செய்திகள்

செய்திகள்

செய்திகள்

எல்ரிரிஈயினர் ஒன்றுகூடும் இடங்களை இலக்குவைத்து விமானத்தாக்குதல் –

mi24-1912.jpgஇலங்கை விமானப் படையினரின் எம்ஐ.24 ஹெலிகொப்டர் மற்றும் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி எல்ரிரிஈயினர் ஒன்று கூடும் இடங்களை இலக்கு வைத்து மூன்றாவது செயலணி படையினருக்கும் 57வது டிவிசன் படையினருக்கும் உதவியாக இரணமடுப்பகுதியில் இன்று (ஜன:12) காலை தாக்குதல் நடத்தியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானப்படைப் பேச்சாளர் விங்கமான்டர் ஜனக நானயக்கார தகவல் தருகையில் இன்று காலை 8.15 மணியளவில் இரணமடுவுக்கு 1 கி.மீ.தென்கிழக்காக எல்ரிரிஈயினர் ஒன்று கூடும் இடத்தை எம்ஐ 24 ஹெலிபொப்டரினாலும் இரணமடுவுக்கு 2 கி.மீ. வடக்காக மற்றுமொரு ஒன்று கூடும் இடத்தை காலை 9.00 மணியளவில் ஜெட்விமானங்களினால் தாக்கியதாகவும் தெரிவித்தார்.

ஏ-35 பாதையை கைப்பற்றும் தாக்குதல் தொடர்கிறது

SL_Army_in_Killinochieதாக்குதல் படையணியான 58வது டிவிசன் படையினர் ஏ-35 (பரந்தன் -முல்லைத்தீவு) வழியே மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி நேற்று (ஜன:11) தாக்குதல் நடத்தி குறிப்பிடத் தக்க தூரத்தை முன்னேறியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்றுப் பகல் பொழுதில் முரசுமோட்டை மற்றும் வட்டக்கச்சி பகுதிகளுக்கு வடக்காக எஞ்சியிருக்கும் எல்ரிரிஈ மறைவிடங்களை தேடி அழிக்கும் பனியில் ஈடுபட்டு வந்தனர்.

முரசுமோட்டைப் பகுதியில் தாக்குதல் நடத்திய படையினர் 4 பயங்கரவாதிகளின் சடலங்களையும் இரு ரி-56 ரக துப்பாக்கியையும் வட்டக்கச்சிப் பகுதியில் தாக்குதல் நடத்திய படையினர் மூன்று பயங்கரவாதிகளின் சடலங்களையும் கைபற்றியுள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

100 சிவிலியன்கள் அரச பகுதிக்குள் வருகை

ahathi.jpgமுல்லைத்தீவிலுள்ள புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 28 குடும்பங்களைச் சேர்ந்த 100 சிவிலியன்கள் நேற்று பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். பரந்தன், பெரிய பரந்தன், காஞ்சிபுரம் மற்றும் வட்டக்கச்சி ஆகிய பிரதேசங்கள் ஊடாகவே ஓமந்தையை நோக்கி 100 சிவிலியன்களும் வருகை தந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இந்த 100 சிவிலியன்களில் 22 சிறுவர்கள், 23 சிறுமிகள், ஆண்கள் 30, பெண்கள் 20 ஆகியோர் அடங்குவர். வழக்கமான விசாரணைகளுக்கு பின்னர் நலன்புரி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காஸா பொதுமக்களுக்கு – இஸ்ரேல் எச்சரிக்கை

gaza_war02.jpgகாஸாவில் உள்ள பொதுமக்கள் ஹமாஸ் பயன்படுத்தும் கட்டிடங்கள் அருகே செல்ல வேண்டாம் என இஸ்ரேல் துண்டுச்சீட்டுகள் மற்றும் தொலைபேசி மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதன் மூலம் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் புதிய சண்டை யுக்தியை பயன்படுத்தலாம் என்ற பலத்த யூகம் நிலவுவதாக ஜெருசேலத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார். இதற்கிடையே, வடக்கு காஸாவில் ஜபல்யா வீதியில் இஸ்ரேலின் எறிகணை தாக்குதலில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரமாக நடைபெறும் மோதலில் எண்ணூறுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இதில் பதிமூன்று இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர், இவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தினர்.

மேனன், அகாஸி கொழும்பு வருகின்றனர்

yasusi.jpgமுல்லைத்தீவு மீதான இறுதித் தாக்குதலை படையினர் எவ்வேளையிலும் ஆரம்பிக்கலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் இவ்வாரம் இலங்கைக்கு இரு முக்கிய இராஜ தந்திரிகள் விஜயம் செய்யவுள்ளனர்.  இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும் ஜப்பானின் விஷேடதூதுவர் யசூசி அகாஸியுமே அடுத்த ஓரிரு தினங்களில் கொழும்பு வரவுள்ளனர்.

