செய்திகள்

Wednesday, September 22, 2021

செய்திகள்

செய்திகள்

“கிம் ஒரு பைத்தியக்காரன்” – டொனால்ட் ட்ரம்ப்  

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்  வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடன் பொது இடங்களில் நட்பு பாராட்டி வந்தார். அப்படி இருப்பினும் டிரம்ப், கிம்மை சர்ச்சைக்குரிய வகையில் திட்டியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
டிரம்ப், ஜனாதிபதியாக  இருந்தபோது வடகொரியாவில் நடந்து வந்த அணு ஆயுத சோதனைகளை நிறுத்துவதற்கு பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஒரு கட்டத்தில் டிரம்ப், கிம்மை நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் வடகொரியாவுக்கும் அமெரிக்காவும் சுமுக உறவு ஏற்படும் எனத் தோன்றியது.
ஆனால், இப்போது வரை இரு நாடுகளுக்கும் இடையில் சுமுக போக்கு இல்லை. இந்நிலையில் வெளிப்படையாக கிம்மை தன் நண்பன் என்று சொல்லி வந்தாலும், அவரை சர்ச்சைக்குரிய வகையில் டிரம்ப் திட்டி தீர்த்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் பாப் உட்வார்டு மற்றும் ராபர்ட் கோஸ்டா ஆகியோர், டிரம்ப் – கிம் சம்பந்தமான ஒரு புத்தகத்தை வெளியிட உள்ளனர்.
அந்தப் புத்தகத்தில்தான், கிம் குறித்து டிரம்ப் தன் உயர் அதிகாரிகளோடு உரையாடுகையில், ‘அவர் ஒரு பைத்தியக்காரன்’ என்று சொல்லியிருப்பதாக தகவல்.

ரஷ்யாவின் பல்கலைகழகத்தில் 08 பேரை சுட்டுக்கொன்ற 18வயது மாணவன் !

ரஷ்யாவின் பேர்ம் நகரிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில், மாணவரொருவர் மேற்கொண்ட பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட பல்கலைக்கழக மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கைதின்போது அவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரியிடமிருந்து தப்பிப்பதற்காக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் ஜன்னல் வழியாக குதித்து தப்பிச்செல்லும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்றும் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரி 18 வயதுடையவர் என்றும் அவர் முன்னதாக துப்பாக்கி, தலைக்கவசம் மற்றும் தோட்டாக்களுடன் சமூகவலைத்தளத்தில் படங்களை பதிவிட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவில் இந்த ஆண்டு கல்வி நிலையங்களில் நடந்த இரண்டாவது துப்பாக்கி சூடு இதுவாகும். இதற்கு முன்னர் ரஷ்யாவின் கஸான் நகரிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த மே மாதத்தில் 19 வயதான இளைஞரொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 9 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தையடுத்து, ரஷ்யாவின் துப்பாக்கி பயன்பாடு தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“மதுக்கடைகளைத் திறக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.” – நாமல் ராஜபக்ஷ

“மதுக்கடைகளைத் திறக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.” என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.

“நாட்டைத் திறக்க ஒரு நிமிடம் இருக்கும் போது மதுக்கடை நிரம்பினால், அதைத் தாண்டி நாம் எங்கு செல்கிறோம் என்பதை இருமுறை யோசிக்க வேண்டும்” என்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலையில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மதுக்கடைகள் திறப்பது குறித்து தவறான செய்தி பரவியுள்ளது. என் கருத்துப்படி, கொவிட் தடுப்புக் குழுவோ அல்லது அரசாங்கமோ அத்தகைய தீர்மானத்தை எடுக்கவில்லை. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப கொரோனா தொற்றைக் குறைக்கும் நோக்கில் தான் கொவிட் குழு தீர்மானம் எடுக்கும்.

மதுக்கடையைத் திறப்பது குறித்து கொவிட் குழு எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை.

எவ்வளவு தான் பொருளாதாரக் கஷ்டங்கள் இருந்தாலும் கூலி வேலை இல்லை என்று சொன்னாலும்  பயணக் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், மதுக்கடைகளைத் திறந்ததும் நீண்ட வரிசைகள் இருந்ததை அவதானிக்க முடிந்ததாக  அவர் தெரிவித்துள்ளார்.

