வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் – தி.மு.க 139 தொகுதிகளில் முன்னிலை !

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுவருகிறது.
தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. இதில், திமுக கூட்டணி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 139 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 94 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. திமுக மட்டும் 114 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது.
மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய தலைவர்கள் வெற்றியை நோக்கி பயணிக்கின்றனர். இதனால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். இதேபோல் அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மற்றும் பல்வேறு அமைச்சர்கள் முன்னிலையில் உள்ளனர்.

“கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதில் இந்தியாவுக்கு உதவ தயார்.” – சீனா

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா கடும் பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகிறது. இதனால்  இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உதவி பொருட்கள் பல நாடுகளில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீன அரசு தொலைக்காட்சி இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சீன அரசு தொலைக்காட்சியில் கூறப்பட்டுள்ளதாவது:

“கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா தயாராக உள்ளது. இந்தியாவுக்கு ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க சீனா தயாராக உள்ளது என ஜி ஜின்பிங் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 15.11 கோடியை கடந்தது !

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை இன்று வரை  உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாடுகளிலும் அடுத்த கொரோனா அலை ஏற்பட ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.11 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.84 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.89 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இஸ்ரேலில் மத நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் – 40க்கும் அதிகமானோர் இறப்பு !

இஸ்ரேல் நாட்டின் மவுண்ட் மெரான் பகுதியில் நேற்று இரவு யூதர்களின் பாரம்பரிய மத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் ஆடல், பாடல் என விழா களைகட்டியது.
அப்போது, நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். சிலர் தடுப்புக்காக அமைக்கப்பட்டிருந்த ஷீட்களை பிரித்து, இடைப்பட்ட பகுதி வழியாக வெளியேற முயன்றதால் நெரிசல் மேலும் அதிகரித்தது. நெரிசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஏராளமான ஆம்புலன்ஸ்கள் அப்பகுதிக்கு விரைந்தன. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

“கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு 10 மில்லியன் அமெரிக்க  டொலர்களை வழங்கவுள்ளோம்.” – கனடா பிரதமர்

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 293 பேர் கொரோனாவால் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு 10 மில்லியன் அமெரிக்க  டொலர்களை வழங்க உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “தற்போது இந்திய மக்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை வாங்குவதற்கு 10 மில்லியன் டாலரை இந்தியன் ரெட் கிராஸ் அமைப்புக்கு வழங்கியுள்ளோம். மேலும் கூடுதல் மருத்துவ உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களால் முடிந்த எந்த வகையிலும் இந்தியாவுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

‘ரிசைன் மோடி’ ‘ஹாஷ்டேக்’ முடக்கிய பேஸ்புக் – தெரியாமல் நடந்து விட்டதாம் !

இந்தியாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 3,645 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலையை பிரதமர் மோடி சரிவர கையாளவில்லை, ஆக்கப் பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் பொதுவெளியில் வைக்கப்படுகின்றன.

இதனால் பிரதமர் மோடி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த கோரிக்கையை பிரதமர் மோடிமுன்வைத்துள்ளன.

இதையொட்டி பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் ‘ரிசைன் மோடி’(‘மோடியே பதவி விலக வேண்டும்’) என்ற ‘ஹாஷ்டேக்’ நேற்று முன்தினம் வைரலானது.

ஆனால் திடுதிப்பென்று இந்த ‘ஹாஷ்டேக்’ முடக்கப்பட்டது. அதில் தங்கள் கருத்துக்களை பதிவிட முயன்றவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. “தற்காலிகமாக இங்கு மறைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த பதிவுகளில் சில உள்ளடக்கங்கள் எங்கள் சமூக தரத்துக்கு எதிரானது” என அறிவிப்பு வந்தது. இது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

பொதுவாக பேஸ்புக் சமூக வலைத்தளம், ஹாஷ்டேக்குகளையும், பதிவுகளையும் பல்வேறு காரணங்களைக் கூறி முடக்குவது வழக்கமான நடவடிக்கைதான்.

பின்னர் அந்த முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது தொடர்பாக, பேஸ்புக் நேற்று விளக்கம் அளித்தது. இதுபற்றி அந்த சமூக வலைத்தள நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நாங்கள் தவறுதலாக அந்த ‘ஹாஷ்டேக்’கை முடக்கி விட்டோம். இந்திய அரசு எங்களை கேட்டுக்கொண்டதால் நாங்கள் அதைச் செய்யவில்லை. இப்போது அதை மீண்டும் மீட்டெடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த வைத்தியசாலையில் தீ பரவல் – 82 பேர் உயிரிழப்பு !

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள இப்னு காதிப் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக நோயாளிகள், ஊழியர்கள் என அனைவரும் அலறியடித்து வெளியேறினர். எனினும் தீ சூழ்ந்ததால், ஏராளமானோர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. இன்று காலையில் தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த தீ விபத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். 110 பேர் காயமடைந்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் உடனடியாக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
தீ விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல்செய்யும்படி பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஆக்சிஜன் டேங்க் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் பச்சிளம் குழந்தை உட்பட நால்வர் பலி !

