செய்திகள்

செய்திகள்

செய்திகள்

திங்கள் மாலை பொரளையில் லசந்தவின் இறுதிக் கிரியை

lasa-body.jpgபடு கொலை செய்யப்பட்ட “சண்டே லீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிக் கிரியை எதிர்வரும் திங்கட்கிழமை மாலை பொரளை கனத்தையில் இடம்பெறவுள்ள நிலையில், இறுதி நிகழ்வில் இன, மத, கட்சி பேதமின்றி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.  எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு அழைப்புவிடுத்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது; “சண்டே லீடர்’ பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிக் கிரியை எதிர்வரும் திங்கட்கிழமை மாலை பொரளை கனத்தை மயானத்தில் இடம்பெறவுள்ளது. இவரது படுகொலையானது ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமையையும் மீறுவதால் அன்றைய தினம் அனைவரும் கட்சி, இன, மத பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டும். அதேபோல் இப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும் வெள்ளைக் கொடியையும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடிகளையும் நாட்டிலுள்ள மக்கள் பறக்கவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

தென்னிந்திய தமிழ் திரைப்படங்களை இலங்கையில் திரையிடப்படுவது தடை செய்யப்பட வேண்டும்!

tamil-cini.pngதென்னிந்திய தமிழ் திரைப்படங்களை இலங்கையில் திரையிடப்படுவது தடைசெய்யப்பட வேண்டும் என்று கோரிய சில சுவரொட்டிகள்  கண்டி நகரப்பகுதியிலும் மேலும் சில நகரப்பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்ததை காணமுடிந்தது. கண்டி மத்திய பேருந்து நிலையம் சந்தை தொகுதி கட்டிடங்கள் மற்றும் புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளில் தென்னிந்திய தமிழ் திரைப்படங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி

stop-terr-media.jpgசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்தும், ஊடக சுதந்திரத்தை அடக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரியும் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தின் அருகே நேற்று நண்பகல் 12.15 மணியளவில் அனைத்து ஊடகவியலாளர் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தின.  பேரணியின் போது பதாதைகளைத் தாங்கியவாறு ‘ஊடகங்களுக்கு எதிரான பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்’ போன்ற கோஷங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் எழுப்பப்பட்டன. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கறுப்புப் பட்டி அணிந்து காணப்பட்டனர். ஐந்து ஊடக அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி லேக் ஹவுஸ் அரச பத்திரிகை நிறுவனத்திற்கு முன்பாக நடைபெற்றது.

அன்று நிமலராஜன் நடேசன், சிவராம் இன்று லசந்த நாளை யார் என்று கேள்வி கேட்டும் முழக்கமிட்ட ஆர்ப்பட்டக்காரர்கள் இதுவரை காலமும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்குதலுக்குள்ளான ஊடக நிறுவனங்களின் விபரங்கள் அடங்கிய வாசக அட்டைகளையும் தாங்கியிருந்தனர். இதனிடையே பாதுகாப்பு நடவடிக்கைகளும் அங்கு பலப்படுத்தப்பட்டிருந்தன. கலகத் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் உட்பட பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த பலர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எனினும் எதுவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

பிரஜாவுரிமை; சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்

ratnasri.jpgஇந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்க (திருத்தச்) சட்டமூலமும், நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்க (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலமும் வியாழக்கிழமை சபையில் திருத்தங்களின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க இவ்விரு சட்டமூலங்களையும் சபைக்கு சமர்ப்பித்தார். இதில் இந்திய வம்சாவளியினரான ஆட்களுக்கு பிரஜாவுரிமை வழங்கல் திருத்தச் சட்டமூலம் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் நடைபெற்ற நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கல் சிறப்பேற்பாடுகள் திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதத்தின் இறுதியில் பதிலளித்து பேசிய பிரதமர் தெரிவிக்கையில்;

” சிரிமாசாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் எந்த ஒரு நாட்டுக்கும் உரித்தில்லாத ஒரு பகுதியினர் இருந்தனர். இவர்களுக்கு எந்த நாட்டினதும் பிரஜாவுரிமை இல்லாமல் இருந்தது. இம் மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் முகமாகவே சட்டமொன்று அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. இதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாகவே தற்போதைய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

எவராயிருந்தாலும் அவரவர்க்கென உரித்தான நாடொன்று இருக்கவேண்டும். அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் இலங்கையில் பிரஜாவுரிமை வழங்க செயற்படுவோம்.

