வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

சிரிய வைத்தியசாலையில் ஏவுகணைத்தாக்குதல் – 13 பேர் பலி !

சிரியா நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

அரசுக்கு எதிராக கிளர்ச்சிப் படைகள், குர்தீஸ் படைகள், துருக்கி ஆதரவுப் படைகள் என பல குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் பல்வேறு பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இதில் ஹதே பகுதி துருக்கி ஆதரவு படைகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள அப்ரின் நகரில் உள்ள வைத்தியசாலையில் 2 ஏவுகணைகள் வந்து விழுந்துள்ளன.

இதில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் 4 பேர் மற்றும் நோயாளிகள் என 13 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை. குர்தீஸ் படையினர்தான் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அரசுபடைகள்தான் ஏவுகணைகளை வீசியதாக அந்த பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள துருக்கி ஆதரவு படையினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

மெய்நிகர் நாணயமான பிட்கொயினை சட்டப்பூர்வ நாணயமாக அறிவித்த உலகின் முதல் நாடு ..!

மெய்நிகர் நாணயமான பிட்கொயினை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சட்டப்பூர்வ நாணயமாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோர் அங்கீகரித்துள்ளது.

El Salvador becomes first country to adopt bitcoin as legal tender | எல்  சால்வடார் பிட்காயினுக்கு சட்டப்பூர்வ டெண்டர் அந்தஸ்தை வழங்கிய உலகின் முதல்  நாடாக மாறியுள்ளது |

இதன்மூலம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல் நாடு எல் சால்வடோர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

எல் சால்வடாரின் பொருளாதாரம், அந்த நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றும் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தை பெரும்பான்மையாகச் சார்ந்துள்ள நிலையில், பிட் கொயினை சட்டப்பூர்வ நாணயமாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சட்டமூலத்தை ஆதரித்து பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, எல் சால்வடாரில் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய சட்டப்பூரவ நாணயமாக பிட்கொயின் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இதனிடையே, நாட்டின் மேம்படுத்த, மெய்நிகர் நாணயங்கள் உதவும் என்று ஜனாதிபதி நயீப் புகேலே தெரிவித்துள்ளார்.

“சீனாவே கொரோனா வைரஸ் பரவக்காரணம்.” – பைடனின் முதல் வெளிநாட்டுப்பயணத்தில் இதுவே மிக முக்கியமானது !

ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொலைகார கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில்தான் முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது. பின்னர் அங்கிருந்து உலக நாடுகளுக்கு இந்த  வைரஸ் பரவியது.

இதனால் கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றியதாகவும், அங்குள்ள ஆய்வகத்தில் இருந்தே இந்த வைரஸ் கசிந்ததாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் கூறி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு சீனாவில் ஆய்வு நடத்தி கடந்த மார்ச் மாதம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. ஆனால் இந்த அறிக்கை திருப்திகரமாக இல்லை என அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் விமர்சனம் செய்தன.

எனவே கொரோனா வைரஸ் தோற்றம் மற்றும் பரவல் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவதற்கு உலக நாடுகள் பலவும் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த விசாரணையில் சீனா பங்கேற்று கொரோனா வைரஸ் குறித்த உண்மையான தகவல்களை வழங்க வேண்டும் என்று உலக நாடுகள் சீனாவை வலியுறுத்தியுள்ளன. ஆனால் சர்வேத விசாரணையில் தாங்கள் பங்கேற்கப்போவதில்லை என சீனா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி வெளிப்படையான தகவல்களை வழங்க சீனாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன்‌ இதுகுறித்து கூறுகையில்,

“கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா வெளிப்படையாக இருக்கவும், உண்மையான தரவுகள் மற்றும் தகவல்களை வழங்குவதற்கும் நாங்கள் சர்வதேச சமூகத்துடன் ஒருங்கிணைந்து, தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். சர்வதேச விசாரணையில் நாங்கள் பங்கேற்கப்போவதில்லை என அவர்கள் (சீனா) கூறியதை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்வதேச விசாரணைக்கு முழு ஆதரவை வழங்கும் அதே வேளையில், இதுபற்றி அமெரிக்கா ஏற்கனவே தனியாக விசாரணையை தொடங்கியுள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முதல் வெளிநாட்டு பயணத்தின் போது வெளிநாட்டு தலைவர்களுடன் அவர் விவாதிக்கும் முக்கிய விவகாரங்களில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய சர்வதேச விசாரணையும் அடங்கும்.” என ஜாக் சல்லிவன் தெரிவித்தார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை மக்கள் கூட்டத்தில் வைத்து அறைந்த நபரால் பரபரப்பு !

