விடு தலைப் புலிகளுக்கும், படையினருக்கும் இடையே நடந்து வரும் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பலியாகி விடாமல் இலங்கை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. அகதிகள் ஏஜன்சியின் செய்தித் தொடர்பாளர் ரான் ரெட்மான்ட் கூறுகையில், இலங்கையில் தற்போது கடும் சண்டை நடந்து வரும் பகுதிகளில் அப்பாவித் தமிழர்கள் பலியாகி விடாமல் இலங்கை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பாவிகளுக்கு உரிய பாதுகாப்பினை இலங்கை அரசு அளிக்க வேண்டும். அப்பாவிகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 24 அப்பாவிகள் சண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இது கவலை தருகிறது.
கிழக்கு மாவட்டங்களான திரிகோணமலை மற்றும் மட்டக்களப்பிலிருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் மீண்டும் தங்களது பகுதிகளுக்கு திரும்பி வருகின்றனர்.ஆனால் தாங்கள் முன்பு போல சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்றும், ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் இந்த மக்கள் குறை கூறுகின்றனர். இவ்வாறு திரும்பி வந்த 50 குடும்பங்கள் அரசாங்கத்தின் கெடுபிடிகள் காரணமாக மட்டக்களப்பிலிருந்து மீண்டும் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். மற்றவர்களும் கூட தங்களது வீடுகளில் தனித்து தூங்க முடியாமல், மொத்தமாக சேர்ந்து தங்கும் அவலம் உள்ளது.
இப்பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் உரிய பாதுகாப்பு தரப்பட வேண்டியது அரசின் கடமையாகும். இதேபோல, தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பி வந்த நான்கு அகதிகள் திரிகோணமலை மாவட்டத்தில் கடத்தப்பட்டுள்ளனர். இது கவலை தருகிறது. கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்திலிருந்து 1500 அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். இது வரும் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் மறு வாழ்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இலங்கையின் வடக்கில் நடந்து வரும் சண்டையை ஐ.நா. அகதிகள் ஏஜென்சி உன்னிப்பாக கவனித்து வருகிறது. அங்கு இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்றார் அவர்.