வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

சுமார் 60 மில்லியன் அளவுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்க பிரித்தானியா ஒப்பந்தம்!

கொரோனா பரவுதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பரந்த அளவிலான கொரோனா மருத்துவ பரிசோதனைகளை செய்ய பிரித்தானியா அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பிரித்தானியா சுகாதாரத் துறை செயலாளர் மேட் ஹான் காக் கூறும்போது, “இந்த வருட இறுதிக்குள் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர மருத்துவ பரிசோதனைகளை தீவிரப்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாக்ஸோ ஸ்மித் க்லைன் மற்றும் சனோஃபி பாஸ்டர் ஆகிய மருந்து நிறுவனங்களிடமிருந்து சுமார் 60 மில்லியன் அளவுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்க பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த நிலையில் தங்கள் நாட்டில் நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி விவரங்களை ரஷ்யா திருட முயல்வதாக பிரித்தானியா முன்னரே குற்றம் சாட்டியது.

கரோனா வைரஸை தடுக்கும் முயற்சியில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது.

இதுவரையில் பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் 3,20,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41,381 பேர் பலியாகி உள்ளனர்.

கரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். மிக அபாயகரமான இந்த வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி உலக நாடுகள் எங்கும் வேகமாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பைடன் உத்தியோகபூர்வமாக தெரிவு!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றமை வாழ்நாள் கௌரவம்  என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்து ஜோ பைடன் போட்டியிடவுள்ளார்.

ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மூன்றாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே ஜோ பைடன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது தமது வாழ்நாளில் கிடைத்துள்ள மிகப்பெரிய கௌரவம்“ என அவர் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதி யார்..? என்ற ஆவல் அனைவரிடமும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஜனாதிபதியை சிறைப்பிடித்து ஆட்சியை கைப்பற்றியது மாலி இராணுவம் !

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் நேற்று (18.08.2020) திடீரென ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா, பிரதமர் மெய்கா பவ்பு சிசே ஆகியோரைச் சிறைபிடித்தனர்.
நீண்டநேரம் பேச்சுக்குப்பின் அதிபர் இர்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா பதவியை ராஜினாமா செய்வதாகவும், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் தொலைக்காட்சியில் மக்களுக்கு அறிவித்தார்.

மாலி நாட்டின் அதிபராக இருக்கும் இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா 2-வது முறையாக அதிபராக தேர்தலில் தேர்வு செய்யப்பட்டார். அவரின் பதவிக்காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும்நிலையில், அவரை பதவியிலிருந்து விலகக்க கோரி பல மாதங்களாக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் விளைவாக திடீரென ராணுவப்புரட்சி ஏற்பட்டு, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது.

ராணுவத்தின் பிடியில் இருந்துவரும் ஜனாதிபதி இப்ராஹிம் பபுபக்கர் கெய்ட்டா தொலைக்காட்சியில் முகக்கவசம் அணிந்தவாறு நேற்றுப் பேசுகையில் “ நான் உடனடியாக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன், ராஜினாமா அமலுக்கு வருகிறது. நாடாளுமன்றமும் கலைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

ஆனால், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் மாலியில் நடந்த தேர்தலில் மக்களால் ஜனநாயக முறைப்படிதான் இப்ராஹிம் பபுபக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ராணுவத்தின் பிடியில் இருப்பதால், வேறுவழியின்றி கெய்ட்டா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக நேற்று காலை முதல் பமாகோ நகரின் சாலைகளிலும் தெருக்களிலும் ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தி, சுதந்திரமாக வலம் வந்தனர். அப்போதே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நகரம் வந்துவிட்டது என அறியப்பட்டது.

இந்நிலையில் திடீரென ஜனாதிபதி இப்ராஹிம் பபுபக்கர், பிரதமர் மெய்கா பவ்பு சிசே ஆகியோரின் இல்லத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்து, துப்பாக்கியால் சுட்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிபரையும், பிரதமரையும் கைது செய்துள்ளதாகவும் ஊடகத்தினரிடம் ராணுவத்தினர் அறிவித்தனர்.

பிரதமர் மெய்கா பவ்பு சிசே, ராணுவத்தினரிடம் பல மணிநேரம் பேச்சு நடத்தினார். அப்போது, ஆயுதங்களை கைவிட்டு வாருங்கள் பேசலாம் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால், அதற்குராணுவத்தினர் சம்மதிக்கவில்லை.

