செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ரோ உளவுப்படையைச் சேர்ந்த விமானம் கிளிநொச்சியை வான் வழி ஆய்வு செய்தது?

air.jpgகிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றிய அடுத்த நாள், இந்தியாவின் ரோ உளவுப் பிரிவைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் கொண்ட குழுவொன்று பாக்கு நீரினைப் பகுதியில் இரகசிய வான் வழி ஆய்வை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசின் உத்தரவுப்படி இந்த இரகசிய வான் வழி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  ரோ உளவுப் பிரிவின் வான்வெளி ஆய்வு மையத்திற்குச் (Air Research Centre- ஏ.ஆர்.சி.) சொந்தமான விமானம் மூலம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இந்த விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றுள்ளது. இந்த இரகசிய ஆய்வை, இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளின்படி ரோ உளவுப் பிரிவு மேற்கொண்டதா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து ரோ உளவுப் பிரிவின் நெருங்கிய வட்டாரத் தகவல்கள் கூறுகையில், அதி நவீன கருவிகளுடன் கூடிய அந்த உளவு விமானம், இலங்கை கடற்கரைக்கு மிக அருகே தாழ்வாக பறந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. பின்னர் மீண்டும் சென்னை திரும்பாமல் வேறு ஒரு விமான நிலையத்திற்கு அந்த விமானம் போய் விட்டதாக தெரிவிக்கிறது

ஏ.ஆர்.சியிடம் போயிங், கல்ப்ஸ்ட்ரீம் மற்றும் எம்பிரேயர்ஸ் ரக விமானங்கள் உளளன. இந்த விமானங்களில் அதிக உயரத்தில் பறந்தபடி, மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் 40 ஆயிரம் அடி உயரம் வரைக்கும் பறக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் சாட்டிலைட் கேமராக்களுக்கு இணையான துல்லியத்துடன் செயல்படக் கூடியவை. அடர்ந்த மேகக் கூட்டமாக இருந்தாலும் கூட அதைத் துளைத்துக் கொண்டு இலக்கை சரியாக கணித்து துல்லியமாக படம் பிடித்துக் காட்டும். 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும் கூட, தரையில் நடக்கும் ஒரு நபரையோ அல்லது ஒரு வாகனத்தையோ மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது இந்த வகை கேமராக்கள்.

ஏ.ஆர்.சியின் விமானங்களை ஓட்ட தனியாக பைலட்டுகள் உள்ளனர். இந்திய விமானப்படை விமானிகள் கூட இந்த வகை விமானங்களை ஓட்டுவதற்கு அழைக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மிக மிக ரகசியமான பணி என்பதால் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமானப்படை விமானங்களை ஏ.ஆர்.சியின் விமானங்கள் பயன்படுத்திக் கொள்வது வழக்கம். இதற்கென தனியாக விமான நிலையம் எதுவும் கிடையாது.

சென்னைக்கு ஏ.ஆர்.சி. விமானம் வந்தது கூட ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. எங்கிருந்து வந்தது என்பது கூட விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப் படவில்லையாம். இலங்கையின் கோரிக்கையின்படியே இந்த உளவு வான் வழி ஆய்வை ரோ உளவுப் பிரிவு மேற்கொண்டதாக நம்பப்படுகிறது.

இன்று மாகாண சபை முதலமைச்சர்களின் 25வது மாநாடு தொடர்பான விசேட கூட்டம்

cm.jpgமாகாண சபை முதலமைச்சர்களின் 25ஆவது மாநாட்டு ஏற்பாடுகள். தொடர்பாக கலந்துரையாடும் விசேட கூட்டமொன்று இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 25ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டினை இம்முறை மட்டக்களப்பு நகரில் நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாநகர சபையும், மாவட்ட செயலகமும் இணைந்து முதலமைச்சர்கள் மாநாட்டினை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் ஆலோசனைகளுக்கு அமைவாக மாவட்டத்தில் உள்ளூர் திணைக்களத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் மாநாட்டு ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பளையை நோக்கி படையினர் தொடர்ந்தும் முன்னேற்றம் -தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம்

army.jpgமுகமாலையில் புலிகளின் முன்னரங்கு பாதுகாப்பு நிலைகளைக் கைப்பற்றியுள்ள படையினர் தொடர்ந்தும் தெற்குநோக்கி கடும் தாக்குதல்களைத் தொடுத்தவாறு முன்னேறி வருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. முகமாலையில் 600 மீற்றர் தூரத்தைக் கைப்பற்றிய படையினர் பளையை நோக்கி தொடர்ந்தும் முன்னேறி வருகின்றனர்.

