வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

இங்லாந்துக்கு எதிரான பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் அணி அறிவிப்பு !

இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து- – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் எதிர்வரும் 28, 30 மற்றும் செப்டம்பர் 1-ம் திகதிகளில் மான்செஸ்டரில் நடக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்ட பிறகு சர்ப்ராஸ் அகமது முதல்முறையாக 20 ஓவர் அணியில் இடம் பிடித்துள்ளார். முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் ஆகியோர் தங்களது இடத்தை தக்கவைத்துள்ளனர்.

துடுப்பாட்ட வீரர் ஷான் மசூத்துக்கு அணியில் இடம் கிட்டவில்லை. பாகிஸ்தான் அணி வீரர்கள் வருமாறு:-

பாபர் அசாம் (தலைவர்), பஹார் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராவுப், இப்திகர் அகமது, இமாத் வாசிம், குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், முகமது அமிர், நசீம் ஷா, சர்ப்ராஸ் அகமது, ஷதாப் கான், ஷகீன் ஷா அப்ரிடி, சோயிப் மாலிக், வஹாப் ரியாஸ்.

கொரோனா முடிவுக்கு வர இரு ஆண்டுகள் எடுக்கும் உலக சுகாதார அமைப்பு தகவல்

இரு ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் உலகமயமாதல், நெருக்கம், தொடர்பில் இருத்தல் என்பன தடங்களாக உள்ளன. ஆனால் நம்துடைய தொழில்நுட்ப வளர்ச்சியில் நன்மை உள்ளது. ஆகையால், இந்த கொரோனாத் தொற்றை நாம் 2 ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டுவந்து விடலாம். தற்போது இருக்கும் உத்திகளை அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும். கூடுதலாக கொரோனாவுக்குத் தடுப்பூசி கிடைக்கும் பட்சத்தில் நாம் இந்த வைரசை 1918 ஆம் ஆண்டு உருவான ஸ்பானிஷ் புளூ முடிவடைந்த காலகட்டத்திற்கு முன்னரே இதை முடிவுக்கு கொண்டுவந்து விடலாம் என்றார். 1918 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஸ்பானிஷ் புளூ என்ற வைரஸால் உலகம் பாரிய பாதிப்பை எதிர்கொண்டது. இந்த ஸ்பானிஷ் புளூவுக்கு உலகம் முழுவதும் 5 கோடி முதல் கோடி பேர் வரை உயிரிழந்தனர். இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நீடித்தது. அதன் பின்னர் தான் இந்த கொடிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மெல்ல உலகம் பழைய நிலைக்கு திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் ஒரு வேலைக்கு 1000 பேர் விண்ணப்பம்! அரசியல், பொருளாதார, கல்விக் கொள்கைகளில் மாற்றம் வேண்டும்!!!

பிரித்தானியாவின் ஒரு பகுதியில் ஒரு வெற்றிடத்திற்கு ஆயிரம் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மார்ச் 2020இல் கொரோனா பன்டமிக் ஆரம்பித்த வேளையில் பிரித்தானியாவில் வேலையற்றோர் எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் மிகக்குறைந்த நிலையில் காணப்பட்டது. அப்போது வேலையற்றவர்களின் எண்ணிக்கை 1.35 மில்லியன்களாக இருந்தது. ஆனால் அடுத்த மூன்று மாதகாலத்தில் யூனில் வேலையில்லாமல் அரசு உதவிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. 2.7 மில்லியன் பேர் வேலை இழந்தவர்களுக்கான அல்லது வருமான போதாமைக்கான உதவிகளைப் பெற்று வந்தனர். மார்ச் முதல் யூலை வரையான காலத்தில் மட்டும் 730000 பேர் சம்பளம் வழங்கப்படுவதில் இருந்து நீக்கப்பட்டதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்து இருந்தது.

கிழக்கு லண்டனில் உள்ள எனது நண்பரின் முடிதிருத்தும் நிலையத்துக்கு எப்போது சென்றாலும் காத்திருந்து முடிதிருத்த வேண்டும். அல்லது முன்னரே அவரிடம் நேரத்தை பதிவு செய்து செல்வது வழமை. மூன்று பணியாளர்கள் இருந்தாலும் 2 தொடக்கம் 5 பேர்வரை காத்திருப்பார்கள். சில தினங்களுக்கு முன் கார் MOT எடுக்கச் சென்றபோது சலூனில் மூன்று பணியாளர்கள் இருப்பதைப் பார்த்தேன். MOT எடுத்துவிட்டு அண்ணளவாக ஒரு மணிநேரத்திற்குப் பின் மீண்டும் முடி திருத்தச் சென்றேன். பணியாளர்களைத் தவிர யாரும் இல்லை. மார்ச் மாதமளவில் பொறுப்பாய் இருந்த நண்பரோடு உரையாடிய போது தானும் ஒரு சலூன் திறக்கப்போவதாகச் சொல்லி இருந்தார். புதிய சலூன் திறப்பது பற்றிக் கேட்டேன். ‘பயமாக இருக்குது அண்ணா’ ஆட்கள் வரவே பயப்படுகிறார்கள். எல்லாம் வெறிச்சோடிக்கிடக்கின்றது என்று சலிப்போடு கூறினார்.

