::சாதியம்

::சாதியம்

சாதியம் தொடர்பான கட்டுரைகள்

வட்டுக்கோட்டை என்ன சாதி வெறியர்களின் கோட்டையா? : தேசம் வித்தியா

வட்டுக்கோட்டை – தமிழர்களின் சுயநிர்ணயத் தீர்மானத்துக்கு மட்டுமல்ல சாதிய அடக்குமுறைக்கும் பெயர் போன இடமாக மாறியுள்ளது. சாதியம் என்பது தமிழர்களில் ஆழாமாக வேரூன்றிப் போயுள்ள ஒன்று. அதிலும் யாழ்ப்பாணத்தாரிடம் அதன் தாக்கம் மிக அதிகம். பொதுவாக யாழ்ப்பாணத்தவர்கள் படித்தவர்கள் என்று சொல்லப்படுவது வழமை. ஆனால் அந்த மேதைகளிடம் கூட இந்த விடயத்தில் பகுத்தறிவை காண்பது மிக அரிது. ஏனெனில் சாதியத்தை இந்த சிந்தனை யுகத்தில் கூட வளர்த்தெடுத்ததில் பெரும் பங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் உண்டு. நீண்ட காலத்திற்குப் பின்பு சாதிய அடக்குமுறை பேசபொருளாக மாறியுள்ளது. அதற்கு காரணம் வட்டுக் கோட்டை முதலியார் கோவில் பகுதியில் இடம்பெற்ற ஒரு வாள்வெட்டு சம்பவம்.

கடந்த செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதி வேலை முடித்து வீடு திரும்பிய நளவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை மது போதையிலிருந்த வெளாளம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வட்டுக்கோட்டை பேபி கடை முடக்கில் வைத்து சைக்கிளுடன் தள்ளியுள்ளனர். குறித்த இளைஞன் ஏன் என்னைத் தள்ளினீர்கள் என்று கேட்டதற்கு கள்ள குளை முறித்ததாக சாதிப் பெயரைச் சொல்லி திட்டியுள்ளார்கள். அதற்குள் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் பீதியில் அவரது தந்தைக்கு அறிவித்து, அவரை வரவழைத்தார். தந்தை குறித்த இடத்திற்கு விரைந்து தன்னிலும் வயது குறைந்தவர்கள் என்றும் பாராமல் குறித்த இளைஞர்களிடம் மன்றாடி தன் மகனை அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு இருந்தும் மதுபோதையிலிருந்த வெளாம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முதலியார் கோவிலடிப் பகுதியில் உள்ள குறித்த நபரின் வீட்டுக்கு வாளோடு சென்று அட்டாகசம் புரிந்ததுள்ளனர். அந்த சம்பவத்தில் முதலில் தாக்குதலுக்குள்ளான இளைஞனின் தந்தைக்கு வாளால் வெட்ட முயற்சிக்க அவர் தனது கைகளால் தடுத்ததில் அவரது கைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் குறித்த இளைஞர் குழு தகாத வார்த்தைகளால் அங்கிருந்த பெண்கள், சிறுவர்களைத் திட்டி அங்கிருந்த நளவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள், கடைகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டு பெரும் அடாவடி புரிந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இது தொடர்பில் பதிவிட்டோரில் பலர் நீண்ட காலத்திற்கு பின்பு சாதிக்கலவரம் தலை தூக்கியுள்ளது என்ற தொணியில் பதிவிட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. முதலில் அங்கு நடந்தது கலவரம் அல்ல. அது சாதிய அடக்குமுறை. அது ஒன்றும் மீண்டும் தலை தூக்கவில்லை. காலம் காலமாக அந்த மக்கள் மீது அரங்கேற்றப்பட்டு வருகின்றது. குறித்த சம்பவம் ஊடகங்களாலும் விதை குழுமம் போன்ற சமூக மட்ட அமைப்புகளாலும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சாதியம் யாழ்ப்பாணத்தின் சகல இடங்களிலும் இருந்தாலும் கூட அது திரைமறைவிலேயே உள்ளது. திருமணம் போன குறித்த சில விடயங்களில் அது வெளித்தெரியும். ஆனால் வட்டுக்கோட்டை அதை அண்டிய பகுதிகள், வரணி, புத்தூர் போன்ற இடங்களில் அதன் தாக்கம் மிக அதிகம். எடுத்துக்காட்டாக சில வருடங்களுக்கு முன்பு புத்தூரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் கலைமதிக் கிராம குடியிருப்பு பகுதிக்கு அண்மையில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமலிருந்த மயானத்தை புனரமைத்து பயன்படுத்துவதற்கு ஒடுக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முனைந்தனர். நீண்டதொரு போராட்டத்தின் ஊடாகவே அந்த முயற்சி தடுத்துக்கப்பட்டது.

வட்டுக்கோட்டைப் பகுதியில் சமூகத்தில் தம்மை உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சமூகத்துக்கும் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சமூகத்துக்கும் இடையில் வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறும். குறிப்பாக இந்த அடக்குமுறையாளர்கள் முட்டையில் மயிர் பிடுங்குவது போல ஏதாவது ஒரு சம்பவத்தை இழுத்து வைத்து சண்டைக்கு போவார்கள் என்கின்றார் மாவடியைச் சேர்ந்த சிறி.

குறிப்பாக அங்குள்ள அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறான சாதிய அடக்குமுறைக்கு அதிகம் உள்ளாக்கப்படுகின்றனர். உயர்சமூகம் என்று கூறிக்கொள்ளும் அடக்குமுறையாளர்களால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைப் பற்றி மிகத் தவறான விம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எவ்வாறு தமிழ் சினிமா முஸ்லீம் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதோ அது போன்றே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை வன்முறைளார்களாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோராகவும் ஒரு விம்பத்தை இவர்கள் கட்டவிழ்த்துவிடுகின்றனர். இதனால் சமூகம் இவர்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் விளைவால் பாடசாலைகளிலும் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சிக்கல் நிலைகளை எதிர்கொள்கின்றனர்.

இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பிரதேசத்திலுள்ள ஓர் அரச பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில், எங்களால் பள்ளிக்கூடத்துக்கு சந்தோசமா போய் வர ஏலாது. எங்களை சாதிப் பெயர் சொல்லி வெள்ளாம் அண்ணாமார் கூப்பிடுவினர். நாங்க முறைச்சுப் பார்த்தாக் கூட அடிக்க வருவினம். ரீச்சர், சேர் மார் கூட என்ன நடந்தாலும் எங்களைத் தான் பிழை சொல்லுவினம். எங்களுக்கு படிக்கவே விருப்பம் இருக்காது. இப்பிடி செய்தா யாருக்கு தான் படிக்க மனம் வரும். எங்கட இடத்தில ஓ.எல் வரைக்கும் படிக்குறதே பெரிசு” என்றார்.

அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியை தேசம்நெற்க்கு கருத்து தெரிவிக்கையில், “பிள்ளைகள் எல்லோரையும் நாங்க சமமாகத் தான் பார்க்க வேண்டும். ஆனா எல்லா ஆசிரியரும் அப்படி நடத்தினமா என்டு எனக்கு தெரியல. உயர் சமூகப் பெண் பிள்ளைகளிடம் இவங்கள் கதைச்சா அதை யாரும் கண்டா பெரும் பிரச்சினை. இந்த வயசில காதல் அது இது என்டு நிறைய நடக்கும். அதை பக்குவமா யாரும் கையாளுறேல. சாதிய சொல்லி அடிக்கப் போடுவாங்கள். பள்ளிக்கூடத்தில ஒரு விளையாட்டுப் போட்டி ஒழுங்கா நடத்தி முடிக்குறது கூட பெரும்பாடு. பள்ளிக்கூட பிள்ளைகளால பிரச்சனை வருதோ இல்லையோ பார்க்க வாற பெடியள் ஏதாவது வம்மை வளர்ப்பாங்கள். உண்மேலயே இவங்க இப்பிடி சாதிய சொல்லி சொல்லி அவங்களை அவமானப்படுத்தினா அவங்களும் ஒரு அளவுக்கு மேல என்ன செய்வாங்கள்?” என்றார் கவலையோடு.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லி வளர்க்க வேண்டிய பாடசாலைகளிலேயே சாதிய ஒடுக்குமுறை இவ்வளவு மோசமாக இருந்தால் இது தவறு என்ற எண்ணம் எங்கு தான் பிள்ளைகள் மனதில் விதைக்கப்படும்? இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய என்னுமொரு விடயம் பாடசாலைகளில் ஆசிரியர்களாக பணிபுரிவோரில் பெரும்பான்மையானோர் யாழ்.பல்கலைக்கழக பட்டதாரிகள். அங்கு சாதியத்தை வளர்ப்பது எவ்வாறு என்று கற்று பாடசாலைகளில் கற்பிக்கின்றனர் என்றாலும் தவறிருக்காது. (முற்போக்காக சிந்திக்கின்ற விரல் விட்டு எண்ணக்கூடிய விரைவுயாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இது பொருந்தாது.)