மாலி நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து மதரீதியான அடிப்படைவாதம் அதிகரித்ததைத் தொடர்ந்து அந்நாட்டை ஆட்சி செய்த பிரான்ஸ், மற்றும் ஐ.நா. தலையிட்டு ஏற்ககுறைய 7 ஆண்டுகள் ராணுவத்தினருடன் சேர்ந்து தீவிரவாதிகளுடன் போரிட்டு அமைதியை கொண்டு வந்தது.

தீவிரவாதிகளின் ஆதிக்கத்தையும் மீறி கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 77 சதவீத வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக  இப்ராஹிம் பபுபக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5ஆண்டுகளை நிறைவு செய்த இப்ராஹிம் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், ஜனாதிபதி  இப்ராஹிம் பபுபக்கரின் ஆட்சியை மக்கள் வெறுக்கின்றனர். ஏன்னென்றால், ஜனாதிபதி இப்ராஹிம், மாலி நாட்டை இதற்கு முன் ஆட்சி செய்த பிரான்ஸ் நாட்டுக்கு ஆதரவாகச் செயல்படுபவராகவும், மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் அவரை பதவியிலிருந்து விலகக்கோரி பல மாதங்களாக ஒரு தரப்பினர் பல போராட்டங்களை நடத்தியதால், அமைதியற்ற சூழல் நிலவி வந்தது. இந்த சூழலில்தான் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது.

பிலிப்பைன்ஸை அடுத்து தெற்கு சுமத்ராவில் நிலநடுக்கம் !

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (19.08.2020) அதிகாலை 03.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும் நிலநடுக்கம் காரணமாக கரையோர பிரதேச மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் இணக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பிலிப்பைன்சிலும் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது.

தொடரும் இயற்கை அனர்த்தங்கள் – நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நேபாள நாட்டின் சிந்துபல்சவுக் மாவட்டத்தின் ஜுஹல் ரூரல் என்ற பகுதியில் உள்ள லிடி கிராமத்தின் மலைத்தொடர் பகுதியில் 170-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன கடந்த வெள்ளிக்கிழமை (14-ம் தேதி) காலை 6.30 மணியளவில் குடியிருப்பு பகுதிகள் அமைந்திருந்த மலைத்தொடர் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 37 வீடுகள் சேதமடைந்து மண்ணுக்குள் புதைந்தன. இதனால் பலர் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 11 உடல்கள் மீட்கப்பட்டன. சனிக்கிழமையன்று 2 குழந்தைகள் உட்பட 7 உடல்கள் மீட்கப்பட்டன. இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மண்ணுக்குள் சிக்கிய 21 பேரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மாதவ் பிரசாத் கப்லே தெரிவித்தார். விபத்து நடந்த இடம் நிலச்சரிவு அதிகம் நடக்க வாய்ப்புள்ள பகுதி என்பதால் அங்கு வசிக்கும் மக்களை வேறு பகுதிக்கு மாற்ற நேபாள மறுசீரமைப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கொரோனாவின் தாக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது!

கட்டுப்படுவதற்கான எந்த சாத்தியக்கூறுகளுமே இல்லாது கொரோனா பரவல் நாளுக்குநாள் உலகம் எங்கும் வேகமாக பரவிவருகின்றது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கத்தால் ஆஸ்திரேலியாவில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக சுமார் 10 லட்சத்தை கடந்துள்ளதாக தொழிலாளர் புள்ளி விவரத் தலைவர் ஜோர்ன் ஜார்விஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜோர்ன் ஜார்விஸ் கூறும்போது, “ஆஸ்திரேலியாவில் கொரோனாவைரஸ் பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்து வேலை இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அளவு முதல்முறையாக 10 லட்சம் பேர்வரை கரோனாவால் வேலை இழப்பை சந்தித்துள்ளன. வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதைத் தொடர்ந்து, அங்கு கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவில் கொரோனா  பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 22,127 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.352பேர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம் – இஸ்ரேல்

ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து  கொரோனாவுக்கு உண்மையில் தீர்வாக இருக்குமென்றால் பேச்சுவார்த்தைக்கு நுழைய தயார் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து  பாதுகாப்பற்றது என்ற குற்றச்சாட்டை ரஷ்ய ஜனாதிபதி புடினும்,அவரது சுகாதாரத் துரை அமைச்சகமும் இன்று மறுத்தது. இந்த நிலையில் ரஷ்யாவின்  கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சர் கூறும்போது, “ கொரோனா தடுப்பு மருந்து  தொடர்பாக அனைத்து அறிக்கைகளையும் கண்காணித்து வருகிறோம். கொரோனா தடுப்பு மருந்து  தொடர்பாக ரஷ்யாவின் கண்டுபிடிப்பு குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இது கரோனாவுக்கு உண்மையில் தீர்வாக இருக்கும் என்று நாங்கள் நம்பினால், பேச்சுவார்த்தைகளிலும் நுழைய முயற்சிப்போம். ஆனால் நாங்கள்யாரையும் ஏமாற்ற விரும்பவில்லை. எங்கள் பணியாளர்கள் இது குறித்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு பல்வேறு நிலையை எட்டியுள்ளன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் கேய்சர் போன்ற நிறுவனங்கள்தான் கொரோனா  தடுப்பு மருந்தின் 3-வது கட்டத்தில் நுழைந்து மனிதர்களுக்கான கிளினிக்கல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த சூழலில் கொரோனா  வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்தது. உகிலேயே முதல்நாடாக கரோனாவுக்கு தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்தார்.

ரஷ்யாவின் கமலேயா தேசிய ஆய்வு மையம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு மற்றும் நுண்ணுயிரியல் பிரிவு ஸ்புட்னிக்-5 எனும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு!

அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸை தேர்வு செய்வதாக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க ஆப்பிரிக்கப் பெண் ஒருவர் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அமெரிக்க வரலாற்றிலேயே துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்க ஆப்பிரிக்க பெண் என்ற பெருமையைப் பெறுவார். இவரின் தாய் இந்தியர், பூர்வீகத்தில் தமிழகப் பெண் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தல் நடந்தபோது, கடந்த 2019-ம் ஆண்டில் ஜோ பிடனுக்கு எதிராகக் கட்சிக்குள் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். ஆனால், தன்னால் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியவில்லை, நிதி திரட்டமுடியவில்லை என்பதால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தலில் இருந்து  விலகினார். இந்த சூழலில் கமலா ஹாரிஸை ஜோ பிடனே தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரான நெருக்கடிகள், அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமெரிக்க ஆப்பிரிக்கவைச் சேர்ந்த ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது கறுப்பின மக்களின் வாக்குகளைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக இருந்தபோதும், சான் பிரான்ஸிக்கோவின் மாவட்ட அட்டர்னி ஜெனரலாக இருந்தபோதும் கமலா ஹாரிஸின் பணி வெகுவாகப் பாராட்டப்பட்டது. குறிப்பாக இனவெறித்தாக்குதல், போலீஸாரின் அடக்கு முறைக்கு எதிராக கமலா ஹாரிஸ் கடுமையாக குரல் கொடுத்தார்.

இது நாள்வரை அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதியாகவோ அல்லது துணை ஜனாதிபதியாகவோ எந்த அமெரிக்கப் பெண்ணும் இருந்ததில்லை. அதிலும் அமெரிக்க ஆப்பிரிக்க பெண் தேர்தலில் போட்டியி்ட்டு வென்றதில்லை. கடந்த 1984-ம் ஆண்டில் குடியரசுக் கட்சியின் சார்பில் ஜெரால்டைன் பெராரோ, 2008-ல் சாரா பாலின் இருவரும் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.

 

அமெரிக்காவின் ஒக்லாந்தின் ஜமைக்காவைச் சேர்ந்த தந்தைக்கும், இந்தியப் பெண் அதிலும் குறிப்பாக தமிழரான ஷியாமளா கோபாலுக்கும் பிறந்தவர் கமலா ஹாரிஸ். கமலா ஹாரிஸ் கடந்த 2003-ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ மாவட்ட அட்டர்ஜெனரல் தேர்தலில் போட்டியி்ட்டு வென்றார்.

அதன்பின் 2010-ம் ஆண்டில் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார். 2016-ம் ஆண்டு கலிபோர்னியா செனட்டராக கமலா ஹாரிஸ் தேர்வுசெய்யப்பட்டு அவரின் பேச்சும், அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் குறித்த கேள்விகளும் அவரின் பக்கம் கவனத்தை ஈர்த்தன.

கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் பூர்வீகத்தில் ஒரு தமிழ் பெண். கமலா ஹாரிஸின் தாய்வழித் தாத்தா பி.வி.கோபலன் ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த ஜாம்பியாவுக்கு நிர்வாகப் பணிக்கு அனுப்பப்பட்டார்.

பி.வி. கோபாலின் மகள் ஷியாமளா கோபாலன். டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஷியாமளா கோபாலன், நியூட்ரிசியன் பிரிவில் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்காவில் பணியாற்றினார்.

 

இல்லிநாய்ஸ், வி்ஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் மார்க்கப்புற்று நோய் ஆய்வாளராக ஷியாமளா கோபாலன் இருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு ஷியாமளா கோபாலன் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

லெபனானுக்கு உதவிக்கரம் நீட்டும்  ஐக்கிய நாடுகள் சபை !

பெய்ரூட் வெடி விபத்து காரணமாக லெபனானில் ஏற்படும் உணவு பற்றாகுறையை தவிர்க்கும் பொருட்டும் பல டன் மதிப்பிலான தானியங்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்ப உள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் 200-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

மேலும், பெய்ரூட் வெடி விபத்தில், 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் விடுதிகள் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். உலக நாடுகளையே இந்த பெய்ரூட் விபத்து அதிர்ச்சியடைய செய்தது.

இந்த நிலையில் பெய்ரூட் வெடி விபத்தில் அங்கிருந்த தானிய குவியல்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. எனவே லெபனானில் ஏற்படும் உணவு தட்டுப்பாட்டை தவிர்க்கும் பொருட்டு 50,000 டன் எடையையுடைய தானியங்களை ஐக்கிய நாடுகள் சபை வழங்க உள்ளது,

இதுகுறித்து ஐ.நா.வின் மற்றொரு அமைப்பான மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு கூறும்போது,” லெபனானுக்கு மூன்று மாதங்களுக்கு போதுமான 50,000 டன் எடை கொண்ட தனியங்களை அனுப்ப இருக்கிறோம். இதன் முதல் கட்டமாக 17,000 டன் எடைக் கொண்ட உணவு பொருட்கள் 10 நாட்களில் சென்றடைய உள்ளன” என்று இந்த அறிகடகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பெய்ரூட் வெடி விபத்துக்கு பொறுப்பேற்று லெபனான் அரசு பதவி விலகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே லெபனான் பொருளாதார பற்றாக்குறையை சந்தித்து வந்தது. இந்த நிலையில் பெய்ரூட்டில் ஏற்பட்ட இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் சரித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான முதலாவது மருந்தை பதிவு செய்தது ரஷ்யா !

கொரோனாவுக்கு எதிரான ‘முதல்’ வாக்சினை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாகவும் தன் மகளுக்கு முதலில் செலுத்தியதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாகவும், அனைத்துக்கட்ட சோதனைகளும் வெற்றி அடைந்ததாகவும் ரஷ்யா தெரிவித்திருந்தது. மேலும், விரைவில் மருந்தை பதிவு செய்யவுள்ளதாகவும் கூறியிருந்தது. இந்நிலையில், தடுப்பு மருந்து குறித்து ஜனாதிபதி விளாடிமிர்புடின்  ரஷ்ய அமைச்சர்கள் மத்தியில் வீடியோ அழைப்பு மூலம்  பேசியுள்ளதை அடுத்து தகவல் காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்துள்ளது.

“இன்று காலை உலகில் முதல் முறையாக  கொரோனா வைரஸுக்கு எதிரான வாக்சின் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய மகள்களில் ஒருவருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது அவரும் இந்தச் சோதனையில் பங்கேற்றுள்ளார்.  என ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா ஏற்கெனவே கொரோனா தடுப்பு மருந்துக்காக பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டது. பெரிய அளவில் சில வாரங்களில் உற்பத்தி தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டுவாக்கில் பல லட்சம் டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ரஷ்யா கூறியிருந்தது.

பாதுகாப்பான வாக்சினுக்கான அனைத்து சோதனைக் கட்டங்களையும் நிறுவப்பட்ட வழிமுறைகளில் மேற்கொள்ளுமாறு உலகச் சுகாதார அமைப்பு கடந்த வாரம் ரஷ்யாவுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்த வாக்சினைத் தயாரித்தது மாஸ்கோவில் உள்ள கேமலேயா இன்ஸ்டிட்யூட் என்பது குறிப்பிடத்தக்கது.