இதன்போது, சிக்கல்கள் ஏற்படலாம். இவ்வாறான சிக்கல்களை பேச்சுகள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். நாம் அனைவரும் இவ் விடயத்தில் ஒருமித்து நேர்மையாக செயற்படுவோமாயின், முகம் கொடுக்கவேண்டியிருக்கும் சிக்கல்களை எதிர்கொள்வதில் கஷ்டம் இருக்காது’ என்றார்

‘புலிகள் இயக்கத்தடையை வெளிநாடுகளோ இராஜதந்திரிகளோ ஆட்சேபிக்கவில்லை’ – அமைச்சர் போகொல்லாகம

rohitha-bougo.jpgபுலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளமைக்கு இலங்கையிலுள்ள இராஜதந்திரிகளோ வெளிநாடுகளோ எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இலங்கை அரசாங்கம் நேற்று முன்தினம் இரவு முதல் தடை விதித்திருந்தது. அரசாங்கத்தின் இந்நிலைப்பாடு குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் மாநாடு நேற்று வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் போகொல்லாகம தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இராஜதந்திரிகள், இலங்கை அரசாங்கம் புலிகளை தடைசெய்தமை குறித்து ஒரு சிறு எதிர்ப்பை கூட வெளிப்படுத்தவில்லையென அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக எடுத்துள்ள இம்முடிவு அனைத்து நாடுகளும் விரும்பத்தக்க வகையில் அமைத்துள்ளதென்பதையே இது குறிக்கின்றது என தெரிவித்த அமைச்சர் இது அரசாங்கத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியெனவும் குறிப்பிட்டார்.

இராஜதந்திரிகளுடனான சந்திப்பையடுத்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தலதா மாளிகை மீது புலிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி அரசாங்கத்தினால் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கமும் புலிகளும் கைச்சாத்திட்ட போர் நிறுத்த உடன்படிக்கையைத் தொடர்ந்து அவ்வருடம் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி இருதரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இத்தடை நீக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க கடந்த இரண்டாம் திகதி கிளிநொச்சி முழுமையாக படையினரிடம் வீழ்ந்ததையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையில், பயங்கரவாதத்தை கைவிட்டுவிட்டு பேச்சுக்கு வருமாறு புலிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு முன்னரும் ஜனாதிபதி இதேபோன்றதொரு அழைப்பை விடுத்திருந்தார். ஆனால் புலிகள் தரப்பிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
 
இச்சந்தர்ப்பத்திலேயே கொம்பனித்தெருவிலுள்ள இலங்கை விமானப்படை தலைமையகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பாவி மக்களை இலக்கு வைத்து புலிகள் நடத்தும் இதுபோன்ற தாக்குதல்கள் அவர்கள் இன்னும் பயங்கரவாதத்தை கைவிடவில்லை யென்பதை நன்கு புலப்படுத்துகிறது. எனவேதான் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டதாகவும் அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாக புலிகள் இயக்கத்தை பிரகடனப்படுத்துவதன் மூலம் ஏனைய நாடுகளுக்கு அதனை அறிமுகப்படுத்துவதற்கு எமக்கு இலகுவாக இருக்கும். இதன் மூலம் புலிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் ஆயுத உதவிகளை எம்மால் நாளடைவில் முழுமையாக நிறுத்திவிட முடியும். புலிகள் இயக்கத்தை நாட்டினுள் தடைசெய்துள்ளமை எமக்கு நல்லதொரு ஆரம்பமாகுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் புலிகள் இயக்கத்தை தடைசெய்ய எவ்வாறான முயற்சிகளை முன்னெடுத்து வருகிர்களென செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை குறித்து பகிரங்கமாக எதுவும் தெரிவிக்க முடியாது. குறிப்பாக புலிகளுக்கு ஆயுதம் வழங்கும், அவர்களுக்காக நிதி சேகரிக்கும் நாடுகளிலேயே புலிகளை தடை செய்யவேண்டும்.

27 ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 31 நாடுகளில் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளனர். தமிழர் புனர்வாழ்வு கழகம் உள்ளிட்ட புலிகளை சார்பு படுத்தி வெளிநாடுகளில் இயங்கும் முன்னணி அமைப்புக்களை தடைசெய்யவேண்டும். வன்னி மக்களுக்கென இவர்கள் சேகரித்த நிதியில் அங்கு என்னென்ன அபிவிருத்திகளை முன்னெடுத்திருக்கிறார்களென கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர் உலக நாடுகளுக்கும் நன்கு விளங்கியிருக்கும். அவர்கள் அதுவரை அணிந்திருந்த முகமூடிகளை நாம் கழற்றிவிட்டோமெனவும் அமைச்சர் கூறினார்.

