செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

 

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் ஒன்றுகூடல் இன்று இடம்பெற்றது.

 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

 

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது,

எமது அரசியல் பலம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. ஜனாதிபதி தலைமையிலான மூவரை உள்ளடக்கிய அமைச்சரவையே காணப்படுகின்றது.

 

எந்தவிதத்திலும் இது போதுமானதல்ல. தற்போதைய ஜனாதிபதிக்கும் புதிய அமைச்சரவைக்கும் பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. புதிய அரசியல் கலசாரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

 

அந்த இலக்கினை அடையும் வரை நாம் பல விடயங்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது.ஒரு சில தீர்மானங்களை எடுக்க நேரிடும். இது எமக்கு சவாலான விடயமாகும். நவம்பர14 நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது பலமிக்க அதிகாரத்தினை ஏற்படுத்திகொள்ள வேண்டும்.

 

நாடாளுமன்றில் பலமிக்க அதிகாரத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்ற போதிலும் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதனால் மாத்திரம் பலமிக்க அதிகாரத்தினை பெறமுடியாது.

 

தகுதிவாய்ந்தவர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட வேண்டும்.ஜனநாயக உரிமைகளுக்காக நாடாளுமன்றுக்குள் எதிர்க்கட்சி ஒன்றின் தேவை காணப்படுகின்றது.

 

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதந்கு தயார் நிலையில் உள்ளன. கடந்த காலங்களில் வடக்கு அரசியல்வாதிகள் எம்முடன் கலந்துரையாடியிருந்தனர்.

 

அதாவது வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட தயார் இல்லையெனில் வடக்கு மக்கள் ஜனாதிபதியுடன் இணைவார்கள் என அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர்“ இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

196 ஆசனங்களுக்காக இலங்கை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 8000 வேட்பாளர்கள்!

பொதுத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 690 வேட்புமனுக்களின் கீழ் 8388 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் 225 உறுப்பினர்களில் மக்களின் வாக்குகளால் தெரிவாகவுள்ள 196 பிரதிநிதிகளுக்காகவே இவ்வாறு 8000க்கும் மேற்பட்டோர் போட்டியிடவுள்ளனர்.

 

இவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 18 ஆசனங்களுக்காக 966 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

 

பாராளுமன்றத்தில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படுவர். ஏனைய 29 பேர் தேசிய பட்டியலுக்கூடாக தெரிவு செய்யப்படுவர்.

 

இம்முறை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (11) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களிடமிருந்து 764 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. எனினும், அவற்றில் 74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

 

பாராளுமன்றத்தில் கம்பஹா மாவட்டத்துக்கே அதிக ஆசனங்கள் ஒதுக்கப்படும். அவற்றின் எண்ணிக்கை 19 ஆகும். இந்த 19 ஆசனங்களுக்காக இம்முறை தேர்தலில் 24 அரசியல் கட்சிகள் மற்றும் 17 சுயாதீன குழுக்கள் ஊடாக 902 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

 

அதேவேளை பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்டத்துக்கே இரண்டாவது அதிக ஆசனங்கள் ஒதுக்கப்படும். அவற்றின் எண்ணிக்கை 18 ஆகும். இந்த 18 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் சார்பாகவும், 19 சுயாதீன குழுக்கள் ஊடாகவும் 966 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதற்கமைய இம்முறை கொழும்பு மாவட்டத்திலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

குருணாகல் மாவட்டத்துக்கு 15 ஆசனங்கள் ஒதுக்கப்படும். அதற்காக 18 அரசியல் கட்சிகள், 9 சுயாதீன குழுக்கள் ஊடாக 486 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

கண்டி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 12 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகள் மற்றும் 12 சுயாதீன குழுக்கள் ஊடாக 510 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

களுத்துறை மாவட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள 11 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் மற்றும் 13 சுயாதீன குழுக்களிலிருந்து 392 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

இரத்தினபுரி மாவட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள 11 ஆசனங்களுக்காக 18 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயாதீன குழுக்கள் ஊடாக 350 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

காலி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் சார்பிலும், 5 சுயாதீன குழுக்கள் ஊடாகவும் 264 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

 

அநுராதபுரம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 9 சுயாதீன குழுக்களிலிருந்து 312 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பதுளை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் மற்றும் 5 சுயாதீன குழுக்களிலிருந்து 240 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கேகாலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 14 அரசியல் கட்சிகள் மற்றும் 4 சுயாதீன குழுக்களிலிருந்து 216 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

 

 

நுவரெலியா மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயாதீன குழுக்களிலிருந்து 308 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

புத்தளம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 ஆசனங்களுக்காக 24 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயாதீன குழுக்களிலிருந்து 429 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

மாத்தறை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயாதீன குழுக்களிலிருந்து 220 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்கு 16 அரசியல் கட்சிகள் மற்றும் 9 சுயாதீன குழுக்களிலிருந்து 250 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

திகாமடுல்லைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகள் மற்றும் 42 சுயாதீன குழுக்களிலிருந்து 640 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை பொதுத் தேர்தலில் அதிக கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் இந்த மாவட்டத்திலேயே களமிறங்க முன்வந்துள்ளன. யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்காக 23 அரசியல் கட்சிகள் மற்றும் 21 சுயாதீன குழுக்களிலிருந்து 396 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

 

வன்னி தேர்தல் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்கு 24 அரசியல் கட்சிகள் மற்றும் 27 சுயாதீன குழுக்களிலிருந்து 459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாத்தளை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள்மற்றும் 7 சுயாதீன குழுக்களிலிருந்து 184 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயாதீன குழுக்களிலிருந்து 392 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 14 சுயாதீன குழுக்களிலிருந்து 217 வேட்பாளர்கள் களமிங்குகின்றனர்.