தெற்கு பிரான்சில்  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் மேக்ரான் கன்னத்தில் அறைந்துள்ளார்.
Macron during a visit to Montpellier, southern France, in April.
இதை பாதுகாப்பு வீரர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக அவர்கள் சுதாரித்துக்கொண்டு அந்த நபரை கீழே தள்ளினர். மேக்ரானை தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு அவமரியாதை என்று பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறினார்.
மேக்ரான் தென்-கிழக்கு பிரான்சின் டிரோம் பகுதியில் கொரோனாவிற்கு பின் வாழ்க்கை எப்படி திரும்பிக் கொண்டிருக்கிறது என்பது குறித்து மாணவர்கள், உணவகங்கள் நடத்துபவர்களை சந்தித்து கேட்டு அறிந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது இச்சம்பவம் நடந்துள்ளது.

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 வருட சிறைத் தண்டனை !

மகாத்மா காந்தியின் பேத்தியும், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் எம்பியுமான இலா காந்தியின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு பண மோசடி வழக்கில் தென்னாபிரிக்க நீதிமன்றம் 7 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Mahatma Gandhi's great-grandaughter sentenced to 7 years jail in SA | World  News

இந்தியாவிலிருந்து தென் ஆபிரிக்காவுக்கு தனக்கான சரக்குகள் (புடவைகள்) வந்துள்ளதாகவும், ஆனால், இறக்குமதி செலவுகள் மற்றும் சுங்கக் கட்டணத்தை செலுத்துவதற்கு தன்னிடம் பணம் இல்லை என்றும், துறைமுகத்தில் உள்ள பொருட்களை விடுவிக்க அவசரமாக பணம் தேவை எனவும் தொழிலதிபரான மகாராஜ் என்பவரிடமிருந்து ராம்கோபின் 6 மில்லியன் தென்னாபிரிக்க ரெண்ட் (சுமார் 8 .7 கோடி இலங்கை ரூபா) பணம் பெற்றுள்ளார்.

இறக்குமதி செய்யப்படாத சரக்கு தொடர்பில் போலி ஆவணங்களை மகாராஜிடம் காண்பித்து இவ்வாறு அவர் பணம் பெற்றுள்ளார். பின்னர் குறித்த ஆவணங்கள் போலியானவை என கண்டறியப்பட்டதையடுத்து, தென்னாபிரிக்காவின் டர்பன் நீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மகாராஜ் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்தார்.

பின்னர் இந்த வழக்கில் பிரதிவாதியான ஆஷிஷ் லதா ராம்கோபின் 50 ஆயிரம் ரண்ட் பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நீண்ட விசாரணையின் பின்னர் ஆஷிஷ் லதா ராம்கோபின் குற்றவாளி என நிரூபணமானதையடுத்து, அவருக்கு 7 வருட சிறைத் தண்டனை விதித்து நேற்று (7) தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேவேளை, இந்த தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்ய முடியாது என்ற நிபந்தனையுடன் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு பிறகு அமெரிக்காவில் குறைய ஆரம்பித்துள்ள கொரோனாதொற்று – இலட்சத்திலிருந்து ஆறாயிரமாக குறைவு !

அமெரிக்காவில் ஒருவருட காலத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு குறைந்துள்ளது.

கடந்த காலங்களில் நாளொன்றில் இலட்சக் கணக்கான பாதிப்பு மற்றும் ஆயிரக்கணக்கான உயிரிழப்பு என பதிவாகி வந்த நிலையில், தற்போது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்ததுபோல் நாளொன்றுக்கான பாதிப்பு குறைந்துள்ளது.

அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் ஆறாயிரத்து 408பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 164பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்று மற்றும் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், இதுவரை மூன்று கோடியே 42இலட்சத்து பத்தாயிரத்து 782பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு இலட்சத்து 12ஆயிரத்து 366பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் 54இலட்சத்து 75ஆயிரத்து 679பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஐந்தாயிரத்து 287பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து இரண்டு கோடியே 81இலட்சத்து 22ஆயிரத்து 737பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் மோதுண்ட இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் – 30 பேர் பலி !

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று மோதி விபத்துக்குள்ளாகின. தடம்புரண்டு நின்றிருந்த மில்லத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது, சர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கரமாக மோதியது.
புகையிரத விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கவிழ்ந்த ரெயில் பெட்டிகளில் சிக்கிய பயணிகளை மீட்பது கடும் சவாலாக உள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. இந்த சம்பவத்தால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஏராளமானோர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரது உடநிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

கன்னட மக்களிடம் மன்னிப்பு கோரிய கூகுள் நிறுவனம் !

இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டப்பட்ட விவகாரத்தில், எதிர்ப்பு கிளம்பியதால், கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியது.

கூகுள் தேடலில் இந்தியாவின் மோசமான மொழி எது என தேடுதலில் பதிவிட்டால் அது கன்னடம் மொழி என காட்டியது. இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கன்னட மொழி பேசும் மக்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், கூகுள் நிறுவனம் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டப்பட்டதற்கு கூகுள் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. மேலும், கன்னட மொழி தொடர்பாக கூகுள் தேடு தளத்தில் தவறாக வெளியான பதிவுகளையும் கூகுள் நீக்கியுள்ளது.