அத்தியவசிய தேவைகளில் ஒன்றான முடிதிருத்தும் நிலையத்தின் நிலையே இப்படி என்றால் மற்றைய வேலைகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பிரித்தானியாவில் ஒவ்வொரு நாளும் நிறுவனங்கள் எத்தினை பேரை வேலையால் நிறுத்துகின்றனர் என்ற விபரம் வெளிவந்த வண்ணமே உள்ளது. வீடுகளில் மிக அறியப்பட்ட நிறுவனங்களான பிபி – BP, பிரிடிஸ் ஏயர்வெய்ஸ், M&S – எம் அன் எஸ், ஜோன் லூயிஸ், பிஸா கட், தி கார்டியன், ஈவினிங் ஸ்ராண்டட் பத்திரிகைகள் என்று இந்தப் பட்டியல் மிகநீளமானது. ‘வைட் கொலர் ஜொப்’ என்று பிரித்தானியர்கள் பெருமைப்படுகின்ற பல தொழில்கள் தற்போது ஆபத்துக்கு உள்ளாகி உள்ளது.

நிறுவனங்கள் தொடர்ந்தும் வேலையில் பணியாளர்களை வைத்திருப்பதற்காக வழங்கும் பேர்லோ திட்டம் ஒக்ரோபரில் முடிவுக்கு வரும் போது, வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வேலை நீக்கம் என்பது வெறுமனே கொரோனாவினால் ஏற்பட்டது மட்டுமல்ல. கொரோனாவிற்கு முன்னரேயே பிரித்தானிய வேலைமுறையில் மாற்றங்கள் வேண்டும் என்பதை நிறுவனங்கள் மிகத் திட்டமிட்டு தகுந்த நேரத்திற்காக காத்திருந்தன. கொரோனா வின் தாக்கம் இந்த மாற்றத்தை சடுதியாக துரிதப்படுத்தி உள்ளது.

பிரித்தானிய நிறுவனங்கள் தொழில்நுட்பத்தில் கூடுதல் முதலீடுகளைச் செய்துவருவதால் கூடுதல் லாபத்தை காண முடியும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயற்படத் தொடங்கிவிட்டன. மனித வலுவுக்காக ரொபேட்களை கணணிகளைப் பயன்படுத்தும் முறை தற்போது தீவிரமாக்கப்பட்டு வருகின்றது. அதனால் மனிதர்கள் செய்யும் பணிகளை கணணிகளும் ரோபேட்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக ரீற்றெயில் செக்ரரை எடுத்துக்கொண்டால் அவர்களுடைய வருமானம் அதிகரித்தே உள்ளது. ஆனால் அவர்கள் ஒன்லைன் மூலமாக வருமானமீட்டுவது மிகையாக அதிகரித்துள்ளது. அதனால் அவர்கள் தங்களுடைய கல்லும் சீமேந்தும் கொண்டு கட்டப்படும் வியாபார நிலையங்களின் எண்ணிக்கையை மிக விரைவில் குறைத்துக் கொள்வார்கள்.

இன்னும் சில ஆண்டுகளில் வங்கிகள் எமது ஹைஸரீற்றில் இருந்து காணாமல் போய்விடும். அடுத்த ஆண்டு முதல் பிரித்தானியா ஓட்டிகள் இல்லாத வாகனங்களை பரீட்சார்த்தமாக நடைமுறைக்கு அனுமதிக்க உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் ரக்ஸிகளும் ஊபர் ட்ரைவர்களும் வேலை இழக்க வேண்டி ஏற்படலாம். தற்போது நாங்கள் செய்கின்ற பல நடைமுறை வேலைகள் இன்னும் சில ஆண்டுகளில் வரலாறு ஆகிவிடும்.

தற்போதைய பொருளாதாரமானது மிக வேகமாக அறிவியல் பொருளாதாரமாக மாறி வருகின்றமையால் வேலைவாய்ப்பிற்கான சந்தையில் தங்களை விற்க விரும்பும் ஒவ்வொருவரும் தங்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. இந்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகள் கூட வெறும் சான்றிதழ்களை மட்டும் வைத்துக்கொண்டு வேலைழயப் பெற்றுவிட முடியாது. அவர்கள் கடுமையான போட்டியயை சந்திக்க வேண்டி நேரிடும். சான்றிதள்கள் மட்டுமே அறிவாகி விடாது. ஏனைய திறன்களும் பரீட்சிக்கப்படும்.