முக்கியமான இரண்டு தலைமைப்பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள விராட் கோலி !

இந்திய இருபது20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக அறிவித்த விராட் கோலி, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய இருபது20 அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், கடந்த 8-9 ஆண்டுகளாக மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன்.

இதில், 5-6 ஆண்டுகள் அணித் தலைவராக இருந்துள்ளேன். தற்போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு தலைமை தாங்க தயாராவதற்கு இடம் தேவை என கருதுகிறேன்.

இருபதுக்கு20 அணியின் தலைவராக இருந்தபோது அணிக்காக என்னிடம் இருந்த அனைத்தையும் வழங்கியுள்ளேன். தீவிர ஆலோசனைக்கு பின்னர், இருபதுக்கு20 அணி தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

துபாயில் நடைபெறவுள்ள இருபதுக்கு20 உலகக் கோப்பை தொடர் முடிந்த பின்னர் பதவி விலகவுள்ளேன் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி, டெஸ்ட் அணி, இருபதுக்கு20 என அனைத்து அணியின் தலைவராக விராட் கோலி இருந்து வந்தார்.

இதேவேளை ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவராகவும் விராட் கோலி இருந்து வருகிறார். இருப்பினும், கோலி தலைமையில் பெங்களூரூ அணி இதுவரையில் ஒருமுறை கூட சம்பியன் பட்டம் வென்றதில்லை.

இதற்கிடையில், விராட்கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி சரியாக சோபிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இருபதுக்கு20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக விராட் கோலி நேற்று அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிகழ்நிலை பட்டமளிப்பு விழா – மாணவர்கள் எதிர்ப்பு !

நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பை முழுமையாக நிராகரிக்கிறோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையிலே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையிலே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழா பகுதி 16,17,18 ஆம் திகதியில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய கொரோனா ஊரடங்கு காரணமாக ஒக்டோபர் 7,8,9ம் திகதிகளில் நடாத்துவதாக பிற்போடப்பட்டது.

எனினும் அந்த திகதிகளில் மாணவர்களை நேரில் அழைத்து பட்டமளிப்பை நடாத்துவதற்கு சுகாதார அமைச்சினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஒக்டோபர் 7ம் திகதி நிகழ்நிலையில் நடாத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

எனினும் இத் தீர்மானம் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விருப்பமின்மை காணப்படுகின்றது. இது தொடர்பாக நாம் 15.9.2021 அன்று துணைவேந்தருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம்.எனினும் துணைவேந்தரிடம் இருந்து சாதகமான பதில் எமக்கு கிடைக்கவில்லை.

எனவே நாடு முழுவதும் வழமைக்கு திரும்பிய பின்னர் நேரடியாக பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கே மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலையில் நடத்தாமல் நேரடியாக மாணவர்களை அழைத்து பட்டமளிப்பு விழாவை நடாத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தை கோருகின்றோம் என்றுள்ளது.

“இந்த நாட்டில் இல்லை என்பதைத் தவிர வேறெதுவுமில்லை.” – ஹரின் பெர்ணான்டோ விசனம் !

“நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும் போது வாரக்கணக்காக ஏன் வெளிநாடு செல்கிறார்கள்? மக்களை முடக்கத்தில் விட்டு விட்டு தலைமைகள் வெளிநாடுகளுக்கு பயணிக்கின்றனர். நாட்டின் தலைவர் தனது சொந்த ஊருக்கே சென்றுள்ளார். என என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டு மக்கள் சார்பாக பாதுகாக்க முன்வந்த சுகாதார ஊழியர்களுக்கும் படைப்பிரிவினருக்கும் எங்கள் மரியாதையை செலுத்துகிறோம். இந்த முறை ஒரு பெரிய வைரஸ் நாட்டிற்குள் நுழைந்துள்ளது.

