மாலைதீவு புதிய ஜனாதிபதி மொஹமட் அன்னி நஸீத் இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (2) இலங்கை வருகிறார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை 10.30 மணியளவில் வந்தடையும் மாலைதீவு ஜனாதிபதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்கவுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு பெரு வரவேற்பு வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று இலங்கை வரும் மாலைதீவு ஜனாதிபதியுடன் அந்நாட்டு அமைச்சர்கள், உயர் அதிகாரி உள்ளிட்ட 25 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் வருகை தரவுள்ளனர்.
மொஹமட் அன்னி நஸீத் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கைக்கான முதலாவது விஜயம் இதுவாகும். எதிர்வரும் 4ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் மாலைதீவு ஜனாதிபதி இன்று பிற்பகல் 3.45 மணியளவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவை சந்தித்த பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை 5.00 மணியளவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் அன்னி நஸீத்துக்கும் இடையிலான இரதரப்பு சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இரு நாட்டு உறவுகளை மேலும் மேம்படுத்துதல் தொடர்பாகவும் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது வரிவாக ஆராயப்படவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு மாலைதீவு ஜனாதிபதிக்கு விஷேட இரவு விருந்துபசாரமொன்றையும் வழங்கவுள்ளார். இது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது. இதேவேளை, மாலைதீவு ஜனாதிபதிக்கும் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளை ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.
இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களை சந்திக்கும் மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வர்த்தக சம்மேளன பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மாலைதீவு ஜனாதிபதியுடன் அந்நாட்டின் வெளிவிவகார, கலாசார, நீதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் வருகை தரவுள்ளனர்.
நாளை மறுதினம் காலை (4) மாலைதீவு ஜனாதிபதி தனது இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பவுள்ளார்.