உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. முதலில் இந்த வைரஸ் அந்த நகரத்தின் விலங்கு உணவுச்சந்தையில் இருந்து பரவியதாக கூறப்பட்டது. பின்னர் வுகான் ஆய்வுக்கூடத்தில் (வைராலஜி நிறுவனம்) இருந்து கசிய விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக அமெரிக்க முந்தைய ஜனாதிபதி டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார்.
கொரோனா தோன்றியது எங்கே என்பது பற்றி ஆதாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், உகான் ஆய்வுக்கூட ஆராய்ச்சியாளர்கள் பலரும் உடல்நலம் பாதித்து 2019 இறுதியில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாக சமீபத்தில் அமெரிக்க உளவு அறிக்கையில் தகவல்கள் வெளியாகின.
இதனால் வுகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து இந்த வைரஸ் கசிந்திருக்கலாம் என்ற ஊகம் மேலும் வலுத்துள்ளது. டிரம்பின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாகவும் இது அமைந்துள்ளது.
இதையடுத்து, கொரோனாவின் தோற்றம் எங்கே என்பதை உறுதியாகக் கண்டறிவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளார். “கொரோனா வைரசின் தோற்றம் தொடர்பான உறுதியான முடிவுக்கு வரத்தக்க வகையில், தகவல்களை சேகரித்து, ஆய்வு செய்வதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குங்கள்” என்று உளவு அமைப்புகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக உளவு அமைப்புகளுக்கு அவர் 90 நாள் கெடுவை விதித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா தோன்றிய விவகாரம் தொடர்பாக, அமெரிக்கா அரசாங்கம் உள்நோக்கத்துடனேயே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜோ பைடனின் திடீர் உத்தரவை கடுமையாக எதிர்த்துள்ள சீனா, அமெரிக்கா மீது கடுமையான குற்றம்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள சீனா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரான ஜாவோ லிஜியன்,
‘அமெரிக்கா அரசாங்கம் உள்நோக்கத்துடனேயே இந்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஈராக்குக்கு கோடிக்கணக்கில் ஆயுதங்கள் விற்கப்பட்டது குறித்து விமர்சனம் எழுந்துள்ள சூழலில், அதை திசைமாற்றுவதற்காகவே சீனா மீது அவதூறு கருத்துக்களை திட்டமிட்டு தெரிவித்து இதை செயற்படுத்தியுளார் ஜோ பைடன்.
உலகமே இந்த பெருந்தொற்றை எதிர்த்து போராடி வரும் சூழலில் உலக சுகாதார அமைப்பை அவமதித்தது மட்டுமில்லாமல், நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையை சீர்குலைக்கிறார் பைடன்.
கொரோனா தொற்றின் தொடக்கம் குறித்து எங்களுக்கு அமெரிக்காவின் மீது சந்தேகம் உள்ளதால் உலக சுகாதார அமைப்பு சீனாவை விசாரிப்பது போல் அமெரிக்காவையும் விசாரிக்க வேண்டும். உலகமெங்குமுள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான ஆய்வகங்களில் நிபுணர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதுவே வெளிப்படையான விசாரணையாக இருக்கும்’ என கூறினார்.