செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான இறுதி யுத்தத்திற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும்- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

president.jpg
பயங்கரவாதத்துக்கு எதிரான இறுதி யுத்தத்திற்கான ஆணையினை எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களை கேட்டுள்ளார். கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர்களை வரவேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;

பயங்கரவாதத்துக்கு எதிரான இறுதி யுத்தத்தினை மேற்கொள்வதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத்தேர்தலில் மக்கள் தீர்மானித்து ஆணைவழங்க வேண்டும். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இராணுவத்தினர் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர். இந்நிலையில் இறுதி யுத்தத்தை முறியடிப்பதற்காக முயற்சித்து வருவதனால் அவர்களுக்கு பாடம் புகட்டி அரசுக்கு ஆணைவழங்க வேண்டுமென்றும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். மாவட்ட வைத்தியர்கள் 67 வயதின் பின்னரும் சேவையாற்றலாம் – வடமாகாண சுகாதார செயலர் தகவல்

surgery.jpgவட மாகாணத்தில் உள்ள வைத்திய சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் மீளச் சேவையாற்றிவரும் வைத்தியர்கள் தாம் விரும்பினால் 67வயதுக்குப் பின்னரும் சேவை புரிய விண்ணப்பிக்கலாம் என வட மாகாண சுகாதார சுதேச வைத்தியத் துறை அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் யாழ்.பிரந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நிறுவனத் தலைவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தியபோது தெரிவித்தார். வடமாகாண சுகாதார சுதேச  வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை வருகை தந்த செயலாளர் அன்று பி.ப. 2மணிக்கு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக மகாநாட்டு மண்ட பத்தில் நிறுவனத் தலைவர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலின் போது நிறுவனத் தலைவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தார். யாழ்.பிரந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் பின்வருமாறு தெரிவித்தார்.

சேவையில் இருந்து இளைப்பாறிய வைத்தியர்களை மீளவும் 67 வயது வரை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு அமர்த்தலாம் என்பது அரசு சுற்றறிக்கை. ஆனால் யாழ். மாவட்டத்தில் நிலவும் வைத்தியர் களின் பற்றாக்குறையை கருத்திற் கொண்டு 67 வயதுக்குப் பின்னரும் இவர்களை ஒரு வருடகாலத்திற்கு சேவையாற்ற அனுமதிக்க முடியும். ஆனால் இக் காலப்பகுதியில் இவர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படும்.

யு.எஸ். பசுபிக் படைப்பிரிவின் உயர்மட்டக்குழு கிழக்கு மாகாண முதலமைச்சருடன் சந்திப்பு

cm.jpgகிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி வேலைகள் மற்றும் விடுவிக்கப்பட்ட சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் திருகோணமலைக்கு விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்காவின் யு.எஸ். பசுபிக் படைப்பிரிவின் உயர்மட்டத் தளபதிகள் குழுவிற்கும் யு.எஸ். எயிட் உயர்மட்டக் குழுவிற்கும் இடையே நடந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

திருகோணமலையில் கிழக்கு மாகாணப் பிரதம செயலகத்தில் முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் அவரின் சிரேஷ்ட ஆலோசகர் டாக்டர்.கே. விக்னேஸ்வரன், ஊடகப்பேச்சாளர் ஆஸாத் மௌலானா ஆகியோர் பங்குபற்றினர். யு.எஸ்.எயிட் அமைப்பின் தலைமைப் பணிப்பாளர் ரிபெக்கா கொய்ன், யு.எஸ். பசுபிக் கமாண்ட் தளபதி மேஜர் ஜெனரல் தோமஸ் என். கொனன்ட் (தந்திரோபாயக் கொள்கை மற்றும் திட்டமிடல் பணிப்பாளர்), தெற்காசியப்பணிப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கல் சி பெற்றிகு? அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரியும் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான பாதுகாப்பு அதிகாரி லோறன்ஸ் ஏ. சிமித் ஆகியோரும் பங்குபற்றிய இச்சந்திப்பு ஒரு மணி நேரம் வரை நடைபெற்றது.

