செய்திகள்

செய்திகள்

செய்திகள்

திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் லதா வெற்றி

latha-adiyaman.jpgதமிழ் நாடு திருமங்கலம் சட்டப் பேரவை இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் தி. மு. க. வேட்பாளர் லதா அதியமான் 39 ஆயிரத்து 266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் 190 வாக்குச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அ. தி. மு. க. சார்பில் முத்துராமலிங்கம், தி. மு. க. சார்பில் லதா அதியமான், தே. மு. தி. க. சார்பில் தனபாண்டியன் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் உட்பட 26 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 1,38,369 வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதில் 67,748 ஆண்களும், 70,621 பெண்களும் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே, தி. மு. க. வேட்பாளர் லதா அதியமான் 79,422 வாக்குகளையும், அவரைத் தொடர்ந்து அ. தி. மு. க. வேட்பாளர் முத்து ராமலிங்கம் 40,156 வாக்குகளையும் பெற்றிருந்தனர். அதாவது அ. தி. மு. க. வேட்பாளரைவிட தி. மு. க. வேட்பாளர் 39,266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் தே. மு. தி. க. வேட்பாளர் தனபாண்டியன் 13,136 வாக்குகளையும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பத்மநாபன் 831 வாக்குகளையும் பெற்றனர்.

யுத்தத்தை அரசியல் மயமாக்கி அரசியல் இலாபம் தேடும் அவசியம் அரசுக்குக் கிடையாது – நந்திமித்ர ஏக்கநாயக்க

vote.jpgவடக்கே பயங்கரவாத யுத்தத்தையும், இராணுவத்தினரின் யுத்த வெற்றியையும் அரசியல் மயமாக்கி அரசியல் இலாபம் தேட வேண்டும் என்ற எந்தவொரு அவசியமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது அரசுக்கோ கிடையாது. வடக்கே யுத்தம் தொடர்ந்தாலும், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து நிராயுதபாணிகளாக ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்ளும் வரை இராணுவத்தினரின் யுத்த நடவடிக்கை வடக்கே தொடர்ந்து கொண்டே இருக்கும். இதுவே ஜனாதிபதியின் முக்கிய குறிக்கோள் என மத்திய மாகாண சபையின் மாத்தளை மாவட்ட ஐ. ம. சு. மு. வேட்பாளர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இராணுவத்தினரின் பாரிய முயற்சியின் காரணமாக வடக்கு மீளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கிழக்கை இராணுவத்தினர் மீட்டபொழுது அங்குள்ள மக்கள் எவ்வாறு சுதந்திரக் காற்றை சுவாசித்தனரோ இதே சுதந்திரக் காற்றை வடக்கே உள்ள மக்களும் சுவாசிக்கும் நாள் வெகு தூரத்திலில்லை.

எனவே, கிழக்கு மாகாண மக்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசை வெற்றி பெறச் செய்தது போல், வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களில் அரசை மக்கள் வெற்றி பெறச் செய்தார்களோ இதே வெற்றியை மத்திய மாகாண மக்களும் அரசியல் மற்றும் ஏனையவேறுபாடுகளை மறந்து மத்திய மாகாண சபையை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எனவும் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்தார்

குடாநாட்டில் ஏழு இளைஞர்களின் சடலங்கள் ஒரு வாரத்தில் கரையொதுங்கின

யாழ்ப் பாணம் குடாநாட்டு கடற்கரையோரங்களில் இளைஞர்களின் சடலங்கள் ஒதுங்கும் சம்பவங்கள் அதிகரித்துவருவதால் மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நெடுந்தீவின் கடற் கரையில் ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் ஊர்காவற்றுறை பொலிஸாரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சடலத்தில் பச்சை நிறத்திலான ரீசேட்டும் கறுப்பு நிற அரைக்காற்சட்டையும் காணப்படுவதாகவும் முகம் அடையாளம் காணமுடியாதவாறு சிதைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கேசன்துறை கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை ஒதுங்கிய நான்கு இளைஞர்களின் சடலங்கள் அன்று மாலை பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. நிர்வாண கோலத்தில் காணப்பட்ட இந்த நான்கு சடலங்களிலும் அடிகாயங்கள், வெட்டுக்காயங்கள் உள்ளதாகவும் முட்கம்பிகளால் சுற்றப்பட்டுள்ளதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இவை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் வடமராட்சி பருத்தித்துறை கடற்கரையில் இரு இளைஞர்களின் சடலங்களும் கரையொதுங்கின. இந்த வாரத்தில் எழு இளைஞர்களின் சடலங்கள் இவ்வாறு கடற்கரையில் ஒதுங்கியுள்ளதால் மக்கள் மத்தியில் அச்சநிலை காணப்படுகிறது. இதுவரை எவரது சடலமும் அடையாளம் காணப்படவில்லை. அண்மைக்காலங்களில் குடாநாட்டில் பல இளைஞர்கள் கடத்தப்பட்டும், காணாமலும் போயுள்ளதால் இச்சடலங்கள் அவர்களுடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