யாழ் – கண்டி ஏ – 9 வீதியில் தெற்கு நோக்கி முன்னேறும் படையினர் இந்த வீதியை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு இன்னமும் 20 கிலோமீற்றர் தூர பிரதேசத்தைக் கைப்பற்ற வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா ஓமந்தையிலிருந்து கிளி நொச்சி ஆனையிறவு தெற்குப் பிரதேசம் வரை ஏ-9 வீதி படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இந்நிலையில் வடமுனையிலிருந்து ஆனையிறவு நோக்கி இராணுவத்தின் 53 ஆம், 58ஆம் படைப்பிரிவினர் முன்னேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலையும், மாலையும் இடம்பெற்ற மோதல்களில் புலிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்களின் மூன்று சடலங்களையும் கைப்பற்றியதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார். இதில் இராணுவத்திற்குச் சிறு சேதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.  

ஈ.பி.டி.பி.யின் பெயரை தவறான செயலுக்கு பயன்படுத்தினால் உடனடியாக அறிவிக்கவும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு

epdp-121208.jpgஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெயரால் அல்லது அதன் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் பெயரால் எவரும் கப்பம் கோரியோ, கடனுக்கு பொருட்கள் மற்றும் காசு கோரியோ அல்லது நிதி, நன்கொடைகள் கோரியோ வந்தால் அவ்விடயம் தொடர்பாக உடனடியாக தனக்கு அறிவிக்கும்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை யாழ். வர்த்தகப் பிரமுகர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியபோதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இக்கோரிக்கையை முன்வைத்தார்.

இதன் பிரகாரம் தனது பெயரையோ, தனது அமைச்சின் பெயரையோ அல்லது தனது கட்சியின் பெயரையோ பயன்படுத்தி கப்பம் கோருதல், பணம் பறித்தல், பொருட்களை வாங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் வகையில் எவரும் எந்தவொரு வர்த்தக நிலையங்களுக்கும் வந்தால் உடனடியாகத் தனக்கு அறிவிக்கும் படியும் இல்லையேல் பக்கத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கும்படியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்படி வர்த்தகப் பிரமுகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, தனது பெயரையும் தனது கட்சியின் பெயரையும் பயன்படுத்தி எவரேனும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டால் அல்லது அநீதி விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் அவ்விடயம் தொடர்பில் உடனடியாகத் தனக்கு அறிவிக்கும் படியும் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அல்லது இராணுவ முகாம்களில் அறிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியானது பொதுமக்களிடம் எந்தவொரு அறவீடுகளையும் மேற்கொள்வதில்லை என்பதையும் மனித நேயமற்ற செயல்களில் ஈடுபடுவதில்லை என்பதையும் இங்கு உணர்த்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகளுக்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

உரிமைக்கு அங்கீகாரம் தமிழரின் உரிமையை நிராகரிப்பது எப்படி? – கேள்வி எழுப்புகிறார் ஹக்கீம்

hakeem_.jpgபலஸ்தீன மக்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசாங்கத்தினால் எப்படி தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை நிராகரிக்க முடியுமெனக் கேள்வியெழுப்பிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம், கிளிநொச்சி வெற்றிக்குப் பின் தமிழ் மக்களின் சுயமரியாதைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

கிளிநொச்சியில் படையினர் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இதன் போது வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடவேண்டுமென தமிழ், முஸ்லிம் மக்கள் மீது பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டது. இதனால், சில இடங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் பலாத்காரத்துக்கு அடிபணிந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடவேண்டிவந்தது. தமிழ் முஸ்லிம் மக்கள் மீது ஒரு போதும் பலாத்காரமாக நாட்டுப் பற்றை திணிக்கக் கூடாது. தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ விரும்புகிறார்கள். ஆனால், கிளிநொச்சி வெற்றிக்குப் பின் அவர்களின் சுயமரியாதைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசினால் தமிழ் மக்களின் சுய ஆட்சிக் கோரிக்கையை, உரிமையை எவ்வாறு நிராகரிக்க முடியும்?

புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதென்பது வெறும் பகல்கனவாகவே இருக்கும் – இராணுவத் தளபதி கூறுகிறார்

sarath-fonseka.jpg
பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள் என்பது வெறும் பகல் கனவாகவே இருக்குமென இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வெற்றி தொடர்பாக தொலைக்காட்சிகளுக்கு ஒரே நேரத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கிய விஷேட பேட்டியியொன்றிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு கூறியிருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறுகையில்; “புலிகளிடமிருந்து கிழக்கு வீழ்ந்த போது தற்காலிக பின்னடைவு என்றார்கள். துணுக்காய், மல்லாவி படையினர் வசமானபோதும் தற்காலிக பின்னடைவு என்றனர். கிளிநொச்சியை படையினர் நெருங்கும் போது, அது “மரணத்தின் முத்தம்’ என வர்ணித்தார்கள். கிளிநொச்சியை பிடிப்பது என்பது ஜனாதிபதியன் பகல் கனவென புலிகள் கூறினர். எனினும், நாம் கிளிநொச்சியையும் பிடித்திருக்கிறோம். எனவே, இவை அனைத்தையும் தற்காலிக பின்னடைவு என்று கூற முடியாது. கட்டுப்பாட்டில் இருந்த நிலப் பிரதேசத்தில் 90 சதவீதமான பகுதிகள் இழக்கப்படுமானால் அதை தற்காலிக பின்னடைவென்றோ அல்லது தந்திரோபாய பின்வாங்கலென்றோ கூற முடியாது. இது 10 அல்லது 20 சதவீதமாக இருந்திருந்தால் தந்திரோபாய பின்வாங்லென கூற முடியும்.

பிரபாகரன் மீண்டும் எழுச்சி பெறுவாரென்பது சிலரது கனவாக இருக்கிறது. அது தான் பகல் கனவாக இருக்குமென நான் நம்புகிறேன். இதேநேரம், கடந்த இரண்டரை வருட கால யுத்தத்தில் 15 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கிழக்கில் 2 ஆயிரம் புலிகளும் யாழ்.குடாநாட்டில் யுத்தத்தில் 1,500 புலிகளும் வடக்கில் ஏனைய 11 ஆயிரத்து 500 புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் படையினர் உயிரிழந்திருக்கின்றனர். பெரியதொரு கெரிலா இயக்கத்துடன் யுத்தம் புரியும்போது உயிரிழப்புகளும் காயங்களும் இன்றி யுத்தம் செய்ய முடியாது. யுத்தத்தின்போது கெரில்லா ஒருவரைக் கொல்ல படையினரில் 10 பேர் உயிரிழக்க வேண்டி வரும் என்பதே உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகும். எனினும், எமது நடவடிக்கைகளை பொறுத்தவரையில் 5 கெரில்லாக்கள் சாகும்போது படையில் ஒருவரே உயிரிழக்கிறார் என்பது எமக்கு வெற்றியாகும் என்று கூறினார்.

அரசியல் தீர்வு இப்போது அவசர தேவை கொழும்பை வலியுறுத்துகிறது பிரிட்டன்

kili-04.jpgகிளிநொச்சி நகரம் அரச படைகளால் கைப்பற்றப்பட்டிருக்கும் நிலையில் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றை அவசரமாக முன்வைக்குமாறு பிரிட்டன் இலங்கையை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் சகல சமூகங்களும் சுபிட்சமடைவதற்கு வலுவானதும் நிலையானதுமான சமாதானத்தை எட்டுவதற்கு இதுமட்டுமே வழிமுறை என்று பிரிட்டிஷ் தூதரகம் செவ்வாய்க் கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வெளிவிவகார, பொதுநலவாய அலுவலக பிரதியமைச்சர் மல்லோபிரவுண் பிரபுவும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் அலெக்சாண்டரும் இணைந்து இந்த அறிக்கையை விடுத்துள்ளனர். கிளிநொச்சி வீழ்ச்சி கண்ட பின்னரான நிலைமைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் நெருக்கமாக அவதானித்து வருகிறது. சகல சமூகங்களினதும் நியாய பூர்வமான கவலைகளை தீர்த்து வைப்பதற்கான அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு சகல தரப்பினரும் முன்னேற்றம் காணவேண்டியது மிகவும் அவசரமானதென்பதை தற்போதைய முன்னேற்றம் ஏற்படுத்தியுள்ளது.