புலிகளின் வான் பலத்தை அழிக்க கவனம் செலுத்துமாறு ஐ.தே.க. வலியுறுத்தல்

parliment_inside.jpg
விடுதலைப் புலிகள் சிறு பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டிருக்கின்ற போதிலும் புலிகளின் வான் பலம் இன்னும் அழிக்க முடியாமல் போயிருப்பது குறித்து எதிர்வரும் நடவடிக்கைகளின் போது கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே அத்தநாயக்க எம்.பி. இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;  பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டுவதே எம் அனைவரினதும் பொறுப்பு. நாட்டில் பயங்கரவாதம் தொடர்வதை எவரும் விரும்பவில்லை. எனவே, பயங்கரவாதத்தை ஒழிக்க எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் எமது ஆதரவு உண்டு. படையினர் புலிகளிடமிருந்து பிரதேசங்களைக் கைப்பற்றி தங்களது வெற்றியை நிரூபித்துள்ளனர். இந்நிலையில், படையினரால் மீட்கப்பட்ட பிரதேசங்களை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் படையினரின் வெற்றி அர்த்தமற்றதாகி விடும். ஏனெனில், கடந்தகால சம்பவங்கள் இதற்குச் சான்றுபகிர்கின்றன.

இதேநேரம், வடக்கில் பல பிரதேசங்கள் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டிருந்தாலும் இங்கு தெற்கில் ஆங்காங்கே குண்டுகள் வெடிக்கின்றன. இம்மாதிரியான செயற்பாடுகளில் புலிகள் தொடர்ந்தும் ஈடுபடக் கூடும். எனவே, இம்மாதிரியான நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இராணுவத் தளபதி கூறியது போல புலிகள் சிறு பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது உண்மை. நாம் புலிகளின் பலத்தை உயர்த்திக் கூறவரவில்லை. எனினும், புலிகளின் வான் பலத்தை இன்னும் எம்மால் அழிக்க முடியாமல் போயுள்ளது. எனவே, எதிர்வரும் நடவடிக்கைகளின் போது அரசாங்கம் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

காஸாவில் போர் நிறுத்தம்: ஐ.நா. தீர்மானம்

gaza_.jpgகாஸாவில் இஸ்ரேல் தாக்குதலை உடனடியாக நிறுத்த வலியுறுத்தும் போர் நிறுத்தம் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தீரமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் இந்த தீர்மானத்தின் மீதான வாக்களிப்பில் அமெரிக்கா பங்கேற்கவில்லை. 3 நாட்கள் நடைபெற்ற கடும் விவாதத்தைத் தொடர்ந்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் தீர்மானத்தில் எஞ்சிய 14 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இஸ்ரேல் மீது பலஸ்தீனத்தை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதல்களில் இதுவரை 700க்கும் மேற்பட் டோர் கொல்லப்பட்டனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொன்டலிசா ரைஸ், இந்த தீர்மானத்தை, நோக்கத்தை அமெரிக்கா ஆதரிப்பதாக கூறினார்.

காஸா மீதான தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம்

gaasa.jpgகாஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலைக் கண்டித்து நேற்று (9) கொழும்பு உட்பட நாடு பூராவும் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஜும்ஆ தொழுகையின் போது விசேட துஆப் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் பொதுமக்கள் உட்பட பெருந்திரளான வர்கள் கலந்து கொண்டனர். காஸா மீதான குரூரமான தாக்குதலை நிறுத்துமாறும் சர்வதேச சமூகம் தலையிட்டு இதற்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.

கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலின் முன்பாக நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, தொழில் அமைச்சர் அதாவுத செனவிரத்ன, பலஸ்தீன தூதுவர், ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் ஹெட்டி, மு. கா. தலைவர் ரவூப் ஹக்கீம், மு. கா. உறுப்பினர் சபீக் ரஜாப்தீன், முஸ்லிம் உரிமைக்கான அமைப்பின் தலைவர் முஜீபுர் ரஹ்மான் உட்பட பெருந் திரளானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தென் கிழக்குப் பல்கலைக்கழக முஸ் லிம் மஜ்லிஸ், மாணவர் பேரவை மற்றும் பல்கலைக்கழக மாணவ கழகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப் பேரணி ஜும்ஆத் தொழுகையின் பின் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை ‌பிர‌ச்சனை‌யி‌ல் முறை‌யிடுவது கடை‌சி முய‌ற்‌‌சி: சோனியா காந்திக்கு ராமதாஸ் கடிதம்

raamadas.jpgமுல்லைத் தீவில் இன்று பெருமளவில் மனித உயிரிழப்பைத் தடுப்பதற்கு, முறையிடுவதற்கான கடைசிப் புகலிடமாக உங்களை (சோ‌னியாகா‌ந்‌தி) நான் அணுகி இருக்கிறேன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ், இலங்கையில் உடனடி போர்நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாகாந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‌விடுதலைப்புலி போராளிகளுக்கு எதிராக இலங்கைப் படையினர் போர் நடத்துகிறார்கள் என்ற போர்வையில், இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கிக் கொல்லப்படுவது குறித்துத் தமிழக மக்கள் கொந்தளிப்பு அடைந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இலங்கையில் நிலவும் அநீதியான நிலைமை குறித்துத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கவலை தெரிவித்துள்ளன.