லசந்த பிரியாவிடை பெற்றார்

lasantha-3.jpgசண்டே லீடரின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் பூதவுடல் இன்று மாலை பொரளை கனத்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்று பகல் 1 மணிக்கு நாரஹேன்பிட்டி, கிரிமண்டல மாவத்தையில் உள்ள தேவாலயத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட அவரது பூதவுடலை திம்பிரிகஸ்யாய சந்தியில் வைத்து ஊடகவியலாளர்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கையேற்றனர். திம்பிரிகஸ்யாய சந்தியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோது அரசியல் வாதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், கலைஞர்கள் உட்பட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்

இதேவேளை, லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பாக சில அரசியல் கட்சிகளினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பலர் உரையாற்றினர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இவரின் படுகொலையுடன் தொடர்பானவர்கள் இனங்கானப்பட்டு அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

lasantha-1.jpg

lasantha-2.jpg

 lasantha-3.jpg

எல்ரிரிஈயினர் ஒன்றுகூடும் இடங்களை இலக்குவைத்து விமானத்தாக்குதல் –

mi24-1912.jpgஇலங்கை விமானப் படையினரின் எம்ஐ.24 ஹெலிகொப்டர் மற்றும் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி எல்ரிரிஈயினர் ஒன்று கூடும் இடங்களை இலக்கு வைத்து மூன்றாவது செயலணி படையினருக்கும் 57வது டிவிசன் படையினருக்கும் உதவியாக இரணமடுப்பகுதியில் இன்று (ஜன:12) காலை தாக்குதல் நடத்தியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானப்படைப் பேச்சாளர் விங்கமான்டர் ஜனக நானயக்கார தகவல் தருகையில் இன்று காலை 8.15 மணியளவில் இரணமடுவுக்கு 1 கி.மீ.தென்கிழக்காக எல்ரிரிஈயினர் ஒன்று கூடும் இடத்தை எம்ஐ 24 ஹெலிபொப்டரினாலும் இரணமடுவுக்கு 2 கி.மீ. வடக்காக மற்றுமொரு ஒன்று கூடும் இடத்தை காலை 9.00 மணியளவில் ஜெட்விமானங்களினால் தாக்கியதாகவும் தெரிவித்தார்.

ஏ-35 பாதையை கைப்பற்றும் தாக்குதல் தொடர்கிறது

SL_Army_in_Killinochieதாக்குதல் படையணியான 58வது டிவிசன் படையினர் ஏ-35 (பரந்தன் -முல்லைத்தீவு) வழியே மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி நேற்று (ஜன:11) தாக்குதல் நடத்தி குறிப்பிடத் தக்க தூரத்தை முன்னேறியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்றுப் பகல் பொழுதில் முரசுமோட்டை மற்றும் வட்டக்கச்சி பகுதிகளுக்கு வடக்காக எஞ்சியிருக்கும் எல்ரிரிஈ மறைவிடங்களை தேடி அழிக்கும் பனியில் ஈடுபட்டு வந்தனர்.

முரசுமோட்டைப் பகுதியில் தாக்குதல் நடத்திய படையினர் 4 பயங்கரவாதிகளின் சடலங்களையும் இரு ரி-56 ரக துப்பாக்கியையும் வட்டக்கச்சிப் பகுதியில் தாக்குதல் நடத்திய படையினர் மூன்று பயங்கரவாதிகளின் சடலங்களையும் கைபற்றியுள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

