காஸாவில் காயமடைந்தோருக்கு சிகிச்சையளித்தல் மற்றும் உணவு, உடை, இருப்பிடங்கள் போன்ற முக்கிய தேவைகளை அவசரமாக அனுப்பி வைப்பதென ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டமைச்சர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இந்தக் கூட்டம் நடந்தது. காஸா, இஸ்ரேல் பிரச்சினைகளுக்கு இராணுவ ரீதியிலன்றி பேச்சுவார்த்தைகளூடாக முடிவு காணப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய யூனியன் இரு தரப்பையும் நிரந்தர யுத்த நிறுத்தத்துக்கு இணங்குமாறு கோரியுள்ள இஸ்ரேலின் தாக்குதலையோ ஹமாஸ் நடத்திய ரொக்கட் தாக்குதலையோ இம்மாநாடு கண்டிக்கவில்லை யென்பதும் குறிப்பிடத்தக்கது.
காஸாவின் சகல எல்லைகளையும் திறந்து காயமடைந்தோர் வெளியேற இஸ்ரேல் அனுமதிக்க வேண்டுமெனவும் ஐரோப்பிய மாநாடு இஸ்ரேலைக் கேட்டுள்ளது. பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் இஸ்ரேல் வெளிநாட்டமைச்சர் சிபிலிவினியுடன் தொலைபேசியில் இது குறித்து உரையாடியுள்ளார். இன்று சிபிலிவின் பிரான்ஸ் புறப்பட ஏற்பாடாகியுள்ளது. ஜெரூஸலத்துக்கு பிரான்ஸ் ஜனாதிபதி சர் கோஷி விஜயம் செய்து இஸ்ரேல் பிரதமர், பலஸ்தீன ஜனாதிபதி ஆகியோரைச் சந்திக்கவுள்ளதாக வெளியான செய்தியை இஸ்ரேல் மறுத்துள்ளது.
இது இவ்வாறுள்ள நிலையில் ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் சிரியா, எகிப்து, இஸ்ரேல் அதிகாரிகளுடன் காஸா நிலைவரம் பற்றிப் பேசினார். ஐரோப்பிய வெளிநாட்டமைச்சர்கள் மாநாட்டின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தபோது காஸா மீது தாக்குதல் தொடுத்த இடங்களையும், இலக்குகளையும் இஸ்ரேல் வீடியோவில் காட்டியது. சில இடங்களை இஸ்ரேல் தாக்கியதாக அறிவிக்க ப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட ஹமாஸின் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறும் இஸ்ரேல் பொதுமக்களின் இழப்பை இயன்றவரை தவிர்த்த போதும் துரதிர்ஷ்டவசமாக சிலர் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் சமாதான வழியில் செல்லவுள்ளபோதும் இஸ்ரேலின் மனிதாபிமான மற்ற செயல் குறுக்கேயுள்ளதாக ஹமாஸின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸின் ரொக்கட் தாக்குதல் தொடர்ந்தால் தரை மார்க்கமான இராணுவ முற்றுகையை ஆரம்பிக்க இஸ்ரேல் தயாரென வெளிநாட்டமைச்சர் தெரிவித்துள்ளார். லெபனானிலிருந்து மருந்து வகைகள், ஆடைகள், உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு காஸா சென்ற கப்பலை இஸ்ரேல் வழிமறித்து திருப்பி அனுப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.