செய்திகள்

Wednesday, September 22, 2021

செய்திகள்

செய்திகள்

காணமலாக்கப்பட்டவர்கள் எங்கே..? – மரணசான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி !

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் இன்று 1675 ஆவது நாளாக எமக்கு நீதி கோரிய தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் உள்ளோம். நூற்றுக்கு மேற்பட்ட, எம்முடன் இந்தப் போராட்டத்தில் இணைந்திருந்த சகோதர சகோதரிகளை இழந்து விட்ட நிலையிலும், எமக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்ற முனைப்புடன் உள்ளோம்.

இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கை ஜனாதிபதி அங்கு ஐ.நா. பொதுச் செயலர் அன்ரனியோ அவர்களுடன் நேற்று முன்தினம் (19.09.2021) விசேட சந்திப்பில் ஈடுபட்டிருந்தார். அவர் அங்கு இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ்களும், நட்டஈடும் கொடுப்பது பற்றி கூறியிருந்தார். அத்துடன் உள்ளகப் பிரச்சனைகள் உள்ளகப் பொறிமுறையினூடாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்து அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் அடைந்தோம்.

எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தில் நேரடியாக சர்வதேசத்தினாலேயே குற்றம் சாட்டப்பட்ட, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தும்படி ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் பரிந்துரைக்கப்பட்ட  சிறிலங்காவின் ஜனாதிபதியை,  அதே ஐ.நா மன்றில் சர்வதேச சமூகம் இன்று வரவேற்று கைலாகு கொடுப்பதை நாம் கவலையுடனேயே உற்றுநோக்குகின்றோம். வேறு வழியின்றி எமது கடைசி நம்பிக்கையாக சர்வதேச நீதி பொறிமுறையே இருப்பதால், இந்த இராஜதந்திர சம்பிரதாயங்களையும் தாண்டி சர்வதேசம் பாதிக்கப்பட்ட எமக்கு நீதியை பெற்றுத்தரும் என்று நம்புகின்றோம். இவ்விடயத்தில் ஐ.நாவின் செயலாளர் உட்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் நீதி பொறிமுறை தொடர்பாக கேள்வி எழுப்பாமை பாதிக்கப்பட்ட எமக்கு மிகுந்த கவலை அளிக்கின்றது.

2009, மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து பாதுகாப்புத் தரப்பினரதும், அரசினதும் உறுதிமொழிகளை நம்பி எமது உறவுகளைக் கையளித்தோம். எம் முன்னிலையில் எமது உறவுகள் சரணடைந்தனர். கண்கண்ட சாட்சிகளான நாம், எமது உறவுகளை மீட்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். ஒரு நாளாவது விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தாலோ அல்லது அவர்களுடன் உறவு பேணியிருந்தாலோ சரணடையுங்கள் அல்லது எம்மிடம் ஒப்படையுங்கள், நாம் புனர் வாழ்வளித்து மீண்டும் உங்களிடம் ஒப்படைப்போம் என்று உறுதியளித்த படையினரதும், அரசினதும் பாதுகாப்புச் செயலர் தற்போது ஜனாதிபதியாக உள்ளார்.

நாம் எமது உறவுகளை உயிருடனேயே கையளித்தோம். எனவே அவரும் எங்கள் உறவுகளை புனர்வாழ்வளித்து எம்மிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். மாறாக உள்நாட்டிலும், ஐ.நா. தலைமையகத்தில் வைத்தும் மரணச் சான்றிதழும், நட்டஈடும் கொடுத்து காணாமலாக்கப்பட்டோர் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவதாகக் கூறுவது புத்த தர்மத்துக்கு ஏற்புடையதா? இக்கூற்றை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு புத்தபெருமானின் போதனைகளை பின்பற்றும் மற்றும் மனசாட்சி உள்ள ஒவ்வொருவரும் இதைக் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறோம்.

மேலும் உள்ளகப் பொறிமுறையில் எமது பிரச்சனையைத் தீர்ப்பதென்பது கடல் வற்றிக் கருவாடு சாப்பிடுவதற்கு ஒப்பானது. இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதோ அரிது. அப்படியிருந்தும் அரிதாக ஓரிரு வழக்கில், நீதி வழங்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் ஜனாதிபதி அவர்களுக்கு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கி விடுவார். அத்துடன் அவர்களை மேலும் இது போன்ற கொலைகளைச் செய்யத் தூண்டும் விதத்தில் ஊக்குவிப்பாகப் பதவி உயர்வும் வழங்குவார்கள். உதாரணத்துக்கு அண்மையில் மிருசுவில் 8 பேர் கொலையில் மரண தண்டனை விதிக்கப் பெற்ற சுனில் ரத்னாயக்க.எனவே எமக்கு மரணச் சான்றிதழும் வேண்டாம், காணாமல் போனோர் அலுவலகமும் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம் திருப்பித் தருவதாகக் கூறி பொறுப்பேற்ற எம் உறவுகள் எமக்கு வேண்டும். அதற்கான நீதி இழுத்தடிப்பு இல்லாமல் வழங்கப்பட ஐ.நா.வால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

