வெளிநாட்டுச் செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
ஜெருசலேமில் தூதரகத்தை மீண்டும் திறப்பதன் மூலம் பாலஸ்தீனியர்கள் உடனான உறவை சரிசெய்வதாகவும் மேலும் மோதலால் பாதிக்கப்பட்ட காஸா பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனிய தலைவர்களை சந்தித்த பின்னர் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் செயலாளர் அண்டனி பிளிங்கன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பாலஸ்தீனிய ஆணைக்குழுவின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் மற்றும் பிரதமர் முகமது ஷ்தாயே ஆகியோருடன் ரமல்லாவில் நேற்று (25.05.2021) அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது பாலஸ்தீனியர்களுக்கு அதன் இராஜதந்திர நடவடிக்கையை மேற்கொள்ள ஜெருசலேமில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மீண்டும் திறக்கும் பணியை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
பாலஸ்தீனியர்களை கோபப்படுத்தும் வகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு தூதரகத்தை மாற்றியபோதும் 2019 இல் தூதரக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த மாத தொடக்கத்தில் காஸா போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 11 நாட்களில் நடந்த மோதலில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் பல வாரங்களாக இஸ்ரேல்-பாலஸ்தீனிய பதற்றம் அதிகரித்த பின்னர் இந்த வன்முறை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பெயர்கள் கடந்த ஒரு வருடமாகப் பெரிய அளவிலான மாற்றங்களை கண்டு வருகின்றன.
முதலில் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் சொத்து மதிப்பு தாறுமாறாக அதிகரித்ததால், மிக குறுகிய நாளில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார்.
ஆனால் அவரை பின்னுக்கு தள்ளி அமேசன் நிறுவனத்தின் ஜெப் பைசோஸ் முன்னுக்கு வந்த நிலையில் இப்போது இவர்கள் இருவரையும் பின்னு தள்ளி விட்டு மூன்றாவது நபர் உலக பணக்காரர் பட்டியலில் சேர்ந்துள்ளார்.
பிரான்ஸின் ஆடம்பர பொருட்களுகான பிரபல குழுமம் LVMH நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) 186.2 பில்லியன் டொலர் நிகர சொத்து மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை பெற்றுள்ளதாக, ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த திங்களன்று போர்ப்ஸின் ரியல் டைம் பில்லியனர் தரவரிசைப்படி, அர்னால்ட் அவர்களுக்கு 186.3 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான சொத்து உள்ளது.
அமேசன் (Amazon) ஜெப் பெசோஸின் 186 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் உடன் ஒப்பிடும் போது, இது 300 மில்லியன் டொலர் அளவிற்கு சொத்து அதிகம் உள்ளது.
டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX )தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் (Elon Musk), ஜெப் பெஸோஸ் ஆகியோரை விட அர்னால்ட் முன்னிலையில் இருக்கிறார், எலான் மஸ்கிற்கு 147.3 பில்லியன் டொலர் மதிப்பிலான சொத்து உள்ளதாக ஃபோர்ப்ஸ் மேலும் கூறியது.
உலக வர்த்தகம், தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, வர்த்தக நிறுவங்களுக்கு சேவை அளித்து வரும் கன்பேரிசன் என்ற நிறுவனம், உலகின் வளர்ந்த நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், வர்த்தகம் நடவடிக்கைகள் அதிகரித்து.
வேலைவாய்ப்புகளும் பெருகத் தொடங்கியுள்ள நிலையில், ஆடம்பர சந்தையின் வர்த்தகமும் அதிகரித்துள்ளது என கூறியுள்ளது. இதன் மூலம் பல ஆடம்பர பிராண்டுகளை வைத்திருக்கும் லூயிஸ் உய்ட்டன் (LVMH) நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரித்ததுள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அமேசான் நிறுவனர் 2026 ஆம் ஆண்டிலேயே உலகின் முதல் டிரில்லியனராக மாறக்கூடும் என்றும், அந்த நேரத்தில் அவருக்கு 62 வயது இருக்கும் என்றும் அந்த ஆய்வு மேலும் கூறியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகாரப்பூர்வ எண்ணிக்கைவிட அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில், “ அதிகாரப்பூர்வ எண்ணிக்கைப்படி உலகம் முழுவதும் கொரோனாவினால் இதுவரை 34 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை அதிகாரப்ப்பூர்வ எண்ணிக்கைவிட 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்த நிலையில் 34, 59,294 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா இரண்டாம், மூன்றாம் அலைகள் மிகத் தீவிரமாக பரவி வருகின்றன. இதன் காரணமாக இந்தியா, பிரேசிலில் பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
இதே நேரத்தில் தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
“இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது.” என புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
”ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சந்தேகநபர்கள் சிறையில் உள்ளனர். இந்நிலையில் அவர்களை மனிதாபிமான முறையில் விடுதலை செய்வதற்கு, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இணங்கியுள்ளனர்.
ஆனாலும் ராஜீவ் காந்தியின் இழப்பு, நாட்டிற்கும் மட்டுமன்றி காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும். இருப்பினும் அவரை கொன்றவர்களை விடுதலை செய்யுமாறு தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இவை சில அரசியல் கட்சி மற்றும் பொது நலவாதிகளின் கோரிக்கையாக இருக்கலாம்.
எனினும் காங்கிரஸின் தொண்டன் என்றதன் அடிப்படையில் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆகவே அவர்களை நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, அந்நாட்டு மக்கள் தங்களது நண்பர்களுடன் மதுபான விடுதிகள் மற்றும் ஹோட்டல்களுக்கு சென்று குதூகலமடைந்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், முழு ஊரடங்கை அந்நாட்டு பிரதமர் Boris Johnson அமல்படுத்தினார். ஊரடங்கை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எப்போதும் சுதந்திரமாக இருக்கும் இங்கிலாந்து மக்கள், இந்த ஊரடங்கால் கடுமையான மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டனர். இதனால் ஊரடங்கை தளர்த்துமாறு ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளதை அடுத்து, ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியே செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் உற்சாகமடைந்த அந்நாட்டு மக்கள், தலைநகர் லண்டனில் உள்ள மதுபானக் கடைகளில், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சென்று ஆனந்தமாய் மது அருந்தி மகிழ்கின்றனர். மேலும், ஹோட்டல்களுக்கு சென்றும் குதூகலமடைந்து வருகின்றனர்.