மனிதாபிமான பாதிப்பு குறித்து நாம் கவலையுடன் இருக்கிறோம். சர்வதேச மனிதாபிமான சட்டவிதிகளுக்கு அமைவான கட்டுப்பாடுகளுக்கேற்ப சகல தரப்பும் செயற்படவேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு: 94 லொறிகளில் இன்று உணவுப் பொருட்கள்

aid-loryes1712.jpg
கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 94 லொறிகள் இன்று வன்னி புறப்படுமென வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். 94 லொறிகளில் பொருட்கள் கொண்டு செல்லப்படவுள்ளது. உலக உணவுத்தாபனம், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு 54 லொறிகளில் கோதுமை மா, பருப்பு சமையல் எண்ணெய், சீனி அடங்கிய சுமார் 600 மெற்றிக் தொன் பொருட்களை அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வவுனியா, தேக்கம்காடு களஞ்சியத்திலிருந்து லொறிகள் புறப்படும், அதேநேரத்தில், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுமதிக்கப்பட்ட சுமார் 300 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களும் மரக்கறிகளும் 40 லொறிகளில் அனுப்பிவைக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 20 லொறிகள் வீதம் பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி நகரம் பாதுகாப்பு படையினரிடம் வீழ்ந்த பின்னர் புறப்படும் முதலாவது உணவு லொறி தொடரணி இது என்பது குறிப்பிடத்தக்கது. வழமையான வீதி வழியாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் வழித்துணையுடன் உணவு தொடரணி வண்டிகள் செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை விடுவிக்கப்படாத கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டப் பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்கென வாராவாரம் 80 லொறிகளில் அத்தியாவசிய உணவு உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்டச் செயலாளர் நேற்றுத் தெரிவித்தார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்களின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப இப்பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்படாத பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்கென அரசாங்கம் அனுப்பிவைக்கும் அத்தியாவசியப் பொருட்களுக்கு மேலதிகமாக உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள் என்பவற்றினதும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 20 வருடங்களாக அதிகரிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் – மேதானந்த தேரோ

ellawela-thera.jpgநாட்டின் பாதுகாப்பையும், அபிவிருத்தியையும் ஒரே தருணத்தில் முன்னெடுத்துச் செல்லக்கூடிய தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. அவரது பதவிக்காலத்தை 20 வருடங்களாக அதிகரிக்கச் செய்வதற்கு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என எல்லாவல மேதானந்த தேரோ தெரிவித்தார்.  அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:-  வன்னியில் சுமார் 3000 அரச சார்பற்ற நிறுவனங்கள் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சுமார் 80 பில்லியன் ரூபா இப்பகுதியின் அபிவிருத்திக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  ஆனால் அவர்கள் புலிகளுக்குரிய பங்கர்கள், முகாம்கள், பதுங்கு குழிகளையே அபிவிருத்தி செய்திருக்கிறார்கள்.  பிரபாகரன் தான் ஒருவரே தலைவர் என்றும் அவரை தோற்கடிக்க முடியாது என்றும் மார்தட்டிக் கொண்டிருந்தார். பல தலைவர்களை நாம் இழந்திருக்கிறோம். படையினரை இழந்திருக்கிறோம். இதற்கு காரணம் எமக்குடையே ஒற்றுமை இல்லை. ஒற்றுமை இல்லாமையை பயன்படுத்திக் கொண்டார்கள்.

புலிகள் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையிலாவது பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட வேண்டும். இது தொடர்பாக சிந்தித்து செயற்படவும் வேண்டும. படையினர் வடக்கில் கைப்பற்றும் சகல பிரதேசங்களிலும் பெளத்த விகாரைகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்டகுளங்கள் இருக்கின்றன. 1500 குளங்கள் இருக்குமானால் 1500 கிராமங்கள் இருக்க வேண்டும். அப்படியானால் 1500 விகாரைகள் இருந்திருக்க வேண்டும். அதற்கான சான்றுகள் இருக்கின்றன.

117 தற்கொலைதாரிகள் கொழும்பினுள் ஊடுருவல்

laksman-yaappa.jpgவடக் கில் தமக்கு ஏற்படும் தோல்விகள் காரணமாக கொழும்பிலும், முக்கிய நகரங்களிலும் புலிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தக்கூடுமென அரசாங்கம் எச்சரித்துள்ளது. கொழும்பில் 117 தற்கொலைக் குண்டுதாரிகள் ஊடுருவியுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதென்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார் எனவே இது குறித்து ஊடகங்கள் மக்களை விழிப்படையச் செய்ய வேண்டுமென்று அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் பொதுமக்களை விழிப்படையச் செய்யும் பணியில் அனைத்து ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.