இந்த வைரஸ் வெளிநாட்டிலிருந்தே வந்ததுள்ளது. அந்த வைரஸ் தான் நாட்டின் தலைமை. கொரோனா வைரஸுடன் ஒரு கொமிஸ் வைரஸும் பரவி வருகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற தடுப்பூசி போட்டனர்.

மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தடுப்பூசி போடப்பட்டபோது, ​​ஆனால் இங்கு அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே அரசாங்கம் தடுப்பூசி வழங்கியது. தடுப்பூசி போடுவதில் ஏற்பட்ட நீடித்த தாமதத்தால் நாடு சீரழிந்துள்ளது.

வாகனங்களுக்குரிய உதிரி பாகங்கள் இல்லை. நாட்டிற்கு பரவியுள்ள கொரோனா வைரஸுடன் பரவியுள்ள வைரஸுக்கு எதிராக நாங்கள் அணிதிரண்டு வருகிறோம். நாட்டில் உள்ள வைரஸ்களை சீரமைக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

மத்திய வங்கியிலிருந்து வந்துள்ள வைரஸ், கமிஷன்களிலிருந்து வந்துள்ள வைரஸ், யானை கடத்தலில் இருந்து வந்துள்ள வைரஸ், உரங்களிலிருந்து வந்துள்ள வைரஸ் ஆகியவற்றை நாங்கள் கிட்டிய எதிர் காலத்தில் முன்வைக்கிறோம்.

இத்தகைய சகல வைரஸும் வெளிநாட்டிலிருந்து வந்தது. எங்கள் ஜனாதிபதி, நிதி அமைச்சர் என்ற சகல வைரஸும் வெளிநாட்டிலிருந்தே வந்துள்ளது. இந்த வைரஸ்களிலிருந்து நாம் எமது நாட்டை விடுவிக்க வேண்டும்.

நவம்பர் மாதத்திற்குள் தடுப்பூசிகள் கொடுத்து முடித்தமைக்கு ஒரு பெரிய விழாவை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் இத்தாலியில் ஒரு பெரிய மாநாட்டிற்கு சென்றார். ஒரு வாரம் ஆகிவிட்டது.

நாடு இன்றும் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளது. நாட்டில் சீனி இல்லை, மாவு இல்லை, மருந்துகள் இல்லை. குறைந்தபட்சம் அடிப்படைத் தேவையை நிறைவேற்ற கழிப்பறைகளும் இல்லை.அத்துடன் நாட்டின் அரச தலைவரும் இல்லை தளபதியும் இல்லை. என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாடிய 35 இளைஞர்கள் கைது – யாழில் சம்பவம் !

யாழ். திருநெல்வேலி தனியார் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 35 இளைஞர்களை நேற்றிரவு (19) 08.30 மணியளவில் கைது செய்துள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்ட நிலையில் பொது நிகழ்வுகள், பிறந்தநாள், திருமண வைபவங்கள் என்ப சுகாதார தரப்பினால் நிறுத்தப்பட்ட காலப்பகுதிக்குள் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பில் மக்கள் வழங்கிய தகவலை அடுத்து விடுதிக்கு சென்ற யாழ்ப்பாண பொலிஸார் அங்கிருந்தவர்களை கைது செய்துள்ளனர்.

35 இளைஞர்களுக்கும் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

“ உள்ளகப் பொறிமுறையினூடாகத் பிரச்சினைகளை தீர்க்க புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.” – ஐ.நாவில் கோட்டாபாய !

இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகள், நாட்டுக்குள்ளேயே உள்ளகப் பொறிமுறையினூடாகத் தீர்க்க புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்குத் தான் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான  முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்குமென்று, அதன் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் (Antonio Guterres), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைத் தலைமையகத்தில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஜனாதிபதிக்கும் ஐ.நா பொதுச் செயலாளருக்கும் இடையிலான விசேட சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐ.நா தலைமையகத்துக்குப் பிரவேசித்த ஜனாதிபதியை அன்புடன் வரவேற்ற குட்டரெஸ், 1978ஆம் ஆண்டில், சர்வதேச நாடாளுமன்றச் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்குத் தான் விஜயம் செய்திருந்ததையும் கண்டி, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்குச் சுற்றுலா சென்றதையும், அதன்போதான அழகான நினைவுகளையும் ஞாபகப்படுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையாளராக, இலங்கை தொடர்பில் தான் பணியாற்றியமை மற்றும் 2006ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவினை சந்தித்தமை குறித்தும், குட்டரெஸ் நினைவுபடுத்தினார்.