 

மொனராகலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்காக 12 அரசியல் கட்சிகள் மற்றும் 3 சுயாதீன குழுக்களிலிருந்து 135 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். பொலன்னறுவை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 13 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயாதீன குழுக்களிலிருந்து 120 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதற்கமைய மொனராகலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலேயே குறைந்தளவான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ரணில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து ரஷ்யா செல்லும் அனுர குமார தரப்பு !

ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன தலைமையிலான குழு கசான் நகருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்திருந்த ரணில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு புதிய ஜனாதிபதி அநுரவும்  விருப்பத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த விஜயத்தின் மூலம் பிரிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பில் இலங்கையின் உறுப்புரிமை தொடரப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் கசான் நகரில் எதிர்வரும் 22ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நடப்பு ஆண்டின் தலைமைத்துவத்தை வகிக்கும் இந்தியா  இலங்கைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்புக்கு சாதகமாக பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சு, பிரிக்ஸ் அமைப்பில் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

எனினும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் அண்மைய கொழும்பு விஜயத்தின்போது, இலங்கையின் பிரிக்ஸ் உறுப்புரிமை அபிலாஷைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்ட சந்திப்புகளின்போது கலந்துரையாடி இருந்தார்.

 

சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற முக்கிய உலகப் பொருளாதாரங்களை உள்ளடக்கிய அமைப்பில் இணைவதற்கான நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்திருந்த ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் பிரிக்ஸ் அமைப்பில் இணையும் விருப்பத்தை ஜனாதிபதி அநுரவும் இதன்போது வெளிப்படுத்தியிருந்தார்.

இதற்கமைவாகவே இலங்கை பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 20ஆம் திகதி ரஷ்யாவிற்கு செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் ஒரு முக்கிய அரசுகளுக்கிடையேயான அமைப்பாகவே பிரிக்ஸ் காணப்படுகிறது.

பிரிக்ஸ் அமைப்பு ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்காவை உள்ளடக்கியதாக இருந்த நிலையில் இதனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் புதிய உறுப்பினர்களாக இலங்கை, ஈரான், எகிப்து, எதியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை இந்த ஆண்டில் இணைத்துக்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்கா!

ஈரானைச் சேர்ந்த 6 எரிவாயு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் குறித்த நடவடிக்கையானது இஸ்ரேலுக்கு ஆதரவாக எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவுக்கு சென்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனி இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் போரை அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் இஸ்ரேல் இராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டது.

இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தத நிலையில், தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானைச் சேர்ந்த 06 எரிவாயு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

பாவித்த தண்ணீருக்கான கட்டணத்தை கூட செலுத்தாத 40க்கும் அதிகமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் !

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

இவ்வாறு அறவிடப்படாது நிலுவையில் உள்ள தொகை 9 மில்லியன் ரூபாவாகும்.

 

பொது விதிகளுக்கு அமைய குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சபை குறிப்பிட்டுள்ளது.

 

எவ்வித விசேட சலுகைகளும் இன்றி சுற்றறிக்கைகளுக்கு அமைய அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

டொக்டர் சத்தியமூர்த்தி பொறுப்புக்கூற வேண்டும்! மருத்துவ மாபியாக்களுக்கு எதிரான போராட்டத்தை டொக்டர் எஸ் சிறிபவானந்தராஜா நகர்த்துவார்!!!

டொக்டர் சத்தியமூர்த்தி பொறுப்புக்கூற வேண்டும்! மருத்துவ மாபியாக்களுக்கு எதிரான போராட்டத்தை டொக்டர் எஸ் சிறிபவானந்தராஜா நகர்த்துவார்!!!
தம்பி தம்பிராஜா – அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு

 

சிறிதரன் தமிழரசுக் கட்சியோடு கலியாணம் சங்கோடு கள்ளக் காதல்! மாவடி ஏ ஆர் சிறிதரன்

சிறிதரன் தமிழரசுக் கட்சியோடு கலியாணம் சங்கோடு கள்ளக் காதல்! மாவடி ஏ ஆர் சிறிதரன்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் கள நிலைமைகள் தொடர்பில் அரசியல் ஆய்வாளர், நாடகக் கலைஞர் மாவடி ஏ ஆர் சிறிதரனுடன் நேர்காணல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு !

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்க தவறியமையினால் வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களின் விபரங்களை வெளியிடாமல் இருப்பது அனுர தரப்பு மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது – எம்.ஏ. சுமந்திரன்

அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களின் விபரங்களை வெளியிடும்படி பல தடவைகள் நான் கேட்டிருக்கிறேன். தேசிய மக்கள் சக்தி அரசும் அந்த தகவலை வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றதென முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்​ தெரிவித்தார்.
அரசியல் வழிகளில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பெயர்களை வெளியிடுமாறு அரசிடம் சுமந்திரன் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தார்.
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் வழங்குவது இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சமூகப் பிரச்சினை எனவும் அவ்வாறு அனுமதிப்பத்திரம் வழங்குவது வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டுமெனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான உரிமங்களில் அரசியல் தொடர்புள்ள தனிநபர்களின் நிதி ஆதாயத்துக்காக வழங்கப்படுவதாகவும் சுமந்திரன் கூறினார்.

வவுனியாவில் காணி பிணக்கினால் வாள்வெட்டு – இருவர் பலி !

வவுனியா ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
வவுனியா, ஓமந்தை, கதிரவேலுபூவரசன்குளம் பகுதியில் காணி முரண்பாடு வாள்வெட்டில் முடிந்தது.
குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் இருவர் மீதும் மிளகாய் தூளை அள்ளி வீசி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.
இதன்போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ என்ற 38 வயதான நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின தந்தையான ரூ.திலீபன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரும் நேற்று (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.