வடக்கே நடைபெறும் போரை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புமாறு, தமிழக முதலைமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் தமிழகக் கட்சிகள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்தும் பலமுறை கடிதம் மூலம் கோரியும் அதனை ஏற்க இந்திய மத்திய அரசு மறுத்த நிலையிலேயே சிவ்சங்கர் மேனன் கொழும்பு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியை படையினர் கைப்பற்றுவதற்கு முன்னரே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. எனினும் கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னரே இந்திய மத்திய அரசு தனது வெளிவிவகாரச் செயலாளரை கொழும்புக்கு அனுப்புகிறது.

லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிச்சடங்கில் அணிதிரண்டு பங்கேற்க நாட்டுமக்களுக்கு ரணில் அழைப்பு

ranil-2912.jpg
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிச்சடங்கில் நாட்டு மக்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டு அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  அடக்குமுறையும் அரச பயங்கரவாதமும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளதாகவும் தொடர்ந்தும் மக்கள் மௌனமாக இருக்க முற்பட்டால் அதன் பலாபலன் நாட்டை பேரழிவுக்கே இட்டுச் செல்லும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இந்த பகிரங்க அழைப்பை விடுத்தார்.  அவர் அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;  நீதிக்காகவும், நியாயத்துக்காகவும் தனது பேனையை பயன்படுத்திய தைரியமுள்ள ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் உயிரை பறித்து ஊடகத்துறையை மௌனிக்கச் செய்யும் அடக்குமுறையின் இன்னொரு படிக்கு அரச பயங்கரவாதம் முன்னேறியுள்ளது.

அரசு அதன் அடக்குமுறையின் மூலம் ஊடகத்துறையை அடிபணிய வைக்க எத்தகைய கபடத்தனத்தையும் செய்யத்தயங்கப்போவதில்லை என்பதை இப்படுகொலையின் மூலம் பறைசாற்றியுள்ளது.  நாம் தொடர்ந்தும் மௌனமாக இருப்போமானால் நாளை இன்னொரு ஊடகம் தீவைக்கப்படலாம், மற்றொரு ஊடகவியலாளர் படுகொலை செய்யப்படலாம். அதற்கு இடமளிப்பதா அல்லது உடனடியாக அணிதிரண்டு இத்தகைய ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

இன்று திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி ஊர்வலத்திலும், மாலையில் பொரளை கனத்தை மயானத்தில் இடம்பெறும் இறுதிக்கிரியையிலும் மக்கள் அணிதிரள வேண்டும். அதனூடாக மக்கள் சக்தி என்ன என்பதை அரசுக்கு உணர்த்திக் காண்பிக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க பகிரங்க அழைப்பை விடுத்தார்.

முல்லைத்தீவிலிருந்து புலிகள் தப்பிவிடாதபடி சுற்றிவளைப்பு – கடற்படைப் பேச்சாளர்

sl_navy.jpg
முல்லைத்தீவிலிருந்து புலிகள் தப்பிவிடாதபடி முப்படையினரும் சுற்றிவளைத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க நேற்று தெரிவித்தார். முல்லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் இராணுவத்தின் ஒன்பது படைப்பிரிவினர் தாக்குதல்களை நடத்தி முன்னேறிவரும் அதே சமயம் வடக்கு, கிழக்கு கடற்பரப்பின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் தலைவரும், அவரது சகாக்களும் கடல் வழியாக எந்த வகையிலும் தப்பிச் செல்ல முடியாது என்று உறுதியாக தெரிவித்த அவர் கடற்படையினர் நான்கு நிலைகளாக பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினரின் 25ற்கும் அதிகமான படகுகள் 24 மணி நேரம் முழுமையான ரோந்துக் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக கடற்படையின் டோரா படகுகளும், கடற்படையின் விசேட படைப்பிரிவுகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், புலிகள் தப்பிச் செல்லுதல், பிரவேசித்தல் மற்றும் விநியோகங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றையும் தடுத்து நிறுத்த போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புலிகள் இயக்கத் தலைவரும் அவரது சகாக்களும் கடல் வழியைப் பயன்படுத்தி தப்பிச்செல்வதாயின் பெருந்தொகையான படகுகள் தேவைப்படும். இந்நிலையில் கடற்படையினரின் பாதுகாப்பை மீறி எந்த நிலையிலும் தப்பிச் செல்ல முடியாது என்றும் புலிகளின் எத்தகைய நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க பாதுகாப்பு படையினரும், கடற்படையினரும் தயார் நிலையிலுள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் தசநாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சுண்டிக்குளம் கடல் நீரேரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற் புலிகளின் பாரியபடகு ஒன்றை இலக்கு வைத்து விமானப் படையினர் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் ரக போர் விமானங்களை பயன்படுத்தி நேற்றுக் காலை 11.20 மணியளவில் நடத்தப்பட்ட இந்த விமானத் தாக்குதலில் கடற்புலிகளின் பாரிய படகு தாக்கியழிக்கப் பட்டுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை, முதலாவது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் சுண்டிக்குளப் பகுதியிலிருந்து புலிகள் தப்பி ஓடுவதையும், பின்வாங்கிச் செல்வதையும் படையினர் அவதானித்துள்ளனர். இதனையடுத்து நேற்றுப் பிற்பகல் 1.00 மணியளவில் விமானப் படையினர் தப்பிச் செல்லும் புலிகளை இலக்கு வைத்து மற்றுமொரு விமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த விமான தாக்குதல் வெற்றியளித்துள்ளதாக விமான ஓட்டிகள் உறுதி செய்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு இந்தியா உதவும்! – இந்தியத் தூதுவருடன் பஸில் ராஜபக்ஷ பேச்சு

