செய்திகள்
செய்திகள்
செய்திகள்
கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச நிறுவனங்களிலும் வீட்டுத்தோட்டம் அமைக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளார்.
மாகாண விவசாய அமைச்சின் தலையீட்டுடன் திட்டத்தை ஒருங்கிணைக்குமாறு விவசாய மாகாண அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் போதனாசிரியர்களுடனான விசேட சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
வரவிருக்கும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ள விவசாயிகளுக்கு அறிவூட்டல், சாகுபடி வேலைத்திட்டத்தை உருவாக்கவும் விவசாய பயிற்றுனர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
“எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை பற்றி பேசுகிறோம். அந்த சூழ்நிலையை சமாளிக்க, குறுகிய கால பயிர் சாகுபடியை விரைவில் தொடங்குவது அவசியம். இதை அனைவரும் தங்கள் பொறுப்பாக கருத வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டால், விவசாயிகளுக்கு வழிகாட்டத் தவறியதற்கு விவசாய ஆலோசகர்களே பொறுப்பேற்க வேண்டும்.
“அரசுக்கும் விவசாயிக்கும் இடையே உள்ள உறவை விவசாய ஆலோசகர்கள் புரிந்துகொண்டு, ஏற்படும் உணவு நெருக்கடியைச் சமாளிக்க உழைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதமளவில் பாரிய உணவுக்கட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்சார்பு பொருளாதாரம் தொடர்பில் அமைச்சர்களும் – அரச அதிகாரிகளும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த மர்ம பொதியில் இருந்து 35 போத்தல் பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நெடுந்தீவு கடலில் பொதி ஒன்று மிதப்பதாக நேற்று (வியாழக்கிழமை) கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினர் குறித்த பொதியினை மீட்டு சோதனையிட்ட போது , அவற்றில் இருந்து 35 பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்களை மீட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து இவற்றை கடத்தி வந்த நிலையில் கடற்படையினரை கண்டு கடத்தல்காரர்கள் பொதியினை கடலில் வீசி விட்டு தப்பி சென்று இருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு கடற்படையினர் மற்றும் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராகவே லசித் மலிங்க நியமனம் பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் 21-ந் திகதி நடந்து முடிந்த பொது தேர்தலில் ஸ்காட் மோரிசன் தலைமையிலான ஆளும் தாராளவாத கட்சியை வீழ்த்தி எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தோணி அல்பானீஸ் புதிய பிரதமராக பதவி ஏற்றார்.
இந்த நிலையில் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான புதிய மந்திரிசபை நேற்று பதவி ஏற்றது. தலைநகர் கான்பெர்ராவில் உள்ள அரசு இல்லத்தில் நடைபெற்ற விழாவில் புதிய மந்திரிகள் 30 பேருக்கு கவர்னர் ஜெனரல் டேவிட் ஹர்லி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான மந்திரிசபையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 30 பேரை கொண்ட மந்திரி சபையில் 13 பேர் பெண்கள் ஆவர். அவுஸ்திரேலியா வரலாற்றில் மந்திரி சபையில் பெண்கள் அதிக அளவில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த ஆட்சியில் 7 பெண்கள் மட்டுமே மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தனர். அதேபோல் வரலாற்றில் முதல் முறையாக 2 முஸ்லிம்களும், பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் மந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்கள் கொட்டும் மழையில் குடை பிடித்து பரீட்சை எழுதிய செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றும் இட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,
நாட்டின் பல பாடசாலைகளில் குறைந்த வசதிகள் உள்ளன என்றும் ஆனால் முழுமையான கூரை இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.
Many schools have limited facilities but not having a complete roof is unacceptable! We need to re evaluate our priorities as a nation & ensure a better future for our children. We need not only educational but political & social reform! pic.twitter.com/qDLYXsUXUS
— Namal Rajapaksa (@RajapaksaNamal) June 1, 2022
ஒரு தேசமாக நமது முன்னுரிமைகளை மறு மதிப்பீடு செய்து, நம் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும்.
கல்வி மட்டுமல்ல, அரசியல் மற்றும் சமுக சீர்திருத்தமும் நமக்குத் தேவை எனவும் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று, நாட்டை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று, மீண்டெழுந்த நாடுகள் உலகில் இல்லை.
1998 இல் இருந்து ஆர்ஜன்டீனா 9 தடவைகள் ஐ.எம்.எப்பிடம் கடன் பெற்றுள்ளது. இந்த 9 தடவைகளும் அந்நாடு கடுமையான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தது.
சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று இலங்கை போன்ற சிறிய நாடுகளால் ஒருபோதும் மேலே வரமுடியாது.
கிறீஸ் எம்மை விட பல மடங்கு பெரிய நாடாகும். 13 வருடங்கள் ஐ.எம்.எப்பிற்கு சென்று, கடந்த வருடம் தான் அந்த நாட்டில் சிறியதொரு முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆனால், இந்தக் காலப்பகுதியில் நாட்டின் மின்சாரக் கட்டமைப்பு, நீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள், துறைமுகங்கள் என அனைத்தையும் கிறீஸ் விற்பனை செய்தது.
இதேபோன்று தான் இலங்கையிலும் ஏற்படும்.
இப்போதுள்ள ஆட்சியாளர்கள் இன்னும் இருந்தால் தனிநபர் கடன் தொகை இன்னமும் உயரும். கிறீஸ் நாட்டைப் போன்று, நாட்டின் ஏனைய சொத்துக்களையும் விற்பனை செய்யும் நிலைமை ஏற்படும்.
தனிநபர் வருமானத்தை விட தனிநபர் கடன்தொகை இன்று அதிகரித்துள்ளது. கோட்டா- ரணில்- ஹரின் போன்றோரை வைத்து நாட்டில் எதையும் செய்ய முடியாது. இவர்களால் மக்களை மீட்டெடுக்க முடியாது‘’ எனத் தெரிவித்தார்.
எதிர்வரும் சிறு போகத்திற்கு யூரியா உரத்தை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நிதி உதவிகளை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள உலக வங்கி அலுவலகத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விவசாய அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக விவசாய அமைச்சரான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அமைச்சின் செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார உட்பட பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்டனர்.
இம்முறை சிறு போக நெற்செய்கைக்குத் தேவையான இரசாயன உரங்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உலக வங்கியின் பிரதிநிதிகள் உரிய நிதியுதவியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி அரிசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியினால் வழங்கப்படும் ஆதரவை பாராட்டுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
நெல் பயிர்ச்செய்கை மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கு தேவையான உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்களை வழங்குவதற்கு உலக வங்கி போன்ற ஏனைய நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறையால் குழந்தைகளின் போசாக்கு குறைபாடு வேகமாக அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ ஆலோசகரான வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
முன்னெடுக்கப்பட்ட ஆய்வுக்கு அமைய 53 குழந்தைகளில் பதினொரு குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாடுடன் இருப்பதாகவும், நான்கு குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 நிலைமைக்குப் பின்னரும், தற்போதைய பொருளாதார நெருக்கடியாலும் குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளது.
பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் தங்களால் இயன்றவரை ஆரோக்கியமான உணவை வழங்குமாறும், அத்துடன் இலைக் காய்கறிகள் மற்றும் தானிய வகைகளை வழங்குமாறும் அவர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார்.
கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, விகாரமஹாதேவி பூங்காவிலிருந்து வார்ட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரையான பாதைகளுக்குள் நுழைய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இக்கோரிக்கையை நிராகரித்த கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டம் ஒழுங்கை மீறும் வகையில் செயற்பட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 95ஆவது பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.