தமிழர் விரோத நடவடிக்கைகளை சோனியாகாந்தி தடுத்துநிறுத்த வேண்டும்

vmani.jpgகாங் கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை கருதியாவது இலங்கையில் போரை தடுத்து நிறுத்த இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “இலங்கையில் போரை நிறுத்தவும் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் இழப்பை தடுக்கவும் மத்திய அரசு இனியாவது தனது மௌனத்தை கலைக்கவேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இலங்கைக்கு கிரிக்கெட் அணியை அனுப்புவது நீரோ மன்னனின் செயல் போன்றது என்று தெரிவித்துள்ள வீரமணி, பாகிஸ்தானுக்கு அனுப்பமாட்டோம் என்று அறிவித்த இந்திய அரசு இலங்கைக்கு மட்டும் கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை கருதியாவது தமிழர் விரோத நடவடிக்கைகளை அதன் தலைவர் சோனியா காந்தி தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

மட்டு. மத்திய கல்வி வலயம் 2009 ஐ கல்வி அபிவிருத்தி ஆண்டாக பிரகடனம்

batti_.jpgமட் டக்களப்பு மத்திய கல்வி வலயப்பிரிவு பாடசாலைகளில் இவ்வருடம் கல்வி அபிவிருத்தி ஆண்டாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தின் கல்வி நடவடிக்கைகளை மேலும் முன்னேற்றுவதற்கான ஏற்பாடுகளை வலயக்கல்விப்பணிப்பாளர் யூ.எல். எம். ஜெய்னுத்தீன் மேற்கொண்டிருப்பதாக ஏறாவூர் கோட்டக்கல்வி அதிகாரி ஐ. எல். இஸட் ஆப்தீன் தெரிவித்தார்.

புதிதாக நிறுவப்பட்டிருக்கும் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயப்பிரிவில் 62 பாடசாலைகள் உள்ளன. கிழக்கில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறுபட்ட அனர்த்தங்கள், மோதல் சூழ்நிலைகள் காரணமாக மட்டக்களப்பு மத்திய கல்வி வலயப் பிரிவின் பாடசாலைகளது கல்வி நிலைமை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அதனை ஈடுசெய்யும் வகையிலேயே இவ் வருடம் இப்பிரதேசத்தில் கல்வி அபிவிருத்தி ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்பேரில் மிக வேகமான செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக கோட்டக்கல்வி அதிகாரி குறிப்பிட்டார்.

கல்வித்துறை இன்று வித்தியாசமான பரிமாணத்தினைக்கொண்டு நாளும் பொழுதும் விரிவடைந்து செல்கின்றது. இந்த மாற்றத்திற்கு ஏற்பவே நாமும் கல்வித் துறையில் வீறு நடைபோட வேண்டியுள்ளது. இது காலத்தின் கட்டாயமாகும். தரமான கல்வியின் மூலம் தரமான பிரஜைகளை நாட்டிற்காக உருவாக்கிக்கொடுக்க வேண்டியது ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மற்றும் கல்விசார் ஆளணியின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்றும் கோட்டக்கல்வி அதிகாரி மேலும் தெரிவித்தார்.

உண்ணாவிரதத்தை முடித்தார் திருமா

thirumma.jpgஇலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சென்னையை அடுத்த மறை மலைநகரில் கடந்த 15-ந் தேதி  உண்ணாவிரதம் தொடங்கினார்.  இன்று நான்காவது நாட்களாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

அவரது உடல் நலன் கருதி, தமிழக முதல்வர் கருணாநிதி,  பாமக நிறுவனர் ராமதாஸ்,  ஆற்காடு வீராசாமி,  தா.பாண்டியன்.  என்.வரதராஜன் உட்பட பல்வேறு அரசியல்  தலைவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தினர். இன்று திருமாவளவனின் தாயார் பெரியம்மாவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இன்றூ மாலை  பாமக நிறுவனர் ராமதாஸ், ஈழ போராட்டத்திற்கு உண்ணாவிரதம் சரியல்ல. வேறு வகையில்  போராடுவோம் என்று சமாதானப்படுத்தி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்துள்ளார்.

காஸாவில் இஸ்ரேல் போர் நிறுத்தம்

gaza_war02.jpg
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் கடந்த 22 நாட்களாக நடத்தி வந்த படுகொலைத் தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய பயங்கர ஏவுகணை, விமானப் படை, டாங்கிப் படை தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். காஸா பகுதியின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நொறுக்கப்பட்டுவிட்டன. மின்சாரம், குடிநீர் சப்ளை கட்டமைப்பையும் இஸ்ரேல் தகர்த்துவிட்டது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பாலங்கள், சாலைகள் ஆகியவற்றையும் இஸ்ரேல் சிதறடித்துள்ளது.

காஸாவில் தாக்குதலை நிறுத்துமாறு உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தினாலும் அதை அந்த நாடு காதில் போட்டுக் கொள்ளவில்லை. இஸ்ரேலை நெருக்குவது போல அமெரிக்கா வழக்கம் போல நடித்தாலும் தாக்குதலை நிறுத்த உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் போதி அளவுக்கு காஸாவை உருக்குலைத்துவிட்டதையடுத்து போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர் எகுட் ஓல்மார்ட் இன்று அறிவித்தார். அதே நேரத்தில் படைகள் தொடர்ந்து காஸா பகுதியில் நிலை கொண்டிருக்கும் என்றார்.