அண்மையில் இடம்பெற்ற சம்பவம் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் குளை பிடுங்கினான் என்ற ஒரு காரணத்தை கூறியே இடம்பெற்றது. ஆனால் குறித்த இளைஞன் நான் எந்த குளையும் பிடுங்கவில்லை என்று தெளிவாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளான். அப்படியே அவன் குளை பிடுங்கியிருந்தால் கூட அதில் என்ன தவறு இருக்கின்றது? அதற்காக வாளெடுத்து வெட்ட போகிறார்கள் எனில் சாதி என்பது எந்தளவு தூரம் இவர்களை சுயபுத்தி அற்றவர்களாக மாற்றியுள்ளது என்று ஒரு கணம் சிந்தித்தால் தமிழ் சமூகம் எந்தளவு தூரம் மோசமான சாதி என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் உணரமுடியும்.

இதுமட்டுமல்ல வட்டுக்கோட்டையில் இந்த சாதி வெறியர்கள் ஆடும் ஆட்டம் ஒன்று இரண்டல்ல. குறிப்பாக சங்கரத்தைப் பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழாவுக்கு போய் அங்கு நடத்தும் கூத்துகளைப் பார்த்தாலே தெரியும். எந்தளவு சிந்தனை வளர்ச்சி குன்றிய கூட்டங்கள் என்னும் எமது சமூகத்தில் உலாவுகின்றன.

சிங்களவரிடம் சமஉரிமை கேட்டு பிரித்தானியாவில் கிளாஸ்கோவரை போர்க்கொடு தூக்கத் தெரிந்தவர்களுக்கு தங்கள் வீட்டு கோடிக்குள் தாங்கள் செய்கின்ற ஒடுக்குமுறை தெரிவதில்லை. எமது தமிழ்த் தேசியம் பேசும் கூட்டங்களுக்கு, மனித சமூகத்தை ஏற்கத் தெரியாத இப்படியொரு மந்தைக் கூட்டம் நம்மிலேயே இருப்பது கண்ணுக்கு தெரியாதா? ஏனெனில் அவர்களும் பெரும்பாலோனோர் இந்த மந்தைகளைச் சேர்ந்தவர்களே. ஏன் இப்போது நடந்த இந்த சம்பவத்தில் கூட பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் எந்த தமிழ் எம்.பியும் அறிக்கை விடவில்லை. தமிழ்த் தேசியம் பேசும் எந்தவொரு சட்டத்தரணிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஆரஜாக திராணியில்லை. ஏனெனில் வாக்கு வங்கி சரிந்துவிடும் என்ற பயம்.

ஈபிஆர்எல்எப், ஈபிடிபி, சமத்துவ கட்சி மற்றும் புதிய சனநாயக மார்க்ஸிய லெனினிய கட்சி ஆகிய அமைப்புகள் ஓரளவு இடதுசாரிக்கொள்கைகளுடன் சாதி மறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வேலை செய்தபோதும் இக்கட்சிகள் இன்னமும் பிரதான நீரோட்டத்தில் இருந்து ஓரம்கட்டப்பட்ட நிலையிலேயே இன்றும் உள்ளனர். பிரித்தானியாவில் சட்டத்தரணியாகச் செயற்பட்ட ரங்கன் என் தேவராஜன் பாதிக்கப்பட்ட சமூகத்தை சென்று சந்தித்து சட்ட ஆலொசனைகளை வழங்கியும் உள்ளார்.

சாதிய பிரச்சனை பேசுபொருளாக மாறும் போதெல்லாம் ஒரு குழுவினம் இது தொடர்பில் கதைப்பதால் தான் பிரச்சனை கதைக்காவிட்டால் சாதிப் பிரிவினை காலப் போக்கில் இல்லாமல் போய்விடும் என்று ஒரு கதை சொல்வார்கள். அடக்குமுறைகளுக்கு எதிராக பேசுவோரையே குழப்பதாரிகளாக மாற்றி பூசி மெழுகிவிடுவார்கள்.

முதலியார் கோவிலடிப் பிரச்சினை தொடர்பில் அங்குள்ள சில படித்த தரப்பினரை தேசம்நெற் தொடர்பு கொண்டிருந்தது. அவர்களில் பெரும்பாலானோர் இப்பிரச்சினை தொடர்பில் பேச மறுத்துவிட்டனர். சாதிப் பிரிவினை தவறு என்று தெரிந்தாலும் அதை வெளிப்படையாகத் தெரிவித்தால் எங்கு தாமும் சமூகத்திலிருந்து புறந்தள்ளப்படுவோம் என்ற பயம் பெரும்பாலானோருக்கு உள்ளது. இந்த பயம் தான் சாதியம் என்னும் எமது சமூகத்தில் வேரூன்ற காரணமாக அமைகின்றது.

மேலும் வட்டுக்கோட்டையில் உயர் சமூகம் எனக் கூறிக்கொள்ளும் சமூகத்தைச் சேர்ந்த அரச ஊழியர் ஒருவரைத் தொடர்பு கொண்டோம். அவர் எமக்குப் பதிலளிக்கையில், உந்தப் பிரச்சனை பற்றிக் கதைச்சா எங்களையும் வெட்ட வருவாங்கள். இவங்கள் பெரிய ரவுடிகள். உள்ள கெட்ட பழக்கம் முழுக்க இருக்கு. வேலைக்கு போகாம வெளிநாட்டுக் காசில பெரிய பெரிய பைக்குகள் வாங்கி வாள்வெட்டு குரூப்போட சேர்ந்து திரிவாங்கள். இவங்களைப் பார்த்து சின்னப் பெடியங்களும் பழுதாப் போறாங்கள். இவங்களுக்கு சண்டை இழுக்க ஏதாவது வேணும். அதுக்கு தான் சாதிய சொல்லி அவனுகளோட வம்புக்கு போறாங்கள். இவனுகாளால ஊருக்க சமூகங்களுக்க பிரச்சினை. இவனுக மேல ஏகப்பட்ட பொலிஸ் கேஸ் இருக்கு. ஆனால் காசை கொடுத்து வெளில வந்துடுவாங்கள், பெரிய கேஸ் என்டா ஒழிஞ்சு திரிவானுகள். நிம்மதியா இருக்க ஏலாது. கோவில் திருவிழா கூட நிம்மதியா செய்ய ஏலாது. வேலை வெட்டியும் இல்லை. இவங்கள் கேசில பிடிபட்டாலும் சைக்கிள் வக்கீல் எடுக்க இருக்குறார். இதெல்லாம் நான் சொன்னன் என்டு தெரிஞ்சாலே என்னை வெட்ட வந்துடுவாங்கள்” என்றார் பீதியோடு.

இந்த சாதிய மனோநிலையிலிருந்து இன்னும் யாழ் சமூகம் விடுபடவில்லை என்பது துரதிஸ்டவசமானது. யாழ் பல்கலைக்கழத்தில் கூட ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தகுதி இருந்த போதும் உயர்நிலைகளுக்கு வருவது மிகக் கடினமானது. பல்கலைக்கழகத்தின் முதலாண்டில் யார் எவர் என்று தெரியாமல் காதலில் சிக்குபவர்கள் கூட, இரண்டாம் ஆண்டில் யார் என்ன சாதி என்பது தெரிந்ததும் காதலை முடிவுக்கு கொண்டுவந்துவிடுவார்கள். பேராசிரியர் கா சிவத்தம்பி ஏன் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக்கப்படவில்லை? அவரைக் காட்டிலும் பேரறிஞ்ஞரான ஒரு துணைவேந்தரையா யாழ் பல்கலைக்கழகம் அன்று தெரிவு செய்தது?