basil.jpgவடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு இந்தியாவும் உதவி செய்யும். ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷவுக்கும், கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்துக்கும் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா சாத்தியமான, இயலுமான ஒவ்வொரு துறையிலும் தனது உதவிகளை வழங்கும் என்று இந்தியத் தூதுவர், பஸிலிடம் வாக்குறுதி அளித்தார் என்று தகவல்கள் தெரிவித்தன.  இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு “தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி’ மூலம் 300 மில்லியன் ரூபாவைத் திரட்டுவதற்கு கடந்த புதன்கிழமை – இம்மாதம் 7 ஆம் திகதி – நாடாளுமன்றத்தில் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

சட்டமூலத்தைச் சமர்ப்பித்துப் பேசிய பிரதி நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, இந்த வரி அழிவுற்ற வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்யவே பயன்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்தப் பின்னணியில் –  கடந்த ஒக்ரோபர் மாதம் இறுதிவாரத்தில் இந்தியாவுக்கு ஜனாதிபதியின் விசேட தூதுவராகச் சென்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேசிய ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, நேற்று இந்தியத் தூதுவருடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

அப்போது வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு இந்தியாவும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்குப் பதிலளித்த இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் இயன்றளவு, சாத்தியமான சகல உதவிகளும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார் என அறியப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது, போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு இந்திய அரசாங்கம் அனுப்பிய நிவாரணப் பொருள்களின் விநியோகம் குறித்தும் பஸில் ராஜாபக்ஷ இந்தியத் தூதுவருக்கு விவரமாக விளக்கினார். அது குறித்து இந்திய அரசின் சார்பில் தூதுவர் அலோபிரசாத் திருப்தி தெரிவித்ததுடன்- இந்திய அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அன்பளிப்புகளை விநியோகித்தமைக்கும் இலங்கை அரசுக்கு நன்றியும் கூறினார்.     

முல்லைத்தீவு ஐயம்பெருமாள் முகாம் படையினர் வசம்

_army.jpgமுல்லைத்தீவு, ஐயம் பெருமாள் பிரதேசத்தில் அமைந்துள்ள சகல வசதிகளையும் கொண்ட புலிகளின் முகாம் ஒன்றை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளனர். முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தின் இரண்டாவது செயலணியினர் இந்த முகாமை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

புலிகளின் முக்கிய தலைவர்கள் ஒன்றுகூடும் தளமாகவும், பயிற்சி முகாமாகவும் இருந்துள்ள இந்த முகாம் விசாலமிக்க தோட்டம் ஒன்றுக்கு மத்தியில் அமையப் பெற்றுள்ளதாகவும் அதனை சுற்றிவர 12 அடி நீளமான முற்கம்பிகளால் வேயப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதான விரிவுரை மண்டபம், 12 தற்காலிக கொட்டகைகள், மருத்துவ அறை ஒன்று, களஞ்சியசாலை கட்டடம் மற்றும் சமையலறை ஒன்றும் இந்த முகாமில் அமையப் பெற்றுள்ளன. இதுதவிர 60 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள் உட்பட ஆயுதங்களையும் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சகல பிரஜைகளையும் பதிய பாதுகாப்பு அமைச்சு முடிவு

laptop.jpgநாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் பதிவு செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. சகல மக்களினதும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பாதுகாப்பு அமைச்சு இம்முடிவை எடுத்திருப்பதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

அனைத்து இன மக்களும் தமது விபரங்களை பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்வதற்கு இலகுவாக இணையத்தளம் ஒன்றையும் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

www.citizens.lk

என்ற இணையத்தளம் ஊடாக வீட்டிலிருந்தபடியே தமது விபரங்களை பதிவு செய்ய முடியும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.