எண்பது கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த-44 கிளேமோர் குண்டுகள், ஐயாயிரம் துப்பாக்கி ரவைகள் உட்பட பெருந்தொகையான வெடிபொருட்களை பாதுகாப்புப்படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் இராணுவத்தின் பல பிரிவுகள் தொடர்ந்தும் பாரிய தேடுதல்களை மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்தப் பிரதேசங்களிலிருந்து கனரக ஆயுதங்களின் உபகரணங்களையும், பல்வேறு வகையான மோட்டார் குண்டுகளையும் படையினர் மீட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினர் 1, 5, 7, 10, 15, 20 கிலோ எடைகளைக் கொண்ட 44 கிளேமோர்கள், கைக்குண்டுகள்-31, எம். பி. எம். ஜி. ரவைகள்- 4350, எம்-16ரக துப்பாக்கி ரவைகள்- 1000 மற்றும் மோட்டார் குண்டுகளையும் மீட்டெடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பின் கிழக்கிலிருந்து படல் துப்பாக்கி ரவைகள்-160, 82 மி. மீ.ரக மோட்டார் குண்டுகள்- 270,ரி.56 ரக துப்பாக்கிரவைகள்- 950, ஆர். பி. ஜி குண்டுகள் மற்றும் படகு இயந்திரம் ஒன்றையும் மீட்டெடுத்துள்ளனர்.

தமிழ் யுவதிகள் இருவரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பிரதியமைச்சர் பொலிஸாரிடம் வலியுறுத்தல்

girl2222.gifகொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் இரு தமிழ் யுவதிகளின் மரணத்திற்கான காரணம் தொடர்பாக முழுமையாக விசாரணை செய்து உண்மை நிலையினை வெளிக் கொணர வேண்டும் என்று நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி கேட்டுள்ளார்.

இவ்விரு தமிழ் யுவதிகளின் மர்மமான மரணம் தொடர்பாக மேல் மாகாணப் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

அப்பாவி தமிழ் யுவதிகள் உழைப்பதற்கென்று இப்படி வருகின்றபோது அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத நிலையில் இருப்பது கவலைக்குரியது. கறுவாக்காட்டு பொலிஸார் காலம் தாழ்த்தாது இவர்களது மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறிய வேண்டும்.

வறுமைக்காக ஏழை பெற்றோர்கள் வீட்டு வேலைக்கு அனுப்பினார்கள். இப்படி மர்மமான மரணம் எமது இளைஞர், யுவதிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித தராதரம் பார்க்காமல் மரணமான யுவதிகள் சேவை செய்த வீட்டின் உரிமையாளர்கள் பூரண விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அச்சமின்றி வாழும் ஒரு சூழலை உருவாக்குவதில் பொலிஸாரின் பங்கு மிக முக்கியமானது. மலையக இளைஞர், யுவதிகள் ஆயிரக்கணக்கானோர் கொழும்பில் தொழில் நிமித்தம் வந்துள்ளனர்.

இத்தகைய கொடூர சம்பவங்களும் அவர்களது உடல்கள் கிடந்த இடங்களை பார்க்கும்போது அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஜீவராணி, சுமதி இருவரின் மரணத்தை விசாரிக்குமாறு அமைச்சர் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுள்ளார்.

அலிக் அலுவிகாரவின் மூன்றாம் மாத நினைவஞ்சலியில் ஜனாதிபதி

normal_.jpgஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள்; அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாத்தளை மாவட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்கிய அலிக் அலுவிகாரயின் மூன்றாம் மாத நினைவஞ்சலியை முன்னிட்டு அவரது இல்லத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
 
இந்த வைபவத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர்கள்  பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஜனாதிபதி சினோகபூர்வமாக கலந்துறையாடினார்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்திய அரசாங்கம் 3 மில். அ.டொலர் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்காக இந்திய அரசாங்கம் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.

இவை ஐ.நா அமைப்புக்களினூடாக நிவாரணக் கிராமங்களில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இவற்றின் ஒரு தொகுதியை இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் நேற்று ஐ.நா வதிவிட பிரதிநிதி நீல் பூனேயிடம் கையளித்தார். மேற்படி அறுநூறு தொன் நிவாரணப் பொருட்கள் கடந்த எட்டாம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இந்நிவாரணப் பொருட்களுள் ஆறு இலட்சம் பக்கற்றுக்களுக்கு அதிகமான உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பாய்கள், உடுதுணிகள், வீட்டு உபகரணங்கள், சிறுவர்களுக்கான ஆடைகள், பாதணிகள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நிவாரணக் கிராமங்களிலிருக்கும் சுமார் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான பொருட்களே நேற்று யு. என். வதிவிடப் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டன.

“தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல் பண்பாடு சமூகம்’ உலக ஆய்வு மாநாடு அக்டோபர் 3 – 6 வரை

muslim-prayer.jpgதென் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை தனது 1 ஆவது உலக ஆய்வு மாநாடொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. “தமிழ்பேசும் முஸ்லிம் மக்களின் தமிழியல் பண்பாடு சமூகம்’ எனும் தலைப்பில் நடத்தவுள்ள இந்த உலக ஆய்வு மாநாடு நம்நாட்டிலும் பிற நாடுகளிலுமுள்ள அறிஞர்கள், ஆய்வாளர்களை ஒன்று சேர்ப்பதுடன் மனிதப்பண்பியல், சமூக விஞ்ஞானம் தொடர்பாகத் தம் கருத்துகளைப் பகிரவும் அறிவினை அகல்விக்கவும் உதவுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாநாட்டை எதிர்வரும் அக்டோபர் 3 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதி வரை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேற்படி உலக ஆய்வு மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுச் செயலாளர்களுள் ஒருவரும் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கே.ரகுபரன் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் பங்குபற்ற விரும்பும் உலகின் பன்னாட்டு ஆய்வாளர்களையும் அறிஞர்களையும் பட்டமேற்படிப்பு மாணவர்களையும் மாநாட்டின் புரவலர்களும் ஒழுங்கமைப்பாளர்களும் வரவேற்பதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை தெரிவித்துள்ளது.

மாநாட்டில் பங்குபற்றி கட்டுரை படிக்க விரும்புபவர்கள் “தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல்பண்பாடு, சமூகம்’ எனும் கருப்பொருளுக்குட்பட்டு கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம். இலக்கியம், மொழியியல், பண்பாடு, வரலாறு, சமூகவியல், நாட்டார் வழக்காற்றியல், நாடகம், நுண்கலை, கல்வி, அரசியல், பொருளியல், தமிழ் பேசும் முஸ்லிம்களின் மறுமலர்ச்சி எனும் ஏதாவது தலைப்பில் ஆய்வுச் சுருக்கத்தினையும் கட்டுரையையும் சமர்ப்பிக்கலாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பங்குபற்ற விரும்புபவர்கள் மாநாட்டு ஒழுங்கமைப்பு செயலாளர்களான கே.ரகுபரன்(சிரேஷ்ட விரிவுரையாளர்),ஜனாபா எம்.ஏ.எஸ்.எப். சாதியா (விரிவுரையாளர்) ஆகியோருடன் 0094718218177,0094718035182 எனும் கைத்தொலை பேசிகளுக்குகோ,மொழித்துறை,தென் கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில் எனும் முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம்.

இராணுவ வீரரின் அடையாள அட்டையை பயன்படுத்தி தற்கொலையாளி அ.புரம் வந்தார்

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட குழுவினரை படுகொலை செய்த தற்கொலையாளி யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரின் அடையாள அட்டையை உபயோகித்தே அநுராதபுரத்திற்கு வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இக்கொலையை புலிகள் இயக்கமே செய்துள்ளதாகவும் தற்கொலையாளியின் பெயர் வசந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவர் கல்முனை பிரதேச சிங்கள ஹோட்டல் ஒன்றில் வேலைசெய்து வந்துள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஏனைய சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிமன்ற நீதவான் தர்சிகா விமலசிறி உத்தர விட்டார்.

சியம்பலாப்பேயில் தாழ்நிலப் பகுதியிலிருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

police_man.jpgபியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாப்பே சந்திக்கருகிலுள்ள பிரதேசமொன்றிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். சியம்பலாப்பே சந்தியிலிருந்து சப்புகஸ்கந்த பக்கமாக சுமார் 100 மீற்றர் தூரத்திலுள்ள தாழ் நிலப்பகுதியொன்றிலிருந்தே இந்த சடலங்கள் இரண்டும் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர கூறினார்.

சடலங்கள் இரண்டும் அடையாளம் காண முடியாத அளவுக்கு பழுதடைந்த நிலையிலிருப்பதுடன் இவர்கள் இருவரும் சுமார் 4 நாட்களுக்கு முன்னதாக ஊயிரிழந்தவர்களாக இருக்கலாமென கருதப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பியமக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.