அன்று யாழ்ப்பாண நகர மேயராக இருந்த செல்லன் கந்தையனை கை நீட்டி அடிக்கலாம் என்று மாநகரசபை உறுப்பினர்களை அடிக்க வைத்தது என்ன? அன்று மேயர் செல்லன் கந்தையன் மாநகரசபை உறுப்பினர்களால் பிடிக்கப்பட்ட மாட்டை அவிழ்த்துவிட்டதற்காக இரு தமிழர் விடுதலைக் கூட்டணி மாடுகளால் (உறுப்பினர்களால்) தாக்கப்பட்டார். அவர்களில் ஒருவர் தான் இப்போது சங்கரி ஐயா எப்போது போவார் கதிரை எப்போது காலியாகும் என்று பார்த்துக்கொண்டிருக்கின்றார். அன்று மேயர் செல்லன் கந்தையனை மாட்டை அவிழ்த்து விட்டதைச் சொல்லி அடித்தனர். இன்று குளை வெட்டியதாகச் சொல்லி ஒரு அப்பாவி இளைஞனை அடித்து அவனின் தந்தையின் விரலைத் துண்டித்துள்ளனர்.

அப்போதைய மேயர் செல்லன் கந்தையன் யாழ் பொதுநூலகத்தை திறந்துவைக்கக் கூடாது என்பதில் வாக்கு வங்கியே அற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி மிக உறுதியாக இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் காரணத்திற்காக யாழ் நூலகம் திறப்பதை தடுத்ததைஇ தமிழீழ விடுதலைப் புலிகளின் சாதி அரசியல் என்று இன்றும் சில மாற்றுக் கருத்துச் சாதியமான்கள் வாதிட்டு தங்கள் சாதிய சிந்தனைக்கு வெள்ளையடிக்கின்றனர்.

இப்போது யாழ்ப்பாணத்தின் சமூகப் பரம்பல் முற்றிலுமாக மாறியுள்ளது. முன்னர் ஒடுக்கும் சமூகம் 60 வீதமாகவும் ஒடுக்கப்படும் சமூகம் 40 வீதமாகவும் இருந்த நிலைமாறி ஒடுக்கும் சமூகம் பெரும்பாலும் புலம்பெயர்ந்து வெளிநாடு செல்ல அவர்களின் சனத்தொகை 40 வீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. அதனால் ஒடுக்கப்படும் சமூகத்தின் சனத்தொகை 60 வீததத்தை எட்டியுள்ளது. இதே நிலையை வன்னியிலும் ஒடுக்குகின்ற தமிழர்களின் எண்ணிக்கை 40 வீதமாகவும் ஒடுக்கப்படுகின்ற மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை 60 வீதமாகவும் இருப்பதைக் காணலாம். ஆனால் வடமாகாண அரசியலில் இந்த சனத்தொகையை பிரதிபலிக்கும் விதத்தில் அரசியல் பிரதிநிதிகள் இல்லை. அரசியல், பொருளாதார, கல்வி, கலாச்சார விடயங்கள் அனைத்திலுமே ஒடுக்குகின்ற சமூகமே தொடர்ந்தும் கோலோச்சி வருகின்றது. வட்டுக்கோடை மட்டுமல்ல ஒட்டுமொத்த வடமாகாணமே ஒடுக்குபவர்களின் கோட்டையாகவே இன்னும் இருந்துவருகிறது.

அரசியலில் மட்டுமல்ல விடுதலைப் போராட்டத்திலும் இதெல்லாம் சகஜமப்பா!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி கருணா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட போதும் கிழக்கு புலிகள் சமத்துவமாக நடத்தப்டவில்லை கிழக்கு மாகாணம் சமத்துவமாக நடத்தப்படவில்லை என்பது வரலாற்று ரீதியாக ஆவணப்படுத்தப்பட்ட ஒன்று. இதனை மிகத் தீவிரமாக மறுப்பவர்கள் கிழக்கைச் சார்ந்தவர்கள் அல்ல. யாழ்ப்பாணத்தைச் சார்ந்தவர்களே – ஒடுக்குகின்றவர்களே.

இதே போல் சாதிகள் ஒன்றும் இல்லை என்று முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பவர்களும் ஒடுக்கப்பட்ட சாதியினர் அல்ல. ஒடுக்கும் சாதியினரே. இலங்கை அரசாங்கம் எவ்வாறு இலங்கையில் இனங்களுக்கு இடையே எவ்வித பிரச்சினையும் இல்லை நாம் எல்லோரும் இலங்கையர் என்ற போர்வையில் சிங்கள பேரினவாதத்தை கட்டமைக்கின்றதோ; அதே அரசியல் அடிப்படையிலேயே யாழ் வெள்ளாள ஆண் ஆதிக்க தமிழ் தேசியவாதம்: பிரதேசவாதம் சாதியம் பெண் ஒடுக்குமுறை என்று, ஒன்றில்லை இதெல்லாம் தமிழ் மக்களை பிளவுபடுத்தும் சதி வேலை என்று புலம்புகின்றது. இதனைச் சொல்பவர்கள் மிகமோசமான சாதிமான்களாகவும் ஏனைய பிரதேசத்தவர்களைப் பற்றிய மோசமான எண்ணக்கரு உடையவர்களாகவும் பெண் அடிமைச் சிந்தனையுடையவர்களாகவும் இருக்கின்றனர்.

ஒடுக்குபவர்கள் அல்லது அவர்களுக்கு துணை போவவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து, முகமூடியோடு ஒடுக்கப்படுபவர்களின் அடையாங்களோடு வந்து, அந்த ஒடுக்கப்படுபவர்களையே அவமானப்படுத்துவது கேவலப்படுத்துவது ஒரு கீழ்த்தரமான வஞ்சகச் சூழ்ச்சி. இதனை ஆளும் வர்க்கங்களும், ஒடுக்கும் வர்க்கங்களும் மிகத்திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளும். இதுவொன்றும் புதிய கண்டுபிடிப்பும் அல்ல. அந்த வகையில் எமது போராட்டத்திலும் இவ்வாறான பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

விடுதலைப் போராட்ட ஆரம்பகாலங்களில் தாங்கள் செய்யும் மோசமான செயற்பாடுகளை மற்றையவர்கள் தலையில் கட்டிவிடும் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. இதில் தமிழீழ விடுதலைப்புலிகள் மிகக் கைதேர்ந்தவர்கள். ஏனைய இயக்கங்களும் அவ்வாறான கட்டுக் கோப்பான அமைப்பு வடிவம் இல்லாததால் அவர்களால் இதனை பெரிய அளவில் செய்ய முடியவில்லை. ரெலோ அழிக்கப்பட்ட காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் தாங்கள் களவாடிய பொருட்களை எல்லாம் கொண்டுவந்து ரெலோ களவாடியவை என்று மக்களிடம் திருப்பி ஒப்படைத்தனர். இதே திருட்டையே தங்களை புலிகள் என்று சொல்பவர்கள் இன்று கருத்தியல் தளத்தில் செய்ய முற்படுகின்றனர். இவை கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உட்படுவது தவிர்க்க முடியாதது.

ஆண்கள் முகமூடிக்குள் நின்றுகொண்டு பெண்களின் அடையாளங்களோடு வந்து பெண்களை அவமானப்படுத்துவது, இந்துக்கள் முஸ்லீம்களது பெயர்களில் வந்து எழுதுவது, ஒரு பிரதேசத்து பெயரையே வைத்துக்கொண்டு, அங்கு நடந்த உண்மைச் சம்பவங்களை திரிபுபடுத்துவது. ஒடுக்கும் சாதியினர் தங்களை ஒடுக்கபடுபவர்களாக பாவனை பண்ணி எழுதுவது அல்லது அல்லது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே அழுத்தங்களைக் கொடுத்து அவர்களை தங்கள் பிரதேசத்தவர்களுக்கு எதிராக எழுத வைப்பது, போன்ற செயற்பாடுகள் மிகச் சர்வசாதாரணமாக எமது போராட்ட வரலாற்றில் இடம்பெற்றது.