காஸாவில் இயங்கி வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டதால் தற்போது இந்தப் போரை நிறுத்திக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். ஆனால், இஸ்ரேல் மீதான தங்களது தாக்குதல் தொடரும் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது.

4வது நாளாக உண்ணாவிரதம்: திருமா மயக்கம்

thirumma.jpgஇலங்கையில் போரை நிறுத்தக் கோரி 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு இன்று மயக்கம் ஏற்பட்டது. கடந்த 15ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய அவர் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார்.

இன்று காலை அவர் மிகவும் சோர்வுடன் மயங்கிய நிலையில் காணப்பட்டார். பேண்ட், சட்டை உடையிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த அவர் நாற்காலியில் துவண்டு போய் காணப்படுகிறார். அவரது உடலை டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய்விட்டதால் அவருக்கு மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டு வருகிறது. வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துவதால் வயிற்று புரட்டலும் ஏற்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவி்த்தனர். திருமாவளவனின் தாயார் பெரியம்மா கூறுகையில்,

திருமா உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். அதை அவன் உடனே கைவிட வேண்டும். இங்கு கூடியிருக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து திருமாவை உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று கண் கலங்கினார்.

ஏ-9 வீதி புனரமைப்புப் பணி இம்மாத இறுதியில் ஆரம்பம் – இரு மாதங்களில் பஸ் போக்குவரத்து

bus-17o1.jpgஏ-9 வீதி புனரமைப்புப் பணிகளை இம்மாதம் இறுதியில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க தெரிவித்தார். கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ஏ-9 வீதியினூடாக போக்குவரத்து நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஏ-9 வீதியில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் புனரமைப்புப் பணிகளை உடன் ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறினார்.

வுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான 130 கிலோமீட்டர் தூரமான வீதி செப்பனிடப்படவுள்ளதாக வும் இது குறித்து பொறியியலாளர்கள் அடங்கலான குழு நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். வீதியை புனரமைப்பதற்கான செலவு குறித்து மதிப்பீடு செய்து வருவதாகவும் இதுவரை 8 கம்பனிகள் வீதியை செப்பனிடும் பணிகளை முன்னெடுக்க முன்வந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். வீதி செப்பனிடும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக 20-30 கிலோ மீட்டர் வரையான பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் வழங்க உத்தேசித்துள்ளதா கவும் அவர் தெரிவித்தார். ஏ-9 வீதியை செப்பனிடும் பணிகளை துரிதமாக பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதா கவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை இன்னும் 2 மாதங்களில் ஏ-9 வீதியில் பஸ் போக்குவரத்துகளை ஆரம்பிக்க உள்ளதாக போக்கு வரத்து அமைச்சர் டளஸ் அலஹப்பெரும கூறினார். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களை அழை த்து வருவதற்காக இ.போ.ச பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டு ள்ளதாகவும் அவை ஏ-9 வீதியினூடாக மக்களை அழை த்து வருவதாகவும் அமைச்சர் கூறினார். இதற்கென 6 பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதேவேளை மன்னாரில் இருந்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்துக்கான ஏ-32 வீதியை செப்பனிடும் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஈழத்தமிழர்கள் பிச்சைக்காரர்களா? எம்.பி. சிவாஜிலிங்கம்

Sivajilingam M K_TNA MPஇலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்து வரும் திருமாவளவன் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்யும் இந்திய அரசு மீதும் ஆவேசப்பட்டுள்ளார்.

’’திருமாவளவனின் உடல்நிலை கருதி அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திருமாவளவனின் நலம் ஈழத்தமிழர்களுக்கு முக்கியம். அவர்கள் அவர் மீது அவ்வளவு மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ் ஈழத்தில் இருந்து தலைவர்கள் வருவார்கள். அவர்களும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்துவார்கள். திருமாவளவன் அவர்களது அந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.

ஈழப்பிரச்சனையைப் பொறுத்தவரையில் மத்திய, மாநில அரசைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அப்படி பேசினால் கொடூரமான பேச்சாக இருக்கும். அதனால் நான் பேச விரும்பவில்லை. ஆனாலும் ஒன்றை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சிவசங்கர் மேனன் பேசுகையில் இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய அரசு ஒரு கோடியே எழுபது லட்சம் நிவாரண நிதி வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஈழமக்கள் நிவாரணத்தை மட்டுமே எதிர்பார்த்து நிற்கும் பிச்சைக்காரர்களா என்ன. சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காக முதல்வர் கருணாநிதி தன் பணத்தில் ஒரு கோடி கொடுக்கிறார். அப்படியிருக்க ஒரு இந்திய அரசு வெறூம் ஒரு கோடி எழுபது லட்சம் கொடுப்பதாக சொல்லியிருப்பதை என்னவென்று சொல்வது’’.