100 சிவிலியன்கள் அரச பகுதிக்குள் வருகை

ahathi.jpgமுல்லைத்தீவிலுள்ள புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 28 குடும்பங்களைச் சேர்ந்த 100 சிவிலியன்கள் நேற்று பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். பரந்தன், பெரிய பரந்தன், காஞ்சிபுரம் மற்றும் வட்டக்கச்சி ஆகிய பிரதேசங்கள் ஊடாகவே ஓமந்தையை நோக்கி 100 சிவிலியன்களும் வருகை தந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இந்த 100 சிவிலியன்களில் 22 சிறுவர்கள், 23 சிறுமிகள், ஆண்கள் 30, பெண்கள் 20 ஆகியோர் அடங்குவர். வழக்கமான விசாரணைகளுக்கு பின்னர் நலன்புரி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காஸா பொதுமக்களுக்கு – இஸ்ரேல் எச்சரிக்கை

gaza_war02.jpgகாஸாவில் உள்ள பொதுமக்கள் ஹமாஸ் பயன்படுத்தும் கட்டிடங்கள் அருகே செல்ல வேண்டாம் என இஸ்ரேல் துண்டுச்சீட்டுகள் மற்றும் தொலைபேசி மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதன் மூலம் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் புதிய சண்டை யுக்தியை பயன்படுத்தலாம் என்ற பலத்த யூகம் நிலவுவதாக ஜெருசேலத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார். இதற்கிடையே, வடக்கு காஸாவில் ஜபல்யா வீதியில் இஸ்ரேலின் எறிகணை தாக்குதலில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரமாக நடைபெறும் மோதலில் எண்ணூறுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இதில் பதிமூன்று இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர், இவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தினர்.

மேனன், அகாஸி கொழும்பு வருகின்றனர்

yasusi.jpgமுல்லைத்தீவு மீதான இறுதித் தாக்குதலை படையினர் எவ்வேளையிலும் ஆரம்பிக்கலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் இவ்வாரம் இலங்கைக்கு இரு முக்கிய இராஜ தந்திரிகள் விஜயம் செய்யவுள்ளனர்.  இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும் ஜப்பானின் விஷேடதூதுவர் யசூசி அகாஸியுமே அடுத்த ஓரிரு தினங்களில் கொழும்பு வரவுள்ளனர்.

வடக்கே நடைபெறும் போரை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புமாறு, தமிழக முதலைமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் தமிழகக் கட்சிகள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்தும் பலமுறை கடிதம் மூலம் கோரியும் அதனை ஏற்க இந்திய மத்திய அரசு மறுத்த நிலையிலேயே சிவ்சங்கர் மேனன் கொழும்பு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியை படையினர் கைப்பற்றுவதற்கு முன்னரே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. எனினும் கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னரே இந்திய மத்திய அரசு தனது வெளிவிவகாரச் செயலாளரை கொழும்புக்கு அனுப்புகிறது.

லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிச்சடங்கில் அணிதிரண்டு பங்கேற்க நாட்டுமக்களுக்கு ரணில் அழைப்பு

ranil-2912.jpg
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிச்சடங்கில் நாட்டு மக்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டு அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  அடக்குமுறையும் அரச பயங்கரவாதமும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளதாகவும் தொடர்ந்தும் மக்கள் மௌனமாக இருக்க முற்பட்டால் அதன் பலாபலன் நாட்டை பேரழிவுக்கே இட்டுச் செல்லும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இந்த பகிரங்க அழைப்பை விடுத்தார்.  அவர் அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;  நீதிக்காகவும், நியாயத்துக்காகவும் தனது பேனையை பயன்படுத்திய தைரியமுள்ள ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் உயிரை பறித்து ஊடகத்துறையை மௌனிக்கச் செய்யும் அடக்குமுறையின் இன்னொரு படிக்கு அரச பயங்கரவாதம் முன்னேறியுள்ளது.

அரசு அதன் அடக்குமுறையின் மூலம் ஊடகத்துறையை அடிபணிய வைக்க எத்தகைய கபடத்தனத்தையும் செய்யத்தயங்கப்போவதில்லை என்பதை இப்படுகொலையின் மூலம் பறைசாற்றியுள்ளது.  நாம் தொடர்ந்தும் மௌனமாக இருப்போமானால் நாளை இன்னொரு ஊடகம் தீவைக்கப்படலாம், மற்றொரு ஊடகவியலாளர் படுகொலை செய்யப்படலாம். அதற்கு இடமளிப்பதா அல்லது உடனடியாக அணிதிரண்டு இத்தகைய ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

இன்று திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி ஊர்வலத்திலும், மாலையில் பொரளை கனத்தை மயானத்தில் இடம்பெறும் இறுதிக்கிரியையிலும் மக்கள் அணிதிரள வேண்டும். அதனூடாக மக்கள் சக்தி என்ன என்பதை அரசுக்கு உணர்த்திக் காண்பிக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க பகிரங்க அழைப்பை விடுத்தார்.