கைலாசா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் – இந்தியச்சாமியார் நித்யானந்தா பரபரப்பு !

போலிச்சாமியார்களுக்கு குறைவில்லாத இடமென்றால் நமது அயல்நாட்டை கூறிவிடலாம். இன்று வரை பல பேர் தங்களை கடவுளின் அவதாரம் எனக்கூறி மக்களை ஏமாற்றி வருவது தொடர்கிறது. இப்படியானவர்களில் ஒருவர் தான் நித்தியானந்தா என்பவர்.

இந்தியாவில் திருவண்ணாமலையை சேர்ந்த  நித்தியானந்தா  சாமியார் என்பவர்  பெங்களூரில் ஆசிரமம் நடத்தி புகழ் பெற்றார். இந்த நிலையில் நித்யானந்தாவுடன் தமிழ் நடிகை ரஞ்சிதா ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

நித்யானந்தா, கைலாசா... புது கரன்சி!? மக்கள் கருத்து என்ன?  #VikatanPollResults | Vikatan Poll about Nithyananda introducing Kailasa  new currencyஇதன் தொடர்ச்சியாக நித்யானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டன. இது தொடர்பாக வழக்குகளும் போடப்பட்ட நிலையில், அதனை நித்யானந்தா எதிர்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கைலாசா நாட்டை தான் உருவாக்கி இருப்பதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த கைலாசா நாடு எங்கு இருக்கிறது? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் அங்கிருந்து பேசுவது போன்று நித்யானந்தா அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். கைலாசாவில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று வெப்சைட் முகவரியையும் வெளியிட்டார். அங்கு ஓட்டல் தொடங்க மதுரை இளைஞர் ஒருவரும் விண்ணப்பித்தார்.

கைலாசா நாட்டில் ரிசர்வ் வங்கி தொடங்கி உள்ளதாக கூறி சில நாணயங்களையும்  நித்தியானந்தா வெளியிட்டார். பல்வேறு நாடுகளுடன் வர்த்தகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இப்படி கைலாசா நாடு பற்றி புதிது புதிதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டே உள்ளன.

இந்தநிலையில் கைலாசா நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நித்யானந்தா திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி இருப்பதாவது:-

கைலாசா நாட்டின் மீது ‘பயோ வார் தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் கேட்காமலேயே சிலர் ‘‘மர்ம விதை’’களை அனுப்பி வைத்துள்ளனர். கைலாசா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவே இது தெரிகிறது.

தன்னை பல பேர் பல்வேறு வழிகளில் தாக்கியதாலேயே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன். சனாதன இந்து தர்மத்தின் வேர்களையும், இந்து மதத்தின் கடைசி விளக்கையும் அழிக்க மற்றொரு முயற்சியாக பயங்கரவாதத்தை விதைகள் மூலம் அனுப்பும் கொடிய சதி நடக்கிறது.

இவ்வாறு நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா வெளியிடும் வீடியோ பதிவில் சென்று பார்த்தால் முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் உண்மையிலேயே கைலாசா என்று ஒரு நாடு உள்ளதா? என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது. அதே நேரத்தில் நித்யானந்தா எங்கிருந்து வீடியோ வெளியிடுகிறார் என்பதிலும் மர்மம் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து மீளப்பெறப்பட்ட 44 சதவீதம் வரையிலான அமெரிக்க துருப்புக்கள் – பைடன் வாக்குறுதியின் ஒரு கட்டம் !

கடந்த 2001ஆம் ஆண்டில் நியூயோர்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பின்லேடனுக்கு, அப்போதைய தலிபான்கள் தலைமையிலான ஆப்கன் அரசாங்கம் புகலிடம் அளித்தது. இதையடுத்து 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து, தலிபான்களின் ஆட்சியை அகற்றியது.

இதன்பிறகு இருதரப்பிலும் உயிர் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்பட்டதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், தாக்குதல்களைக் குறைத்துக் கொள்ளவும் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ளவும் தலிபான்கள் சம்மதித்தனர்.

ஆப்கான் அரசாங்கத்துடன் நல்லிணக்கப் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர்கள் சம்மதித்தனர். அதற்குப் பதிலாக, ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை படிப்படியாக விலக்கிக்கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த 44 சதவீதம் வரையிலான அமெரிக்க துருப்புக்கள் அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் திகதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் அனைவரையும் திரும்பப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க மத்திய இராணுவ தலைமையகம் (சென்ட்காம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த மாதம் 31ஆம் திகதி நிலவரப்படி, ஆப்கானிஸ்தானிலிருந்து 30 முதல் 44 சதவீதம் வரையிலான அமெரிக்க வீரர்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். இதுவரை 6 இராணுவ நிலைகள் ஆப்கான் இராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளன’ என குறிப்பிடப்பட்டுள்ளது.