சுமார் 30 ஆண்டுகள் நிலவிய யுத்தம் காரணமாக, மிகவும் சிக்கலான நிலைமைக்கு விழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், இந்து சமுத்திர வலயத்தில், மாபெரும் சமூக மற்றும் பொருளாதாரப் பணிகளை நிறைவேற்றும் இலங்கையிடமிருந்து, தொடர்ந்தும் அப்பணியை எதிர்பார்ப்பதாக, பொதுச் செயலாளர் எடுத்துரைத்தார்.

ஐ.நா பொதுச் செயலாளருடன் கலந்துரையாடக் கிடைத்தமையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சிறிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இலங்கை போன்ற நாடொன்று, கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில் முகங்கொடுத்துள்ள சவால்கள் தொடர்பில், ஜனாதிபதி ராஜபக்ஷ, ஐ.நா பொதுச் செயலாளருக்கு எடுத்துரைத்தார்.

கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில், இலங்கையின் கல்வி மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் தீர்க்கமான முறையில் எடுத்துரைத்த ஜனாதிபதி, தொற்றுப்பரவலை வெற்றிகரமாக எதிர்கொள்ள, உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும், பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இதுவரையில், இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோருக்கு  தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நவம்பர் மாத இறுதிக்குள், 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என, தரவுகளுடன் எடுத்துரைத்தார்.

இதன்போது, தடுப்பூசி ஏற்றலில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு, பொதுச் செயலாளர், தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகத் தெரிவான தான், பொதுமக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை அவ்வாறே நிறைவேற்றுவதில், கொரோனா தொற்றுப் பரவலானது பெரும் தடையாக இருக்கின்றதெனத் தெரிவித்த ஜனாதிபதி, இருப்பினும், 30 வருட காலமாக நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் ஏற்பட்ட இடைநிலைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாகத் தெளிவுபடுத்தினார்.

பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கல், காணிகளை மீளக் கையளித்தல் மற்றும் 2009ஆம் ஆண்டில், மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்திகள் மற்றும் வடக்கு மாகாண சபைக்கான உறுப்பினர்களை, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுப்பதற்காக ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்பு தொடர்பிலும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

காணாமற்போனோர் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதாகவும் மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும், பொதுச் செயலாளரிளிடம், ஜனாதிபதி தெரிவித்தார்.

பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்களில் பலரை, தான் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் விடுவித்துள்ளதாக எடுத்துரைத்த ஜனாதிபதி, அவ்வாறு விடுவிக்க முடியாத ஏனையோர் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் நீண்ட காலமாகத் தடுப்பிலுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்டச் செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர், நீண்ட காலம் தடுப்பில் இருந்ததைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் அவர்களை விடுவிப்பதற்குத் நான் தயங்கப் போவதில்லை என்றும், பொதுச் செயலாளரிடம் தெரிவித்தார்.

இலங்கைக்குள் மிகவும் பலமான முறையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே தன்னுடைய இலக்கு என்றும் அதன்படி, போராட்டக்காரர்கள் மீது முன்னரைப் போன்று தடியடி, நீர்த்தாரைத் தாக்குதல் போன்றவற்றை நடத்த, தன்னுடைய ஆட்சியின் கீழ் ஒருபோதும் அனுமதியில்லை என்றும் போராட்டக்காரர்களுக்கென்றே, தன்னுடைய அலுவலகத்துக்கு முன்னால்  தனி இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதென்றும், ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டுக்குள் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, சிவில் அமைப்புகளுடன் இணைந்து தான் செயற்படும் விதம் தொடர்பிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார்.

இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகள், நாட்டுக்குள்ளேயே உள்ளகப் பொறிமுறையினூடாகத் தீர்க்கப்பட வேண்டுமென்றும் அதற்காக, புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்குத் தான் அழைப்பு விடுப்பதாகவும், ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையுடன், எப்போதும் மிக நெருக்கமாகப் பணியாற்றத் தயாரென மீண்டுமொருமுறை எடுத்துரைத்த ஜனாதிபதி, நாட்டுக்குள் மீண்டும் பிரிவினைவாதம் ஏற்படப்போவதில்லை என்பதைத் தன்னால் உறுதிப்படத் தெரிவிக்க முடியுமென்ற போதிலும், மதவாதத் தீவிரவாதம் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கை போன்று ஏனைய நாடுகளும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.

யாழில் முடிவில்லாது தொடரும் வாள்வெட்டுக்கள் – வட்டுக்கோட்டையில் வன்முறைக்கும்பல் அட்டகாசம் !

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியார் கோவில் பகுதியில், நேற்றைய தினம் (19.09.2021) வன்முறைக் குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

மாவடி பகுதியைச் சேர்ந்த வன்முறை கும்பல் ஒன்று, நேற்று இரவு 7 மணியளவில் முதலியார் கோயில் பகுதிக்குள் உள்நுழைந்து அங்கு தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். அத்துடன் வேலிகளின் தகரங்களை அடித்து உடைத்து, வீடு ஒன்றின் கதவினையும் குறித்த வன்முறை கும்பல் அடித்து உடைத்துள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தியுள்ளது.

வாள்வெட்டிற்கு இலக்கான குடும்பஸ்தர் 1990 என்ற அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் குறித்த பகுதிக்கு வந்து பிரச்சினைகள் தொடர்பாக விசாரணை செய்துவிட்டு சென்றனர்.  அதன் பின்னர் மீண்டும் அப்பகுதிக்கு வந்து வன்முறைக் கும்பல் இன்னொரு முதியவர் மீதும் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதுடன் சைக்கிள் கடை, தையல் கடை போன்றவற்றின் மீதும் தாக்குதல் செய்துவிட்டு தப்பித்துச் சென்றது.

அதன் பின்னர் பொலிஸாரும் இராணுவத்தினரும் குறித்த பகுதிக்குச் சென்று தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் 7 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் கடமையாற்றுபவர் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். அவரது வீட்டில் பல சாராயப் போத்தல்களும் மற்றும் பல பியர் ரின்களும் காணப்பட்டன.

இந்த வன்முறைக்குழு இதற்கு முன்னரும் இவ்வாறு தாக்குதல் நடாத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மூன்று அமைச்சர்களின் எதிர்ப்புக்குள்ளும் அமெரிக்காவின் கைகளுக்கு போகும் கெரவலப்பிட்டிய மின்நிலையம் !

மூன்று அமைச்சர்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும் கெரவலப்பிட்டிய யுகடனாவி 300மெகாவோட் மின்நிலையத்தை அமெரிக்காவை தளமாக கொண்ட நியுபோர்ட்டிரஸ் எனேர்ஜி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சர்கள் வாசுதேவநாணயக்கார விமல்வீரவன்ச உதயகம்மன்பிலவின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும் அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உத்தேச உடன்படிக்கை மற்றும் அமைச்சரவை பத்திரம் குறித்து மூன்று அமைச்சர்களும் தங்கள் கரிசனைகளை வெளிப்படுத்தி கடிதம் எழுதியிருந்தனர்.
அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட விதத்தினை சுட்டிக்காட்டி அவர்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தனர்.

முதலில் அமைச்சர்கள் மத்தியில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்காமல் நிகழ்ச்சி நிரலிற்கு வெளியே சமர்ப்பித்ததாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
கேள்விபத்திரம் கோரப்பட்ட பின்னர் மூன்றாம் தரப்பிற்கு இந்த திட்டம் வழங்கப்பட்டமை நல்லாட்சி கொள்கைளிற்கு முரணானது என அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும் அவர்களின் எதிர்ப்பையும் மீறி நிதியமைச்சு கெரவலப்பிட்டிய யுகடனாவி 300மெகாவோட் மின்நிலையத்தை அமெரிக்காவை தளமாக கொண்ட நியுபோர்ட்டிரஸ் எனேர்ஜி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.