விடுதலைப் புலிகளில் இருந்து பிரிவதற்கான தத்துவார்த்த கருத்தியலை கருணாவிற்கு வழங்கியவர் இன்று மிகச்சிறந்த ஊடகவியலாளராகக் அறியப்படும் தராக்கி சிவராம். கருணா விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்ததும் திட்டமிட்டபடி கருணாவிற்கு சாதகமாக அமையவில்லை. அதனால் தராக்கி சிவராம் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்படும் நிலை உருவானது. இதனை கச்சிதமாக பயன்படுத்திய புலிகள் தராக்கி சிவராமை வன்னிக்கு அழைத்து கருணாவிற்கு எதிராக தராக்கி சிவராமை எழுத வைத்தனர். விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்படிருக்க வேண்டியவருக்கே பின்னாளில் விடுதலைப் புலிகள் மாமனிதர் பட்டம் கொடுத்து கௌரவித்தனர், தனது சொந்த பிரதேசத்து மக்களைக் காட்டிக்கொடுத்ததற்காக. அரசியலில் மட்டுமல்ல விடுதலைப் போராட்டத்திலும் இதெல்லாம் சகஜமப்பா!

2004இல் விடுதலைப் புலிகள் சந்திரிகா அரசுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கை கடற்படையின் அணுசரணையோடு கடல் வழியாக மட்டக்களப்பில் தரையிறங்கினர். மட்டக்களப்புப் போராளிகளையே அங்கு தரையிறக்கி அங்கிருந்த போராளிகளை சரணடையும்படி கேட்க, தங்கள் ஊரவர்கள் தானே என்ற நம்பிக்கையில் அவர்கள் சரணடைந்தனர். சரணடைந்த கருணா அணியின் மட்டக்களப்புப் போராளிகளை விடுதலைப்புலிகளின் யாழ் அணியோடு வந்த கிழக்குப்புலிகள் நூற்றுக்கணக்கில் கொன்று குவித்தனர். படுவான்கரையிலும் கருணா தன்னால் முடியாது என வீட்டுக்கு அனுப்பி வைத்த போராளிகளை, இந்த யாழ் விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழிருந்த மட்டக்களப்பு போராளிகளிடம் பெற்றோரே கொண்டுவந்து ஒப்படைத்தும் இருந்தனர். இவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவ்வாறான மோசமான பிரதேசவாதப் படுகொலைகளை வேறெந்ம விடுதலை போராட்ட அமைப்பும் இலங்கையில் மேற்கொண்டிருக்கவில்லை. மட்டக்களப்பு போராளிகளை வைத்தே மட்டக்களப்புப் போராளிகளைப் படுகொலை செய்த மிலேச்சதனத்திற்கு அந்த ஊர்களின் முகமூடிக்குள் நுழைந்துகொண்டு வரலாற்றைத் திரிபுபடுத்தும் வகையில் இந்தக்கொலைகளை நியாயப்படுத்த முயற்சிப்பது மிக மோசடான அயோக்கியத்தனம்.

1986இல் ரொலோ மீது புலிகள் படுகொலைத் தாக்குதலை மேற்கொண்ட போதும் பெரும்பாலும் படுகொலை செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் அல்ல. கிழக்கைச் சேர்ந்தவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் பல வகையிலும் ஏனைய பிரதேசங்களை வஞ்சித்தே போராட்டத்தை வளர்த்தது. இந்தப் போராட்டங்களின் காரணமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மிகப்பெருபாலானோர் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தினதும் தமிழ் கட்சிகள் அனைத்தினதும் தலைமை யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியே அன்றும் இருந்தது. இன்றும் இருக்கின்றது. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் ரிஎம்விபி மட்டும் தற்போது விதிவிலக்கு.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டமும் ஒக்டோபர் எழுச்சியும்:- கனடாவில் கலந்துரையாடல்

Senthiveel_Si_Kaதீண்டாமை ஒழிப்புப் போராட்டமும் ஒக்டோபர் எழுச்சியும்: ஒரு போராளியின் பார்வையில் என்ற தலைப்பில் தோழர் சி கா செந்திவேல் அவர்களின் உரையும் கலந்துரையாடலும் கனடா ஸ்காபொறோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேடகம் – தமிழர் வகைதுறைவள நிலையம் இச்சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றிலும் வட இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சாதியத்திற்கு எதிரான போராட்டங்களிலும் இரண்டறக்கலந்தவர் தோழர் சி. கா. செந்திவேல். 1963ல் தனது இருபதாவது வயதிலேயே கொம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், 1965ம் ஆண்டு முதல் தன்னை கட்சியின் முழுநேர அரசியலில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் 1989ம் ஆண்டிலிருந்து புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு சமூகப் போராளியான இவரின் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள தேடகம் குழுவினர் அனைவரையும் அழைத்துள்ளனர்.

சி.கா.செந்தில்வேல் எழுதிய நூல்கள் :
1. இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள்
2. புதிய ஐனநாயகமும் போராட்ட மார்க்கமும்
3. சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்.
4. கைலாசபதியும் சமூகப் பங்களிப்பும்.
5. மனிதரும் சமூக வாழ்வும்.

Senthiveel_Si_Kaகுறிப்பு: 45 வருட இடதுசாரி அரசியல் வரலாற்றையும் போராட்ட வரலாற்றையும் கொண்ட ஒரு சமூகப் போராளியான இவரின் அனுபவம் இன்றைய கால கட்டத்தில் மிக அவசியமானதாகிறது. அந்த வகையில் தோழர் சி. கா. செந்தில்வேல் அவர்களின் இந்நேர்காணல் ஜனவரி 6, 2008ல் தேசம்நெற் இணையத்திற்காகப் பதிவு செய்யப்பட்டது. அதன் pdf இணைப்பு: Senthiveel Interview_Book

நிகழ்வு விபரம்:
Saturday, October 23rd 2010 @4:30P.M
Mid Scarborough Community Centre
(Don Montgomery CRC)
2467 Eglinton Ave East (@Kennedy)

Contact:
thedakam@gmail.com
0014168407335

50 வருடங்களாக வசித்து வரும் சுத்திகரிப்பு தொழிலாளிகளுக்கு காணிகளுக்கான உரிமம் இல்லை.

Douglas_Devanandaசங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி ஊரத்தி, சங்கானை மத்தி ஆகிய பிரதேசங்களில் 50 வருடங்களாக வாழ்ந்து வரும் சுத்திகரிப்பு தொழிலாளிகளான மக்களுக்கு இன்னமும் காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை எனவும், வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காணிகளுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்கி உதவுமாறும் குறிப்பிட்ட மக்கள் வடமாகாண ஆளுநருக்கு மனுவொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

“சங்கானை மத்தியில் சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வாழ்நது வருகின்றோம். எம்முடன் வாழ்ந்த 21 குடும்பங்களுக்கு 1979 இல் உள்ளுராட்சி சபையின் விசேட ஆணையாளராக அப்போதிருந்த இராசு தணிகாசலம் என்பவரால் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள எமக்கு காணி உரிமம் எவையும் வழங்கப்படவில்லை.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் காணிகளை பகிர்ந்து வழங்குமாறு மாகாணசபை அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். ஆனாலும், தீர்வு எதுவும் இது வரை எட்டப்படவில்லை. எனவே சங்கானை மத்தி, அராலி ஊரத்தியிலுமுள்ள 65 சுத்திகரிப்புத் தொழிலாளிகளுக்கு வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காணிகளை பகிர்ந்து வழங்கி, அவற்றுக்கான உரிமங்களையும் வழங்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்” என இம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்னி முகாம் மக்களுக்கு உதவ முன்வருபவர்களுக்கு ஆப்படிக்கும் காரைநகர் நலன்புரிச் சங்கம்!!! : த ஜெயபாலன்

kws-logo.jpg
கண்ட கண்ட ஆட்களையும் எங்களின் வீடுகளில் இருத்தவோ?’
வன்னியில் இடம்பெற்ற அவலத்தை கற்பனையிலோ எழுத்திலோ கொண்டுவர முடியாது. அந்த அவலம் அவ்வளவு கொடியது. அதிலிருந்து தப்பிய மக்கள் இன்று இலங்கை அரசு நலன்புரி முகாம்கள் என்று சொல்லும் முட்கம்பி வேலிக்குள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். இம்முகாம்களின் நிலை பற்றி மிக விரிவாக சர்வதேச ஊடகங்களே தொடர்ச்சியாக எழுதி இலங்கை அரசின் முகத்திரையைக் கிழித்து வருகின்றன. ஆனால் மறுமுனையில் இந்த முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்கு லண்டனில் உள்ள சில அமைப்புகள் முட்டுக்கட்டையாகவும் உள்ளன.

