வன்னியில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் கிடையாதென்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் நிலைமையை விளக்கி ஐக்கிய நாடுகள் சபைக்கு உத்தியோகபூர்வ பதில் கடிதமொன்றை இன்னும் ஓரிரு நாளில் அரசாங்கம் அனுப்பவுள்ளதாகவும் அமைச்சர் சமரசிங்க, இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவிதமான நடவடிக்கையும் புலிகளைப் பலப்படுத்துவதற்கோ, படையினரை பலவீனப்படுத்துவதற்கோ இடமளிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான்கி மூனின், ஐ. நா. அகதிகள் விவகாரங்களுக்கான பிரதிநிதி வோல்ரர் கெலின் தெரிவித்துள்ளதைப் போன்று வன்னியில் எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லை. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குத் தொடர்ச்சியாக உணவுப் பொருள்களை அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. என்று தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து டிசம்பர் இறுதிவரை வன்னிக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருள்களின் விபரங்களையும் வெளியிட்டார். ‘வன்னியில் உணவு, மருந்து உள்ளிட்ட பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், சர்வதேச பிரதிநிதிகள் வன்னிக்குச் சென்று நிலைமைகளை அவதானிப்பதற்கு இடமளிக்கப்படுவதில்லை என்று வோல்ரர் கெலின் கூறியிருக்கின்ற தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்.
கடந்த 29ம் திகதி வன்னிக்குச் சென்ற உணவு லொறித் தொடரணியுடன் 10 சர்வதேச பிரதிநிதிகள் சென்றுவந்தனர். அங்கு மக்களை நேரில் சந்தித்தபோது, எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லையெனத் தெரிவித்துள்ளனர். உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளரும் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றார். என்று தெரிவித்த அமைச்சர் வோல்ரர் கெலின் வழமையை மீறி செயற்பட்டுள்ளாரென்றும், எவ்வாறெனினும் அவர் இரு வாரங்களுக்கு முன்பு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்திற்கு அரசாங்கத்தின் சார்பில் உத்தியோகபூர்வமாக பதில் அளிக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
‘ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுடன் தொடர்புகொள்ள வேண்டுமானால், அங்குள்ள எமது தூதரகத்தின் வாயிலாகவே விடயங்கள் கையாளப்பட வேண்டும். என்றாலும், அகதிகளுக்கான பிரதிநிதி வோல்ரர் கெலின் நேரடியாக பாதுகாப்புச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். இது பிழையான அணுகுமுறையாகும். இதுகுறித்து நாம் கலந்துரையாடியிருக்கின்றோம். ஆயினும், அவரது கடிதத்திற்கு உரிய பதில் அனுப்பப்படும். இதற்கு பாதுகாப்புச் செயலாளர் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லையெத் தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்ற அமைச்சர்,
‘கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் இடம்பெயர்ந்தோர் தொடர்பாக அரசாங்க அதிபர்கள் சமர்ப்பிக்கும் விபரங்கள் பிழையானவையாக இருக்கின்றன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வெவ்வேறு இடங்களிலும் பதிவாகியுள்ளன. எனவே, சரியான தகவல்களைத் திரட்டவுள்ளோம். தற்போதைக்கு கிளிநொச்சியில் 29,197 குடும்பங்களைச் சேர்ந்த 1,12,254 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 26,670 குடும்பங்களைச் சேர்ந்த 98,707 பேரும் மொத்தம் 2,10,000 பேருக்கு ஜனவரியிலிருந்து 9 வாகனத் தொடரணிகளில் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உலக உணவுத் திட்டத்திற்கு மேலதிகமாக முல்லைத்தீவுக்கு 24,769 மெட். தொன் உணவுப் பொருள்களும், கிளிநொச்சிக்கு 21,850 மெட். தொன் உணவுப் பொருள்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தகரம் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. எந்த நடவடிக்கையையும் புலிகளைப் பலப்படுத்தும்படி மேற்கொள்ளப்பட மாட்டாது. டிசம்பரில் மாத்திரம் ஒரு இலட்சம் கிடுகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதேநேரம் இந்தியாவிலிருந்து கிடைத்த உதவிப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.