பழையன கழிவதும் புதியன புகுவதும் இயல்பானாலும், இழக்கப்படும் வேலைகளுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பம் புதிய வேலைகளை உருவாக்குமா என்றால் நிச்சயமாக இல்லை. தொழில்நுட்பத்தை நிறுவனங்கள் கொண்டு வருவதன் அடிப்படை நோக்கமே மனித வலுவைக் குறைத்து அவர்களுக்கு வழங்கும் சம்பளத்தைக் குறைத்து அதீத லாபம் மீட்டுவது மட்டுமே.

அதனால் அரசு புதிய தொழில்சார் சட்டங்களை இயற்றி வேலை நேரத்தை குறைத்து, சம்பளத்தை உயர்த்தி, அரச உதவித் திட்டங்களை உயர்த்த வேண்டும். தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட வாரத்திற்கு 40 மணிநேர வேலைக் கணக்கு தற்போது தொழில்நுட்பம் அதன் உச்சத்தை தொட்டுள்ள இன்றைய காலகட்டத்திற்கு எவ்விதத்திலும் பொருத்தமற்றது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த மக்கள் சமூகத்திற்கும் சொந்தமானது. அதன் பலனை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு.

மக்கள் தனிமனிதர்களாக மட்டும் சிந்திக்காமல் சமூகம் சார்ந்தும் சிந்திக்க வேண்டிய அரசியல் சூழலில் நாம் வாழ்கின்றோம். மக்கள் கூட்டத்தை தனிமனிதர்களாக்கி தனிமனிதர்களிடையே போட்டியயை உருவாக்கி சமூக அக்கறையை இல்லாமல் செய்து வெறும் போட்டியயையும் பொறாமையயையும் உருவாக்கும் தற்போதைய அரசியல் பொருளாதார கல்விக் கொள்கைகளில் கடுமையான மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

தங்களுடைய பட்டப் படிப்பிற்காக £50000 வரையான கடன் சுமையைப் ஏற்றுக்கொள்ளும் இளைஞர்களதும் யுவதிகளதும் எதிர்காலம் அரசின் கொள்கைவகுப்பிலேயே தங்கியுள்ளது. பெருநிறுவனங்கள் லாபமீட்டுவதற்காக தங்களைத் தயார்படுத்தும் இந்த இளைஞர் யுவதிகளின் கல்வி முற்றிலும் இலவசமாக்கப்பட வேண்டும்.

‘தகுதியானவர்களைத் விரட்டி அடியுங்கள்!’ – தமிழ்ச் சூழல்; ‘தகுதியானவர்களை துரத்திப் பிடியுங்கள்!’ – சர்வதேசச் சூழல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்தவர்களில் ஓப்பீட்டளவில் தகுதியான பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன். இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் எம் ஏ சுமந்திரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விரட்டியடிக்க அக்கட்சிக்குள் பல்வேறு சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் ஊடகங்களும் புலம்பெயர் தமிழ் சமூகவலைத்தள கனவான்களும் படாத பாடுபட்டனர். அதே போல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தவர் மணிவண்ணன். ஆனால் தேர்தல் முடிந்ததும் அவரை ஓரம்கட்டுவதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காய்நகர்த்தி வருகின்றார். எங்கே மணிவண்ணன் தனக்கு போட்டியாகி விடுவாரோ என்பதற்காக தனக்கு ஜால்ராவும் சிஞ்சாவும் போடக் கூடிய ‘குதிரை’ கஜேந்திரனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்படுகிறது.

அரசியலில் மட்டுமல்ல அரசியலுக்கு வெளியேயும் குறிப்பாக அதிகாரத்தில் உள்ள அல்லது அதிகாரத்துக்கு வரத்துடிக்கும் யாழ்ப்பாணத் தமிழன் இவ்வாறுதான் சிந்திக்கின்றான். போராட்டகாலங்களில் கூட ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்கள்: வே பிரபாகரன், உமா மகேஸ்வரன் போன்றவர்கள் கூட எங்கே தங்களிலும் பார்க்க திறமையானவர்கள் வந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தனர். இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் கூட ஒரு நேர்மையான, ஆளுமைமிக்க ஒருவர் துணைவேந்தராக வரக்கூடாது என்பதில் யாழ் பல்கலைக்கழக சமூகம் மிக விழிப்பாக இருக்கின்றது. அதனால் தான் அவர்கள் பாலியல் வல்லுறவு புரிந்தவர்களைக் கூட இன்றும் பேராசிரியர்களாக வைத்துள்ளனர். துணைவேந்தர்களாக வருவதற்கு சிபாரிசு செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.