“உயர் தர பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டங்கள் முடிக்கப்படாத விடயம் தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம்.” – தினேஷ்குணவர்த்தன

உயர் தர பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டத்தை பூர்த்தி முடியாத நிலை இருப்பதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ள விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியிருப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ,உயர் தர பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டத்தை பூர்த்தி முடியாமை நிலைமை தொடர்பில் தீர்வை காண்பதற்கு பரீட்சை திணைக்கள ஆணையாளருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருப்பதாக கூறினார்.

உயர் தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கை ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அமைச்சர் தெரிவிததார்.

மட்டக்குளி கொலை வழக்கில் இராணுவத்தை சேர்ந்த 13 பேர் கைது !

மட்டக்குளியில் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் தனது கணவரை கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இராணுவத்தை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 06 பேர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கொலை செய்யப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தரின் கணவரின் சடலம் கடந்த மாதம் 20 ஆம் திகதி மட்டக்குளி காக்கை தீவின் கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டது

நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு 2 அமைச்சர்களால் உயிர் அச்சுறுத்தல் !

இரு அமைச்சர்களின் வற்புறுத்தல் காரணமாக நான் இராஜினாமா செய்கிறேன் என நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சதொச நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசடி மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்பட்டமைக்கு இரண்டு அமைச்சர்கள் பிரச்சினைக்குள்ளாகி என்னைப் பதவிலிருந்து விலக்கத் திட்டமிட்டுள்ளனர் என நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித் துள்ளார்.

எனது உயிருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனது உயிரைக் காப்பாற்றப் பதவியை இராஜினாமா செய்வதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளைப் பூடு மோசடிக்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டமையே தனக்கு ஏற்பட்ட இந்த அழுத்தத்திற்கு உடனடிக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தான் இராஜினாமா செய்த பிறகு அந்தப் பதவிக்கு உதவியாளர் ஒருவரை நியமிக்கத் தயார் என தான் அறிந்ததாகவும் குறித்த இரண்டு அமைச்சர்களின் அதிகாரத்தின் கீழ் இந்நிறுவனம் தனியார் நிறுவனமாக மாற்றப்படலாம்  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட பதவிப்பிரமாணம் !

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவார்ட் கப்ரால் இராஜினாமா செய்ததை அடுத்து வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முடிவு செய்திருந்தது.

ஜயந்த கெட்டகொட, 2000ஆம் ஆண்டில் முதன்முறையாக கொழுப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியதுடன், பின்னர் அந்த நாடாளுமன்றத்தை கலைத்த பின்னர் 2001 இல் மீண்டும் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

அதனை அடுத்து 2011 ஆம் ஆண்டில் அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்ததுடன், 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.

இதனை அடுத்து கடந்த மாதம் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தேசியப்பட்டியில் ஊடாக நாடாளுமன்றத்துக்கு நுழைவதற்கு வழி வகுக்கும் வகையில் ஜயந்த கெட்டகொட தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“சரத் வீரசேகர ஹிட்லரை போன்று செயற்படுகிறார்.” – ஆளுங்கட்சி உறுப்பினர் காட்டம் !

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஹிட்லரை போன்று செயற்படுகிறார் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அடிமட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளை ஒரு சில அமைச்சர்கள் தங்களின் அதிகாரத்தை பிரயோகித்து தாக்குவது வெறுக்கத்தக்க விடயமாகும். தற்போதும் இந்நிலையே காணப்படுகிறது.மக்களின் பிரச்சினைகளையும், ஊழல் மோசடிகளையும் சுட்டிக்காட்டும் போது ஆளும் தரப்பின் அரசியல்வாதிகள் அதற்கு எதிராக செயற்படுகிறார்கள்.

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் அமைச்சரவை மட்டத்தில் எடுத்த தீர்மானத்தை கேள்விக்குள்ளாக்கி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக அறிக்கை வெளியிட்டு அரசாங்கத்தையும்,கட்சியையும் சரத் வீரசேகர நெருக்கடிக்குள்ளாக்கினார்.

இப்பிரச்சினைகள் அனைத்தையும் ஜனாதிபதியிடம் ஆதாரபூர்வமாக குறிப்பிட்டுள்ளேன். விரைவில் சிறந்த தீர்மானம் கிடைக்கப் பெறும் என்றார்.