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு அவர் தலையிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து வேண்டுகோள் விடுப்பதற்காக, கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி தூதுக்குழுவைத் தமிழக முதலமை‌ச்சர் கருணாநிதி தலைமை ஏற்று அழைத்துச் சென்றார்.

அமைதி முயற்சிகளைத் தொடங்குவதற்கு அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாகத் தமிழகத் தூதுக்குழுவினரிடம் பிரதமர் உறுதி அளித்தார். ஆனால் பிரதமர் வாக்குறுதி அளித்தபடி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்குச் செல்லவில்லை என்பதையும், தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலுக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்பதையும் வருத்தத்துடன் உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் தமிழ் மக்கள் பாதுகாப்புடன் வாழ்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரி ஆறு கோடி தமிழ் மக்களும் மத்திய அரசை அணுகினர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எனினும், இலங்கைத் தமிழ் மக்களும், இந்தியத் தமிழ் மக்களும் நீங்கள்தான் தங்களின் பாதுகாவலர் என்று உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.

முல்லைத் தீவில் இன்று பெருமளவில் மனித உயிரிழப்பைத் தடுப்பதற்கு, முறையிடுவதற்கான கடைசிப் புகலிடமாக உங்களை நான் அணுகி இருக்கிறேன். மத்திய அரசை ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பல்வேறு நடவடிக்கைகளை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.

அதே தகுதியில், இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தம் ஏற்படத் தலையிட வேண்டும் என்றும், இலங்கை அரசுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே பேச்சுக்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசுக்கு நீங்கள் ஆணையிட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்தச் சிக்கலை மிகுந்த மனிதநேயத்துடனும், அனுதாபத்துடனும் நீங்கள் அணுகுவீர்கள் என்றும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு அமைதியையும், பாதுகாப்பையும் மீட்டுத் தருவீர்கள் என்றும் நான் உறுதியுடன் நம்புகிறேன் எ‌ன்று அ‌ந்த கடி‌த‌த்‌தி‌ல் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

தனது உளவு விமானத்தை ‘ரோ’ ‘பிரபாகரனைக் கண்காணிக்கவே பயன்படுத்தி வருகிறது. – திருமாவளவன்

thiruma.jpgதனது உளவு விமானத்தை ‘ரோ’ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக் கண்காணிக்கவே பயன்படுத்தி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்மைக் காலமாக சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க இந்திய அரசு ராணுவ உதவிகளும் பண உதவிகளும் பெருமளவில் செய்து வருவது உறுதிப்பட்டு வருகிறது. கிளிநொச்சியை விட்டு விடுதலைப்புலிகளும் பொது மக்களும் இடம் பெயர்ந்துள்ள ஓரிரு நாட்களுக்குள் இந்திய அரசின் உளவு நிறுவனமான ரோ அமைப்பின் நவீன விமானம் ஒன்று தமிழீழத்தின் கடலோரப்பகுதிகளையும் காடுகளையும் கண்காணிப்பு ஆய்வு செய்வதற்கு 3-ம் தேதி அதிகாலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து சில ‘ரோ’ அதிகாரிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது.

உயர்ந்த தொழில் நுட்ப வேவு கருவிகளைக் கொண்ட இந்த வானூர்தி இரவு நேரத்திலும் தரையில் நடந்து செல்லும் ஒருவரை மிகத்துல்லியமாக புகைப்படம் எடுக்குமளவிற்கு ஆற்றலுடையது என்று தெரிய வருகிறது.

முதல் – அமைச்சர் கருணாநிதியின் முயற்சியில் இந்திய பிரதமரை சந்தித்து அனைத்துக்கட்சித் தலைவர்களின் கோரிக்கையையும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை வலியுறுத்திய தீர்மானத்தையும் புறந்தள்ளியது மட்டுமில்லாமல் முல்லைத்தீவுப் பகுதிகளைக் கண்காணிக்க ரோ அமைப்பின் அதிகாரிகளை உயர் தொழில் நுட்ப உளவு விமானத்தில் அனுப்பியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பிரபாகரனை காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. தமிழீழ விடுதலைப்போரை நசுக்கவும், அதன் தலைவரை அழித்தொழிக்கவும் இந்திய அரசு வெளிப்படையாக ஈடுபட்டிருப்பது தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்கவே முடியாத செயலாகும்.

இந்திய அரசு,  இந்தக் காட்டிக் கொடுக்கும் கேவலத்தை உடனடியாகக் கைவிடவில்லையெனில் பொங்கியெழும் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியேத் தீர வேண்டும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்