இதற்கெல்லாம் முற்றிலும் மாறாக சர்வதேசம் இயங்குகின்றது. அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழ் பின்புலம் கொண்ட ஒருவர் போட்டியிடுவதாக கொண்டாடும் நாம் அதன் பின்னணியைச் சற்று நோக்க வேண்டும். ஜனநாயகக் கட்சியில் துணைவேட்பாளராகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ், ஜோ பைடனுக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவர். இவர் ஜோ பைடனுக்கு எதிராக பலத்த சவாலை விடுத்ததுடன் ஒரு விவாதத்தின் போது ஜோ பைடனை நிலைகுலைய வைத்தார். ஜோ பைடனுக்கு அந்நேரத்தில் சொல்வதற்கு வார்த்தைகள் கூட வரவில்லை. அவரது ஆதரவை சற்று தடுமாற வைத்தவர்.

இருந்தாலும் ஜோ பைடனின் மகன் உப ஜனாதிபதித் தெரிவில் கமலா ஹாரிஸை தெரிவு செய்தார். அவருடைய திறமைக்காகவும் அவருடைய அரசியல் கொள்கைகள் தன்னுடைய அரசியல் கொள்கைகளுக்கு சமாந்தரமாக இருப்பதாலும் ஜோ பைடன் கமலா ஹாரிஸை தனது உபஅதிபராகத் தேர்வு செய்துகொண்டார். ஜோ பைடன் (77 வயது) யைக் காட்டிலும் மிக இளமையான கமலா ஹாரிஸ் (வயது 55) தனக்குப் பின் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு ஏற்ற வகையிலேயே இத்தேர்வு இடம்பெற்றுள்ளது. மேலும் ஜோபைடன் ஜனாதிபதி ஆனாலும் கமலா ஹாரிஸே கூடுதல் ஆதிக்கம் செலுத்தவார் என்றும் நம்பப்படுகின்றது. 2024இல் தவறினால் 2028இல் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிடலாம் என்று நியுயோர் ரைம்ஸ் எதிர்வு கூறியுள்ளது.

தற்போதைய அதிபர் டொனால் ட்ரம்மின் முதலாவது எதிரியாக கமலா ஹாரிஸே இருக்கப் போகின்றார். அவர் ஒரு குடிவந்த குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் பொது மருத்துவச் சேவைக்கு ஆதரவானவராகவும் இருப்பதால் டொனால் ட்ரம்மின் முதல் தாக்குதல் இலக்கு கமலா ஹாரிஸாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

தமிழ் சமூகம் இந்த சர்வதேச அரசியலில் இருந்து ஏதாவது பாடங்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதா? என்பது தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது.

வடக்கு கலிபோர்னியாவில் மின்னல் தாக்குதல்களால் பயங்கரமான காட்டுத்தீ !

கொரோனா வைரஸ் காரணமாக பெரும் பாதிப்பை சந்துத்துள்ள அமெரிக்க மாகாணங்களில் கலிப்போர்னியாவும் ஒன்று. இந்த நிலையில் தற்போது கடுமையான காட்டுத் தீயை கலிப்போர்னியா எதிர்க் கொண்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ வடக்கு கலிபோர்னியாவில் மின்னல் தாக்குதல்களால் வனப் பகுதிகளில் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் 11,000 மின்னல் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியின்போது தீயணைப்பு வீரர் ஒருவர் பலியானார். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி உள்ளனர். கலிபோர்னியா மட்டும் அல்லது சான் பிரான்ஸிகோவிலும் காட்டுத் தீயினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காட்டுத் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத் தீக்கு இதுவரை 20,234 ஹெக்டேர் பரப்பளவு நிலங்கள் சேதமாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

கலிபோர்னியா கடந்த சில வருடங்களாகவே காட்டுத் தீயினால் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்து வருகிறது. கடந்த வருடம் மிக மோசமான அளவில் காட்டுத்தீ  ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீக்கு 84 பேர் பலியாகினர்.

மேலும் சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகின. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நெருப்பில் நாசமாகின என்பது குறிப்பிடத்தக்கது.

நிறவெறிக்கு வாக்சின் எனும் தடுப்பு மருந்து கிடையாது, இதை ஒழிக்க நாம்தான் பாடுபடவேண்டும் – கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க மற்றும் தெற்காசிய பெண்மணியாக துணை ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு நிற்க தேர்வு செய்யப்பட்ட ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ், அமெரிக்காவுக்காக உயிர்த்தியாகம் செய்த ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை நினைவுகூர்ந்தார்.

சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்பதை ஜனநாயகக் கட்சி மீண்டும் வலியுறுத்தி செயல்படுத்தும் என்று அவர் உறுதியளித்தார்.

ஜனநாயகக் கட்சி மாநாட்டில் கமலா ஹாரிஸ் பேசியதாவது:

நிறவெறிக்கு வாக்சின் எனும் தடுப்பு மருந்து கிடையாது, இதை ஒழிக்க நாம்தான் பாடுபடவேண்டும். ஜார்ஜ் பிளாய்ட், பிரியோன்னா டெய்லர் இன்னும் எத்தனையோ பேர்களைக் குறிப்பிட வேண்டும் நம் குழந்தைகள், நாம் அனைவருமே, சம நீதி என்பதற்காகப் போராட வேண்டும். நாம் ஒவ்வொருவரும் விடுதலை பெறாமல் முழு விடுதலை சாத்தியமல்ல.