குறிப்பாக காரைநகர் நலன்புரிச் சங்கம், லண்டன் அம்மன் ஆலய நிர்வாகிகள் சிலர் முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவ முன் வருபவர்களுக்கு எதிராக அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக கையெழுத்து வேட்டையில் இறங்கி உள்ளனர்.

பொதுவாக உரிமை மீறல்களுக்கு எதிராக அடிப்படை உரிமைகளைக் கோரி கையெழுத்துப் போராட்டங்கள் நடத்தப்படுவது வழமை. ஆனால் மாறாக தங்கள் சுயநல நோக்குகளுக்காக இந்த ஜனநாயக நடைமுறையை கையெழுத்து வேட்டையை சிலர் நடாத்த முயல்கின்றனர். நுனிநாக்கில் ஜனநாயகம் பேசும் இவர்கள் தமிழ் மக்களின் நலன்தொடர்பில் ஆபத்தானவர்களாக உள்ளனர். ஒரு சிலரின் தூண்டுதலால் முழுமையான புரிதல் இன்றி கையெழுத்து இடுவோர் ஒரு சிலரின் சுயநலன்களுக்கு துணை போய்விடுகின்றனர்.

காரைநகர் நலன்புரிச் சங்கம் ஏற்கனவே சாதியச் சங்கம் என்று பெயரெடுத்துக் கொண்டது. லண்டன் குரல் 19 (ஒக்ரோபர் 2007 – நவம்பர் 2007) இதழிலும் அதற்கு முன்னர் வெளியான இதழ்களிலும் காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் சாதியப் போக்குத் தொடர்பாக விரிவாக எழுதப்பட்டு இருந்தது. ( காரைநகரும் சாதிய முரண்பாடும் :காரை முகுந்தன் ) சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் அதன் உறுப்பினர் ஒருவரை சாதிப் பெயரைச் சொல்லி விழித்ததைத் தொடர்ந்து இச்சர்ச்சை உருவாகியது. தற்போது காரைநகர் நலன்புரிச் சங்கம் தனது சாதியச் சிந்தனைக்காக மற்றுமொரு தடவை சர்ச்சைக்குள் சென்றுள்ளது. ( காரை மக்களைத் தலைகுனிய வைத்த காரை நலன்புரிச் சங்கம் :காரை முகுந்தன் )

வன்னி முகாம்களில் உள்ள மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக கிழக்கு லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடலில் யுத்தத்தில் சம்பந்தப்படாத பகுதிகளைச் சேர்ந்தவர்களை அந்தக் கிராமத்தவர்கள் பொறுப்பெடுத்து பார்க்க முடியும் என்ற யோசனையை பி சோமசுந்தரம் முன்வைத்தார். காரைநகர் நலன்புரிச் சங்க உறுப்பினரான இவர் காரைநகரில் பல கல்வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. வன்னி முகாம்களில் உள்ள காரைநகர் மக்களைப் பொறுப்பேற்று அவர்களை காரைநகரில் மீளவும் குடியமர்த்தலாம் என்ற யோசனையை பி சோமசுந்தரம் முன் வைத்தார். அதனைப் பலரும் அன்று வரவேற்றனர். சோமசுந்தரம் தனது யோசனையை பேச்சுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. உத்தியோகபூர்வமாக செயற்பாட்டிலும் இறங்கினார்.

இலங்கை அரசுக்கு தனது யோசனையை எழுதிய சோமசுந்தரம் காரைநகர் மக்களை மீளவும் காரைநகரில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டார். சோமசுந்தரம் இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் சர்வதேசமே இன்று இலங்கை அரசிடம் மக்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும் படியே கேட்கின்றது. அதற்கு பதிலளித்த இலங்கை அரசு இதுதொடர்பாக பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டிருந்தது.

இதனை காரைநகர் நலன்புரிச் சங்கத்திற்கு சோமசுந்தரம் தெரியப்படுத்தினார். இது தொடர்பாக காரைநகர் நலன்புரிச் சங்கம் மே 31 2009ல் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து காரை மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாகவும் பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தடன் பேசுவதற்கும் ஒரு உபகுழுமைக்கப்பட்டது. அதில் சோமசுந்தரம் பிரபல வானொலி அறிவிப்பாளர் தயானந்தா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். ஆனால் உப குழுவோ அல்லது காரைநகர் நலன்புரிச் சங்கமோ மேற்கொண்டு நடவடிக்கையில் இறங்க மறுத்தனர். இலங்கைத் தூதரகத்துடன் வன்னி முகாம்களில் உள்ள மக்கள் பற்றி பேசுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரும் கடிதம் ஒன்று தயாரிக்கப்பட்டு ( Letter_Prepared_for_SLHC )அனுப்பப்பட முடிவெடுக்கப்பட்ட போதும் அதனை காரைநகர் நலன்புரிச் சங்கம் அனுப்பி வைக்கவில்லை.

சோமசுந்தரம் தானே நேரடியாக மின் அஞ்சலில் அக்கடிதத்தை அனுப்பி வைத்தார். அதற்கு யூன் 16 2009ல் பதிலளித்த இலங்கைத் தூதரகம் யூன் 26 2009ல் சந்திப்பதற்கு நேரத்தை ஏற்பாடு செய்து வழங்கியது.

இதற்கிடையே இந்த உப குழு அமைக்கப்பட்ட பின் காரைநகர் நலன்புரிச் சங்கத்தை சேர்ந்த சிலர் இந்த மீளக் குடியமர்த்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தனர். ‘தூதரகத்துடனோ துரோகக் கும்பல்களுடனோ சங்கம் தொடர்புகொள்வதை நிறுத்துமாறு தயவாகக் கேட்டுக்கொள்கிறோம்.’ என்று லண்டன் வாழ் காரைநகர் மக்கள் என்ற பெயரில் பிரசுரம் ஒன்றை வெளியிட்டு பலரிடம் கையெழுத்தும் பெறப்பட்டு உள்ளது. ( Karai_Diasporas_Petition ) இந்தப் பிரசுரத்தை காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் சிவா ரி மகேசன் சோமசுந்தரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கையழுத்து இட்டவர்களின் பட்டியலை செயலாளர் சிவா ரி மகேசன் வெளியிடவில்லை. கையெழுத்து இட்டவர்களின் பட்டியலை சோமசுந்தரம் கேட்டிருந்த போதும் இதுவரை அப்பட்டியல் வழங்கப்படவில்லை.

இலங்கை அரசு வன்னி மக்களைத் தடுத்த வைத்துள்ள நிலையில் அவர்களிடம் பேசுவதற்கு என்ன உள்ளது என்பது நியாயமானதாக இருந்தாலும் கடிதத்தின் உள்நோக்கம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. மேலும் காரைநகர்ச் சங்கத்தின் கடந்தகால வரலாறும் சந்தேகத்திற்குக் காரணமாக இருக்கின்றது.

இந்தச் சூழ்நிலையில் தொடர்ந்தும் இந்த உபகுழுவில் இருப்பது அர்த்தமற்றது என்று கூறி பி சோமசுந்தரம் யூன் 21 2009ல் உப குழுவில் இருந்து வெளியேறினார். தான் மக்களுக்குச் செய்ய வேண்டியதை சுயாதீனமாக சிறிய அளவில் செய்வேன் என்றும் அவர் தனது ராஜினாமாக் கடிதத்தில் தெரியப்படுத்தி இருந்தார்.

யூன் 22 2009ல் இலங்கைத் தூதரகத்திற்கு காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் சிவா ரி மகேசன் அச்சந்திப்பில் தவிர்க்க முடியாத காரணங்களால் தங்கள் உறுப்பினர்கள் கலந்தகொள்ள முடியாது எனத் தெரிவித்து பதில் எழுதினார். ( KWS_Letter_to_SLHC )

இச்சம்பவங்கள் பற்றி சிவா ரி மகேசனுடன் யூலை 4ல் தொடர்பு கொண்ட போது காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் கீழ்மட்ட உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தமையால் தாங்கள் மேற்கொண்டு செயற்பட முடியவில்லை என சிவா மகேசன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ‘அந்த மக்கள் முகாம்களுக்கு வெளியே வந்தபின் அவர்கள் உதவிகளை வழங்க விரும்புகிறார்கள்’ என்றார். உதவி தேவைப்படும் போது தானே செய்ய வேண்டும். இப்போது தானே அவர்களுக்கு உதவி தேவை என்ற திருப்பிக் கேட்ட போது ‘அவர்களுடைய ஆதரவு இன்றி தாங்கள் செயற்பட முடியாது’ என்றும் சிவா மகேசன் தெரிவித்தார். 