பெங்களூரை இலகுவாக சாய்த்த கொல்கத்தா !

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 31-வது லீக் ஆட்டம் இன்று அபுதாபியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணயச்சுழற்சியில் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆர்.சி.பி. அணி 92 ஓட்டங்களுக்குள் படுமோசமாக சுருண்டது. அந்த அணி சார்பாக படிக்கல் பெற்ற 22 ஓட்டங்களே அதிக பட்சமாக காணப்பட்டது.
கொல்கத்தா அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி, அந்த்ரே ரஸல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர்  93 ஓட்டங்கள் கள் அடித்தால்  வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. துடுப்பாட்டத்தில்  சொதப்பிய ஆர்.சி.பி. பந்து வீச்சிலாவது சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.1 ஓவரில் 82 ஓட்டங்கள் குவித்தது. ஷுப்மான் கில் 34 பந்தில் 48 ஓட்டங்கள் விளாசினார். வெங்கடேஷ் அய்யர் 27 பந்தில் 41 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆவா குழுவை சேர்ந்த நால்வர் போதைப்பொருளுடனும் வாளுடனும் கைது !

ஆவா குழுவை சேர்ந்த நால்வர் போதைப்பொருளுடனும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த சந்துகநபர்கள் பயணித்த காரையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள, நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த முத்து என்பவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, முத்து  என்பர் காரில் தனது நண்பர்களுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் எனும் தகவல் கிடைத்ததை அடுத்து, பொலிஸ் புலனாய்வு பிரிவினர் அவர்களின் காரை பின் தொடர்ந்து பரமேஸ்வர சந்திக்கு அருகில் வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது காருக்குள் இருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் வாள் ஒன்றையும் மீட்ட பொலிஸார், சந்தேகநபர் நால்வரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

“ரஷ்ய தேர்தலில் ஆளும் யுனைடட் ரஷ்யா கட்சி மோசடி செய்துள்ளது.” – அலெக்ஸி நாவல்னி குற்றச்சாட்டு !

ரஷ்ய தேர்தலில் ஆளும் யுனைடட் ரஷ்யா கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ள நிலையில் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் அலெக்ஸி நாவல்னி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய நாட்டின் நாடாளுமன்ற கீழ்சபை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதன்மூலம் 450 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி 2021-ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 17-ம் திகதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே, யுனைடட் ரஷ்யா கட்சி முன்னிலை வகித்தது. 450 இடங்களில் 315 இடங்களைக் கடந்து கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தலில் மொத்தம் 334 இடங்களைப் பெற்றிருந்த கட்சிக்கு இது சிறிய சறுக்கல் என்றாலும் கூட தனிப்பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து சிறையில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலெக்ஸி நாவல்னி, இந்த முடிவை நம்ப முடியவில்லை. 2011ல் தேர்தலில் மோசடி செய்தது போல் இப்போதும் செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். 2011 தேர்தலில் மோசடி நடந்ததாக போராட்டம் நடத்தியதற்காகவே அலெக்ஸி கைது செய்யப்பட்டார்.

தேர்தலுக்கு முன்னதாக நாவல்னியின் அமைப்புகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டன. அதன் தலைவர்கள் அனைவரும் தேர்தலில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் ஸ்மார் வோட்டிங் செயலியை தங்கள் சேவைகளில் இருந்து நீக்கின. இதுவும் புதின் அரசு கொடுத்த அழுத்தத்தாலேயே என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

போதையில் தனக்கு தானே தீ மூட்டி குடும்பஸ்தர் ஒருவர் பலி – யாழில் சம்பவம் !

தவறான முடிவெடுத்து தனக்கு தானே குடும்பஸ்தர் ஒருவர் தீ மூட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் ரவிச்சந்திரம் (வயது 48) என்ற 10 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சனிக்கிழமை குறித்த நபர் போதையில் அவரது வீட்டுக்கு அருகிலுள்ள தனது சகோதரன் வீட்டுக்குச் சென்று, சகோதரனுடன் முரண்பட்டு அவரைத் தாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்த அவர், உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்குச் சென்றுள்ளார். இதன்போது அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார். அவ்வேளை அவரது உடலில் பரவியிருந்த பெற்றோலில் தீ பற்றிக்கொண்டது.

இதேவேளை அடுப்படியில் சமைத்துக்கொண்டிருந்த அவரது மனைவி மீதும் தீ பற்றிக்கொண்டது. இந்நிலையில் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அயலவர்கள் கூடி தீயை அணைத்து இருவரையும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அதில் கணவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். மனைவி தீக்காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தரின் தாக்குதலுக்கு இலக்கான அவரது சகோதரனும் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.