பெண் உரிமைக்காக போராடிய தலைவர்கள் மேரி சர்ச் டெரெல், மேரி மெக்லியாட் பெத்யூன், ஃபானி லூ ஹேமர், டயான் நேஷ், கான்ஸ்டன்ஸ் பேக்கர் மோட்லி மற்றும் ஷிர்லி கிரிஷோம் ஆகியோரது சிவில் விடுதலைக்கான போராட்டங்கள், கருத்துக்கள் நமக்குப் போதிக்கப்படவில்லை. ஆனால் அமெரிக்கர்களாக அவர்கள் தோள்களில்தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

எந்த ஒரு பிரபல்யத்துக்கும் இடம்கொடுக்காமல் அவர்கள் போராடினர், ஊர்வலம் நடத்தினர், இவர்கள்தான் நம் வாழ்க்கையை தீர்மானித்தவர்கள். இவர்கள்தான் பில் கிளிண்டன், பராக் ஒபாமா ஆகியோரது ஒளிமிகுந்த தலைமைக்கு முன்னோடிகளாவார்கள்.

அடுத்தவர்களுக்கு சேவை செய்வதுதான் வாழ்க்கையின் நோக்கம் அர்த்தம் என்று என் தாயார் ஷியாமளா கோபாலன் எனக்குக் கற்றுக் கொடுத்தார். இன்றைய இரவில் அவர் இங்கு இருக்க வேண்டும் என்று என் மனம் கருதுகிறது. மேலேயிலிருந்து என்னை அவர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

என்னை என் அம்மா பெற்ற போது நான் உங்கள் முன்னிலையில் இந்த மேடையில் நின்று பேசுவேன் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார். அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவிக்கு என்னை நிற்கவைத்ததை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறினார் கமலா ஹாரிஸ்.

பிரித்தானியா: ஜசிஎஸ்சிஈ மற்றும் ஏலெவெல் பெறுபேறுகளும் அரசின் குளறுபடிகளும்!! மருத்துவக் கற்கை நெறியில் அதன் பிரதிபலிப்புகளும்!!!

இன்று (Aug 20, 2020) வெளியான 16 வயது மாணவர்களின் தரம் 11ற்கான ஜிசிஎஸ்ஈ பெறுபேறுகள் இன்று வெளியாகியது. இந்த ஜிசிஎஸ்ஈ முடிவுகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் நல்ல பெறுபேறுகளுடன் வந்திருப்பதை மாணவர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் சித்தியடைந்த மாணவர்களின் பெறுபேறுகள் 10 வீதத்தால் அதிகரித்து உள்ளது. மேலும் உயர்சித்தி பெற்றவர்களின் வீதம் 25 சத விதத்தால் அதிகரித்து உள்ளது. ஆனால் ஜிசிஎஸ்ஈ பெறுபேறுகளுக்கு சமனான பிரெக் தொழிற்பயிற்சி பாடங்களின் பெறுபேறுகளை வெளியிடுவதை நேற்று (ஓகஸ்ட் 19, 2020) பெறுபேறுகளுக்கு பொறுப்பான அலுவலகம் ஓப்குவால் நிறுத்தி வைத்துள்ளது. அதனால் பிரெக் பாடங்களை எடுத்த மாணவர்கள் குழப்பநிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

இப்பெறுபேறுகள் பற்றிய குழறுபடிகள் கல்வி அமைச்சுக்கு ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட போதும் கல்வி அமைச்சு காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை எனக் குற்றமசாட்டப்படுகிறது. இவ்வளவு குழறுபடிகளுக்கும் யார் காரணம் என்பதற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. கல்வி அமைச்சுச் செயலாளர் கவின் வில்லியம்சன் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாகவும் அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

கொரோனா காலத்தில் அரச விதிமுறைகளை மீறிய டொமினிக் கம்மிங்கை பதவி விலக்கக் கோரிய போதும் பொறிஸ் ஜோன்சன் அதனை ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பொறிஸ் ஜோன்சன் செயற்திறனற்ற பிரதமராக இருப்பது மட்டுமல்லாமல் வெறும் விசுவாசிகளை வைத்து நாட்டை நிர்வகிக்க முறல்கின்றார் என்ற குற்றச்சாட்டு தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. புதிய தலைவர் கியர்ஸ்ராமர் தலைமையிலான தொழிற்கட்சி இன்னமும் ஸ்தீரனமான நிலையில் ஆளும்கட்சிக்கு சவால் விடாமல் உள்ளது.