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சிம்பாப்வேயின் கிழக்கு பகுதியில் உள்ள மஷோனாலேண்ட் மாகாணத்திலிருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான ‘அகுஸ்தா பெல் 412′ ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. ஹெலிகாப்டரில் 2 விமானிகளும் தொழில்நுட்ப ஊழியர் ஒருவரும் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் மஷோனாலேண்ட் மாகாணத்தின் ஆக்டூரஸ் நகரிலுள்ள ஹூகூரு என்ற கிராமத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் ஹெலிகாப்டர் நடுவானில் திணறியது. இதையடுத்து ஹெலிகாப்டரை அங்குள்ள குடியிருப்பு பகுதியில் அவசரமாக தரையிறக்க விமானிகள் முயற்சித்தனர்.‌

ஆனால் அவர்களின் கட்டுக்குள் வராத ஹெலிகாப்டர் அங்குள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. இந்தக் கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதுமட்டுமின்றி ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய வீட்டில் இருந்த பச்சிளம் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

அதேசமயம் அந்த குழந்தையின் தாயும், சகோதரியும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த கோர விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலி தீவுக்கு வடக்கே மாயமான இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலின் சில சிதைவுகள் கண்டுபிடிப்பு !

காணாமல் போன இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வந்ததாக நம்பப்படும் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற்படைத் தளபதி யூடோ மார்கோனோ தெரிவித்துள்ளார்.

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வந்ததாக நம்பப்படும் ஆறு சிதைவுகள், நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இந்த சிதைவுகள்  காட்சிப்படுத்தப்பட்டது.

நேற்று அதிகாலைக்குள் நீர்மூழ்கிக் கப்பலில் ஒக்ஸிஜன் தீர்ந்துவிடும் என்று எதிர்வுகூறப்பட்டிருந்த நிலையில், இந்த செய்தி வந்துள்ளது.

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வந்ததாக நம்பப்படும் சிதைவுகளில் கிரீஸ் போத்தல், டார்பிடோ லாஞ்சரின் ஒரு பகுதி, உலோகக் குழாயின் ஒரு பகுதி, பிரார்த்தனை செய்யப் பயன்படுத்தப்படும் பாய்கள் மற்றும் எரிபொருள் ஆகியவை அடங்கும்

இவை கடலில் 850 மீட்டர் (930 கெஜம்) ஆழத்தில் ஒரு இடத்தில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கே.ஆர்.ஐ.நங்கலா-402 நீர்மூழ்கிக் கப்பலில் முந்தைய பயணத்தில் இருந்தவர்கள், இந்த சிதைவுகள் நீர்மூழ்கிக் கப்பலுக்கு சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தியதாக கடற்படைத் துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை அதிகாலை 53 பேருடன் பயணித்த கே.ஆர்.ஐ.நங்கலா-402 என்ற நீர்மூழ்கி கப்பல், பாலி தீவுக்கு வடக்கே பயிற்சியை மேற்கொண்டிருந்த போது, சுமார் 60 மைல் (100 கி.மீ) நீரில் காணாமல் போனது. ஆழமான நீரில் மூழ்குவதற்கு நீர்மூழ்கிக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர் தொடர்பு இழந்ததாக சில தகவல்கள் கூறுகின்றன. இந்தோனேசியாவால் இயக்கப்படும் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த கப்பலும் ஒன்றாகும். இந்தோனேசியா தனது நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றை இழப்பது இதுவே முதல் முறை.

“எங்கள் வரலாறு குறித்து நாங்கள் யாரிடமிருந்தும் பாடம் எடுக்கப் போவதில்லை.” – பைடனுக்கு துருக்கி பதில்!

“எங்கள் வரலாறு குறித்து தாங்கள் யாரிடமிருந்தும் பாடம் எடுக்கப் போவதில்லை.” என துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கவுசோக்லு தெரிவித்துள்ளார்.

1915 ஆம் ஆண்டில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஒரு இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் அறிவித்திருந்தார்.

நவீன கால துருக்கியின் உருவாக்க காரணமாக அமைந்த ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சியுற்ற காலகட்டத்தில் இந்த கொலைகள் இடம்பெற்றன. இந்த அட்டூழியங்களை துருக்கி ஒப்புக் கொண்ட போதும் “இனப்படுகொலை” என்ற வார்த்தையை நிராகரித்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை துருக்கி “முற்றிலுமாக நிராகரிக்கிறது” என வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கவுசோக்லு நேற்று சனிக்கிழமை தெரிவித்தார்.

மேலும் எங்கள் வரலாறு குறித்து தாங்கள் யாரிடமிருந்தும் பாடம் எடுக்கப் போவதில்லை என்றும் டுவிட் செய்துள்ளார்.

இதனை அடுத்து துருக்கிய வெளிவிவகார அமைச்சு அங்காராவின் வலுவான எதிர்ப்பை வெளியிடும் முகமாக அமெரிக்க தூதுவரை சந்திக்கவுள்ளது.

நேட்டோ நட்பு நாடான துருக்கியுடனான உறவுகளை முறிவடைய செய்யும் என்ற காரணத்தினால் கடந்த அமெரிக்க அரசாங்ககங்கள் இனப்படுகொலை என்ற வார்த்தையை முறையான அறிக்கைகளில் பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.