அடிப்படை உரிமைகள் மனு மீதான உயர்நீதிமன்றத்தின் எந்தவொரு தீர்மானத்திற்கும் அரசியலமைப்பின் 188 ஆவது சரத்தின் பிரகாரம் நிறைவேற்றதிகாரம் (ஜனாதிபதி) இணங்க வேண்டும் என்று நேற்று செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கும் அதேசமயம், பெற்றோலின் விலையை லீற்றர் 100 ரூபாவாக ஏன் குறைக்க முடியாதென்பதற்கான காரணத்தை தெரிவிப்பதற்கு ஜனவரி 27 வரை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் நேற்று எரிபொருள் விலை மற்றும் ஹெட்ஜிங் தொடர்பான அண்மைய விடயங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை பரிசீலனைக்கெடுத்து பரந்துபட்ட அளவில் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் டீசல், மண்ணெண்ணெயின் விலைகளை குறைத்திருப்பதுடன் பெற்றோல் விலையையும் குறைத்திருப்பதாகவும் திறைசேரியின் செயலாளருக்காக ஆஜரான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் எஸ். இராஜரெட்ணம் நீதிமன்றத்துக்கு தெரிவித்தார். அதேவேளை, நீதிமன்றத்தின் பணிப்புரைக்கமைய பெற்றோலியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதால் தமது வாடிக்கையாளருக்கு அதிகளவு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஏனெனில் சுங்கத்தீர்வை விலக்கை அளிக்க அரசாங்கம் தவறிவிட்டதால் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2008 டிசம்பர் 17 இல் விடுக்கப்பட்ட இடைக்கால உத்தரவை ஏன் அமுல்படுத்த முடியாது என்பதற்கான காரணத்தை திறைசேரி செயலாளர் தெரிவிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் விரும்பினால் அது தொடர்பாக நீதிமன்றத்திற்கு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டுமெனவும் நீதிமன்றம் பணித்துள்ளது.
லாவ் காஸ் தலைவர் டபிள்யூ.கே. எச் வேகல் பிட்டிய, ரவி கருணாநாயக்கா எம்.பி. மற்றும் இருவர் உட்பட மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்ற உத்தரவு முழுமையாக அமுல்படுத்தப்படாவிடின் தமது மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்வார்களென நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர். மனுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டால் வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விடும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்திற்காக ஜனவரி 27 இல் விசாரணை இடம் பெறவுள்ளது.