வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்படும் – காணிகள் விடுவிக்கப்படும் !
அடுத்த 5 ஆண்டுகளில் வடக்கு கிழக்கில் உள்ள படைகளின் எண்ணிக்கை 50 வீதத்திலிருந்து 70 வீதத்திற்குக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகளும் விடுவிக்கப்படும் என தேசம்நெற்க்குக் கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
இது பற்றி தேசம்நெற்க்குத் தெரியவருவதாவது, பிரித்தானிய போன்ற மேற்குநாடுகள் போல் தேசிய மக்கள் சக்தி அரசும் தன்னுடைய இராணுவத்தை வினைத்திறன் மிக்க இராணுவமாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைத்து வினைத்திறன் மிக்க ‘ஸ்மாட்’ படையணிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது என பாதுகாப்புச் செயலர் ஓய்வுபெற்ற வைஸ் மார்சல் சம்பத் துயகொந்த தெரிவித்துள்ளார். டிசம்பர் 28இல் திருகோணமலையில் உள்ள நவல் அன் மரிரைம் அக்கடமியின் அணிவகுப்பை ஏற்று டிசம்பர் 31இல் ஓய்வுபெற்ற இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை கொமான்டர்கள் முன்னிலையில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசு இராணுவக் கட்டமைப்பை மீளாய்வு செய்வதாகக் குறிப்பிட்ட அவர் வளங்களை எவ்வாறு அதன் உச்ச பலனைப் பெறும்வகையில் பயன்படுத்துவது மற்றும் வினைத்திறனை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றியும் மீளாய்வுகள் செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டினார் பாதுகாப்புச் செயலர் சம்பத் துயகொந்த.
3,46.000 பேரைக்கொண்டு உலகின் 14வது பெரிய படையணியாக உள்ள இலங்கைப் பாதுகாப்புப் படையை 2030 இல் 1,00,000 ஆகக் குறைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசு திட்டமிட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்தவே தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் முயற்சிகளை எடுக்கின்றது. எதிர்காலத்தில் எண்ணிக்கையில் அல்லாமல் திறமையின் அடிப்படையில், தேவையான பிரிவுகளுக்கு மட்டுமே ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என பாதுகாப்புச் செயலர் துயகொந்த தெரிவித்தார். இலங்கைப் படைகள் 8 ஆண்டுகள் சேவைக்காலம் முடிய அல்லது 50 வயதை எட்டுகின்ற போது ஒய்வுபெறுவார்கள். எதிர்காலத்தில் ஆட்சேர்ப்புகள் மிகக் குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்படுவதால் படைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரச பணியாளர்களை 50 வீதமாகக் குறைக்க வேண்டும் எனச் சிபாரிசு செய்துள்ளது. இந்த அரச பணியாளர்களில் படையினரும் கணிசமான பங்கினர். இலங்கையின் சனத்தொகைக்கு இலங்கையில் உள்ள படையினரின் எண்ணிக்கை மிக அதிகம். அந்த அடிப்படையில் படைகளை 1,00,000 மாகக் குறைக்க வேண்டும் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் தேசிய மக்கள் சக்தியாலும் முன்னெடுக்கபடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் அடிப்படையிலேயே வடக்கு கிழக்கில் இராணுவத்தின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்து வருகின்றது. பெரும்பாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் – பொதுத் தேர்தலுக்கு முன் வடக்கு கிழக்கில் படையினரின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைக்கப்படும். மேலும் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படும் போது அவர்களுக்கு காணிகளும் அவசியமில்லாமல் போகும். இந்தப் பின்னணியில் இப்போதே காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதையும் பாதைகள் திறக்கப்படுவதையும் காணலாம்.
மேலும் புலனாய்வுத்துறையை வலுப்படுத்தி டிஜிற்றலைசேஸனை உள்வாங்கி பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் படையினரை போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்துவதில் ஈடுபடுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2024இல் இராணுவம் வழங்கிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் 451 கைதுககள் இடம்பெற்றுள்ளது. 5000 கிலோகிராமுக்கு அதிகமான கஞ்சா, கேரளா கஞ்சா, ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவத்தின் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் கசிப்பு சட்டவிரோத பீடிகள், சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் யால நீர்த்தேக்கப் பிரதேசத்திலும் உடவலவே பிரதேசத்திலும் மட்டும் 3,500 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது அதைவிடவும் 440,000 கஞ்சா கன்றுகள் அழிக்கப்பட்டுள்ளது. தற்போது யுத்தமற்ற சூழலில் இராணுவத்தின் தேவை வேறுவிதமான பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டு வருகின்றது.