தொடரும் தையிட்டி விகாரை அரசியல்: கட்ட விட்டு கூத்துப் போடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி !
தையிட்டி விகாரையை தற்போதுள்ள இடத்தில் கட்டியது சட்டவிரோதமானது என நயினாதீவு விகாராதிபதி தெரிவித்துள்ளார். விகாரைக்கு என்று ஒதுக்கப்பட்ட காணயில் விகாரை கட்டப்பட்டிருந்தால் அந்த விகாரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்பதால் இராணுவம் தற்போதுள்ள இடத்தில் விகாரையை வலிந்து கட்டியதாக நயினாதீவு விகாராதிபதி யூரியூப்பர் பவனீசனுக்கு வழங்கிய காணொலியில் தெரிவித்துள்ளார்.
விகாரை கட்ட ஆரம்பித்தது முதல் நயினாதீவு விகாராதிபதி அதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்தார். ஆனாலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட்ட தமிழ் தேசியத்தை உச்சத்தொனியில் பேசிய எவரும் அதற்கு எதிராக விகாராதிபதியோடு தோள் கொடுத்துப் போராட முன்வரவில்லை. மாறாக விகாரையின் அங்குரார்ப்பண வைபவத்துக்கு தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் அமைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது விகாரை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதனை இடிக்கக் கோரி இனக்கலவரம் ஒன்றை எதிர்பார்த்து நிற்கின்றது தமிழ் தேசியம். காணி உரிமையாளர்களை நிவாரணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என அழுத்தங்கள் வழங்கபடுகின்றது. அப்படி நிவாரணங்களை ஏற்றுக்கொள்ளும் காணி உரிமையாளர்களை துரோகிகளாகக் காட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. வல்வெட்டித்துறையில் ஜனாதிபதி அனுரவின் கூட்டத்திற்கு சென்ற மக்களைத் துரோகிகள் என்கின்றனர், பா உ அர்ச்சுனாவுக்கு வாக்களித்த மக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி கிட்டத்தட்ட துரோகி என்றே சொல்கின்றார். தமிழ் தேசியம் தற்போது துரோகிப்பட்டம் வழங்க ஆளில்லாமல் சொந்த மக்களுக்கே துரோகிப்பட்டம் வழங்குகின்றது.
காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வும் திணிக்கப்படாது என காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார்.
சந்திப்பில் கலந்து கொண்டிருந்த காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினர், ‘யாழ்ப்பாணத்தில் வலி. வடக்கில் முன்னைய ஜனாதிபதியின் காலத்தில் 243 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தது. அந்தக் காணியை விவசாயக் காணி என்று தவறாக அடையாளப்படுத்துகின்றனர். அது மக்களின் குடியிருப்புக் காணி. அந்தப் பகுதியிலுள்ள இராணுவ முகாமும் இன்னமும் அகற்றப்படவில்லை. மக்கள் குடியிருக்கவும் அனுமதிக்கப்படவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் வலி. வடக்கில் இன்னமும் மீள்குடியமர வேண்டியவர்களின் எண்ணிக்கை தொடர்பில் தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது. எமது காணிகளில் பாதுகாப்புத் தரப்பினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இப்போதும் எமது காணிகளுக்குள் பாதுகாப்புத் தரப்பினர் புதிய கட்டடங்களை அமைக்கின்றனர். பலாலி வீதியில், இன்னமும் மூன்று கிலோ மீற்றர்கள் விடுவிக்கப்பட்டாலே மக்களுக்கு முழுமையான நன்மை கிடைக்கும். விமான நிலையத்துக்கு மேலதிகமாக காணிகள் சுவீகரிக்கப்படத் தேவையில்லை. ஏற்கனவே சுவீகரித்த காணிகளே போதுமானது’ என ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.
அதேபோன்று தையிட்டி திஸ்ஸவிகாரை சட்டவிரோதக் கட்டடம் எனவும் விகாரைக்கு உரியதான காணியை மாற்றுக் காணியாக வழங்கினாலும் அது தொடர்பிலும் சந்தேகம் இருப்பதாகவும் காணி உரிமையாளர்கள் தெரித்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஆளுநர், இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். காணி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உணர்வுபூர்வமான விடயம். மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். அரசாங்கமும் அந்த விடயத்தில் நேரான சிந்தனையில்தான் உள்ளது. படிப்படியாக காணிகளை விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன். காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மாறாக நான் நடந்து கொள்ளமாட்டேன். காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் திணிப்பதற்கும் நான் தயாரில்லை. அதிகாரிகளும் சில இடங்களில் தவறிழைத்துள்ளனர் என்றார்.
மேலும், மாவட்டச் செயலராக 4 மாவட்டங்களில் பதவி வகித்தவன் என்ற அடிப்படையில் பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் தொடர்பான விவரங்கள் தெரியும் என்றும் அதனடிப்படையில் இது தொடர்பில் ஏற்கனவே பாதுகாப்புத் தரப்பினருடன் பேச்சு நடத்தி வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
இதேவேளை தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி உட்பட 14 ஏக்கர் காணிகள் திஸ்ஸ விகாரைக்குச் சொந்தமானவை . அந்தக் காணியை ஒருபோதும் எவருக்கும் கையளிக்க முடியாது . அதற்கான எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதிக்கமாட்டோம் என்று அகில இலங்கை பெளத்த மகா சம்மேளனம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலருக்குத் ஏற்கனவே கடிதம் ஒன்றின் மூலமாக தெரியப்படுத்தியுள்ளது எனவும் அறிய முடிகிறது.