கடந்த வாரம் வெளியான ஏலெவெல் பரீட்சைப் பெறுபேறுகளில் பெரும் குளறுபடி ஏற்பட்டது. ஆசிரியர்கள் எதிர்வுகூறிய பெறுபேறுகளை மாற்றி அல்கோரிதம் ஒன்றைப் பயன்படுத்தி மாணவர்களின் பெறுபேறுகள் குறைக்கப்பட்டது. அதனால் சமூகமட்டத்தில் கீழ்நிலையில் இருந்த மாணவர்களின் பெறுபேறுகளே மேலும் கீழிறக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட அழுத்தங்களைத் தொடர்ந்து அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டது. ஆனாலும் பல்கலைக்கழகங்களுக்கான இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் பல மாணவர்கள் தங்களுடைய முதல் தெரிவான கற்கைக்கோ முதல் தெரிவான பல்கலைக்கழகத்திற்கோ செல்வதற்கான வாய்ப்பு இந்தக் குழறுபடிகளால் பறிபோயுள்ளது. பல ஆண்டுகள் மாணவர்கள் செய்த உழைப்பை அரசு தனது செயற்திறன் இன்மையால் உதாசீனம் செய்துள்ளது.

பிரித்தானிய கொன்சவேடிவ் அரசு மீண்டும் மீண்டும் தன் இயலாமையை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்தி விருகின்றது. கொரோனா ஒரு பெரும் உயிர்க்கொல்லி நோய்க்கிருமி என்பதை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தும் பொறிஸ் ஜோன்சனின் அரசு எவ்வித முன்நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது எழுபதினாயிரத்திற்கு அதிகமானோர் பிரித்தானியாவில் கொல்லப்பட்டனர். அதற்கு எவ்வித பொறுப்பையும் அரசு ஏற்கவில்லை. ஐரோப்பாவில் கொரோனாவில் கொல்லப்பட்டோர் அதிகமான நாடாக பிரித்தானியா உள்ளது. இந்த கொரோனா பேரழிவின் பின் என்எச்எஸ் இற்கு வாரா வாரம் கைதட்டி ஆதரவு தெரிவிப்பதாக மாயாஜாலம் போட்ட அரசு, பல்கலைக்கழகங்களில் மருத்துவதுறைக்கு விதிக்கப்பட்டு இருக்கும் எண்ணிக்கைக் கட்டுப்பாட்டை தளர்த்த மறுத்துவருகின்றது. ஏனெனில் ஒவ்வொரு புதிய மருத்துவரை உருவாக்கவும் அரசு அம்மருத்துவர்களை உருவாக்க அரசு முதலீடு செய்ய வேண்டியுள்ளது. அதனைச் செய்யத் தயாரில்லாததால் மருத்துவ படிப்பை மேற்கொள்வதில் எண்ணிக்கைக் கட்டுப்பாட்டை அரசு விதித்துள்ளது.

இது இம்முறை தகுதிபெற்ற பல மாணவர்களையும் தங்களது கனவுத் தொழலாக உள்ள மருத்துவத்துறைக்குள் நுழைவதற்கு தடையாக உள்ளது. அல்கோரிதம் காரணமாக சமூகத்தின் பிற்பட்ட தளத்தில் இருந்து மருத்துவத்துறைக்கு சென்ற மாணவர்களின் கனவுகளில் அரசு மண்ணைவாரி விசியது. அதனால் ஆசிரியர்களின் எதிர்வு கூறலின் அடிப்படையில் மருத்துவத்துறைக்கு தெரிவானவர்கள், அரசின் அல்கோரிதத்தினூடாக அவர்களின் பெறுபேறுகள் கீழிறக்கப்பட்டு மருத்துவத்துறையில் கற்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பை இழந்தனர். தற்போது அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட போதும், பல்கலைக்கழகங்கள் மருத்துவத்துறைக்கான இடங்களை ஏற்கனவே பூர்த்தி செய்துவிட்டதாலும், கல்வியில் சமூகஇடைவெளி பேணப்பட வேண்டி இருப்பதாலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாங்கள் விரும்பிய மருத்துவத்துறையில் கற்றுகும் வாய்ப்பை இழக்கின்றனர். அரசு கூடுதல் நிதியயை முதலிட்டு மருத்துவக் கல்விக்கான எண்ணிக்கையைத் தளர்த்தினால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும்.