வன்னி முகாம்களில் உள்ள காரை மக்களை காரைநகரில் உள்ள கைவிடப்பட்ட வீடுகளில் மீளக்குடியமர்த்துவது பற்றிய யோசனையை சோமசுந்தரம் முன்வைத்த போது உடனேயே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ‘கண்ட கண்ட ஆட்களையும் எங்களின் வீடுகளில் இருத்தவோ?’ எனச் சிலர் முறுகியதாக லண்டன் குரலுக்கு செய்திகள் எட்டின. அதுபற்றி சிவா மகேசனிடம் காரைநகரில் கைவிடப்பட்டுள்ள லண்டனில் வாழும் ‘உயர் சாதி’ இனரின் வீடுகளில் ஏனைய சாதிக்காரர்கள் குடியிருப்பதை தடுப்பதற்காகவா இந்த முயற்சி கைவிடப்பட்டதா? என்று கேட்ட போது, சிவா மகேசன் முற்றாக அதனை மறுத்தார். ‘சாதிப் பிரச்சினை அங்கு ஒரு விடயமாகப் பார்க்கவில்லை’ என்றார் சிவா மகேசன்.

ஆனால் ‘கையெழுத்து வைத்து இதனை எதிர்த்தவர்கள் பெரும்பாலும் காரையில் உள்ள தங்கள் வீடு வளவுகளில் ஏனைய சாதியினர் வந்துவிடுவார்கள் என்பதாலேயே எதிர்த்தனர். அதற்கு அவர்கள் வைக்கும் காரணங்கள் நொண்டிக் காரணங்களைக் கூறுகின்றனர்’ என இத்திட்டத்தை ஆதரித்தவர்கள் லண்டன் குரலுக்குத் தெரிவித்தனர். ‘கையெழுத்து இட்டவர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டால் இந்த உண்மை வெளியே வந்துவிடும்’ என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். புது றோட்டு – களபூமி என்று பிரிந்து நிற்கும் உயர் சாதி உப பிரிவுகள் இரண்டும் இந்த காரையில் உள்ள கல்வீடுகளில் வன்னி முகாம்களில் உள்ளவர்கள் குடியமர்த்தப்படுவதை கடுமையாக எதிர்ப்பதில் ஒன்றாகவே செயற்படுவதாகவும் குடியேற்றத் திட்டத்தை ஆதரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று பிரித்தானியாவில் சாதியப் பாகுபாடு விழிப்புணர்வு மாநாடு

Virendra Sharma MPபிரித்தானியாவில் காணப்படும் சாதியப் பாகுபாட்டை அடையாளப்படுத்தம் மாநாடு ஒன்று யூலை 15ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. Voice of Dalit International (VODI) என்ற அமைப்பும் Catholic Association for Racial Justice (CARJ) என்ற அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. இம்மாநாட்டில் ஆபிரிக்க ஆசிய சமூகங்கள் முகம்கொடுக்கும் இனப்பாகுபாடு பற்றியும் பேசப்பட இருக்கின்றது.

ஈலிங் சவுத்தோல் பா உ விரேந்திர சர்மா சிறப்புப் பேச்சாளராக உரையாற்றும் இம்மாநாட்டில் சகல சமயக் குழுக்கள், தேவாலயங்கள், பாதிக்கப்பட்ட சமூகங்கள், பொது அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் என 70 பேர்வரை கலந்துகொள்கின்றனர்.

National Council of Dalit Christians (NCDC) என்ற இந்தியாவில் உள்ள அமைப்பில் இருந்து வி ஜே ஜோர்ச் சர்வதேசப் பேச்சாளராகக் இம்மாநாட்டில் உரைநிகழ்த்த உள்ளார்.

பிரித்தானியாவில் ஆசிய சமூகங்களின் பெருக்கத்துடன் சாதியப்பாகுபாடு சமுகங்களை சாதிய அடிப்படையில் பிளவுபடுத்துவதாக Catholic Association for Racial Justice (CARJ) அமைப்பு இம்மாநாடு பற்றிய தனது அழைப்பிதழில் தெரிவித்து உள்ளது. இச்சாதியப் பாகுபாடு ஒரு பரம்பரையில் இருந்து மற்றைய பரம்பரைக்கு கைமாற்றப்படுவதாகவும் அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.

சாதியப்பாகுபாடு பாதிக்கப்பட்டவர் மீது கீழான முத்திரையைக் குத்துவதாகவும் அவருடைய ஆளுமையை பாதிப்பதாகவும் சமூகத்தில் பெறுமதி அற்றவர் என்ற உணர்வைத் தோற்றுவிப்பதாகவும் Catholic Association for Racial Justice (CARJ)  தெரிவிக்கின்றது. பிரித்தானியா உறுதியாகக் கடைப்பிடிக்கும் சுதந்திர விதிகள் சமத்துவம் என்ற ஜனநாயக விழுமியங்கள் சாதியப் பாகுபாட்டினால் கீழ்நிலைப் படுத்தப்படுவதாக Catholic Association for Racial Justice (CARJ) அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் 3.5 மில்லியன் தெற்காசியர்கள் வாழ்கின்றனர். இவர்கள் பிரித்தானியாவின் மொத்த மக்கள் தொகையில் 5.7 வீதம். இவர்களில் 50 000 தொடக்கம் 200 000 பேர் வரையானவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என Voice of Dalit International (VODI) அமைப்பு தெரிவிக்கின்றது.

‘இதனைச் சிலர் இந்து சமயப் பிரச்சினையாகக் கூறுகிறார்கள். ஆனால் அப்படியல்ல’ என்று கூறும் ஈலிங் – சவுத்தொல் பா உ விரேந்திர சர்மா  ‘இஸ்லாம், சீக், கிறிஸ்தவம், பௌத்தம் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் துணைக் கண்டத்தில் இருந்த வந்திருந்தால் அவர்களது சமூகப் பின்னலில் சாதியமும் பின்னப்பட்டு இருக்கும்’ என்கிறார். சர்மா IANSற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்து இருந்தார்.

மேற்கு லண்டனில் உள்ள Voice of Dalit International (VODI) அமைப்பின் அலுவலகத்திற்கு சாதியப் பாகுபாடு பற்றிய 20 குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு வாரமும் வருவதாக அவ்வமைப்பின் இயக்குநர் Eugene Culas தெரிவிக்கின்றார். இக்குற்றச்சாட்டுக்கள் திருமணம், தொழில், சேவைகள், கல்வி அகியவை தொடர்பாக வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பாதிக்கப்பட்டவர்களில் ராம் லஹாக் என்ற கொவன்ரியின் முன்னாள் மேயர் ஒருவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்தியர் இல்லாத பகுதியில் போட்டியிட நேர்ந்தது. பள்ளியில் இவரது பிள்ளைகளும் பாதிக்கப்பட்டனர். இவர் தனது கதையை ‘No Escape: Caste Discrimination in the UK. என்ற அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

சாதியத்திற்கெதிரான போராட்டங்களும் புலம்பெயர்ந்த வேஷக்காரர்களும் : சம்புகன்

Book_Cover._._._._._. 

இன்று சிலர் வேண்டுமென்றும் சிலர் அறியாமையினாலும் சாதியம் ஒழிந்துவிட்டதென்றும் தமிழ் தேசியமே அதை முறியடித்தது என்றும் பேசுகின்றனர். இரண்டுமே பொய்யானவை. சாதியம் இன்னும் ஒழியவில்லை. அதற்கான சான்றுகள் வெளிவெளியாகவே உள்ளன. ஆயினும் சாதிய உடுக்குமுறைக்கு சாவுமணி அடிக்கப்பட்டாயிற்று. தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். அந்த வெற்றிக்கு தமிழ் தேசியம் எவ்வகையிலும் பங்களிக்கவில்லை. அதை இயலுமாக்கியவர்கள் தாழ்த்தப்பட்ட வெகுசனங்களும் அவர்களோடு இணைந்து நின்று போராடிய நேர்மையான இடதுசாரி சனநாயக முற்போக்கு சக்திகளுமேயாவர். அதை இயலுமாக்கியது மாக்ஸிச லெனினியவாதிகளின் வழிநடத்தலின் கீழ் அவர்கள் முன்னெடுத்த வெகுசனப் போராட்டப் பாதையே.

இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்

._._._._._.

இலங்கையிலே சாதியம் மிகக் கொடுமையாக நடைமுறையிலிருந்த பகுதி யாழ்ப்பாணக் குடாநாடுதான் தென்னிலங்கையில்  அந்நியக் குறுக்கீடு நேர்ந்த சூழல் ஒரு குறிப்பிட்ட சாதியின் முழுமையன சமுதாய ஆதிக்கத்திற்கு ஆப்பு வைத்தது. எனவே தான் சாதிய ஒடுக்குமுறையைப் பல்வேறு சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் தனிக்க இயலுமாயிற்று. சர்வசன வாக்குரிமையும் குறிப்பாக 1956ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் சாதி அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறையைப் தணிப்பதில் முக்கிய பங்காற்றினபலும் சாதியையும் சாதியச் சிந்தனையையும் ஆதிக்கத்தையும் இன்னமும் முற்றாக ஒழித்து விடவில்லை.
 
யாழ்ப்பாணக் குடாநாட்டுச் சூழல் வித்தியாசமானது அங்கே சாதியத்தின் பிடிப்பு சகல துறைகளிலும் வழுவாக இருந்தது. எனவே அங்குதான் சாதியத்திற்கெதிரான போராட்டங்கள் முனைப்பாக இருக்க நேர்ந்தது. சாதியத்திற்கெதிரான போராட்டங்களின் மையமாக யாழ்ப்பாண குடாநாடே இருந்தது என்பதில் ஐயமில்லை.

சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் என்ற நூல் 1989ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிரசுரிக்கப்பட்டது. அது இலங்கையில் சாதியத்தின் வரலாற்றுப் பிண்ணணியையும் அதற்கெதிரான போராட்டங்களையும் பொதுப்படக் கூறி அதன் அதி உச்சக்கட்டமான தீண்டாமைக்கெதிரான வெகுஜனப் போராட்டத்தின் வரலாற்றுப் பிண்ணணியையும் வளர்ச்சியையும் நிறைவையும் இந்நூல் விவாதித்து அதன் இரண்டாவது திருத்திய பதிப்பு தமிழகத்தில் வெளியிடப் பட்டதனால் இலங்கையில் என்ற சொல் நூலின் பேருடன் சேர்க்கப்பட்டது.

இந்த நூலும் எம்.சி. சுப்பிரமணியத்தின் வாழ்க்கை பற்றிய நூலொன்றும் பாரிஸிலும் லண்டனிலும் 2008 செப்ரெம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றுள் சாதியமும் அதற்கு எதிரான போராட்டமும் பற்றியதே அதிகம் பேசப்பட்டதில் வியப்பில்லை என்றாலும் பிரான்சில் நடந்த கூட்டத்தில் விமர்சனம் போதாது என்று கூறி லண்டனில் நடந்த கூட்டத்தில் விமர்சனம் எனற பேரில் சிலரால் ஏதேதோ எல்லாம் பேசப்பட்டன. அவற்றில் நூலை வாசித்து விளங்கிப்பேசப்பட்டது எவ்வளவு என்பது  அந்நிகழ்வுகளின் ‘தூ’ இணையத்தளத் தொகுப்பு மூலம் ஓரளவு தெரியவந்தது. வக்கிரமான கருத்துக்களைக் கூறியவர்களில் அரசியல் பிண்ணணியையும் புலம்பெயர்ந்ந சூழலில் அவர்களது செயற்பாடுகளையும் அறிந்தவர்கட்கு அவர்களின் வன்மை விளங்கும்.

தலித், தலித்தியம் என்ற சொற்கள் இலங்கையின் போராட்டங்களின் பயன்பட்டவையல்ல. தமிழகத்துத் தலித்தியவாதிகள் கொண்டாடுகிற டானியல் என்றுமே அச்சொல்லைத் தன் நூல்களிற் பயன்படுத்தவில்லை அவர் பஞ்சமர் என்ற சொல்லை பயன்படுத்தினார். தாழ்த்தப்பட்டோர் என்ற சொல்லே அவர்கள் தாழ்ந்தோர் அல்ல தாழ்த்தப்பட்டோர் என்ற உண்மையான நிலையை உணர்த்துகிறது என்ற அடிப்படையில் தாழ்ந்தோர் கீழ்ச்சாதி எளியசாதி பஞ்சமர் என்பவற்றாற் குறிக்கப்பட்டோர் ஆதிக்கக்காரரால் தாழ்த்தப்பட்டோர் என்ற வரலாற்று உண்மையை அச் சொல் குறிப்பிட்டதால் அதையே இலங்கையின் இடதுசாரிகள் அனைவரும் பயன்படுத்தினர் எனலாம்.
 
தலித் என்ற சொல் அடிநிலை என்பதைக் குறிப்பது அது மராத்தியிலிருந்து வந்தது. அது தமிழகத்துக்கு வருமுன்னமே சாதியத்திற் கெதிரான போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்று வந்துள்ளன.

சாதியத்திற்கெதிரான போராட்டத்தின் வர்க்கத்தன்மையை  வெட்டி விலக்குவதற்காகவே தமிழகத்தின் ‘தலித்திய வாதிகள்’ செயற்பட்டுள்ளனர் என்பது தான் வரலாற்று உண்மை. அவ்வாறு வர்க்கத் தீக்கங் செய்யப்பட்ட அரசியல் தலித் அரசியலாக வளராமல் தமிழகத்தில் சாதி அரசியலாகிப் பிளவுப்பட்டது. இப்படிப் பட்ட ஒரு தலித்தியத்தைப் புலம் பெயர்ந்து சூழலில் உள்ள சிலர் உள்வாங்கிக் கொண்டவர்.

அவர்களிற் பெரும்பாலானவர்கட்கு ஈழத்துச் சாதியமும் போராட்டங்களும் பற்றி எதுவுமே தெரியாது. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்த் தேசிய வாதத்தின் வழியில் சென்று தான் சாதியம் இன்னும் சாகவில்லை என்று கண்டவர்கள். அவர்கள் தமது தேசிய வாதத்தின் போக்கில் உள்வாங்கிய மாக்சிஸ எதிர்ப்பு இன்னமும் அவர்களை நீங்கவில்லை. அவர்களுடன் இடது சாரி விரோத வண்மம் பிடித்த சிலர் கூட்டமைத்து ‘கௌவர’ தலித்து களாகப் பம்மாத்துப் பண்ணி வருகிறார்கள்.
 
இலங்கையில் மேர்ஜ என்கிற என்.ஜி.ஓ. நிறுவனத்தின் ‘சரிநிகர் சஞ்சிகையின்’ குளு குளு அறையிலிருந்து நாள்தோறும் கணணியில் ரோஹணு விஜேவீரவின் படத்தை ஆராதனை செய்து வந்தவரான சரவணன், தனிப்பட்ட காரணங்கட்காக நவசமசமாஜக் கட்சியின் ஆதரவாளராகவும் இருந்து வந்தவர் (அக்கட்சி தலைவர் விக்கிரமபாகுவின் விடுதலைப்புலி ஆதரவு இன்னொரு விடயம்) அந்தப் பிண்ணணியிலேயே அவரது மாக்ஸிச லெனிசிச சரிநிகரில் அவரது தலித்தியாக குறிப்புகளில் மாக்சிச வாதிகளின் வரலாற்று பங்களிப்பு பற்றிய இருட்டடிப்பும் இடம்பெற்றன. இப்போது இந்த நூலை ஒரு கட்சி பிரசார நூலாக காட்ட முயன்றிருக்கிறார். இதில் அதிசயம் என்ன?

பரிஸில்  ஷோபா சக்தி இந்த நூல் எம்.சி. சுப்பிரமணியம் சாதி ஒழிப்பிற்காக எதுவுமே செய்யவில்லை என்று கூறுவதாகச் சொல்லியிருந்தார் அவர் நிச்சயமாக நூலை வாசிக்கவில்லை என்பேன் எம். சி. சுப்பிரமணியம் தீவிரவாதிகளுடன் நின்றதன் விளைவாக 1966 ஒக்டோபர் எழுச்சி தொடர்பாக தவறுகள் செய்தார். என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதே ஒழிய அவரது பங்களிப்புகள் நூலில் மறுக்கவோ மறைக்கவோ படவில்லை. 1964க்குப் பிறகு தமிழரிடையே சாதியத்திற்கெதிரான போராட்டத்தை மாக்ஸிச nலனிசிச வாதிகளே முன்னெடுத்தனர். என்பதை ஷோபா சக்தியால் ஏற்க இயலவில்லை.

மாதவியின் கருத்து நூலில் கூறப்பட்டுள்ள ஒரு அடிப்டையான உண்மையான மே நிலையாக்கம் பெற்றவர்கள் சாதிய எதிர்ப்பில் பின்நிற்பதையும் தமது சாதி அடையாளத்தை மழுப்பு நிற தன்மையையும் பற்றிய குறிப்பைத் தவறாக வியாக்கியானம் செய்கிற சமூக நீதிக்குப் போராடப் பிண்ணிற்பதைப் கூறுவது எவரையும் சமூகவிரோதிகளாகப் காட்டுகிற முயற்சி என்பது நீதியற்றது.

எல்லாரையும் மிஞ்சிய வண்மம் மு.நித்தியானந்தனுடையது. இவருடைய திருகுதாளங்கள் பற்றிச் சில ஆண்டுகள் முன் புதிய பூமியில் எமுதப்பட்ட பிறகு பதில் கூற வக்கில்லாமல் தனது உளறல்களை சில காலம் அடக்கியிருந்த இவர் இப்போது மறுபடியும் விஷம் கக்கத் தொடங்கியிருக்கிறார்.

இந்திய தலித்தியவாதிகள் பற்றிய சிவசேகரத்தின் குறிப்புகள் வஞ்சக நோக்க முடையவை என்று கூறி தலிக் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் சுய கௌரவத்தை சிறப்பாக வலியுருத்துகிற பதம் என்று சொல்லியிருக்கிறார். அச்சொல் தாழ்நிலையில் உள்ளவன் என்ற கருத்துடையது. என்று அவருக்கு ஒருவேளை தெரியாது.

ஒரு சிரேஷ்ட விரிவுரையாளராக வரக்கூடிய போதிய கல்வித் தகுதி பெறாமல் தன்னைப் பேராசிரியர் என்று பிறரை சொல்ல வைத்து பூரித்து போகிற இந்தப் பம்மாத்து பேர்வழிக்கு எந்த விஷயத்திலும் ஆழமான அறிவோ அக்கறையோ இல்லை என்பது இன்று புலம் பெயர்ந்த சூழலில் அம்பலப்பட்டு போன விடயம் என்றாலும் அங்கே மேடை கிடைத்தாலும் ஓடிப்போய் அதற்கேற்ற விதமாக தீவிர இடதுசாரி, புலி ஆதரவாளன், புலி எதிர்ப்பாளன், மாக்ஸிச விரோதி என்ற வேடங்கட்டி ஆடுவதற்கு மட்டும் ஒரு திறமை உண்டு. ‘அவைகாற்று கலைக்கழகத்தில்’ ஒட்டிக் கிடந்த போது மேடையில் கண்டு நடிக்க முடியாவிட்டாலும் வாழ்க்யையில் மிக நன்றாகவே நடித்து வருகிறார். இந்தப் புத்தகத்தைச் சாதாரணமானவர்கள் பார்க்க நேர்ந்தால் சிவசேகரமும் செந்திவேலும் மட்டும்தான் சாதியப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள் என்ற கருத்துத்தான் உருவாகும்  என்று அவர் கூறிய போது அவருடைய தண்ணீர் தொட்டி நிதானம் எப்படி இருந்தது என்று கூட்டத்தில் இருந்தவர்கள் கவனத்திருக்கக் கூடும். மிகக்கவனமாக எழுதப்பட்ட நூலை வாசிக்காமல் அதுபற்றி உளறுவதும் இரவல் வார்த்தைகளை சொந்த அறிவு மாதிரிப் பேசுவதும் அவரைச் சூழவுள்ள ஒரு சிலருக்கு சிலுசிலுப்பூட்டினாலும் நூலை வாசித்த எவருக்கும் இந்த வெறுங்குடத்தின் கலகலப்பு விளங்கிவிடும்.

பெரியார், அம்பேத்கார் போன்றோர் வெகுஜனப் போராட்டம் செய்யாதவர்கள் என்று சிவசேகரம் கூறுவதாக இன்னொரு புலுடா அந்த விதமான சாடையிற் கூட எதுவுமே எங்கும் சொல்லப்படாத போது, ஏன் இந்தப் பொய்? ஏனிந்த வன்மம் பிடித்த அயோக்கியத்தனம்?

சண்முகதாசன் பற்றிய சில குறிப்புகள் திருந்திய பதிப்பில் குறைக்கப்பட்டுள்ளதிற்கு குற்றங் காண்கிறார். அன்றைய சூழலில் நூலாசிரியர்கட்கு முக்கியமாக்கப் பட்டவை. இன்று விவரமான விவரணத்திற்கு அவசிய மற்றவை என்பதாலே சுருக்கப்பட்டன. இதில் நோக்கங் கண்டுபிடிப்பது போதாமல், தோழர் எஸ்.ரி. என. நாகரத்தினத்துக்கு முதற் பதிப்பு சமர்ப்பிக்கப்பட்டது. இப்பதிப்பு அதைச் செய்யவில்லை என்று வலிந்து நோக்கத் தேடுகிறார். முதற் பதிப்பு நூல்வடிவு பெற்ற போது தோழர் எஸ்.ரி.என். இறந்து சில நாட்களாகின. எனவே அவரது  நினைவு நிகழ்வொன்றில் அது அவருக்கு சமர்ப்பணமாக வெளியிடப்பட்டது. இம்முறை அவர் பற்றிய குறிப்புகள் நூலினுள் முன்னை விட விரிவாக உள்ளன, என்பது இந்த போலிப் பேராசிரியருக்கு எப்படி விளங்கும். வாசிக்காமலே விமர்சிக்கிற வல்லமை வீண்போகலாமா.

நித்தியானந்நனுக்கு வஞ்சகம் என்ற சொல்லுக்கு பொருள் தெரியாது போலிருக்கிறது.  அதனால் தான் எதையெதையோ எல்லாம் வஞ்சகம் என்கிறார் அவருடைய நடத்தையை அவரது இடதுசாரி வேடம், புலி வேடம், புலி  எதிர்ப்பு வேடம், தலித் வேடம் போன்ற பல வேடங்களினூடும் முதுகுக்குப் பின்னால் கதைக் காவித் திரிகிற சில்லரைப் புத்தியையும்  கண்டு கொண்டவர்கள் வஞ்சகத்தின் ஒரு ஒட்டுமொத்த வடிவமே அவர் என்று நன்றாக அறிவார்கள்.

இந்த விதமான கூட்டங்கள் நூல் பற்றிய ஒரு விரிவான ஆய்வையும் விளக்கத்தையும் தரவல்லன என நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் குறைந்தபட்ச நேர்மையுடன் நூலின் குறைநிறைகளை கூறக் கூடிய எவருமே லண்டன் ‘அறிமுக ஏற்பாட்டாளர்கட்கு’ கிடைக்கவில்லையா ? தூ!! வெட்கக்கேடு!!!

பின்குறிப்பு:
இந்தியாவில் சாதிவெறிக் கெதிராக யார் முன்னின்று போராடுகிறார்கள் என்பதைக் கொஞ்சம் விசாரித்தால் தமிழகத்தின் தலித்தியப் பிரமுகர்கள் பலரது முகமுடிகள் கழரும். ஐரோப்பியத் தலித்தியவாதிகள்  புலி எதிர்ப்பாளர்களாக இருக்கையில் அவர்கள் மெச்சும் தமிழகத் தலித்திய வாதிகள் என்.ஜி.ஓ. தலித்திய வாதிகள் ஓரிருவர் போக புலி ஆதரவாளர்களாகக் கூடத் தோன்றியும் கருணாநிதியுடன் கைகோர்த்தும் என்.ஜீ.ஓ பினாமிகளாகவும்  உலாவருகின்றனர் என்று விளங்கும்.