பிரித்தானியாவில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்புகளுக்கு முக்கியமான காரணம் போதிய மருத்துவர்களும் மருத்துவ தாதிகளும் இல்லாமையே. இன்றும் பிரித்தானிய சுகாதார சேவைகளில் பல்லாயிரக்கணக்காண வெற்றிடங்கள் உள்ளது. கொரோனா போன்ற உயிர்க்கொல்லிகள் தாக்கினால் அதனைக் கையாள்வதற்கு வேண்டிய மருத்துவ மனிதவலு பிரித்தானியாவில் இல்லை. அதனால் மருத்துவத்துறைக் கல்விக்கான எண்ணிக்கையை தளர்த்துவது அவசியம். வெறும் கைதட்டி ஆதரவு தெரிவிப்பதாக பொறிஸ் ஜோன்சன் அரசு நீலிக் கண்ணீர் வடித்தது. ஆனால் காத்திரமான உதவிகளை செய்யத் தயாராகவில்லை. மாறாக இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் உருவாக்குகின்ற மருத்துவர்களையும் மருத்துவத்துறை சார்ந்தவர்களையும் கவர்ந்து இழுத்து தங்களது சுகாதார சேவைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புகின்றனர். இதன் மூலம் வளர்ந்துவரும் நாடுகளில் சுகாதார சேவைகள் பாதிப்படைகின்றது. இந்நாடுகள் உருவாக்கும் மருத்துவர்களால் பிரித்தானியா நன்மையயைப் பெற முயற்சிக்கின்றது.

ட்ரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் காட்டம் !

அமெரிக்க ஜனாதிபதிதேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் 2-வது முறையாக போட்டியிடுகிறார். ஜனநாயகக்கட்சி சார்பில் ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலாகரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரு வேட்பாளர்களையும் முறைப்படி ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பளார்களாக அறிவிக்கும், அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், ஜனாதிபதி ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது:

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பைப் பொறுத்தவரை ஜனாதிபதி பதவி என்பது மணிக்கணக்கில் டிவி பார்ப்பதும், சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதவிடுவதும்தான் பணி என நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் சொல்கிறார், நாம்தான் உலகில் முன்னணியில் இருக்கிறோம். நல்ல விஷயம். மிகப்பெரிய தொழிற்சாலைகள் கொண்ட பொருளாதாரத்தைக் கொண்ட நம்நாட்டில்தான் வேலையின்மை வீதம் மூன்று மடங்கு இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தல் என்பது உலகிலேயே மிகவும் முக்கியமான பணிக்கான நேர்காணல். இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கும் போது கொரோனாவில் ஏறக்குறைய 1.70 லட்சம் பேர் உயிரிழந்துவிட்டார்கள், லட்சக்கணக்கான மக்கள், சிறுவணிகர்கள் வேலையிழந்துள்ளனர்.

இது போன்ற நேரத்தில், ஓவல் அலுவலகம் ஒரு கட்டளை மையமாக இருக்க வேண்டும். மாறாக, இது ஒரு புயல் மையம். எப்போதும் குழப்பமாகத்தான் இருக்கிறது. ஒரே விஷயம் மட்டும் மாறவில்லை. பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதும், அடுத்தவர் மீது பழிசுமத்துவம் மாறவில்லை.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவிய போது, ஜனாதிபதி ட்ரம்ப் முதலில் வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது என்றார், பின்னர் விரைவில் மறைந்துவிடும் என்று தெரிவித்தார். இது எதுவுமே நடக்கவில்லை என்றவுடன், நாள்தோறும் தொலைக்காட்சி முன் பேட்டி அளித்து தான் சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிவித்துக்கொண்டார், வல்லுநர்கள் தகவலுக்காக காத்திருக்கிறேன் என்றும்தெரிவித்தார்.

மருத்துவ வல்லுநர்கள் அறிவுரை சொல்வதை விரும்பாத ட்ரம்ப் அவர்களுக்கு அறிவுரை கொடுப்பார்.
அமெரிக்க மக்களிடம் தொடக்கத்திலேயே முகக்கவசம் அணிய அறிவுறுத்தாமல், பல்வேறு மாநிலங்களுக்கு பரவியபின்புதான் முகக்கவசம் அணிய ட்ரம்ப் அறிவுறுத்தினார்.

ட்ர்ம்ப்புக்கு ஜனாதிபதி பதவி என்பது மணிக்கணக்கில் டிவி பார்ப்பதும், சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடும்தான் என நினைத்துக்கொண்டிருக்கிறார். மறுத்தல், கவனத்தை திசைதிருப்பல், இழிவுபடுத்துவது ஆகியவை மூலம் மகிழ்ச்சிப்படுத்த முயல்கிறீர்கள். ஆனால், உண்மையான பிரச்சினை வரும் போது அட்டை வீடுபோல் அனைத்தும் சரிந்துவிடும்.

இன்னும் 4 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருந்தால்,ட்ரம்ப் என்ன செய்வார். அடுத்தவரை குறைசொல்வார், கிண்டல் செய்வார், சிறுமைப்படுத்துவார். ஆனால்,ஜே பிடன் என்ன செய்வார் என உங்களுக்குத்தெரியும், சிறப்பாக நாட்டை கட்டமைப்பார்.

ஜனநாயகக் கட்சி சிறந்த ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்துள்ளது. தனக்கிருக்கும் பொறுப்புக்களை ஏற்று செயல்படுவார்; யார் மீதும் குறைகூறமாட்டார், கவனமாக இருப்பார், யாரையும் திசைதிருப்பமாட்டார், ஒற்றுமையை விரும்புவார், யாரையும் பிரிக்கமாட்டார் அவர்தான் ஜோ பிடன்.

அமெரிக்காவை மீண்டும் சிறந்த நிலைக்கு பிடன் கட்டமைப்பார், மிகவும் நேர்த்தியான  திட்டங்களை வகுத்து, அமெரிக்காவின் எதிர்காலத்துக்கு முதலீடு செய்ய அழைப்பார். புத்தாக்கம் நிறைந்த நிறுவனங்கள், நிதியுதவி, காலநிலையைக் காக்க முனைப்பு போன்றவற்றை பிடன் செய்வார்.

இவ்வாறு கிளிண்டன் தெரிவித்தார்.

உணவு பற்றாக்குறையை தீர்க்க மக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் நாய்களை ஒப்படைக்க வேண்டும் – வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்

நாய் இறைச்சி அற்புதமான உணவு என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். மேலும் செல்லப் பிராணியான நாய்களை கொன்று அதை இறைச்சியாக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

வடகொரியாவில் உள்ள 2.55 கோடி மக்களில் 60 சதவீதம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா. சபை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. வடகொரியாவில் உணவுப்பற்றாக்குறை பிரச்சினை காரணமாக நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் மீது நாட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் உணவு பற்றாக்குறை குறித்து வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் வடகொரியாவில் இறைச்சி பற்றாக்குறை காரணமாக மக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் நாய்களை ஒப்படைக்க வேண்டுமென ஜனாதிபதி கிம் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாயின.

இதை தொடர்ந்து அதிகாரிகள் செல்லப் பிராணியான நாய்களை வளர்க்கும் வீடுகளை கண்டறிந்து, அவற்றை ஒப்படைக்கும்படி கட்டாயப்படுத்தியும், பலவந்தமாக பறிமுதல் செய்தும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பறிமுதல் செய்யப்படும் நாய்களில் சில நாய்கள் அரசு நடத்தும் உயிரியல் பூங்கா அல்லது இறைச்சி உணவகங்களுக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

வடகொரியா அணு ஆயுத தயாரிப்பு நாடு என்பதால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் 1990-களின் மத்தியில் உணவுப் பஞ்சத்துக்கு மட்டும் 30 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது மீண்டும் அங்கே உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான் செல்லப் பிராணிகளை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி கிம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நாய் இறைச்சியை அருமையான உணவு என்றும், அது பாரம்பரியமான எதிர்ப்பு சக்தியை உடலுக்குத் தருகிறது என்றும் ஜனாதிபதி கிம் கூறியுள்ளார். எனவே நாய்களை கொன்று அதை இறைச்சிக்காக தருமாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் கோழி, மாடு, பன்றி இறைச்சியை விட அதிக வைட்டமின்கள் நாய் இறைச்சியில் இருப்பதாகவும் ஜனாதிபதி கிம்  தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மனித உடலில் உள்ள குடலுக்கு நாய் இறைச்சி அதிக நன்மையைத் தருவதாகவும் கிம் குறிப்பிட்டுள்ளார்.

கிம் ஜாங் உன்னின் அறிவிப்பு ஒரு பக்கம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினாலும், சிலர் நாய் இறைச்சியை விரும்பி சாப்பிடுகின்றனர். அதை சுவையான இறைச்சி என்றும் அழைக்கின்றனர். மேலும் நாய் இறைச்சியை அதிகம் சாப்பிடுமாறு அவர்கள் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

வட கொரியாவில் நாய் இறைச்சி உணவு என்பது மிகவும் பிரபலமான உணவு வகையாகவும் கருதப்படுகிறது. ஆனால் செல்லப் பிராணிகளை அடித்துக் கொன்று அதை இறைச்சியாக்குவதுதான் வேதனை என்று சிலர் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் வட கொரியாவின் அண்டை நாடான, தென் கொரியாவில் செல்லப் பிராணியான நாய்களைக் கொல்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நாட்டில் உள்ள 2.5 கோடி மக்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக போடப்படும் ! – பிரதமர் ஸ்கொட் மொரிசன்

அவுஸ்திரேலியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலையுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடித்துள்ள அஸ்ட்ராஜெனக்கா நிறுவனத்துடன் அவுஸ்திரேலியா அரசு ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது.

தடுப்பு மருந்து பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்தவுடன், அதை உள்நாட்டில் தயாரித்து நாட்டில் உள்ள 2.5 கோடி மக்களுக்கும் இலவசமாக போடப்படும் என பிரதமர் ஸ்கொட் மொரிசன் பிபிசி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இதுவரை 23,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 493 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 15,246 பேர் கொரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தனர்.